தமிழ் மலர் - 07.06.2021
கம்பார் மலை அடிவாரத்தில்
கரைந்து போன 750 மனித உயிர்கள்
1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி. பசிபிக் பெருங்கடலில் ஹவாய்த் தீவு (Hawaii). அங்கே அமெரிக்கக் கப்பல் படை தளம். பெயர் பேர்ல் துறைமுகம். காதும் காதும் வைத்த மாதிரி 353 குட்டிக் குட்டி ஜப்பானியர் விமானங்கள் வருகின்றன. இராத்திரியோடு இராத்திரியாகக் கணக்கு வழக்கு இல்லாமல் அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிக்கின்றன. அதுவே இரண்டாம் உலகப் போருக்கு ஒரு பீடிகை.
அமெரிக்கப் படையின் நான்கு பெரிய கப்பல்கள்; 3 ஆயுதம் தாங்கிய சிறு கப்பல்கள் (cruisers); 217 விமானங்கள்; 3 நீர்மூழ்கி கப்பல்கள் அழிக்கப் பட்டன. 2402 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 1282 பேர் காயம் அடைந்தனர். ஜப்பானியருக்குச் குறைந்த சேதம். 69 ஜப்பானிய வீரர்கள் கொல்லப் பட்டனர். இதைப் பேர்ல் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbor Attack) என்று சொல்வார்கள்.
இந்தப் போர் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்காணா இடத்தில் நடந்தது. இங்கே மலாயா அடிவாசலில் அதே காலக் கட்டத்தில் ஒரு போர். ஜப்பானியருக்கும் மலாயா மக்களுக்கும் இடையே நடந்த போர். அதுதான் கம்பார் போர்.
அங்கே நடந்த மாதிரி கப்பல்கள் எல்லாம் இங்கே கம்பாரில் மூழ்கடிக்கப் படவில்லை. ஆனால் ஈய லம்பங்களில் போர் வீரர்கள்தான் மூழ்கடிக்கப் பட்டார்கள். பெரிய வித்தியாசம் இல்லை. அங்கே அமெரிக்கர்கள். இங்கே மலாயா இராணுவத்தினர்.
மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; இந்திய இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா இராணுவத்தினர்; நியூசிலாந்து இராணுவத்தினர் என்று பல ஆயிரம் பேர் இருந்தனர்.
ஆக கம்பார் போர் (Battle of Kampar) என்பது மலாயாவைக் கிடுகிடுக்க வைத்த போர்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்தக் கம்பார் போரைப் பற்றி இப்போதைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது. இது ஒரு வரலாற்றுப் பதிவு. பத்திரப்படுத்தி வையுங்கள்.
1941-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரையில், ஜப்பானியர் மலாயாவை ஆட்சி செய்தார்கள். அந்த ஆட்சியில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதில் கம்பார் போரும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்.
கம்பார் போர் 1941 டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 1942 ஜனவரி 2-ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போரில் ஏறக்குறைய 1300 பிரித்தானிய கூட்டுப் படை வீரர்களும் (11th Indian Infantry Division) 9000 ஜப்பானியப் படை வீரர்களும் (Japanese 5th Division) ஈடுபட்டனர். ஜப்பானியர் 200 கவச வாகனங்கள்; 100 பீரங்கிகளைப் பயன்படுத்தினார்கள்.
தீபகற்ப மலேசியாவின் வடக்கே இருந்து இடியும் மின்னலுமாக இறங்கி வந்த ஜப்பானியரைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் நிகழ்ச்சி தான். ஜப்பானியர் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு.
கூட்டுப் படையினர் இப்படியொரு பெரிய எதிர்ப்பைக் கொடுப்பார்கள் என்று ஜப்பானியப் படையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜப்பானியர் தங்களின் விமானங்களைக் கொண்டு கூட்டுப் படையினரைத் தாக்கினார்கள். இருப்பினும் கூட்டுப் படையினரின் கம்பார் தற்காப்பு அரணைத் தாண்டி அவர்களால் போக முடியவில்லை.
சீனக் கண்டனீஸ் மொழியில் காம் பாவ் என்றால் விலை உயர்ந்த தங்கம் என்று பொருள். அந்தக் கால கட்டத்தில் கம்பார் பகுதியில் ஈயம் அளவுக்கு மீறிக் காணப் பட்டதால் சீனர்கள் காம் பாவ் என்று அழைத்து இருக்கலாம். காம் பாவ் எனும் சொல் மருவிக் கம்பார் ஆனது என்று ஒரு சாரார் கருத்துச் சொல்கின்றனர்.
கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கம்பார் நகரைச் சுற்றிலும் அடர்ந்த பச்சைக் காடுகளும் கண்ணுக்கு இனிய கனிமக் குன்றுகளும் காணப் படுகின்றன. சரி. கம்பார் போருக்கு வருவோம்.
ஜப்பானியருக்கும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போர்களை மலாயா போர்கள் (Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள்.
ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்.
1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)
2. சங்லூன் ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)
3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)
4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)
5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)
6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)
7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)
8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)
ஜப்பானியர் படையின் 5-ஆவது பிரிவுக்கு, தக்குரோ மாட்சுயி (Takuro Matsui) என்பவர் தலைமை தாங்கினார். அதில் 41-ஆவது காலாட்படை பிரிவு (சுமார் 4,000 வீரர்கள்). இந்தப் பிரிவிற்கு மேஜர் ஜெனரல் சபுரோ கவாமுரா (Major General Saburo Kawamura) என்பவர் தலைமை தாங்கினார். கம்பார் குன்றில் தற்காப்பில் இருந்த பிரிட்டிஷ் கூட்டுப் படையைத் தகர்ப்பது அவர்களின் இலக்கு.
1941 டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி கம்பாரில் இருந்த பிரிட்டிஷ் கூட்டுப் படையை, ஜெராம், கோப்பேங் பகுதிகளில் இருந்து வந்த ஜப்பானியப் படையினர் சுற்றி வளைத்தார்கள். முதல் அரணாகக் கூர்காப் படைப் பிரிவு இருந்தது. கூர்காப் படையினர் கம்பார் குன்றின் அடிவாரத்தில் மறைந்து இருந்தனர்.
இதைக் கண்டறிந்த ஜப்பானியர் அங்கு குவியத் தொடங்கினார்கள். பிரிட்டிஷ் கூட்டுப் படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. ஜப்பானியருக்கு விமானங்களின் உதவி இருந்தது. உணவுப் பொருட்களும் ஆயுதங்களும் விமானங்கள் மூலமாகப் போடப் பட்டன.
முதலில் ஜப்பானிய உயிரிழப்புகள் கடுமையாக இருந்தன. பெருகி வரும் உயிரிழப்புகளுக்கு ஈடாக புதிய ஜப்பானிய வீரர்கள் கொண்டு வரப் பட்டார்கள். கம்பார் குன்றின் (Kampar Hill); தாம்சன் முகட்டில் (Thompson Ridge) தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கடும் சண்டை. இந்தத் தாக்குதலில் 34 இந்திய வீரர்கள் இறந்தனர்.
ஜப்பானியரின் ஆக மூத்தத் தளபதி ஜெனரல் யமாஷித்தா (General Yamashita). அவரே களம் இறங்கினார். கம்பார் போருக்குக் கட்டளைகள் போட்டார்.
இந்தக் கட்டத்தில் தெலுக் இந்தான்; ஊத்தான் மெலிந்தாங்; பேராக் ஆற்றுப் பகுதிகள் ஜப்பானியரிடம் விழுந்து விட்டன. கம்பாரை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.
இந்தப் பக்கம் கம்பாரில் பிரிட்டிஷ் கூட்டுப் படைகள் தனித்தனியாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆயுதப் பற்றாக்குறை உருவானது. இந்தக் கட்டத்தில் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர்-ஜெனரல் பாரிஸ் போர்க் களத்தில் இருந்து பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தார். அதனால் கம்பாரில் இருந்த படைகள் சிலிம் ரிவர் பகுதிக்குப் பின்வாங்கின.
ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போராடிய அனைத்து இந்தியக் காலாட் படைகளுக்கும் பிரிட்டிஷ் தளபதி மேஜர்-ஜெனரல் பாரிஸ் என்பவர் தலைமை தாங்கினார் (Major-General Paris - Commander of the 12th Indian Infantry Brigade). இவருக்கு உதவியாக ஒவ்வொரு காலாட் படைக்கும் துணைத் தளபதிகள் இருந்தார்கள்.
1941 டிசம்பர் 30 தொடங்கி 1942 ஜனவரி 2 வரையில் நான்கு நாட்களுக்கு, பிரிட்டிஷ் கூட்டுப் படையினர், ஜப்பானியர்த் தாக்குதல்களை எதிர்த்துப் போராட முடிந்தது. ஜப்பானியர் மீது பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடிந்தது.
அதனால் ஜப்பானிய 41-ஆவது காலாட்படை வலுவிழந்து போனது. பின்னர் சிங்கப்பூர் மீதான படையெடுப்பில்கூட பங்கேற்க முடியாமலேயே போனது.
இந்தப் போரில் பிரிட்டிஷ் கூட்டுப் படையினருக்கு 150 உயிரிழப்புகள். ஜப்பானியருக்கு 500 உயிரிழப்புகள். ஆனால் உண்மையான ஜப்பானிய உயிரிழப்புகளை அதிகாரப்பூர்வமாக ஜப்பானிய அரசாங்கம் வெளியிடவில்லை.
மலாயா மீது ஜப்பானியர் படையெடுத்ததில் கம்பார் போரில் தான் ஜப்பானியருக்குக் கடுமையான தோல்வி. இந்தப் போரில் கூட்டுப் படைகளுக்கு வெற்றி.
கம்பார் போர் ஓர் இரத்தக் களறிக் கூடம் என்றும் வர்ணிக்கப் படுகிறது. அங்கே ஓர் இரத்த ஆறே ஓடி இருக்கிறது. தீபகற்ப மலேசியாவின் வடக்கில் இருந்து இறங்கி வந்த ஜப்பானியரைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் போர் தான்.
கம்பார் போரில் நூற்றுக் கணக்கான இந்தியப் படை வீரர்களும்; மலாயாக் கூட்டுப் படை வீரர்களும் இறந்து போனார்கள். அவர்களுக்காகக் கம்பார் நகரில் ஒரு நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். 1999-ஆம் ஆண்டு, கம்பார் போர் நடந்த இடத்தை ஒரு வரலாற்றுத் தளமாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது.
அடுத்தக் கட்டுரையில் துரோலாக்; சிலிம் ரிவர்; ஆகிய இரு இடங்களில் நடந்த போரைப் பற்றி தெரிந்து கொள்வோம். சிலிம் ரிவர் அரண் உடைந்து போனதால் தான் தஞ்சோங் மாலிம் விழுந்தது. கோலாகுபுபாரு விழுந்தது. பத்தாங் காலி விழுந்தது. இப்படியே வரிசையாகப் பல நகரங்கள் விழுந்தன.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.06.2021
சான்றுகள்:
1. Remembering the Battle of Kampar: The Forgotten Heroes of The British Battalion. (http://www.nmbva.co.uk/remembering_the_battle_of_kampar.htm).
2. Shores, Christopher F; Cull, Brian; Izawa, Yasuho. Bloody Shambles, The First Comprehensive Account of the Air Operations over South-East Asia December 1941 – April 1942 Volume One: Drift to War to the Fall of Singapore. London: Grub Street Press. (1992).
3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.
4. The Battles of Kampar by Chye Kooi Loong.