உழைப்பு. உழைப்பு. உழைப்பு. இதைப் பகலில் கண்ணால் பார்க்க வேண்டும். இரவில் மனதால் நினைக்க வேண்டும். உழைப்பு உயர்வுக்கு ஓர் அழைப்பு. அந்த உழைப்பு இல்லை என்றால் உயர்வும் இல்லை. உயர்வுக்கு உயிர்ப்பும் இல்லை. இப்படிச் சொன்னவர் வி.கே.கே. எனும் ஓர் உழைப்பின் சிகரம்.
திருவாரூர் மண்ணிலே பிறந்து, மலை நாட்டில் கால் பதித்து, உழைப்பால் உயர்ந்த ஓர் இமயத்தின் உயிர் வாசகம். உழைப்பின் தத்துவத்திற்கு உன்னதம் பேசிய ஓர் உயிர்மை வாசகம். அதுவே வீ.கே.கல்யாணசுந்தரம் எனும் உழைப்பு நாடியின் தாரக மந்திரம்.
அந்த வாசகத்தின் பாரிஜாதத்தில் மற்றும் ஒரு தேவலோக மெய்மைச் சாரலும் பனித்துச் செல்கின்றது. வாழ்க்கை எனும் பாதையில் மேடுகள் உண்டு. பள்ளங்கள் உண்டு. ஏற்றங்கள் உண்டு. இறக்கங்கள் உண்டு. திருப்பங்களும் உண்டு.
அதே பாவனையில் வெற்றி தோல்விகளும் உண்டு. அதுதான் வாழ்க்கை. அந்த மாற்றங்களும்; அந்த மேடு பள்ளங்களும்; அந்தத் திருப்பங்களும் இல்லை என்றால் அது வாழ்க்கை அல்ல. வெறுமையின் பாலைவனக் கோடுகள். வேறு வார்த்தை இல்லை.
வறுமையான குடும்பத்தில் பிறந்து; வறுமையின் கீறல் வடுக்களைப் பார்த்து; வறுமையின் சிகப்பு நிறத்தில் வாடி வதங்கியவர் வீ.கே.கல்யாணசுந்தரம். துன்பத்தின் நெருடல்களைத் துய்த்துப் பார்த்தவர் வீ.கே.கல்யாணசுந்தரம்.
வறுமையின் அந்திவானத்தில் நீறுபூத்த நீர்க் கனலாய் வாழ்ந்து காட்டியவர் வீ.கே.கல்யாணசுந்தரம். நேற்றைய கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.
வீ.கே.கே. உறவினர் வழி ஓர் அன்பர். பெயர் அருணாசலம் அவரிடம் தான் வீ.கே.கே. முதலில் வேலைக்குச் சேர்ந்தார். இடுப்பு உடைந்து போகும் கொத்தடிமை போல கூலி வேலை.
மாட்டுக் கொட்டகையில் மாடுகளைச் சீராட்டிப் பாராட்டிக் கவனித்துக் கொள்ளும் வேலை. நாலுகால் ஜீவன்களுடன் நாலு வேளையும் கட்டிப் புரண்டு போராடிய வேலை. அப்படியே மாட்டு வண்டி ஓட்டுவதையும் கற்றுக் கொண்டார். சில மாதங்கள் கழித்து மாட்டுக் கொட்டகையில் இருந்து பதவி உயர்வு. மாமாவின் கடை வேலைகளுக்கு மாறி வந்தார்.
அங்கே புன்னகைத் தோற்றத்தில் புன்முறுவல்கள். நன்சொற்களில் நளினத் தென்றல்கள். கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுடன் இனிய முகத்துடன் இனிதாகப் பேசி இனிதான நட்பை வளர்த்துக் கொண்டார்.
அப்படியே வியாபார நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். கெட்டிக்காரப் பையன். மன்னிக்கவும். ஒரு பெரியவரைப் பையன் என்று சொன்னதற்காக… அவரின் அப்போதைய நிலையில் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
மாட்டு வண்டியில் சாமான் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கிராமம் கிராமாய்ப் போய் சில்லறை வியாபாரம் செய்து வந்தார். முன்பு காலத்தில் போக்குவரத்து என்றால் மாட்டுவண்டிகள் தான்.
பக்கத்து ஊருக்குப் போவது என்றாலும் மாட்டு வண்டிதான். பத்ராவதிக்குப் போவது என்றாலும் மாட்டு வண்டிதான். இப்போது போல வீட்டுக்கு ஒரு கார் எல்லாம் இல்லை. ஒரு நூறு வருசத்துக்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன்.
வீ.கே.கே. ஒரு வெற்றிகரமான வியாபாரியாக மாறுவதற்கு மாட்டு வண்டிகள்தான் அடித்தளம் போட்டுக் கொடுத்தன. ஏழு வருடங்கள் அருணாசலம் கடையில் வேலை செய்தார். சொற்ப சம்பளம். மூன்று வேளை உணவு. தங்குவதற்கு ஒரு சின்ன அறை. அவ்வளவுதான். மற்றபடி மூன்று ஸ்டார் ஓட்டல் வசதி எல்லாம் இல்லை. அது ஒரு கனவு வாழ்க்கை.
1930-ஆம் ஆண்டில் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 10. அதில் இருந்து 1937-ஆம் ஆண்டு வரை, அதாவது 17 வயது வரை அந்த ஒரே கடையில் தான் வேலை.
காலை ஆறு மணிக்குக் கடையைத் திறந்து ராத்திரி எட்டு மணிக்கு அடைக்க வேண்டும். ஒரு நாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. ஏழு வருசங்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
அந்த ஏழு வருடங்களில் ஒரே ஒரு முறை தான் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய் இருக்கிறார். அப்படித் திரும்பிப் போன போது அவருடைய தாயார் மீனாட்சி அம்மாள் மிகவும் பூரித்துக் கலங்கிப் போய் இருக்கிறார்.
பத்து வயதில் கண்காணா இடத்துக்கு அனுப்பிய பையனை 17 வயதில் மீண்டும் பார்த்தால் எந்தத் தாய்தான் மனம் கலங்க மாட்டார். சொல்லுங்கள்.
வீ.கே.கே.வுக்கு பிடித்தமான உணவு வாத்து முட்டை அவியல். தந்தையார் பக்கத்துக் கட்டைக்குப் போய் வாத்து முட்டைகளை வாங்கி வருவார். வறுவல், பொறியல், அவியல் என்று தாயார் சமைத்துக் கொடுப்பார். வீ.கே.கே. மனதாரச் சாப்பிட்டுவிட்டுப் போவார்.
மளிகைக் கடையில் வேலை செய்யும் போது அவருக்கான ஊதியம் மாதாமாதம் வரவில் வைக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் தந்தையார் புலியூருக்குப் போவார். வீ.கே.கே. சம்பளத்தில் ஒரு பகுதியைப் பெற்றுச் செல்வார். வீ.கே.கே.வின் உழைப்பில் குடும்பத்திற்கு ஒரு பெரிய உதவி.
பாருங்கள். பள்ளிக்கூடம் போக ஆசை. படிக்க வேண்டும் எனும் ஆசை. ஆனால் படிக்க முடியவில்லை. குடும்பத்தின் வறுமை வேறு மாதிரியாக எழுதிச் சென்றுள்ளது. பால்ய வயதிலேயே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பு.
இது ஒரு வகையில் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும். அவர் படிப்பைத் தொடர்ந்து இருந்தால் அங்கே ஏதோ ஒரு வேலை செய்து அவர் வாழ்க்கை அப்படியே அங்கேயே சமைந்து போய் இருக்கும்.
தான் உண்டு தன் வேலை உண்டு எனும் பழைய பல்லவியிலேயே அனுபல்லவியைச் சேர்த்து இருப்பார். சாமான்ய மனிதராகவே வாழ்ந்து மறைந்து போய் இருப்பார்.
வீ.கே.கே. எனும் மந்திர எழுத்துகள் மகிமை பாடி இருக்கா. ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும். அதை யாராலும் மாற்ற முடியாது. இந்த நேரத்தில் இது நடக்கும் என்பது ஒவ்வோரு மனிதருக்கும் எழுதி வைக்கப்பட்ட சாசனம்.
ஆக அதை மாற்ற முடியாது. ஆனால் திருத்தங்கள் செய்யலாம். அந்தத் திருத்தங்களைத் தான் வீ.கே.கே. அவர்களும் செய்து இருக்கிறார். வீ.கே.கே. என்பவர் மலாயாவுக்குப் போக வேண்டும் என்று விதி எழுதிச் சென்று விட்டது.
புலியூர் மளிகைக் கடையில் வாடிக்கையாளர்களுடன் வி.கே.கே. பயணித்துக் கொண்டு இருக்கும் போது அங்கே பெற்றோர் வீட்டில் பணப் பிரச்சினை. அல்லும் பகலும் வாடிக்கையான பிரச்சினை. வறுமையின் நிறம் சிகப்பு என்று சொல்வார்கள்.
அந்த நிறத்தை வீ.கே.கே. சின்ன வயதிலேயே நன்றாகப் பார்த்துப் பழகி விட்டார். சிகப்பு நிற வாழ்க்கையில் வாழ்ந்து அந்த நிறத்திற்குள் ஆழமாய் ஐக்கியமாகி விட்டார் என்றும் சொல்லலாம். தப்பு இல்லை. அப்படித்தான் அவர் வாழ்க்கைச் சுவடுகள் வரலாறு பேசுகின்றன.
ஒரு கட்டத்தில் தாயாருக்குக் காலரா நோய். கிராமத்து நாட்டு வைத்தியம் செய்து பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. சில நாட்கள் போராட்டம். காலத்தின் கொடுமை. மீனாட்சி அம்மாள் இறந்து போனார்.
அந்தச் செய்தி வி.கே.கே. அவர்களுக்கு மிகத் தாமதமாகவே வந்து சேர்ந்தது. தாயாரின் இறுதிச் சடங்கில்கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. என்னே துர்பாக்கியம்.
தாயாரின் இறப்பு அவரைப் பெரிதும் பாதித்து விட்டது. பெற்ற தாய்க்கு மருத்துவம் செய்ய முடியவில்லையே; உதவி செய்ய முடியவில்லையே எனும் மன வேதனை; மனக்குமுறல். மனத்தின் கொப்பளிப்பு. அவை அவரை நீண்ட காலம் வாட்டி வதைத்தன. அவரே பலரிடம் சொல்லி இருக்கிறார்.
அப்போதே மனதில் ஒரு புள்ளி வைத்தார். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று ஏற்பட்டால் தாயாரின் பெயரில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும். அதன் மூலம் இல்லாதவர்களுக்கு இயன்ற வரை உதவிகள் செய்ய வேண்டும் என்று நினைத்தார். நினைத்தது போல செய்தும் காட்டினார்.
நல்லபடியாக வாழ்க்கை அமைந்து ஒரு நல்ல நிலையை அடைந்ததும் திருவாரூரில் மீனாட்சி அம்மாள் எனும் பெயரில் மகப்பேறு மருத்துவமனை கட்டி இருக்கிறார். ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தாயாருக்கு நல்லதொரு நினைவாஞ்சலி. வாழ்த்துகிறேன்.
அதன் பின்னர் தன் வியாபாரத் திறனில் தீவிரம் காட்டினார். அந்தக் கட்டத்தில் ஜாபார் என்பவரின் நட்பு கிடைத்தது. ஜாபார் ஐயா அடிக்கடி மலாயாவுக்குப் போய் வந்து கொண்டு இருந்தார். மலாயா மண்வாசனைகளை அதிகமாகவே சுவாசித்தவர். அக்கரைச் சீமையின் வியாபார நெளிவு சுழிவுகளை நன்கு தெரிந்து கொண்டவர்.
ஒரு செருகல். தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது நன்றாகவே சுரண்டி விட்டார்கள். புதிய விசயம் அல்ல. உலகத்திற்கே தெரிந்த விசயம். மண் வளம்; கனி வளம்; இயற்கை வளம்; உற்பத்தி வளம் என்று எல்லா வளங்களையும் அடியோடு சுரண்டி எடுத்து கப்பல் கப்பலாய் பார்சல் பண்ணி விட்டார்கள்.
இந்தப் பக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் ஓடாய்த் தேய்ந்து கட்டெறும்பாய் கருகிக் காய்ந்து போனதுதான் மிச்சம். அங்கே இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த மக்கள் நாளும் பொழுதும் நன்றாய்ச் சாப்பிட்டு சவடால் பேசியது தான் தமிழகம் பார்த்த நன்றிக்கடன்.
அந்தக் கட்டத்தில் பஞ்சம் பிழைக்க தமிழர்கள் உலகம் முழுமைக்கும் புலம் பெயர்ந்து வந்தார்கள். ஒப்பந்தம் எனும் பெயரில் சஞ்சி கூலிகளாக ஏற்றுமதி செய்யப் பட்டார்கள்.
கரிபியன் கரும்புத் தோட்டங்கள்; இலங்கைத் தேயிலைத் தோட்டங்கள்; மலாயா ரப்பர் தோட்டங்கள்; இந்தோனேசியா மிளகுத் தோட்டங்கள்; தென் ஆப்பிரிக்கா காபித் தோட்டங்கள்; இப்படி ஆயிரக் கணக்கான தோட்டங்கள் பூஞ்சைக் காளான்கள் போல பூத்துக் குலுங்கத் தொடங்கின. தமிழர்களும் புலம் பெயர்ந்தார்கள். புலனங்களை அமைத்துக் கொண்டார்கள்.
அவர்களில் சிலர் வியாபாரம் செய்வதற்குப் பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்றார்கள். பெரும்பாலோர் இளைஞர்கள். குறுகிய காலத்திற்குப் பயணங்கள். கொஞ்சம் காசு பார்த்ததும் தாயகம் திரும்பினார்கள். அப்படிப் போய் வந்தவர்களில் ஒருவர்தான் ஜாபார்.
கல்யாணசுந்தரம் கிராமம் கிராமமாக வியாபாரத்திற்குப் போய் வருவது வழக்கம். அப்படிப் போய் வந்து கொண்டு இருந்த போது தான் ஜாபாரின் நட்பு கிடைத்தது. கல்யாணசுந்தரத்தைவிட ஜாபார் எட்டு வயது மூத்தவர்.
வயது இடைவெளி இருந்தாலும் கல்யாணசுந்தரத்தின் சுறுசுறுப்பு; பேச்சுத் திறமை; பழக்க வழக்கத்தின் கவர்ச்சித் தன்மை; இவை ஜாபாரை வெகுவாகக் கவர்ந்து விட்டன. காலப் போக்கில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
மலாயாவைப் பற்றி ஜாபார் நிறைய கதைகள் சொல்வார். காசு பணம் கித்தா மரத்தில் காய்ச்சு காய்ச்சுத் தொங்குது எனும் டயலாக் வந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் அக்கரையிலும் இக்கரையிலும் புகழ்பெற்ற டயலாக் தானே.
மலாயாவிற்குப் போகலாம். வணிக சாணக்கியத்தைப் பயன்படுத்தலாம். அதிர்ஷ்ட தேவதையைச் சந்தித்துப் பார்க்கலாம் எனும் ஆசையும் கூடவே வந்து சேர்ந்தது. அடுத்த முறை மலாயாவுக்குச் செல்லும் போது தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கல்யாணசுந்தரம் கேட்டுக் கொண்டார். ஜாபாரும் சம்மதித்தார்.
ஒரு வருடம் கழிந்தது. மலாயாவுக்குப் போகும் திட்டம் கிடப்பிலேயே கிடந்தது. ஒருநாள் கல்யாணசுந்தரத்திற்கும் கடை முதலாளிக்கும் ஒரு சின்ன பிரச்சினை. என்ன பிணக்கோ தெரியவில்லை. புகையத் தொடங்கியது. அன்றைக்குப் பார்த்து பக்கத்துக் கிராமத்தில் வியாபாரம்.
தன் பிரச்சினையை ஜாபாரிடம் கல்யாணசுந்தரம் சொல்வதற்கு முன்னதாக ஜாபார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இன்னும் நான்கு நாட்களில் பினாங்கிற்குப் போகப் போவதாகச் சொன்னார்.
கல்யாணசுந்தரத்திற்கு ஒரே அதிர்ச்சி. கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அப்போதுதான் கடையில் நடந்த பிரச்சினையைக் கல்யாணசுந்தரம் சொன்னார். ஜாபாரும் கல்யாணசுந்தரத்தைப் பினாங்கிற்கு அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தார்.
கடைக்கு வந்ததும் முதலாளியிடம் விசயத்தைச் சொன்னார். மலாயாவுக்குப் போகப் போவதாகச் சொன்னார். தனக்குச் சேர வேண்டிய சம்பளப் பணத்தைப் பைசல் பண்ணச் சொன்னார். மறுத்து விட்டார்கள். பற்பல சாக்குப் போக்குகள். கல்யாணசுந்தரம் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் ஊர்ப் பெரியவர் ஒருவரை வைத்துச் சமாதானம் செய்தார்கள்
கப்பல் பயண டிக்கெட்டிற்கு 28 ரூபாய் வேண்டும். ஆனால் சம்பளப் பணத்தில் 20 ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்கள். எஞ்சிய 8 ரூபாய் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். இப்படிச் செய்தால் கல்யாணசுந்தரம் பினாங்கிற்குப் போக மாட்டார்; கடையைப் பார்த்துக் கொள்வார் எனும் எதிர்பார்ப்பு.
கல்யாணசுந்தரம் பிடித்த பிடியாய் நின்றார். ‘போயே ஆக வேண்டும். என்னக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாலு காசு பார்த்து நல்லபடியாக வாழ வேண்டும்’ என்று ஒற்றைக் காலில் நின்றார்.
வேறு வழி இல்லாமல் இருபது ரூபாயோடு கல்யாணசுந்தரத்தின் பயணம் தொடங்கியது. மிச்சம் 8 ரூபாயை ஜாபார் முன்பணமாக வழங்கினார்.
உதவி என்று வரும் போது அந்த உதவி எந்த வடிவிலும் வரலாம். எந்த மனித வடிவத்திலும் வரலாம். சொந்த பந்தங்கள் இருந்தாலும் சுயநலமே சொந்த நலமாக சுடர்விட்ட காலத்தில் ஜாபார் போன்ற நல்ல உள்ளங்களும் நாணயம் பேசி இருக்கின்றன.
அடுத்த நாள் நாகப்பட்டினத்திற்கு அவர்களின் பயணம். புலியூரில் இருந்து நாகப்பட்டினம் வெகு தொலைவில் இருந்தது. பொதுப் போக்குவரத்து குறைவு. வாடகைக் கார் வசதிகள் இல்லாத காலக் கட்டம். இரயில் வசதிகள் இருந்தாலும் புலியூரில் இருந்து இரயில் சேவைகள் இல்லை. எல்லாமே மாட்டுவண்டி ஐலசா பயணங்கள் தான்.
நாகப்பட்டினத்தில் இருந்து பினாங்கிற்கு வந்த கதையை நாளைய கட்டுரையில் பார்ப்போம். அதன் பின்னர் தான் சிலீம் ரீவர் கதை தொட்டு வரும்.
வாட்ஸ் அப் புலன அன்பர்களின் பதிவுகள்
ராதா பச்சையப்பன்: கட்டுரையை இப்போது தான் படித்தேன். சின்ன வயதில் வீ.கே.கே.யின் வாழ்க்கையில் அதிகமாக வேதனையும், சோதனையும் நிறைந்ததாகவே இருந்தன.
ஏழு வருடங்களாக அருணாசலம் கடையில் சொற்ப சம்பளம். மூன்று வேளை உணவு. சின்ன அறை தங்குவதற்கு... 1930-ஆம் ஆண்டு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது வயது 10. அதிலிருந்து 1937-ஆம் ஆண்டு வரை, அதாவது 17-வயது வரை அந்த ஒரே கடையில் வேலை செய்தார்,
காலை 6 மணி முதல்; இரவு 8 மணிக்குதான் கடையை அடைக்க வேண்டும். இப்படி ஏழு வருடங்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
ஏழு வருடங்களில் ஒரு முறைதான் தன் சொந்த ஊருக்கு திரும்பிப் போய் இருக்கிறார். அப்படி திரும்பிப் போன போது அவருடைய தாயார் மீனாட்சி அம்மாள் மிகவும் பூரித்துக் கலங்கிப் போய் இருக்கிறார்.
வீ.கே.கே. பிடித்தமான உணவு வாத்து முட்டை அவியல். தாயார் சமைத்து கொடுத்து, வீ.கே.கே. மனதாரச் சாப்பிட்டு விட்டு போவார். பூலியூர் மளிகைக் கடையில் வாடிக்கையாளருடன் வீ. கே.கே. பயணித்துக் கொண்டு இருக்கும் போது அங்கே, பெற்றோர் வீட்டில் பிரச்சனை.
அல்லும் பகலும் வாடிக்கையான பிரச்சினை. வறுமையின் நிறம் சிகப்பு என்று சொல்வார்கள். ஒரு கட்டத்தில் தாயாருக்கு காலரா நோய். மீனாச்சி அம்மாள் இறந்து போனார். வீ.கே.கே. அவர்களுக்கு மிக தாமதமாகவே செய்தி வந்து சேர்ந்தது.
தாயாரின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. என்னே துர்பாக்கியம். தாயார் இறப்பு அவரைப் பெரிதும் பாதித்து விட்டது. பெற்ற தாய்க்கு மருத்துவம் செய்ய முடியவில்லையே எனும் மனவேதனை. அந்த நினைவில் திருவாரூரில் மீனாட்சி அம்மாள் எனும் பெயரில் மகப்பேறு மருத்துவமனை கட்டி இருக்கிறார்.
ஜபார் என்பவரின் நட்பு. கிடைத்தது. ஜபார் ஐயா அடிக்கடி மலாயாவுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். அக்கரை சீமையில் வியாபார நெளிவு சுழிவுகளை நன்கு தெரிந்து கொண்டவர். ஜபாருடன் மலாயாவுக்குப் பயணமானார் வீ.கே.கே.
அதிலும் பல பிரச்சனைகள் வந்தன. வீ.கே.கே. வேலை செய்த கடை முதலாளி சம்பளம் தர முடியாதுனு கூறினார். பெரியவர் ஒருவரை வைத்து சமாதானம் செய்தார்கள்.
கப்பல் டிக்கெட்டுக்கு 28 ரூபாய். ஆனால் கடை முதலாளி சம்பளம் கொடுத்ததோ 20 ரூபாய்தான். ஜபார் ஐயா 8 ரூபாயை முன்பணமாக வழங்கினார். ஜபாரைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கவே செய்கிறார்கள். பயணம் நாளை தொடரும். நன்றி.
விமலா நாயர்: Mr. MK. We should write our history in all language.. Tamil, English and malay.. For international level. We are losing our identity. Malai naadu.. Malaya aana unmai maraikka paattu irukirathu. You are the right person.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க சகோதரி. முதலில் அழுத்தமான ஆழமான வரலாற்றைத் தமிழில் கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் மற்ற மற்ற மொழிகளில் கொண்டு போக முயற்சி செய்வோம். கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனமாக அமையட்டும்.
குமரன் மாரிமுத்து: அருமை..... கண்கள் முன்னே ஒரு திரைக் காவியம் போல கட்டுரை செல்கிறது ஐயா....💐💐💐
இறைவன் வேலாயுதம்:
கணேசன் உலு திராம்: Arumai arumai 👏👏👏👏👏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக