தமிழ் மலர் - 04.11.2020
மலாக்காவில் உணவின்றி, வீடின்றி, ஆவணங்களின்றி வாழும் இந்தியக் குடும்பத்துக்குச் சீனர் கோவில் வீடானது. அக்கம் பக்கத்துச் சீனர்களின் உணவு அவர்களின் பசியை ஆற்றியது.
இந்தக் கொடுமை மலாக்கா மாநிலத்தில், தஞ்சோங் கிளிங், பகுதியில் வாழ்ந்து வரும் இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்து உள்ளது.
முனியம்மா சுப்ரமணியம் (வயது 56) தம்முடைய கடைசிக் காலத்தை நோயாளி கணவருடனும், மருமகள், பேரப் பிள்ளைகள் ஆகியோருடனும் அந்த சீனக் கோவிலில் கழித்து வருகிறார்.
அந்த இடமும் தற்காலிகம் தான். கிடைப்பதை உண்டு காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறார் முனியம்மா.
முனியம்மாவின் இந்தக் கதையைக் கேள்விப்பட்டு, அவர்களின் கொடுமையான சூழ்நிலையை நேரில் கண்டு, அவர்களுக்கு அடிப்படை உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், மலாக்கா ஊஜோங் பாசிர் சமூக நல மன்றத்தின் தோற்றுநரும் முன்னாள் இராணுவ வீரருமான உலகநாதன் முத்தையா.
முனியம்மா குடும்பத்தினர் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவல நிலையைக் காணொளியில் பதிவு செய்து, மலேசிய மக்களுக்குத் தெரியப் படுத்தியதன் காரணம் அவர்களுக்கு மக்களிடம் இருந்து உதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக.
தற்போது அவர்களுக்கு உடனடித் தேவை ஒரு வீடு. வீட்டுக்குத் தேவையான தளவாடப் பொருட்கள், மற்றும் உணவுப் பொருட்கள். பொது மக்கள் கொடுக்கும் நிதியுதவி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.
நோயாளி கணவர், போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்ட மகன். மகனின் பிள்ளைகள், மருமகள், மகள் விட்டுச் சென்ற பிள்ளைகள் அனைவருக்கும் முதலில் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்து அவர்களை இரு வருடங்களுக்கு கண்காணித்து, அவர்களின் தற்போதுள்ள சிக்கலான வாழ்க்கை முறையைச் சீரான வழிக்குக் கொண்டு வருவது முதல் முயற்சியாகும்.
உதவி கோருபவரிடம் முறையான ஆவணங்கள்; வங்கிக் கணக்கு இல்லாததால் உதவிப் பணத்தை நான் வழி நடத்தும் இயக்கத்தின் வழி அவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். இது போன்ற பல உதவிகளை நான் செய்து உள்ளேன்.
ஆனால் இதுதான் முதல் முறை இயக்கத்தின் வங்கிக் கணக்கைக் கொடுத்து உள்ளேன் என்றார் உலகநாதன்.
காணொளிப் பதிவேற்றத்திற்குப் பிறகு முனியம்மாவைப் பார்த்து விசாரிக்க பலர் வந்து போகின்றனர். மலாக்கா மாநில ம.இ.கா. தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எம்.எஸ். மகாதேவனும் வருகை தந்திருந்தார்.
முனியம்மா மற்றும் அவருடைய பேரக் குழந்தைகளுக்கு அடையாள ஆவணங்கள் இல்லை. இந்தக் குடும்பத்திற்கு ஆவணங்களைப் பெற்றுத் தர உதவினால் அதுவே பேருபகாரம் என்றார் உலகநாதன்.
சீனக் கோவிலில் 1 1/2 மாதங்ளாகத் தங்கி இருக்கிறேன். இங்கு வருவதற்கு முன் தங்கி இருந்த வீட்டின் வாடகையைக் கட்ட முடியாமல் துரத்தப் பட்டேன். சீனர்கள் கோயிலில் இடம் கொடுத்து சாப்பிட உணவையும் கொடுத்தனர்.
என் பிள்ளைகளுக்கு நான் சிரமத்தைத் தர விரும்பவில்லை. அவர்கள் நலமாக இருக்கட்டும். நான் என்னால் முடிந்தவரை சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு நேர்ந்த இந்த வாழ்க்கை எந்த அம்மாவுக்கும் வந்து விடக் கூடாது என்று கூறி முனியம்மா கண் கலங்கினார்.
மண், தூசுகள், தூய்மையின்மை காரணமாக, பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் கால், விரல் இடுக்கு, பாதம் ஆகியப் பகுதிகளில் சொறி சிரங்கு போல் கொப்புளங்கள் தோன்றி இருக்கின்றன.
அவர்களுக்கு மருத்துவ உதவியைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உலகநாதன் தெரிவித்தார்.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இளமைப் பருவம் தொட்டு எனக்குள் வளர்ந்தது.” சமூகநல இயக்கத்தின் வழி தம்மால் முடிந்த உதவிகளை மனித நேய அடிப்படையில் செய்து வருகிறேன் என்றார்.
27 வருடங்கள் இராணுவத்தில் இருந்து நம் தேசத்துக்குப் பணிபுரிந்த இவரின் கைகள், இன்று ஏழைகளுக்காக செய்து வரும் சேவையைப் பாராட்டி மக்கள் பேசுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக