22 ஜூன் 2021

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி

தமிழ் மலர் - 22.06.2021

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி பினாங்கு மாநிலத்தில் தோற்றுவிக்கப் பட்ட பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியா? அல்லது கோலாலம்பூரில் தோற்றுவிக்கப் பட்ட சன் பெங் தமிழ்ப்பள்ளியா?

பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளி என்பது ஓர் ஆங்கிலப்பள்ளி. அந்தப் பள்ளியில் 1816-ஆம் ஆண்டில் முதல் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அந்த வகையில் அந்தப் பள்ளி முதல் தமிழ்ப்பள்ளி என்று வரலாறு படைக்கிறது.

மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி கோலாலம்பூரில் தோற்றுவிக்கப் பட்ட சன் பெங் தமிழ்ப்பள்ளி என்று அண்மைய காலங்களில் கணிப்புகளும் கருத்துகளும் காணொலி வடிவத்தில் மலேசிய ஊடகங்களில் பரவலாகி வருகின்றன.

பலரும் பார்த்து இருக்கலாம். உண்மையிலேயே பலருக்கும் பெருமை. சன் பெங் தமிழ்ப்பள்ளி எனும் உயிரோட்டமான ஒரு கல்விக் கலசம் கண்முன் தெரிகிறதே என்று பெருமை கொள்வோம். சரித்திரம் படைக்கும் சன் பெங் தமிழ்ப்பள்ளிக்கு முதலில் நம்முடைய வாழ்த்துகள். கைகூப்புகிறேன்.

இது தொடர்பாகப் பொதுமக்கள் பலரும் பல வகையான கருத்துகளை முன்வைக்கின்றனர். போதுமான சான்றுகள் இல்லாமல் கருத்துகள் சொல்லக் கூடாது என்றும் சிலர் சொல்லி வருகின்றனர்.

என்னைக் கேட்டால், எந்தப் பள்ளி முதல் தமிழ்ப் பள்ளியாக அமைந்தாலும் அது மலாயாத் தமிழர்களுக்குத் தான் பெருமை. அந்த வகையில் ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை. இரண்டுமே தமிழரின் கண்கள். எந்தக் கண் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

எது எப்படி இருந்தாலும்; சன் பெங் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் மிகப் பழைமையான பள்ளிகளில் ஒன்றாகும். அதன் வரலாற்றைத் தற்காக்க வேண்டியது மலேசியாவில் வாழும் ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும். தமிழ்ப்பள்ளிக்கு ஓர் இழுக்கு என்றால் பெற்ற தாயே தடுத்தாலும் விட மாட்டோம். தமிழ் எங்கள் உயிர்.

சன் பெங் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளியாக அமைந்தால் அதைவிட பெருமை வேறு எதுவுமே இருக்காது. சரி. வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

கோலாலம்பூர் சன் பெங் தமிழ்ப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் போது அந்தப் பள்ளி 1795-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டதாக அறியப் படுகிறது. காணொலியைத் தயாரித்தவர் உறுதிபடுத்துகிறார். அவருடைய பெயரை அவர் வெளியிடவில்லை. இருப்பினும் அவருக்கு நன்றி.

அதற்கு முன்னர் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி பினாங்கு பிரி ஸ்கூல் பற்றிய சில தகவல்கள்.

பினாங்கு பிரி ஸ்கூல் என்பது ஒரு வழக்குப் பெயர்ச் சொல். வழக்கமாகக் காலம் காலமாக அழைக்கும் சொல். அந்தச் சொல்லைத் தமிழ்ப்படுத்தி பினாங்கு இலவசப் பள்ளி என்று அழைப்பது சரியன்று. பினாங்கு பிரி ஸ்கூல் என்றே அழைக்க வேண்டும்.

செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி; செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி; மளக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி; மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி; ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி; ஈப்போ மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி; செர்சோனிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி; இவை போன்றவை வழக்குப் பெயர்ச் சொற்கள். முன்னொட்டு பெயருடன் அப்படியே அழைக்க வேண்டும். மாற்றம் செய்வது முறையன்று.

1816-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் திகதி மலேசியாவின் முதல் பள்ளிக்கூடம் பினாங்கு மாநிலத்தில் தோற்றுவிக்கப் பட்டதற்கான போதுமான சான்றுகள் உள்ளன. தொடக்கத்தில் அது ஓர் ஆங்கிலப்பள்ளி.

அதன் பெயர் பினாங்கு பிரி ஸ்கூல் (Penang Free School). மலேசியாவில் மட்டும் அல்ல. தென்கிழக்கு ஆசியாவிலேயே அதுதான் முதல் ஆங்கிலப் பள்ளியும் ஆகும்.

அதே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் தான் மலேசியாவின் முதல் தமிழ் வகுப்பும் தொடங்கப் பெற்றது. அப்போது பள்ளியின் தலைவராக இருந்தவர் ஆர்.எஸ். ஹட்சிங்ஸ் (Robert Sparke Hutchings). இவர்தான் மலாயாவில் தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த பிதாமகனார்.

தொடக்கக் காலங்களில், அரசாங்கத்தில் பணிபுரிந்த ஆங்கிலேயர்கள், உள்ளூர்ப் பிரமுகர்களின் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு வாடகை வீட்டில் தனிப்பட்ட முறையில் கல்வி போதிக்கப்பட்டது.

அந்தக் குழந்தைகளுக்குத் தனியார் வகுப்புகள் எனும் பெயரில் பினாங்கில் இரகசியமாக நடைபெற்றன. லண்டனில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப் பட்டார்கள். ஆங்கிலேயர்களின் குழந்தைகள். அதனால் ஆங்கிலேய ஆசிரியர்கள் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப் பட்டார்கள்.

எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி வசதி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஏழை மக்களின் குழந்தைகள் ஓரங்கட்டப் பட்டார்கள்.

கிழக்கில் உதிக்கும் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் மேற்கில் மறைய வேண்டும் என்று வீர வசனம் பேசிய ஆங்கிலேயர்களின் ஓர் உலக மகா தத்துவம் என்ன தெரியுங்களா. வரித்துவிடு பிரித்துவிடு (Divide and Rule).

ஆயக் கலைகள் 63 என்று சொல்வார்கள். ஆங்கிலேயர்களின் இந்தக் கலையையும் சேர்த்து 64 என்று மாற்றி விடலாம். பிரச்சினை இல்லை. கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆக அதன் காரணமாக அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கத்தில் தான் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது.

இருப்பினும் அந்தப் பினாங்கு பிரி ஸ்கூல் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத குழந்தைகளும் இருக்கவே செய்தார்கள். அந்த மாதிரியான ஏழைக் குழந்தைகள் கல்விக் கேள்விகளில் இருந்து புறக்கணிக்கப் பட்டார்கள்.

அந்த மாதிரியான ஒரு கல்விச் சூழல் அப்போது நிலவியது. அப்போது ஆர்.எஸ். ஹட்சிங்ஸ் எனும் மத போதகர் தான் ஓர் அருமையான மாற்றுக் கருத்தைக் கொண்டு வந்தார்.

அந்தக் குழந்தைகள் விரும்பினால் அவர்களின் தாய் மொழியிலேயே அவர்களுக்குப் போதிக்கலாமே எனும் மாற்றுக் கருத்து.

அதன் மறுவடிவமே பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் ஒரு தமிழ் வகுப்பு. அப்படியே மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி பிறந்த கதையும் வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு தமிழ்ப்பள்ளித் தொடங்குவதற்கு அன்றைய அரசாங்கத்திடம் இருந்து அனுமதியும் கிடைத்தது.

இதில் குறிப்பிடத் தக்க விசயம் என்ன தெரியுங்களா. தமிழ்ப்பள்ளியில் பயின்ற அந்தக் குழந்தைகள் விரும்பினால் அவர்களுக்கு ஆங்கிலமும் போதிக்கப் பட்டது. அந்த வகையில்  உள்ளூர் சமய போதகரைக் கொண்டு தமிழ் மொழி போதிக்கப் பட்டது.

ஆங்கிலேயர்களின் மூலமாக ஆங்கில மொழி போதிக்கப் பட்டது. அத்துடன் குழந்தைகளின் தாய்மொழிக் கல்வியுடன் தொழில் கல்வியும் போதிக்கப் பட்டது. உள்ளூர் தமிழாசிரியர்கள்; தமிழ் வித்துவான்கள் மூலமாகத் தமிழ் மொழி போதிக்கப் பட்டது.

1816 அக்டோபர் 21-ஆம் திகதி, முதன் முதலாக பினாங்கு லவ் லேன் (Love Lane) சாலையில், மாதம் 50 மலாயா டாலர் வாடகையில் பினாங்கு பிரி ஸ்கூல் தொடங்கப் பட்டது. அதே ஆங்கிலப் பள்ளியில் தமிழ் வகுப்பும் மலாய் வகுப்பும் ஒரு சேர நடத்தப் பட்டன. தமிழ் வகுப்பில் முதலில் 25 மாணவர்களுக்கு மட்டும் போதிக்கப்பட்டது.

தமிழ் வகுப்பு தொடங்கிய மறு ஆண்டு 1817 அக்டோபர் 18-ஆம் தேதி பினாங்கு பிரி ஸ்கூல், ஒட்டு மொத்தமாக வேறு ஓர் இடத்திற்கு மாற்றம் கண்டது. லவ் லேன் சாலையில் இருந்து பார்குவார் சாலைக்கு (Farquhar Street) மாற்றம்.

அதனால் புதிய இடத்தில் தமிழ் மாணவர்களுக்குப் பாற்றாக் குறை ஏற்பட்டது. தமிழ் மாணவர்களால் லவ் லேன் சாலையில் இருந்து பார்குவார் சாலைக்குச் செல்ல முடியவில்லை.

இருப்பினும் பார்குவார் சாலையில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்தன. முன்பு லவ் லேன் சாலையில் இருந்த பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் 25 மாணவர்கள் தமிழ் பயின்றார்கள். ஆனால் பார்குவார் சாலையில் அமைந்த பள்ளியில் மூன்றே மூன்று மாணவர்கள் பயின்றார்கள்.

அந்த மூன்று மாணவர்களைக் கொண்டு சில மாதங்கள் பார்குவார் சாலையில் தமிழ் வகுப்புகள் நடைபெற்றன. அதன் பின்னர் தமிழ் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. வேறு வழி இல்லாமல் பள்ளி திறக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் மூடுவிழா கண்டது.

அதன் பின்னர் பினாங்கு பிரி ஸ்கூல் மேலும் ஓர் இடத்திற்கு மாற்றம் கண்டது. 1927-ஆம் ஆண்டு பினாங்கு கிரீன் லேன் சாலைக்கு (Green Lane) மாற்றப் பட்டது. அந்தச் சாலையின் இப்போதைய புதிய பெயர் ஜாலான் மஸ்ஜித் நெகிரி (Jalan Masjid Negeri).

இப்போது அந்தத் தமிழ்ப்பள்ளி அங்கே அதே அந்த இடத்தில் தான் இருக்கிறது. அதாவது இருக்கிறது ஆனால் இல்லாமல் போய் விட்டது. மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி (தமிழ்வகுப்பு) தோன்றிய இடத்தில் இப்போது பினாங்கு மாநிலத்தின் அருங்காட்சியம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவல் மலேசியாவில் உள்ள பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது.

சரி. ஊடகங்களில் பரவலாகி வரும் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி சன் பெங் தமிழ்ப்பள்ளி எனும் காணொலி விசயத்திற்கு வருவோம். அந்தக் காணொலியைத் தயாரித்த அன்பர் சொல்கிறார்:

சன் பெங் தமிழ்ப்பள்ளி 1795-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி உருவாக்கப் பட்டது. அப்படி என்றால் எத்தனை ஆண்டுகள். பினாங்கில் தமிழ்ப்பள்ளி தோன்றுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சன் பெங் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டு விட்டது.

சன் பெங் தமிழ்ப்பள்ளியைத் தோற்றுவித்தவர் ஜோநாதன் சோலையார் (ஜெகநாதன் சோலையார்). இது மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற சான்று.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 225 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அதற்கு முன்னர் மற்ற எந்தப் பள்ளிகளும் இல்லை. எல்லோரும் சிங்கப்பூரை நம்பிக் கொண்டு இருந்தார்கள். மற்றப் பள்ளிகளுக்கு ஆணித்தரமான சான்றுகள் இல்லை.

ஆனால் தமிழ்ப்பள்ளிகளுக்கு சரியான போதுமான சான்றுகள் உள்ளன. மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்திற்கு சான்றுகள் கிடைத்து உள்ளன.

115 ஆண்டுகளுக்கு முன்னால், 1905-ஆம் ஆண்டில் உருவான ஒரு கல்லூரியைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் 225 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். என்ன நியாயம்.

நாம் நம்முடைய வரலாற்றில் எவ்வளவோ விசயங்களைக் கவனிக்காமல் விட்டு விட்டோம். அவை காணாமல் போய் விட்டன. காணாமல் போய் வருகின்றன. அவர் மேலும் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.

நம்முடைய தமிழ்ப்பள்ளிகள் கடந்த 225 ஆண்டுகளாக இந்த நாட்டில் இருக்கின்றன என்றால் தமிழர்கள் இந்த நாட்டிற்கு எப்போது வந்தார்கள்? நியாயமான கேள்வி. சரி. இப்போது நான் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்.

சன் பெங் தமிழ்ப்பள்ளியைத் தோற்றுவித்தவர் ஜோநாதன் சோலையார் (ஜெகநாதன் சோலையார்). அது மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற சான்று. அதை நாம் மறுக்கவில்லை. மகிழ்ச்சி கொள்கிறோம்.

காணொலி தயாரித்தவரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தின் சான்றுகளைப் படம் பிடித்து ஊடகங்கள் மூலமாக தெரிவியுங்கள். பலரின் சந்தேகங்கள் தீரும். மாற்றுக் கேள்விகள் கேட்பவர்களும் அமைதி கொள்வார்கள். சரி.

1834-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரி ஸ்கூல் (Singapore Free School) பள்ளியில், ஒரு பிரிவாக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் 1839-ஆம் மூடப்பட்டது.

1850-ஆம் ஆண்டில் மலாக்காவில் முதல் ஆங்கிலேய தமிழ்ப்பள்ளி (Anglo Tamil School, Tranquerah, Malacca); மலாக்கா, திரேங்கேரா சாலையில் நிறுவப்பட்டது. அதுவே மலேசிய நாட்டின் முதல் தமிழ்ப்பள்ளி ஆகும். அதற்கு முன்னர் உள்ளவை தமிழ் வகுப்புகள்.

மலேசியாவில் முதல் தமிழ்ப்பள்ளி மலாக்காவில் 1850-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது எனும் தகவலுடன் இந்தக் கட்டுரையை முடிவிற்கு கொண்டு வருகிறேன்.  

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.06.2021

சான்றுகள்:

1.https://grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

2.http://planipolis.iiep.unesco.org/sites/planipolis/files/ressources/malaysia_education_act_1996.pdf

3.http://Yayasan%20Strategik%20Sosialhttp://www.yss98.com/03_service/2004/news/disp_ar.php?file=03040101-20040705-0102.htm

4.https://kheru2006.webs.com/a_development_of_education_system_in_malaysia_pre_independence.htm


2 கருத்துகள்: