அரிய உழைப்பில் அடக்கமான உணர்வுகள். உயரிய முயற்சியில் எளிமையான உயிர்ப்புகள். இறைமைத் தோரணத்தில் ஈகையின் விழுமியங்கள். வேதனைப் படிமத்தில் சோதனையின் வடிவங்கள். அவை மனிதநேயத்தில் மெழுகிய வாழ்வியல் நயனங்கள். ஒட்டுமொத்த மெய்யியல் வடிவுகளின் ஒருதலை முகவரிகள். அதில் வீ.கே.கே. எனும் அகவரியில் ஒரு வண்ணத் தூரிகை.
அலைகடல் தாண்டி மலைநாட்டிற்கு வந்தார். அலை மோதும் திரவியங்களை அலை அலையாய்த் தேடிக் கொண்டார். அக்கரை இக்கரையில் ஆன்றோர் புகழ வாழ்ந்தும் காட்டினார். துணிவைத் துணையாய்க் கொண்டு வரலாறும் படைக்கின்றார்.
அக்கரைச் சீமையிலே அவரின் சொந்த பந்தங்கள் விலகி நின்ற ஒரு காலக் கட்டம். மாட்டுச் சாணம் வார்த்து; மாட்டுவண்டி இழுத்து மாடாய் உழைத்து வாழ்ந்தவர். மாட்டு வண்டிகளில் ஏறிச் சென்று கூலிக்கு தோள் கொடுத்த மூத்த மனிதர்.
இருந்தாலும் வாழ வேண்டும் எனும் ஒரு பிடிவாதக் கொள்கை அவரிடம் பிடிவாதமாய்ப் பற்றிக் கொண்டது. வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் ஒரு முரட்டுப் பரிமாணம் முறுவலித்து ஈர்த்துக் கொண்டது.
அவர் அடிக்கடிப் பேசிக் கொள்ளும் பொன் வாசகம். நாமும் தெரிந்து கொள்வோம். பூமியில் விதைக்கப்படும் எள் விதைகள் கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைக்கின்றன. வெட்டப் படுகின்ற முருங்கை மரங்களும் மறுகணமே நிமிர்ந்து நிற்கின்றன.
விழுங்கப்படும் சின்ன மீன்களும் அழுது புலம்பாமல் சிரித்து வாழ்கின்றன. உயிர் போகும் பாலைவனத்தில் ஒட்டகங்களும் ஓடிப் போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன. மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் நீந்திச் செல்கின்றன.
இப்படி பல கோடிக் கோடி உயிரினங்கள் வாழ முடியும் என்றால் நம்மால் மட்டும் ஏன் வாழ முடியாது? சொல்லுங்கள். நாம் வாழும் வாழ்க்கை இருக்கிறதே அது எப்படியும் வாழ்ந்து ஆக வேண்டிய ஒரு வாழ்க்கை.
ஆக அப்படி இருக்கும் போது அந்த வாழ்க்கையை ஏன் அழுது புலம்பிக் கொண்டு வாழ வேண்டும்? அதை ஏன் வெறுத்து வருத்திக் கொண்டு வாழ வேண்டும்? அதை ஏன் அழுது அரற்றிக் கொண்டு வாழ வேண்டும்?
வாழ்ந்து தான் பார்ப்போமே. வாழ்ந்து காட்டுவோமே என்று வீ.கே.கே. ஒரு துணிச்சலான முன்னெடுப்புச் செய்தார். செய்தும் காட்டினார். அவர்தான் பார்புகழும் பாமரர் வீ.கே.கல்யாணசுந்தரம்.
கடைசியில் கையில் காசு இல்லாமல் கடன் வாங்கி கப்பல் ஏறினார். பினாங்கு புறமலையில் இருந்து சிங்கப்பூர் சிராங்கூன் வரை கால் பதித்து பிருமாண்டமான ஓர் எதிர்க் காலத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் உருவாக்கிய அவருடைய வாழ்க்கை. இன்று எல்லோரும் பார்க்கிறார்கள். கேட்கிறார்கள். பிரமித்துப் போகிறார்கள்.
இரண்டு மூன்று வார்த்தைகளில் சொன்னால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினார். கோடிகளை எண்ணிப் பார்த்தார். வாழ்ந்து காட்டி வரலாறு எழுதிச் சென்றார். நல்ல ஓர் எளிய மனிதர். மலாயா நாடு பார்த்த மற்றும் ஒரு தவப்புதல்வர். உழைப்பால் உயர்ந்த அரிய மனிதர். தாராளமாகச் சொல்லலாம்.
வி.கே.கல்யாணசுந்தரம். இவரின் வாழ்க்கை வறுமையில் தொடங்கினாலும், அந்த வறுமையையே மூலதனமாகக் கொண்டு சாதித்துக் காட்டி இருக்கிறார். ஒரு பெருமகனாரின் வரலாறு வருகிறது. படியுங்கள். படித்து முடிக்கும் வரையில் நிச்சயம் உங்கள் மனம் சலசலத்துக் கொண்டே இருக்கும்.
அவர் இப்போது நம்முடம் இல்லை. இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற விடாமுயற்சியின் தாக்கங்கள் காலா காலத்திற்கும் அவரின் பெயரைச் சொல்லும். அந்தாதிகளாக அகரம் பாடிக் கொண்டே இருக்கும்.
இன்றைய காலக் கட்டத்தில் வி.கே.கே. எனும் இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல் முக்காலத்திற்கும் பேசப்படும் ஒரு வாய்ப்பாட்டுப் பொருளாய்ப் பிரபலமாகி விட்டது. அதைவிட முக்காலத்திற்கும் பேசப்படும் மெய்ப்பாட்டுப் பொருளாய்ப் புகழ்பெற்று விட்டது என்று சொல்லலாம். தவறு இல்லை.
அவரின் வாரிசுகள் வி.கே.கல்யாணசுந்தரனார் எனும் அவருடைய பெயரிலேயே ஓர் அறக்கட்டளையை உருவாக்கி பற்பல அறப்பணிகளைச் செய்து வருகிறார்கள்.
வறுமைப் பிணிக்கு இடம் கொடுக்காமல், எதிர் நீச்சல் போட்டுத் துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வி.கே.கே. பிறர் படிக்கக் கூடிய விரிந்த வித்தகமாக வாழ்ந்திடும் வி.கே.கே. அவர்கள் நடந்து வந்த பாதையைக் கொஞ்சம் பார்ப்போம்.
கலயாணசுந்தரம் அவர்கள் 1920 பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தமிழகத்தின் திருவாரூரில் பிறந்தவர். தகப்பனார் பெயர் கிருஷ்ணன். இராமநாதபுரம் சிறுகம்பயார் பகுதியைச் சேர்ந்தவர். தாயாரின் பெயர் மீனாட்சி அம்மாள். மானா மதுரையைச் சேர்ந்தவர். பின்னர் இவர்கள் திருவாரூரில் நிரந்தரமானார்கள்.
கலயாணசுந்தரம் சின்ன வயதாகும் இருக்கும் போதே அவருடைய சகோதரிகள் காலமாகி விட்டார்கள். அவருக்கு இரு தம்பிகள். முத்தையா. சிவஞானம். வறுமையான குடும்பம். சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கலயாணசுந்தரத்திகு ஐந்து வயதாக இருக்கும் போது குருகுலத்தில் சேர்ப்பதற்குப் பணப் பற்றாக்குறை. அந்த அளவிற்கு குடும்பத்தில் வறுமை. அதனால் தெரிந்த ஒரு குடும்பப் பெரியவரிடம் இலவசமாக வீட்டுக் கல்வி. அவரின் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்து கல்விக் கட்டணத்தைச் சரி செய்து கொள்ளும் இக்கட்டான நிலைமை.
அருகாமையில் வெங்கடராமன் என்பவர் ஒரு பள்ளி நடத்தி வந்தார். அந்தப் பள்ளியில் நடக்கும் பாடங்களை வெளியே நின்று வி.கே. கல்யாணசுந்தரம் ஆசை ஆசையாகப் பார்ப்பார். தன்னால் அப்படி படிக்க முடியவில்லையே எனும் ஏக்க தாபம்.
ஒருநாள் அதைப் பார்த்த வெங்கடராமன் ஆசிரியர்; விருப்பப் பட்டால் வகுப்பில் வந்து சேர்ந்து கொள்ளலாம். ஆனால் ஐந்து ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்றார். என்ன செய்வது.
வி.கே. கல்யாணசுந்தரத்தின் தந்தையார் வீட்டில் இருந்த மாவு அரைக்கும் மரத்துக் கட்டையை விற்று வி.கே.கே.யைப் படிக்க வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து மாதா மாதம் ஐந்து ரூபாய் கட்டணம் கட்ட முடியவில்லை. அதோடு வி.கே.கே. கல்வியும் நின்று போனது.
இந்தத் தாக்கம் தான் வீ.கே.கே. அவர்களுக்கு கல்வியின் மீது அதிக அக்கறையை ஏற்படுத்திக் கொடுத்தது. தான் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார். பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார். பிள்ளைகள் அனைவருமே நன்றாக உயர்க்கல்வி பயின்று உள்ளார்கள்.
அவருடைய வாழ்க்கைப் பாதையில் கல்விக்காக நிறையவே செய்து உள்ளார். அனாதைக் குழந்தைகள் தங்கிப் படிப்பதற்காகக் கல்வி விடுதிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார். பாலிடெக்னிக் பள்ளிகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். தொடக்கக் காலங்களில் இந்தக் கல்விவழி தான தர்மங்கள் பெரும்பாலும் தமிழகத்தையே மையம் கொண்டு இருந்தன.
வீ.கே.கே. அவர்களால் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. அவ்வளவு சிரமம். ஒரு தடவை தீபாவளி நேரம். வீட்டில் தீபாவளி கொண்டாடுவதற்கு வசதிகள் இல்லை. அவருடைய மாமா அவர் வீட்டில் வந்து தீபாவளியைக் கொண்டாடலாம் என்று கல்யாணசுந்தரத்தை மட்டும் அழைத்து இருக்கிறார்.
அதற்கு வீ.கே.கே. ’என் அப்பா அம்மா என் தம்பிகளை தனியாக விட்டு விட்டு நான் மட்டும் தனியாக வந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது; என்று மறுத்து விட்டார். அப்போதே அவருக்கு அவரின் குடும்பத்தின் மீது தனிப்பற்று தனிப் பாசம்.
மற்றும் ஒரு நிகழ்ச்சி. அவருக்கு ஐந்து வயது. வீட்டில் சமைப்பதற்கு அரிசி இல்லை. அவருடைய அம்மா மீனாட்சி அம்மாள் அவரைத் தன் பாட்டி வீட்டிற்கு அனுப்பி கொஞ்சம் அரிசி வாங்கி வர அனுப்பி இருக்கிறார். தாத்தா அழகு பெருமாள் உதவி செய்ய மறுத்து விட்டார்.
தாத்தா அழகு பெருமாள் பர்மாவுக்குப் போய் வியாபாரங்கள் செய்து நன்றாகப் பணம் சம்பாதித்தவர். அப்படி இருந்தும் உதவி செய்ய மனசு வரவில்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தான் வி.கே.கே. மனதில் ஆழமாய்ச் சோகமாய்ப் பதிந்து விட்டன. பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி விட்டன. அதன் பிரதிபலிப்புதான் பின்னாட்களில் வி.கே.கே. அவர்கள் தான தர்மங்கள் செய்வதற்கு வழிகோலாக அமைந்தன.
அந்தக் காலக் கட்டத்தில் திருவாரூரில் உச்சி செட்டியார் எனும் ஒரு செல்வந்தர் இருந்தார். அவரிடம் 25 பேர் வேலை செய்து வந்தார்கள். உச்சி செட்டியார் தான் வீ.கே.கே. குடும்பத்திற்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்தவர். ஆனாலும் தொடர்ந்து உதவிகளை எதிர்பார்க்க முடியவில்லை.
அந்தக் கட்டத்தில் வீ.கே.கே. அவர்களின் சொந்த பந்தங்களும் திருவாரூரில் நல்லபடியாக வணிகம் செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் வீ.கே.கே. அவர்களின் சிற்றன்னை குப்பம்மாள். இவரின் மகன் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள புலியூரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். அத்துடன் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு மாட்டு வண்டிகளின் மூலமாகப் பொருட்களைக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார்.
அவருடைய கடையில் எடுபிடி வேலை செய்வதற்கு வீ.கே.கே.விற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. புலியூருக்குப் புறப்படும் நாள் வந்தது. ஆனால் வீ.கே.கே.விடம் கட்டிக் கொள்ள உருப்படியாக ஒரு வேட்டி இல்லை. தந்தையிடம் கேட்டார். அவரும் மூன்று அணா செல்வு செய்து ஒரு வேட்டி வாங்கிக் கொடுத்தார். பணத் தட்டுப்பாட்டு நேரத்தில் இது ஒரு செலவு என்றே வீ.கே.கே. நினைத்தார்.
ஆக இந்தப் புலியூர் பயணம் தான் வீ.கே.கே. வாழ்க்கையில் முதல் திருப்புமுனை. அவரின் வாழ்க்கையை மாற்றி அமைத்த முதல் துலாக்கோல்.
அப்போதைய காலக் கட்டத்தில் வியாபாரம் எல்லாமே பண்டமாற்று முறையைச் சார்ந்து இருந்தது. ஆங்கிலத்தில் பார்ட்டர் என்று சொல்வார்கள். அந்த மாதிரி வாரா வாரம் சந்தைகளில் பொருள்கள் பண்டமாற்று செய்யப் பட்டன. மளிகைக் கடை வைத்து இருந்தவர்கள்கூட தங்கள் பொருள்களை மாட்டுக் காடிகளில் ஏற்றிச் சென்று கிராமங்களில் சந்தைப் படுத்தினார்கள்.
வீ.கே.கே. மாமாவின் மகன் அருணாசலம். இவரிடம் தான் வீ.கே.கே. வேலைகுக்குச் சேர்ந்தார். ஒரே வார்த்தையில் சொன்னால் கொத்தடிமைக் கூலி வேலை. முதலில் அவர் செய்த வேலை என்ன தெரியுங்களா?
மாட்டுச் சாணம் அள்ளுதல்; மாட்டுக் கொட்டகையைச் சுத்தப் படுத்துதல்; மாடுகளைக் குளிப்பாட்டுதல்; மாடுகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு வந்து போடுதல்; பால் கரத்தல்; மாட்டு வண்டிச் சக்கரங்களுக்கு எண்ணெய் போடுதல்; ஆக இப்படித்தான் வீ.கே.கே. மாடுகளோடு பாச பசுமலர் போல வாழ்ந்து இருக்கிறார். இதை எழுதும் போது மனசிற்கு வேதனையாக உள்ளது.
இருந்தாலும் இப்படி கஷ்டப் பட்டவர் தான் கடைசியில் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். கோடீஸ்வரராக கோலோச்சி இருக்கிறார். உலகத் தமிழர்கள் திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை செய்து இருக்கிறார்.
திருவாரூரில் பிறந்து திரைகடல் தாண்டி வந்து, தம் சீரிய உழைப்பால் புகழ்ச் சிங்காதனம் அடைந்தவர் அந்தப் பெரியவர். எளிமையாக வாழ்வைத் தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு கனகச் செல்வம் குவித்தவர்.
ஒரு காலக் கட்டத்தில் அஞ்சு அணாவிற்கும் பத்து அணாவிற்கும் அலைமோதியவர். ஆயிரம் இலட்சம் கணக்குகளைத் தாண்டி கோடிகள் என மனத்தாலேயே கணக்குப் போடும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர்.
அறுபதாண்டுகள் அசராமல் உழைத்து ஆலமரம் போல விழுதுகள் பரப்பியவர். அந்த விழுதுகள் இப்போது மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் என மூன்று நாடுகளில் வணிக நிறுவனங்களாக உருமாற்றம் கண்டுள்ளன. தேயிலை ரப்பர்த் தோட்டங்களாக, விவசாயப் பண்ணைகளாக, விடுதிகளாக வளர்ந்து உள்ளன. இன்றும் வளர்ந்து வருகின்றன.
ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்த நாட்டில் வாழ்ந்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு. அதற்கு இலக்கியமாக வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை ஏடுதான் வீ.கே.கே. என்பவரின் வாழ்க்கை வரலாறு. ஆக வீ.கே.கே. வரலாறு என்பது சாதனைச் சிகரங்களை எட்டியவரின் ஒரு வரலாறு.
பேராக் சிலிம் ரீவர் நகரில் அவர் முதன் முதலாக ஒரு மளிகைக்கடை திறந்தார். அதில் பற்பல சிக்கல்கள் சிரமங்கள். சோதனைகள் வேதனைகள். அவற்றை எப்படி சமாளித்தார் என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.03.2021
மலேசியம் புலனத்தின் பின்னூட்டங்கள்
தேவிசர: இன்றைய கட்டுரையை படித்தேன் ஐயா... திரு.வீ.கே.கே அவரின் இள வயது மிகவும் துயரம் 😢..... நாளை வாழ்க்கையில் அவர் அடைந்த வெற்றிக் கதையை எதிர்பார்த்திருக்கிறேன்...
ராதா பச்சையப்பன்: கட்டுரையைக் காலையில் படித்தேன். அக்கரைச் சீமையிலே அவரின் சொந்த பந்தங்கள் விலகி நின்ற ஒரு காலக் கட்டம். மாட்டு சாணம் வார்த்து; மாட்டு வண்டி இழுத்து மாடாய் உழைத்து வாழ்ந்தவர்.
மாட்டு வண்டிகளில் ஏறிச் சென்று கூலிக்குத் தோள் கொடுத்த மூத்த மனிதர். அவர் அடிக்கடி பேசிக் கொள்ளும் பொன் வாசகம் நாமும் தெரிந்து கொள்வோம்.
வறுமைப் பிணிக்கு இடம் கொடுக்காமல், எதிர் நீச்சல் போட்டுத் துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வீ.கே.கே. அவர்கள்.
கல்யாண சுந்தரம் அவர்கள், 12_02_1920 தமிழகத்தில் திருவாரூரில் பிறந்தவர். சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஐந்து ரூபாய் கட்டணம் கட்ட முடியாததால் வீ.கே.கே. கல்வியும் நின்று போனது.
இந்தத் தாக்கம் தான் வீ.கே.கே. அவர்களுக்கு கல்வியின் மீது அதிக அக்கறை ஏற்படுத்திக் கொடுத்தது. தான் படிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை, தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
அனாதைக் குழந்தைகள் தங்கிப் படிப்பதற்காகக் கல்வி விடுதிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார். வீ. கே.கே. மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. அவ்வளவு சிரமம்.
வீ.கே.கே. விடம் கட்டிக் கொள்ள உருப்படியாக ஒரு வேட்டி இல்லை. தந்தையிடம் கேட்டார். அவரும் மூன்று அணா செலவு செய்து ஒரு வேட்டி வாங்கிக் கொடுத்தார். வீ.கே.கே. மாமாவின் மகன் அருணாசலம். இவரிடம் தான் வேலைக்குச் சேர்ந்தார்.
ஒரே வார்த்தையில் சொன்னால் கொத்தடிமைக் கூலி வேலை. முதலில் அவர் செய்த வேலை என்ன தெரியுங்களா? மாட்டு சாணம் அள்ளுதல்; மாட்டுக் கொட்டகையைச் சுத்தப் படுத்தல்; மாடுகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு வந்து போடுதல்.
இதை எழுதும் கட்டுரை நாயகனுக்கே மனதுக்கு வேதனையாக உள்ளது என்றால் படிக்கும் வாசகர்களுக்கு சொல்லத் தேவையே இல்லை. 😭
இப்படி கஷ்டப் பட்டவர்தான் கடைசியில் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். கோடீஸ்வரராகக் கோலோச்சி இருக்கிறார். உலகத் தமிழர்கள் திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை செய்து இருக்கிறார்.
திருவாரூரில் பிறந்து திரைகடல் தாண்டி வந்து, தம் சீரீய உழைப்பால் புகழ்ச் சிங்காதனம் அடைந்தவர் அந்தப் பெரியவர். எளிமையாக வாழ்வைத் தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு கனகச் செல்வம் குவித்தவர்.
ஒரு காலத்தில் அஞ்சு அணாவிற்கும், பத்து அணாவிற்கும் அலைமோதியவர்; ஆயிரம் இலட்சம் கணக்குகளைத் தாண்டி கோடிகள் என மனத்தாலேயே கணக்குப் போடும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர்.
அறுபதாண்டுகள் அசராமல் உழைத்து ஆலமரம் போல விழுதுகள். இப்போது மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் என் மூன்று நாடுகளில் வணிக நிறுவனங்களாக உருமாற்றம் கண்டுள்ளன. வீ.கே.கே. என்பவரின் வாழ்க்கை வரலாறு என்பது சாதனைச் சிகரங்களை எட்டியவரின் ஒரு வரலாறு.
வீ.கே.கே. அவர்களின் வாழ்க்கை வரலாறில் அதிகம் வேதனைகளும், சோதனைகளுமே காண முடிகிறது. மனம் வலிக்கிறது. கண்களில் நீர் திரை போடுகிறது. நாளைய தொடரை பார்ப்போம் நன்றி 🙏🌸.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மிக அருமையான விமர்சனப் பின்னூட்டம். இது வரையிலும் இந்த அளவிற்கு நெடிய பின்னூட்டம் வழங்கியவர்கள் மிகவும் குறைவு. நம்முடைய வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டிய பதிவு.
ஒரு பெரியவரின் போராட்ட வாழ்க்கை. அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். 8 ரூபாய் கடன் வாங்கி ரஜுலா கப்பலேறி வந்து ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். நன்றிங்க ராதா 👍👍
குமரன் மாரிமுத்து: வறுமையை வறுத்தெடுத்து கைகுட்டையாக கைக்குள் சிறை பிடித்த தொழில் முனைவர்.💐💐💐🙏🏽
டத்தோ தெய்வீகன்: புதிதாய் நம் இளையோர் தெரிந்துகொள்ள, வீ.கே.க அவர்களின் வாழ்க்கையைப் போல, பலரின் வாழ்க்கை இலைமறைக் காயாகவே இன்னும் நம்மவர்களிடையே எவ்வளவோ இருக்க, தேவையில்லாத விஷயங்களில் நேரத்தையும், சக்தியையும் விரையமாக்கும் வினோதம்தான் என்னே!
ராதா பச்சையப்பன்: எப்படி அண்ணா 'உங்களால் இவ்வளவு பதிவுகள் செய்ய முடிகிறது? கட்டுரை, கேள்வி, பதில், புலனத்தை அலசுவது; இடையிடையே ஏதாவது பதிவுகள். முடியவில்லை என்னால்... என் கண் பட்டு விட போகுது. அண்ணா "நீங்க நீண்ட காலம் நலமாய் வாழ வேண்டும் 🙏🙏🌸.
பேஸ்புக் பதிவுகள்
சத்யா ராமன்: வணக்கம் சார். மிக நீண்ட நெடிய கட்டுரை. இறந்த கால கஷ்டங்கள் வேதனைகள், சோதனைகள் வீ.கே கல்யாணசுந்தரம் போன்ற கடும் உழைப்பாளிக்கு எதிர்காலத்தில் ஏற்றமிகு வளர்ச்சி, வாழ்வை ஏற்படுத்தியது என்றால் அதற்காக ஐயா அவர்கள் எப்படி எல்லாம் துயர், இடர்களை எதிர்கொண்டார்கள் என்பதை உங்களின் பதிவு புரிய வைத்தது.
வலிகள் இல்லாமல் வசந்தம் இல்லை,
வேதனை இல்லாமல் சாதனை இல்லை,
காயங்கள் இல்லாமல் காலமும் இல்லை.
இதுதான் ஒவ்வொரு தமிழரின் கடந்த காலங்கள் காட்டிய கட்டியங்கள். இதில் என்ன நெருடல் என்றால் அன்று கஷ்டப்பட்டு, நாராய் கிழிந்து, ஓடாய் தேய்ந்து உழைத்தவர்கள் எல்லாருமே பின்னாளில் ஐயா வீ.கே கல்யாணசுந்தரம் போன்று வசதி வாய்ப்புகளை வரித்துக் கொள்ளவில்லையே?
மாறாக வஞ்சகத்தையும், கீழறுப்புகளையும் எதிர்நோக்கி இளித்தவாயர்களாக ஏமாந்த மலாயா தமிழர்களில்... எத்தனை பேர் வீ.கே.கே.வாக பார்புகழ் பாராட்டும்படி தங்களின் வாழ்வாதாரத்தை வளப் படுத்தினார்கள் என்று எண்ணிக்கையை தேடினால் வருவது என்னவோ வருத்தமே..😢
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நெஞ்சத்தின் ஆழ் வேதனையை கொப்பளித்து உள்ளீர்கள். சத்தியமான நியாயமான வேதனைகள். உண்மையிலேயே அந்தக் கட்டுரையை எழுதிவிட்டு நானே சன்னமாய்க் கொஞ்ச நேரம் அழுதேன். அது தெரியுங்களா.
நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். மன்னிக்கவும். இதுவரை மூவாயிரத்து முந்நூறு கட்டுரைகள் (3300). இவற்றுள் இரண்டே இரண்டு கட்டுரைகள் என்னை அழ வைத்து இருக்கின்றன. ஒன்று சிபில் கார்த்திகேசு கட்டுரை. மற்றொன்று இந்த வீ.கே.கல்யாணசுந்தரம் ஐயா கட்டுரை.
அவருக்குப் படிக்க ஆசை. ஆனால் படிக்க பணம் இல்லை. பத்து வயதில் கொத்தடிமை போல பல மாதங்கள் மாட்டுக் கொட்டகையில் வேலை பார்த்து இருக்கிறார்.
இங்கே மலாயாவுக்கு வரும் போது கூட எட்டு ரூபாய் கடன் வாங்கி வந்து இருக்கிறார். அப்படி ஒரு கடன்காரராகக் கால் பதித்த அவர் பல கோடிகளைக் கணக்குப் பார்க்காமல் விட்டுச் சென்று இருக்கிறார். பெரிய வரலாற்றுச் சாதனை.
இது ஒரு தொடர் கட்டுரை. இன்று 15.03.2021 திங்கட்கிழமை வெளிவரும் கட்டுரை மேலும் வேதனைகளைக் கொப்பளிக்கச் செய்யும். படித்துப் பாருங்கள். நன்றிங்க சத்யா.
சத்யா ராமன்: தமிழர்கள் கடந்து வந்த வரலாறுகளை வக்கணை மிகுதியோடு ஆராய்ந்தால், வலிகளும் வருடல்களுமே மிஞ்சும் என்பதை உங்களின் ஒவ்வொரு பதிவும் பதில் கூறி வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது சார்.
இன்று நம்மவர்களில் பலர் பலத் துறைகளில் வளப்பமான வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் அதற்கு பின்னால் எத்தனை, எத்தனை துயரங்கள் உள்ளன என்பதையும் மறக்க மறுக்க முடியாது என்பதும் நிதர்சனமான நிஜம் சார்.
Unknown: Honorable
VKK Sir is great human, he is not only great inspiration to me, my
family and to all whoever connected. he has done so much to the
families of workers associated with his group business. He has shown
great affection to his family, family friends and to the society. வாழ்க வெற்றி செல்வர் வீ .கே .கே புகழ்!!!
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பாலைவனத்துக் கானல் நீர் வானத்தைத் தொட்டுப் பார்க்கும். மாலைநேரத்து அந்திவானம் பூமியைத் தொட்டுப் பார்க்கும். முன்னது மாயை. பின்னது உண்மை. இப்படித்தான் மனித விழுமியங்களும் பயணித்து வருகின்றன. அன்றும் இன்றும் அதே கோலங்களில் அவதானிக்கின்றன. நன்றிங்க சகோதரி.
Kala Balasubramaniam: Thank you sir for this wonderful tribute to a legend. The story of my late grandfather Mr Vkk will bring great awareness for the Indian community. It's most inspiring for the younger generation especially the Indian youth.
We in fact have a history of not only contributing towards the nation building as the Labour force, we also played a prestigious part in business and other professional fields.
There must be more such write ups of other great Malaysian Indians in the future. Kudos to Tamil Malar and my gratitude to you for the wonderful literary work done.
Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam: நன்றிங்க. பெரியவர் வீ.கே.கே. அவர்கள் தங்களின் தாத்தா என்று அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐயா கல்யாணசுந்தரம் அவர்கள் இந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஓர் உந்துதல் சக்தி என்றே சொல்ல வேண்டும். உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த மாபெரும் மனிதர். இவர் இன்றைய தலைமுறையினருக்கு ஓர் உந்து சக்தியாக அமைகின்றார். இந்த நாட்டில் வாழ்ந்த நம் இனத்துத் தலைவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது நம்முடைய கடமை. தொடர்ந்து பயணிப்போம். நன்றிங்க சகோதரி.
Banu Linda: நம் இனத்தவர் உழைப்பாளிகள்... ஆனால் ஏமாளிகள்... சம்பாரித்த சொத்துகளை முறையாக ஆவணப்படுத்தத் தெரியாத அப்பாவி மக்கள்... மதுவுக்கு அடிமையாகி இருப்பதை எல்லாம் இழந்து ஓட்டாண்டியாக நிற்கிறோம்.
Sathya Raman >>> Banu Linda: வணக்கம் பானு. உங்கள் கூற்று ஒரளவு உண்மை. எனினும் நம்மவர்கள் பெரும் குடிகாரர்கள் என்று பட்டப் பெயர் எடுத்ததற்கு அதன் பின்புலமே. அவர்கள் அன்று மணிக் கணக்கில் உழைத்த அயராத உழைப்புதான்.
அயர்வு, உடல்வலி, சோர்வை தணிக்க அவர்கள் பட்டை தண்ணீரையும், தாலிமேராவையும் குடித்த பிறகே சற்று களைப்பு தீர தூங்கி தங்களது வாழ் நாட்களை கடந்தார்கள் என்பதே உண்மை.
சொற்ப ஊதியத்தில் உல்லாசங்களை அனுபவிக்க குடித்தார்கள் என்று அன்றைய எம் இனத்தவர்களை இழித்து பழி சுமத்துவது மனதை கனக்கச் செய்கிறது.
Banu Linda >>> Sathya Raman மன்னிக்க வேண்டும் சத்தியா. பழிப்பதோ அல்லது பழி சொல்வதோ நோக்கம் இல்லை. ஆதங்கம் தான். நம்மவர்களை மற்ற இனத்தார் எளிதில் ஏய்த்து காரியம் சாதித்துக் கொள்வர். வெள்ளைக்காரன் முதல் சீனன் வரை பந்தாடப் பட்டவர்கள் தானே நாம். நமக்கு திறமை உண்டு. ஆனால் திறமையை சரியாக கையாள தெரியாமல் தானே உள்ளோம். இந்த வருத்தமே.
Sathya Raman >>> Banu Linda: எளிதில் ஏமாறுபவர்கள், வெந்ததை மட்டுமே உண்டு வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர்கள். எதையும் எதிர்த்து கேட்கத் தெரியாத பத்தாம் பசலிகள். இத்தகைய எளிய குணங்களை தங்களுக்குள் சாதகமாகிக் கொண்ட சதிக்காரர்கள் விரித்த வலையில் வீழ்ந்த நல்லவர்கள் நம்மவர்கள் என்பதுதான் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும் பானு.
அந்நியன் இந்த இனத்தை இளிச்சவாயார்களாக எண்ணி கொத்தடிமைகளாக வைத்து இருந்தான். சொந்த இனத்துக்காரனே நமக்கென்று உருவாக்கப்பட்ட சொத்துடைமைகளை ஏப்பம் விட்டு இந்த நாட்டில் நம்மை நாதி நாதி அற்றவர்களாக, நிர்கதியாக ஆக்கிய வரலாறும் உள்ளதே?
அடுத்தவனுக்கு தமிழன் தலை எடுப்பதில் விருப்பமில்லை. சக இனத்துக்காரனுக்கோ தமிழனை தன்மானத்தோடு வாழவைக்க வக்கு இல்லை. பிற இனத்தவர் முதுகில் குத்திய துரோகத்தைவிட சொந்தக்காரனே நேருக்கு நேர் நெஞ்சில் குத்திய துரோகத்தின் வலியும், வடுவும் என்றுமே ஆறாதது, அழியாதது.
இந்த ஆற்றாமைகளில் சிக்கி என் மனம் சிதைந்து போகிறதே தவிர யார் மீதும் தனிப்பட்ட வருத்தமோ, கோபமோ இல்லை பானு.
Nadarajah Sara >>> அன்பான பண்பான மானிடர். இரக்க குணம் கொண்ட நன்கொடை நெஞ்சர். வாழ்க அவர் புகழ்.
Parameswari Doraisamy >>> அருமை ஐயா.. தற்போது நான் தமிழ் மலர் வாங்கிப் படிக்கிறேன்.
Honourable VKK Sir is great human is not only great inspiration to me, my family and all whoever connected. He has lighted so many families and he has shown affection to his family, family friends and to the society. வாழ்க வெற்றி செல்வர் வீ .கே .கே புகழ்!!!
பதிலளிநீக்கு
நீக்குபணம் ஒரு கருவி, அதனை உபயோகிக்கும் விதத்தில்தான் அதனுடைய பெருமையும், சிறுமையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பணத்திற்கே பெருமை தேடித் தந்து, தானும் பெருமையடைந்தவர் வி.கே.கே.
Mr. Kalyana sundaram its realy great assive in life.
பதிலளிநீக்குஉண்மையிலேயே மாம்னிதர்
நீக்குHonourable VKK Sir is great human, he is not only great inspiration to me, my family and to all whosever connected. he has done so much to the families of workers associated with his group business. He has shown great affection to his family, family friends and to the society. வாழ்க வெற்றி செல்வர் வீ .கே .கே புகழ்!!!
பதிலளிநீக்கு