31 அக்டோபர் 2020

மகாதீர் பேச்சு: உலகத் தலைவர்கள் கொந்தளிப்பு

தமிழ் மலர் - 31.10.2020

பிரான்சில் நடந்த கொலை வெறியாட்டத்தை ஆதரிப்பது போல் துன் மகாதீர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லாக்டிர் குறிப்பிட்டு உள்ளார்.

பிரான்ஸ், நைஸில் நேர்ந்து உள்ள கொலை வெறி ஆட்டத்தில் பாதிக்கப் பட்டோருக்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்ட கமலா, கருத்துச் சுதந்திரத்தைத் தாம் வரவேற்றாலும் மகாதீர் பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைப் பிரான்சு கொன்று குவித்ததற்குப் பழிவாங்கும் விதத்தில், முஸ்லிம்கள் ஆத்திரப் படுவதற்கும் அவர்களைக் கொலை செய்வதற்கும் உரிமை உள்ளவர்கள் என்று நேற்று முன்தினம் மகாதீர் அறிவித்துப் பலரின் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளார்.

அது பற்றி அவரின் ஆதரவாளர்கள் குறிப்பிடும் போது, பெரும்பாலான முஸ்லிம்கள் ‘கொலைக்குக் கொலை’ எனும் சித்தாந்தத்தை ஏற்பது இல்லை என்று குறிப்பிட்டு உள்ளதோடு, பிரான்சு தனது மக்கள் மற்றவர்களை மதிக்கக் கற்றுத் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்னர் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவர் நபி முகமட்டின் சித்திரத்தை வகுப்பில் காட்டி போதனை நடத்திய பின்னர், செச்சன் பிரிவினைவாதி ஒருவரால் வெட்டிக் கொல்லப் பட்டார்.

அதனை அடுத்து தேவாலயம் ஒன்றில் தீவிரவாதி ஒருவன் மூவரைக் கொன்று வெறியாட்டம் ஆடியுள்ளான். இவ்விரு சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் உள்ளவையாகக் கருதப் படுகிறது.

இந்த இரு பயங்கரவாத நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்த பிரெஞ்சு அதிபர் எம்மானுவெல் மேக்ரோன், இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிர்த்து அரசு போர் தொடுக்கும் என்றும் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொலை வெறியை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனிடையே, சுதந்திரச் செய்தியாளர் மையத்தின் நிர்வாக இயக்குநர் வத்சலா ஜி. நாயுடு, கருத்துச் சுதந்திரத்துக்கு ஓர் எல்லை உண்டு என்றும் அனைத்துலக மனித உரிமை ஆணையம் எல்லாவித பயங்கரவாதத் தூண்டுதலையும் பாகுபாட்டையும் தடை செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

எல்லா முஸ்லிம்களும் கொலை வெறியோடு திரிவது இல்லை என்றாலும், மகாதீரின் அறைகூவலை நியாயப் படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் கூற்றின்படி கொலை செய்யும் உரிமை என்பது யாருக்கும் தரப் படவில்லை. வாழ்வதும் வாழ விடுவதுமே அனைவருக்கும் இருக்கும் உரிமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக