07 அக்டோபர் 2020

மலேசிய அரசியலமைப்பு: தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகள்

தமிழ் மலர் - 06.10.2020

1940 - 1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் 850 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இந்தப் பள்ளிகள் பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் கல்விச் சாலைகளாக இயங்கி வந்தன. தப்பாக நினைக்க வேண்டாம். ஏன் என்றால் அப்போதைய காலக் கட்டத்தில் ஆறாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க ஆங்கிலப் பள்ளிகளுக்குச் செல்வது அரிது. வாய்ப்புகள் குறைவு. பெற்றோர் வருமானம் குறைவு; போக்குவரத்து வசதிகள் குறைவு. இவை இரண்டும் மூல காரணங்கள்.

World Invention Innovation Contest (WIC) 2015 held on June 5 and June 6 in Seoul. SJK (T) Yahya Awal, Johor Bahru pupils (from left) K. Praveena, S. Sharumathi, S. Nilavarasen, Mohammad Basharullah, Dhinakharan, R. Kabilan, Pratiksha and M. Jaysrina showing off the medals and certificates they won in South Korea.

ஆறாம் பகுப்பு முடிந்ததும் அப்போதைக்கு தமிழாசிரியர் வேலைதான் அவர்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. அவர்களை ஆசிரியர் வேலைக்கு நியமிக்கும் அதிகாரம் தோட்ட துரைமார்களுக்கு மட்டுமே இருந்தது. அந்த வகையில் பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாய்ச் சேவை செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தனர்.

உண்மையைத் தான் எழுதுகிறோம். அப்போதைய காலத்தில் பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரிவரத் தெரியாது. அதனால் மாணவர்களுக்கும் முறையாக ஆங்கிலம் சொல்லித்தர இயலாமல் போய் விட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமலே போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

1850-ஆம் ஆண்டு மலாக்காவில் முதல் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி (St. Xaviour Malabar School, Malacca) நிறுவப்பட்டது. அதுவே நமது மலேசிய நாட்டின் முதல் முழுநேரத் தமிழ்ப்பள்ளி ஆகும். ஏற்கனவே 1816-ஆம் ஆண்டு பினாங்கில் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. பாதிரியார் ஆர்.எஸ். ஹட்ச்சிங்ஸ் என்பவரின் முதல் முயற்சி.

ஒரு செருகல். தமிழ்ப்பள்ளி என்பது வேறு. தமிழ் வகுப்பு என்பது வேறு. நினைவில் கொள்வோம்.

(First Tamil class in 1816 at the Penang Free School. Founded by Reverend R.S. Hutchings, Colonial Chaplain of the Anglican Church)

Vivekanada Tamil School, Petaling Jaya, Selangor 1981

1900-ஆம் ஆண்டில் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. இதற்கு பிரேங்க் சுவெட்டன்ஹாம் பொறுப்பு வகித்தார். ஆங்கிலேய அரசின் முதல் முயற்சி.

1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளி (Thambhoosamy Tamil School) தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியை ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார்.

1906-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப் பள்ளியும் இயங்கி வந்தன. 1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

SJK (TAMIL) CONVENT, Seremban, Negeri Sembilan STATE LEVEL SCIENCE FAIR 2012

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. நிறுவியர் தம்புசாமி பிள்ளை. 1924-ஆம் ஆண்டு செந்தூல் கத்தோலிக்க திருச்சபை, செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப் பள்ளியை நிறுவியது. 1925-ஆம் ஆண்டில் மலாயாவில் 235 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.

1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது.  

1937-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில தமிழ்ப் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது.

SJK (TAMIL) Rawang, Selangor, 2019

1913-ஆம் ஆண்டில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி; 1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி; 1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி; 1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை. 1938-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேவையை நிவர்த்தி செய்ய தமிழ்ப் போதானா முறை வகுப்புகள் தொடங்கப் பட்டன.

Three SJKT Ramakrishna Tamil school students do Malaysia proud. (From left) Kumuthasshri, Durrgashini and Sugheson showing their medals and their eco-friendly thermo container in Georgetown April 1, 2015

மலாயா - மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை:

1920-ஆம் ஆண்டில் 122;

1925-ஆம் ஆண்டில் 235;

1930-ஆம் ஆண்டில் 333;

1938-ஆம் ஆண்டில் 547;

1942-ஆம் ஆண்டில் 644;

1943-ஆம் ஆண்டில் 292;

1947-ஆம் ஆண்டில் 741;

1957-ஆம் ஆண்டில் 888;

1967-ஆம் ஆண்டில் 686;

1977-ஆம் ஆண்டில் 606;

1987-ஆம் ஆண்டில் 553;

1997-ஆம் ஆண்டில் 530;

2007-ஆம் ஆண்டில் 523;

2008-ஆம் ஆண்டில் 523;

2009-ஆம் ஆண்டில் 523;

2010-ஆம் ஆண்டில் 523;

2011-ஆம் ஆண்டில் 523;

2018-ஆம் ஆண்டில் 525

1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர். மலாயாவில் பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு தமிழ் ஏழாம் வகுப்பு தொடங்கப் பட்டது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழாசிரியர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் ஏழாம் வகுப்பு நிறுத்தப் பட்டது.

2018-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள்; 10,000 தமிழாசிரியர்கள். 108,000 மாணவர்கள். 4500 வகுப்பு அறைகள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்டவிதி 3-இன் படி எல்லா இனங்களின் மொழியும் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.

ஆனால் அதன்படி நடைமுறையில் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே. மலாய்ப் பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கொண்டு வர முடியும் என்பது அரசாங்கத்தின் எண்ணமாகும்.

1961-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டவிதி. ஒரு வகையில் இந்தச் சட்டவிதி தமிழ் சீனப் பள்ளிகளுக்கு ஒரு மருட்டலாக இருந்தது. மன்னிக்கவும். உண்மையே அதுதான். கொஞ்ச காலம் அப்படி ஒரு நிலைமை இருந்தது.

அதாவது அந்தச் சட்டவிதி 21 (2)-யின் கீழ் கல்வியமைச்சருக்குச் சில கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டன. அவர் விரும்பினால் ஒரு சீன அல்லது தமிழ்த் தாய்மொழிப் பள்ளியைத் தேசிய மொழிப் பள்ளியாக மாற்றம் செய்ய முடியும்.

இந்தச் சட்டவிதி சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1996-ஆம் ஆண்டு அந்தச் சட்டவிதியில் திருத்தம் செய்யப் பட்டது.

இந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் சிமினி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஓர் அரசியல்வாதி அந்தச் சட்டவிதியைப் பற்றி பேசி இருக்கிறார். டத்தோ நஸ்ரி அஜீஸ். சொல்லி இரண்டே நாட்களில் நான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Bukit Bertam,
Bandar Sri Sendayan, Negeri Sembilan 26 FEBRUARI 2018


இந்த நாட்டில் உள்ள தமிழ் சீனப் பள்ளிகளைச் சட்டவிதி 21 (2)-இன் படி மூடிவிட வேண்டும் என பேசி இருக்கிறார். பெரும் சர்ச்சையை உருவாக்கிய செய்தி. ஏன் தெரியுங்களா?

டத்தோ நஜீப் ரசாக் பிரதமர் பதவியில் இருந்த போது கல்விச் சட்டம் 1961- எனும் சட்டம் திருத்தம் செய்யப் பட்டது. அதன்படி கல்விச் சட்டத்தின் சட்டவிதி 21 (2)-லும் திருத்தம் செய்யப் பட்டது.

அந்த வகையில் கல்விச் சட்டம் 1966-இன் கீழ் சீன தமிழ்ப் பள்ளிகளின் நிகழ்நிலை உறுதி செய்யப்பட்டது. அதாவது அப்பள்ளிகளின் தகுதி மறு உறுதி செய்யப் பட்டது.

(Education Act 1961 amended during the era of Datuk Seri Najib Razak, whereby Section 21 (2) was abolished and the status of SJKC and SJKT were guaranteed under the Education Act 1996)

அப்படி இருக்கும் போது தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என அந்த அரசியல்வாதி பேசியது சரியன்று. அரசியல் பிரசாரத்தில் தமிழ் சீனப் பள்ளிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தியது தவறு.

அதாவது சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும்  தமிழ் சீனப் பள்ளிகளைப் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தியது தவறு என்பதே பொதுவான கருத்து.

சான்று: https://www.thestar.com.my/news/nation/2019/03/03/barisans-fate-to-be-discussed-this-week/

நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி தேசியக் கல்வி அமைப்பின் கீழ் இயங்கும் எல்லாப் பள்ளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.  

Timbalan Menteri Pendidikan II Datuk Chong Sin Woon di Sekolah Jenis Kebangsaan Tamil (SJKT) Nilai 26 January 2018

ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்பதே வேதனையான செய்தி. வேறுபாடுகள் நிலவுகின்றன. அதனால் தமிழ் சீனப் பள்ளிகள் பாதிக்கப் படுகின்றன.

இதில் தமிழ்ப்பள்ளிகள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியா. சீனப் பள்ளிகள் பரவாயில்லை. வசதிமிக்க சீனர்கள் நிதியுதவி செய்து வருகின்றார்கள்.

தமிழ்ப்பள்ளிகளின் இந்த வேதனையான நிலையைச் சீர் செய்வதற்கு 2010-ஆம் ஆண்டுகளில் தமிழ் அறவாரியம் களம் இறங்கியது. தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு சில முன்மொழிதல்களைக் கொண்டு போனது.

அந்த முன்மொழிதல்கள் வருமாறு:

(1) தேசியக் கல்விக் கொள்கையில் உட்பட்ட சீன தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் சமமாக நடத்தப்பட வேண்டும்.

(2) அரசாங்கம் தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

(3) தாய்மொழிப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் தகுதி பெற்ற ஆசிரியர்கள்; கட்டடங்கள்; ஆய்வுக்கூடங்கள்; நூலகங்கள்; வசதியான வகுப்பறைகள்; திடல்கள்; போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

(4) எல்லா தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.

(5) தாய்மொழிப் பள்ளிகள் கட்டுவதற்கான நிலம்; கட்டடம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்.

(6) இடைநிலைப் படிப்பை முடித்த பின்னர் பட்டப்படிப்பு செல்வதற்கான மெட்ரிகுலேசன், எஸ்.டி.பி.எம். தொடர்பான பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும்.

(7) தகுதி பெற்ற மாணவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் அளிக்க வேண்டும்.

(8) உபகாரச் சம்பளம் வழங்குவதில் வேறுபாடு இருக்கக் கூடாது. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

(9) மாணவர்களைச் சிறுமைப் படுத்தும் நோக்கம் இருக்கக் கூடாது. இனவாதத்தைத் தூண்டி விடுவதாக அமையக் கூடாது.

(10) ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகள் என்று இருப்பதை தேசியப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

Midland Tamil School, Klang, Selangor 15 April 2012

இந்தப் பரிந்துரைகள் ஏட்டளவில் அப்படியே நிலுவையில் உள்ளன. எனக்கு வந்தால் இரத்தம். உனக்கு வந்தால் தக்காளி சூஸ் எனும் சிலேடை வாசகம் நினைவிற்கு வருகிறது.

எப்போது இந்தப் பரிந்துரைகளுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியே. மலேசிய நாடு பல்லினப் பண்பாட்டைக் கொண்டது. ஆகவே தமிழ்க் கல்வி வழியாகத் தமிழரின் பண்பாடு பேணப் படுவது அவசியமாகும். இது நியாயமான கோரிக்கை.

பெரும்பாலும் வசதி குறைந்த தமிழ்த் தொழிலாளர்களின் பிள்ளைகளே தமிழ்ப் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவி கிடைப்பது இல்லை. இந்தக் குறையை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி மலேசியத் தமிழர்கள் மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் பெற்ற குடிமக்கள் ஆவார்கள். மலேசியாவைப் பொறுத்த வரையில் ஒரு மலேசியத் தமிழ்க் குழந்தை தமிழ்க் கல்வி பெறச் சட்டபூர்வமான தடை எதுவும்  இல்லை என்பதே நியாயமான கருத்து.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.10.2020

References:

1. Arasaratnam, S. (1970). Indians in Malaysia and Singapore. London: Oxford University Press.

2. Elanjelian. (2011). Future of Tamil Schools in Malaysia. Retrieved August 31, 2020, from https://www.scribd.com/document/58799035/Future-of-Tamil-Schools-in-Malaysia

3. Omar, A. H. (2016). Language in the Malaysian Education System: Monolingual Strands in Multilingual Settings. New York: Routledge.

4. Ministry of Education Malaysia. (2017). Malaysia Educational Statistics 2017.

5. Crotty, M. (1998). The Foundations of Social Research. Thousand Oaks: Sage.

6. Paraman, V. (2011). Tamil Schools In Malaysia Denied Fully Financial Aided Status. Retrieved August 31, 2020, from www.malaysia-today.net/2011/11/05/tamil-schools-in-malaysia-denied-fully-financial-aided-status-is-unconstitutional-a-illegal/

7. Scotland, J. (2012). Exploring the philosophical underpinnings of research: Relating ontology and epistemology to the methodology and methods of the scientific, interpretive, and critical research paradigms. English Language Teaching, 5(9), 9–16.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக