19 ஜனவரி 2013

கணினி கலைச்சொற்கள்


Application Software – பொதுப் பயன்பாட்டு மென்பொருள்
Battery/Cell - மின்கலம்
Binary Numbers (0,1) - இரும எண்கள் / துவித எண்கள்
Browser – உலவி (பெயர்ச் சொல்) / உலாவி (வினைச் சொல்)
Button – பொத்தான்
Code Generator - குறிமுறை இயற்றி /  நிரல் இயற்றி
Command -  கட்டளை
Computer – கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk – குறுவட்டு
Compiler/ interpreters – நிரல்மொழி மாற்றி
Control Unit - கட்டுப்பாட்டகம்
Digital – எண்ணிமம்
Digital Versatile Disk(DVD) - பல் திறன் இறுவட்டு
Data – தரவுகள் (பன்மை) / Datum – தரவு (ஒருமை)
Data Base - தரவுத்தளம்
Download – பதிவிறக்கம்
DVD -  இறுவட்டு
e-mail - மின்னஞ்சல்
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
File - கோப்பு
Key board – விசைப்பலகை / தட்டச்சுப் பலகை
Software – மென்பொருள் / நிரலி
Hardware - வன்பொருள்
Screen – திரை / கணினித் திரை
Laptop - மடிக்கணினி
Memory - நினைவகம்
RAM - தற்காலிக  நினைவகம்
Registry - பதிவகம்
Microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம் / இயங்குதளம்
Pointer - சுட்டி
Mouse – சுழலி / சொடுக்குப் பொறி
Internet – இணையம் / இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Printer - அச்சுப்பொறி
Server – வழங்கி / சேவைக் கணினி / பரிமாறிக் கணினி
Internet Server - இணைய சேவைக் கணினி
IC (Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Input - உள்ளிடு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி / அதித் திறன் கணினி
Output - வெளியீடு
Upload - பதிவேற்றம்
Multi-media – பல்லூடகம்
Multi-media Super Corridor – பல்லூடகப் பெருவழி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language -  கீழ்நிலை நிரல்மொழி
Source Language / Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி / கணினி மொழி
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT (Information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface – இடைமுகம் / இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Free / Open - கட்டற்ற
Function - செயற்கூறு
Modem - இணக்கி
chip - சில்லு
word processor - சொல் செயலி
spread sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை/ ஏற்று இறங்குப்பட்டை
Interface - இடை முகம்
Synchronize – ஒத்தியக்கம்


முதன்மைக் கணினி - Main Frame
தனியாள் கணினி - Personal computer
மடிக்கணினி / ஏட்டுக்கணினி - Notebook
எண்சட்டம் - Abacus
துளைப்பட்டை - Punch Card
கட்டுளம் - Valve
திரிதடையம் - Transistor
ஒருங்கிணைந்த சுற்றமைப்பு - Integrated Circuit
ஒத்திசை கணினி - Analog Computer
இலக்கமுறை கணினி - Digital Computer

07 ஜனவரி 2013

குழந்தைகளுக்கான விளையாட்டுகள்


குழந்தைகளுக்கான விளையாட்டுகள்

படங்களுக்கு கீழே இருக்கும் கத்தரிப்பூ நிற இணையத் தொடர்புகளின்  மீது சொடுக்குங்கள். விளையாட்டுகள் இருக்கும் இணையத் தளத்திற்குச் செல்லலாம். இணையத் தளத்திற்குப் போய், ஆகக் கீழே I want download for free அல்லது Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிரச்னைகள் என்றால் எனக்கு அழையுங்கள். 

பினாங்கு அன்புமணி அவர்களுக்கு, இப்போது உங்களுக்கு மனநிறைவு தானே!

Angry Birds Star Wars 1.1.0

Angry Birds Star Wars 1.1.0
இதைப் பணம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். விலை 60 ரிங்கிட். இருப்பினும் உங்களுக்காக ஒரு குறுக்கு வழி. http://extabit.com/file/2du6w4ymwibkt எனும் இணையத் தளத்திற்குப் போய், ஆகக் கீழே I want download for free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 63.7 MB



Angry Birds Space 1.3.1

http://uploaded.net/file/pon3jnrm எனும் இணையத் தளத்திற்குப் போய், ஆகக் கீழே Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கொள்ளளவு  36.9 MB

Planets Under Attack (2012)

http://uploaded.net/file/71ub38cf  எனும் இணையத் தளத்திற்குப் போய், Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: crazy    கொள்ளளவு  294 MB

Castle Crashers (2012)

http://ul.to/v34uz2o1 (பாகம் 1), http://ul.to/uclihu3a (பாகம் 2) எனும் இணையத் தளத்திற்குப் போய்,  Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: crazy    கொள்ளளவு  187 MB


Bejeweled 3 (2012) DeLuxe Edition

http://www.ddlstorage.com/9ouzzdc6uy2k/Bej3w3l3d3.ITA.rar.htm எனும் இணையத் தளத்திற்குப் போய், Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: crazy    கொள்ளளவு  100 MB

Angry Birds Seasons 2.5.0

http://extabit.com/file/29hbyfyzvkg9q எனும் இணையத் தளத்திற்குப் போய், Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: இல்ல   கொள்ளளவு  60.2 MB








06 ஜனவரி 2013

பூனை குறுக்கே போனால் பூலோகம் இருண்டு போகுமா?

மலேசியா, ’மயில்’ மாத இதழில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடரை எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரை ஜூன் 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


இரண்டு மாதங்களுக்கு முன்னால் மலேசியா, பேராக், ஈப்போ புறநகரில் நடந்த ஓர் உண்மையான நிகழ்ச்சி. என் வீட்டுப் பக்கத்து தெருவில் நடந்தது. 

தொட்டதற்கு எல்லாம் சகுனம் பார்ப்பவர் சாம்பசிவம். அவர் ஓர் ஐதீகவாதி. சமயவாதி. சகுனவாதி. எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.   

குனிந்தால் ஒரு சகுனம். நிமிர்ந்தால் ஒரு சகுனம். உட்கார்ந்தால்கூட ஒரு சகுனம். அதை விடுங்கள். இடுப்பில் இருக்கும் வேட்டி அவிழ்ந்தால்கூட பரவாயில்லை. 


அவிழ்ந்த நேரம் அஷ்டமா துஷ்டமா என்று கஷ்டப்பட்டு சுத்தவேளை சுகாதார வேளை கணக்கு பார்க்கின்ற ஒரு நல்ல சம்பிரதாய மனிதர். சகுனத்திலே பிறந்து சகுனத்திலேயே வாழ்கின்றவர். இன்னும் அபூர்வ ராகங்கள் பாடிக் கொண்டே இருக்கிறார். மாற்றம் இல்லை. கதைக்கு வருவோம்.

பள்ளி விடுமுறை. ஆசை ஆசையாய்ப் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பங்கோர் தீவிற்கு கிளம்பினார். வீட்டை விட்டு கார் ஒரு பத்தடி தூரம் போய் இருக்கும். யார் நேரம் சரி இல்லையோ தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஒரு கறுப்பு பூனை. சாலையில் குறுக்காக பாய்ந்து ஓடியது. 

சகுனம் சாம்பசிவம் சும்மா இருப்பாரா. ’பட்’டென்று ’பிரேக்’ போட்டார்.  அடுத்த விநாடி, பின் பக்கமாக ‘கொஸ்த்தான்’ எடுத்தார். மெதுவாக எடுத்தாலும் பரவாயில்லை. பூனை மீது இருந்த கோபத்தை காரின் மீது காட்டி விட்டார். 


கணவரையும் பிள்ளைகளையும் வழி அனுப்ப வந்த மனைவியை கார் மோதித் தள்ளியது. நல்ல வேளை. பெரிய காயம் எதுவும் இல்லை. அப்புறம் என்ன. பிள்ளைகளை இறக்கிவிட்டு மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

கடலுக்குப் போக வேண்டிய கார், கட்டுப் போட ஆஸ்பத்திரிக்குப் போனது. எந்தப் பாதையில் போகக்கூடாது என்று சகுனம் பார்த்தாரோ அதே பாதையில்தான் மறுபடியும் கார் போனது. 

சரி, இத்தனைக்கும் காரணம் சகுனம் பார்த்த சாம்பசிவமா, இல்லை எதிர் வீட்டில் ஏங்கித் தவிக்கும் காதலியைப் பார்க்க, பாய்ந்து ஓடிய கறுப்பு பூனையா. சொல்லுங்கள்.

என்னைக் கேட்டால் இரண்டு பேர் மீதும் தப்பு இருக்கிறது. காரைப் போகவிட்டு அப்புறம் வேண்டும் என்றால் கறுப்பு பூனை காதலியைப் பார்க்கப் போய் இருக்கலாம். 

கண்ணைக் கட்டிக் கொண்டு ஓடிய பூனை செய்ததும் தப்பு. அதே சமயத்தில் சாம்பசிவம் தன் கோபத்தைக் காரின் மீது காட்டாமல், கொஞ்சம் மெதுவாய் போய் இருக்கலாம். சகுனம் பார்த்த சாம்பசிவம் செய்ததும் தப்பு.

இந்தக் கதை பரவாயில்லை. அண்மையில் நான் படித்த செய்தி, நெஞ்சத்தையே உலுக்கிவிட்டது. தமிழ்நாடு, தாம்பரம் அழகிரி நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார், முத்துக்குமார் எனும் சகோதரர்கள். இருவருக்கும் கொத்தனார் வேலை. அடுத்தடுத்த வீடுகள். ராஜேஷ்குமார் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வந்தார். 

ஒரு நாள் காலை தம்பி முத்துகுமார் வேலைக்காக கிளம்பி இருக்கிறார். அப்போது அண்ணன் ராஜேஷ்குமாரின் வீட்டுப் பூனை குறுக்கே போய் இருக்கிறது. அன்று முத்துகுமாருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அலைச்சல்தான் மிச்சம். 

பூனை குறுக்கே சென்றது அபசகுனம். அதனால்தான் தனக்கு வேலை கிடைக்கவில்லை என நினைத்தார் தம்பி. அவரது கோபம் முழுவதும் அண்ணன் வீட்டு பூனை மீது திரும்பியது. மாலையில் போதையுடன் வீட்டுக்கு திரும்பினார். 

அந்த நேரம் பார்த்து பூனை அந்தப் பக்கமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும் தம்பிக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறி தாளம் போட்டது. பூனையைப் பிடித்து சுவரில் ஓங்கி ஓங்கி அடித்தார். பூனை செத்துப் போனது. இதைப் பார்த்த அண்ணன், தம்பியை தட்டிக் கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம். அதுவே கைகலப்பாக மாறியது. ராஜேஷ்குமாரை முத்துக்குமார் சரமாரியாக தாக்கினார். அக்கம் பக்கத்தினர் வந்து விலக்கி விட்டனர்.

வீட்டுக்கு சென்ற ராஜேஷ்குமார் மயங்கி கீழே சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவ்வளவுதான். இறந்து விட்டதாக செய்தி வந்தது. முத்துகுமார் அடித்ததால்தான் கணவர் இறந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. 

இப்போது முத்துகுமார் காவலில் இருக்கிறார். சிறைக் கம்பிகள் ஆலாத்தி எடுக்க காத்து நிற்கின்றன. இப்படி சகுனம் பார்த்து வந்த தகராற்றில் உடன் பிறந்த அண்ணனையே அடித்து கொலை செய்துள்ளார் ஒரு பாமர மனிதர்.

ஆடு குட்டிப் போட்டால் சகுனம் பார்ப்பது; நாய் ஊளையிட்டால் சகுனம் பார்ப்பது; பல்லி கச்சா செய்தால் சகுனம் பார்ப்பது; காக்கா கத்தினால் சகுனம் பார்ப்பது; இவை எல்லாம் என்ன? பொருத்தம் இல்லாத நம்பிக்கைகள் என்று சொல்லலாம். 

அதனால் என் மீது வருத்தமும் வரலாம். பரவாயில்லை. சில விளக்கங்களைச் சொல்கிறேன். ஆனால், பூனை விஷயத்தில் மட்டும் சற்று மாறுபாடான அறிவியல் கருத்து இருக்கிறது. அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பூனை குறுக்கே போனால் கெட்டது நடக்கும் என்பது சிலருடைய நம்பிக்கை. அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இங்கேதான் பூமியின் மீது உள்ள காந்தம் வந்து கதை பேசுகிறது. 

நாம் வாழும் இந்த உலகம் இருக்கிறதே அது ஒரு பெரிய காந்தம். பூமியின் மீதுள்ள பொருள்கள் இந்தக் காந்தத்தினால் ஈர்த்து இழுத்துப் பிடிக்கப் படுகின்றன. 

அதே சமயத்தில், இந்தக் காந்த ஈர்ப்புச் சக்தியினால், பூமியில் உள்ள எல்லா பொருள்களுமே காந்தத்தை வெளிப்படுத்துகின்றன. இதில் பூனை எனும் பாலூட்டி, அதிகமான காந்தத்தை வெளிப்படுத்துகிறது என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை. 

பூனையின் காந்த அலைகள் மற்ற பொருள்களின் காந்த அலைகளை வெட்டித் தள்ளிவிடும் அல்லது குறைத்துவிடும் அளவிற்கு மிகுதியாக உள்ளன. நாம் நடந்து போகும் போது பூனை குறுக்கே வந்தால் அதன் காந்த அலைகள் நம்முடைய காந்த அலைகளை வெட்டிவிடும் அல்லது குறைத்துவிடும் என்பதுதான் உண்மை.  

அதனால் நாம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிற விஷயமும் சில நேரங்களில் சலனம் அடையலாம் அல்லது தேக்கம் அடையலாம். பூனை ஒரு காந்தமா என்றுகூட நீங்கள் கேட்கலாம்.  

பூனை மட்டும் அல்ல. உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையான காந்தம் இருக்கவே செய்கிறது. காந்தவிசையை பாதிக்கும் குணம் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கின்றது. ஆனால், பூனையிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.

உயிரினங்களுக்கு இருக்கும் காந்தவிசையை பாதிக்கும் இந்த அபூர்வ குணத்தை மேக்னெட்டோரிஸப்ஷன் (Magnetoreception) அல்லது  காந்தவிசை ஏற்புத் திறன் என்கிறார்கள். இது 1972ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

உயிரினங்களின் காந்தவிசை ஏற்புத் திறன் பற்றிய ஆய்வுகள் இன்றைய காலக்கட்டங்களில் பல உண்மைகளைத் தெளியப் படுத்துகின்றன. இருந்தாலும், ஒரு காலத்தில் அது ஒரு மூட நம்பிக்கை என்றே சொல்லப்பட்டது.

தேனீக்கள், சாலமாண்டர் பல்லிகள், (Salamanders) கடல் ஆமைகள், சுறாமீன்கள், பறவைகள் என்று பல உயிரினங்களிடம் காந்தவிசையேற்புகள் உள்ளன. அந்த வகையான உயிரினங்களைக் காந்தவிசையேற்பிகள் என்று அழைக்கிறார்கள். 

நமக்கு பழக்கமான புறாக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை எந்தத் தருணத்திலும் திசைகளைச் சர்வ நிச்சயமாய் அறிந்து தெரிந்து வைத்து இருக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் Magnetoencephalography எனும் முறையைப் பயன்படுத்தி பறவைகளைப் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

மனிதனின் மூக்கு, கண்களில் இந்த காந்தவிசை ஏற்புத் திறன்கள் இருக்கின்றன. (Magnetic bones have been found in the human nose, specifically the sphenoidal/ethmoid sinuses. Magnetosensitive protein, cryptochrome-2, has been found in the human eye.) ஆனால், நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பது வேறு கேள்வி. இதைப் பற்றிய ஆராய்ச்சி துறைக்கு Sensory Biology என்று பெயர்.

ஆக, பூனை குறுக்கே போவதால் மனதனின் மன அலைகள் தேக்கம் அடையலாம் அல்லது அவன் நினைவில் இருப்பது மறந்து போகலாம் என்பது ஓர் அறிவியல் சார்ந்த உண்மை. 

அதைத் தான் சகுனம் என்று நாம் சொல்கிறோம். இந்த அறிவியல் உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த அறிவியல் உண்மை, சகுனம் என்று மருவி வந்து உள்ளது. 

நவீன மயமான கணினி உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது. செவ்வாய் கிரகத்தில் நிலத்தைப் பேரம் பேசும் அளவுக்கு, வையகம் தன் இணைய வலையை விரித்து வருகிறது. 

ஆக, எதையும் நிலையான ‘பாசிட்டிவ்’ எனும் நேர்மறை கோணத்தில் பாருங்கள். தயவு செய்து ‘நெகட்டிவ்’ எனும் எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்.


சகுனம் பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. எது எதற்கு சகுனம் பார்க்க வேண்டும் என்று ஒரு வரையறையும் இருக்கிறது. நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு பூனை குறுக்கே போனால், கவலைப்பட வேண்டாம். 

அது அதனுடைய வேலையைப் பார்க்கிறது. நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்று போய்க் கொண்டே இருங்கள். அதை ஒரு கெட்ட சகுனமாக நினைக்கவே வேண்டாம். சகுனம்தான் சகுனியாக மாறும்.

முடிந்தால் அந்தப் பூனை எங்கே போகிறது என்று பாருங்கள். கண்டிப்பாக, அது பக்கத்து வீட்டில் இருக்கும் தன் காதல் ஜோடியைப் பார்க்க போய்க் கொண்டு இருக்கும். நீங்கள் மட்டும் உங்கள் காதலியைப் பார்க்க போகலாம். அது மட்டும் போகக் கூடாதா என்ன. 

நீங்கள் சட்டை சிலுவார் போட்டு அழகாக ராஜ நடை போடுவீர்கள். பாவம் பூனை. அதற்கு சட்டை சிலுவார் வாங்க காசு இல்லை. அதனால், பார்வதியைப் பார்க்க நிர்வாணமாக ஓடுகிறது. நமக்கு அந்த மாதிரியான நிர்வாண கோலம் இல்லையே என்று சந்தோஷப் படுங்கள்.

29 டிசம்பர் 2012

பெண் குழந்தை பெரிய சுமை

24.12.2012 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். ஆனால், இப்போது குழந்தையும் குண்டுமணியும் குப்பைத் தொட்டியிலே என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது.

Tamil Nadu Orphaned Children
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
உங்களுக்கு ஒன்று தெரியுமா. இந்தியாவில் சில மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அந்தப் பச்சை சிசுக்களின் தொப்புள் கொடி ஈரம் காய்வதற்கு முன்னரே கொல்லப் படுகின்றனர்.

இந்தியாவில் பரவாயில்லை. மலேசியாவில் அதைவிட மேலும் ஒரு மோசமான நிலை வந்து கொண்டு இருக்கிறது. கல்லூரி ஆசிரமங்களில் படிக்கும் பெண்கள், வயிற்றுச் சுமைகளைக் கழிவறையிலேயே பெற்று, அவற்றைக் கழிவறைத் தொட்டிக்குள்ளேயே போட்டுவிட்டு வருகின்ற நல்ல ஒரு கலாசாரம். மிக மிக வேதனையான கலாசாரம் என்று சொல்ல மனம் வரவில்லை.

Tamil Nadu Dead Child
பெண் பிள்ளைகள் அழிந்து கொண்டு போனால்
எப்படி மனம் வருகிறது என்று இது யோசிக்கின்ற விஷயம் இல்லை. எப்படி எல்லாம் மனித மனம் போகின்றது என்று யோசிக்கின்ற விஷயம். சரி. பெண் குழந்தைகள் விசயத்திற்கு வருவோம். பெண் பிள்ளைகளை இப்படியே அழித்துக் கொண்டு போனால் அப்புறம் பூமாதேவிக்கே பொறுக்காமல் போய்விடும்.

அந்தப் பாவச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தமிழ்நாட்டின் தொட்டில் குழந்தை திட்டம். இந்தத் திட்டம் 1992 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப் பட்டது.

Orphan Children Feeding
 தொட்டில் குழந்தை திட்டம்
தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கிய பெருமை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும்.  சேலம் மாவட்டத்தில் தான் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

பின்னர் 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. இப்போது குடலூர், அரியலூர், பெரம்பலூர், வில்லிபுரம் போன்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது.

Cradle Children

தமிழ்நாடு முழுமையும் ஏறக்குறைய 188 தொட்டில் குழந்தை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திற்கும் 47 இலட்சம் ரூபாய் செலவு செய்யப் படுகிறது.  இதுவரை 3,200 பெண் குழந்தைகள் 582 ஆண் குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

இவர்களில் 2,400 குழந்தைகள் தத்து கொடுக்கப் பட்டுள்ளனர். தவிர 170 பெண் குழந்தைகள் 27 ஆண்குழந்தைகள் வெளிநாட்டவருக்கும் தத்து கொடுக்கப் பட்டனர்.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2001 இல் 1000 ஆண்களுக்கு 942 பெண்களாக இருந்த விகிதம் இப்போது 2011 இல் 1000 க்கு 946 ஆக உயர்ந்து உள்ளது.

பெண் பாவம் பொல்லாதது


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளைப் பெரிய சுமை என்றே கருதுகின்றனர். அதாவது பரவாயில்லை. சில நாடுகளில் குழந்தையே ஒரு சுமை என்கிற நவீனத் தத்துவம் பிறந்து உள்ளது. அந்தத் தத்துவம்  காடு மேடு தெரியாமல் சகட்டு மேனிக்கு கரை புரண்டு ஓடுகிறதே. அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

Cradle Children Tamil Nadu

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் உடனடியாக அவற்றைக் கொலை செய்து விடுகின்றனர். அல்லது பொது இடங்களில் வீசி எறிந்து விடுகின்றனர். எல்லா இடங்களையும் சொல்லவில்லை. ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாமல் போய் விடும் சில இடங்களைச் சொல்கின்றேன்.

இந்த விவகாரத்தில் மலேசியா மட்டும் விதிவிலக்கு அல்ல. இங்கேயும் சிசுக்கள் குப்பைத் தொட்டிகளில், பேரங்காடிகள், பொது இடங்களில் இருந்து மீட்கப் படும் அவல நிலை இருக்கத்தானே செய்கின்றது.

Malaysia Dumped Baby
மலேசியக் கல்லூரி வாசலில் செத்துக் கிடக்கும் சிசு
அதற்கு காரணம் என்ன. கணவன் விட்டுப் போன பெண்களின் குழந்தைகள். திருமணம் செய்யாமலே பிறந்த குழந்தைகள். கணவனுக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைகள். கரு கலைத்தும் பிறந்த குழந்தைகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வாறான மனித ஈனச் செயல்களைத் தடுக்க மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் குழந்தைத் தொட்டில்கள் வைக்கப் படுகின்றன. குழந்தையைப் பெற்று எடுத்தவர்களுக்கு அந்தக் குழந்தை வேண்டாம் என்கிற ஓர் இக்கட்டான நிலை எப்படியோ வரலாம்.

மலேசியக் குப்பைத் தொட்டில் குழந்தை
குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையை
மீட்கும் மலேசிய போலீஸ்காரர்
ஆக, அந்த மாதிரியான நிலையில் குழந்தையைக் கொலை செய்வதற்குப் பதிலாக அப்படியே அதைக் ’குழந்தைத் தொட்டிலில்’ விட்டுச் சென்றால் ஓர் உயிர் காப்பாற்றப் படும் இல்லையா. அப்படி விட்டுச் செல்லப் படும் குழந்தைகள் தான், பின்னர் தொட்டில் குழந்தை மையங்களில் சேர்க்கப் பட்டு முறையாக வளர்க்கப் படுகின்றன.

குறைந்து வரும் பெண் இனம்


இந்த  2011 ஆம் ஆண்டு, ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடந்தது. அந்தக் கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் விகிதம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக மிக மோசமாகக் குறைந்து வருவது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனால் அந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தைத் திட்டம் உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட  வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பெண் சிசுக்கொலை


தமிழகத்தில் பெண் சிசுக்கொலை தொடக்கக் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான் பரவலாக இருந்து வந்தது. 1980 ஆம் ஆண்டுகளில் பெண் சிசுக்கொலை தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி பகுதிகளுக்கும் பரவியது.

மலேசியா, பெட்டாலிங் ஜெயாவில்
மலேசியா, பெட்டாலிங் ஜெயாவில்
வீட்டுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட சிசு
அடுத்து 1990 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இக்கொடூரப் பழக்கம் வேர் விட்டுப் பரவியது. ’மனிதம்’ இல்லாத இந்தச் செயலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே ஈடுபட்டு வருவது ஒரு சமூக ஆய்வின் மூலமாகக் கண்டு அறியப் பட்டது.

அதன் பின்னர் பெண்களுக்காகப் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கொடுக்கப் பட்டன. இருந்த போதும், சிசுக்கொலை, கருக்கொலைகள் குறையவில்லை. தொடர்ந்தன.


தமிழகத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் 1991ம் ஆண்டில் தொட்டில் குழந்தை திட்டம் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் துரிதப்படுத்தப் பட்டது. தர்மபுரியில் இத்திட்டத்துக்கு பெரும் அளவில் ஆதரவு இல்லை. அங்கே இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில் 2002ம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி மீண்டும் இத்திட்டம் தீவிரப் படுத்தப் பட்டது.

இரு நாட்களுக்கு ஒரு குழந்தை


தொட்டில் குழந்தை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல் படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது சிசுக்கொலைக்கு எதிரான திட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும்.


இருப்பினும்  தர்மபுரி மாவட்டத்தில் 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு ஏப்ரல் வரை 89 குழந்தைகள் மட்டுமே தொட்டில் மையங்களில் ஒப்படைக்கப்பட்டன. இப்போது நிலைமை மாறி வருகிறது. இரு நாட்களுக்கு ஒரு குழந்தை எனும் விகிதத்தில் தொட்டில் குழந்தைகளின் தொகை அதிகரித்து வருகிறது.

பெற்றோர்களுக்கு ஆலோசனை


கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தொட்டில் மையத்தில் குழந்தைகளை ஒப்படைக்க வரும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப் பட்டன.  குழந்தைகளை அவர்களே வளர்க்க அறிவுரைகளும் வழங்கப் பட்டன. பண உதவியும் செய்யப் பட்டது. இதன் விளைவாக 2006 ஜூன் 24ம் தேதி முதல் இன்று வரை 531 குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளனர்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
இன்று வரை தர்மபுரி மாவட்டத்தில் 65 ஆண் குழந்தைகள், 1,320 பெண் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளனர். அண்மையில் ஒரு புதிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதாவது பெற்றோர் இருந்தும் மனித நேயமற்ற முறையில் பெண் குழந்தைகள் அனாதையாக்கப்படும் நிலையை மாற்ற வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு.

குழந்தைகளின் உரிமை


பாலக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் இப்படிச் சொல்கிறார். பெண் சிசுக் கொலையைத் தடுக்க கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், கடந்த காலங்களுக்கு சாத்தியமானது.

காண்டா காட்டுக்குள் ஒரு கைக்குழந்தை
ஆனால் இப்போது, மக்கள் விழிப்புணர்வு அடைந்து உள்ளனர். எனவே பெற்றோர் இருந்தும் குழந்தைகள் அனாதை ஆக்கப்படுவது என்பது குழந்தைகளின் உரிமையைப் பறிப்பதாகும். பாலியல் பேதத்தை ஊக்கப்படுத்தும் ஒரு நிலை.

இந்தத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்துக்கு மாற்றாக, பெண் குழந்தைகளைப் பெற்றோரே வளர்க்கும் வகையில் ஒரு புதிய பரிமாணம் உருவாக்கப் பட வேண்டும். கல்வி, சுகாதாரம், திருமணம் ஆகியவற்றுக்கு அரசு  உதவும் வகையிலான ஒரு திட்டம் செயல் படுத்தப் பட வேண்டும்’ என்கிறார் டாக்டர் ரவிச்சந்திரன்.
ஏற்கனவே தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள்; தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள்; ஆதரவற்ற இல்லங்களில் வாழும் குழந்தைகளின் நிலை குறித்து ஒரு முறையான ஆய்வு செய்யப் பட வேண்டும். அந்தக் குழந்தைகளின் இன்றைய நிலை என்ன என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

மகளிருக்கு உரிய "கருவறை முதல் கல்லறை' வரையான திட்டங்கள் முறையாக அவர்களைச் சென்று அடைய வேண்டும். அதற்கு உரிய முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

மனித இனத்தில் மனித நேயம் வரலாறு படைக்க வேண்டும்
பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில், பெண்களுக்குச் சமூகப் பாதுகாப்பை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்யப் படுகின்றன.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே எனும் பழமொழி ஒரு பொன்மொழியாக மாற வேண்டும். மனித இனத்தில் மனித நேயம் வளர்ந்து வரலாறு படைக்க வேண்டும். அதுவே நம் ஆசையும் கூட! (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

முத்துக்கிருஷ்ணன் பேரப் பிள்ளைகள்

Pratishwar
Pratishwar

Srilekha
Srilekha
 
Haresh Harshitra
Haresh Harshitra

Sri Selvalagan
Sri Selvalagan

ஹரேஷ்
Haresh

Sri Selvanusia
Sri Selvanusia

Harshitra
Harshitra