20 ஜூன் 2021

சங்லூன் ஜித்ரா போர்

தமிழ் மலர் - 06.06.2021

69 நாட்கள். அதாவது 9 வாரங்கள். அதாவது 2 மாதங்கள் 2 வாரங்கள். இந்த 69 நாட்கள் கால இடைவெளியில் 2 நாடுகளைப் பிடிக்க முடியுமா. அதுவும் சைக்கிள் சவாரி செய்து பிடிக்க முடியுமா. சொல்லுங்கள். முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். சாதனை என்று சொல்ல முடியாது. சாமர்த்தியம் என்று சொல்லலாம்.

1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் மலாயா சிங்கப்பூர் நாடுகளை ஜப்பான்காரர்கள் கபளீகரம் செய்து விட்டார்கள்.

மலாயாவுக்கு வரும் போது அவர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், மெர்சிடிஸ், ஹோண்டா, தொயோத்தா கார்களை எல்லாம் எடுத்து வரவில்லை.

முதுகில் சும்மா ஒரு பெரிய பையை மாட்டிக் கொண்டுதான் வந்தார்கள். கையில் ஆளாளுக்கு ஒரு துப்பாக்கி. கூடவே ஜீப் வண்டிகள். கவச வாகனங்கள். அம்புட்டுத்தான்.

தீபகற்ப மலேசியாவில் இரண்டு இடங்களில் தரை இறங்கினார்கள். கோத்தா பாரு ஓர் இடம். அலோர் ஸ்டார் தாய்லாந்து எல்லை மற்றோர் இடம். முதலில் நடடா ராஜா கதைதான். பல மைல்கள் நடந்தே வந்து இருக்கிறார்கள். போகும் வழியில் யாராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால் அம்புட்டுத்தான்.

அவனை அங்கேயே மடக்கி அப்படியே அவனுடைய சைக்கிளைப் பிடுங்கிக் கொள்வது. இல்லை என்றால் போகிற வழியில் யார் வீட்டிலாவது அழையா விருந்தாளியாக நுழைய வேண்டியது. நல்ல ஒரு சைக்கிளாகப் பார்த்து உருட்டிக் கொண்டு போவது. பழைய சைக்கிளாக இருந்தால் சொந்தக்காரனுக்கு இரண்டு மூன்று உதைகள். ஜப்பான்காரனுக்கு அப்போது தெரிந்த நன்றி விசுவாசம்.

ஆக வெறும் காலங்களில் நடந்து வந்து, பின்னர் கண்ணில் பட்ட இளிச்சவாயர்களின் சைக்கிள்களில் பயணம் செய்து, இரண்டு நாடுகளை 69 நாட்களில் கைப்பற்றி இருக்கிறார்கள். இது மலாயாவில் ஜப்பான்காரன் காலத்தில் நடந்த ஜப்பான்காரன் சாதனை.


ஆக சைக்கிள் சவாரி செய்தே இரண்டு நாடுகளைப் பிடித்து இருக்கிறார்கள் என்றால் சும்மாவா? கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிய வேண்டிய சாதனை. இன்னும் யாரும் செய்யவில்லை. முடிந்தால் செய்து பார்க்கலாம். ஜப்பான்காரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்த மாதிரி ஜப்பான்காரகள் மலாயாவுக்குள் வரும் போது, தொடக்கத்தில் அதிகமான எதிர்ப்புகள் இல்லை. ஐலசா பாடிக் கொண்டே மலாயா எல்லையைக் கடந்து வந்து விட்டார்கள். கெடா சங்லூன் ஜித்ரா நகர்களில் தான் முதல் எதிர்ப்பு. பிரிட்டிஷ் கூட்டுப் படையினர் கொடுத்த எதிர்ப்பு.

இந்த இடத்தில் தான் ஜப்பானியருக்கும் பிரிட்டிஷாருக்கும் முதல் போர் நடந்தது. 1941 டிசம்பர் மாதம் 11-ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு சங்லூன் ஜித்ரா போர் நடந்தது. மலாயா போர்களில் முதல் போர்.

மலாயா போர்களைப் பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நேற்று சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு மீள் பார்வை. அரைத்த மாவையே அரைப்பதாகச் சொல்ல வேண்டாம். இப்போதுதான் பலருக்கும் பலவிதமான மறதிகள் வந்து தொலைக்கிறதே.

நேற்றைக்குச் சாப்பிட்டது இன்றைக்கு மறந்து போகிறது. இன்றைக்குச் சாப்பிட்டது நாளைக்கு மறந்து போகிறது. அப்புறம் என்னங்க. பக்கத்தில் இருக்கிற பெண்டாட்டி பிள்ளைகளையே மறந்துவிடும் அலங்கோலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆக அடிக்கடி நினைவு படுத்தினால் தான், ’கொர் கொர்’ கொரோனா காலத்தில் புருசனுக்குப் பெண்டாட்டி நினைவு வரும். பெண்டாட்டிக்குப் பிள்ளைகள் நினைவு வரும். என்ன செய்வது. சீனாக்காரன் போட்ட ஊயான் கோலங்கள். சரி. விடுங்கள். ஜப்பான்காரன் கதைக்கு வருவோம்.


ஜப்பான்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போர்களை மலாயா போர்கள் (Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள்.

ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்.

1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)

2. சங்லூன் ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)

3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)

4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)

5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)

6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)

7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)

8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)

இட்லர் இடி அமின் வேகத்தில் இறங்கி வந்த ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்த மலாயா பிரிட்டிஷ் இராணுவம் எவ்வளவோ போராடிப் பார்த்தது. உஹூம். முடியவில்லை.

மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; இந்திய இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா இராணுவத்தினர்; நியூசிலாந்து இராணுவத்தினர் என்று பல ஆயிரம் பேர் இருந்தனர்.

இருந்தாலும் ஜப்பானியர்களின் மின்னல் வேகப் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஜிவு ஜிவு என புற்றீசல் மாதிரி இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள். சங்லூன் ஜித்ராவில் முதல் ’செக்’ வைக்கப்பட்டது. இங்குதான் முதல் போர் நடந்தது.

சங்லூன் ஜித்ரா பகுதியில் மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தின் பாதுகாப்பு முழுமையாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜப்பானியர்கள் இறங்கி வரும் பாதைகளில் முள்வேலிகள் அமைக்கப்பட்டன. சரி.

சில இடங்களில் கண்ணி வெடிகள் வைக்கப் பட்டன. சரி. அவற்றை எல்லாம் தூசு தட்டி தோளில் போட்டுக் கொண்டு ஜப்பானியர்கள் இறங்கி வந்து கொண்டே இருந்தார்கள்.

அப்போது பெர்லிஸ் கெடா பகுதிகளில் பயங்கரமான மழை. ஆழமற்ற அகழிக் குழிகளில் வெள்ளம். தொடர்பு சாதனங்கள் நீரில் மூழ்கிப் போயின. வெளித் தொடர்புகள் அறுந்து போயின. ஜப்பானியர்களுக்கு அவை சாதகமாகிப் போயின.

இந்த ஜித்ரா போரில் தான் முதன்முறையாக இந்திய இராணுவம் களம் இறக்கப்பட்டது. ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்த இந்திய இராணுவப் படையினர் ஜித்ராவிற்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

மேஜர் ஜெனரல் டேவிட் முரே லியோன் (Major General David Murray-Lyon) என்பவர் 11-ஆவது இரண்டு இந்தியப் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தியப் படைகள் தான் முன் வரிசையில் நின்றன.

வலது புறத்தில் 15-ஆவது இந்தியக் காலாட்படை; பிரிட்டிஷ் லீசெஸ்டர்ஷைர் ரெஜிமென்ட் (Leicestershire Regiment); பஞ்சாப் ரெஜிமென்ட்; ஜாட் ரெஜிமென்ட் (Jat Regiment).

இடது புறத்தில் 6-ஆவது இந்திய காலாட்படை படை. மூன்று கூர்க்கா பட்டாளங்கள். 28-ஆவது இந்திய காலாட்படை தற்காப்புக்காக நின்றது.

இந்தியப் பிரிட்டிஷ் படையினர் முன் வரிசையில் 14 மைல் (23 கி.மீ) வரை அகன்று நீண்டு நின்றனர். அவர்கள் இருந்த இடத்தில் இரு சாலைகள். ஓர் இரயில் பாதை.  இருபுறமும் காடுகள் சூழ்ந்த மலைகள். வெள்ளம் பாய்ந்த நெல் வயல்கள். ரப்பர்  தோட்டங்கள். இவர்களைத் தாண்டித்தான் ஜப்பான்காரர்கள் அலோர் ஸ்டார் நகரத்திற்குள் வர முடியும்.

1941 டிசம்பர் 8-ஆம் தேதி தாய்லாந்தின் சிங்கோரா; பட்டாணி நகரங்களில் ஜப்பானியர்கள் தரை இறங்கி விட்டார்கள். அடுத்து அவர்களின் இலக்கு வடமேற்கு மலாயா.

ஜப்பானியர்கள் அலோர் ஸ்டாருக்கு நேராக வராமல் சங்லூன் (Changlun) நகரில் இருந்து அசூன் (Asun); ஜித்ரா (Jitra) நகரங்கள் வழியாக வந்தனர்.


சங்லூன் நகரம், கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில், தாய்லாந்து நாட்டிற்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்லாந்து மொழியில் இருந்து சங்லூன் எனும் பெயர் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சங் (Chang) என்றால் யானை. லூன் (Lun) என்றால் விழுந்தது அல்லது வீழ்ச்சி. முன்பு காலத்தில் இந்தப் பகுதியில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன. அவை இந்த இடத்திற்கு வந்ததும் சேறும் சகதியுமான சதுப்பு நிலங்களில் தடுமாறி விழுவது வழக்கம். அதனால் அந்த இடத்திற்கு யானைகள் விழுந்து செல்லும் இடம் என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

சங்லூன் பகுதியில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் படை வீரர்கள் குறைவாக இருந்ததால் தோற்கடிக்கப் பட்டார்கள். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வந்து இந்திய வீரர்களை ஜப்பானியர்கள் தாக்கி இருக்கிறார்கள். எதிர்பாராத தாக்குதல். அதனால் பல உயிரிழப்புகள்.

ஜப்பானியர்கள் கவச வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கூர்கா; பஞ்சாப் படை வீரர்களிடம் கவச வாகனங்கள் எதுவும் இல்லை. காட்டுக்குள் ஓடி மறையவும் முடியவில்லை. அந்த வகையில் ஜப்பானியர்களை வலுவாக எதிர்க்க முடியாமல் போய் விட்டது.

சங்லூன் - ஜித்ரா போர் 15 மணி நேரம் நடந்த ஒரு கசப்பான போர். ஜப்பானியர்களின் 5-ஆவது பிரிவு முதலில் சங் லூனைக் கைப்பற்றியது. பின்னர் ஜித்ராவைக் கைப்பற்றியது.

இந்தப் போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 386 வீரர்கள் பலியானார்கள். பெரும்பாலும் கூர்கா; பஞ்சாப் படை வீரர்கள். ஜப்பானிய இழப்புகளின் விவரங்கள் தெரியவில்லை.

இதே நேரத்தில், ஜப்பானியக் கடற்படையின் விமானங்கள் பினாங்கு மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தின. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு ஜப்பானியர்களால் அனுதினமும் குண்டுகள் வீசப்பட்டன. 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள்.

இதில் இருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் பல இடங்களில் இருந்து ஜப்பானியர்கள் தாக்குதல்கள் நடத்தி இருக்கிறார்கள். ஆக நேர்த்தியாகப் ’பிளேன்’ போட்டுச் செய்து இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியக் கூட்டுப் படையினர் ஜப்பானியர்களின் வியூகமான இராணுவத் தந்திரங்களைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. போர் வரும். சமாளித்து விடலாம் என்றுதான் கணக்குப் போட்டு இருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் போட்ட கணக்கு வேறு. ஜப்பானியர்கள் போட்ட கணக்கு வேறு.

’எங்களைக் கேட்டுத்தான் சூரியன் உதிக்கும்’ என்று வீரவசனம் பேசியவர்கள் வெள்ளைக்காரர்கள். ஆனால் சங்லூன் ஜித்ரா போரில் சூரியன் மறைந்து போய் மழை பெய்ததால் அவர்களின் வீர வசனமும் நனைந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஜப்பானியர்கள் மலாயாவின் இரு புறங்களில் ஒரே சமயத்தில் தரை இறங்கினார்கள் என்று  சொல்லி இருக்கிறேன். முதலாவது: கிளாந்தான் கோத்தா பாரு கடற்கரை. இரண்டாவது தாய்லாந்து - மலாயா சங்லூன் எல்லைப் பகுதி. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி நடந்தவை.

நாளைய கட்டுரையில் கம்பார் போர் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. இந்தப் போரில் நூற்றுக் கணக்கான இந்தியப் படை வீரர்களும்; மலாயாக் கூட்டுப் படை வீரர்களும் இறந்து போனார்கள். அவர்களுக்காகக் கம்பார் நகரில் ஒரு நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

மேற்கோள்கள்:

1. Falk, Stanley L. (1975). Seventy days to Singapore: The Malayan Campaign, 1941–1942. London: Hale. ISBN 978-0-7091-4928-6.

2. Shores, Christopher F; Cull, Brian; Izawa, Yasuho. Bloody Shambles, The First Comprehensive Account of the Air Operations over South-East Asia December 1941 – April 1942 Volume One: Drift to War to the Fall of Singapore. London: Grub Street Press. (1992)

3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.

4. Gurcharn Singh Sandhu, The Indian cavalry: history of the Indian Armoured Corps, Volume 2, Vision Books, 1978 ISBN 978-81-7094-004-3




5 கருத்துகள்:

  1. அருமையான வரலாற்றுப் பதிவு..இந்திய இராணுவத்தினரின் உயிர்த் தியாகங்களும் வீர மரணமும் மலேசிய வரலாற்றுப் பாட நூல்களில் மறைக்கப்பட்டிருந்தாலும், ஐயாவைப் போன்றோர் அவ்வரலாற்றுச் சுவடுகளை மீட்டெடுத்து இன்றைய தலைமுறைக்கு மாபெரும் அறிவு விருந்தாகவும் உணர்வுக் களஞ்சியாகவும் வழங்குவது அறிவுலகின் போற்றுதலுக்குரிய தொண்டாகும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உண்மைகள் எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்குத் தெரிய வேண்டும். அதுவே நம் இலக்கு. நன்றிங்க.

      நீக்கு