18 டிசம்பர் 2021

கட்டடம் - கட்டிடம் - எது சரி?

பலருக்கும் இந்தக் குழப்பம். கட்டிடம் என்று சிலர் எழுதுகிறார்கள். கட்டடம் என்று சிலர் எழுதுகிறார்கள். இரண்டில் எது சரி?


இந்தச் சொற்களின் கட்டுமானங்களைப் பார்க்க வேண்டும். முதலில் *கட்டிடம்* என்ற சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *இடம்* = *கட்டிடம்*

கட்டு இடம் என்பது ஒரு கட்டளைப் பொருள். வினைத் தொகை கொண்ட பொருளைத் தருகிறது. கட்டுவதற்கு உரிய இடத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

கட்டு இடம் என்பது கட்டிய இடம்; அல்லது கட்டுகின்ற இடம்; அல்லது கட்டும் இடம். இங்கே இறந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருகின்றன. ஆகவே *கட்டிடம்* என்பது ஒரு வினைத் தொகையாய் நிற்கிறது.

கட்டிய இடம் என்பதன் மூலம் 'கட்டுமானம் எழுப்பப் படுவதற்குக் காரணமாக உள்ள இடம்' என்று பொருள் படுகிறது.

ஒரு கட்டுமானம் தோன்றுவதற்கு உரிய ஓர் இடத்தை அல்லது ஒரு வீட்டை அல்லது ஒரு மனையை கட்டு இடம் = *கட்டிடம்* என்று அந்தச் சொல் குறிக்கின்றது.

ஆக, இது கட்டிய இடத்தில் எழுந்து நிற்கும் ஒரு கட்டுமான அமைப்பைக் குறிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.

அடுத்து *கட்டடம்* எனும் சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *அடம்* = *கட்டடம்*

இந்த இடத்தில் *அடம்* என்பது தொழில் பெயர் விகுதிகளில் ஒன்றாகும். கட்டளைப் பொருள் தரும் வினை வேர்ச் சொல்லுடன் ஈற்றில் (இறுதியில்) ஒரு விகுதி சேர்ந்தால் தொழில் பெயர் உருவாகிறது.

இதைத்தான் விகுதி பெற்ற தொழில் பெயர் என்கிறோம். ஆக *அடம்* என்பது ஒரு தொழில் பெயரின் விகுதி.

*கட்டடம்* என்பது கட்டும் செயலால் விளையும் பொருளைக் குறிக்கிறது. ஆக, கட்டடம் என்பதே கட்டுமானத்திற்கு மிகப் பொருத்தமான சொல் என்பது தெளிவாகிறது.

எடுத்துக்காட்டாக *ஒற்றடம்*. இதைப் பிரித்துப் பாருங்கள். ஒற்று + அடம் = *ஒற்றடம்*.  

ஆகவே, *கட்டடம்* என்பது கட்டுமானத்தைக் குறிப்பது.

*கட்டிடம்* என்பது கட்டுமானத்திற்கான இடத்தைக் குறிப்பது.

இலக்கணப்படி *கட்டடம்* என்பதே சரி.

பள்ளிக்கூடக் கட்டடம்; மருத்துவமனைக் கட்டடம்; ஈப்போவில் உள்ள கட்டடம் என்று எழுதுவதே சரி. மாடி மாடியாக நிற்கிறதே அதுதான் கட்டடம். சும்மா வெறும் தரையாகக் கிடக்கும் இடம் கட்டிடம். அதாவது ஒரு கட்டடம் கட்டப் படுவதற்காக உள்ள இடம். அல்லது ஒரு கட்டடம் கட்டப்பட்டு இருக்கும் இடம்.

*கட்டடம்* என்பதே சரி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.12.2021





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக