11 செப்டம்பர் 2021

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மலர் - 11.09.2021

1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) ஜே. டிரைவர் (Inspector of Schools FMS, J. Driver) என்பவர் மலாயா பள்ளிகளின் தலைமைக் கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை அமலில் இருந்தது. அதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார்.
 

இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர் (ACS - Anglo Chinese School KLANG).

இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை மலாயா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழர்களும் சீனர்களும் தடுமாறிப் போனார்கள்.

இந்தக் கட்டத்தில் தான் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance) சட்டம். ஆங்கிலேயர்கள் உருக்கிய சட்டம். அந்தச் சட்டமே அவர்களைத் திசை திருப்பியது. அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியாது. தடுமாற்ரம் அடைந்தார்கள்.

1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour Ordinance 1912). மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட சட்டம். இந்தச் சட்டம் தான் சரியான நேர்த்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது.

1912-ஆம் ஆண்டு மலாயா தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். அந்தச் சட்டத்தில் ஒரு பிரிவு: ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டப் பிரிவு.

(The British and rubber in Malaya, c 1890–1940 Jim Hagan and Andrew Wells University of Wollongong: The 1912 Labour Ordinance compelled the planters to set up ad-hoc schools for children of the plantation labour.)

ஆக இந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.


அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். எடுத்துக்காட்டாக கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி பகுதியில் டப்ளின் தோட்டம். ஏழு டிவிசன்கள். ஸ்கார்புரோ தோட்டத்த்த்தில் ஆறு டிவிசன்கள். ஜொகூர் சா ஆ தோட்டத்தில் ஆறு டிவிசன்கள்.

ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. அந்த மாதிரி நிறைய பள்ளிகள் தோன்றின. 1920-ஆம் ஆண்டில் மட்டும் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் உருவாகி விட்டன.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டம் என்பது அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

ஆக அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால், 1925-ஆம் ஆண்டு வரையில் மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் புதிதாக நிறுவப்பட்டன.


தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் போன்றோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள். சரி.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர் சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார்.

1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 547 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.


1938-இல் 13 அரசு தமிழ்ப்பள்ளிகள், 511 தோட்டத் தமிழ்ப்பள்ளிகள்; 23 சமயப் பரப்புத் தமிழ்ப்  பள்ளிகள். ஆக மொத்தம் 547 தமிழ்ப்பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் 22,820 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 15,584. பெண்கள் 7236.

இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலம். பெரும் பாதிப்புகள். பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

பின்னர் அந்த எண்ணிக்கை கூடியது. 1947-இல் 741 தமிழ் பள்ளிகள். 33,954 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 20,834. பெண்கள் 13,120.

1956-இல் 47,407 மாணவர்கள். ஆண்கள் 26,128. பெண்கள் 21,279.

1957-இல் 50,766 மாணவர்கள். ஆண்கள் 26,153. பெண்கள் 24,613.

தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 1930-இல் 333; 1938-இல் 547; 1947-இல் 741; 1957- இல் 888. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கல்வி கொள்கையின் மாற்றம் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு. அதனால் பல பள்ளிகளை மூடப்பட்டன. அந்த வகையில் 1963-இல் 720 பள்ளிகள். இப்போது இந்த 2021-ஆம் ஆண்டு 526 பள்ளிகள் மட்டுமே உள்ளன. சரி.

1951-ஆம் ஆண்டில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் (Sydney Francis Barnes) என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அறிக்கையின் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும்; இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.

பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர்ச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது. அந்தக் குழுவில் ம.இ.கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார்; ஆதி நாகப்பன்; தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்விக் குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலைமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர்.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

மறுபடியும் சொல்கிறேன். சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் தமிழர்களும் ஆதரித்தார்கள். இனங்களுக்கு இடையில் இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

ஆங்கிலம், சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக விளங்கி வருகிறது

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி மெல்ல மெல்லக் கரைந்து போகும்.

அந்த வகையில் தமிழ் மொழியும்; தமிழ் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

தமிழ் பள்ளிகளின் உரிமை எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்பு அடையக் கூடாது. அதே போல ஒரு மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை எந்த இனமும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடப்பாடு. தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடன்பாடு. இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் உரிமை நிலைப்பாடு.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான்; தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகள் இல்லை என்றால் தமிழ் மொழி இல்லை. தமிழ் மொழி இல்லை என்றால் தமிழர்கள் இல்லை. முதலில் இதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் செய்வதற்குப் பற்பல திட்டங்கள் தீட்டப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டி வந்தது.

எப்போதும் எதையும் சொல்கிற மாதிரி இல்லை. அரசியல்வாதிகள் சிலரின் குண்டக்க மண்டக்க குத்தூசிகள் எப்போது வேண்டும் என்றால் குத்தலாம். குடையலாம்.

உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்கின்றார்கள். எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் தங்களின் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை விட்டுக் கொடுக்கக் கூடாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அங்கே தமிழர் இனத்தின் விந்துயிர்கள் வேர் அறுக்கப் படுகின்றன என்பதை நினைவில் கொள்வோம்.  

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(11.09.2021)



 

1 கருத்து:

  1. வணக்கம். விரிவான நீண்ட பதிவுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். தாய்மொழி காத்தல் அவசியம் என்ற ஆழமான கருத்தை வெளிப்படுத்தியது கால அவசியமே. நம் நாட்டின் கல்வி அமைப்பைப் பற்றிய வரலாற்றின் மீள்பார்வையாக அமைந்திருக்கிறது எனக்கு. இளையத் தலைமுறையினர் இதைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு