இரசம் செய்த இரசவாதம்
தமிழர்களின் பாரம்பரியச் சமையல் உணவுகளில் முக்கியமானது இரசம். ஒரு வகையான திரவ உணவுப் பொருள். தமிழர்களின் சமையல் வாழ்வில் அவர்களுடன் ஊறி ஒன்றித்துப் போன ஒரு சமையல் உறவு. 16-ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சேர்ந்த தமிழர்கள் உருவாக்கியதாகக் கலைகளஞ்சியங்கள் சொல்கின்றன.
ஆனால் தமிழர் இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இரசம் அவர்களுடன் பயணித்து வந்து இருக்கலாம். ஓர் ஐயாயிரம் ஆண்டு காலமாகத் தமிழர்கள் இரசத்துடன் ஒன்றித்து விட்டார்கள். அந்த வகையில் தமிழர்களையும் இரசத்தையும் பிரிக்க முடியாது. பிரிக்கவே முடியாது. அப்படி ஓர் ஐக்கியம்.
மிளகு இரசம்; சீரக ரசம்; பருப்பு இரசம்; மைசூர் ரசம்; திப்பிலி இரசம்; எலுமிச்சை இரசம்; தக்காளி இரசம்; வேப்பம்பூ இரசம்; அள்ளிப் பருப்பு ரசம்; இப்படி இரச வகைகள் உள்ளன. இந்த இரசம் அண்மையில் ஓர் இரசவாதத்தை உண்டாக்கி விட்டு விட்டது.
இரசம் பற்றிய ஒரு நிமிடக் காணொலி. நூர் சோபியா ஜொஹாரி (Nor Sufia Johari) என்கிற பெண்மணி டிக் டாக் ஊடகத்தில் ஒரு காணொலியைப் பதிவு செய்து இருக்கிறார்.
அந்தக் காணொலி பதிவானதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் (Netizens) தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து இருக்கிறார்கள். டி.எச்.ராகா புகழ் பங்கி சங்கரும் தம் கருத்தைப் பதிவு செய்து உள்ளார்.
சிலரும் பலரும் கண்டனக் குரல்கள் எழுப்பி இருக்கிறார்கள். சிலருக்குச் செவிப்பறைகள் நைந்து கிழிந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. புரியும் என்று நினைக்கிறேன். ஒட்டு மொத்த இந்தியர்களையும் ‘பெனும்பாங்’ என்று சொன்னால் சும்மா விடுவார்களா. உடனே அந்தப் பெண்மணி மன்னிப்பு கேட்டு அந்தப் பதிவை அழித்து விட்டார்.
அந்தக் கானொலியில் அந்தப் பெண்மணி சொல்கிறார்: இரசத்தில் மலாய்க்காரர்களுக்கு என ஓர் இரச வகை உள்ளது. அதை அவர் குறிபிட்டதாகவும்; அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாகவும் சொல்கிறார்.
அந்தக் காணொலி தொடர்பாக ஊடகப் பயனர்களிடையே வாக்குவாதங்கள் வரும் போது தமிழர்களையும் இந்தியர்களையும் ஒட்டு மொத்தமாக ‘நீங்கள் எல்லாம் பெனும்பாங்’; ஒழுங்காக இருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
ஒரே ஒரு கேள்வி. இந்த நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் சிலர் தங்களின் பூர்வீகம் இந்தோனேசியா என்று ஒப்புக் கொள்கிறார்கள். தங்களின் மூதாதையர் அங்கு இருந்து வந்தார்கள் என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்த நாட்டிற்கு தமிழர்கள் குடியேறிய பின்னர் தான் ’அவர்கள்’ வந்து இருக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. தமிழர்கள் 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே மலாயாவுக்கு வந்து விட்டார்கள். இந்தோனேசியாவில் இருந்து குடியேறியவர்கள் 1900-ஆம் ஆண்டுகளில் குடியேறி இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள். இவர்களில் யாருங்க பெனும்பாங்?
தொட்டதுக்கு எல்லாம் பெண்டத்தாங்; ஆச்சு பூச்சு என்றால் பெனும்பாங். நினைத்த நேரத்திற்கு நினைத்த இடங்களில் ருத்ர தாண்டவங்கள். மன்னிக்கவும். பெண்டத்தாங் என்கிற வக்கிரத் தாண்டவங்கள். என்னங்க இது. இவர்கள் மட்டும் என்னவாம். சிரிப்பாக இருக்கிறது. பேசுவதில் கொஞ்சம் அர்த்தத்தோடு பேச வேண்டாமா. படுத்துக் கொண்டே அடுத்தவரை உமிழ்ந்தால் என்ன நடக்கும்?
மலேசியாவில் வசிக்கும் இந்திய ஊடகப் பயனர்கள் இது போன்ற விசயங்களில் சண்டை போடக் கூடாது என்றும் மற்றும் ஒரு காணொலியில், நூர் சோபியா நினைவு படுத்துகிறார்.
அவர் சொன்னது: “நீங்கள் இங்கே பெனும்பாங். தயவுசெய்து ஒழுங்காக வாழுங்கள்.” (“So, where are you staying now? You are staying in Malaysia. Don’t start fights here. You are staying here as ‘penumpang’ right? Then stay properly”)
பின்னர் ஒரு மன்னிப்பு காணொலி செய்து இருந்தார். அதில் மலேசியாவில் உள்ள எல்லா இந்தியர்களையும் சொல்லவில்லை. தன் மீது பாய்ச்சல் காட்டியவர்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொன்னேன் என்றார்.
அவர் மன்னிப்பு காணொலியைப் பதிவு செய்யும் போது அவருக்கு அருகில் அவரின் இந்தியர் நண்பர்கள் இருந்து இருக்கிறார்கள். சரி.
மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. நம் நாட்டின் இந்தத் தனித்துவமான அடையாளத்தில் நாம் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில், தவறான முறையில் நாக்கை நழுவ விட்டால், கண்டிப்பாகப் பிரச்சினைகள் வந்து சேரும்.
அதனால் செவிப்பறைகள் கிழிந்து போகலாம். முதுகு வீங்கிப் போகலாம். அந்தப் பெண்மணியைச் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறேன்.
மலேசியா எனும் மலைநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் பெனும்பாங் எனும் வந்தேறிகளா? மற்ற நாடு தெரியாமல் வாழ்ந்துவிட்ட மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டிற்குப் புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் வந்தேறிகளா? அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து இந்த நாட்டிற்கு குடி வந்தவர்கள் வந்தேறிகளா?
மலேசிய நாட்டில் யாருங்க வந்தேறிகள்? மலேசியா என்பது பச்சைப் பசும்தரை படர்ந்த நாடு. பொன்னும் மணியும் புதைந்து கிடக்கும் பொன்மணி நாடு. ஒரு புண்ணிய பூமி. ஒரு புண்ணியத் தளம். ஒரு புண்ணிய மண்.
அங்கே பல்லின மக்களின் கடின உழைப்பு. பல்லினச் சமுதாயத்தின் பகல் இரவு பாரா அர்ப்பணிப்பு. உயர்வோம் உயர்ந்து காட்டுவோம் என்கிற ஒசத்தியான உணர்வு. அதில் அவர்களின் வியர்வை. அவர்களின் இரத்தம். அத்தனையும் கலந்து கரைந்து உரைந்து உச்சம் பார்க்கும் ஒரு சிகரம். அதுதான் மலேசியா.
இந்த வந்தேறி எனும் சொல்லுக்கு இந்த நாட்டிலே முதன்முதலாகச் சூடம் சாம்பிராணி போட்ட பெருமை யாருக்குச் சேரும் தெரியுங்களா. சாட்சாத் ஓன் பின் ஜாபார். அவருக்கு முதற்கண் முதல் மரியாதை. அவர் பயன்படுத்திய அந்தச் சொல் இன்றும் சுனாமி அலைகளாய் ஆர்ப்பரித்துக் கொண்டு வருகின்றன.
1946-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் உருவான காலத்தில், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக வந்தேறி எனும் சொல்லை அவர் பயன்படுத்தினார். அதற்கு முன்னர் அந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
அதன் பின்னர் அந்தச் சொல்லைத் துங்கு அப்துல் ரகுமான் பயன்படுத்தி இருக்கிறார். யார் நம்ப தேசத் தந்தை துங்கு தான். இதைச் சொல்லும் போது பலருக்கும் வேதனையாக இருக்கலாம். எனக்கு அது பழசாகி விட்டது. விடுங்கள்.
பெரிய தலைவருக்குப் பின்னர்... அப்புறம் சொல்லவே வேண்டாம். மற்ற மற்ற குட்டிக் குடித் தலைவர்கள் எல்லாம் வாய்க்கரிசி போடுகிற மாதிரி வசை பாடத் தொடங்கி விட்டார்கள். பசார் மாலாம் இரவுச் சந்தையில் கூட பெண்டத்தாங்; பெனும்பாங் எனும் சொற்கள் பழைய சொற்களாகி விட்டன. அந்த அளவுக்கு அந்தச் சொல் ரொம்பவும் மலிவாகி விட்டது.
இப்படிச் சொல்கிறார்களே இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டிற்கு அள்ளிவிட்டுக் கொண்டு போகிறார்கள்.
ஆனால் இவர்கள் என்னவோ வானத்தில் இருந்து குதித்து வந்த வான்கோழி மாதிரியும் மண்ணுக்குள் இருந்து முளைத்த வந்த முள்ளங்கி மாதிரியும் மற்றவர்களைப் பார்த்து பெனும்பாங் பெண்டத்தாங் என்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் நஜிப் சார் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார். தாம் இந்தோனேசியா, சுலாவாசித் தீவில் இருந்து வந்தவர் என்று தம் பூர்வீகத்தை ஒப்புக் கொண்டார். அப்படி நாடு விட்டு நாடு வந்த ஒருவர் தான் நாட்டின் பிரதமராக இருந்தார்.
நல்ல மனிதராக இருந்தவர். ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சைக் கேட்டு இப்போது ரொம்பவுமே வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார். பாவம் அவர். என்ன செய்வது. அவர் நினைத்தது ஒன்று. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டது.
அதே மாதிரி கண்டவர்கள் பதிவிடும் குப்பைகளினால் மலேசியத் தமிழர்கள் பலர் வேதனைப் படுகிறார்கள். குப்பை என்று தூக்கிப் போட்டாலும் குப்பைக் கழிவுகளின் நாற்றம் குறையவில்லை.
சான்றுகள்:
1. Woman Calls Indians “Penumpang” In TikTok Video After “Rasam” Backlash, She Later Apologises - https://thesmartlocal.com/malaysia/woman-calls-indians-penumpang/
2. https://worldofbuzz.com/msian-apologises-for-calling-indians-penumpang-after-receiving-backlash-for-her-rasam-recipe/ - M’sian Apologises For Calling Indians ‘Penumpang’ After Receiving Backlash For Her Rasam Recipe
3. Challenges to the Rights of Malaysians of Indian Descent; Karmveer Singh - https://www.e-ir.info/2013/02/06/challenges-to-the-rights-of-malaysians-of-indian-descent/
4. Malaysia’s Indians face growing racial hostility; Asia Times - https://asiatimes.com/2019/06/malaysias-indians-face-growing-racial-hostility/
பின்னூட்டங்கள்
மாசிலான்: பேரன்புடையீர்! வணக்கம். நலம். நலமே விளைக. வரலாற்று ஆசிரியர் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களே! தமிழ் மலரில் தங்களின் தொடர் கட்டுரைகளைப் படித்து வருபவர்களில் நானும் ஒருவன்.
அந்த வகையில் இன்றைய 26.06.2021 தமிழ் மலரில் வந்தேறிகள் பற்றியும் நம் மிளகுச்சார் சமையல் பற்றியும் ஒரு மலாய் மாது பேசியதையும் படித்தேன். அருமையான விளக்கம். நன்றி ஐயா.
தங்களுக்கே உரிய நடையிலும் உண்மையை நகைச்சுவை வடிவிலும், நமக்கு மட்டுமே தெரிய வேண்டிய செய்திகளையும் அழகாக எழுதி வருவதை அறிந்து மகிழ்கிறேன். நல்லது ஐயா.
இனி நான் சொல்லும் செய்திகள், செய்தித் தாளில் எழுதுவதற்கு அல்ல; எதிர்காலத்தில் நம்மின பாதுகாப்புக்காக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்தாக வேண்டும்.
என்னைவிட தங்களுக்கே இவற்றைப் பற்றிய உண்மை நன்கு தெரியும். வந்தேறிகள் என்பது நாமல்ல என்பது தங்களின் கட்டுரையே சான்று. சொல்கின்றவர்கள் தான் வந்தேறிகள் என்பது தெளிவு.
மலாயா நாட்டை நலப் படுத்தவும், வளப் படுத்தவும் வெள்ளைக்காரர்களால் ஆயிரக் கணக்கான மைல்களை கடந்து தென்னிந்தியாவில் இருந்து ரஜூலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் முதலிய கப்பல்களில் தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள் என்பதே உண்மை.
இதனை எப்படி வந்தேறிகள் என்று சொல்ல முடியும்? இந்த ஒரே செய்தியில் இச்சொல் அடிப்பட்டுப் போய் விடுகிறது அல்லவா?
மாண்புமிகு நம் அமைச்சர் துன் சம்பந்தன் அவர்கள் இந்நாடு மூன்று இனத்துக்கும் உரிய நாடு - வாழும் நாடு என்றுதான் சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டார் என்கின்றனர்.
அப்படி என்றால் அரசு வேலையில் இருந்து மற்ற அனைத்துத் துறைகளிலும் நாம் ஓரங்கட்டப் படுகிறோம் அல்லது புறக்கணிக்கப் படுகிறோம்.
துன் சம்பந்தன் நான் அறிந்த வரை ஒருநாள் மட்டும் இந்த நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து உள்ளார். அவ்வாறானால் ஒரே இனத்துக்கு உரிய நாடல்ல இது; மூவினத்திற்கும் உரிய நாடே!
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துன் சம்பந்தன் அவர்கள் நம் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக ஆக்கியிருக்கலாம். குடியுரிமைக்குத் தீர்வு கண்டிருக்கலாம். தோட்ட மக்களுக்கே தோட்ட நிலங்களை சொத்துடைமை ஆக்கியிருக்கலாம்.
அமைச்சர் பொறுப்பும் ம.இ.கா. தேசியத் தலைவர் பொறுப்பும் வைத்திருந்தும் தோட்டத் துண்டாடலைத் தடுத்திருக்கலாம். ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டதின் உண்மைதான் என்ன?
இனி எவ்வளவு காலத்துக்கு இந்த இனவாத அரசியல்வாதிகளின் இன மத வெறிகளுக்கிடையே வாழப் போகிறோம்? நம் பிள்ளைகள் எதிர்காலம்? பேரப் பிள்ளைகள் எதிர்காலம்?
ஒட்டுமொத்த நம் இனத்தின் எதிர்காலம்? தெரிந்த நாம் எவ்வளவு காலத்துக்கு வாழப் போகிறோம்? எந்தக் கட்சியும் நம்மை பாதுகாக்காது.
எல்லாம் சுயநல புலிகள்.அதுவும் பசுத்தோல் போர்த்திய புலிகள்? பூனைகள் என்றாலும் தகும். எவரையும் நம்புகிற மாதிரி இல்லை. எனவே எனக்கு தெரிந்த ஒரே வழிதான் உண்டு.
இந்த நாட்டில் நமக்குள்ள உரிமைகளுடன் வாழ நம்முடைய பங்கினை விழுக்காட்டினைக் கேட்டுப் பெற்றாக வேண்டும். ஆங்கிலேயன் தானே நம்மை கொண்டு வந்தான். போகும் போது கூடவே நம்மையும் கொண்டு போயிருக்க வேண்டும்.
இங்கு விட்டவன் தோட்டங்களையாவது சொத்துடைமையாக்கி இருக்க வேண்டும். சில நாடுகளில் தமிழர்களுக்கு நடந்தது போல் நமக்கும் வரலாம். ஆக என்ன செய்ய போகிறோம்?
ஆதலால் இந்த நாட்டின் வழக்கறிஞர்கள் மூலமாக நமக்குள்ள உரிமைகளை பிரிட்டனிடம் முறையிட்டாக வேண்டும்; கோரிக்கை வைத்தாக வேண்டும். அவர்களே வந்து தலையிட்டு தீர்த்து வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். இந்தச் செய்தியை முதலில் சிந்தித்துப் பாருங்கள்.
நாடாண்ட தமிழர்களுக்கு நாடில்லை. தமிழகம்கூட வடவர்களின் நாடாகி வருகிறது. நாம் அதைக் கேட்கவில்லை. உழைத்தான். அந்த உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கூட சரியாக வரவில்லை.
ஆனால் உழைத்தான்; உயிர் தியாகங்களும் செய்தான். அவன் உரிமைகளுடன் வாழக்கூட தகுதி இல்லையா? மற்றவை தங்களின் ஆய்வுக்கே விடுகிறேன்.
நன்றி வணக்கம்.
அன்புடன் மாசிலன்.
கொட்டக் கொட்ட குனிகிறவனும் மடையன்.
குனியகுனிய கொட்டுகிறவனும் மடையன் என்பது பழமொழி.
முதலில் நாம் வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேச முயல வேண்டும். பின் அவர்களின் ஆலோசனையில் செயல் படுவோம். காலம் சுருங்கி விட்டது ஐயா? நம் தலைமுறையினரின் எதிர்காலமே முகாமை!
அணையும் விளக்கான நாம் சுடர் விடும் விளக்குக்குத் துணையாவது செய்வோம்! நன்றி ஐயா!
Sathya Raman: வணக்கம் சார். இனியும் இந்த பென்டாத்தாங், பெனும்பாங் என்று சொல்பவர்களைப் பற்றி நாம் கண்டு கொள்ளவே கூடாது. இந்த நாட்டில் நாம் நிறைய ஏமாந்து இருக்கிறோம். அந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்வோம்.
உலகில் நல்லது அறிவு. கெட்டது அறியாமை. நம்மிடம் இருக்கும் அறிவைக் கொண்டு அறியாமையால் நம்மை அவமானம் படுத்தும் அறிவிலிகளைத் துவசம் செய்வோம்.
புத்தி உள்ளவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளலாம். அது இல்லாதவர்கள் பிடிவாதமாக இருப்பார்கள். நாமே புத்தி உள்ளவர்கள் சார்.
Muthukrishnan Ipoh >>>> Sathya Raman: நீங்க சொல்வதிலும் ஓரளவுக்கு உண்மை உள்ளது. ஆனால் ஒன்னும்மா சத்யா. கண்டு கொள்ளாமல் விட்டுப் போனால் அவர்களுக்கு குளிர் விட்டுப் போகும். கண்டிக்கவும் தண்டிக்கவும் குரல் கொடுக்கவும் ஆள் இருக்கிறார்கள் எனும் போது கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.
ஒரு காலத்தில் அண்ணன் தம்பி போல பழகியவர்கள். இப்போது பாரும்மா. முளைச்சு மூனு இலை வரவில்லை. அதற்குள் என்னம்மா பேசுதுங்க. தொடர்ந்து கண்டித்து வர வேண்டும். இது என் கருத்து.
Kala Balasubramaniam: 100%
Nagappan Arumugam: அரண்மனை கோழி இட்ட முட்டை அம்மிக் கல்லை உடைக்குமாம்! புரிந்து கொண்டால் சரி!
Muthukrishnan Ipoh >>>> Nagappan Arumugam: நல்லாவே புரியுது சார்...
Kanagaravi Kala: Ungal munnaal maanavi endra muraiyil en nandrigal. Vaazhga nalamudhan.
Muthukrishnan Ipoh >>>> Kanagaravi Kala: நன்றிம்மா. எந்தப் பள்ளி என்று சொல்லலாமே. நாலைந்து பள்ளிக்கூடங்களில் பல நூறு மாணவர்களுக்குப் படித்துக் கொடுத்து இருக்கிறேன். எந்த ஆண்டு எந்தப் பள்ளி என்று சொல்லும்மா.
M Krisnan Achari: வணக்கம் ஐயா.. உண்மையை உரக்கக் கூறினீர்கள். நன்றி. வாழ்க வளமுடன் !!!
Muthukrishnan Ipoh >>>> M Krisnan Achari: சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியாக வேண்டும் ஐயா...
Sheila Mohan: மிகவும் சிறப்பான கட்டுரை... நம் பாரம்பரிய உணவை தங்களது என்றும் அதை கேட்கப் போனால் நம்மை பெண்டாத்தாங் என்று சொல்வதே இவர்களுக்கு வழக்கமாகி விட்டது.
நம்மைச் சொல்வதற்கு இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. நல்ல பதிவு. நன்றிங்க சார்..
Rama Rani >>>> Sheila Mohan very nice memorie with proff
Muthukrishnan Ipoh >>>> Sheila Mohan: நன்றிம்மா. பொறுமைக்கும் ஓர் அளவுதான். மித மிஞ்சிப் போய் கண்டதைப் பேசியும் பதிவு செய்வதும் மனசிற்கு வேதனையாக உள்ளது. ஏதாவது எதிர்த்துக் கேட்டால் பெண்டத்தாங், பெனும்பாங்... என்னம்மா இது. முடிந்த வரையில் கண்டிக்க வேண்டியது நம் பொறுப்பு. கருத்துகளுக்கு மீண்டும் நன்றி.
Ravi Purushothaman: அவர்கள் tuan... என்ன வேண்டுனானாலும் பேசலாம். செய்யலாம். நாம் வாய் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்... ஏனெனில் Pendidikan Moral-இல் மட்டுமே nilai toleransi போதிக்கப் படுகின்றது!!!
Muthukrishnan Ipoh >>>> Ravi Purushothaman; விட்டுக் கொடுத்துக் கொடுத்துக் கொண்டே போக முடியாது. விட்டுக் கொடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. நாம் தவறாக எதையும் எழுதவில்லை ஐயா. எங்களைச் சீண்ட வேண்டாம் என்றுதான் கேட்கிறோம்.
Parameswari Doraisamy: நம்மை சீண்டிப் பார்த்து கேவலப் படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். தலைவர்களும் வாய் மூடி மௌனம் சாதிக்கிறார்கள். அவர்களின் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தில்...
Muthukrishnan Ipoh >>>> Parameswari Doraisamy: எதற்கும் ஓர் அளவு உண்டு. அதை அவர்கள் உணர வேண்டும்.
Vejayakumaran: Thank U
Muthukrishnan Ipoh >>>> Vejayakumaran: வாழ்த்துகள்
Sarkunavathi Panchanathan: வாழ்த்துகள்
Rsmaniam Subra வாழ்த்துகள்
Selvarajoo Rajoo: எந்தவொரு உருப்படியான வரலாற்று அடையாளங்களும் இல்லாமல் அரசியல் வலிமையை பயன்படுத்தி அடுத்தவர்களின் அடையாளங்களை கொள்ளை அடிப்பது தொழில். என்ன செய்வது. அரசு தண்டிப்பதும் இல்லை கண்டிப்பதும் இல்லை. அந்த ஆணவத்தில்தான்...
Sathya Raman: வணக்கம் சார். "எறிந்த அம்பு திரும்பாது. கறந்த பால் காம்பு ஏறாது. அதே போல்தான் ஒருவர் வாயில் இருந்து வந்து விழும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளை மறந்து, மன்னித்து விடக்கூடாது.
நம்மவர்களை இழித்து, பழித்து இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு தன்நிலையும் தங்களது வரலாறையும் அறியாமல், புரியாமல் மற்றவர்களைப் புண்படுத்தி பார்ப்பார்களோ இந்தப் பண்பற்றவர்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்லா சமூக வலைத் தளங்களிலும் அந்த மலாய் பெண் ரசத்தைப் பற்றிய காணொளியில் வாந்தி எடுத்த விதத்தையும், வித்தையைப் பலரும் பார்த்தது தான்.
அதற்கு கூலியாக நம்ம பிள்ளைகளும் செம்மையாகத் தக்க பதிலடி கொடுத்தே வைத்தார்கள். திருடர்களிடம்தான் தெனாவெட்டும் அதிகம்.
வெட்டுக் கத்தியை விட கத்தி பேசுபவர்கள் ஆபத்தானவர்கள். அப்படிப் பட்டவர்களுக்கு அதற்கு தகுந்தாற் போல் அதே பாணியில் பதிலடி கொடுக்க இன்று விசயம் தெரிந்த பலரும் புறப்பட்டு விட்டார்கள்.
இன்று எங்கு, எவருக்கு சின்னதாய் ஒரு சீண்டல் நடந்தாலும் அடுத்த கணமே சம்பந்தப் பட்டவர்களைச் சதிராடி, சல்லடையாய் தகர்தெடுக்க இதே இந்த நவீன தொழில் நுட்ப கருவிகளும் கனகச் சிதமாய் காரியம் ஆற்ற உதவுகிறது.
உண்மையை விட அதற்கான விளக்கங்கள் தேவையானது. தங்களின் இந்த நீண்டப் பதிவும் அதைத் தக்க வைத்து விட்டது. நன்றிங்க சார்.
இந்த நாட்டில் உண்மையான வந்தேறிகளுக்கு இப்போது எல்லாம் தங்களின் நிழலைக் கண்டே பயம். அதனால்தான் இப்படி அடிக்கடி பீதியில் பினாத்துகிறார்கள்.
அதனால்தான் உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பென்டாத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டுகிறார்கள்.
இத்தகைய சொற்களை நாமும் கேட்டுக் கேட்டு புறந்தள்ளி விட்டு இருக்கிறோம். இந்த நாட்டில் நாம் யார் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும் ஆற்றாமையால், அகம்பாவத்தால் ஆடிப் பார்க்கிறார்கள்.
"குருனை அரிசியும் கழுத்தறுத்தான் கருவாடும்" தலைப்பு எப்படி சார் இருக்கிறது? ஒரு நாவலுக்கு ஏற்ற தலைப்பு தானே?
தோட்டங்களில் நாம் சொந்தமாக காய்கறிகளைப் பயிரிட்டு சமைத்து உண்டு வந்த வேளையில் இன்று சொகுசு பேசும் சோம்பேறிகளின் அன்றைய உணவே அதுதானே?
இந்த வேதாந்தத்தை மறந்து விட்டவர்கள் இன்று இந்த நாடே தங்களுடையது என்று சித்தார்த்தம் பேசுகிறார்கள். கங்கையில் குப்பை எரிந்தால் கங்கையின் மவுசு எப்போதுமே குறைந்து விடாது. அப்படித்தான் நாமும் இந்த நாட்டில்.
"தர்மத்தை பாவம் ஒரு போதும் வெல்லாது" என்ற நம்பிக்கையோடு வரும் காலத்தை கடந்து செல்வோம் சார். இவ்வேளையில் எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு சில வரிகள்
"சின்ன நூல் கண்டுகளா, நம்மை சிறைப்படுத்துவது"? தன்மானப் பாறைகளான நம்மை இந்த நூல் கண்டுகளால் முடிச்சுக்கூட போட முடியாது.
Kody Sivasubramaniam >>>> Sathya Raman தர்மத்தை பாவம் ஒரு போதும் வெல்லாது. 👌
Muthukrishnan Ipoh >>>> Sathya Raman: நான் நினைப்பதை நினைத்ததை அப்படியே கொட்டி இருக்கிறீர்கள். கங்கையில் குப்பை எரிந்தால் கங்கையின் மவுசு எப்போதுமே குறைந்து விடாது. தர்மத்தை பாவம் ஒரு போதும் வெல்லாது. தங்களின் இந்தக் கருத்துகள் வலைத்தளத்தில் பதிவாகின்றன. நன்றிம்மா.
Alex Mark II: We the Tamil people's have our own history in our country Malaysia.
Muthukrishnan Ipoh >>>> Alex Mark II: தங்களின் தமிழ் உணர்வுகளுக்கு சிரம் தாழ்த்துகிறோம்.
Alex Mark II: Muthukrishnan Ipoh mikka nanri sir, vaalga valamudan.
Banu Linda >>>> மலேசிய தமிழனின் வாழ்வும் சாவும் இந்த மண்ணில்தான்.
Sathya Raman >>>> Banu Linda நாம் வாழ மட்டுமே பிறந்தோம் பானு. மற்றவர்களின் மடத் தனமான, மட்டகரமான பேச்சைக் கேட்டுக் கேட்டு சாக அல்ல...
Kody Sivasubramaniam: கிலிங் என்ற வார்த்தையில் நம்மை கேலிக்கு உள்ளாக்கும் போதே நாம் சுதாரித்து இருக்க வேண்டும்? முன்பு ஒரு தலைவர் நம்மை ஏன் pendatang என்று ஊடகம் வழியாக உரைத்தார் என்று விளங்க வில்லை.
இப்பொழுது இருக்கும் நம் இந்தியத் தலைவர்களும் இம் மாதிரியான கானொளிகளுக்கு என்ன தீர்வு காணபடும் என்றும் புரிய வில்லை?
காடுகளை அழித்து ரப்பர் பாலை காட்டி... இப்படி ஒரு மலேசியா எனும் நாடு இருக்கிறது என்று தோற்றுவித்து காட்டிய ஒரு மாபெரும் இனத்தை சமுகத்தை தரைக் குறைவாக பேசுவதையும்... சட்டமும் ஒழுங்கும்.... வீண்... Cash is King... காலம் நேரமும் வெறுமனே...
Murugan Raiapan: நாம எப்போதும் மலைதான் சார்... சாக்கடைகளும் அரைவேக்காடு அல்ல முழுவேக்காடுகளும் இப்படியே தான் பேசிக் கொண்டே காலத்தை ஓட்டுதுங்க. (கிடக்குதுங்க குப்பைகள்) தங்களுடைய வரலாற்று வேட்டை மென்மேலும் தோடர வாழ்த்துக்கள் ஐயா 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக