07 ஜூலை 2021

புண்ணிய பூமியில் புதிதாய்ப் பூக்கும் சரஸ்வதி

கலைமகள், கலைவாணி, கலைதேவி, கல்விக்கரசி என சரஸ்வதி தேவியார் போற்றப் படுகிறார். புகழப் படுகிறார். ஆயக் கலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவியாய் அரியணை உச்சத்தில் வீணை வாசிக்கிறார். அவரே கல்விக் கலையின் வற்றாத ஊற்று. கல்வி அறிவின் ஞான ஒளி. ஒரு தெய்வமாக ஒரு தேவதையாக இமயம் பார்க்கிறார்.

சரஸ்வதி தேவி.
என்னாளும் ஒரு தெய்வக் கொலுசு.
சிரம் தாழ்த்துகிறேன் தேவியே! 


அந்தத் தேவதையின் பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு புண்ணியபூமி. இந்தியா எனும் சொர்க்க பூமி. அங்கே ஒரு நதி. அதன் பெயர் சரஸ்வதி. அந்த நதியைப் பற்றி கொஞ்ச காலமாகப் பிரச்சினைகள்.

இந்து வேதங்களின் வழியாக ஒரு பிரச்சினை. அறிவியல் கோணங்களின் வழியாக ஒரு பிரச்சினை. சரி. அப்படி என்னதான் பிரச்சினைகள்.

சரஸ்வதி நதி முன்பு காலத்தில் அப்போது இருந்தது. ஆனால் இந்தக் காலத்தில் இப்போது இல்லை. மறைந்து விட்டது என்பது ஒரு பிரச்சினை. மற்ற ஆறுகளைப் போல சரஸ்வதி நதி தற்சமயம் எந்த இடத்திலும் பாயவில்லை. இது தொடர்பாக மர்மமான பல கருத்துகள்.

இல்லை இல்லை. சரஸ்வதி நதி இன்னும் இருக்கிறது. கற்பனைகள் செய்ய வேண்டாம். இமயமலையில் அழகாய் அருவி எடுத்து ஓடி வந்து இன்னும் பாய்ந்து கொண்டு இருக்கிறது. இல்லை என்று யார் சொன்னது. கூட்டி வாருங்கள். யார் என்று பார்த்து விடுகிறேன். இப்படி ஒரு பிரச்சினை. சரி.


சரஸ்வதி நதி இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது என்று இன்றைய வரைக்கும் பலரும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது உண்மையா. உண்மையில் என்னதான் நடந்தது; நடக்கிறது என்று பார்ப்போம். சரஸ்வதி நதி இருக்கிறதா இல்லையா. அதைப் பற்றி ஆராய்கிறது இன்றைய கட்டுரை.

இந்து மத வேதங்களில் மிக முக்கிய கதாபாத்திரம் போல சரஸ்வதி நதி இன்றும் இடம் பெற்று உள்ளது. மேற்கில் யமுனை நதி; கிழக்கில் சட்லெஜ் நதி; நடுவில் சரஸ்வதி நதி என பழைமையான ரிக் வேதத்தில் சொல்லப் படுகிறது.

ரிக் வேதத்தில 19 இந்திய நதிகள் ஒன்றன் பின் ஒன்றாக வர்ணிக்கப் படுகின்றன. 45 சுலோகங்களில் 72 தடவை சரஸ்வதி நதியை பற்றி சொல்லப் படுகிறது. அதில் மூன்று சுலோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டுமே உள்ளன.


மகாபாரதத்தில் உதத்திய மகரிஷியின் கதை சரஸ்வதி நதியின் மறைவை விளக்குகிறது. சட்லெஜ் நதிக்கு சுதத்ரி நதி என்றும் மற்றும் ஒரு பெயர். இந்த சட்லெஜ் நதி பல நூறு நதிகளாகப் பிரிந்து போனதைக் குறிப்பிடும் வசிஷ்டர் - விசுவாமித்திரர் கதையும் மகாபாரதத்தில் உள்ளது.

இந்திய மண்ணில் 12 ஆண்டுகள் பஞ்ச காலம். அதனால் ஆயிரக் கணக்கான ஏரிகள் வற்றிப் போனதைப் பற்றியும் மகாபாரதம் சொல்கிறது. அதே சமயத்தில் இந்திய மண்ணில் பல நூறு ஆண்டுகளாப் புவியியல் மாற்றங்கள். அதனால் சரஸ்வதி நதி வறண்டு போனது என்றும்கூட மகாபாரதம் சொல்கின்றது.

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் சர்தார் கே.எம். பணிக்கர் (K. M. Panikkar). ராஜஸ்தான் பகுதியில் இருந்த பிகானீர் சிற்றரசின் (Bikaner State) வெளியுறவு அமைச்சரராக இருந்தவர். இவரின் கருத்துபடி கி.மு. 3000 வரை சரஸ்வதி நதியும் அதன் உபநதியாக இருந்த யமுனா நதியும் சட்லெஜ் நதியும் கரைபுரண்டு ஒடி இருக்கின்றன.

ஏதோ ஒரு காலக் கட்டத்தில் யமுனா நதி; கங்கை நதியினால் இழுக்கபட்டு விடுகிறது. இதன் விளைவாக திருஷ்வதி நதியும்; சரஸ்வதி நதியின் மத்திய பாகமும் வறண்டு போயின. சட்லெஜ் நதி மட்டும் மேற்கு நோக்கி வழிமாறிச் சென்றது. சரி.


திரிவேணி சங்கமம். கேள்விப்பட்டு இருப்பீர்கள். கங்கை, யமுனை நதிகளுடன் கண்ணுக்குத் தெரியாத வகையில் சரஸ்வதி நதி வந்து கலக்கிறது எனும் ஒரு நம்பிக்கை. இன்றும் இந்து மதத்தில் இருந்து வருகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப் படுகிறது. மகாத்மா காந்தி போன்ற இந்தியத் தலைவர்கள் சிலரின் அஸ்தி; திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டு உள்ளது.

உண்மையில் திரிவேணி சங்கமம் என்றால் மூன்று நதிகள் இணையும் இடம். ஆனால் நேரடியாச் சென்று பார்த்தால் கங்கை மற்றும் யமுனை நதிகளை மட்டும்தான் அங்கு பார்க்க முடியும். 


அப்படி என்றால் மூன்றாவது நதி எங்கே? சரஸ்வதி நதி தோன்றும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் நிலத்தின் அடியில் மறைந்து பாய்ந்து மீண்டும் திரிவேணி சங்கமத்தில் இணைகிறது என்பதுமே காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

அண்மையில் ஒரு காணொலி. சரஸ்வதி நதி மறைந்து போகும் காணொலி. மலை உச்சியில் இருந்து ஓடி வரும் ஓர் ஆற்றின் அருகே ஒருவர் நிற்கிறார். பாய்ந்து வரும் ஆறு திடீரென பூமிக்குள் மறைந்து விடுகிறது. இப்படி ஒரு வீடியோவை வாட்ஸ் அப்; யூடியூப்; பேஸ்புக் ஊடகங்களில் சிலர் பார்த்து இருக்கலாம்.

அந்தக் காணொலியைப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத் தான் இருக்கும். தவிர இந்தக் காணொலியை ஊடகங்களில் பகிர்பவர்கள், அந்த நதிதான் புராதன சரஸ்வதி நதி என்றும் ஒரு கூடுதல் தகவலையும் இணைத்து விடுகிறார்கள். 


ஆக சரஸ்வதி நதி மறையும் இடம் அதுதான் என்று இணையத்தில் காணொலிகளாய் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. உண்மையில் சரஸ்வதி நதி இப்படித்தான் இருக்குமா? இப்படித்தான் திடீரென்று பூமிக்குள் மறைந்து விடுமா? சரஸ்வதி நதி உண்மையாகவே இருக்கிறதா?

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் பாய்ந்து மற்ற இரண்டு நதிகளுடன் கலக்கிறது என்கிற கருத்து; அறிவியல் சான்றுகளுடன் நிரூபிக்கப்படவில்லை.

மாறாக இமயமலையில் உற்பத்தியான சரஸ்வதி நதி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் வழியாக பாகிஸ்தானில் நுழைந்து கடலில் கலந்ததாகச் ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில், சரஸ்வதி நதி இமயத்தில் தோன்றி, அரியானா, ராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத்தில் பாய்ந்து கடலில் கலந்தது உண்மை தான் என்று அண்மையில் இந்திய மத்திய அரசிடம் ஒரு வல்லுநர் குழு ஓர் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

பேராசிரியர் கே.எஸ்.வால்டியா தலைமையிலான வல்லுநர் குழு ஆறு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

இமயத்தில் தோன்றி, கட்ச் பாலைவனம் வழியாக மேற்கு கடலில் கலக்கும் முன்பாக, பாகிஸ்தானின் சில பகுதிகளையும் சரஸ்வதி நதி கடந்து சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் நீளம் சுமார் 4 ஆயிரம் கி.மீ. ஆகும்.

சரஸ்வதி நதியின் ஆயிரம் கி.மீ. பகுதி தற்போதைய பாகிஸ்தானில் இருந்து உள்ளது. 3 ஆயிரம் கி.மீ. தொலைவு இந்தியாவில் இருந்து உள்ளது.

இந்த நதியின் கரையோரத்தில் ஏறக்குறைய 1,700 சிறிய பெரிய நகரங்கள்; கிராமங்கள் அமைந்து இருந்தன. அவை 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சரஸ்வதி நதியின் பழைய தடத்தை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றன.

வீடியோவில் பாய்ந்து ஓடி வரும் நீர் திடீரென மறைவதற்கு அந்த இடத்தின் நில அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம். கற்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நீரின் வேகத்தால் கற்களுக்கு அடியில் இருந்த மண் அடுக்குகள் அரிக்கப்பட்டு இருக்கலாம்.

ஆகவே, நீரோட்டம் மறைவது போலத் தெரிந்தாலும் அது கற்களுக்கு அடியில் பாய்ந்து கொண்டு இருக்கலாம். நதி மறையும் இடத்தின் பெயர் மானா. இது ஒரு கிராமம்.

வியாச முனிவர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதியாகச் சொல்கிறார்கள். அதுவும் இந்த மானா கிராமத்தில் எழுதியதாகச் சொல்கிறார்கள்.

இந்த மானா கிராமம் 3200 மீட்டர் உயரத்தில் இமயமலைச் சாரலில் உள்ளது. சரஸ்வதி நதி இங்கு தான் உற்பத்தி ஆனது. அழகுநந்தா எனும் நதியின் துணை நதியே சரஸ்வதி நதி.

இருந்தாலும் தண்ணீர் மறையும் இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக நீர் சின்னச் சின்னக் கற்களின் வழியாக பூமிக்குள் இறங்கி ஊடுருவி கீழே உள்ள பள்ளத்தாக்கில் பாய்ந்து சென்று இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அப்படித்தான் நினைத்தார்கள்.

ஆனால் அது தவறு. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சரஸ்வதி நதி காய்ந்து வறண்டு விட்டது. இது மட்டுமல்ல. இதைப் போல பல வீடியோக்கள் இணையத்தில் காணப் படுகின்றன. ஆனால், அவற்றில் எதிலுமே சரஸ்வதி நதி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் சரஸ்வதி நதி என்பதே இப்போது இல்லை.

ஒரே வார்த்தையில் இப்படிச் சொல்லலாம். சரஸ்வதி நதி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் அறிவியல் புவியியல் சான்றுகளை முன்வைக்கிறேன்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் அசாதாரணமான பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக திசை மாறின.

அவற்றில் ஒன்று ஒட்டு மொத்தமாய் மறைந்து போனது. அது தான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டு இருக்கும் சரஸ்வதி நதி. புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்து இருக்கின்றன.

செயற்கைக் கோள் புகைப்படங்கள் சரஸ்வதி நதியின் மறைந்து போன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கின்றன.

ஐஸோடோப் ஆய்வுகள், அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.  கி.மு.2000 ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் ஒரு பெரிய பூகம்பம்.

அதனால் யமுனை நதியின் அருகில் இருந்த நிலப்பரப்பு 30 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து விட்டது என்று K.S. வால்த்தியா (Valdiya, K.S.) எனும் புவியில் அறிஞர் சொல்கிறார். இதனால் யமுனை நதியின் தடம் மாறியுள்ளது என்றும் சொல்கிறார்.

மறைந்த சரஸ்வதி நதி மறைந்தது தான். இனி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அந்தப் பெயரைச் சொல்லிய வண்ணம் கலைவாணி சரஸ்வதி தேவியார் நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

சான்றுகள்:

1. Chatterjee, Anirban; Ray, Jyotiranjan S.; Shukla, Anil D.; Pande, Kanchan (20 November 2019). "On the existence of a perennial river in the Harappan heartland". Scientific Reports. 9 (1): 17221.

2. Darian, Steven G. (2001), "5.Ganga and Sarasvati: The Transformation of Myth", The Ganges in Myth and History, Motilal Banarsidass Publ., ISBN 978-81-208-1757-9

3. Giosan, Liviu; Clift, Peter D.; Macklin, Mark G.; Fuller, Dorian Q. (10 October 2013), "Sarasvati II", Current Science, 105 (7): 888–890, JSTOR 24098502

4. Kenoyer, J. M. (1997). "Early city-states in south Asia: Comparing the Harappan phase and the Early Historic period". In Nichols, D.L.; Charlton, T.H. (eds.). The Archaeology of City States: Cross-cultural approaches. Washington, DC: Smithsonian Institution. pp. 52–70.

5. Valdiya, K.S. (2017). "Prehistoric River Saraswati, Western India". Society of Earth Scientists Series. Cham: Springer International Publishing. ISBN 978-3-319-44223-5.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக