22 ஜூன் 2011

கணினி தொடங்குவதற்கு முன்

கே.எஸ்.ரவிகுமார் ksravikumar@gmail.com

கே: கணினி தொடங்குவதற்கு முன் Booting நடைபெறுகிறது. அப்போது எந்த எந்தக் கோப்புகள் அல்லது நிரலிகள் இயக்கப் படுகின்றன?


ப:
முதன் முதலாகக் கணினியை முடுக்கியதும் (On செய்ததும்) BIOS தன் வேலையைத் தொடங்கும். BIOS என்றால் Basic Input Output System. தமிழில் ‘அடிப்படை
உள்ளீடு வெளியீட்டு முறைமை’.

கணினியின் தாய்ப்பலகையில் உள்ள அனைத்துச் சாதனங்களையும் ஓர் ஆரம்ப நிலைக்கு கொண்டு வரும் முறைக்குத் தான் இந்த
அடிப்படை உள்ளீடு வெளியீடு முறைமை என்று பெயர். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.

கணினி இன்னும் அதன் விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே நுழையவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்பாக  இந்த BIOS வேலை நடக்கும்.

கணினித்
திரையகத்தில் ஆக முதன் முதலாகச் சில வெள்ளை எழுத்துகள் வரும். பார்த்து இருப்பீர்கள். அவைதான் ‘பையோஸ்’ அறிவிப்புகள்.

‘பையோஸ்’ என்பது கணினியை வழக்கமான நிலையில் செயல் படுத்த ஒரு தயார் நிலையை ஏற்படுத்தித் தரும் ஓர் அடிப்படை செயல்முறை ஆகும். இந்த BIOS முதலில் தாய்ப்பலகையைச் சோதனை செய்யும்.

தாய்ப்பலகையின் சுற்று இயக்க முறை அதாவது Circuit சரியாக இருக்கிறதா என்று பார்க்கும். அடுத்து RAM எனும் தற்காலிக நினைவகத்தைப் பரிசோதிக்கும். அதற்கு அடுத்து Hard Disk  எனும் வன்தட்டைப் பரிசோதிக்கும்.

அடுத்து Graphic Card எனும் வரைகலை அட்டையைப் பரிசோதிக்கும்.


ஆக, தாய்ப்பலகையில் பொருத்தப் பட்டு இருக்கும் சாதனங்கள் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் Error Messege எனும் எச்சரிக்கையைச் செய்யும்.

தவறுகள் இருந்தால் அப்புறம் அதோடு அதன் வேலையையும் நிறுத்திக் கொள்ளும். ஒரு மில்லி மீட்டர் நகராது.


இவை அனைத்தும் சோதனை செய்யப் படுவதை POST  அல்லது Power On Self Test என்று சொல்வார்கள். சரி. எல்லாம் ஓ.கே. என்றால் ’பையோஸ்’ அடுத்து நெகிழ்தட்டின் பக்கம் தன் கடைக்கண் பார்வையைத் திருப்பும். நெகிழ்தட்டு என்றால் Diskette.

நெகிழ்தட்டில் DBR  எனும்  Dos Boot Record இருக்கிறதா என்று பார்க்கும். இந்த டி.பி.ஆர். எனும் இயக்கப் பதிவுகள் நெகிழ்தட்டில் இல்லை என்றால் வன்தட்டிற்குப் போய் MBR   எனும்  Master Boot Record இருக்கிறதா என்று பார்க்கும்.

Master Boot Record என்றால் தலைமை இயக்கப் பதிவு. கணினி இப்படித் தான் இயக்க
வேண்டும் அல்லது கணினி இப்படித்தான் இயங்க வேண்டும் என்கிற பதிவு.

அடுத்து இந்த MBR உடனே  DBR ஐத் தேடும். DBR இல்லை என்றால் வேலைகள் அனைத்தும் அப்போதே அப்படியே நிறுத்தப் படும். DBR இருக்கிறது என்றால் அடுத்து IO.SYS கோப்பு தற்காலிக நினைவகத்தில் ஏற்றம் செய்யப் படுகிறது.

அடுத்து IO.SYS கோப்பு CONFIG .SYS எனும் கோப்பைப் பரிசீலிக்கிறது. இந்த ’கன்பிக்.சிஸ்’ கோப்பு MSDOS.SYS எனும் கோப்பை ஏற்றம் செய்கிறது.

கடைசியாக மிக
மிக முக்கியமான COMMAND. COM  கோப்பு ஏற்றம் காண்கிறது. அதைத் தொடர்ந்து இறுதியாக AUTOEXEC.BAT  எனும் கோப்பு கணினிக்குத் தேவையான இயக்கிகளைப் பதிவு செய்து ஏற்றம் செய்கிறது.

அப்புறம் தான் விண்டோஸ் இயங்குதளம் தன் வேலையை முழுமையாக ஆரம்பிக்கும். விண்டோஸ் சின்னம் கணினியின் திரையகத்தில் தெரியும்.

இவை அனைத்தும்
பத்து விநாடிகளில் செய்து முடிக்கப் படுகின்றன. இனிமேல் கணினியைத் தட்டி விட்டதும் கணினி என்ன செய்கிறது என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
|
வாயில்லா
ஜீவன். மனிதனின் தலையெழுத்தை எழுதி வைக்கப் போகும் சித்ரகுப்தன். தயவு செய்து இப்போதே முதல் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

09 ஜூன் 2011

விக்கிப்பீடியாவில் எழுதப் பட்ட கட்டுரைகள்

விக்கிப்பீடியாவில் அடியேன் எழுதிய கட்டுரைகளின் முகவரிகள்:
http://ta.wikipedia.org/wiki/ஈப்போ
http://ta.wikipedia.org/wiki/மலாக்கா
http://ta.wikipedia.org/wiki/ஜாசின்
http://ta.wikipedia.org/wiki/மலாயா
http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா
http://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்
http://ta.wikipedia.org/wiki/பேராக்
http://ta.wikipedia.org/wiki/பேராக் மனிதன்
http://ta.wikipedia.org/wiki/புந்தோங்
http://ta.wikipedia.org/wiki/குளுவாங்
http://ta.wikipedia.org/wiki/தம்பூன்
http://ta.wikipedia.org/wiki/தைப்பிங்
http://ta.wikipedia.org/wiki/கம்பார் நகரம்
http://ta.wikipedia.org/wiki/சீனிவாசகம் டி.ஆர்
http://ta.wikipedia.org/wiki/சிபில் கார்த்திகேசு
http://ta.wikipedia.org/wiki/ராஜாமணி மயில்வாகனம்
http://ta.wikipedia.org/wiki/சந்திரமலர்
http://ta.wikipedia.org/wiki/லெங்கோங்
http://ta.wikipedia.org/wiki/சங்கீத சபா தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/பிலோமினா தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/கிளேபாங் தமிழ்ப்பள்ளி
http://ta.wikipedia.org/wiki/மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்
http://ta.wikipedia.org/wiki/நெகிரி செம்பிலான்
http://ta.wikipedia.org/wiki/ப.மு.அன்வர்


அன்பர்களே, மிகவும் சிரமப் பட்டு எழுதப் பட்டவை. தயவு செய்து படியுங்கள். அன்புடன் தங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

பிலோமினா தமிழ்ப்பள்ளி

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் முகவரி:
http://ta.wikipedia.org/wiki/பிலோமினா_தமிழ்ப்பள்ளி
மலேசியப் பிரதமர்த் துறை அமைச்சர் முருகையா
2009 ஆம் ஆண்டின் விளையாட்டுப் போட்டியை திறந்து வைக்கிறார்

பிலோமினா தமிழ்ப்பள்ளி
, மலேசியாவின் பேராக், ஈப்போ நகரத்தின் சிலிபின் சாலையில் உள்ள புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. பொதுவாக மலேசியா வாழ் மக்கள் பிலோமினா தமிழ்ப்பள்ளி என்று தான் இப்பள்ளியை அழைப்பார்கள். 

ஆனால் அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இந்தப் பள்ளி அந்தக் காலக்கட்டத்தில் ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக இயங்கி வந்தது. 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இப்பள்ளி அதிகாரப் பூர்வமாகத் திறக்கப் பட்டது.

1938ஆம் ஆண்டு இப்பள்ளியில் 21 மாணவர்கள் 3 ஆசிரியர்கள் இருந்தனர். முதலாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை மூன்று வகுப்புகள் மட்டுமே இருந்தன. 

1941 ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது. பின்னர் 4, 5, 6 ஆம் வகுப்புகள் திறக்கப் பட்டன.

ஜப்பானியர் ஆட்சி காலத்தின் போது ஜப்பானிய மொழியைப் போதிக்கும் மையமாகவும் அந்தப் பள்ளி விளங்கியது. அதனால் இரண்டரை ஆண்டுகளுக்குத் தமிழ்மொழி போதிப்பு அங்கு நடைபெறவில்லை. 1945 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப் பட்டது.

1950 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 130 மாணவர்கள் பயின்று வந்தனர். 1965இல் அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்தது. 2010இல் மாணவர் எண்ணிக்கை 400க்கும் மேல் உள்ளது. இப்போது அப்பள்ளியில் 21 ஆசிரியர்களும் 3 அலுவலர்களும் பணிபுரிகின்றனர்.

அடிக்கல் நாட்டு விழா

1950களில் பிலோமினா தமிழ்ப்பள்ளி செப்பனிடப் பட்டது. பணப் பற்றாக்குறையினால் அப்பள்ளி பலகைச் சட்டங்களால் கட்டப் பட்டது. அதனால் 1990 ஆம் ஆண்டுகளில் கரையான் அரிப்பினால் பள்ளி சரிந்து விழும் ஒரு நிலைமையும் ஏற்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு புதுக் கட்டடம் கட்டுவது என பொதுமக்கள் முடிவு செய்தனர். ஒரு செயல் குழுவும் அமைக்கப் பட்டது. 

அப்போது மலேசியாவின் பொதுப் பணி அமைச்சராக டத்தோ ஸ்ரீ சாமிவேலு இருந்தார்.

பேராக் மாநிலத்தின் ஒற்றுமைத் துறை அமைச்சராக டத்தோ ஜி.ராஜு இருந்தார். இவர்கள் இருவரிடமும் உதவி கேட்கப் பட்டது. அவர்கள் இருவரும் உதவி செய்ய முன் வந்தனர்.

1995 ஜூன் மாதம் 17 ஆம் தேதி பிலோமினா தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. நடுவண் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அடிக்கல் நாட்டினர்.

குளு குளு கணினி அறை

புதிய கட்டடம் கட்டப் படுவதால் வேறு பள்ளிக்கு மாணவர்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப் பட்டனர். ஈப்போவில் உள்ள காரனேஷன் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் தங்கிப் படித்தனர். 1997 ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி புதிய பள்ளி மாணவர்களுக்காகத் திறக்கப் பட்டது.

1997 ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. பழைய பள்ளிக்கூடம் இருந்த இடத்திலேயே புதிய மூன்று மாடிக் கட்டடம் இப்போது மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது.

புதிய பள்ளியில் 12 வகுப்பறைகள், ஓர் அறிவியல் கூடம், ஓர் இசை அரங்கம், ஒரு கணினி அறை உள்ளன. குளு குளு கணினி அறையில் 20 கணினிகள் உள்ளன. தற்சமயம் இப்பள்ளியில் 452 மாணவிகள் படிக்கின்றனர். 25 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அலுவலர்கள் நால்வர் உள்ளனர்.

நாடு போற்றும் நல்ல அழகான ஓர் அருமையான தமிழ்ப்பள்ளி. மலேசியாவில் தமிழர்கள் வாழ வேண்டும் என்றால் முதலில் தமிழ் மொழி வாழ வேண்டும்.

ஆக இந்த மலேசிய நாட்டில் தமிழ் மொழியும் தமிழர்களும் வாழ தமிழ்ப்பள்ளிகள் தான் ஜீவநதிகளாக ஆனந்த பைரவிகள் பாடுகின்றன. அந்தப் பள்ளிகளில் ஒன்றுதான் பிலோமினா தமிழ்ப்பள்ளி. 

சிரம் தாழ்த்திக் கைகூப்புகிறேன்.



08 ஜூன் 2011

சந்திரமலர் ஆனந்தவேல்



சந்திரமலர் ஆனந்தவேல் மலேசியாவின் காவல் துறையில் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஆணையர் பதவியை வகித்த முதல் மலேசியப் பெண்மணி.

அனைத்துலகக் காவல் துறையின் மாநாடுகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். ஐக்கிய நாடுகள் சபை யில் உயர் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். மலேசியக் காவல் துறைப் பயிற்சிக் கல்லூரியின் முதல் பெண் ஆணையர்.

சந்திரமலர் ’இண்டர்போல்’ எனும் அனைத்துலகப் போலீஸ் படையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி. நூற்றுக்கணக்கான சிவப்பு விளக்கு மாதர்களை நல்வழி படுத்தியவர்.

ஆயிரக் கணக்கான போதைப் பித்தர்களுக்குச் சீர்திருத்த வழிகளைக் காட்டி அவர்கள் சுயதொழில்களில் ஈடுபட ஊக்குவிப்பு செய்தவர்.


தற்காலிக ஆசிரியர்

சந்திரமலர் ஆனந்தவேல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1941ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் பிறந்த சில நாட்களிலேயே அவருடைய பெற்றோர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர். மலேசியக் குடியுரிமையைப் பெற்றனர். சந்திரமலர் தன் ஆரம்பக் கல்வியை மலாயா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங் நகரில் பெற்றார்.



ஐந்து பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இவர் நான்காவது பெண் பிள்ளை. சந்திரமலரின் தகப்பனார் இரயில்வே அலுவலராகப் பணி புரிந்தார். சந்திரமலர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகச் சேர்ந்தார்.

அப்போதுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் ஆசிரியர் தொழிலுக்குள் போவதையே பெருமையாகக் கருதினர். பெண்களுக்கு ஆசிரியர் தொழில்தான் சிறந்தது என்று பெற்றோரும் விரும்பினர்.

பேராக் ஈப்போவில் சந்திரமலர் காவல் அதிகாரி பயிற்சியின் போது 1960 ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு சந்திரமலருக்கு இடம் கிடைத்தது.

பேராக் ஈப்போவில் இரண்டு ஆண்டு காலம்


பயிற்சி பெற்றார். பின்னர் பினாங்கு மாநிலக் காவல் துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சேர்க்கப் பட்டார். அவருக்குக் காவல் துறையின் சீருடைகள் அணியாத உளவுத் துறையில் இடம் கிடைத்தது.

அவருடைய பெரும்பாலான பணிகள் உளவுத் துறையைச் சார்ந்தவை. தற்காப்புக் கலையான ஜூடோவில் சந்திரமலர் தேர்ச்சி பெற்று இருந்ததால் அவருக்கு உளவுத்துறை வழங்கப்பட்டது.


ஜூடோ தற்காப்புக் கலை பயின்றவர்

1960 களில் இவர் பேராக் ஈப்போவில் உள்ள பயிற்சி முகாம்களில் காவல் துறைப் பயிற்சிகளைப் பெற்றார். குறி சுடுதல், தற்காப்புக் கலைகள், கொமாண்டோ பயிற்சிகள் போன்றவை குறிப்பிடத் தக்கவை. இவர் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார்.

ஜூடோ இவருக்குப் பிடித்த தற்காப்புக் கலை. ‘ஆண்களால் எதைச் செய்ய முடியுமோ அதைப் பெண்களாலும் செய்ய முடியும்’ என்பது சந்திரமலர் அடிக்கடி சொல்லும் தத்துவ வாசகங்கள்.


ஒரு முறை பினாங்கில் நடந்த நிகழ்ச்சி. போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு விரட்டிச் சென்றார்.

சந்து பொந்துகளில் எல்லாம் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கடத்தல்காரன் கடைசியாக ஒரு சாலையின் சந்திப்பில் மாட்டிக் கொண்டான். அவனோடு போராட்டம் நடத்தும் போது அவர் தலைக் கவசத் தொப்பியால் தாக்கப் பட்டு காயம் அடைந்தார்.

பினாங்கு ரகசியக் காவல் துறை

அப்படிப் பட்ட சூழ்நிலையிலும் அவனைத் துப்பாக்கியால் சுடாமல் பிடித்தார். அவர் நினைத்து இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்று இருக்க முடியும். ‘அனாவசியமாக ஓர் உயிர் பலியாகக் கூடாது’ என்பதில் உறுதிப்பாடு கொண்டவர் சந்திரமலர்.

அமெரிக்கா வாஷிங்டனுக்கு போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சிக்காகச் செல்லும் போது
ஓர் ஆண்டிற்குப் பின்னர், அவர் பினாங்கு ரகசியக் காவல் துறையில் விபாசார ஒழிப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். அனுதினமும் ரகசியக் கும்பல்களுடன் மோதிக் கொள்வது, அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவது வாடிக்கையான விஷயங்கள்.

அவருடைய குழுவில் 13 பேர் இருந்தனர். எட்டு ஆண்கள் ஐந்து பெண்கள். ஒரு நாளைக்கு 15 விபசார விடுதிகளில் அதிரடி நடவடிக்கைகள் நடந்தன.


சில சமயங்களில் அவர் ஒரு விலைமாதைப் போல உடை அணிந்து, ஒரு விலைமாதைப் போலவே இயல்பாக நடித்துத் துப்பு துலக்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. கள்ளத் தனமாகச் சூதாடுபவர்களுடன் சேர்ந்து கொண்டு இவரும் சூதாடுவார்.

தங்களுடன் சூதாட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர் ஒரு போலீஸ் அதிகாரி எனத் தெரிந்ததும் விளையாட்டாளர்கள் தப்பித்து ஓடுவார்கள். அந்தச் சமயத்தில் வெளியே சீருடை இல்லாமல் இருக்கும் மற்ற அதிகாரிகள் அவர்களை வளைத்துப் பிடிப்பார்கள்.


சீருடை இல்லாத பணி

சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து “Kelinga cha bor lai leow!” என்று சீன மொழியில் கத்திக் கொண்டு ஓடுவார்கள். “இந்தியப் பெண் வந்து விட்டாள்’ என்று பொருள். ‘ஒரு பெண்ணால் தண்டிக்கப் படுவதை எந்த ஓர் ஆணும் விரும்புவது இல்லை.

ஆனால், ஓர் அதிகாரி ஊழல் இல்லாதவர் என்று தெரிந்ததும் குற்றவாளிகள் அந்த அதிகாரிக்கு மதிப்புயையும் மரியாதையையும் கொடுப்பார்கள்’ என்று சொல்கிறார் சந்திரமலர்.


போதைப் பொருளும் விபசாரமும் இணைந்தே செல்பவை. அதனால் விபாசார ஒழிப்பு நடவடிக்கைகளின் போது போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளையும் உடன் அழைத்துச் செல்வார்.

இளம்பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெண்கள் தங்கி இருக்கும் இடங்களில் காவல் துறையினர் நுழைய முடியாது. ஆனால், போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.


அவ்வாறான நடவடிக்கைச் சமயங்களில் பெரும் அளவில் பணம் பறிமுதல் செய்யப் படும். பறிமுதல் செய்யப் படும் பணம் நேர்மையாகக் கையாளப் பட வேண்டும் என்றும் உறுதியாய் இருப்பார் சந்திரமலர்.

தெருவில் பறந்த பணக் கத்தைகள்

தன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கைகளும் செய்வார். பினாங்குத் தீவின் பர்மா சாலையில் ‘யுனைடெட் ஓட்டல்’ எனும் தங்கும் விடுதி இருந்தது. அந்த விடுதிக்குள் சந்திரமலரும் அவருடைய அதிகாரிகளும் திடீர்ச் சோதனை மேற்கொண்டனர்.



பினாங்கில் உள்ள பர்மா சாலை
அந்தத் தங்கும் விடுதி கள்ளச் சூதாட்டத்திற்குப் பேர் போன இடம். சூதாட்ட அறைக்குள் நுழைந்ததும் சூதாடிகள் பணத்தையும் சில்லுகளையும் பண அடையாளத் தட்டைகளையும் கழிவறைத் துவாரங்களில் வீசினர். ஜன்னல் வழியாகவும் பணக் கத்தைகளை வீசி எறிந்தனர்.

ஏறக்குறைய 40,000 மலேசிய ரிங்கிட். பணத் தாள்கள் தெருவில் மிதந்து வரவதைப் பொறுக்குவதற்கு சந்திரமலரின் அதிகாரிகள் கீழ் தளத்திற்கு விரைந்தனர்.


பின்னர், சந்திரமலர் தன்னுடைய உளவு அதிகாரிகளை அனைவரையும் பரிசோதனை செய்தார். அவர்களுடைய காலுறைகள், உள்ளாடைகளில் இருந்து பணக் கற்றைகள் பல ஆயிரங்கள் மீட்கப் பட்டன.

தன்னிடம் பணி புரிபவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் சந்திரமலர் உறுதியாக இருந்தார். அவருடைய இந்த மாதிரியான கெடுபிடிகள் தான் பின்னாளில் அவருக்குப் பதவி உயர்வுகள் கிடைப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தின.


போதை பித்தர் மீது இரக்கம்

ஒரு முறை ஓர் அமெரிக்க இளம் பெண் டாக்டர் பட்ட ஆய்வுகள் செய்ய பினாங்கிற்கு வந்து இருந்தார். நடுத்தரமான ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். ஒரு திடீர்ச் சோதனையின் போது அந்தப் பெண் கைது செய்யப் பட்டார்.
புக்கிட் அமான் - மலேசியப் போலீஸ் தலைமையகம்
அவருடைய கைகளில் ஊசி குத்திய அடையாளத் தளும்புங்கள் இருந்தன. போதைப் பொருள்களை வாங்குவதற்காகத் தன் உடலையே சில நாட்களாக விற்று வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

சந்திரமலருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார். எனினும், மலேசியாவில் தங்குவதற்கு வழங்கப் பட்ட கால வரையறையையும் தாண்டி அந்தப் பெண் தங்கி இருந்து இருக்கிறார்.

அந்தப் பெண்ணின் மீது இரக்கப் பட்டார் சந்திரமலர். குடிநுழைவு அதிகாரிகளிடம் பேசி தண்டனை இல்லாமல் அவரைத் தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தார். எனினும் அப்பெண் இரண்டு மாதங்கள் கழித்து அதிகமானப் போதை மருந்தை உடலுக்குள் செலுத்தியதால் இறந்து போனார்.


இன்னொரு முறை 12 வயது இளம் பெண்ணை விபசாரப் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளார். ஒரு முறை ஒரு வாடிக்கையாளுருக்குச் சேவை செய்தால் அந்தப் பெண்ணுக்கு ஐந்து ரிங்கிட் சம்பளமாகக் கொடுக்கப் பட்டது.

ஆனால், தரகர்கள் வாடிக்கையாளரிடம் இருந்து தலா 100 ரிங்கிட் வசூலித்து வந்தனர். பின்னர், அந்த இளம்பெண் ஒரு பெண் புனர் வாழ்வு மையத்திற்கு அனுப்பப் பட்டார். அங்கே அவருடைய வாழ்க்கை நல்ல வழிக்குத் திருப்பப்பட்டது. சந்திரமலரைப் பார்க்கும் போது எல்லாம் அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி சொல்வாராம்.


அமெரிக்காவில் போதைப் பொருள் பயிற்சி

மலேசிய காவல் துறையின் முன்னாள் ஐ.ஜி.பி துன் ஹனிப் ஒமார். சந்திரமலரை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தியவர்

பொது மக்களின் பார்வையில் சந்திரமலர் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்று இருந்தார். இருந்தாலும் அவருடைய மேல் அதிகாரிகளிடம் சுமுகமான உறவு முறைகள் நல்லபடியாக அமையவில்லை.

சிக்கல்கள் நிறைந்து இருந்தன. அளவுக்கு மீறி சுதந்திரமாகவும் அளவுக்கு மீறி தன்னிச்சையாகவும் சந்திரமலர் செயல் படுகிறார் எனும் குறைபாடுகள் அதிகாரிகளிடையே நிரம்பி இருந்தன.

அவருக்கு வழங்கப் பட்ட அதிகார உரிமைகளை அவர் தாண்டிச் செல்வதாகச் சிலர் அதிருப்தி அடைந்தனர். தொழிலில் உறவு இறுக்கங்கள் ஏற்பட்டன். அதனால் அவருக்கு 17 ஆண்டுகள் பதவி உயர்வு கிடைக்கவில்லை.


1974 ஆம் ஆண்டு சந்திரமலர் அமெரிக்காவிற்கு அனுப்பப் பட்டார். வாஷிங்டனில் இருக்கும் அனைத்துலகப் போலீஸ் தலைமையகத்தில் போதைப் பொருள் பிரிவில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். இரு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர்.

அமெரிக்காவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சந்திரமலர் மலேசியாவில் பல ஊர்களில் பல நூறு காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சிகளைக் கொடுக்கும் வாய்ப்புகளைப் பெற்றார்.


ஊழல் குற்றச்சாட்டு

1976 ஆம் ஆண்டு சந்திரமலர் மீது ஓர் ஊழல் குற்றம் பதிவு செய்யப் பட்டது. அதைப் பற்றி மலேசிய புக்கிட் அமான் காவல் தலைமையகம் விசாரணை நடத்தியது. அதில் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டது. அந்த விசாரணையின் மூலம் அவர் ஒரு நல்ல சிறப்பான அதிகாரி என்பது அறியப் பட்டது.
கோலகுபு பாரு நகரத்தின் பிரதான சாலை
ஏதோ உள்ளார்ந்த காரணங்களினால் அவருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப் படவில்லை என்பதும் தெரிய வந்தது. அளவுக்கு மீறிய நியாயமான கொள்கை, லஞ்ச மறுப்பு, லஞ்ச வாங்கிய அதிகாரிகளைக் கண்டித்து தண்டித்தது போன்ற விவாரங்களினால் சந்திரமலர் பழி வாங்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெளிவானது. விசாரணைக் குழுவின் தலைவராக ஐ.ஜி.பி துன் ஹனிப் ஓமார் இருந்தார்.

அதன் பின்னர்தான் சந்திரமலரின் தன்னமலற்றச் சேவைகள் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தன. அவர் தடாலடியாக எடுக்கும் முடிவுகள் நல்ல முடிவுகளாக இருந்தன என்பதும் மேலிடத்திற்கு தெரிய வந்தது.

அதனால் அவர் உடனடியாக துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்வு பெற்றார். அடுத்து அவர் சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் கோலகுபு பாரு காவல்துறை கல்லூரிக்கு ஓர் உயர்ப் பயிற்சியாளராக அனுப்பப்பட்டார்.


எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து

1981 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் ஷா ஆலாம் காவல் துறைக்கு அனுப்பப் பட்டார். அங்கு பணியாற்றும் போது அவர் Deputy Superintendent of Police எனும் பதவி உயர்வைப் பெற்றார். அவருடைய அயராத உழைப்பிற்கும் தளராத சேவைகளுக்கும் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் கிடைத்தன.

1994 ஆம் ஆண்டு பதவி ஓய்வு முன் அவருக்கு துணை ஆணையர் பதவி வழங்கப் பட்டது. அடுத்து அவர் புக்கிட் அமான் தலையகத்தில் உயர் காவல் துறை பொறுப்பில் அமர்த்தப் பட்டார்.

அப்போது மலாய்க்காரர் அல்லாத எந்தப் பெண்ணும் அந்தப் பதவியை அதுவரை வகிக்கவில்லை. பதவி ஓய்வு பெற்ற பின் அவர் அடிக்கடி பினாங்கு நகருக்குச் செல்வது உண்டு.

ஐ.ஜி.பி துன் ஹனிப் ஓமார்
சந்திரமலர் தன் பதவி காலத்தில் நூற்றுக்கணக்கானோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவர்களில் பலர் நாடறிந்த பிரபலங்கள். அவர்களைப் பார்த்து பேசுவதும் உண்டு. அவர்களில் நண்பர்களும் உள்ளனர்; எதிரிகளும் இருக்கிறார்கள்.

எந்த நேரத்திலும் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் எச்சரிக்கையுடன் நடமாடுகின்றார். சில சமயங்களில் உணவகங்களுக்குக் குடுமபத்துடன் போவார். அவர்கள் சாப்பிட்ட கட்டணத்தை யாராவது கட்டி விட்டுப் போயிருப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

யார் என்று கடை முதலாளியிடம் கேட்டால் அவரும் சொல்வது இல்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அவருடைய வாழ்க்கையில் நிறைய நடந்து வருகின்றன.


கணவர் ஆனந்தவேலுடன் சந்திரமலர். பிள்ளைகள் (இடமிருந்து) சுரேன், செல்வி, குகன்.
அன்னை திரேசா சந்திரமலரின் ஆன்மீகத் தலைவர். இப்போது பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை.ஆன்மீகத் துறையில் அதிகமாக ஈடுபாடு.

சந்திரமலரின் கணவரின் பெயர் ஆனந்தவேல். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரு ஆண்கள். ஒரு பெண். பிள்ளைகள் யாருமே தாயாரைப் பின்பற்றி காவல் துறை வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அன்னை திரேசா சந்திரமலரின் ஆன்மீகத் தலைவர்.

இப்போது பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்விச் சேவைகள் வழங்கி வருகிறார். ஆன்மீகத் துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகின்றார்.


விருதுகள்

    1975 - Pingat Jasa Masyarakat (PJM) பினாங்கு மாநிலத்தின் சேவை விருது.
    1977 - மலேசியப் பேரரசரிடம் இருந்து Ahli Mangku Negara (AMN) விருது.
    1994 - Kesatrian Mangku Negara (KMN) விருது.

ஆன்மீகத் துறையில் ஈடுபாடு

இன்று வரை மலேசியக் காவல் துறைத் தலைமையகத்தினர் இவருடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைக் கேட்டு வருகின்றனர். அமைச்சர்களும் கருத்துகளைக் கேட்கின்றனர். மலேசிய வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக விளங்கி வருகிறார். மலேசியக் காவல் துறையில் சந்திரமலர் சரித்திரம் படைத்தவர்.

இப்போது கிள்ளான் மாநகரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அன்பாக ‘சந்திரா’ என்று அழைக்கின்றனர். அவர் வீட்டில் ஒரு பூந்தோடத்தை வைத்து பராமரித்து வருகிறார்.

முன்பு அவர் பணியாற்றிய போது ஒழுங்கீன விடுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளம்பெண்களைக் காப்பாற்றி இருக்கிறார். அவர்களுக்குப் புனர்வாழ்வும் வழங்கி உள்ளார். நூற்றுக்கணக்கான போதைப் பித்தர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நல்ல வழிகளைக் காட்டியவர்.

சந்திரமலர் மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு வீரப் பெண்மணி. 2011 ஆம் ஆண்டு வரை எந்த மலேசியத் தமிழ் பெண்ணும் சந்திரமலர் வகித்து வந்த காவல் துறையின் ஏ.சி.பி. ஆணையர் பதவியை வகிக்கவில்லை.

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இவரைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

அதன் முகவரி: 

© https://ksmuthukrishnan.blogspot.com/


10 மே 2011

ராஜாமணி மயில்வாகனம்

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இந்த ஆய்வுப் புதினம் வெளிவந்துள்ளது. அதன் முகவரி:
http://ta.wikipedia.org/wiki/ராஜாமணி


ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள உருப்படியான ஒரு சப்பாத்து இல்லாமல் தவித்த ஒரு மலேசியப் பெண்மணியின் கதை. அவர் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை. 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.

மலேசியப் பேரரசர் வழங்கிய ‘டத்தோ’ விருதைப் பார்த்து மகிழும் வீராங்கனை ராஜாமணி
ஆசியான், தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். பல ஆசிய, தேசியச் சாதனைகளைப் செய்தவர். மலேசியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனைச் சாதனை விருதைப் பெற்ற முதல் மலேசியப்  பெண்மணி. மின்னல் தாக்கி 18 மணி நேரம் நினைவிழந்து உயிருக்குப் போராடியவர்.

நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டதால் 1968 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது. வறுமையான குடுமபத்தில் பிறந்து வாழ்ந்தவர். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி ஓர் உயர் நிலைக்கு வந்தவர். இவர் புகழ் பெற்ற மலேசியப் பெண்களின் பட்டியலில் முதல் பத்து பெண்களில் ஒருவராகப் பவனி வருகிறார். அவர்தான் ராஜாமணி மயில்வாகனம்.

ஒன்பது வயதில் சாதனை

ராஜாமணி தன்னுடைய தொடக்கக் கல்வியை தாப்பா ஆங்கிலப் பள்ளியில் பெற்றார். அவர் நான்காம் வகுப்பில் படிக்கும் போது பள்ளிகளுக்கு இடையிலான 4X400 ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு வயது ஒன்பது. ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்கும் சில பள்ளிகளும் அப்போட்டியில் கலந்து கொண்டன.

ராஜாமணியின் இளமை காலத் தோற்றம்
அந்தப் பந்தயத்தில் ராஜாமணி கடைசி ஓட்டக்காரர். அவர் அபார வேகத்துடன் ஓடி, தன் பள்ளியை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். அது பள்ளி ஆசிரியர்களை மட்டும் அல்ல, எல்லாரையும் ஆச்சரியப் பட வைத்தது. ஏன் என்றால் மற்ற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பலர் மாவட்ட, தேசிய ரீதியில் புகழ்பெற்றச் சிறந்த ஓட்டக்காரர்கள். பல சாதனைகளைச் செய்தவர்கள்.

1965ல் ராஜாமணி
ஓட்டப் பந்தய வரலாற்றையே மாற்றி அமைத்தார்

ஒன்பது வயது மாணவி மற்றவர்களைத் தோற்கடித்தது ஒரு சாதனையாகக் கருதப் பட்டது. அந்தச் சாதனைக்கு மூல காரணம் ராஜாமணிக்குப் பயிற்றுவித்த விளையாட்டு ஆசிரியர் கந்தவனம் என்பவரே. விளையாட்டுத் துறையில் கட்டொழுங்கும் கண்ணியமும் மிக மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.

அந்த நிகழ்ச்சி ராஜாமணியின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று என ராஜாமணி சொல்கிறார்.

ராஜாமணி பயிற்சியின் போது
அதன் பின்னர் 1962 ஆம் ஆண்டிலிருந்து 1966 ஆம் ஆண்டு வரை பேராக் மாநிலத்தின் சிறந்த ஓட்டக்காரராக ராஜாமணி புகழ் பெற்று விளங்கினார். அவரை மிஞ்சி ஓடக் கூடியவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஓட்டப் பந்தய வரலாற்றையே மாற்றி அமைத்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சைக்கிள் இரவல்

அதன் பின்னர் ராஜாமணி மாவட்ட, மாநில, தேசிய ஓட்டப் பந்தயங்களில் கலந்து பல வெற்றி வாகைகளைச் சூடினார். ஐந்தாம் படிவம் படிக்கும் போது ஓட்டப் பந்தயத் துறைக்குத் தற்காலிகமாக ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைத்தார்.

அந்த ஆண்டு ராஜாமணிக்கு உயர்நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு. தேர்வு முடிந்த பிறகு ஓட்டப் பந்தயத்திற்கு வராமல் தூங்குவதிலேயே காலத்தைக் கழித்தார். இதனால் அவருடைய தந்தையார் அவரை ஆர். சுப்பையா எனும் ஓர் ஓட்டப் பந்தயப் பயிற்சியாளரிடம் கொண்டு சென்றார். மாலை 4.40 லிருந்து இரவு 7.30 வரை ஓட்டப் பயிற்சிகள். ராஜாமணியின் வீட்டிற்கும் பயிற்சி நடைபெறும் திடலுக்கும் சற்றுத் தூரம்.


மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் ரசாக்கிடம் இருந்து பரிசு.
அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போய் சைக்கிள்களை இரவல் கேட்பார். ஏன் என்றால் ராஜாமணியின் வீட்டில் அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர முடியாத நிலைமை. ராஜாமணியின் குடும்பம் அப்போது வறுமையில் வாழ்ந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் யாருடைய சைக்கிளையாவது இரவல் வாங்கித் தான் பயிற்சி செய்யும் திடலுக்குச் செல்வார்.


1966 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில்
குத்து விளக்குகள் சேகரிப்பதில் கொள்ளை ஆசை

ராஜாமணிக்கு வீட்டை அலங்கரிப்பதில் மிகவும் விருப்பம். தான் ஓடி வெற்றிப் பெற்ற சின்னங்ளுடன் விநாயகர் சிலைகளையும் நிறைய சேகரித்தார். அவற்றைத் தன்னுடைய பூசை அறையில் வரிசை வரிசையாக அடுக்கி வைத்தார். விதம் விதமான குத்து விளக்குகளைச் சேகரிப்பதிலும் அவருக்கு கொள்ளை ஆசை.

ஒரு நாள் ராஜாமணியின் தந்தையார் ஒரு செருப்பு தைப்பவரிடம் ராஜாமணியை அழைத்துச் சென்றார். அங்கே அவருக்குப் புதிதாக ஒரு புதிய செருப்பு தைத்துக் கொடுக்கப்பட்டது. அதுதான் அவருடைய முதல் ஓட்டப் பந்தயச் செருப்பு.


1964 ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் ராஜாமணி
ராஜாமணியைக் கடைக்குக் கொண்டு போய் ஒரு தரமான, விலை உயர்ந்த சாப்பாத்தை வாங்கிக் கொடுக்க அவருடைய தந்தையாருக்குப் பண வசதி இல்லாமல் போய் விட்டது. அதனால் தான் மலிவான விலையில் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் ராஜாமணியை அழைத்துச் சென்றார். அந்தச் சப்பாத்துகளின் அடிப் பாகத்தில் சாதாரண ஆணிகள் வைத்து அடிக்கப் பட்டன.

மலிவான செருப்புகளை மறக்கவில்லை மறைக்கவும் இல்லை

ஆணிகள் தேய்ந்ததும் அல்லது ஆடத் தொடங்கியதும் அந்தச் சப்பாத்துகளுக்கு மறுபடியும் புதிய ஆணிகள் அடிக்கப் பட்டன. இப்படித் தான் ராஜாமணியின் திடல் வாழ்க்கை போய்க் கொண்டு இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் ராஜாமணியின் குடும்பம் வசதியான வாழ்க்கையில் வாழவில்லை. சாப்பாட்டு மேசையில் என்ன இருந்ததோ அதை மட்டுமே குடும்பத்தினர் சாப்பிட்டு வந்ததாக ராஜாமணியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

தங்களின் ஏழ்மையான வாழ்க்கையை ராஜாமணி ஒரு போதும் மறக்கவில்லை; மறைக்கவும் இல்லை. பத்திரிகைப் பேட்டிகளில் அவருடைய குடும்ப ஏழ்மை நிலைமையை இன்றும் நினைவு படுத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் நேபாளத்தில் இருக்கும் காட்மாண்டு சென்றார். அங்கிருந்து கைலாசத்திற்குப் போகும் போது பத்திரிகையாளர்கள் அவரைப் பேட்டி கண்டார்கள். அந்தப் பேட்டியில் தன் குடும்ப ஏழ்மையைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

ஒரு முறை ஓட்டப் பந்தயத்திற்குப் பொருத்தமான சட்டை சிலுவார் வாங்க வேண்டும் என்று விளையாட்டுப் பயிற்றுநர் சுப்பையா சொன்னார். அதன் விலை 20 ரிங்கிட். அதைக் கூட ராஜாமணியின் தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு குடும்பத்தில் பணச் சிரமம். அரசாங்கமும் உதவி செய்யவில்லை.


60 வயதில் ஓர் ஓட்டப் பந்தய திறப்பு விழாவில்
அறநிறுவனங்களும் ஆதரவு தரவில்லை. ஓர் ஒலிம்பிக் போட்டியில் ஓடவிருக்கும் ஒரு வீரரின் வேதனையான நிலைமை இன்றைய காலக் கட்டத்தில் எல்லாருடைய மனங்களையும் பாதிக்கின்றது. அதை எல்லாம் தாண்டி ராஜாமணி ஓடி சாதனைகள் செய்தார்.

ஒரு தமிழ்ப் பெண் ஒலிம்பிக்கிற்கு போகிறார்


அதனால், உடலைத் துவட்டப் பயன்படும் துண்டுகளை விளையாட்டுப் பயிற்றுநர் சுப்பையா வாங்கி வந்தார். அந்தத் துண்டுகளை ஒன்றாகப் பிணைத்து ஓட்டப் பந்தய உடைகள் தைக்கலாம் என்று அந்தத் துண்டுகள் ஒரு தையல்காரரிடம் கொடுக்கப் பட்டது. இதைக் கேள்விப் பட்ட ஒரு கடைக்காரர் மனம் இளகி இலவசமாக ஒரு ஜோடி ஓட்டப் பந்தய சட்டை சிலவார்களை ராஜாமணிக்கு வழங்கினார்.

அதன் பின்னர், ராஜாமணிக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப் பட்டன. ஆறு மாதங்கள் கடும் பயிற்சிக்குப் பின்னர் ராஜாமணி ஒலிம்பிக் குழுவில் சேர்வதற்கு தகுதி பெற்றார். அதுவரை அரசாங்கம் ராஜாமணிக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. 1964 ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ராஜாமணி தகுதி பெற்றச் செய்தி நாடு முழுமையும் காட்டுத் தீ போல பரவியது.


மலாயா வாழ் இந்தியர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். முதன் முறையாக ஒரு தமிழ்ப் பெண் ஒலிம்பிக்கிற்கு போகிறார் என்பது அப்போதைய காலத்தில் பெரிய விஷயம். அதன் பிறகு தான் ராஜாமணியின் பெயர் பட்டி தொட்டி எல்லாம் உச்சரிக்கும் பெயராக மாறியது. அதுவரை ராஜாமணி வெளிநாடுகளுக்குச் சென்றது இல்லை.

ராஜாமணிக்கு - இந்தியாவில் இருந்து வந்த இந்திய உணவுகள்

அதே காலக் கட்டத்தில் மணி ஜெகதீசன் என்பவரும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப் பட்டார். மலேசிய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் இறுதிச் சுற்றில் இது வரை தேர்வு செய்யப் பட்ட ஒரே ஒரு மலேசியர் மணி ஜெகதீசன் என்பவர் மட்டுமே.

பிரதமர் துன் ரசாக் அவர்களுடன்
ஒலிம்பிக் வீரர் டான்ஸ்ரீ மணி ஜெகதீசன்
வீராங்கனை ராஜாமணி
மலேசியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுமைக்கும் ஒலிம்பிக் 100 மீட்டர் இறுதிச் சுற்றில் தேர்வு செய்யப் பட்ட ஒரே தமிழர் அவர் தான். இப்போது மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு மலேசியாவின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றான டான்ஸ்ரீ விருது வழங்கப் பட்டது.

ராஜாமணி தோக்கியோ சென்ற போது உலகம் முழுவதும் இருந்து வந்த பல போட்டியாளார்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தோக்கியோவில் அவருக்கு 64 ரிங்கிட் சேவை அன்பளிப்பு மட்டுமே வழங்கப் பட்டது. தோக்கியோவில் இருந்த போது இந்திய அணியினருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ராஜாமணிக்கு கிடைத்தது.


மலேசிய அரசாங்கம் புதிய வெள்ளித்தாள் வெளியிட்ட போது
அவர்கள் இந்தியாவில் இருந்து சொந்த சமையல்காரர்களை அழைத்து வந்து இருந்தனர். ராஜாமணிக்கும் இந்திய அணியினர் இந்திய உணவுகளை கொடுத்து உதவினர்.

அங்கே வந்து இருந்த அனைவரும் தங்கள் நாடுகளை பிரதிநிதிப்பதில் பெருமை அடைந்தனர். ராஜாமணியும் மலேசியாவைப் பிரதிநிதிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் ராஜாமணி வெற்றி பெறவில்லை. இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவருக்கு ஒலிம்பிக் அனுபவங்கள் நிறைய கிடைத்தன.

1964 ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில்
இந்தியா தங்கம் வென்றது. அதன் ஹாக்கி
குழுவின் கேப்டன் சராஞ்சித் சிங்

மலேசியாவின் தேசிய கீதம்: ராஜாமணியின் கண்களில் கண்ணீர்

1965 ஆம் ஆண்டு சியாப் விளையாட்டுப் போட்டியில் ராஜாமணி நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். சியாப் விளையாட்டுப் போட்டி என்றால் South East Asia Peninsula என்று ஆங்கிலத்தில் பொருள் படும். இந்தப் போட்டி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடை பெற்றது. இதில் 33 தங்கங்களைப் பெற்று மலேசியா இரண்டாவது நிலையில் வந்தது.

‘ஒவ்வொரு முறையும் நான் மேடையில் ஏறி பதக்கங்களைப் பெறும் போது மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். சந்தோஷக் குரல் எழுப்பினர். நாட்டிற்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது. நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும் போது என் கண்களில் நீர் வழிந்தது’ என்று ராஜாமணி கண்கலங்கிச் சொல்கிறார்.


2010 ல் ராஜாமணி பிறந்த ஊர் - தாப்பா
‘நான் திடலில் ஓடும் போது என் தந்தை பார்வையாளர்கள் மேடையில் இருந்து பார்ப்பார். நம் நாட்டின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களும் வந்து கவனிப்பார். அது எனக்கு பெருமையாக இருக்கும்’ என்று மகிழ்ச்சியுடன் ராஜாமணி சொல்கிறார்.

ஓட்டப் பந்தயப் பயிற்சிகள் நடைபெறும் போது ராஜாமணிக்கு சிறப்பு உணவுகள் வழங்கப் படவில்லை. ஆசிரியர்களுக்கு என்ன உணவு வழங்கப் பட்டதோ அதே உணவு தான் ராஜாமணி போன்ற விளையாட்டாளர்களுக்கும் வழங்கப் பட்டது.

18 மணி நேரம் சுய நினைவை இழந்தார்

1968 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தன் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று ராஜாமணி சோகமாகச் சொல்கிறார். கோலாலம்பூரில் உள்ள கர்னி சாலையில் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது கனத்த மழை பெய்து கொண்டு இருந்தது. ராஜாமணியுடன் செரில் டோரல், இஸ்தியாக் முபராக், பி.என்.கோவிந்தன் போன்ற விளையாட்டாளர்களும் இருந்தனர். திடீரென்று பயங்கரமான மின்னல். தொடந்து இடி முழக்கம்.


தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில்
4 தங்கப் பதக்கங்களை வென்றவர்
செரில் டோரல் கீழே விழுந்தார். ராஜாமணி மயக்கம் அடைந்து சுயநினைவு இல்லாமல் போனார். கோவிந்தன் அதே இடத்தில் காலமானார். இஸ்தியாக் முபராக்கும் மற்றவர்களும் ராஜாமணியைத் தூக்கிக் கொண்டு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு விரைந்தாரகள். ராஜாமணிக்குத் தற்காலிகமாக நினைவு இல்லாமல் போனது. என்னதான் நடந்தது என்றும் அவருக்குத் தெரியவில்லை. 18 மணி நேரம் அவர் சுயநினைவு இல்லாமல் உயிருக்குப் போராடி இருக்கிறார்.


மூன்றாம் வகுப்பு சிகிச்சை

செய்திதாள்களைப் படித்த பின்னர் தான் மின்னல் தாக்கியது ராஜாமணிக்குத் தெரிய வந்தது. கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இரண்டு படுக்கைகளுக்கு நடுவில் ஒரு தற்காலிகப் படுக்கை போடப் பட்டு அதில் ராஜாமணி கிடத்தி வைக்கப் பட்டார். மூன்று நாட்கள் அவருக்கு அந்த நிலையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. அவருக்கு சாதாரணமான சிகிச்சையே அளிக்கப் பட்டது.


இஸ்தியாக் முபராக்.
ராஜாமணியைக் காப்பாற்றியவர்.  

மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.  
ஒரு நாட்டிற்காக உயிரையே பணயம் வைக்கும் ஒரு வீராங்கனைக்கு எத்தனை மோசமான மருத்துவ வசதிகள் என்று நாளிதழ்கள் கருத்துகள் தெரிவித்தன. ராஜாமணியை மிகவும் பாதித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. உயிரே போய்க் கொண்டு இருக்கிறது. மருத்துவமனை அதிகாரிகள் பணத்தைப் பெரிதாக நினைத்துப் பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறி விட்டது. இப்போது உள்ள விளையாட்டாளர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது. மாதாமாதம் ஆயிரக் கனக்கில் சம்பளமும் கிடைக்கிறது. இதைத் தான் ராஜாமணியும் எதிர்பார்த்தார்.

பிரதமர் துங்கு வருகை

பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் ராஜாமணியை நேரில் பார்க்க வருகிறார் எனும் செய்தி மருத்துவமனை வட்டாரத்தில் பரவியது. உடனே ராஜாமணி முதலாம் வகுப்பிற்கு மாற்றப் பட்டார்.


மலேசியத் ’தந்தை’ முதல் பிரதமர்
துங்கு அவர்கள். ராஜாமணியின்
ஓட்டங்களை ரசித்து மகிழ்ந்தவர்.

இருப்பினும் பிரதமர் துங்கு வரவில்லை. ஆர்கிட் பூக்கூடையை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார். அந்த அன்பளிப்பு ராஜாமணிக்கு ஓர் ஊட்டச்சத்து வைத்தியமாக அமைந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு ராஜாமணி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவச் செலவுகளை விளையாட்டு அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்கள். மூன்று மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் கட்டணத்தைக் கட்டவில்லை.

பணத்தைக் கட்டு ராஜாமணி

மருத்துவமனை நினைவுக் கடிதங்களை அனுப்பியும் தக்க நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ராஜாமணியைத் திருமணம் செய்யவிருந்த ராஜலிங்கத்தைக் கட்டுமாறு மருத்துவமனை கேட்டுக் கொண்டது. பின்னர் ராஜலிங்கம் தான் அந்த மருத்துவத் தொகையைக் கட்டினார்.

அந்த மின்னல் தாக்குதல் நிகழ்ச்சி ராஜாமணியின் விளையாட்டு வரலாற்றையே ஒரு முடிவிற்கு கொண்டு வந்தது.


2010 ஆம் ஆண்டில் மலேசிய விளையாட்டு
கலைக்களஞ்சிய வெளியீட்டு விழாவில் ராஜாமணி
அப்போது அவருக்கு வயது 25. ‘அந்த நிகழ்ச்சி என் மனதை மிகவும் அலைக் கழித்தது. நான் செத்துப் போய் இருப்பேன். ஆண்டவன் புண்ணியத்தில் பிழைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் எனக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் இல்லாமல் போனது. ஒரு முற்றுப் புள்ளி வைப்பது என்று முடிவு செய்தேன்’ என்கிறார்.


மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் ஆலோசகராக ராஜாமணி

1965 ஆம் ஆண்டு சியாப் விளையாட்டுப் போட்டிகளின் 200மீ, 400மீ, 800மீ, 4X100 மீ ஓட்டப் பந்தயங்களில் மலேசியாவுக்கு நான்கு தங்கப் பதக்கங்களை வாங்கிக் கொடுத்தவர்.

1966 ஆம் ஆண்டு ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 400மீ ஓட்டப் பந்தயத்தில் மலேசியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தவர்.

1967 ஆம் ஆண்டு சியாப் விளையாட்டுப் போட்டிகளின் 200மீ, 400மீ ஓட்டப் பந்தயத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கிக் கொடுத்தவர்.

அப்பேர்ப் பட்ட ஒரு வீராங்கனைக்கு மூன்றாம் வகுப்பு மருத்துவ சிகிச்சை. அதுவே ராஜாமணியைப் பெரிதும் பாதித்தது.

காதல் திருமணம்

1972 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 26 ஆம் திகதி ராஜாமணி, தான் ஏழரை ஆண்டுகள் காதலித்த ராஜலிங்கம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ராஜலிங்கம் ஒரு போலீஸ் அதிகாரி. மலாக்கா ஜாசினில் அதிகாரியாக இருந்தவர். 1964 ஆம் ஆண்டு இருவரும் ஒரு விளையாட்டுப் போட்டியில் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் நட்பு வளர்ந்தது. அதுவே காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.

ராஜாமணி தற்சமயம் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தேசிய விளையாட்டு மன்றம் போன்றவற்றில் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். 1992, 1994 ஆம் ஆண்டுகளில் தாமஸ் கிண்ணப் போட்டியாளர்களுக்குப் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

பேரப்பிள்ளைகளின் மகிழ்ச்சி

‘ஒரு நாட்டைப் பிரதிநிதிப்பது என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் ஆயுள்கால வாய்ப்பு. அதை நான் முறையாகப் பயன் படுத்திக் கொண்டேன். என்னுடைய மலேசிய நாட்டிற்குப் புகழையும் பெருமையையும் தேடிக் கொடுத்தேன். இரண்டு பிரதமர்களிடம் தங்கக் கேடயங்களை வாங்கினேன். மலேசியாவின் மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்களிடம் இருந்து டத்தோ விருதை வாங்கினேன்.’

’நாளிதழில்களில் நான் டத்தோ பட்டம் வாங்கும் என் படங்களைப் பார்த்து என் பேரப் பிள்ளைகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். அது எனக்குப் போதும். நான் எங்கே சென்றாலும் மலேசிய மக்கள் என்னை அன்புடன் கவனிக்கின்றனர். சில உணவகங்களில் நான் சாப்பிட்டதற்கு கட்டணம் கூட வாங்குவது இல்லை.’ என்று கண்ணீர் மலகப் பேசினார்.

’தாப்பா நகரக் காய்கறிச் சந்தையில் நான் வாங்கும் காய்கறிகளுக்குப் பல சமயங்களில் வியாபாரிகள் காசு வாங்க மறுக்கின்றனர். ஒரு கத்தரிக்காயை எடுத்தால் மூன்று காய்களை எடுத்துப் போட்டு’ எடுத்துப் போ’ என்கின்றார்கள். எனக்கே மனசு சங்கடமாக இருக்கும். ராஜாமணியாகிய நான சாதித்தது மலேசிய மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றது’ என்று ராஜாமணி பெருமையாகச் சொல்கிறார்.


நமது பார்வையில்

மலேசிய மக்களின் மனங்களில் ராஜாமணி வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மறுபடியும் ஒரு ராஜாமணி பிறக்க வேண்டும். புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்களின் பெருமைகளுக்கு மறுபடியும் ஒரு ராஜாமணி மகுடம் சூட்ட வேண்டும்.