தமிழ் மலர் - 05.11.2020
காதல் ஒரு ஆகாயம் அது
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம் அது
வீழாமல் இல்லையடி
நல்ல அழகான காதல் வரிகள். அந்தக் காதல் வரிகளின் குடும்பத்தில் பல்வகை காதல் ரகங்கள். அமரக் காதல், ஆத்மீகக் காதல், இந்திரக் காதல், இனிக்கும் காதல், வலிக்கும் காதல், ஜொலிக்கும் காதல். இப்படி ஏகப்பட்ட தெய்வீகக் காதல்கள். இவை அந்தக் காலத்து அத்திமேட்டுக் காதல்கள்.
இந்தக் காலத்துக் காதல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் அசின் பிசின் காதல்கள். ஊரைவிட்டு ஓடிப் போகலாமா காதல். பிள்ளையைப் பெற்றுக் கொண்டு கல்யாணம் பண்ணிக்கலாமா காதல். புருசனைப் போட்டுத் தள்ளும் காதல். இவை எல்லாம் மார்டன் மின்மினி ஜொல்லுவாய்க் காதல்கள். நாமும் தலை எழுத்தே என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்தக் காதல் என்றைக்கு வரும் எப்படி வரும். எவருக்குமே தெரியாது. தெரிந்தால் அந்தப் பக்கம் யார் தலைவைத்துப் படுக்கப் போகிறார்கள். சரி.
இந்தக் காதல் விசயத்தில் சலீம் அனார்கலி காதல் இருக்கிறதே அது இமயத்தின் சிகரத்தையே உரசிப் பார்த்த ஒரு காந்தர்வக் காதல். சும்மா சொல்லக் கூடாது. சொக்கமான தங்கத்தையும் விலை பேசிய காதல். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.
என்னடா வரலாற்றுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று காதல் பக்கம் வந்து விட்டானே என்று நினைக்க வேண்டாம்.
அன்றாடம் தயிர்ச் சாதம் சாப்பிட்டு சலித்துப் போய் கொஞ்சம் வெங்காயத் தோசை சாப்பிடலாமே என்கிற சின்ன ஆசை. வேறு ஒன்றும் இல்லீங்க. உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கட்டுரைகளுக்கு இரண்டு மூன்று நாள்கள் லீவு கொடுக்கலாமே. சரிங்களா.
சலீம் அனார்கலி காதல் உணர்வுகளில் பாச நேசமான சறுக்கல்கள். கொஞ்ச நஞ்சம் இருக்கவே செய்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. படியுங்கள். இரகசியம் தெரியும். அந்த ஜீவன்களின் சப்தநாடிகள் துடிக்கட்டும். கொஞ்ச நேரம் ஆர்ப்பரித்து விட்டுப் போகட்டும்.
எது எப்படி இருந்தாலும் ஐநூறு வருடங்களுக்குப் பிறகும் சலீம் அனார்கலி பற்றி நாம் பேசுகின்றோமே; அது தானே பெரிய விசயம்.
இப்படியும் சிலர் சொல்கிறார்கள். அதாவது சலீம் அனார்கலி காதல் என்பது ஒரு கற்பனையான புனைவுக் கதை. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அது ஓர் உண்மையான நினைவுகளின் சகாப்தம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
அதைப் பற்றி சிலர் தவறாகவும் சொல்கிறார்கள். அனார்கலி எனும் பெயரில் யாரும் இல்லை. அனார்கலி என்பது கவிஞன் ஒருவனின் கற்பனையில் உருவான கதாபாத்திரம். எழுதியவன் ஓர் உருதுக் கவிஞன். இடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு கற்பனையில் மூழ்கி இருந்தான்.
ஒரு கல்லறையைப் பார்த்தான். அங்கே அனார்கலி எனும் ஒரு நடன மாது இங்கே உறங்குகின்றாள் எனும் வாசகத்தையும் பார்த்தான். மெய்மறந்து அந்த வாசகங்களை ரசித்தான்.
அப்படியே ஒரு காதல் கதையையும் எழுதி விட்டான். இப்படியும் ஒரு சில வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. சொல்லி விட்டுப் போகட்டும். அது எந்த அளவுக்கு உண்மை. அதை ஆராய்ந்து பார்ப்பது தான் இப்போதைக்கு இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
எங்கே போனாலும் சரி; என்ன பேசினாலும் சரி; உண்மை இதுதான். சலீம் அனார்கலி என்பது காதலின் எல்லாப் பரிமாணங்களையும் பிழிந்து எடுத்த ஓர் உண்மையான ஒரு கவிதா காவியம். காதல் காவியம். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் சலீம் அனார்கலி ஒரு சோகமான வரலாற்றுக் காவியம். வரலாற்றில் இருந்து மறைக்கப் பட்ட ஓர் உண்மையான காதல் காவியம்.
தாஜ்மகால். தெரியும் தானே. அதைக் கட்டியது. ஷாஜகான் தெரியும் தானே. அந்த ஷாஜகானின் அப்பா தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகன் சலீம். என்ன யோசிக்கிறீர்கள். தொடர்ந்து படியுங்கள்.
சின்ன வயதிலேயே காட்டுக்கு அனுப்பப் பட்டவர் சலீம். பத்து ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தவர். அரியணை ஏறும் போது சலீம் என்கிற பெயர் ஜகாங்கீர் (Jahangir) என்று மாற்றம் கண்டது.
மொகலாயப் பேரரசில் ஜகாங்கீர் என்கிற பெயர் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
காடு நாடு; கத்தி கப்படா என்று பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு இருந்த சலீம் அரண்மனைக்குத் திரும்பினார். அவருக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தார்கள்.
நாடகம் நாட்டியம் என்று எல்லாமே ரொம்பவும் தடபுடலாக நடந்தன. அப்போது விருந்து வரவேற்பு அலங்கார வளைவில் ஒரு பெண் ஒரு பெண் ஓர் உயிர்ச் சிலையாக நிற்க வைக்கப் பட்டாள். சுத்தமாக அழகில் சுத்தமான ஓர் உயிர் ஓவியம். அந்த ஓவியத்திற்குப் பதினான்கு வயது இருக்கும். பெயர் நாதிரா. நடன அரங்கில் அவளும் நடனம் ஆடினாள்.
இந்த நாதிரா என்பவள் அக்பரின் அந்தர்ப்புரத்துப் பெண். சுருக்கமாகச் சொன்னால் ஒரு நடனமாது. அக்பரின் வைப்பாட்டிகளில் ஒருத்தி.
அக்பர் (Abul-Fath Jalal ud-din Muhammad Akbar) என்பவரைப் பற்றி பெரிய பெரிய கதைகளை எல்லாம் நாம் படித்து இருக்கிறோம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் இவரும் ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்து மறைந்து போய் இருக்கிறார். இவருக்கு 185 மனைவிகள். இந்த உண்மையை நம்புவீர்களா. ஏற்றுக் கொள்ளுங்கள்.
சான்றுகள்:
1.Burke, S. M. (1989). Akbar, the greatest Mogul. Munshiram Manoharlal Publishers. p. 142.)
2. https://angel1900.wordpress.com/2014/02/18/akbars-first-50-wives/)
ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் ஒரு மனைவியைப் போய்ப் பார்ப்பாராம். மற்ற நேரங்களில் மற்ற மற்ற அந்தர்ப்புரத்து வேலைகள் நிறையவே இருந்து இருக்கின்றன. இன்னும் ஓர் ஆயிரம் பெண்கள் வேலைக்காரிகளாக இருந்து இருக்கிறார்கள்.
நம்ப முடியவில்லை. என்ன செய்வது. நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்தக் காலத்து ராசாக்கள் பெண்கள் விசயத்தில் ரொம்பவும் தெளிவாக இருந்து இருக்கிறார்கள்.
பாவம் இப்போது வாழ்கிற ஆண்களைப் பாருங்கள். ஒரு இஞ்ச் நகர்ந்தாலும் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டிய நிலைமை. நான் சொல்லவில்லை. புந்தோங் பொன்னுசாமியின் புலம்புல்.
இம்சையைத் தாங்க முடியலடா சாமி என்று சிலர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று காணாமலும் போகிறார்களாம். இது பசார் மாலாம் பக்கிரிசாமியின் புலம்பல்.
இதில் நூற்றுக் கணக்கான பெண்களை வைத்துக் கொண்டு எப்படித்தான் பேர் போட்டார்களோ தெரியலீங்க. ரொம்ப கவலையாக இருக்குது. யோசிச்சு யோசிச்சு மயக்கமே மரி. இது பெரிய மார்க்கெட் பக்ககிரிசாமியின் புலம்பல்.
ஊர்க் கதை நமக்கு வேண்டாங்க. நம்ப கதையே பெரிய கதை. விடுங்கள். அனார்கலி கதைக்கு வருவோம்.
இந்தச் சலீம் அனார்கலி காதல் இருக்கிறதே இது ஒரு நல்ல காதல் காவியம். சோக ரசம் சொட்டும் ஒரு காதல் கதை. இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி ஒரு காதல் தோல்வி இனி யாருக்கும் வரக் கூடாது. அமைதியாகப் படியுங்கள்.
அதற்கு முன்னர் ஒரு சின்ன செருகல். சிலருக்கு காதலில் நம்பிக்கை இருக்காது. பார்த்தவுடன் காதல் என்று சொன்னால் சிலர் வாய்விட்டுச் சிரிப்பார்கள். பிடிவாதம் பிடிப்பார்கள். அது எல்லாம் தப்புங்க.
காதல் எந்த நேரத்திலும் வரலாம். எந்த இடத்திலும் வரலாம். எவர் மீதும் வரலாம். எப்படி வேண்டும் என்றாலும் வரலாம். வர வேண்டிய நேரத்தில் வந்தே ஆகும்.
வரும் ஆனால் வராது என்று மட்டும் சொல்ல முடியாது. அப்பேர்ப்பட்ட விசுவாமித்திரரால் கூட தப்பிக்க முடியாமல் போனதே. என்ன சொல்கிறீர்கள். சரி விடுங்கள்.
அம்பிகாபதி அமராவதி;
அக்பர் ஜோதா;
லைலா மஜ்னு;
ஹீர் ராஞ்ஜா;
ஷிரீன் பரகாத்;
ஷாஜகான் மும்தாஸ்;
விக்டோரியா ஆல்பர்ட்;
டிரிஸ்டன் சோல்ட்;
நெப்போலியன் ஜோஸ்பின்;
பாரீஸ் ஹெலன்;
கிளியோபட்ரா மார்க் ஆண்டனி;
இது ஒரு பெரிய காதல் பட்டியல். நீண்டு கொண்டே போகும்.
இவர்களை ஆதிவகைக் காதலர்கள் (Archetype Lovers) என்று சொல்வார்கள். ரோமியோ ஜூலியட் காதலை விடுங்கள். அது ஆங்கிலேய மகாகவி செக்ஸ்பியர் (William Shakespeare) கற்பனையில் எழுதியது.
Bly, Mary (2001). "The Legacy of Juliet's Desire in Comedies of the Early 1600s". In Alexander, Margaret M. S; Wells, Stanley. Shakespeare and Sexuality. Cambridge University Press. pp. 52–71
காதல் காவியப் பட்டியலில் சலீம் அனார்கலி காதல் கதையைச் சேர்த்தால் சலீம் அனார்கலிக்குத் தான் முதல் மரியாதை செய்ய வேண்டும்.
அனார்கலி என்பது ஓர் உருது மொழிச் சொல். ஷாமுகி (Shahmukhi) என்று பெயர். மாதுளம் மலர் என்று பொருள். அனார்கலியின் உண்மையான பெயர் நாதிரா பேகம் (Nadira Begum - Sharf-un-Nissa).
இவருக்கு இன்னும் ஒரு பெயர் இருக்கிறது. சர்ப் உன் நிசா. இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்மணி. அனார்கலியின் அப்பாவின் பெயர் நூர் கான் ஆர்குன். (Noor Khan Argun).
அக்பர் இந்தியாவை ஆட்சி செய்த போது அனார்கலியின் குடும்பம் இந்தியா பஞ்சாப்பைச் சேர்ந்த லாகூர் எனும் இடத்திற்குப் புலம் பெயர்ந்தது. பஞ்சாப் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது.
https://www.dawn.com/news/694833/legend-anarkali-myth-mystery-and-history - Legend: Anarkali: myth, mystery and history
அந்தக் கட்டத்தில் மொகலாயப் பேரரசு ஒட்டு மொத்த இந்தியாவையே ஆட்சி செய்து வந்தது. போர், வாள், இரத்தம். இதற்கு இடையில் இளைப்பாற ஓர் ஆகான அரண்மனை. பக்கத்தில் சொகுசாக ஓர் அந்தர்ப்புரம். அங்கே மது மாது மதி மயங்கும் நடனங்கள்.
இது தான் அப்போதைய மொகலாயப் பேரரசர்கள் சிலரின் வாழ்க்கை. அப்படியாக அமைத்துக் கொண்டார்கள். இந்தப் பட்டியலில் அவுரங்கசிப் மன்னரைச் சேர்க்க வேண்டாம். அவர் தனித்து நிற்கும் தனிக்காட்டு ராஜா.
ஜெய்ப்பூர் ராஜபுத்திர இனத்தை சார்ந்த ஹர்கா பாய் என்பவரை அக்பர் மணம் செய்து கொண்டார். ஹர்காவின் மற்றொரு பெயர் ஜோதா (Jodha Bai - Ruqayya Sultan Begum).
இவர்களுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தான் சலீம். ஏற்கனவே பிறந்தவர்கள் இருவர். சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள்.
அதற்கு முன்னர் அக்பரின் அதிகாரப்பூர்வமான மனைவிமார்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம்.
1. சலிமா சுல்தான் பேகம் (Salima Sultan Begum)
2. மரியம் சமானி (Mariam-uz-Zamani)
3. கிஸ்மியா (Qismiyah Banu Begum)
4. பிபி சாட் (Bibi Daulat Shad)
5. ராட்சியா (Raziya Sultan Begum)
6. ராஜ்குமாரி (Rajkumari Rukmawati Baiji Lal)
7. பானுமதி (Baiji Lal Bhanumati Kanwari)
8. பைஜி (Baiji Lal Raj Kanwari)
9. மகா ராஜகுமாரி (Maharajkumari Nathi Bai)
10. தாரா சகிபா (Tara Begum Sahiba)
11. தவுதி (Tauti Begum)
12. மன்போதி (Rajkumari Manbhaoti)
ஆக தவமாய் தவம் இருந்து பெற்ற மகனுக்கு சலீம் என்று பெயர் வைக்கிறார்கள். மொகலாயப் பேரரசின் ஒரே வாரிசு. அந்தர்ப்புர மகளிரின் மென்மையான கரங்களுக்குள் செல்லமாய் வளர்கின்றார்.
பத்து பன்னிரண்டு வயதிலேயே பற்பல கேளிக்கைகளில் ஒன்றரக் கலந்தும் போகின்றார். இந்த விசயம் அக்பரை வேதனைப் படுத்துகிறது. சலீமை எப்படியாவது திருத்த வேண்டும் என்று நினைத்துக் காட்டுக்கு அனுப்புகிறார். அதன் பின்னர் தான் சலீமின் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.11.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக