31 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: கப்பல் ஏறிய கடன் தொல்லைகள்

தமிழ் மலர் - 31.10.2020

கரைவிட்டு கரை தாண்டுகிறார் ஒரு தமிழர். ஆனால் கண்ணீர் விட்டுக் கரை தாண்ட மாட்டார். கடன் சேர்த்த கடனாளியாகத்தான் கரை தாண்டுகிறார். அப்படி கரை தாண்டிய தமிழர் இங்கே மலாயாவில் பாடும் பாடல் என்ன தெரியுங்களா.

காக்கா மேய்க்கப் போன சீமையிலே

சீக்கா படுத்தேன் கித்தா காட்டினிலே

காய்ஞ்சு போன கித்தா உரிக்கையிலே...

சூடு சொரணை எல்லாம் செத்து போச்சுலே...

அடிவயிறு பத்தி எரியுதுலே...

வாழ்க்கைப் பட்ட மலாயா சீமைக்கு வயிறு காஞ்சிப் போறேன் என்று சொல்லிக் கறுப்புக் கங்காணியிடம் கைநாட்டுப் போடுவது. கிராமத்துப் பஞ்சாயத்தில் சத்தியம் பண்ணுவது. சொந்த பந்தங்களிடம் கைமாற்று வாங்குவது. வந்தது வரட்டும் என்று வயல் காட்டை எழுதிக் கொடுப்பது. கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே கடனாளிகளாகத் தான் தமிழர்கள் புறப்பட்டார்கள்.

யாருங்க? கரிசல் காட்டுக் கிராமத்து மண்வாசனைகள் தான். அதாவது நம்முடைய முப்பாட்டன் முப்பாட்டிகள் தான். அவர்களின் பாட்டன் பாட்டிகள் தான். அதாவது நம்முடைய மூத்த மூதாதையர்களின் முன்னோடிப் பந்தங்கள் தான். அதாவது மலேசியத் தமிழர்கள் பலரின் உடலில் ஓடும் சிவப்புக் கலர் இரத்தத்தின் சொந்த பந்தங்கள்.

இந்த உண்மையைச் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது. சிலரால் கிரகித்துக் கொள்ளவும் முடியாது. பரவாயில்லை. குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர். கிளேமர் கிளியோபாட்ரா; பிரேக் டான்ஸ் மைக்கல் ஜேக்சன் நினைப்பில் வாழ்பவர்களுக்குக் கக்கலுக்கு விக்கல் என்று பெயராம். பிக் பாஸ் கமல் அவர்களுக்கு டெலிகிராம் செய்ய வேண்டிய தகவல்.  

உண்மை கசக்கவே செய்யும். இருந்தாலும் எங்க தாத்தா ஒரு கைநாட்டு; ஆனாலும் அவர் சிங்கம்டா. எங்க பாட்டி ஒரு கைக்கீறு; ஆனாலும் அவர் கைவைத்தியம்டா என்று நெஞ்சைத் தட்டிப் பெருமை பேசலாமே. மனசு வேண்டுமே.

இப்போது மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஐந்தாம் ஆறாம் தலைமுறைத் தமிழர்கள், தங்களின் மூத்தத் தலைமுறையினரை மறந்துவிடக் கூடாது. வாழும் காலத்திலேயே அவர்களைப் போற்ற வேண்டும்.

அடுத்து அடுத்து வரும் தலைமுறையினருக்கு அந்த முதியவர்களின் அர்ப்பணிப்புகளைச் சீதனங்களாக விட்டுச் செல்ல வேண்டும். அப்போது தான் மலாயா தமிழர்களின் வரலாறு நீடித்து நிலைத்து நிற்கும். நேற்று வந்த வந்தேறிகள் ஏளனமாகப் பேச இடம் கொடுக்கவே கூடாது. சரி.

கிராமத் தலைவரிடம் கைநாட்டுக் கடன்.

சொந்த பந்தங்களிடம் கைமாற்றுக் கடன்.

வயல்காட்டை அடகு வைத்தக் கடன்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய சமரசக் கடன்.

குடிசையின் ஓட்டுத் தாரைக்கு ஒட்டுப் போட்ட கடன்.

ஜல்லிக்கட்டு காளைக்குச் சாயம் அடித்த கடன்.

ஐயனார் சாமிக்கு அரிவாள் கத்தி வாங்கிய அஞ்சாறுக் கடன்.


இப்படி எக்கச் சக்கமான கடன்கள். அந்தக் கடன்களின் வாரிசுகளாக வட்டிக் குட்டித் தொல்லைகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும் இல்லீங்களா.

இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா இருப்பார்களா? விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுவது மட்டும் அல்ல. கழுதைக்கு முத்துமாலை என்று பெயரும் வைத்து விடுவார்கள்.

அடுத்து ஒரு முக்கியமான கடன். கடல் கடந்து போகும் போது தட்டு முட்டுச் செலவுகள் வந்து சேரும். வேறுவழி இல்லாமல் வேலைக்கு ஆள் சேர்த்த அதே கறுப்புக் கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாய் ஆரம்பிக்கின்றன.

ஆக தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தமிழர், முக்கால்வாசிக் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முக்கால்வாசிக் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது.

அதுவே ஒரு சாமானியத் தமிழரை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டம். பெரிய கங்காணி பயன்படுத்தப் போகும் ஒரு பெரிய துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமானிய மனிதர் ஒரு கடனாளியாகத் தான் புலம் பெயர்கிறார்.

இது அதோடு முடிந்து போவதும் இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பற்பலச் சடங்குச் சம்பிரதாயச் செலவுகள்.

காளியம்மாவுக்கு காதுகுத்து

தீர்த்தம்மாவுக்கு திருமணக் கூத்து

ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு

வள்ளியம்மா வயசுக்கு வந்துட்டா சடங்கு


இப்படி வரிசை வரிசையாகப் பற்பலச் சடங்குச் சங்கதிகள். இதையும் தாண்டிய நிலையில் மொட்டை மாடு முட்டை போட்ட சடங்கு; பெட்டை ஆடு குட்டிப் போட்ட சடங்கு; அரச மரத்திற்கு அஞ்சு முழம் கயிறு கட்டிய சடங்கு என்று இன்னும் பற்பலச் சடங்குகள். அப்புறம் அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய ஒரு கட்டாய நிலை.

தோட்டத்தில் கங்காணிக்குச் சொந்தமாக ஒரு மளிகைச் சாமான் கடை இருக்கும். அல்லது பெட்டிக் கடை இருக்கும். அல்லது இரண்டுமே இருக்கும். அந்தக் கடையில்தான் கங்காணி போட்ட விலையில் அரிசி பருப்பு அது இது என்று எல்லாச் சாமான்களையும் வாங்க வேண்டும்.

அப்புறம் இந்தக் கடனும் ஏற்கனவே ஊரில் வாங்கிய பழைய கடனும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கித் தொழிலாளியின் கழுத்தை நெரித்துக் கண்ணீர் வடிக்கச் செய்யும்.

அடுத்து வருவது மகா பெரிய கங்காணியின் அசத்தலான கைங்கரியம். தோட்டத்தின் துரையிடம் இருந்து தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் மொத்த சம்பளத்தையும் பெரிய கங்காணிதான் வாங்குவார். அது அப்போதே சஞ்சிக் காலத்தில் எழுதப் படாத ஒரு சாசனம்.

பொதுவாக படிப்பறிவு இல்லாதவர்களைத் தான் தமிழகத்தில் இருந்து அழைத்துச் சென்று இருப்பார்கள். படித்தவர்கள் வருவது ரொம்பவும் குறைவு. கும்முனியில் மாடு மேய்க்கப் போய் இருப்பார்கள்.

ஆக பாமர மக்களின் படிப்பு வாசனை குறைவு தான் கங்காணிகளுக்குப் பிளஸ் பாயிண்ட்.

கங்காணி ஒரு சின்ன கணக்குப் புத்தகம் வைத்து இருப்பார். அதில்...

வேட்டிக்கு ஒட்டுப் போட்ட கணக்கு;

முந்தானைக்கு முடிச்சுப் போட்டக் கணக்கு;

கிழிஞ்ச கோவணத்தைப் பிழிஞ்சு போட்ட கணக்கு.


இப்படி எக்கச் சக்கமாய் ஊறுகாய்க் கணக்குகளை எழுதி வைத்து இருப்பார். அசலும் வட்டியுமாக வரவிலும் வைத்துக் கொள்வார்.

எல்லாம் வேலைக்கு ஆள் சேர்த்த கங்காணியின் கைக் கணக்குதான். தொழிலாளியின் சம்பளப் பணம் முழுவதும் கங்காணியிடமே மாட்டிக் கொள்ளும்.

அதனால் சம்பளப் பணத்தைக் கண்ணால் பார்க்காமலேயே வேலை செய்ய வேண்டிய ஒரு கட்டாயம். சிலர் சம்பளப் பணத்தைப் பார்க்காமலேயே செத்துப் போனதும் உண்டு.

கூலிகளின் வீடுகளைக் கூலி லயன்கள் என்று அழைத்தார்கள். Line எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து தான் லயம் எனும் சொல் உருவானது. ஆடு மாடு லாயங்களைப் போன்று வரிசை வரிசையாகக் கட்டப்பட்டு இருக்கும். வீடுகள் என்று சொல்ல முடியாது. தகரக் குடிசை எனும் சஞ்சித் தமிழர்களின் அப்பார்ட்மெண்டுகள்.

விடியல் காலையிலேயே ஐந்து மணிக்கு எல்லாம் கொம்பு ஊதப்படும். அல்லது தப்பு அடிக்கப்படும். உதறல் எடுக்கும் பிரட்டுக் களத்தில் வரிசை பிடித்து நிற்க வேண்டும்.

அந்த மாதிரி கூடுவதை பேரட் (Parade) என்று ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள். அதையே பிரட்டுக் களம் என்று நம்மவர்கள் சொல்வார்கள். பேரட் என்பது தான் பிரட்டு என்று மாறியது.

அங்கு இருந்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு மாட்டு வண்டிகளில் அழைத்துச் செல்லப் படுவார்கள். சிலர் இருட்டில் நடந்தே போக வேண்டும். அங்கே புலி அடித்த கதைகளும் உண்டு. மலைப்பாம்பு விழுங்கிய கதைகளும் உண்டு.  

இலங்கையில் மலையகத்தில் வேறு மாதிரியான வேலைகள். தேயிலைக் கொழுந்து பறித்தல், காபிப் பழம் பறித்தல், செடிகளைக் கவாத்து செய்தல், காட்டுச் செடிகளைக் களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடுகளை அழித்துதல். இப்படி பற்பல வேலைகளைச் செய்தார்கள்.

ஒரு செருகல். 19-ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்கா காலனி நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து போன தொழிலாளர்களின் விவரங்கள்:

•    மொரீஷியஸ் - 453,063

•    பிரிட்டிஷ் குயானா - 238,909

•    டிரினிடாட் - 143,939

•    ஜமாய்கா - 36,412

•    கிரேனடா - 3,200

•    செயிண்ட் லூசியா - 4,350

•    நாட்டால் - 152,184

•    செயிண்ட் கீட்ஸ் - 337

•    செயிண்ட் வின்செண்ட் - 2,472

•    ரியூனியன் தீவுகள்- 26,507

•    சுரிநாம் - 34,304

•    பீஜி - 60,965

•    தென்னாப்பிரிக்கா - 32,000

•    செய்சீல்ஸ் - 6,315

•    மொத்தம் - 1,194,957

1899-ஆம் ஆண்டு வரையிலான ஆப்பிரிக்கா கணக்கு. மலாயாவிற்கு 1900-ஆம் ஆண்டுக்குள் எப்படியும் 250 ஆயிரம் பேர் கப்பல் ஏறி வந்து இருக்கலாம். சரி.

ஓர் இழிவான வாழ்க்கையில் இனம் தெரியாத ஜடப் பொருளாகிப் போன சஞ்சிக் கூலிகளின் பரிதாப நிலையைப் பார்க்கும் போது மனம் பதைக்கிறது.

வேலைச் சுமை. வாழ்க்கைச் சுமை. மனசுச் சுமை. இவற்றை மறக்க மதுபானத்தில் பலர் ஐக்கியமானார்கள். அந்த வேதனையில் மனதை நெகிழ வைக்கும் பாட்டுக் கச்சேரிகள். ஆக வேறுவழி இல்லாமல் முன்வினைப் பயன் என்று மனசைத் தேற்றிக் கொண்டார்கள்.

இந்தத் துயரங்களில் இருந்து விடுபட்டுத் தப்பிக்க நினைத்தாலும் அது அவ்வளவு சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல. இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல நினைத்தாலும் அதுவும் நடக்காது. சட்டம் பேசினாலும் சரிபட்டு வராது.

கங்காணியும் சரி; வெள்ளைக்காரத் தொப்பிகளும் சரி; சிரித்துக் கொண்டே கழுத்தை நெரிப்பதில் பயங்கரமான ஜீபூம்பாக்கள்.

ஒரு செருகல். முட்டை போடுவது நாட்டுக் கோழி. இப்போது வீட்டுக் கோழி. சாரி. ஊசி போட்ட கோழி. அந்தத் தோட்டத்துக் கோழிக்குச் சிலுவார் சட்டை போட்டு நடுத் தெருவில் ஓட வைப்பது ஒரு கலை. ஓடும் போதே முட்டை போட வைப்பது; அதைவிட அசாத்தியமான கலை.

இந்த இரண்டு கலைகளிலும் சகலகலா வல்லவர்கள் என பெயர் எடுத்தவர்கள் யார் தெரியுங்களா? பரங்கியர்கள் என்று பேறு பெற்ற வெள்ளையர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.10.2020

No part of this content may be reproduced, republished, or retransmitted by any means without the expressed written consent of author. Please email: ksmuthukrishnan@gmail.com for permission.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக