31 ஜூலை 2021

இந்தோசீனா மகாராணியார்கள் ராஜலெட்சுமி ஜெயாதேவி

தமிழ் மலர் - 31.07.2021

பூனான் அரசு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒட்டு மொத்த இந்தோசீனாவையும் ஆட்சி செய்த பழம்பெரும் பண்டைய அரசு. கம்போடியா; வியட்நாம்; லாவோஸ்; தாய்லாந்து; பர்மா; வட மலாயா; ஆகிய ஆறு நிலப் பரப்புகளையும் சம காலத்தில் கட்டிப் போட்டு ஆட்சி செய்த பெரிய ஓர் அரசு.

எப்பேர்ப்பட்ட அரசாக இருக்க வேண்டும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பூனான் அரசு ஒரு பல்லவத் தமிழர் அரசு. இந்து மதம் சார்ந்த அரசு. நினைவில் கொள்வோம். பூனான் அரசிற்கு மதிப்பு கொடுப்போம். மரியாதை செய்வோம்.

அந்த அரசை மாமன்னர்கள் மட்டும் ஆட்சி செய்யவில்லை. சில பல மகாராணியார்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

மகாராணியார் ஸ்ரீ மீரா,

மகாராணியார் சோமா,

மகாராணியார் ராஜலெட்சுமி,

மகாராணியார் ஜெயாதேவி,

மகாராணியார் சிசுவதி

எனும் அழகுப் பெயர்களில் அற்புதமான பெண்மணிகள். ஆச்சரியமாக இருக்கிறது.

இவர்களில் முதலாவதாக வருபவர் மகாராணியார் சோமா (Queen Soma). கெமர் மொழியில் நியாங் நியாக் (Neang Neak) என்று அழைக்கிறார்கள். இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 68 - 100. அதாவது 1950 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோசீனாவை ஆட்சி செய்து இருக்கிறார். கணவரின் பெயர் கவுந்தியா (Kaundinya I).

(Queen Soma was the ruler of the Kingdom of Funan and the first monarch of Cambodia.)

இந்தோனேசியாவில் தான் மகாராணியார்கள் ஆட்சி செய்தார்கள் என்றால் இந்தோசீனாவிலும் பெண்களின் ஆளுமைகள் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் உச்சம் பார்த்து இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் பெருமை இல்லை. ஆண்களுக்குப் பெருமையிலும் பெருமை. பெண்களுக்குப் பெருமை என்றால் அது ஆண்களுக்கும் பெருமை தானே.

பூவோடு சேர்ந்து நார் மணக்கிறது என்று சொல்ல வேண்டாம். இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு ஒன்றாக நன்றாக மணக்கின்றன.

பூனான் அரசு, இந்தோசீனா மண்ணில் முதல் அரசு. இந்தோசீனா ஆளுமைகளில் முதன்மை அரசு. இந்தோசீனா கலாசாரங்களில் மூத்த அரசு. இந்தோசீனா நாடுகளில் முதிர்ந்த அரசு. அதுதான் புவி போற்றும் பூனான் அரசு. அதுவே இந்தோசீனாவில் பல்லவத் தமிழர்களின் தலையாய அரசு.

ஆனால் என்ன. பழைய அதே காம்போதி ராகம் தான். காலத்தின் கோலத்தினால் அந்தப் பேரரசு காணாமல் போய் விட்டது. கன்னா பின்னாவென்று கரைபுரண்டு ஓடிய காலப் பிரளயத்தில் கரைந்து உடைந்து காணாமல் போய் விட்டது.

அரிச்சுவடி அடையாளங்கள் ஆங்காங்கே சின்னதாய்த் தெரிகின்றன. இருந்தாலும் பரவாயில்லை. முதல் மரியாதை செய்வோம். ஏன் என்றால் இந்த அரசைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர். பெயர் கவுந்தியா (Kaundinya). இவருக்கு உதவியாக இருந்தவர் அவரின் மனைவியார் சோமா மகாராணியார்.

பூனான் பெயரைப் பார்த்தால் சீனப் பெயர் மாதிரி இருக்கிறது. அப்புறம் எப்படி அதைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர் என்று மலைக்க வேண்டாம். உண்மை அதுதான். பூனான் பேரரசைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர் தான். தொடர்ந்து படியுங்கள்.

பூனான் பேரரசு 2100 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் தோன்றிய ஒரு குட்டி அரசு. அப்படியே பல்கிப் பெருகி ஒரு பேரரசு ஆனது. இந்த அரசு தான் இந்தோசீனாவில் உருவான முதல் அரசு.

இந்த அரசு தோன்றுவதற்கு முன்பு மலாயா கிளாந்தான் மாநிலத்தில் பான் பான் (Pan Pan) எனும் ஓர் அரசு இருந்தது. இதுவும் ஒரு பல்லவர் அரசு தான். அந்தக் காலத்தில் வட மலாயா பகுதியில் இருந்த கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த அரசு. ஒரு சின்ன இடைச் செருகல்.

தென்கிழக்காசிய நாடுகளில் புத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக இந்து மதம் சார்ந்த இந்திய அரசுகளே ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்து உள்ளன. காலப் போக்கில் மற்ற மதங்களின் செல்வாக்கினால் அந்த மதம் அப்படியே சரிந்து போனது.

பூனான் அரசைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் பான் பான் அரசைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் பான் பான் அரசில் இருந்து போன கவுந்தியா என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்தார். இவருக்கு கவுந்தி முனிவர் எனும் மற்றொரு பெயரும் உண்டு. சரி.

முன்பு காலத்தில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

Pan Pan is a lost small Hindu Kingdom believed to have existed around the 3rd to 7th Century CE believed to have been located on the east coast of the Malay peninsula somewhere in Kelantan or Terengganu.

(சான்று: Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.)

ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அதுவே மலாயா தீபகற்பத்தில் ஒரு பல்லவர் அரசாங்கம் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம் என்றுகூட சொல்லலாம். நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. பொய் சொல்லவும் தெரியாது.

ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன பல்லவர்களின் சுவடுகளை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

இந்தப் பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் பல்லவ அரசு உருவாகி விட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கா நகரம் உருவானது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

பூனான் என்பதைச் சீன மொழியில் பூனோங் (Bunong) என்கிறார்கள். கெமர் மொழியில் நோகோர் புனோம் (Nokor Phnom). தாய்லாந்து மொழியில் பூனான் (Funan). வியட்நாமிய மொழியில் பூ நாம் (Phu Nam). மலை இராச்சியம் என்று பொருள்.

இருப்பினும் இந்திய மயமாக்கப்பட்ட அந்தப் பண்டைய பேரரசிற்கு புவியியலாளர்கள் வழங்கிய பெயர் பூனான். இதன் தலைநகரம் வியாதாபுரம் (Vyadhapura). ஆட்சிக் காலம் கி.பி. 50/68 – கி.பி. 550/627).

பயன்பாட்டு மொழிகள்: பழைய கெமர் மொழி; சமஸ்கிருதம்.

பயன்பாட்டு மதங்கள்: இந்து மதம்; பௌத்த மதம்; ஆன்ம வாதம் (Animism).

இதற்குப் பின்னர் வந்த அரசு: சென்லா அரசு (Chenla).

பூனான் பேரரசு, கி.மு. 100 ஆண்டுகளில், இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் (Mekong Delta); சீனா; இந்தோனேசியா; இந்தியா போன்ற நாடுகளுடன் கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டு இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தப் பேரரசு இந்து மதத்தைத் தழுவி ஆட்சி செய்து வந்தது. இந்தப் பேரரசின் மன்னர்கள் சிவன், திருமால் வழிபாட்டை ஆதரித்தனர். சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்து உச்சம் பார்த்தன. பௌத்தம் இரண்டாம் நிலையில் இருந்தது.

4-ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் மலர்ந்தது என்று சீன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 586-ஆம் ஆண்டில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டது. இரத்னபானு; இரத்னசிம்மா எனும் இரு சகோதரப் புத்த பிக்குகள் அதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

சீன அரசவையில் நினைவுச் சின்னம் அமைக்க அப்போதைய கம்போடிய அரசர் ஜெயவர்மன் விருப்பப் பட்டார். அதற்காக நாகசேனா எனும் இந்தியப் புத்த பிக்குவைச் சீனாவுக்கு அனுப்பி வைத்தார். ஆக அந்த வகையில் 450-ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் பூனானில் பௌத்தம் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

பூனான் பேரரசில் இந்து மதம் தலையாய மதமாக இருந்து இருந்தாலும், பௌத்த மதம் இரண்டாம் நிலை மதமாகவே இருந்து உள்ளது. கம்போடியா லாவோஸ் நாடுகளில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள் உறுதி படுத்துகின்றன.

அது மட்டும் அல்ல. பூனான் பேரரசு மன்னர்கள் சீனப் பேரரசருக்குப் பவளத்தில் வரையப்பட்ட சிவன் படங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.

கி.பி. 590-ஆம் ஆண்டில் கம்போடியாவைப் பவவர்மன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். தன் தம்பி சித்திரசேனன் என்பவரின் உதவியால் பூனான் அரசர் யுத்ரவர்மனைத் தோற்கடித்தார். இன்னும் ஒரு தகவல்.

கம்போடியாவை ஆட்சி செய்த பவவர்மன்; சித்திரசேனன் ஆகியோரின் கல்வெட்டுக்களும்; கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்துப் பல்லவ மன்னர்களின் கல்வெட்டுக்களும் பலவகைகளில் ஒத்துப் போகின்றன.

பவவர்மன் ஒரு சிவபக்தர். அதனால் கம்போடியா நாட்டில் நான்கு சிவ ஆலயங்களைக் கட்டி இருக்கிறார். அது மட்டும் இல்லை. கம்போடியாவில் பல கோயில்களில் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து இருக்கிறார். இந்து மதப் பாடல்களைப் பாடும் படி கட்டளை போட்டு இருக்கிறார்.

கம்போடியாவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பவவர்மனுக்குப் பின் வந்த அவருடைய தம்பி மகேந்திர வர்மனும் ஒரு சிவ பக்தர். சரி. பூனான் வரலாற்றுக்கு வருவோம்.

1942-ஆம் ஆண்டு தென் வியட்நாம், மீகோங் வடிநிலத்தில் ஒக்கியோ (Oc Eo) எனும் தொல்பொருள் தளம் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட காலத்தில் இந்த ஒக்கியோ நகரம் ஒரு பரபரப்பான துறைமுகமாக இருந்து இருக்கலாம்.

பூனான் பேரரசில் தென்னிந்திய பல்லவ வம்சாவழியினரின் தாக்கங்கள் அதிகமாகவே இருந்து உள்ளன. வியட்நாமில் கிடைக்கப் பெற்ற பல்லவ கிரந்த கல்வெட்டுகள் மூலமாக அந்தப் பல்லவத் தாக்கங்கள் உறுதி செய்யப் படுகின்றன.

பூனான் பேரரசு என்பது பண்டைய இந்திய நூல்களில் குறிப்பிடப்படும் சுவர்ணபூமியாகக் கூட இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதற்கும் காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்; புனோம் பென் (Phnom Penh) அரச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வோங் சோதேரா (Dr Vong Sotheara) என்பவர், ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். கி.பி 633-ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு.

அந்தக் கல்வெட்டில் “கெமர் பேரரசின் சுவர்ணபூமியின் பெரிய மன்னர் ஈசனவர்மன் (King Isanavarman). இவர் மகிமையும் துணிச்சலும் நிறைந்தவர். அவர் ராஜாதி ராஜன் ஆவார்.

அவர் சுவர்ணபூமியை எல்லையாகக் கொண்ட கடல் வரை ஆட்சி செய்கிறார். அண்டை நாடுகளில் உள்ள மன்னர்கள் இவரின் கட்டளைக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலாயாவில் பான் பான் எனும் அரசு இருந்தது. அந்த அரசில் இருந்து வெளியேறிய அந்தியன் (Huntian) அல்லது கவுந்தியா (Kaundinya) என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்து இருக்கலாம் என்று சீன வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. அந்த ஆவணங்களில் முக்கியமானது லியாங் புத்தகம் (Book of Liang).

இந்த லியாங் புத்தகம் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. பூனான் அஸ்திவாரக் கதையை அச்சு அசலாகப் பதிவு செய்கிறது. "கவுந்தியா என்பவர் ஜியா எனும் தென் நாட்டில் இருந்து வந்தார். (ஜியா என்பது பான் பான் பேரரசைக் குறிக்கிறது)

அவர் ஒரு கனவு கண்டார். காலையில் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒரு வில் இருப்பதைக் கண்டார். அந்த வில்லை எடுத்துக் கொண்டு அவர் ஒரு கப்பலில் ஏறினார். வெகு தூரம் பயணம் செய்து ஓர் இடத்தில் தரை இறங்கினார். அது ஊர் பெயர் தெரியாத ஒரு நாடு.

அந்த நாட்டை சோமா (Queen Soma) எனும் மகாராணியார் ஆட்சி செய்து வந்தார். அந்த ராணியார் கப்பலையும் கவுந்தியாவையும் கைப்பற்ற விரும்பினார். முடியவில்லை. ஒரு போராட்டம்.

இருந்தாலும் கவுந்தியா போராடி வெற்றிப் பெற்றார். பின்னர் சோமா மகாராணியாரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் சோமா மகாராணியார் அந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை கவுந்தியாவிடம் வழங்கினார் என்று லியாங் புத்தகம் கூறுகிறது. கவுந்தியாவின் மற்ற பெயர்கள்: கொண்டன்னா (Kondanna); கொண்டின்யா (Kondinya). பூனான் பேரரசை 18 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர்:

1. சோமா மகாராணியார் (Queen Soma)

2. கவுந்தியா (Kaundinya I)

3. ஸ்ரீ மீரா (Srei Meara)

4. சந்தனா (Candana) 

5. ஸ்ரீ இந்திரவர்மன் (Srei Indravarman)

6. கவுந்தியா ஜெயவர்மன் (Kaundinya Jayavarman)

7. ருத்ரவர்மன் (Rudravarman)

8. ராஜலெட்சுமி (Queen Kambuja-raja Lakshmi)

9. ஜெயாதேவி (Queen Jayadevi)

10. சிசுவதி (Sisowath Chamchakrapong)

இந்தப் பெண்ணரசிகளைப் பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் தெளிவாக விளக்குகிறேன். இந்தப் பல்லவப் பெண்களின் ஆளுமை வரலாற்றில் இருந்து கரைந்து போய் இருக்கலாம். ஆனால் வரலாற்றில் இருந்து என்றும் மறையப் போவது இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.07.2021


சான்றுகள்:

1. Queen Soma was the ruler of the Kingdom of Funan and widely claimed as the first monarch of Cambodia - https://en.wikipedia.org/wiki/Queen_Soma

2. Jeldres, Julio A. (2 April 1999). "Cambodia's Monarchy: The search for the successor". The Phnom Penh Post.

3. The Constitution of the Kingdom of Cambodia" (PDF). World Intellectual Property Organization.

4. https://en.wikipedia.org/wiki/History_of_Laos#Funan_kingdom

5. Kaundinya, Preah Thaong, and the "Nagi Soma": Some Aspects of a Cambodian Legend



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக