08 ஆகஸ்ட் 2021

தேன் சிந்தும் வானமாய் தென்மதுரை தேன்மொழியாள்

தமிழ் மலர் - 08.08.2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்


சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல். இதில் வள்ளுவரின் அருள் மொழியையும் இணைத்துக் கொண்டால்...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்…


அந்த வகையில் ஆசிரியம் என்பது ஒரு தெய்வீகப் பணி; ஓர் உன்னதமான பணி. யாதும் ஊரே யாவரும் கேளிர்ப் பணி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறந்த பணி. அதுவே ஓர் அறப்பணி; ஓர் உயிர்ப்பணி.

அந்தப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தவர் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை தேன்மொழி பெரியசாமி. அன்பான தமிழ்ப்பெண். தெய்வக் கருணை பெற்ற அற்புதமான தமிழ்ப்பெண். அழகிய தமிழ்ப் பெண்மணி.

இறுதி எல்லைக் கோட்டைத் தாண்டும் வரையில் "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்று வாழ்ந்து காட்டியவர். அப்படிப்பட்ட நல்ல ஒரு தமிழ்ப் பெண்ணை மலேசியத் தமிழர்கள் இழந்து நிற்கிறார்கள். இவரைப் போல பலரையும் நாம் இழந்து தவிக்கிறோம்.

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ஒரு மலேசியத் தமிழ்ப் பெண். குமுதா இராமன். சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டார். அவருக்குப் பின்னர் மேலும் ஒரு தமிழ்ப்பெண்.

முன்பின் அறிமுகம் இல்லாத முகங்களாக இருக்கலாம். முன்பின் பார்க்காதவர்களாக இருக்கலாம். முன்பின் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு தமிழரின் இழப்பு என்பது நம் மலேசியத் தமிழ் இனத்திற்கே ஓர் இழப்பு.

ஏற்கனவே பலரை இழந்து விட்டொம். கொரோனா தாண்டவத்தில் இன்னும் இழந்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு தமிழரின் உயிரை எப்படியாவது இழந்து கொண்டு வருகிறோம். வேதனை. வேதனை.

நம் இனத்தில் ஒரு தமிழரை இழக்கின்றோம் என்றால், அது நம்முடைய வாரிசுகளின் சுவடுகளில் ஒன்றை இழக்கின்றோம் என்று பொருள்.

2019-ஆம் ஆண்டு புள்ளி விவரங்கணிபடி மலேசியாவில் 8,873 தமிழாசிரியர்கள் சேவை செய்கிறார்கள். இதில் ஓர் இலக்கம்; ஓர் எண் குறைந்தாலும் அது நம் இனத்திற்கு மட்டும் இழப்பு அல்ல. உலகத் தமிழர்களுக்கு ஓர் இழப்பு. நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கே பெரிய இழப்பு.

இந்த நாட்டில் நம் தமிழர் இனம் சன்னம் சன்னமாய்க் குறைந்து வருகிறது. தெரிந்த விசயம். என்ன காரணம் என்று நமக்கும் தெரியும். வாய் இருந்தும் பேச முடியாத இனமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வாயில்லா பூச்சிகூட வாய் திறந்து சத்தம் போடுகிறது. ஆனால் நாம் அந்தச் சத்தத்தைகூட வெளியே கொட்ட முடியாமல் மௌனமாய் அழுது கொண்டு போகிறோம். புரியும் என்று நினைக்கிறேன்.

இந்த நிலையில் ஒவ்வொருவராய்ப் போய்க் கொண்டு இருந்தால் என்ன சொல்வது. என்ன செய்வது. அழுது ஆர்ப்பரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுங்க.

இந்தக் கலிகாலத்தில் கொரோனா தொற்று என்பது ஓர் அழையா விருந்தாளியாய், இல்லாத பொல்லாத இழப்புகளுக்கு வடிகால் வடித்துக் கொண்டு போகிறது. இந்த நிலையில் இந்தப் பக்கம் அரசியல் கோமாளிக் கூத்துகள்; அரசியல் சதிராட்டங்கள். அர்த்தம் இல்லாத அரசியல் தில்லுமுல்லுகள். எக்கச்சக்கமான தவளைகள் கூட்டம். சமாளிக்க முடியவில்லை. நம்ப கதைக்கு வருவோம்.

ஆசிரியை தேன்மொழி பெரியசாமியின் புகைப்படத்தை ஊடகங்களில் பார்த்தேன். மனம் ரொம்பவும் வலித்தது. என் மகள் வயதுப் பெண். வாழ வேண்டிய வயது. பத்து பிள்ளைகளுக்குப் பாதை போட்டு பத்து நல்லது செய்ய வேண்டிய வயது. சொல்லாமல் கொள்ளமல் பறந்து போய் விட்டார். என் மனசில் அது ஒரு காயம். வலிக்கிறது.

ஆசிரியை தேன்மொழி பெரியசாமி, பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்கு மட்டும் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கிடைத்த ஓர் அரிய பொக்கிஷம். ஓர் அரிய சீதனம். நான் சொல்லவில்லை. பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உதயக்குமார் சொல்கிறார். ஆசிரியை தேன்மொழியுடன் சம காலத்தில் பணிபுரிந்தவர்.

ஆசிரியை தேன்மொழி மண்ணில் பிறந்த ஒரு வான்வெளி சகாப்தம்; சத்தம் இல்லாமல் விண்ணுலகத்தில் மறைந்து போனார் என்று பதிவு செய்கிறார். இவர் மட்டும் அல்ல. தேன்மொழி பற்றி பதிவுகள் அனுப்பிய அனைவருமே அப்படித்தான் வேதனைப் படுகிறார்கள். நினைவலைகளில் நெஞ்சங்கள் காய்ந்து போவது இல்லை.

பத்துமலைப் பள்ளியிலும் சரி; மலேசியாவில் உள்ள 527 பள்ளிகளிலும் சரி; தேன்மொழியைப் போல சிறந்த ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இல்லை என்று சொல்லவில்லை. தரணி போற்றும் சிறந்த ஆசிரியர்கள் உள்ளனர். மணி மணியான ஆசிரியர்கள்.

அண்மையில் பேராக் மாநிலத்தில் ஒரு தமிழர்க் கலைநிகழ்ச்சி. வணிக விழிப்புணர்வாளர்; தமிழரினச் சேவையாளர் ஈப்போ பி.கே.குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சி. அதில் சிறந்த தமிழாசிரியர்களைத் தேர்வு செய்யும் தலைமை நீதிபதி பொறுப்பு. நூறு தமிழாசிரியர்களின் சாதனைப் பட்டியலை என்னிடம் வழங்கினார்கள்.

அந்தத் தமிழாசிரியர்களின் சாதனைகளைப் பார்த்துப் படித்த போது மலைப்பு; திகைப்பு; வியப்பு. அற்புதமான ஆசிரியர் மணிகள். அற்புதமான ஆசிரியர்ச் செல்வங்கள். ஒரு புள்ளி இடைவெளியில் பத்து ஆசிரியர்கள் முதல் நிலையில் நின்றார்கள். மனதை இறுக்கிக் கொண்டு முதல் மூன்று இடங்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைமை.  

கதவைத் திற காற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் கதவைத் திறக்க வேண்டாம். காற்றைத் தேடி நாங்கள் போகிறோம் என்று நம் தமிழ் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறார்கள். நெஞ்சம் கனக்கிறது.

ஆசிரியப் பெருமக்களின் அர்ப்பணிப்பு ஈடுபாடுகள். அதில் அவர்களின் கடமை உணர்வுகள். அதையும் தாண்டிய நிலையில் அவர்களின் சமுதாயப் பற்று கலந்த இனப் பற்று. அதற்கு மேலும், அவர்களின் மொழிப் பற்று. ஆக இப்படி அத்தனைப் பற்றுகளும் தமிழாசிரியர்களின் கற்பித்தல் வாழ்வியலில் கலந்து பயணிக்கின்றன.

இருப்பினும் தேன்மொழி எனும் மறைந்து போன ஓர் உயிருக்கு ஆராதனை செய்வதால் எந்த வகையிலும் குறை இல்லை. ஆயிரம் வாசல் இதயங்களில் ஒன்றாய், நல்ல ஓர் இதயத்தை ஆலாபனை செய்கிறோம். நம் மொழிக்காக; நம் குழந்தைகளுக்காகச் சேவைகள் செய்து உள்ளார். நினைத்துப் பார்ப்போம்.

ஆசிரியை தேன்மொழியின் இழப்பு, பத்துமலைத் பள்ளிக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று சொல்லி தொடர்கிறேன். அவர் பணிபுரிந்த பள்ளிகளின் தலைமைத்துவத்திற்கு மதிப்பு மரியாதை கொடுத்தவர். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தன் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர்.

மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு கற்றல் கற்பித்தலை வழங்குவதிலும் சிறந்து விளங்கினார். புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கியவர். மாவட்டம் மற்றும் மாநில ரீதியில் மாணவர்கள் பங்கெடுக்கும் வாய்ப்புகளை இயன்ற அளவிற்கு வழங்கி உள்ளார். அது மட்டும் அல்ல.

பெற்றோர்களிடம் ஒரு நல்லுறவை அமைத்துக் கொண்டவர். மாவட்ட கல்வி இலாகாவில் உள்ள அதிகாரிகளும், அவரின் திறமையைப் பாராட்டிப் பேசுவது உண்டு. மாநிலக் கல்வி இலாகாவில் அவருக்கு என ஒரு சிறப்பான வாய்ப்பு வழங்கப் பட்டது.


ஒரு சிறப்பு நிரல் திரட்டு (modul) தயார் செய்து கொண்டு இருந்தார். அதுவும் கூடிய விரைவில் வெளியீடு காண இருந்தது. ஆனால் அதற்குள் இவர் விடைபெற்றுக் கொண்டார்.

பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுடன் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார். பத்துமலை தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை திருமதி செ. அரசிராணி. அவர் இப்படிச் சொல்கிறார்.

தேன்மொழி எனும் பெயரைப் போலவே தேன் சிந்தும் வானத்தைப் போன்றவர். மிகவும் எளிமையாகப் பழகக் கூடிய சுபாவம். 2009-ஆம் ஆண்டு பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தார். மூன்று ஆண்டு காலமாகப் படிநிலை 1 மாணவர்களுக்குத் தேசிய மொழி கற்றுக் கொடுத்தார்.

2011-ஆம் ஆண்டு புதிய கட்டடம் நிறுவப்பட்டு, பாலர் பள்ளி ஆசிரியராக அமர்த்தப் பட்டார். ஒரு நல்லாசிரியர் என அவரைச் சொன்னால் மிகையாகாது. குழந்தைகளுடன் இணைந்து அவர்களின் குணங்களை உணர்ந்து அவர்களுக்கு வேண்டிய விசயங்களை முறையாகச் செய்யக் கூடியவர்.

வகுப்பறைச் சூழலைச் சிறப்பாக அமைத்துக் கொண்டார். மாணவர்களின் தேவைகளை முதன்மையாகக் கருதக் கூடியவர். முதலாம் படிநிலைக்குச் செல்லவிருக்கும் மாணவர்களை முழுமையாகத் தயார் செய்து அனுப்பும் திறன் கொண்டவர். அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்துக்குப் பேரிழப்பு; அதே வேளையில் பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்கும் பேரிழப்பு.

நாம் ஒரு சிறந்த ஆசிரியரை இழந்து விட்டோம். இந்த வேளையில் அவர்தம் குடும்பத்தினருக்கும் பள்ளிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் மனம் தளர வேண்டாம், அவரின் குழந்தைகளின் வடிவில் அவர் நம்முடனே பயணிப்பார்.

சிறந்த ஓர் ஆசிரியரை இழந்ததில் எனக்கு மிகுந்த வருத்தமே. அன்னாருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவரின் குழுந்தைகளுக்குச் சிறந்த கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம். நன்றிங்க அரசிராணி.

ஆசிரியை தேன்மொழியின் கணவர் திரு. துரைராஜ். பிள்ளைகள் அனு ஸ்ரீ; மற்றும் இரமணா. இப்போது கோலாலம்பூர் செலாயாங்கில் உள்ளனர். அங்கு இருந்துதான் தேன்மொழி, பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று வந்தார்.

2003-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல் ஹலிம் சுங்கை பட்டாணி, கெடா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயின்றவர் தேன்மொழி. தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் பட்டமும் பெற்றார்.

இவர் 2007-ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் செண்டாயான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் சேவை செய்தவர். அதன் பின்னர் பத்துமலை தமிழ்ப்பள்ளிக்கு வந்தார்.  

இவருடைய அணுகுமுறைகள் அனைத்துமே தமிழ்ப்பள்ளி; தமிழ் மாணவர்கள். அந்த இலக்கை நோக்கி தம் சேவைப் பயணத்தை அமைத்துக் கொண்டார். அந்த வகையில் இவரிடம் நிறைய அர்ப்பணிப்பு உணர்வுகள். அதில் மாற்ருக் கருத்துகள் இல்லை. மேலும் ஒரு முக்கியமான தகவல்.

இப்போதைய தமிழாசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளைப் புகழாரம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன். அது காலத்தின் கட்டாயம் அல்ல. காலத்தின் கடப்பாடு. மலேசியத் தமிழாசிரியர்களை இப்போது புகழாமல் வேறு எப்போது புகழ்வதாம். சொல்லுங்கள்.

வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தால் போதும் என்பது அந்தக் காலம். அந்தக் காலம் மாறிப் போய் வருகிறது. இப்போது உள்ள தமிழாசிரியர்கள் பெரும்பாலோர்; ஊதியத்தையும் சன்மானத்தையும் பெரிதாகப் பார்க்காமல் ஊழியச் சன்மார்க்கத்தைத் தான் பெரிதாகப் பார்க்கிறார்கள்.

அது இந்தக் காலத்து தமிழாசிரியர்களின் இன மனப்பாங்கு. உண்மைங்க. ஆனாலும் சம்பளத்திற்கு மாரடிக்கும் சில இரண்டு கால் ஜீவன்கள் ஆங்கங்கே நடமாடிக் கொண்டு இருக்கவே செய்ன்றன. இல்லை என்று சொல்லவில்லை. இரண்டு கால் ஜீவன்கள் என்றுதான் சொல்கிறேன். கூலிக்கு மாரடிக்கும் மனிதர்கள் என்று சொல்லவில்லை.

இப்போதைய நிலையில்; இப்போது நாடு போய்க் கொண்டு இருக்கும் நிலையில்; சமூதாயத்தின் நலனைக் கருத்தில் கொள்ளும் தமிழாசிரியர்கள் தான் பெரும்பாலும் அதிகமாய் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆதாயம் பார்க்காத அர்ப்பணிப்பு ஜீவன்கள். கைகூப்புகிறேன். தமிழர்களின் சுவாசக் காற்றில் விசுவாசத்தைப் பார்க்கின்றனர்.

இன்னும் ஒரு விசயம். அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர்களிடம் இனப் பற்றும் மொழிப் பற்றும் மேலோங்கி நிற்கிறது. இதை மலேசியத் தமிழ்ச் சமுதாயம் நன்றாகவே உணர்ந்து வருகிறது. மீண்டும் ஒரு செருகல்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் தம் இலக்கை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களின் காய்களை நகர்த்தி வருகின்றன. அண்மைய காலங்களில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி உள்ளன.

மலேசியத் தமிழாசிரியர்களை இப்படி எழுதி உச்சி குளிரச் செய்கிறேன் என்று சிலர் ஆதங்கம் கொள்ளலாம். அந்தப் பாவனையில் வேறு மாதிரி எதையாவது சொல்லிவிட்டுப் போகலாம். கவலை இல்லை. உண்மையைத் தான் எழுதி இருக்கிறேன். பொறாமை புண்சிரிப்பு இல்லாத மனிதர்கள் எந்த இனத்தில் தான் இல்லை. குறை கண்டுபிடிப்பதற்காகவே சில ஜென்மங்கள் உயிர் வாழ்கின்றன. கண்டு கொள்ள வேண்டாம். அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் போய்க் கொண்டே இருப்போம்.

தமிழ் மொழிப் பற்றுதலை மலேசியத் தமிழாசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியம்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவ தெய்வங்களின் வாழ்க்கையில் ஒளியையும் தெளிவையும் வழங்கி, தெய்வங்களாகத் துலங்கும் மலேசியத் தமிழாசிரியர்களுக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்.

தேன்மொழிக்கு ஒரு தோழியின் கவிதை... நட்பின் மணித் துளியாய் வாழ்ந்த காலம்; கடந்த நாட்கள் இன்று களவாடப் பட்டன. தூரப் போன உன் முகம் தொலைந்தாலும்; கொண்ட பண்பின் ஆழம் மாறாது. மண்விட்டு உடல் பிரிந்தாலும்; மணம் வீசும் நட்பின் பாசம் என்றும் காணும். இறைவன் சித்தம் என ஏற்றுக் கொண்ட மனம் இன்று; சில கண்ணீர்த் துளிகளைச் சுமந்து வரும் உன் வழியில்! இறைவன் மடியில்  இளைப்பாறுக!

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு. ஆனால் தேன்மொழியின் நினைவுகளுக்கு ஒருபோதும் ஓய்வுகள் இல்லை. அந்த வகையில் ஒவ்வோர் இதயமும் மற்றோர் இதயத்தை நினைத்து நேசித்து கொண்டுதான் இருக்கும், அவரைப் பிரிந்து வேதனைப் படும் அன்னாரின் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நடந்த இளம் தென்றலாய்க் கலைந்தும் கலையாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும். மலேசிய மண்ணில் மறைந்தும் மறையாத ஓர் அழகிய தமிழ்ப்பெண் தேன்மொழி.

தேன் சிந்தும் வானமாய்; தென்மதுரையின் தேன்மொழியாக; இறைவன் அடிகளில் தேன்மொழி அமைதி கொள்வாராக!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.08.2021



பேஸ்புக் பதிவுகள்

Sathya Raman: வணக்கம் சார். ஒன்றுமே தெரியாத அறிவிலிகளையும் புடம் போட்ட அறிவாளிகளாக, புத்திசாலிகளாக, கல்வி மான்களாக உரமேற்றி உருப்படியாக வைப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது வெறும் வார்த்தை புகழ்ச்சி இல்லை.

முட்டாள்களையும் தங்களின் முயற்சியால் முன்னுக்கு கொண்டு வரும் ஆசிரியர்களும் இருக்கும் பள்ளியில்தான் பாராபட்சதோடு படித்துக் கொடுப்பதில் பற்று இல்லாத ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு இடையிலை பள்ளியில் தமிழ் வகுப்புக்கு பள்ளி நிர்வாகம் பச்சை கொடி காட்டி இருந்தாலும் வகுப்புக்கு மட்டம் போடும் பல ஆசிரியர்கள், ஆசிரியைகள் இன்னமும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள்.

அப்படியே அத்திப் பூத்தாப் போல் வந்தாலும் தெளிவாக வகுப்பை நடத்துவது இல்லை. கடமைக்கு நேரத்தை கடக்க செய்வார்கள்.

இந்த அனுபவம் என் மகளுக்கு நடந்ததை நான் அறியப் பட்டேன். என் மகள் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த போது அந்தாண்டு தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப் பாடமாக எடுக்க முன்வந்த மாணவர்களை உதாசினப்படுத்தி... அவர்களுக்கு முறையாகப் பாடம் சொல்லிக் கொடுக்க தவறிய ஆசிரியையை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நாலு நல்ல வார்த்தையில் வசைபாடிய சம்பவங்களும் உண்டு.

தமிழ் பள்ளிகளில் தன்னிகரற்ற ஆசிரியர்கள் அதிகமாக இருக்கவே செய்கிறார்கள். ஆறாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திற்காக அற்பணிப்போடும், அக்கறையோடும் மாணவர்களை வழி நடத்துவதில் சீனர்களை அடுத்து நம் தமிழாசிரியர்களும் தொண்டாற்றுவது போற்றுதல்குரியது.

எக்காரணத்தைக் கொண்டும், எது வந்த போதும் தமிழாசிரியர்களை நாம் இழந்து விக்கூடாது என்றே எதிர்ப் பார்கிறோம். ஆனால் இயற்கையும், நோயும் நம்மை மிஞ்சி நிற்கிறதே?

இந்த கொடிய நோய்க்கு சமீப காலமாக நம் இந்தியர்களும் அதிகமாக பலியாகி வருவது மனதை பதற வைக்கிறது.

ஒரு காலத்தில் இருபது லட்சத்திற்கு மேலாக இருந்த நம் இனம் இன்று சரிவை சாவில் எதிர் நோக்கி இன அழிவை சந்தித்துக் கொண்டிருப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

யார் விட்ட சாபமோ
யார் விட்ட தூபமே?
அந்த கடவுளுக்கு வெளிச்சம்.

கல்வி என்பது தகவல்களை சேகரிப்பது அல்ல. அறிவைப் பெருகி கொள்வது. அத்தகைய அறிவுக் கண்ணை மனிதனுக்கு திறந்துவிடும் மாசற்ற மாணிக்கங்களான தமிழாசிரியர்கள் மென்மேலும் நம் நாட்டில் நலம்சூழ வாழ வாழ்த்துக்கள்

இவ்வேளையில் சகோதரி தேன்மொழி அவர்கள் சான்றோர்கள் போற்றிய நல்ல, வல்ல தமிழாசிரியையாகத் தன் கடமையை ஆற்றி, காலத்தின் கோலத்தால் இறைவனின் இளைப்பாற சென்ற துயர்ச் செய்தி தொண்டையை அடைகிறது.

என் தமிழுக்கு வந்த இழப்பை எண்ணி வருந்தி அன்னாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரைப் பிரிந்து துயர் கொண்டு இருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆசிரியை தேன்மொழி பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றிங்க சார். 🙏🙏🙏

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman: வணக்கம் சகோதரி. தங்களின் நீண்ட பதிவைப் பார்த்தேன். படித்தேன். மனம் மிகையாகக் கனக்கவில்லை. அழுதது.

நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர் இறந்து விட்டார்கள். பலருக்கும் சின்ன சின்ன வயது.

என் குடும்பத்திலேயே ஒரு நான்கைந்து பேர் இறந்து விட்டார்கள். இறப்பிற்குப் போக முடியாத சூழ்நிலை.

மலாக்காவில் ஓர் இறப்பு என்றால் கிள்ளானில் ஓர் இறப்பு. சுங்கை பட்டாணியில் ஓர் இறப்பு. பினாங்கில் ஓர் இறப்பு. எந்த இறப்பிற்கும் போக முடியாத நிலை. என்ன செய்வது?

பல நூறு மைகளுக்கு அப்பால் இருந்தவாறே கண்ணீர் சிந்திவிட்டுப் போகும் நிலை.

எனக்குத் தெரிந்து எனக்கு நன்கு அறிமுகமான நான்கு தமிழர் வழக்கறிஞர்கள் (60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்) கோவிட்டினால் இறந்து விட்டார்கள். நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. கிரகிக்கவும் முடியவில்லை.

ஆகக் கடைசியாக் இதைத் தட்டச்சு செய்யும் போது நாட்டின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர் குனேஷ் காலமான செய்தி வருகிறது. வேதனை. வேதனை. வேதனைப் படுவதத் தவிர வேறு எதுவும் செய்கிற மாதிரி இல்லைங்க.

எப்போது இந்தத் தாக்கம் முடிவிற்கு வரும். தெரியவில்லை. எல்லா பாரத்தையும் ஆண்டவனிடம் மீதுபோட்டு விடுவோம். ஆண்டவன் என்ன நினைக்கிறாரோ என்ன செய்கிறாரோ அவர் அதைச் செய்து விட்டுப் போகட்டும். தங்களின் நீண்ட பதிவிற்கு நன்றிங்க சகோதரி சத்யா.

இதைப் பதிவு செய்து கொண்டு இருக்கும் போது நண்பர் ஒருவரின் தம்பி... ஒரு மருத்துவர். செலாயாங் மருத்துவமனையில்... இறந்து விட்டதாகச் செய்தி வருகிறது. ஒன்றுமே புரியவில்லை.

Sathya Raman >>>> Muthukrishnan Ipoh: ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சார். இளமையில் இறப்பு என்பது பெரும் கொடுமை. இந்தக் கொடிய நோய்க்கு நம்மவர்களை அதிகம் இழப்பது வேதனை மிகுந்தது. அதிலும் சமுதாயத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்களை.

காலம் என்ன கணக்கு வைத்து காரியம் ஆற்றுகிறதோ? எல்லா சங்கடங்களும், துயரங்களும் விரைவில் மாறும் என்று மனப்பால் குடிப்போம். வருத்தங்களை யாவும் விலகிட வேண்டுதல் வைப்போம். வேண்டுதலை தவிர வேறென்ன செய்ய முடியும்?

Sathya Raman >>>> Muthukrishnan Ipoh: இன்னும் எத்தகைய வார்த்தைகளை கொண்டு ஆறுதல் படுவது என்று தெரியாமல் விக்கித்து நிற்கிறது மனம். எம் இனத்தில் இந்த காலன் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்திருக்கிறதோ?
சுயகவனம் ஒன்றே இதற்கு தீர்வு சார்.

மருத்துவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அன்னாரின் ஆத்மா நல்லபடி சாந்திக்கொள்ளட்டும்.ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்திற்கு 🙏🙏🙏

Bobby Sinthuja: Rip

Banu Linda: தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பணி அளப்பரியது.. அதுவும் தற்கால தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை போற்ற வேண்டும்..

Muthukrishnan Ipoh >>>> Banu Linda: உண்மை சகோதரி. அவர்களிடம் ஓர் இன மொழி விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

Vasanthi Mohanakumar: சிறந்த ஆசிரியர்

Muthukrishnan Ipoh >>>> Vasanthi Mohanakumar: ஆமாங்க. ஆசிரியர்கள் பலரும் சொல்கின்றனர். தமிழ் மொழிப் பற்றாளர்.

Arni Narendran: A Selfless Server of Humanity 🙏🌿

Muthukrishnan Ipoh >>>> Arni Narendran: மலேசியத் தமிழர்களுக்கு ஓர் இழப்பு

Bobby Sinthuja: ஐயா, கொரோனா இன்னம் எத்தனை பேரை காவுகொள்ள போகின்றதோ... Stay safe...

Muthukrishnan Ipoh >>>> Bobby Sinthuja: இந்தக் கிருமி புதிய வடிவம் பெற்று புதிய தாக்கங்களை ஏற்படுத்துவதால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் மருத்துவ நிபுணர்களே தடுமாறி நிற்கிறார்கள்.

B.k. Kumar: கண்ணீர் அஞ்சலி. இதயம் கனக்கிறது. இன்றைக்கு மற்றுமோர் பேரிடி நண்பர் ஒருவரின் 30 வயது டாக்டர் மகன் மரணம். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

Sathya Raman >>>> B.k. Kumar: பல சிரமங்களுக்கு இடையில் கல்விக்காக நம் பிள்ளைகள் அயராது உழைத்து முன்னேறுவது எளிதானது அல்ல. அந்தக் கஷ்டங்களுக்கான பலனை எதிர்பார்த்துப் பிரகாசமான எதிர்காலத்தை சுவாசிப்பதற்குள் இப்படி ஒரு பேரிடி நடந்து இருக்கவே கூடாது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆழ்ந்த அனுதாபத்தை தவிர 🙏🙏🙏😢

Muthukrishnan Ipoh >>>> B.k. Kumar: ஓம் சாந்தி.

B.k. Kumar: இன்றைக்கு மற்றுமோர் பேரிடி. நண்பர் ஒருவரின் 30 வயது டாக்டர் மகன் மரணம். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

Raghawan Krishnan: Nation and Indian Community lost a well dedicated Teacher. RIP her Great SOUL.

Muthukrishnan Ipoh >>>> Raghawan Krishnan: நல்ல ஒரு சேவையாளரை இழந்து விட்டோம்.

Bhagia Lekshmy: She is excellent and loving teacher.

Muthukrishnan Ipoh >>>> Bhagia Lekshmy: உண்மைதான் சகோதரி. அவர் ஆத்மா சாந்தி கொள்ளட்டும்.






5 கருத்துகள்: