09 ஜனவரி 2022

சோழர்களின் செப்பேடுகளில் கோத்தா கெலாங்கி

தமிழ் மலர் - 09.01.2022

சோழர் காலத்துச் செப்பேடுகளில் கோத்தா கெலாங்கி என்பது மாயிருண்டகம் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆழ்க்கடல் பகுதியில் அகழிகள் நிறைந்த இருண்ட கருங்கல் கோட்டையை இராஜேந்திர சோழனின் படைகள் கைப்பற்றின என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.


சோழர் செப்பேடுகளின் சிகரமாய் விளங்குவது திருவலங்காடு செப்பேடு. இந்தச் செப்பேடு தென்கிழக்காசிய நாடுகள் மீது இராஜேந்திர சோழன் படையெடுப்பு நடத்தியதை விளக்கமாகக் கூறுகின்றது. லெய்டன் செப்பேடு (Leyden grant); இராஜேந்திர சோழன் செப்பேடு ஆகியவையும் இராஜேந்திர சோழனின் படை எடுப்புகளை உறுதி செய்கின்றன. இராஜேந்திர சோழன் செப்பேடு என்பது தஞ்சாவூர் செப்பேடு என்றும் அழைக்கப் படுகிறது. (Sastri, K. A. Nilakanta 1935; p 211).

ஆழ்கடல் அகழ்சூழ் மாயிருண்டகமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்


எனும் சொற்கள் அந்தச் செப்பேடுகளில் வருகின்றன. இங்கே ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

’ஆழ்கடல் அகழ்சூழ் மாயிருண்டகமும்’ எனும் வாசகத்தில் ’மாயிருண்டகம்’ எனும் சொல் வருகிறது. கவனியுங்கள். மாயிருண்டகம் எனும் சொல் கோத்தா கெலாங்கியைக் குறிப்பதாகும். ஆழ்கடலில் அகழிகள் சூழ்ந்த மா இருண்டகம் என்று அந்தச் சோழர் செப்பேடுகள் சொல்கின்றன.

கோத்தா கெலாங்கி கோட்டை கரும்கற்களால் கட்டப் பட்டது. அதனால் அது கறுப்பு நிற கோலத்தில் காட்சி அளித்து இருக்கிறது. அதனால் சோழர் படையினர் அந்தக் கோட்டையை ’மா இருண்ட அகம்’ என்று அழைத்து இருக்கிறார்கள். மா என்றால் பெரிய... இருண்ட என்றால் கருமையான... அகம் என்றால் கோட்டை.

கோத்தா கெலாங்கியில் மாயிருண்டகம் கோட்டையைக் கட்டும் போது அதைச் சுற்றிலும் அகழிகளைத் தோண்டி வைத்து இருக்கிறார்கள். அரண்மனை அல்லது கோட்டைகளின் வெளிப்புறத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக அகழ்ந்து அமைக்கப்படும், நீர் நிரம்பிய அரண் அல்லது கொடும் பள்ளத்தை அகழி என்பார்கள்.

அந்த அகழிகளில் முதலைகளை வளர்த்து இருக்கிறார்கள். ஆக அந்த அகழிகளைத் தாண்டித்தான் சோழப் படையினர் கோட்டைக்குள் நுழைந்து கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மனை எதிர்கொண்டார்கள்.


ஆனால் ‘செஜாரா மெலாயு’ (Sejarah Melayu) காலக் குறிப்பு வேறு மாதிரியாகப் பதிவு செய்கிறது. கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மன், சோழர்களின் படைகளை கோட்டைக்கு அப்பால், பத்து மைல்களுக்கு அப்பால், நேருக்கு நேர் மோதினார் என்று ‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகளில், ஸ்ரீ லானாங் பதிவு செய்து இருக்கிறார். ‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகள் நம்பகத் தன்மையைத் தாண்டிப் போகின்றன என்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கருத்து.

மேலும் ஒரு கூடுதலான தகவல். தஞ்சைப் பெரிய கோயிலின் தெற்கு விமானச் சுவரில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஸ்ரீ விஜயம் மலாயா படையெடுப்புகள் பற்றிய செய்திகள் பொறிக்கப்பட்டு உள்ளன. கி.பி. 1030 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டவை.

கோத்தா கெலாங்கி பற்றி இப்படி எல்லாம் வலுவான, இறுக்கமான சான்றுகள் இருக்கும் போது; கோத்தா கெலாங்கி எனும் அரசு இருந்ததற்கான சான்றுகள் இல்லவே இல்லை என்று ஒரு சிலர் அடம் பிடிக்கிறார்கள். கோத்தா கெலாங்கி என்பது பகாங் ஜெராண்டுட் காடுகளில் உள்ள சுண்ணாம்புக் குகைகளைக் குறிக்கின்றது என்றும் சொல்கிறார்கள்.

’இருக்கு ஆனால் இல்லை’ என்பதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கோத்தா கெலாங்கி காடுகளைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிட வேண்டும். அரசு சாரா பொது இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அகழாய்வுகள்; புவிசார் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.


இன்னும் ஒரு விசயம். அந்த ஆய்வுகள் நடுநிலையான ஆய்வுகளாக இருக்க வேண்டும். நடக்குமா? என்றைக்கு நடக்கும்? இது 20-ஆம் நூற்றாண்டின் மலாயா வரலாற்றில் மற்றும் ஒரு பில்லியன் டாலர் கேள்வி. ஒரு செருகல்.

விரைவில் வெளிவரவிருக்கும் ‘காணாமல் போன கோத்தா கெலாங்கி’ எனும் வரலாற்று நூலில் இந்த விவரங்கள் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளன. கோத்தா கெலாங்கி வரலாற்றை அந்த நூல் ஒட்டு மொத்தமாய் அலசிப் பார்க்கின்றது.
தமிழகத்தில் குறிப்பாக தமிழகக் கோயில்களில் கடந்த 120 ஆண்டுகளில் பல நூற்றுக் கணக்கான செப்பேடுகள்; கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மிகப் பழைய செப்பேடு கி.பி 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

Sastri, K.A. Nilakanta (1949). "Takuapa and its Tamil Inscription Part I.". Malayan Branch of the Royal Asiatic Society. 22.

பெரும்பாலான தமிழ் நாட்டுச் செப்பேடுகள் தமிழிலேயே எழுதப்பட்டு உள்ளன. ஆனாலும் 6-ஆம் நூற்றாண்டு தொடக்கம் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியிலும் கிடைத்து உள்ளன. சில கல்வெட்டுக்கள் இரு மொழிகளிலும் உள்ளன.


தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில முக்கியமான செப்பேடுகள்: லேடன் செப்பேடுகள்; முதலாம் இராஜேந்திர சோழனின் திருவலங்காட்டுச் செப்பேடு; சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு; வீர ராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிச் செப்பேடு.

இராஜேந்திர சோழனைப் பற்றி ஐந்து செப்பேடுகள் கிடைத்து உள்ளன. இவற்றை மெய்க்கீர்த்திகள் என்றும் சொல்லலாம். அவற்றில் திருவலங்காட்டுச் செப்பேடு, இராஜேந்திர சோழன் கங்கையை நோக்கி படை எடுத்ததைப் பற்றிச் சொல்கின்றன. வட நாட்டு தர்மபாலா மன்னரை வெற்றி கொண்ட செய்தியைத் திருவலங்காட்டுச் செப்பேடுகளில் காணலாம்.

கோத்தா கெலாங்கி பற்றி சோழர் செப்பேடு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்தச் செப்பேட்டை தஞ்சாவூர் செப்பேடு (Tanjore Inscription) என்றும் சொல்கிறார்கள். 1030-ஆண்டு என்று பொறிக்கப்பட்டு உள்ளது. (Arokiaswamy, Celine W.M. 2000; pp. 37, 38, & 41)

இராஜேந்திர சோழன் கோத்தா கெலாங்கி மீது 1025-ஆம் ஆண்டில் படை எடுத்தார். ஆனால் தஞ்சாவூர் செப்பேட்டில் 1030-ஆம் ஆண்டு என்று பொறிக்கப்பட்டு உள்ளது. ஆக படையெடுப்பிற்குப் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்தச் செப்பேடு எழுதப்பட்டு இருக்கலாம். 1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள்.

1. ஸ்ரீ விஜயம் (சுமத்திரா) - Sriwijaya (Palembang)
2. பண்ணை (சுமத்திரா) – Pannai
3. மலையூர் (சுமத்திரா) – Malaiyur Jambi
4. மாயிருண்டகம் (ஜொகூர்) - Maa Yirudingam
5. இலங்காசுகம் (வட மலாயா) – Ilangaasokam
6. மாப்பாளம் (பர்மா) - Maa Pappaalam
7. மேவிலி பங்கம் (பங்கா தீவு, பிலிப்பைன்ஸ்) - Mevili Bangkam, Mavimbangam
8. வலைப்பந்தூர் (கிளந்தான்) – Valaipanthur
9. இலமுரி தேசம் (ஆச்சே) – Ilaamurithesam
10. தலை தக்கோலம் தக்கூவாபா (தாய்லாந்து) - Takuapa Thailand
11. மாதமாலிங்கம் (தாம்பரலிங்கா மலாயா - தாய்லாந்து) - Madalingam; Maa Thamaalingam
12. மா நக்காவரம் (நிக்கோபார்) - Maa - Nakkavaaram
13. கடாரம் - Kadaaram


மேலும் சில பகுதிகள் உள்ளன. இராஜேந்திர சோழனின் படைகள் கடாரத்தில் படையெடுத்த பின்னர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு படை தாய்லாந்து கிளந்தான் பகுதிக்குப் போய் இருக்கிறது.

The third unit of Chola forces reached Thalai-Thakkolam (Takua-pa) approximately covering the present Krabi, Phangnga and Surat Thani states of upper south Thailand.


ஒரு படை இலங்காசுகம் போய் இருக்கிறது. ஒரு படை கங்கா நகரம் பகுதிக்குப் போய் இருக்கிறது. கங்கா நகரத்திற்குப் போன படைதான் கோத்தா கெலாங்கிக்குப் போய் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். தாய்லாந்து கிளந்தான் பகுதிக்குப் போன படை கோத்தா கெலங்கிக்கு போய் இருக்க முடியாது என்பது என் கருத்து.

ஒவ்வோர் ஆண்டும், இறுதி வாக்கில் பகாங், கிளந்தான், திரங்கானு பகுதிகளில் அடர்ந்த மழை பெய்யும். பகாங் ஆறு கரை புரண்டு ஓடும். எளிதில் கடந்து வந்து கோத்தா கெலாங்கி கோட்டைக்குப் போய் இருக்க முடியுமா? ஒரு சந்தேகம். இது என் கணிப்பு. சரி.

சோழர் செப்பேடுகளில் பொறிக்கப் பட்டவை அனைத்தும் தமிழ் எழுத்துகள். அந்த எழுத்துகளில் கிரந்த எழுத்துகளும் உள்ளன. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள். சோழர்களின் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் காணப் படுகின்றன. திருவலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய வாசகங்கள்:

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
சங்கிராம விஜய துங்க வர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து

உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்

நிறை சீர் விஜயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன் மலையூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்

காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்

கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்

மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு


என பொறிக்கப்பட்ட வாசகங்கள். இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பற்றி இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி பட்டியலிடுகிறது. அதில் ஒரு பகுதியில் அவ்வாறு செதுக்கப்பட்டு உள்ளது. (Rajendra Chola, Vol 1, Inscription: 66, p. 98)

பொதுவாகவே சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அகவல் பாவில் அமைந்து உள்ளன. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்து எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் (கி.பி. 993), அவை காணப் படுகின்றன. இந்த மெய்க் கீர்த்திகளைக் கொண்டு எந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள். அந்த வகையில் பார்க்கும் போது, கடாரத்தைக் கைப்பற்றிய இராஜேந்திர சோழனின் படைகளில் ஒரு பிரிவு, கடாரத்தில் இருந்து கிழக்குத் திசையில் இலங்காசுகம் (Lankasuka) நோக்கி நகர்ந்தன.

இலங்காசுகம் என்பது தோராயமாக தற்போதைய தெற்கு தாய்லாந்தின் சோங்கலா (Songkhla), பட்டாணி (Pattani), யாலா (Yala) மற்றும் நாரதிவாட் (Narathiwa) மாநிலங்களை உள்ளடக்கியவை என்று சொல்லப் படுகிறது. சோழப் படைகள் இலங்காசுகத்தைக் கைப்பற்றிய பின்னர் அந்த இலங்காசுகத்தில் ஓர் இளவரசரை அந்த இராச்சியத்தின் துணை அரசராக நியமித்தது. சரி.

திருவாலங்காட்டு கல்வெட்டுகளில் எழுதப்பட்டு உள்ள வாசகங்கள்:

’கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்’
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்

(Rajendra Chola, SII, V1, pp. 66 - 98)

இலங்காசுகத்தில் இருந்து சோழர்ப் படைகள், மேலும் தென்கிழக்குத் திசையை நோக்கிச் சென்றன. தற்போதைய மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள வலைப்பந்தூர் (Valaipanthur - Valai Penjuru) வரை சென்றன. வலைப்பந்தூர் அரசையும் கைப்பற்றின. சோழர்ப் படைகளின் அடுத்த நகர்வு கோத்தா கெலாங்கி படையெடுப்பு. (Hermann Kulke; K. Kesavapany; Vijay Sakhuja 2009; p. 1)

கோத்தா கெலாங்கியை லெங்குய் (Lenggui) என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இந்தச் சொல் தான் கிளாங்குய் (Glong Gui) எனும் சொல்லாக மருவியது. இன்றைய காலத்தில் இந்தியர்களைக் கிளேங் என்று அழைப்பதற்கான மூலச் சொல்லாக அமைந்து இருக்கலாம். இது என்னுடைய கணிப்பு.

இந்தக் கருத்தை ஜொகூர் தமிழர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அவர்களும் உறுதியாகச் சொல்கிறார். ஏன் என்றால் இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார். பல்வகையான வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளையும் இடம்பெறும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.01.2022

குறிப்புகள்; NOTES

1. Jan Wisseman Christie, "The Medieval Tamil-language Inscriptions in Southeast Asia and China", Journal of Southeast Asian Studies, Vol. 29, No. 02, September 1998, pp 239-268

2. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.

3. Hermann Kulke; K. Kesavapany; Vijay Sakhuja (2009). Nagapattinam to Suvarnadwipa: Reflections on Chola Naval Expeditions to Southeast Asia. Institute of Southeast Asian, 2009. p. 1. ISBN 9789812309372.

4. Karnjanatawe, Karnjana (30 May 2019). "Tales from the Southern Seas". Bangkok Post. Retrieved 30 May 2019.

5. Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India. Travancore Archeological Series vol 111, Part 1, No 41

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக