22 பிப்ரவரி 2021

கேமரன் மலை ஓராங் அஸ்லி தடயங்கள்

தமிழர்கள் எங்கே போனாலும் சரி; அவர்களின் தடயங்கள் எங்கேயாவது எப்படியாவது ஒட்டிக் கொண்டு இருக்கும். ஆர்டிக் துருவத்திற்குப் போய்ப் பாருங்கள். அங்கே யராவது ஒரு தமிழன் அங்கே உள்ள ஓர் ஐஸ்கட்டி பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு இக்ளு ஐஸ் வீட்டுக்குள் குடும்பம் நடத்திக் கொண்டு இருப்பான்.

மங்கோலியாவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கே ஒரு தமிழன் ஒரு மஞ்சள் தோலுக்குத் தாலி கட்டி மணிமேகலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருப்பான். சகாரா பாலைவனத்துக்குப் போய்ப் பாருங்கள். அங்கே ஒரு தமிழின் ஒரு மாசாய் பெண்ணை இழுத்துப் போட்டு பத்துப் பதினைந்து பிளைகளைப் பெற்றுப் போட்டு பத்துப் பதினைந்து ஓட்டகங்களை மேய்த்துக் கொண்டு இருப்பான்.

அடுத்து மலாக்காவில் மலாக்கா செட்டிகள். பரமேஸ்வரா வருவதற்கு முன்னதாகவே மலாக்காவிற்கு வந்தவர்கள். 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வியாபாரம் செய்ய வந்தவர்கள். அவர்களில் ஒரு குழுவினரின் கப்பல் தஞ்சோங் கிளீங் பகுதியில் பாறையில் மோதி சிதறியது.

அதில் இருந்த இருபது முப்பது தமிழர்கள் திரும்பிப் போக முடியாத நிலை. இங்கேயே தங்கி விட்டார்கள். அப்படியே உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக் கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள். அப்படித் தான் மலாக்கா செட்டிகள் வரலாறு உருவானது.

ரொம்ப வேண்டாம். பாபுவா நியூகினி. காட்டுமிராண்டிகள் வாழ்ந்த இடம். மனிதர்களைச் சாப்பிடும் மனிதர்கள் வாழ்ந்த இடம். அங்கேயும் தமிழர்கள் விட்டு வைக்கவில்லை. அங்கே போன சக்திவேல் என்கிற தமிழர் அந்த நாட்டிற்கே அமைச்சராகி வரலாறு படைக்கிறார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சும்மா சொல்லக் கூடாது. அந்தக் காலத்துத் தமிழர்கள் மன்மத ராசாக்களாகப் பயணித்து இருக்கிறார்கள். அப்படித்தான் தோன்றுகிறது. கெடா பேராக் மாநிலங்களில் வாழும் ஓராங் அஸ்லி மக்கள் பலரின் முகத் தோற்றங்களில் தமிழர்களின் சாயல் இருப்பதைக் கவனிக்கலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வணிகர்களாக வந்த தமிழர்களில் ஒரு சில இளைஞர்கள் ஓராங் அஸ்லி பெண்களைத் திருமணம் செய்து அவர்களோடு அப்படியே காட்டுக்குள் ஐக்கியமாகி விட்டார்கள். திரும்பி வர மனசு இல்லை. சரி.

கேமரன் மலையில் தமிழர் - ஓராங் அஸ்லி கலவைகள் உள்ளன. நெகிரி செம்பிலான் பெரெனாங், மந்தின் காடுகளிலும் தமிழர் - ஓராங் அஸ்லி கலவைகள் உள்ளன. கிமாஸ் தம்பின் காடுகளிலும் தமிழர் அஸ்லி கலவைகள் இன்றும் உள்ளன.

மேலும் ஒரு செய்தி. கேரித் தீவில் முன்பு காலத்தில் மா மெரி எனும் பூர்வீக மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களின் பெண்களில் சிலரை மலாயா தமிழர்கள் திருமணம் செய்து உள்ளார்கள் என்று கேரி தீவு பூபதி சொல்கிறார். சரி.

1920-ஆம் ஆண்டுகளில் கேமரன் மலைக் காடுகளில் சாலைகள் அமைக்கப் போன தமிழர்கள் சிலர் அங்குள்ள ஓராங் அஸ்லி பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கிக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சி, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கேமரன் மலையில் நடந்த ஓர் ஆச்சரியமான அதிசயமான கதை. இந்தக் கதையைப் பற்றி ஏற்கன்வே எழுதி இருக்கிறேன். பரவாயில்லை. மீண்டும் அசை போட்டுப் பார்ப்போம். எங்க தமிழர் இனமும் ஒசத்தி என்று வெளிச்சம் போட்டு காட்ட வேண்டாமா. நாங்க ஒன்னும் வந்தேறிகள் இல்லடா என்று சொல்லிக் காட்ட வேண்டாமா. சரி.

இந்தக் கேமரன் மலை கதை இருக்கிறதே இது கொஞ்சம் மாறுபட்ட கதை. மலாயா தமிழர்களின் வரலாற்றில் பழைமையும் புதுமையும் கலந்த ஒரு வரலாற்றுக் கதை.

கேமரன் மலை ஓராங் அஸ்லி தமிழர்க் கலவையின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். சமயங்களில் இஸ்கந்தர் நீர்வீழ்ச்சிப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பார்க்கலாம். சமயங்களில் மலைக்குப் போகும் சாலையின் ஓரங்களில் அத்தாப்புக் குடில்களை அமைத்து டுரியான் பழங்கள்; பெத்தாய் காய்கள்; விற்றுக் கொண்டு இருப்பார்கள்.

முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். இருந்தாலும் நன்றாக உற்றுக் கவனிக்க வேண்டும். இந்தியச் சாயல் ’பளிச்’சென்று நன்றாகவே தெரியும். அவர்களின் மூக்கு, கண்களில் ஒரு மாறுபட்ட தோற்றம் இருப்பதைக் கவனிக்க முடியும்.

அவர்களில் ஒரு சிலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கலாம். ஆனால் அவர்களில் பலருக்கும் தமிழ் மொழி தெரியாது என்பதே வேதனையான செய்தி.

1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத் தளமாக கேமரன் மலை விளங்கியது. வருடத்தைக் கவனியுங்கள். குதிரை வண்டிகளிலும்; எருமை மாட்டு வண்டிகளிலும் ஆங்கிலேயர்கள் ஏறிப் போய் இருக்கிறார்கள். முதன்முதலில் அங்கே போனவர்கள் யானைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இருந்தாலும் 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கேமரன் மலை புகழ் பெற்றது. அடர்ந்த காடுகளாக இருந்த பகுதிகளில் முதலில் ஒரு குறுகலான மண்பாதை அமைக்கப் பட்டது.

தாப்பாவில் இருந்து 19-ஆவது கல் வரையில் அந்தப் பாதை போடப் பட்டது. அதற்கு முன்னர் தஞ்சோங் ரம்புத்தான் வழியாகவும் கேமரன் மலைக்கு ஒற்றையடிப் பாதை இருந்தது. சிம்பாங் பூலாய் வழியாகவும் ஒரு குறுக்குப் பாதை இருந்தது.

அதன் பிறகு சற்றே பெரிய சாலைகளை ரிங்க்லெட் வரை அமைத்தார்கள். ஒரு குதிரை வண்டி போகும் அளவிற்குப் பாதை. தமிழர்கள் நிறையவே சாலை அமைப்புகளில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் கேமரன் மலை வரலாற்றில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. சரி.

மலேசிய நாட்டில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீதனமாகச் சீர் சிறப்புகளை வாரி வழங்கிவிட்டுப் போய் இருக்கிறார். அந்தப் பார்வையில் இயற்கைச் சீதனத்தின் சிகரமாய் விளங்குவது கேமரன் மலை.

தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் அமைந்து உள்ள மலைப் பிரதேசம் கேமரன் மலை. வருடம் முழுமைக்கும் குளிராகவே இருக்கும். இருந்தாலும் இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. வேலை தேடிப் போன வெளிநாட்டுப் புலம்பெயர்வுகளால் வெயில் அதிகமாகி விட்டது என்று உள்ளூர்வாசிகள் சிலர் புலம்புவதும் உண்டு.

கேமரன் மலையின் அசல் சொந்தக்காரர்கள் என்று சொன்னால் அவர்கள் தான் ஓராங் அஸ்லி மக்கள். பல ஆயிரம் ஆண்டுகளாகத் தீபகற்ப மலேசியாவிலும்; கேமரன் மலையிலும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பின்னர் கேமரன் மலையில் குடியேறியவர்கள் ஆங்கிலேயர்கள்; அதன் பின்னர் இந்தியர்கள்; சீனர்கள்.

1920-ஆம் ஆண்டுகளில் இந்தியர்கள் தான் அதிகமாக இருந்தார்கள். 6000 பேர் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. விரல்விட்டும் எண்ணும் அளவிற்கே சீனர்கள். இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

1926-ஆம் ஆண்டு ஜான் அர்ச்பால்ட் ரசல் (John Archibald Russell) என்பவர் கேமரன் மலையில் போ தேயிலைத் தோட்டத்தை (Boh Tea Estate) உருவாக்கினார். முதன்முதலில் அவருக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்கள் ஓராங் அஸ்லி மக்கள். இதை நாம் மறந்துவிடக் கூடாது.

காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள். இருந்தாலும் காடுகளில் ஒற்றையடிப் பாதைகளை அமைத்தவர்கள் ஓராங் அஸ்லி மக்கள் ஆகும்.

ஓராங் அஸ்லி மக்கள் உண்மையிலேயே வெள்ளந்திகள். காட்டு மரங்களை வெட்டி வந்து சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொள்வார்கள். காட்டில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு ஆடைகளைப் பின்னிக் கொள்வார்கள். அதே காட்டில் கிடைக்கும் காய் கனி விலங்குகளை உணவுப் பொருட்களாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

வெளி உலகத் தொடர்புகள் இல்லாமல் வாழ்ந்து வரும் அழகிய மனிதர்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. அவர்களிடம் பெரும் மாற்றங்கள். எல்லோரிடமும் கைப்பேசிகள் உள்ளன; மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. ’ரேய்பேண்ட்’ முகக் கண்ணாடி போட்டு அழகு காட்டுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சர் வில்லியம் கார்டன் கேமரன் (Sir William Gordon Cameron). இவர்தான் கேமரன் மலை எனும் அழகு ஓவியத்தை அன்புச் சீதனமாய் அன்பளிப்புச் செய்து விட்டுச் சென்ற அழகிய மைந்தர்.

மலாயாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் பல நல்ல காரியங்களைச் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அதில் உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி கேமரன் மலையின் கலா அழகிற்கு மெருகேற்றி விட்டுப் போய் இருக்கிறார்கள். நன்றி சொல்வோம்.

1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், கேமரன் மலை அவர்களின் ஓய்வுத் தளமாக விளங்கியது. வருடத்தைக் கவனியுங்கள். இருந்தாலும் 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகே புகழ் பெற்றது. அடர்ந்த காடுகளாக இருந்த பகுதிகளில் முதலில் ஒரு குறுகலான மண்பாதை போடப் பட்டது.

1926-ஆம் ஆண்டு தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்க மலாயா ஆங்கிலேய அரசு திட்டம் வகுத்தது. பத்து மில்லியன் மலாயா டாலர்கள் செலவாகும் என்றும் கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி பார்த்தால் முன்னூறு நானூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டிப் போகலாம்.

சாலை அமைப்பிற்கு போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) எனும் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைப்புப் பணிகள் தொடங்கின. 1930 நவம்பர் 14-ஆம் தேதி முடிவுற்றது.

அது ஒரு சவால் மிக்க நிர்மாணிப்புப் பணி. குதிரை அல்லது மாட்டு வண்டிகளில் தளவாடப் பொருட்கள் தாப்பா நகரில் இருந்து கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன.

பின்னர் நீராவி இயந்திரங்கள் மூலமாக இரும்புத் தளவாடப் பொருட்கள் மேலே கொண்டு செல்லப் பட்டன. கல் பாறைகளை உடைப்பதற்கு அதிக நீர் அழுத்தத்தில் பாறைகளை உடைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். கேமரன் மலை சாலையின் நீளம் 51 மைல்கள்.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தார்கள். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப் பட்டார்கள். சிலர் காடுகளிலேயே இறந்தும் போனார்கள். வேலை செய்த தமிழர்கள் சிலர் காட்டுக்குள் ஓடிப் போனார்கள். அப்படி ஓடிப் போனவர்கள், காட்டுக்குள் அப்படியே ஒளிந்து கொண்டார்கள். வெளியே வரவில்லை.

பல மாதங்கள் ஓராங் அஸ்லி மக்களுடன் வாழ்ந்தார்கள். அப்படியே  ஓராங் அஸ்லி பூர்வீகப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு மறைவு வாழ்க்கை. சாலை நிர்மாணிப்புப் பணிகள் முடிந்தததும் இவர்களும் வெளியே நடமாட ஆரம்பித்தார்கள்.

ஆனால் சொந்த ஊர்களுக்கு அவர்கள் திரும்பிச் செல்லவில்லை. ஏன் என்றால் அவர்களுக்குக் காட்டிலேயே குடும்பம் அமைந்து விட்டது. விட்டுப் போக மனம் இல்லாமல் அவர்களும் ஓராங் அஸ்லி மக்களைப் போல வாழ ஆரம்பித்தார்கள்.

அந்த மாதிரி காட்டுக்குள் போன மன்மத ராசாக்கள் அங்கேயே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த விசயம் எத்தனை பேருக்குத் தெரியும். அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். தமிழர்ச் சாயல் ’பளிச்’சென்று நன்றாகவே தெரியும்.

சும்மா சொல்லக் கூடாது. இந்தியச் சாமுத்திரிகா இலட்சணம் எங்கே எல்லாம் போய் விளையாடி இருக்கிறது பாருங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

1920 - 1950-ஆம் ஆண்டுகளில் வெள்ளைக்கார முதலாளிகளின் தரகர்களைத் தமிழ் நாடு, நாமக்கல் வட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்து நூற்றுக் கணக்கான தமிழர்கள் கேமரன் மலையில் உள்ள போ தோட்டத்திற்குக் கொண்டு வரப் பட்டார்கள். தவிர அருகாமையில் ஏழு தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்கும் கொண்டு வரப்பட்டார்கள்.

அன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் நூற்றுக் கணக்கான; ஆயிரக் கணக்கான தமிழர்க் குடும்பங்கள் வேலை செய்தார்கள். ஆனால் அதே இடத்தில் இன்று சில பத்து தமிழர்க் குடும்பங்கள் மட்டுமே.

இப்போது கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்; பூந்தோட்டங்கள்; விவசாய நிலங்கள் அனைத்திலும் வெளிநாட்டவரின் ஆதிக்கம். வங்களாதேசிகள், இந்தோனேசியர்கள், நேப்பாளிகள், மியன்மாரிகள் என ஆயிரக் கணக்கான அந்நிய நாட்டவர்கள். கேமரன் மலையில் தடுக்கி விழுகிற இடங்களில் எல்லாம் வெளிநாட்டவர்கள்.

கேமரன் மலை தமிழர்கள் இன்றும் உழைப்பதிலும் சேமிப்பதிலும் கெட்டிக்காரர்கள். சீனர்களுக்கு ஈடாக கேமரன் மலை தமிழர்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்று கேமரன் மலை தமிழ் ஆர்வலர் குமார வேல்முத்து சொல்கிறார்.

அன்றைய கேமரன் மலையின் புகழைச் சொல்லி மாளாது. இன்றைய கேமரன்மலை நிலையின் சோகத்தை சொன்னால் மனம் தாங்காது. இன்னும் ஒரு விசயம்.

உலகின் எட்டாவது அதிசயமாக இருந்த கேமரன் மலையை இப்போது எந்த இடத்தில் வைப்பது என்றுதான் தெரியவில்லை. விவசாயம் என்கிற பேரில் சுற்று வட்டாரக் காடுகளை எல்லாம் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள்.

அழகு அழகான பறவைகளை எல்லாம் அடித்து விரட்டி விட்டார்கள். ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிந்த புலிகளை எல்லாம் வறுத்து எடுத்து விட்டார்கள்.

அடுத்து மனிதர்கள்தான் பாக்கி. அடுத்து எங்க இனம் தான் ஒசத்தி என்று சொல்லி ஓர் இனம் இருக்கிற தமிழர்களையும் ஒரு வழிபண்ணி விடுவார்கள் போலும்.

காட்டுக்குள் மாயமாய் மறைந்து போன தமிழர்களின் வாரிசுகளைத் தேடிப் பிடிப்பது பெரிய வேலை. இரு தடவை அவர்களைத் தேடிப் போய் இருக்கிறேன். சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.

மலேசியத் தமிழர்கள் எனும் சொல்லில் உயிர் ஊஞ்சலாடுகிறது. மலாயா தமிழர்கள் எனும் சொல்லில் உயிர் கொப்பளிக்கிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.02.2021


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக