23 ஜூன் 2021

கங்கார் தமிழ்ப்பள்ளி

தமிழ் மலர்  - 23.06.2021

படிக்காத மேதை படத்தில் ஒரு பாடல் காவியம்: ஒரே ஓர் ஊரிலே ஒரே ஒரு ராஜா. அதே போல பெர்லிஸ் மாநிலத்தில் ஒரு கூடல் ஓவியம்: ஒரே ஓர் ஊரிலே ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி. கங்கார் தமிழ்ப்பள்ளி எனும் தமிழ்க் காவியம். மலேசியத் தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு தமிழ் ஓவியம்.

மொழி காப்பவன் இனம் காப்பான். எப்படிப்பட்ட பொன் வாசகம். இந்த வாசகத்தை முன்னொட்டுச் சொற்களாக முன்னெடுத்து கங்கார் தமிழ்ப்பள்ளி பயணித்து வருகின்றது.


ஒரு தமிழ்க் கலசத்தில் மணிமணியான மாணவர்கள். மகுடம் சூட்டும் மதி மதியான ஆசிரியர்கள்; இனிதான பணியாளர்கள். உதயசூரியன் போல ஒரு தலைமையாசிரியர். உதயக்குமார். எளிமையில் பொறுமை கண்டு தமிழ்ச் சேவைகளில் உச்சம் பார்க்கும் நல்ல ஒரு தமிழ் மகனார்.

இவர்களை எல்லாம் தாண்டிய நிலையில் சிறப்பான பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்; செயற்குழு உறுப்பினர்கள்; பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர்; பெற்றோர்கள்; பெர்லிஸ் தமிழ் மக்கள். இப்படி அனைவரும் ஒன்றிணைந்து கங்கார் தமிழ்ப்பள்ளியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள். வாழ்த்துகிறோம்.


கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். அந்த மாதிரி பெர்லிஸ் மாநிலத்தில் தமிழர்கள் குறைவாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழர்ச் செயல்பாடுகளில் தனித்துவம் காண்கிறார்கள். பெருமைப்பட வேண்டிய விசயம்.

கங்கார் தமிழ்ப்பள்ளி (SJKT Kangar), பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஜாலான் பாடாங் காத்தோங் (Jalan Padang Katong) எனும் சாலையில் அமைந்து உள்ளது.


மலேசிய நாட்டின் கடைசி எல்லைப் பகுதியில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்து இருக்கும் கங்கார் தமிழ்ப்பள்ளி; பெர்லிஸ் மாநிலத்திலும் ஒரே தமிழ்ப் பள்ளி. 1936-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கிளந்தான் மாநிலத்திலும் இதே போல ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று சொல்லுவார்களே அந்த மாதிரிதான். பாசீர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Pasir Gajah Kelantan) என்று பெயர். இப்போது பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி என்று மாற்றம் கண்டுள்ளது.


1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கிளாந்தான் மாநிலத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் மாணவர்ப் பற்றாக்குறை. பத்து ஆண்டுகள் இடைவெளி. மாணவர் எண்ணிக்கை ’பட்’ என்று குறைந்து போனது.

அதனால் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் மலாய்ப் பள்ளிகளாக மாற்றப் பட்டன. எஞ்சிய ஒரே ஒரு தமிழ் பள்ளிதான் இப்போதைய பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி. சரி. பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு வருவோம்.


கங்கார் தமிழ்ப்பள்ளியில் இருந்து எட்டிப் பார்த்தால் அந்தப் பக்கம் தாய்லாந்து நாடு. அவ்வளவு நெருக்கத்தில் அந்தப் பள்ளி அழகாய் அமர்ந்து அழகு தமிழ் பேசிக் கொண்டு இருக்கிறது. பொடி நடமாய் நடந்து போய் சயாம் நாட்டுக்குப் பொருட்களை வாங்கி வந்து விடலாம் என்று சொல்லக் கேள்வி.

1930-ஆம் ஆண்டுகளில் கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்தும்; பினாங்கு பட்டர்வொர்த் நகரத்தில் இருந்தும் தமிழர்கள் சிலர் அங்கே போய் இருக்கிறார்கள். துணிமணிகள்; மளிகைப் பொருட்கள் வணிகம் செய்வதற்காகக் கங்கார் நகருக்குச் சென்று இருக்கிறார்கள்.


அதற்கு முன்னர் தமிழர்கள் பலரும் அங்கு பல வகையான வேலைகள் செய்து இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளின் கல்வி நலன் கருதி ஒரு பலகை வீட்டில் தமிழ்ப்பள்ளி முதன்முதலாக அமைக்கப்பட்டது.

இந்தப் பள்ளி அமைவதற்கு ஆலம் வேராக அமைந்தவர் டாக்டர் சிவ சம்பந்தன் (DATO DR. R. SIVASAMBANDAN). 1930-ஆம் ஆண்டுகளில் கங்கார் பொது மருத்துவமனைக்கு ஒரு மருத்துவராக வந்தவர்.


தமிழர்கள், தமிழரினம் என்பதில் ஆர்வம் காட்டியவர். கங்கார் பகுதியிலும்; பொதுவாகப் பெர்லிஸ் மாநிலத்திலும் தமிழர்களின் மக்கள் தொகை குறைவு. அவர்களை ஒன்று படுத்த வேண்டும் எனும் குறிக்கோளுடன் பயணித்தவர் டாக்டர் சிவ சம்பந்தன்.

அந்த வகையில் கங்கார் தமிழ்ப்பள்ளி அமைவதற்கும் காரணமாக இருந்தார். காங்கார் நகரில் ஜாலான் பெஞ்சாரா சாலையில் கங்கார் தமிழ்ப்பள்ளி முதலில் அமைக்கப் பட்டது.


அதன் பின்னர் பெர்லிஸ் வாழ் இந்தியர்களுக்காக, குறிப்பாகத் தமிழர்களுக்காக பெர்லிஸ் இந்தியர் சங்கத்தையும் உருவாக்கித் தருவதில் முனைப்பு காட்டி இருக்கிறார்.

அந்தக் காலக் கட்டத்தில் பெர்லிஸ் மாநிலத்தின் பிரிட்டிஷ் ஆளுநகராக இருந்தவர் இடன் ஓபோ (Hden Obo). அவரின் துணையுடன் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தைத் தோற்றுவித்தார். சரி.


2003-ஆம் ஆண்டில் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு மூன்று மாடிக் கட்டிடம் கட்டித் தரப்பட்டது. அப்போது அந்தப் பள்ளியில் 72 மாணவர்கள் பயின்றார்கள். 14 ஆசிரியர்களுடன் 4 பள்ளி அலுவலக ஊழியர்களும் பணியாற்றினார்கள்.

2003-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 136. (பெண்கள்: 75; ஆண்கள் 61). ஆசிரியர்களின் எண்ணிக்கை 12.


இப்போது இந்தப் பள்ளியில் 88 மாணவர்கள் பயில்கிறார்கள். 12 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இப்பள்ளியில் ஒரு பாலர் பள்ளியும் இயங்கி வருகிறது. மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்தப் பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளியாகும்.

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியா; ஜாகர்த்தா மாநகரில் அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான 2021-ஆம் ஆண்டு புத்தாக்கப் போட்டியில் தொழில்நுட்பம், கணினிப் போட்டி (Youth International Science Fair (YISF) 2021) நடைபெற்றது. அந்தப் போட்டியில் கங்கார் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கம் வென்று வெற்றி வாகை சூடி உள்ளது.


23 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அனைத்துலக மாணவர்கள் இந்த அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றது பெர்லிஸ் மாநிலத்தின் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து உள்ளது. அந்த அனைத்துலகப் போட்டியில் பெருமை சேர்த்த மாணவர்கள் லாரா அன்சிலியா செல்வராஜ்; ஹெரன் ராஷ் ஜெய ராஷ்; குஜென் சந்திரஹான்; ருத்ரா மணிவண்ணன்.


இந்த மாணவர்கள் மட்டும் அல்ல. மேலும் சில மாணவர்களும் வெள்ளி தங்கப் பதக்கங்கள் பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவர்களின் வெற்றிக்குப் பின்னால் துணையாக இருந்தவர்கள் கங்கார் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள்; பெற்றோர்கள்; பள்ளியின் பணியாளர்கள்; முன்னாள் மாணவர் சங்கத்தின் மாணவர்கள்; பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்.


இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் அன்பர்கள் தான் இந்தப் பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்வி நலன்களிலும் தீவிரமான அக்கறை செலுத்தி வருகின்றார்கள்.

நான் சொல்லவில்லை. பள்ளியின் பெற்றோர்களே சொல்கிறார்கள். பள்ளியின் தலைமையாசிரியர் உதயக்குமார், முன்னாள் மாணவர்களை வெகுவாகப் பாராட்டுகிறார். முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கு ஒரு சபாஷ். 


தவிர கங்கார் தமிழ்ப்பள்ளி வேறு பல அனைத்துலகப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளது.

பெர்லிஸ் மாநிலத்தில் ஒரே தமிழ்ப்பள்ளியாக இருப்பதால் 20 கி.மீ. தொலைவில் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். மழைக் காலங்களில் பற்பல சிரமங்களையும் எதிர்நோக்குகிறார்கள். மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வருவதையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு மலேசிய ஹினோ வாகன விற்பனை நிறுவனம் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு ஓர் இலட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஒரு பேருந்தை இலவசமாக வழங்கி உள்ளது.


25 மாணவர்கள் அமர்ந்து செல்ல வசதி கொண்ட அந்தப் பேருந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களிடம் வழங்கப் பட்டது.

இந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து கங்கார் தமிழப்பள்ளி ஓர் உருமாற்றுத் தமிழப்பள்ளியாக மாற்றம் காண்கிறது எனும் செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தலைமையாசிரியர் உதயகுமார்; பள்ளி ஆசிரியர்கள்; முன்னாள் மாணவர்கள்; இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு சிறப்பான சேவைகளைச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தப் பள்ளி புதிய உத்வேகத்தில் புதிய வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்து கொண்டு வருகிறது.


அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் பற்பல சாதனைகளைச் செய்து வருகிறார்கள். மலேசியாவில் உள்ள மற்ற மொழிப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாகவும் செயல் படுகிறார்கள்.

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை மூடிவிடுங்கள் என்று மலேசிய அரசியல்வாதிகள் சிலர் சொல்வது வழக்கமாகி வருகிறது. ஆனாலும் தமிழ்ப் பள்ளிகளை மூட விட மாட்டோம் என்று மலேசியத் தமிழர்களும் போராடி வருகிறார்கள்.


மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பு; கற்றல் கற்பித்தலில் நவீன அணுகுமுறைகள்; உற்சாகமானத் தூண்டுதல்கள் போன்றவை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.

அதே வேளையில் அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட்டு வருகிறது. இனப் பற்றும் மொழிப் பற்றும் மேலோங்கி வருகிறது.

இத்தகைய மாற்றங்களைக் கங்கார் தமிழ்ப்பள்ளியிலும் காண முடிகிறது. தமிழ் மொழியும் தமிழ்ப்பள்ளிகளும் நம் இரு கண்கள். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.06.2021



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக