தமிழ் மலர் - 12.11.2020
தேசிய முன்னணி ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களுக்கான வரைவுத் திட்டம் (Malaysian Indian Blue Print) திட்டத்தைப் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் தொடர வேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தினார்.
இந்த நாட்டில் உள்ள இந்தியச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்தத் திட்டம் மிக அவசியம் என நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அவர் பேசினார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது இந்தத் திட்டம் கைவிடப் பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய, சீனச் சமூகங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை என்றார் அவர்.
ஆகையால் இந்திய, சீன சமூகங்களுக்கான ஒதுக்கீடுகளை நடப்பு அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என தேசிய முன்னணி முன்னாள் தலைவருமான அவர் சொன்னார்.
நிதி ஒதுக்கீட்டில் அனைத்து இன மக்களையும் இணைத்துக் கொண்டால் தான், தங்கள் நலன் பேணும் ஒரு சிறந்த வரவு செலவுத் திட்டத்தை மக்கள் பார்ப்பார்கள் என பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக