16 செப்டம்பர் 2022

துணிச்சல்மிக்க நாயகர் துன் சாமிவேலு

 (தமிழ் மலர் - 16.09.2022)

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய அரசியல் வானில் கம்பீரமாக வலம் வந்த மாபெரும் மனிதர். துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே எனும் வாசகத்திற்கு உந்துகோலாய் வாழ்ந்து காட்டியவர். தனிப்பட்ட வாழ்க்கையின் சோதனை வேதனைகளில் சாதனைகள் படைத்த நல்ல ஒரு தலைவர்.

இவரின் 31 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பற்பல இடர்பாடுகள். பற்பல இடையூறுகள். பற்பல இடைஞ்சல்கள். அவற்றை எல்லாம் கடந்து சென்றவர். வெற்றியே தன் இலட்சியம் என்று பீடு நடை போட்டு மனுக்குலக வரலாற்றில் தடம் பதித்த மற்றும் ஒரு வரலாற்று நாயகர். ஓர் அவதாரப் புருசர்.


மலேசிய வரலாற்றில் மலேசியாவின் மிக உயரிய விருதான துன் விருது பெற்ற தமிழர்களில் துன் சாமிவேலுவும் ஒருவர். 2017-ஆம் ஆண்டில் அந்த விருதைப் பெற்ரார். இவருக்கு முன்னர் துன் சம்பந்தன் அவர்கள் அந்த விருதைப் பெற்ற மற்றும் ஒரு மலேசியத் தமிழர்.

துன் சாமிவேலு சமுதாயம், பொதுச் சேவை, சமூக இயக்கங்கள், அரசியல் என மலேசிய இந்திய சமுதாயத்தோடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இன்று வியாழக்கிழமை அதிகாலை தன்னுடைய 88-ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அவருக்கு தமிழ் மலர் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும். இறைஞ்சுகின்றோம்.


இவரின் இயற்பெயர் சாமிவேலு சங்கிலிமுத்து (Samy Vellu Sangalimuthu). பிறப்பு: மார்ச் 8, 1936. இவர் 1979-ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை ம.இ.கா.வின் தலைவர் பதவியில் சேவை ஆற்றினார். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராகப் பதவி வகித்தவர்.

மலேசிய அமைச்சரவையில்:

* மலேசியச் சக்தி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சு (Minister of Energy, Telecommunications and Posts) (ஜூன் 1989 - மே 1995);

* மலேசியப் பொதுப் பணித் துறை அமைச்சு (Minister of Works) (ஜூன் 1983 - ஜூன் 1989);  (1995 - மார்ச் 2008);  

* மலேசிய பொதுப் பணி பொதுவசதிகள் அமைச்சு (Minister of Works and Public Amenities) (ஜூன் 1989 - மே 1995);

போன்ற  முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர்.


1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயக்குமார் தேவராஜ் எனும் மலேசிய சமூகக் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் அவரின் அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தது என்றும் சொல்லலாம்.

1960-களில் இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசியலில் ஓர் இறுக்க நிலை ஏற்பட்டது. அப்போது இந்தோனேசியாவை அதிபர் சுகர்ணோ ஆட்சி செய்து வந்தார். மலாய்க்காரர்கள் வாழும் நாடுகள் எல்லாம் இந்தோனேசியாவிற்குச் சொந்தம் என்று பிரகடனம் செய்தார். கான்யாங் மலேசியா (Ganyang Malaysia) எனும் வாசகங்களைப் பயன் படுத்தி ’மலேசியாவை நசுக்குவோம்’ என்று தீவிரம் காட்டினார்.

அந்தக் கட்டத்தில் சாமிவேலு, கோலாலம்பூரில் இருந்த இந்தோனேசியத் தூதரகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறி இந்தோனேசிய நாட்டுக் கொடியைக் கீழே இறக்கி எரித்தார். அவரின் நாட்டுப் பற்றின் மூலம் அவரின் புகழ் மலேசியா முழுமையும் பரவத் தொடங்கியது. மலேசிய ஆங்கில, மலாய், சீன, தமிழ் நாளேடுகள் அவரைப் பெரிதும் புகழ்ந்தன.


சங்கிலிமுத்து, அங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் நகருக்கு அருகில் இருந்த செங்கமலை ரப்பர் தோட்டத்தில் பிறந்தார். தன் ஐந்தாவது வயதில் ஜொகூர் மாநிலத்தை விட்டு சிலாங்கூர் மாநிலத்தில் இருந்த எல்மினா தோட்டத்திற்குப் பெற்றோருடன் வந்தார். தாய் தந்தையருக்கு பால் மரம் சீவும் வேலைகளில் உதவி செய்தார்.

பின்னர், இவருடைய குடும்பம் நிலக்கரிச் சுரங்க நகராக விளங்கும் பத்து ஆராங்கிற்கு குடி பெயர்ந்தது. பத்து ஆராங்கிற்கு குடி வந்த பின்னரும் அவருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலைமை. எந்தவித மாற்றமும் இல்லை. ஏழ்மை தொடர்ந்தது.

பத்து ஆராங்கிற்கு அருகில் ரவாங் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் இயங்கி வந்த கிளைவ் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். நான்காம் வகுப்பு வரை தான் பயின்றார். அதன் பின்னர் குடும்பத்தின் வறுமை; அவருடைய வாழ்க்கையைத் திசைத் திருப்பியது.

அவரால் படிப்பைத் தொடர முடியாத ஒரு சூழ்நில. குடும்பத்தின் ஏழ்மை நிலை அவரை மேலும் மோசமாக்கியது. வேறு வழி இல்லாமல், அந்தச் சின்ன வயதிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. மோகினி சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலையில் சேர்ந்தார். புகையிலையின் வாடை அவருக்கு ஒத்து வரவில்லை. வேலையை விட்டு விலக வேண்டிய நிலைமை.

பிறகு, பத்து ஆராங்கில் உள்ள ‘மலாயன் கொலிரியர்ஸ்’ எனும் நிறுவனத்தில் அலுவலகப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். குடும்பச் சுமையைக் குறைப்பதற்காகப் படிக்கும் வயதில் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளையும் செய்து உள்ளார். இரவு வகுப்புகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.

சாமிவேலுவின் கடின உழைப்பு அந்த நிர்வாகத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அவருக்கு எழுத்தர் வேலை வழங்கப் பட்டது. அந்த வேலையில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தார்.

1950-ஆம் ஆண்டு நவம்பர் 7-இல் அவருடைய தாயார் அங்கம்மாள் காலமானார். தாயாரின் இழப்பு அவரைப் பெரிதும் பாதித்தது. அதன் பின்னர், அவர் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 1951-இல் பத்து ஆராங் நகரை விட்டு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்தார்.

1951-இல் கோலாலம்பூரில் செந்தூல் பகுதியில் உள்ள ஓர் உணவுக் கடையில் சமையல்காரருக்கு உதவியாளராகச் சிறிது காலம் வேலை பார்த்தார். அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூரில் ஸ்ரீ ஜெயா பேருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. உதவிச் சமையல்காரர் வேலையை விட்டு விட்டு ஸ்ரீ ஜெயா நிறுவனத்தில் சேர்ந்து பேருந்து உதவியாளராக வேலை செய்தார்.

அங்கு வேலை செய்கின்ற காலத்தில் அவருக்கு வேதவனம் கட்டடக் கலைஞர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணி புரியும் புதிய வேலையும் கிடைத்தது. இந்த வேலை தான் சாமிவேலுவின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.

வேலை நேரம் போக மற்ற ஓய்வு நேரங்களில் கோவிந்தசாமி என்பவரின் துணையுடன் கட்டடக்கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கட்டட வரைபடத் துறையில் பயிற்சியாளராகவும் சேர்ந்து தன்னுடைய கல்வி நிலையை வளர்த்துக் கொண்டார்.

தந்தையார் சங்கிலிமுத்து 1957-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி மறைந்த போது சாமிவேலுவின் வயது 21. இக்கட்டத்தில் சகோதரர்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பு சாமிவேலுவின் தோளில் விழுந்தது.

1960-ஆம் ஆண்டில் பத்து கேவ்ஸ் ம.இ.கா. கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர், அக்கிளையின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1964-ஆம் ஆண்டில் ம.இ.கா. மத்தியச் செயலவையில் இடம் பிடித்தார். அத்துடன் அவர் ம.இ.கா. தேசிய கலாசாரப் பிரிவுத் தலைவராகவும் அப்போதைய தேசியத் தலைவர் துன் சமபந்தனால் நியமிக்கப் பட்டார்.

பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட கால கட்டத்திலேயே சாமிவேலு தன் கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொண்டார். லண்டனுக்குச் சென்று  அரச பிரித்தானிய கட்டடக்கலைக் கழகத்தில் (Royal Institute of British Architects) கட்டடக்கலைத் தேர்வு எழுதி தாயகம் திரும்பினார்.

அரசியலில் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், தேசிய உதவித் தலைவராகவும் தொடர்ந்து தேசியத் துணைத் தலைவராகவும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-இல் முதல் முறையாகச் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1978-இல் துணையமைச்சராக நியமிக்கப் பட்டார். அதற்கு மறு ஆண்டில் அதாவது 1979-இல் முழு அமைச்சராகத் தகுதி உயர்த்தப் பட்டார். 1979 அக்டோபர் 12-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவிற்குப் பின் துன் சாமிவேலு தேசியத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

அரசாங்கத்தின் தூதுக் குழுக்களில் இடம் பெற்ற சாமிவேலு உலகின் பல நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து சென்றுள்ளார். 1979-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுல்தான் இவருக்கு ‘டத்தோ’ விருது வழங்கினார். 1980-இல் ஜொகூர் மாநில சுல்தானும் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்கு கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.

அப்போதைய பிரதமர் துன் மகாதீர் தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை பினாங்கு பாலத்தைக் கட்டி முடிக்கும் பொறுப்பைச் சாமிவேலுவிடம் வழங்கியது. அதன்படி 1985 செப்டமபர் 14-இல்; 13.4 கி.மீ. தூரமுள்ள பினாங்கு பாலம் கட்டி முடிக்கப் பட்டது. இந்தப் பாலம் உலகின் நான்காவது நீளப் பாலமாக இருந்து வருகிறது.

1989-ஆம் ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. 2001-ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார்.

நாட்டின் மிக உயரிய விருதான “துன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு இருக்கிறார். மலேசிய வரலாற்றில் துன் விருது பெறும் இரண்டாவது இந்தியர் சாமிவேலு ஆவார்.

இவருடைய மனைவியின் பெயர் டத்தின் ஸ்ரீ இந்திராணி. இவர் சமூக அரசியல் கழகங்கள், அரசு சாரா இயக்கங்களின் தொண்டூழியச் சேவைகளில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு செயல் பட்டு வருகிறார். அண்மைய காலங்களில் உடல்நலம் பாதிப்பு.

டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினருக்கு வேல்பாரி (வயது: 57) எனும் ஒரு மகன் உள்ளார். சர்ச்சைக்குரிய மலேசிய இந்தியர்களின் மைக்கா ஹோல்டிங்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர். சாமிவேலு தம்பதியினரின் மருமகள் ஷீலா நாயர், (வயது 46)

2000-ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டது ஒரு தவறான வியூகம் என்று மலேசிய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவர் மீது ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பு படுத்தப்பட்டன.

மலேசிய அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய மான்யத் தொகைகள் முறையாகப் போய்ச் சேரவில்லை எனும் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப் பட்டன.

மலேசியாவின் பல சர்ச்சைக்குரிய இந்தியர்ப் பிரச்னைகளில் இவர் தலையிட்டுத் தீர்வு காண முயற்சி செய்தார். ஆனால், சரியான தீர்வுகளைக் காண முடியவில்லை. அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் அவரையே மோசம் செய்து விட்டனர் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கின்றனர்.

நவம்பர் 25, 2007-இல் வெடித்த மலேசிய இந்திய மக்கள் போராட்டமும் அதனை டத்தோ ஸ்ரீ சாமிவேலு தீர்வு காணக் கையாண்ட முறைகளும் இந்திய மலேசியர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டன. அதனால், சாமிவேலுவின் அரசியல் எதிர்காலமும் பாதிப்பு நிலையை அடைந்தது.

பின்னர், மார்ச் 8, 2008-இல் நடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஜெயக்குமார் தேவராஜிடம்; சாமிவேலு தோல்வி கண்டார். அதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பியத்தையும் அமைச்சர் பொறுப்பையும் இழந்தார்.

இவர் தலைமையில் இயங்கிய ம.இ.கா. கட்சியும் அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தது. அது மட்டும் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த பாரிசான் நேசனல், மலேசியாவில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் பறி கொடுத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி, ம.இ.கா. கட்சித் தலைவர் என பதவிகள் இல்லாத காலத்திலும் செல்வாக்குமிக்கத் தலைவராக துன் சாமிவேலு விளங்கி வருகிறார்.

தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு வருகை தந்த இலக்கியவாதிகள் பலருக்கு ஆதரவு அளிப்பதிலும், அவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்குவதிலும், அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் துன் சாமிவேலு பெரும் பங்காற்றினார்.

அதே சமயத்தில், உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்தது. உள்நாட்டு எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளியிட்டு ஆதரவு அளித்து உள்ளார்.

2019-ஆம் ஆண்டு ஈப்போவில் எழுத்தாளர் அருள் ஆறுமுகத்தின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள துன் சாமிவேலு வந்து இருந்தார். அவரிடன் பேசினேன். அப்போது அவர் என்னிடம் சொன்ன வார்த்தை என்றும் என் நினைவுகளில் நிழலாடுகின்றன.

’உங்கள் எழுத்து என்றும் பதினாறு; நீங்க என்றைக்கும் பதினாறு’. அப்படிச் சொன்ன அந்த மனிதர் மறைந்து விட்டார்.

அவரின் அரசியல் பயணம் விமர்சனத்திற்கு உரியது. உண்மை. மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், அவர் இந்த நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பற்பல முயற்சிகளை மேற்கொண்டார்; செய்து இருக்கிறார்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் புதிதாகக் கட்டப்படுவதற்காக அரசாங்கத்திடம் கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்று உதவி செய்து இருக்கிறார். அரசாங்கத்தின் பணம் தானே என்று சொல்லாலாம். ஆனால் எல்லோராலும்ம் வாங்கிவிட முடியுமா? அவர் தன்னுடைய அமைச்சர் அதிகாரத்தை அழுத்தமாகப் பயன்படுத்தினார். அதை மட்டும் நாம் மறுக்க இயலாது. நினைவில் கொள்வோம்.

ஆயிரம் விமர்சனங்கள் வரலாம். ஆனால் அந்த மனிதர் இப்போது இல்லை. கடந்து போய் நிம்மதி கொள்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.09.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக