06 நவம்பர் 2020

இலங்கை தமிழர்களின் வாயில்லா வலிகள்

தமிழ் மலர் - 04.11.2020

இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் இடிமின்னலாய் இன்னல்கள் நிறைந்த காலம். ஒடுக்கு முறைகள் பலவந்தமாய்த் திணிக்கப்பட்ட காலம். ஒட்டு மொத்தமாய் அடிமைகளைப் போல வாழ்க்கைப்பட்ட காலம். இரண்டு கால் ஜீவன்களின் வாயில்லா வலிகள் பேசிய காலம்.

மற்ற மற்ற இலங்கைச் சமூகத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும் போது, இப்போதைய மலையகத் தமிழர்களின் வாழ்வியல் அமைப்பு, மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் புகைச்சல் மண்டிய காலம் என்று சொல்லலாம்.

அந்த நிலைமை சிங்களப் பேராண்மையில் மேலும் மோசமாகி விட்டது. பொல்லா இனவாதப் பேய்களின் அனர்த்தக் காலம் என்றுகூடச் சொல்லலாம்.

அது ஒரு வகையான புலம்பெயர்வின் பின்னடைவு. அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. மலையகத் தமிழர்களின் தமிழக உறவுகள் எல்லாம் பெரும்பாலும் துண்டிக்கப் பட்டன.

தமிழகத்தில் அவர்களுக்குச் சொந்தமான நில புலன்கள், தோட்டம் துரவுகள், வரப்பு வயல்காடுகள், வீடு கிணறுகள் என எல்லாவற்றையும் இழந்த ஒரு பரிதவிப்பு. ஒரு தாயின் பிள்ளை ஏக்கத்தின் மறு அவதரிப்பு போலும்.

150 ஆண்டு காலத்திற்குத் தொடர்புகள் இல்லாமல் போனால் எப்படிங்க. அவர்களுடைய சொந்தங்கள் யார்; பந்தங்கள் யார் என்று அவர்களுக்கே தெரியாமல் போனது.

அப்படியே தேடிப் போனாலும் யார் எவர் என்று அடையாளம் தெரியாது. கிராமத்துக் கிணற்றுக்குள் செத்துக் கிடக்கும் உண்மையும் எட்டிப் பார்க்காது. அப்புறம் எப்படிங்க.

நதி மூலம் அடிபட்டுப் போனது. ரிஷி மூலம் இடிபட்டுப் போனது. சரியான உறவுப் பாலங்கள் இல்லை. சான்றுகளும் இல்லை. அதனால் பூர்வீகச் சொத்துகள் மீது உரிமை கொண்டாட முடியாமல் போனது. சரி.

இன்னும் ஒரு விசயம். சிலோன் டீ. தெரியும் தானே. உலகளாவிய நிலையில் சிலோன் தேயிலையைப் புகழ்பெறச் செய்தது இந்த மலையகத் தமிழர்கள் தான். வேறு யாரும் இல்லை. உலகமே ஏற்றுக் கொள்கிறது. அடுத்து இன்னும் ஒரு மிக மிக முக்கியமான விசயத்திற்கு வருகிறோம்.

1948-ஆம் ஆண்டு. இலங்கைக்குச் சுதந்திரம். ஆங்கிலேயர்களும் இளிச்சவாயத் தமிழர்களைக் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்து பை பை சொல்லி; ஆளை விடுங்கடா சாமி என்று இறக்கை கட்டி பறந்தே போனார்கள்.

அப்புறம் என்ன. இரண்டாம் இடத்தில் ராகு என்கிற ஆங்கிலேயம். எட்டாம் இடத்தில் கேது என்கிற சிங்களம். பத்தாம் இடத்தில் சனி என்கிற குடியுரிமைச் சட்டம். அந்தக் குருபெயர்ச்சியில் மலையகத் தமிழர்களுக்குப் பயங்கரமான ஜலதோசம்.

குடியுரிமைத் தகுதியை நிரூபிக்க முடியவில்லை. அதுவே பல இலட்சம் மலையகத் தமிழர்களுக்கு தலை போகிற விசயம். அதனால் அவர்களில் பெரும்பாலோர் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

அதோடு அவர்களுக்குக் குடியுரிமை இல்லாமல் போனது. ஓட்டுப் போடும் தகுதியும் இல்லாமல் போனது. வீட்டு அடுப்படியில் கிடந்த தட்டு தாம்பாளம் கிண்ணி கெடாரம் தான் அப்போதைக்கு சேர்த்து வைத்த சொத்து சுகம். குடியுரிமை அடையாளம்.

பின்னர் 1950-ஆம் ஆண்டுகளில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள். முடிவில் இடியும் மின்னலும் கலந்த இம்சையான முழக்கங்கள். இலட்சக் கணக்கான தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது என இலங்கை அரசாங்கத்தின் தடாலடி முடிவு.

ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர்கள் பாதிப்பு. இந்தக் கட்டத்தில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஓர் அமைதி உடன்படிக்கைக்கு வழி வகுத்தார்.

ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பெயர் ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம். தமிழர்களில் பாதி பேருக்கு இலங்கைக் குடியரிமை வழங்கப்பட்டது. மீதிப் பாதிப் பேரை இந்தியா ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது.

அதிலும் ஓர் இழுபறி நிலை. அந்த ஸ்ரீமாவோ - சாஸ்திரி திட்டமும் சரிபட்டு வரவில்லை. ஏன் தெரியுங்களா. இந்தக் கட்டத்தில், அதாவது 1980-ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஒரு பதற்றமான நிலை.

இலங்கை விடுதலைப் புலிகளின் மீது உலக மக்களின் பார்வை திசை திரும்பிய காலக் கட்டம். முறுக்கு மீசை தமிழர்கள் எந்த நேரத்திலும் மீசையை முறுக்கலாம் எனும் அச்சப் பார்வை.

இந்த மாதிரியான ஒரு நிலைமையில் இந்தியாவுக்கே திரும்பிப் போய் விடலாம் என்று தமிழர்கள் சிலரும் பலரும் முடிவு செய்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்று சொல்ல முடியாது.

ஏன் தெரியுங்களா. இங்கே மலேசியாவில் மே 13 துர்நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சி. அந்தச் சமயத்தில் தமிழர்கள் பலர் தங்களின் மலேசியக் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு தாயகம் கிளம்பினார்கள். என்னாச்சு. அதையும் நினைவில் கொள்வோம்.

இப்படி இருக்கையில் இந்தியாவும் ஒரு புதிய குடிநுழைவுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இலங்கையில் வாழ்ந்த அல்லது வாழ்கின்ற எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.

மலையகத் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். மகிழ்ச்சியில் உச்சம் பார்த்தார்கள். ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை. குடிநுழைவுச் சட்டத்தை அமல் படுத்துவதில் ஆயிரம் நடைமுறைச் சிக்கல்கள்.

அந்த புரோட்டோகால் இந்த புரோட்டோகால் என்று சொல்லி, பாதி பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காமலேயே போனது. எல்லாம் இந்தியாக்கார இட்லி சாம்பார் ஆரியச் சிப்பாய்கள் தான். தமிழர்களின் மிச்சம் மீதி நம்பிக்கையும் அதோடு அடிபட்டுப் போனது.

ஆக இந்தியாவுக்குத் திரும்பி வந்த மலையகத் தமிழர்களில் ஐந்து ஆறு இலட்சம் பேர் இன்றைக்கும் நாடு அற்ற அனாதைகளாகவே வாழ்ந்து வருகின்றார்கள். எங்கே. அதே அந்த இந்தியாவில்தான்.

இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். தமிழக அரசியல்வாதிகளில் சிலர் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

மறுபடியும் சொல்கிறேன். மலையகத் தமிழர்களில் ஐந்து ஆறு இலட்சம் பேர், இன்றைக்கும் நாடு அற்றவர்களாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

நாடு விட்டு நாடு போய் நட்டாற்றில் விடப்பட்ட தமிழர்கள் திரும்பி தாயகம் வந்தார்கள். வந்தும் நாடற்றவர்களாகவே வாழ்கின்ரார்கள். அதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எங்கேயாவது நடக்குமா. தெரியவில்லை. ஆயிரம் கர்ம ராசாக்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. நித்தியானந்தாவைக் கேட்டால் நோ சூடு. நோ சொரணை என்று சொல்லி ஜன்னலைத் திறந்து வைத்து தென்றலாய்த் தவழ்ந்து செல்வார்.

ஆக அங்கே மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அந்தப் பிரச்சினையை நாமும் இங்கே நம்முடைய பார்வையில் பார்க்க வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்.

குடியுரிமை என்பது வாழ்க்கைப் பிரச்சினை. உயிருக்கும் மேலானது. பத்து நாளைக்கு சோறு இல்லை என்றாலும் பரவாயில்லை. பச்சைத் தண்ணீரைக் குடித்து பத்து நாட்களுக்கு பேர் போட்டு விடலாம்.

ஆனால் குடியுரிமை இல்லாமல் மட்டும் ஒருநாளும் வாழவே கூடாதுங்க. அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் தெளிவாக இருக்க வேண்டும். சொல்றதைச் சொல்லிட்டேன். சரி.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், அவிசாவளை (Awissawella) துணை மாவட்டம். அங்கே புவக்பிட்டியா (Puwakpitiya) பெரும் கிராமம். அங்கே வாழும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தமிழர்கள் அதிகமாய வாழும் இடம் அவிசாவளை. இலங்கையில் மிக வறுமையான பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பகுதியில் பெரிய பெரிய ரப்பர் தோட்டங்கள் உள்ளன. பெரிய அளவில் ரப்பர் உற்பத்தி செய்யப் படுகிறது.

1880-ஆம் ஆண்டுகளில் இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இப்போது அவர்களின் ஐந்தாம் ஆறாம் தலைமுறை வழித் தோன்றல்கள் தான் அங்கு வாழ்கின்றார்கள். இலங்கையில் மிகவும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் பட்டியலில் இவர்களுக்கும் இடம் உண்டு.

அங்கு இரண்டு பெரிய தோட்டங்கள் உள்ளன. 650 குடும்பங்களைச் சேர்ந்த 1,400 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு லயன் வீடுகள். இந்த லயன் வீடுகளில் இடிக்கப் பிடிக்க பொடி அறைகள்.

தொழிலாளர்களின் வீடுகளுக்கான பாதைகள் நல்ல நிலையில் இல்லை. சேறும் சகதியும் அடிக்கடி கட்டிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாடும்.

ஒரு சில தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து சிறிய நிலத் துண்டுகளைப் பெற்று இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தோட்டத்துக்கு வெளியில் வேலை செய்கிறார்கள். கிடைக்கும் பணத்தில் சின்னச் சின்ன வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இலங்கை ரப்பர் தோட்டத் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 280 ரூபாய் சம்பளம். 2.50 அமெரிக்க டாலர். மாதத்தில் 24 நாட்கள் வேலை. ஒரு நாளைக்கு 325 முதல் 350 மரங்கள் வரை சீவ வேண்டும். குறைந்தது 10 கிலோ ரப்பர் பால் சேகரிக்க வேண்டும். எடை குறைந்தால் சம்பளம் வெட்டப்படும்.

முன்பு தாய்மார்கள் குழந்தை பெறுவதற்கு முன்னர் ஆறு மாதங்ளுக்கும்; குழந்தை பிறந்த பின்னர் ஆறு மாதங்களுக்கும் ஒரு மாதத்திற்கு இரண்டு பொட்டலங்கள் 'திரிபோசா' (சத்துணவு மாவு) வழங்கப் பட்டது.

இப்போது குழந்தை பெறுவதற்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கும்; பிறந்த பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கும் மட்டுமே வழங்கப் படுகிறது.

தொழிலாளர்களில் பலருக்கு அடையாள அட்டைகள் இல்லை. வெளியூர் பயணங்கள் செய்ய முடியாது. அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்தால் எளிதில் கிடைப்பதும் இல்லை. பற்பல தடைகள். பற்பல சால்சாப்புகள்.

அங்கு வாழும் தமிழர்களுக்குப் பெரும்பாலும் எல்லாமே தடை. தடை. தடை. ஒரே வார்த்தையில் தோட்டத் துரைமார்கள் தோட்டத் தொழிலாளர்களை ரொம்பவும் மோசமாக நடத்துகிறார்கள்.

ஆறுமுகம் என்னும் தொழிலாளி சொல்கிறார். "நான் ஓய்வு பெற்றுட்டேன். என் மனைவிக்கு உதவி செய்ய மரம் வெட்ட போகிறேன். எனது மனைவியின் சம்பளத்துடன் மட்டும் ஜீவிப்பது மிகவும் கடினம். நாங்கள் கடனில் இருக்கிறோம். எங்களால் ஒரு மாதத்திற்கு ஒரு முறைதான் இறைச்சி அல்லது மீன் உண்ண முடியும். ரொம்ப சிரமம்"

"இந்த நாட்களில் தமிழ் மக்களால் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. நாங்கள் தமிழர்கள் என்பதால் இராணுவமும் போலிசும் எங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றன."

இந்த தோட்டங்களில் ஒன்றில் கூட ஆஸ்பத்திரி கிடையாது. அவிஸ்ஸாவளை ஆஸ்பத்திரியே அருகில் உள்ளது. அதற்கும் அவர்கள் பிரதான வீதிக்கு வந்து மேலும் 6 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். குடிதண்ணீரும் சுகாதார வசதிகளும் குறைவு.

மலாயா கித்தா காடுகளில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்களோ; எப்படி அடக்கி வாசிக்கப் பட்டார்களோ; அதே நிலைமைதான் அங்கேயும் நிலவுகிறது.

தாய் மண்ணிற்கும் திரும்பிப் போக முடியவில்லை. தங்கி இருக்கும் மண்ணிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதுதான் இலங்கை மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைமை. என் மனம் வலிக்கிறது. என் கண்கள் பனிக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.11.2020

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக