30 ஜூலை 2021

மலேசிய ஒப்பந்த மருத்துவர்களின் மனவேதனைகள்

தமிழ் மலர் - 29.07.2021

டாக்டர் கலைச்செல்வி. மணிப்பால் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். சிறந்த மருத்துவ மாணவி. வெள்ளி விருது பெற்றவர். மலேசிய அரசாங்கத்தின் மூன்றாண்டுக் காலக் கட்டாயச் சேவையை முடித்தவர். தற்சமயம் பேராக் மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஒப்பந்த மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.


சில வேளைகளில் 48 மணி நேரம் தூங்கமால், ஐந்து கிலோ கவச அணிகளுடன் கோவிட் நோயாளிகளுடன் இடைவிடா போராட்டங்கள். இன்றும் தொடர்கின்றன.

தலையில் இருந்து உடல் முழுவதும் மூடிய நிலை. வியர்வையால் முகம் முழுக்கவும் ஈரமாகிக் கசிந்த நிலை. சுவாசிக்கும் காற்றால் முகக் கண்ணாடி மங்கலாகிய நிலை. நோயாளியைச் சரியாகப் பார்க்க முடியாத நிலை. களைப்பு, சோர்வு, அசதி, உடல் தளர்வு, மன உளைச்சல்.

இதில் கடந்த ஈராண்டுகளாக கோவிட் தாக்கத்தினால் நிலைமை மிக மோசம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பரபரப்பு. ஓடினார் ஓடினார். அர்ப்பணிப்பின் எல்லைக்கே ஓடினார்.

கடைசியில் ஓடி ஆடி ஓய்ந்து, ஒடிந்து போய் நிற்கிறார். உடலாலும் உள்ளத்தாலும் நொறுங்கிப் போய் நிற்கிறார். இத்தனைக்கும் அவர் ஓர் ஒப்பந்தக் கால மருத்துவர்.

சேவை செய்யுங்கள். தியாகம் செய்யுங்கள். மருத்துவப் புனிதத்தைக் காப்பாற்றுங்கள் என்று அரசியல்வாதிகள் ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள். ஆனால் மருத்துவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை மருந்துக்கும் நினைத்துப் பார்ப்பது இல்லை. மறந்து விடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் சிலருக்கு அவர்களின் சுயநல மகிழ்ச்சி மட்டுமே மிக மிக முக்கியம் என நினைக்கிறார்கள் போலும். என்ன நினைக்கிறார்கள்... உண்மையே அதுதான். தங்களின் குடும்ப மகிழ்ச்சி. தங்களின் சொந்த பந்த மகிழ்ச்சி. தங்களின் ஐந்தாம்படை ஜால்ராக்கள் மகிழ்ச்சி.

மக்களாவது மண்ணாங்கட்டியாவது. எக்கேடு கெட்டால் என்ன. வெளிநாட்டு அரசியல்வாதிகளைத் தான் சொல்கிறேன். நம்ப நாட்டு அரசியல்வாதிகள் புடம் போட்ட தங்கங்கள். குறை சொல்ல மனசு வருமா? சொன்னால் சாமி கண்ணைக் குத்திடும். அப்புறம் இன்னும் ஒரு முக்கியமான மகிழ்ச்சியான செய்தி.


நாலைந்து பெண்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு டுரியான் பழம் சாப்பிடுவது. நீச்சல் குளத்தில் தொப்பையைக் காட்டுவது. மகிழ்ச்சியான செய்தி தானே.

அப்புறம் ஒலிம்பிக் பார்க்க ஜப்பானுக்குப் போவது. பிள்ளைகளைப் படிக்க வைக்க ஐஸ்லாந்து போவது. செம்மறியாட்டுக் கூட்டத்தில் கண்ணாமூச்சி விளையாட மியூஸிலாந்து போவது; அதைப் படம் பிடித்து பேஸ்புக்கில் போடுவது. அப்புறம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொள்வது. தேவையா?

இவர்களையும் தாண்டிய நிலையில் எப்படி நாலு பெண்களைக் கல்யாணம் பண்ணுவது; எப்படி அவர்களுக்கு லோலாக்கு மாட்டுவது; எப்படி 25 பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள்வது; எப்படி ஆராரோ ஆராரோ நீ யாரோ நான் யாரோ பாடுவது. உலக மகா ஆராய்ச்சிகள்.

நல்லவேளை. நோபல் பரிசை உருவாக்கிய அல்பிரட் நோபல் இப்போது இல்லை. இருந்து இருந்தால் தூக்குப் போடாமல் செத்துப் போய் இருப்பார். வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறேன்.


டாக்டர் கலைச்செல்வியைப் போல ஏறக்குறைய 30 ஆயிரம் மருத்துவர்கள் ஒப்பந்தக் கால மருத்துவர்களாக அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் தமிழர்; மலாய்க்காரர்; சீனர்; சீக்கியர்; பாக்கிஸ்தானியர் எனும் பேதம் எதுவும் இல்லை. எல்லா இனங்களைச் சார்ந்த ஒப்பந்த மருத்துவர்களுமே பாதிப்பு.

நிரந்தர மருத்துவர்களைப் போல இவர்களுக்கு படிச்செலவு குறைவு. ஊதிய உயர்வு இல்லை. காப்புறுதி இல்லை. கடனுதவி இல்லை. மேல்படிப்பிற்கான நிதியுதவி இல்லை. பெண் மருத்துவர்களுக்கு மகப்பேறு விடுமுறை இல்லை. பதவி உயர்வு இல்லை. இப்படி எக்கச்சக்கமான இல்லைகள்.

சொந்தப் பணத்தில் கார் வாங்க வேண்டும். சொந்தப் பணத்தில் வீடு வாங்க வேண்டும். இவர்களின் நிலைமை பரிதாப நிலையைத் தாண்டி எங்கேயோ போய் கதவைத் தட்டுகிறது.

இந்த நேரத்தில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி நினைவிற்கு வருகிறார். மன்னிக்கவும். ரோசாப்பூ ரோசம்மா. வயிற்றெரிச்சலில் வார்த்தைகளும் விவரம் தெரியாமல் விழுகின்றன. ஒரு தடவை சிகை அலங்காரத்திற்கு ஆயிரம் வெள்ளி கொடுத்தாராம். அடடடா... மக்களின் வியர்வை வரிப் பணத்தில் என்னே பெருமை. 


மலேசியாவில் ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. மலேசியாவில் மட்டும் அல்ல. உலக அளவில் பேசப்படும் பிரச்சினையாகவும் மாறி வருகிறது.

’டைம்ஸ்’ தாளிகை; ‘வார்ல் ஸ்டிரீட் ஜார்னல்’ நாளிதழ்; ஆகியவை செய்தி வெளியிடும் அளவிற்குக் கவனத்தை ஈர்த்து உள்ளது.

அது என்ன ஒப்பந்த மருத்துவர்கள்; அவர்களுக்கு என்னதான் பிரச்சினை என பொதுமக்கள் பலரும் கேட்கத் தொடங்கி விட்டார்கள். மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு வேண்டும் என்றால் பழகிப் போன தகவலாக இருக்கலாம்.

ஆனால் சாமானிய மக்களுக்குக் சற்றே குழப்பமான தகவல். உண்மையிலேயே என்னதான் நடக்கிறது என்று ஆழமாய்த் தெரியாத தகவலாக இருக்கலாம். 


காலம் காலமாக வீடு கட்டுவதிலும், தோட்டம் போடுவதிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனும் சொல் வாசகம் வந்து போவதைப் பலரும் பார்த்து இருக்கலாம். கேட்டு இருக்கலாம்.

எண்ணெய்ப் பனை; ரப்பர் உற்பத்தி; கட்டுமானம்; போன்ற தொழில் துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மற்ற மற்ற தொழில் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று ஒரு பகுதியினர் உள்ளார்கள்.

இருப்பினும் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கப்படும் மருத்துவர்களில்கூட ஒப்பந்தக் கால மருத்துவர்கள் இருக்கிறார்களா எனும் கேள்வி வரலாம். சரி. என்ன ஏது என்று பார்ப்போம்.

அதற்கு முன்னர் ஒரே வார்த்தையில் சொல்கிறேன். அண்மைய பத்தாண்டு காலத்தில் புதிதாகப் படித்து வந்த மலேசிய மருத்துவர்கள் அதிகமாகி விட்டனர். 

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக் கணக்கில் வருகிறார்கள். அவர்களை அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களாக நிரந்தரமாக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதுதான் முதல் சிக்கல்.

முந்தைய காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை. அதனால் படித்து வந்தவர்களை எல்லாம் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அண்மைய காலத்தில் நிறைய மருத்துவர்கள் படித்து விட்டு ஆயிரக் கணக்கில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

சமாளிப்பதற்கு அரசாங்கம் தடுமாறுகிறது. ஏற்றுக் கொள்வோம். ஆனால் வேறு கோணங்களிலும் பார்க்க வேண்டி உள்ளது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்தது. 2016-ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிதாகப் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் ஒப்பந்த மருத்துவர்களாகப் பணியில் அமர்த்தப் படுவார்கள் எனும் நடவடிக்கை. 


மருத்துவ மாணவர்கள் மூன்றாண்டு கட்டாயச் சேவைக்குப் பின்னர், தற்காலிகப் பணியாளர் தகுதிக்குள் சேர்க்கப் படுகிறார்கள். தற்காலிகப் பணி என்பதுதான் ஒப்பந்தப் பணி. ஒப்பந்த மருத்துவர்கள் பணி.

ஒப்பந்த மருத்துவர்கள் என்பவர்களை, அரசாங்கம் எந்த நேரத்திலும் பதவியில் இருந்து நீக்கலாம். தேவைப் பட்டால் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். முன்பு ஈராண்டு கட்டாயச் சேவை. இப்போது மூன்றாண்டு கட்டாயச் சேவை.

ஒப்பந்த மருத்துவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பற்றி நியாயமான வகையில் நாணயமாகக் கோரிக்கை வைத்தார்கள். அரசாங்கம் பிடித்தப் பிடியாக நின்றது.

நாளைக்குப் பார்க்கலாம். நாளைய தினம் கழித்துப் பார்க்கலாம் என்று நாட்கள்தான் தேய்ந்து போயின. ஒப்பந்த மருத்துவர்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்.

கடைசியில் 2021 ஜுலை 26-ஆம் தேதி ’ஹர்தால்’ எனும் பெயரில் மலேசிய ஒப்பந்த மருத்துவர்கள், நேரடியாகவே அமைதிக் கண்டனத்தில் இறங்கி விட்டார்கள். கண்டன வேலை நிறுத்தம்.

அவர்களின் கொத்துக்குறி #HartalDoktorKontrak. நாடு முழுமைக்கும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் சேவை செய்து வரும் ஒப்பந்த மருத்துவர்கள், ஒரு மணிநேரம் கண்டன வேலை நிறுத்தம் செய்தார்கள்.


'ஹர்தால்' என்பது ஒரு குஜராத்தி சொல். பொதுமக்களின் எதிர்ப்பு அல்லது வேலைநிறுத்தம் என்பதற்கான சொல். இதை வழிநடத்திச் செல்லும் குழுவினர் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் 'ஒப்பந்த' மருத்துவர்களின் நிலையை 'நிரந்தரம்' என்று மாற்றவும் (Change 'contract' doctors status to 'permanent') என்று பதிவு செய்து உள்ளார்கள்.

சில பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சினையின் உச்சம். அதுவே மலேசியப் பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்களின் மன உளைச்சலின் உச்சம்.

தங்களின் மூத்த முன்னோடிகளை விட சரிசமம் இல்லாத வேலைவாய்ப்பு விதிகள். இவைதான் அவர்களை அந்த முடிவிற்குக் கொண்டு வந்தது.

உலகில் பல ஆயிரம் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் எவர் வேண்டும் என்றாலும் சேர்ந்து படிக்கலாம். பட்டம் பெறலாம். ஆனாலும் மலேசியாவைப் பொருத்த வரையில் ஒரு தீர்க்கமான விதிமுறையைப் பின்பற்றுகிறார்கள். 


மலேசிய அரசாங்கம் சில மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதி அனுமதி வழங்கி உள்ளது. அந்தத் ’தகுதி அனுமதி’ கொண்ட மருத்துவக் கல்லூரிகளில் பயின்றவர்களை மட்டுமே மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.
அப்படிப்பட்டவர்கள் மட்டுமே மலேசியாவில் மருத்துவர்களாகச் சேவை செய்ய முடியும். அதுவும் ஒரு விதிமுறை.

மருத்துவக் கல்லூரிகளில் இருந்து படித்துப் பட்டம் பெற்று வரும் மருத்துவ மாணவர்கள், மலேசியாவில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனையில் மூன்று ஆண்டு காலத்திற்கு ஹவுஸ்மேன்ஷிப் (housemanship) பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப் படுகிறார்கள்.

மருத்துவர் ஒப்பந்த முறை என்பது தொடக்கத்தில் புதிதாக வரும் மருத்துவப் பட்டதாரிகளைச் சமாளிப்பதற்கான ஓர் இடைவெளியாக இருந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான புதிய மருத்துவர்கள்.

அதுவும் ஆயிரக் கணக்கில் வரத் தொடங்கி விட்டார்கள். அவர்களை உள்வாங்கி அரசாங்கச் சேவையில் இணைப்பதற்கு அரசாங்கம் தடுமாறுகிறது. இதுவும் ஒரு காரணம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


தவிர ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஒரு நீண்டகாலக் கொள்கை என்று எதுவும் முறையாகத் திட்டமிடப் படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி வந்தன. ஆளாளுக்கு ஒரு திட்டம்.

அதனால் ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பதவிகளை வழங்காமல், அதற்குப் பதிலாக ஒப்பந்தங்களைத்தான் நீட்டித்து வந்தார்கள்.

2016-ஆம் ஆண்டிற்குப் பின்னர் புதிய முறை அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து 23,077 ஒப்பந்த மருத்துவர்கள் அரசு சேவைகளில் ஈர்க்கப் பட்டனர். அவர்களில் 3.47% அல்லது 789 நபர்களுக்கு மட்டுமே நிரந்தரப் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

அரசாங்கத்திற்கு என்ன தடுமாற்றம் என்றும் தெரியவில்லை. என்றைக்கு நாடு சுதந்திரம் அடைந்ததோ அன்றைக்கே பேராண்மைச் சுரண்டல் வேலைகள் தொடங்கி விட்டன.

மண்ணின் வேந்தர்கள்; மலைக்காட்டுப் புதல்வர்கள்; மார்கண்டேயப் புத்திரர்கள் என்று சொல்லி தடுக்கி விழுகின்ற இடங்களில் எல்லாம் சலுகைகள். ஊட்டி ஊட்டி வளர்த்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

நாட்டின் செல்வங்கள் மில்லியன், பில்லியன் கணக்கில் மிரட்டல் சுரண்டல்களில் போய் விட்டன. இன்னும் ஓயவில்லை. தடி எடுத்தவர் எல்லாம் கோடீஸ்வரர்கள்.

அந்தச் சுரண்டல்களைத் தடுத்து நிறுத்தி 1 % மீட்டு எடுத்தாலே போதும். அந்த 30 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் முழுக்கவும் சம்பளம் கொடுக்கலாம். விடுங்கள்.

ஓநாய்கள் அழுவதை நிறுத்தப் போவதும் இல்லை. கிழச் சிங்கங்கள் நாடாளுமன்றத்தைச் சுற்றிச் சுற்றி வருவது நிற்கப் போவதும் இல்லை. நாட்டு மக்கள் வாங்கி வந்த வரம். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கும் மருத்துவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்:

நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கும் மருத்துவர்களை விட ஒப்பந்த மருத்துவர்கள் குறைவான சம்பளத்தைப் பெறுகின்றனர்.

ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிபுணத்துவம் பெறும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொதுப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் படிப்பிற்கு நிரந்தரமான அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன.

தவிர விடுப்பு எடுத்து மேல்படிப்பு படிக்க ஒப்பந்த மருத்துவர்களுக்கு உரிமை இல்லை. அதனால் ஒப்பந்த மருத்துவர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்கள்.

மேல்படிப்பு படிக்க வேண்டும் என்றால் சொந்தப் பணத்தைப் போட வேண்டும். இதனால் பலர் தனியார் துறையைத் தேடிப் போகின்றனர். அல்லது வெளிநாட்டிற்குச் செல்கின்றனர்.

அடுத்து ஐந்தாண்டு பயிற்சி சேவைக்குப் பிறகு அவர்கள் வேலை இழக்கும் வாய்ப்பை எதிர் கொள்கின்றனர்.

பொது மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் 31-ஆம் தேதி வரை மூன்று முக்கிய பிரிவுகளில் 35,216 மருத்துவ அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.

யூ.டி. 41 பிரிவைச் சேர்ந்த 23,077 மருத்துவ அதிகாரிகள்.

யூ.ஜி. 41 பிரிவைச் சேர்ந்த 5,000 பல் மருத்துவ அதிகாரிகள்.

யூ.எப். 41 பிரிவைச் சேர்ந்த 7,139 மருந்தக அதிகாரிகள்.

நாடு முழுவதும் உள்ள 23,000 ஒப்பந்த மருத்துவர்கள் ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் மறியலில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கோவிட்-19 நோய்த் தொற்றின் அதிகரிப்பால், பொது மருத்துவமனைகளில், நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

இந்த நிலைமை, ஏற்கனவே அதிகப் பணிச் சுமையை எதிர்கொண்ட மருத்துவ ஊழியர்களுக்குக் கடும் அழுத்தம் அளித்து வருவதால், அவர்களில் சிலர் தங்கள் பணியில் இருந்து விலக முடிவு செய்து உள்ளனர்.

அவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி, குறைந்தது 15 மருத்துவர்களாவது கடந்த இரண்டு வாரங்களில் தங்கள் சேவையை நிறுத்தி விட்டனர்.

கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்குப் பின்னால், விரக்தி மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகக் காரணம் கூறப் படுகிறது.

அரசாங்கச் செலவினக் கட்டுப்பாடுகள் காரணமாக நிரந்தரப் பதவிகளில் பணி அமர்த்தப்படவில்லை என்றும் சொல்லப் படுகிறது. ஆனாலும் மக்கள் தொகை கூடுவதால் மருத்துவர்கள் எப்போதும் தேவைப் படுகிறார்கள்.

2021 ஜூலை 12-ம் தேதி, தேசியக் கூட்டணி அரசாங்கம் பிரச்சினையைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. ஆனால் இதுவரை எந்தத் திட்டமும் இல்லை. இருக்கிற நாற்காலியையே தற்காக்க நேரம் இல்லை. இதில் இன்னோர் இடைஞ்சல்.

முன்பு காலத்தில் ஒரு தெருவில் ஓர் இந்தியர் மருத்துவர், ஒரு சீனர் மருத்துவர், ஒரு மலாய்க்காரர் மருத்துவர் கிளினிக் வைத்து இருந்தால் முதல் தேடல் இந்தியர் மருத்துவருக்கு என்று கேள்விப்பட்டது உண்டு. அந்த அளவிற்கு நம்பிக்கை இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

இனவாதம்... மதவாதம்... எனும் பழைய வாதங்களில் இப்போது கொரோனா வாதம். இதில் இப்போது புதிதாக ஒப்பந்த மருத்துவர்களின் பிடிவாதம்.

அந்த வாதங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைய கட்டத்தில் பரிதவித்துக் கொண்டு இருக்கும் குத்தகை மருத்துவர்களை அரசு ஊழியர்களாக நிரந்தரமாக்குவதே சிறப்பு.

அதுவே இந்தக் கட்டத்தில் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நல்ல எண்ணத்தை உருவாக்கும்.

மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை அல்ல. புண்ணியம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.07.2021








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக