04 ஜனவரி 2022

பார்ன்ஸ் பென் பூ அறிக்கைகளில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று சொல்வர்கள். அது என்னவோ தமிழ், சீனப் பள்ளிகளுக்கு மிகச் சரியாகவே பொருந்தி வருகிறது. தாய்மொழிப் பள்ளிகள் வாங்கி வந்த வரமா இல்லை எழுதிச் சென்ற விதியின் சாசனமா தெரியவில்லை.


இனவாதிகளும் மதவாதிகளும் கூட்டுக் கட்டி குலுக்குச் சீட்டுப் போடுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள் போல தெரிகிறது.

தாய்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மூன்று மலாய் இயக்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து இருந்தன. தமிழ் சீனப்பள்ளிகளுக்கு எதிராக வழக்கைத் தொடுத்த இயக்கங்கள் (வாதிகள்)

1. மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின் சம்மேளனம் (Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS)

2. இஸ்லாமியக் கல்வி மேம்பாட்டு மன்றம் (Pembangunan Pendidikan Islam Malaysia (Mappim)

3. Gabungan Persatuan Penulis Nasional Malaysia எனும் Confederation of Malaysian Writers Association (Gapena)

இந்த வழக்கின் பிரதிவாதிகள். அதாவது இந்த வழக்கிற்கு எதிராக வாதாடியவர்கள்:

1. மலேசிய அரசாங்கம்
2. மலேசிய கல்வி அமைச்சு
3. மலேசிய கல்வி அமைச்சர்
4. ம.இ.கா.
5. ம.சீ.ச.
6. கெராக்கான்
7. மலேசிய பூமிபுத்ரா பெர்காசா கட்சி
8. மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பு
9. மலேசிய தமிழ் நெறி கழகம்,
10. மலேசியத் தமிழர்க் கழகம்
11. தமிழர் திருநாள் கழகம் (பேராக்)
12. தமிழ்ப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம்
13. சீனக் கல்வியாளர் குழு Dong Zong
14. சீனக் கல்வியாளர் குழு Jiao Zong
15. மலேசியச் சீன மொழிக் கழகம் (Malaysian Chinese Language Council)
16. சோங் ஹுவா சீன உயர்நிலைப்பள்ளி (SMJK Chong Hwa)

சில அமைப்புகளின் பெயர்கள் விடுபட்டு இருக்கலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப தமிழ் - சீன மொழிப் பள்ளிகள் செயல் படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் (Mohd Nazlan Mohd Ghazali) தம் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார். தாய் மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்து இருக்கும் என்பது வரலாற்றுப் பூர்வமான தீர்ப்பு.

இனங்களைக் கடந்து; மதங்களைக் கடந்து; நிறங்களைக் கடந்து; 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் மலேசியாவில் செயல்பட்டு வருகின்றன.

ஆனாலும் தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என மலேசிய முஸ்லிம் ஆசிரியர்கள் சங்கம் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி கோத்தா பாரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.

நாட்டின் தேசிய மொழி இருக்கும் பொழுது தாய்மொழிப் பள்ளிகளில் மட்டும் தமிழ் மற்றும் சீன மொழிகளைப் போதனா மொழியாக பயன்படுத்தப்படுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்பது வழக்கு தொடர்ந்த அமைப்புகளின் வாதம்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், நாட்டில் 1,800 தாய்மொழிப் பள்ளிகளில் 500,000 மாணவர்கள் கல்வி பயில்வது சட்டப்பூர்வமாகவும் அரசியலமைப்புச் சட்டத்தில் கீழ் மேற்கொள்ளப் படுவதாகவும் நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி கூறினார்.

மேலும், கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டதைப் போல் இந்தப் பள்ளிகளில் மலாய் மொழி இடைநிலை மொழியாக பயன்படுத்தப்படும் என்றார். எனவே, தாய்மொழி பள்ளிகளான தமிழ் மற்றும் சீன பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்பதை அவர் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப் படுத்தினார்.

2020-ஆம் ஆண்டு மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 80,569 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 8,638 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

தாய்மொழிப் பள்ளிகள், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் ஒரு போதும் பிரிவினைகளை வளர்த்தது கிடையா. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், மற்ற மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பதைப் பதிவு செய்வதில் உறுதியாக இருக்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பாகத் துடிப்புடன் செயலில் இறங்கிய அமைப்புகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகள். ஏறக்குறைய 30 வழக்கறிஞர்களைத் திரட்டிப் போராடிய திரு. அருண் துரைசாமி அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் வாழ்த்துகள். இருந்தாலும் தூவானம் இப்போதைக்கு விடாது போல தெரிகிறது.

பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) கட்சியின் தலைவர் இப்ராகிம் அலி உடனடியாக ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத் தான் வேண்டுமா? மேல் முறையீடு செய்யப்படும்; கவலைப் படாதீர்கள் என்கிற அறிக்கை.

மலேசிய ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான சர்ச்சைக்கு மேல் முறையீடு நீதிமன்றம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன் என்கிறார் இப்ராகிம் அலி.

மேலும் அவர் கூறுகிறார். தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இருப்பது; அவற்றில் தாய்மொழிகள் பயிற்று மொழிகளாக இருப்பது; தேசிய நலனுக்கு ஏற்றது அல்ல. அவை எல்லா இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒன்று படுவதற்குத் தடங்கலாக உள்ளன என்றும் கூறி இருக்கிறார். சரி. அது அவரின் கருத்து.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே ஒரு சிலரின் பார்வை. ஒரு சிலரின் வாதம்.

இவ்வளவு நாளும் இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நல்லபடியாகத் தானே போய்க் கொண்டு இருந்தன. ஏன் திடீரென்று இந்த மாதிரி (அ)இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் மனு; வழக்காடல்கள்; மேல் முறையீடுகள். தேவையே இல்லை.

வேலை வெட்டி இல்லாத வெட்டிச் சரக்குகள். எதையாவது குழப்பி எப்படியாவது மீன் பிடிக்க வேண்டும். வேற வேலை இல்லை. எதையாவது சீண்டணும். பேர் வாங்கணும். அப்படியே நாலு காசு பார்க்கணும். ரூம் போட்டு டிசுகசன் பண்ணி வெட்டி முறிக்கணும்.

இந்தப் பிரச்சினை இன்று நேற்று தொடங்கிய பிரச்சினை இல்லை. நீண்ட காலமாகவே கொடிகட்டிப் பறக்கின்றது. அண்மைய காலங்களில் ரொம்பவுமே உயரத்தில் பறக்கின்றது.

இதற்கு எல்லாம் யாரோ பின்னால் இருந்து கொண்டு, சாவி கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்று பலரும் பலவாறாகப் பேசிக் கொள்கிறார்கள். யார் எவர் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முன்பு 48 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. சீனத் தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா சொன்னார். 
 
1971-ஆம் ஆண்டு. அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. அபராதமும் விதிக்கப் பட்டது. இது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.

(Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)

பின்னர் மற்றும் ஒரு பிரச்சினை. 1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னார். சிக்கிக் கொண்டார். 1978 அக்டோபர் 11-ஆம் தேதி.
அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார். நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கும். இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் இழுக்கப் பட்டார்.

(Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948);

மேலே சொன்ன அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்டார். 1982-இல் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. பின்னர் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார். சரி.

அண்மைய காலங்களில் அதிகமான புகைச்சல். ஓர் எடுத்துக்காட்டு. பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். உசுப்பி விட்டது நாயக்.

இந்த மாதிரி அடிக்கடி பிசுபிசுப்புகள். சரி. இதை இப்படியே கொஞ்ச நேரம் நிறுத்தி வைப்போம். மலேசிய அரசியல் அமைப்பில் கல்விச் சட்டம் என்ன சொல்கிறது. தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி என்ன சொல்கிறது. அதைப் பார்ப்போம்.

முதலில் ரசாக் திட்டம் வருகிறது. இந்தத் திட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதைப் பற்றி கட்டுரை எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மறுபடியும் நினைவுபடுத்தினால் சிறப்பு.

1956-ஆம் ஆண்டு மலாயா கல்விக் கொள்கைக்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை தான் ரசாக் திட்டம். இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் சொல்வார்கள். மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனியுங்கள்.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி என்பது 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது. சரிங்களா. ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. காலத்துவ பிரிட்டிஷார் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட அறிக்கைகள்.

முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).

இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் முதலாவதாக வந்த பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். சீனர்களும் இந்தியர்களும் ஆதரிக்கவில்லை.

இரண்டாவதாக வந்த பென் பூ அறிக்கையை மலாய்க்காரர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். இரு தரப்பிலும் இணக்கச் சுணக்கங்கள். அதைச் சரி செய்யவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம் ஆகும். இந்தக் கட்டுரை நாளையும் தொடரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.01.2022


1. Berci, Liqing Tao, Margaret; He, Wayne (23 March 2006). "Historical Background: Expansion of Public Education". The New York Times. ISSN 0362-4331.

2. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file




 

03 ஜனவரி 2022

டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அறவாரியம் புத்தகப் போட்டி 2021

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் அனைத்துலகப் புத்தகப்போட்டி. இதில் உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தகங்கள் பரிசீலிக்கப்படும்.


விதிமுறைகள்

1. போட்டியின் பெயர்: டான் ஸ்ரீ கே.ஆர். சோமா அனைத்துலகப் புத்தகப்பரிசு.

2. நோக்கம்: அ. அனைத்துலக மற்றும் மலேசிய நிலையில் தரமான புத்தகங்கள் வெளிவர ஊக்குவித்தல்

ஆ. இந்தப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.

இ. படைக்கப்படும் நூல்களில் தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் மிகு பயன் விளைக்கும் சிறந்த நூலாக அமைதல் வேண்டும்

3. பரிசுத் தொகைகள்

அ. பரிசுத் தொகை - அனைத்துலக நிலையில் - US $ 10,000

ஆ. பரிசுத் தொகை - மலேசியப் பிரிவில் - RM 10,000

4. படைப்பு

அ. துறை: நாவல், வரலாறு, ஆய்வு, தனி ஒருவரின் சிறுகதைத் தொகுப்பு, தனி ஒருவரின் கவிதைத் தொகுப்பு

ஆ. மொழி – தமிழ்

இ. மொழித் தரம் – தமிழ் மொழியின் இலக்கணம், சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில் தரமுடையதாக இருத்தல் அவசியம்.

ஈ. படைப்புத் திறன் – அந்தந்த துறைகளுக்கு உரிய கலைக் கூறுகள், உத்திகள் ஆகியவற்றுடன் பண்பாட்டு வரம்புக்கும் உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

உ. விளைபயன் – தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகு பயன் விளைத்தல்.

((i) மொழி இலக்கியம் கலை பண்பாடு போன்றவை

(ii) கல்வி, அறிவியல், சமூகவியல்

(iii) மனித அக மேம்பாடு, வாழ்வியல் நெறி போன்றவை

(iv) இதர மேம்பாட்டுக் கூறுகள்

5. நூலின் பங்கேற்புத் தகுதி

(i) சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.

(ii) கல்வித் தகுதி கருதி உருவாக்கப்படும் ஆய்வேடு ஏற்றுக் கொள்ளப் படாது.

(iii) வாழ்க்கை வரலாற்று நூல்களில், படைப்பாளரின் சொந்த வரலாற்று நூல் ஏற்றுக் கொள்ளப்படாது.

(iv) குறிப்பிட்ட நோக்கத்திற்காக இடுபணியாகச் செய்யப்படும் ஆய்வு சார்ந்த நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

(v) பொது நல நோக்கங்களுக்கு அப்பால் பட்டவையாக எழுதப்படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப் படாது.

(vi) அனைத்து நூல்களும் ISBN பதிவு பெற்றிருக்க வேண்டும்

(vii) ஏற்கனவே வெளிவந்து இந்தப் போட்டிக்காக திருத்தி, மறு பதிப்பு செய்து அனுப்பி வைக்கப்படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

6. நூலின்அமைப்பு

(i) அளவு – 14 செ.மீ. 21 செ.மீ. அளவுக்கு குறையாதது

(ii) பக்கங்கள் – 200 பக்கங்களுக்கு குறையாதது

(iii) எழுத்துரு – 12 புள்ளிக்கும் மிகாதது (வாசிப்புத் தகுதி)

(iv) பதிப்புத்தரம் – ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.

7. படைப்பாளர்

(i) அறவாரியப் பொறுப்பாளர்களும் பணியாளர்களும் அவர்தம் குடும்பத்தின் நேரடி உறுப்பினர்களும் பங்கேற்புக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

(ii) குறிப்பிட்ட ஆய்வு ஆண்டிற்குரிய நடுவர்களது குடும்பங்களின் நேரடி உறுப்பினர்கள் பங்கேற்புக்குத் தகுதி பெற மாட்டார்கள்.

8. பங்கேற்பு

(i) படைப்பாளரோ அல்லது நூலைப் பதிப்பிக்கும் பதிப்பகத்தாரோ நூல்களைப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்.

(ii) ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

(iii) பங்கேற்கும் நூலாசிரியர் / பதிப்பகத்தார் போட்டிக்கு 5 படிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

(iv) நூல்கள், போட்டி அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டு (2016-2017) கால வரம்புக்கு உட்பட்ட முதற் பதிப்பாக இருத்தல் வேண்டும்.

(v) பங்கேற்புக்கு, முறையாக நிறைவு செய்யப்பட்ட நுழைவுப் படிவம் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

(vi) பங்கேற்புக்கு உரிய நுழைவுப் படிவத்தை (http;//tansrisomabookaward.com.my) என்ற வாரிய அகப் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

(vii) நூல்கள் அனுப்பப் பட்டதற்கான சான்று, அவை வந்து சேர்ந்ததற்கான சான்றாகாது. முடிவு நாளுக்குள் வந்தடைந்த நூல்கள் மட்டுமே பங்கேற்புக்குத் தகுதி பெறும்.

(viii) பங்கேற்புக்கான நுழைவுப் படிவமும் நூல்களும் வந்து அடைந்ததற்கான சான்றுக் கடிதம் பங்கேற்பாளருக்கு அனுப்பப்படும்.

(ix) தெரிவு செய்யப் பட்டவர்களுக்கு மட்டுமே போட்டி முடிவு குறித்து அறிவிக்கப்படும்.

(x) அறவாரியத்தின் அகப் பக்கத்திலும் ஊடகங்களிலும் போட்டி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்.

9. பங்கு பெறும் நூல்களின் மதிப்பீடு

(i) போட்டிக்குத் தகுதி பெறும் ஒவ்வொரு நூலும் தனிப்பட்ட 3 நடுவர்களால் ஆய்வு செய்யப்படும்.

(ii) நடுவர்களின் தனிப்பட்ட முடிவுகள், அறவாரியப் பேராளர்கள் அடங்கிய தெரிவுக் குழுவால் ஓருங்கிணைக்கப்பட்டு, பரிசுக்குரிய நூல் தேர்வு செய்யப்படும்.

(iii) பங்கு பெறும் ஒவ்வொரு நூலுக்கும் கீழ்க்காணும் மூன்று கோணங்களில், மேற் கூறப்பட்ட 4-ஆம் விதிமுறை சார்ந்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அ. மொழித்தரம் - 4 ஆ & இ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்

ஆ. படைப்புத்திறன் - 4 உ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.

இ. விளைபயன் - 4 உ தரும் விளக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்

(iv) மதிப்பெண்கள்

அ. படைப்புத்திறன் - 50 %

ஆ. மொழித்தரம் - 25 %

இ. விளைபயன் - 25 %

10. பங்கேற்கும் நூல்களின் பதிப்புக் காலம்

(i) பரிசுக்கான ஆய்வும் தெரிவும் ஈராண்டுகளுக்கு உரியது.

(ii) போட்டிக்கு உரிய இரண்டாவது ஆண்டின் டிசம்பர் மாதத்தில் போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

(iii) போட்டிக்கு உரிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மார்ச்சு 31-ஆம் நாளுக்குள் அனுப்பப் படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

(iv) இரண்டாம் ஆண்டின் இறுதிக்குள் பரிசு முடிவு, பரிசளிப்பு நாள், இடம் போன்ற தகவல்கள் அறிவிக்கப்படும்.

11. நடுவர்கள்

(i) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், அறவாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு நடுவர்களாக நியமிக்கப் படுவர்.

(ii) போட்டிப் பரிசு பற்றிய நடுவர்களின் முடிவே இறுதியானது.

12. பரிசளிப்பு

(i) பரிசு பெற்றவர்களுக்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர் அல்லது டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா அறவாரியத் தலைவர், இருவரில் ஒருவர் பரிசுகளை வழங்குவார்.

(ii) அனைத்துலகப் போட்டியிலும், மலேசியப் போட்டியிலும் வெற்றியாளர்களுக்கு ஒரே மாதிரியான பதக்கமும் நினைவுச் சின்னமும் வழங்கப்படும்.

(iii) அனைத்துலகப் பரிசு பெறுபவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர் அல்லது முறையான உதவியாளர் ஒருவருக்கும் பரிசளிப்பு நிகழும் இடத்திற்கு இரு வழி வானூர்திப் போக்குவரத்தும் தங்குமிட வசதியும் வழங்கப்படும்.

(iv) பரிசு பெறுபவர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமது படைப்பைப் பற்றி 10 நிமிடங்கள் உரை நிகழ்த்துவார்

(v) பரிசு முடிவு செய்யப்பட்ட பின் நூலுக்கு உரியவரோ அவரைப் பிரதிநிதிக்கும் சட்ட ரீதியான வாரிசோ, அப்பரிசினைப் பெறத் தகுதி உடையராவார்.

(vi) வெற்றி பெறும் படைப்பாளர்கள் பரிசு பெறு முன், தங்களது நூலின் 30 பிரதிகளை அறவாரியத்திற்கு வழங்க வேண்டும்.

13. விதிகளுக்கு விளக்கமும் மாற்றமும்

(i) விளக்கம்

இந்த நிலை விதிகளில் நேரடியாகக் குறிப்பிடப் படாத அல்லது போதிய விளக்கமளிக்கப் படாத சூழல் அல்லது சிக்கல் தோன்றும் நிலையில், அது குறித்து அறவாரியம் எடுக்கும் நிலைப்பாடே இறுதியானது.

(ii) மாற்றம்

அ. தேவையென்று கருதப்படும் போது, இந்த நிலை விதிகளில் புதியவற்றைச் சேர்க்கவோ இருக்கும் ஒன்றைத் திருத்தவோ, நீக்கவோ அறவாரியத்துக்கு உரிமையுண்டு.

ஆ. எனினும் அறவாரியத்தால் குறைந்த பட்சம் மூவரைக் கொண்டு அமைக்கப்படும பணிக் குழுவின் ஆய்வுக்கும், பரிந்துரைக்கும் ஏற்பவே மாற்றங்கள் செய்யப்படும்.

14. எல்லா படைப்புகளும் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப் படவேண்டும்.

15. Download Form : http://tansrisoma.nlfcs.com.my/EntryForm.pdf

டத்தோ பா. சகாதேவன் PJN, SSA, PPT, ANS,
நிர்வாக இயக்குனர்,
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம்,
10 வது மாடி,
விஸ்மா துன் சம்பந்தன்,
த.பெ.எண் 12133 50768
கோலாலம்பூர்.

DATUK B.SAHADEVAN PJN, SSA, PPT, ANS,
Managing Director,
NATIONAL LAND FINANCE COOPERATIVE SOPCIETY,
Tan Sri K.R.Soma Language & Literary Foundation 10th Floor,
Wisma Tun Sambanthan,
P.O.Box 12133+ 50768.
Kuala Lumpur.

தொலைபேசி; 603 2273 1250

தொலைநகல்; 603 2273 0826

மின்னஞ்சல் முகவரி:

kpselvam@tansrikrsomabookaward.com

parvathi@tansrikrsomabookaward.com





 

18 டிசம்பர் 2021

கட்டடம் - கட்டிடம் - எது சரி?

பலருக்கும் இந்தக் குழப்பம். கட்டிடம் என்று சிலர் எழுதுகிறார்கள். கட்டடம் என்று சிலர் எழுதுகிறார்கள். இரண்டில் எது சரி?


இந்தச் சொற்களின் கட்டுமானங்களைப் பார்க்க வேண்டும். முதலில் *கட்டிடம்* என்ற சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *இடம்* = *கட்டிடம்*

கட்டு இடம் என்பது ஒரு கட்டளைப் பொருள். வினைத் தொகை கொண்ட பொருளைத் தருகிறது. கட்டுவதற்கு உரிய இடத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

கட்டு இடம் என்பது கட்டிய இடம்; அல்லது கட்டுகின்ற இடம்; அல்லது கட்டும் இடம். இங்கே இறந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருகின்றன. ஆகவே *கட்டிடம்* என்பது ஒரு வினைத் தொகையாய் நிற்கிறது.

கட்டிய இடம் என்பதன் மூலம் 'கட்டுமானம் எழுப்பப் படுவதற்குக் காரணமாக உள்ள இடம்' என்று பொருள் படுகிறது.

ஒரு கட்டுமானம் தோன்றுவதற்கு உரிய ஓர் இடத்தை அல்லது ஒரு வீட்டை அல்லது ஒரு மனையை கட்டு இடம் = *கட்டிடம்* என்று அந்தச் சொல் குறிக்கின்றது.

ஆக, இது கட்டிய இடத்தில் எழுந்து நிற்கும் ஒரு கட்டுமான அமைப்பைக் குறிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.

அடுத்து *கட்டடம்* எனும் சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *அடம்* = *கட்டடம்*

இந்த இடத்தில் *அடம்* என்பது தொழில் பெயர் விகுதிகளில் ஒன்றாகும். கட்டளைப் பொருள் தரும் வினை வேர்ச் சொல்லுடன் ஈற்றில் (இறுதியில்) ஒரு விகுதி சேர்ந்தால் தொழில் பெயர் உருவாகிறது.

இதைத்தான் விகுதி பெற்ற தொழில் பெயர் என்கிறோம். ஆக *அடம்* என்பது ஒரு தொழில் பெயரின் விகுதி.

*கட்டடம்* என்பது கட்டும் செயலால் விளையும் பொருளைக் குறிக்கிறது. ஆக, கட்டடம் என்பதே கட்டுமானத்திற்கு மிகப் பொருத்தமான சொல் என்பது தெளிவாகிறது.

எடுத்துக்காட்டாக *ஒற்றடம்*. இதைப் பிரித்துப் பாருங்கள். ஒற்று + அடம் = *ஒற்றடம்*.  

ஆகவே, *கட்டடம்* என்பது கட்டுமானத்தைக் குறிப்பது.

*கட்டிடம்* என்பது கட்டுமானத்திற்கான இடத்தைக் குறிப்பது.

இலக்கணப்படி *கட்டடம்* என்பதே சரி.

பள்ளிக்கூடக் கட்டடம்; மருத்துவமனைக் கட்டடம்; ஈப்போவில் உள்ள கட்டடம் என்று எழுதுவதே சரி. மாடி மாடியாக நிற்கிறதே அதுதான் கட்டடம். சும்மா வெறும் தரையாகக் கிடக்கும் இடம் கட்டிடம். அதாவது ஒரு கட்டடம் கட்டப் படுவதற்காக உள்ள இடம். அல்லது ஒரு கட்டடம் கட்டப்பட்டு இருக்கும் இடம்.

*கட்டடம்* என்பதே சரி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.12.2021