தமிழ் மலர் - 05.06.2021
ஒரு நாட்டின் விடுதலை என்பது அர்த்த இராத்திரி மழையில் அவதரித்த அந்திமந்தாரை பூக்கள் அல்ல. பட்டப் பகலில் காய்த்த பூஞ்சைக் காளான்கள் அல்ல. இடி மின்னல்களை கிழிந்து வந்த வானத்துக் கீற்றுகள் அல்ல. சுனாமிப் பேரலைகளுக்குச் சுண்ணாம்பு பூசிய காண்டா மரங்களும் அல்ல.
பல ஆண்டுகளாக; பல நூறு ஆண்டுகளாக; இடைவிடாமல் தூறி ஊறிய அர்ப்பணிப்புகளின் அடிவானக் கூறுகள். அவைதான் ஒரு நாட்டின் விடுதலை. அவைதான் ஒரு நாட்டின் சுதந்திரம். அவைதான் ஒரு நாட்டின் மரியாதைக்கு உரிய வீர வணக்கங்கள்.
மலாயாவுக்குச் சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த மகிழ்ச்சியில் ஆண்டு தோறும் ஆரவாரத்துடன் அமர்க்களமாய்க் கொண்டாடி வருகிறோம். செய்ய வேண்டியதைச் செம்மையாகவே செய்து வருகிறோம். மகிழ்ச்சி.
இங்கு மட்டும் அல்ல. எல்லா நாடுகளிலும் அந்த மாதிரியான மகிழ்ச்சிக் கோலங்கள். மகிழ்ச்சிக் கொப்பளிப்புகள்\. மகிழ்ச்சிப் பேரலைகள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னணியில் எத்தனை எத்தனை அர்ப்பணிப்புகள்; எத்தனை எத்தனை உயிர்த் தியாகங்கள். எத்தனை எத்தனைத் தன்னல மறுப்புகள் உள்ளன. பலருக்கும் தெரியாது.
சும்மா இந்தப் பக்கம் திரும்பிப் பாருங்கள். ஒரு நாடு சுதந்திரம் அடைந்த வரலாற்றைப் படித்துப் பாருங்கள். பல இனங்களின் அர்ப்பணிப்புத் தியாகங்களில் ஓர் இனத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பளங்கள்; ஓர் இனத்திற்கு மட்டும் பட்டுச் சால்வைகள்; கலர் கலராய்ச் செம்பருத்தி மலர்மாலைகள்.
பெரிய அதிசயம் என்ன தெரியுங்களா. ஒரே ஓர் இனத்திற்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். மற்ற இனங்களைப் பற்றி ஒப்புக்கு உப்புமா கிண்டி இருப்பார்கள். நியாயங்கள் சாகாமல் இருக்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் பாடநூல்கள் எழுதப்பட வேண்டும். உண்மை மறைக்கப்படக் கூடாது. இதை சொல்லிச் சொல்லி எனக்கு வயதுதான் ஓடிக் கொண்டு இருக்கிறது. உருப்படியாக ஒன்றும் நடந்த பாடு இல்லை.
மலாயா விடுதலை வரலாற்றில் இந்திய இராணுவத்தினர் மறக்க முடியாத சுவடுகளைப் பதித்துச் சென்று உள்ளார்கள். பெரிய பெரிய உயிர்த் தியாகங்களைச் செய்து இருக்கிறார்கள். கை இலாலாமல் கால் இல்லாமல் அழுகிய நிலையில் அனாதைகளாய்க் காடுகளிலேயே கரைந்து போய் இருக்கிறார்கள்.
மனைவி மக்களைப் பார்க்காமலேயே பாசா காடுகளில் உறைந்து நீர்த்துப் போய் இருக்கிறார்கள். ஓர் ஆள், இரண்டு ஆள் இல்லீங்க. பல ஆயிரம், பல பத்தாயிரம் பேர்.
குடிக்கத் தண்ணீர் இல்லாமல்; வயிற்றுக்குச் சோறு இல்லாமல்; சூடுபட்டுக் காயத்திற்கு மருந்து இல்லாமல்; படுத்த வாக்கிலேயே செத்துப் போய் இருக்கிறார்கள். பலருக்கும் தெரியாத உண்மைகள்.
இவை எல்லாம் மறைக்கப்பட வேண்டிய விசயமா. எங்கோ இருந்து வந்து எங்கேயோ போர் செய்து இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் மறக்கலாமா. எப்படிங்க மறப்பது. இந்த விசயம் எல்லாம் என்ன, கோரேங் பீசாங் விற்கிற விசயமா. சொல்லுங்கள்.
இவற்றைப் பற்றி எல்லாம் வரலாற்றில் எழுத மாட்டார்கள். இனவாதம் மதவாதத்தில் மயங்கிப் போனால் மதம் பிடிக்காமல் என்னங்க செய்யும். பிரச்சினை வேண்டாம். உண்மை வரலாற்றை உரித்துக் காட்ட ஒரு சிலர் வருவார்கள். அந்த வரிசையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1941-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் தொடங்கி விட்டது. இந்தப் பக்கம் மலாயாவில் ஜப்பானியர்கள் சயாம் (தாய்லாந்து) வழியாகக் கோத்தா பாரு; அலோர் ஸ்டார் பகுதிகளில் வேகம் வேகமாக இறங்கி வருகிறார்கள்.
மலாயா பிரிட்டிஷ் இராணுவம் ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்தப் போராடியது. மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இராணுவத்தினர் இருந்தனர். இருப்பினும் இந்தக் கூட்டு இராணுவத்தினர், ஜப்பானியர்கள் இறங்கி வருவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அதனால் இந்தியாவில் இருந்து இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக வரவழைக்கப் பட்டார்கள். சிங்கப்பூருக்குக் கப்பல் கப்பலாக இந்திய இராணுவ வீரர்கள் போய்ச் சேர்ந்தார்கள். ஏறக்குறைய 25,000 பேர் வரை இருக்கலாம். இது சிங்கப்பூரில் நடந்தது.
இந்தப் பக்கம் மலாயாவில் 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்திய இராணுவ படையைச் சேர்ந்த 42,651 இராணுவ வீரர்கள் வந்து சேர்ந்தார்கள். சிலாங்கூர் மோரிப் பகுதியில் தரை இறங்கினார்கள். அந்தப் படையில் 46 அணிகள் இருந்தன. அவர்களுடன் 3698 கவச வாகனங்களும் (டாங்கிகள்) இருந்தன.
கோலா கிள்ளான்; போர்டிக்சன் பகுதிகளில் ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தான் மெட்ராஸ்; கல்கத்தா துறைமுகங்களில் இருந்து இந்த இராணுவ வீரர்கள் வந்தார்கள். அதற்குள் ஜப்பானியர்கள் சரண் அடைந்து விட்டார்கள்.
மோரிப் ஒரு கடற்கரைப் பகுதி. ஓர் ஒதுக்குப் புறமான இடம். தரை இறங்க சரியான இடமாக இருந்தது. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம். ஒரு முக்கியமான விசயத்திற்கு முதலில் வருகிறேன்.
ஜப்பானியர்களின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த மலாயாவில் பல போர்கள் நடந்து உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவை நான்கு போர்கள். இந்தப் போர்களில் இந்திய இராணுவ வீரர்களின் பங்கு அளப்பரியது. வார்த்தைகள் எழுதி வைக்க முடியாது. அது தனி ஒரு வரலாறு.
அந்தப் போர்களை மலாயா போர்கள்(Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள். மலேசியாவில் வாழும் பலருக்கு இந்தப் போர்களைப் பற்றி அதிகமாகத் தெரியாது. மன்னிக்கவும்.
அக்கரையில் புக் போஸ் நிகழ்ச்சி. அதில் ஒரு கூத்தாடி வழுக்கி விழுந்து விட்டால் போதும். வாட்ஸ் அப் தெறிக்கும். அப்புறம் கொசுவிற்குக் கோயில் கட்டியது தெரியும். நடைப் பயிற்சியில் அயன்தாரா அதிர்ச்சி அடைந்து மயக்கம் போட்டது எல்லாம் தெரியும்.
ஆனால் மலாயாவில் முப்பது நாற்பதாயிரம் இந்திய வீரர்கள் இறந்து போனார்கள். அது தெரியுமா என்று கேளுங்கள். உஹூம். தெரியாது. ரோஜா தெரியும். சந்திரலேகா தெரியும். மகராசி தெரியும். ஆனால் மலாயா நாட்டுக்காக உயிர் விட்ட மனிதர்களைத் தெரியாது. விடுங்கள். வயிற்றெரிச்சல். நம்ப கதைக்கு வருவோம்.
ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்.
1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)
2. ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)
3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)
4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)
5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)
6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)
7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)
8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)
இவைதான் மலாயாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான போர்கள். இதைத்தவிர மலாயாவில் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு துறைமுகத்திலும் சண்டைகள் நடந்து உள்ளன. பல ஆயிரம் வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் போது மலேசியா உருவாகவில்லை. மலாயாதான் இருந்தது. பிரிட்டிஷார் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்கள்.
இன்னும் ஒரு கொசுறு தகவல். மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்யவில்லை என்று ஒரு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் தகவல் வெளிவந்து உள்ளது. ரொம்ப சந்தோஷம். கட்டிக் காக்க வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியப் படை வீரர்கள் செய்த தியாகங்கள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.
மேலே சொன்ன மலாயா போர்களில் முதலில் சிலிம் ரிவர் போரைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். அடுத்தடுத்து மற்ற போர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சிலிம் ரிவர் போர் (Battle of Slim River) என்பது 1942-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டிஷ் (பிரித்தானியம்) இந்திய இராணுவத்திற்கும் ஜப்பானிய இராணுவத்திற்கும் இடையே தீபகற்ப மலேசியா, சிலிம் ரிவர் பகுதியில் நடந்த போர்.
போர் முனையில் இந்திய இராணுவத்திற்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஆயுதங்கள்; மருந்துகள்; உணவு நீர் வகைகள்; தொலைத் தொடர்புச் சாதன வசதிகள்; பின்னணிக் காப்புகள் உடனடியாகக் கிடைக்கவில்லை. அதனால் நிராதிபதிகளான பல நூறு இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டார்கள். சிலிம் ரீவர் காட்டுப் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்கள்.
காயங்கள் அடைந்து நடக்க முடியாமல் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் பலரை ஜப்பானியப் படையினர் கத்தியால் குத்திக் கொன்று உள்ளனர். சிலரைச் சுட்டுக் கொன்று உள்ளனர். ஓரளவிற்கு நடக்க முடிந்த இராணுவ வீரர்களைக் கொண்டு குழிகள் தோண்ட வைத்தார்கள்.
ஏற்கனவே கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் அந்தக் குழிகளில் புதைக்கப் பட்டனர். ஜப்பானியர்களின் மலாயா படையெடுப்பின் போது நடத்தப் பட்ட போர் அத்துமீறல்களில் இதுவும் ஒன்றாகும்.
1941 டிசம்பர் 7-ஆம் தேதி ஜப்பானியப் படைகள் கிழக்கு கிளாந்தான், கோத்தா பாருவில் தரை இறங்கினர். அடுத்த நான்கு நாட்களில், அதாவது 1941 டிசம்பர் 11-ஆம் தேதி, தென் தாய்லாந்தில் இருந்து வடமேற்கு மலாயாவில் படை எடுத்தனர்.
பிரித்தானிய படைகள் தொடுத்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி மலாயா மேற்குக் கரையில் முன்னேறி வந்தனர். கிறிஸ்துமஸ் தினத்திற்குள் ஜப்பானியர்கள் வடமேற்கு மலாயா முழுவதையும் கைப்பற்றி விட்டனர்.
ஜப்பானியர்கள் மலாயாவுக்குள் அதிவேகமாகப் படை நடத்தி வருவதைப் பிரித்தானிய படைகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜப்பானியர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் கம்பார் நகரத்திற்கு அருகே கோலா டிப்பாங் ஆற்றுப் பகுதியில் (Dipang River) மட்டுமே ஜப்பானியர்களுக்கு முதன் முறையாகத் தடை ஏற்பட்டது.
கம்பாரில் நான்கு நாட்கள் போர் நடந்தது. இந்தப் போருக்குக் கம்பார் போர் (Battle of Kampar) என்று பெயர். பிரித்தானியப் படையின் பீரங்கித் தாக்குதல்களினால் ஜப்பானியர்கள் பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தது.
கம்பார் நகருக்குத் தெற்கே இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை பிரிவு முகாம் அமைத்தது. அங்கு இருந்து பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.. இருப்பினும் ஜப்பானியர்களுக்குக் கடலோரத் தரையிறக்கங்கள் (seaborne landings) சாதகமாக அமைந்து விட்டன. அங்கு இருந்து அதிகமான ஜப்பானியப் போர் வீரர்கள் கம்பாரில் களம் இறக்கப் பட்டனர்.
அதனால் இந்திய இராணுவத்தினரால் சமாளிக்க முடியவில்லை. பின்வாங்க வேண்டிய இக்கட்டான நிலைமை. துரோலாக் நகருக்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள சிலிம் ரிவர் பகுதிக்குப் பின்வாங்கினர். எதிர்த் தாக்குதலுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளையும் இடம்பெறும். சொல்ல மறந்த தகவல். கடந்த ஒரு மாதமாகக் கட்டுரை எழுத இயலயவில்லை. உடல்நலம் சற்றே பாதிப்பு. வயது ஓடுகிறது அல்லவா. பழைய கார். கொஞ்சம் மக்கார் செய்து விட்டது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு ஒரு வகையாகப் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது. ஊடகங்கள் மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு அன்பான ஆதரவான சொற்கள் வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள் ஆயிரம். தொடர்ந்து பயணிப்போம்.
(தொடரும்)
மேற்கோள்கள்:
1. Corfield, Justin & Robin (2012). The Fall of Singapore. Singapore: Talisman Books. ISBN 978-981-07-0984-6.
2. Remembering the British Indian Army's fight during the Japanese Occupation of Malaya - https://www.thestar.com.my/lifestyle/living/2020/09/30/remembering-the-british-indian-army039s-fight-during-the-japanese-occupation-of-malaya
3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.
4. Gurcharn Singh Sandhu, The Indian cavalry: history of the Indian Armoured Corps, Volume 2, Vision Books, 1978 ISBN 978-81-7094-004-3
இரண்டாம் உலகப் போரினால் மனித குலம் அழிந்ததுதான் மிச்சம்.அருமைங்க சார்.
பதிலளிநீக்குகருத்துகளுக்கு மிக்க நன்றிங்க
பதிலளிநீக்கு