26 ஜனவரி 2014

இளம்பெண்கள் கைப்பேசி எண்களைக் கொடுப்பதால் ஏற்படும் தொல்லைகள்

கணினியும் நீங்களும் - மலேசியா தினக்குரல் நாளிதழ்
26.01.2014 ஞாயிறு மலர்

..................................................................................................................................................

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்
கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?



ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்தி விடுங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்களை எல்லாம் எப்படி ஐயா நண்பர்கள் என்று முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை, அவரிடம் இருந்து முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம்.

என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.

நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள் ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்களை எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள் என்று சொன்னால் தப்பே இல்லை.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போகலாம். ஆனால், தன்னம்பிக்கை என்பதை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம்.

..................................................................................................................................................

சுந்தரராஜன் பெருமாள், ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்.
கே: சிடி-ரோம் டிரைவின் வேகத்தை 20X, 48X, 52X என்று குறிப்பிடுகிறார்கள். அதில் X என்றால் என்ன?



ப: ’சிடி-ரோம்’ என்றால் குறும் தட்டு. ’சிடி-ரோம் டிரைவ்’ என்றால் குறும் தட்டகம். முதன்முதலில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS. இந்தக் குறும் தட்டகங்கள் 1990-களில் வெளிவந்தவை. விலையும் அதிகம். KBPS என்பதன் விரிவாக்கம் Kilo Bytes Per Second.

அப்படி என்றால் ஒரு விநாடியில் எத்தனை ‘பைட்ஸ்’ தகவல்கள் பரிமாறப் படுகின்றன என்பதைக் குறிக்கிறது. ஆக, ஆரம்பத்தில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS ஆக இருந்தது.

பின்னர், வேகம் கூடிய தட்டகங்கள் வெளிவந்தன. புதிய குறும் தட்டகங்களின் வேகத்தை எடுத்துச் சொல்ல பழைய குறும் தட்டகங்களின் வேகத்தை X  எனும் அடிப்படையில் எடுத்துக் கொண்டார்கள்.

ஆகவே 20X என்றால் 20 X 150 = 3000 கே.பி.பி.எஸ். என்று பொருள். அதாவது ஒரு விநாடிக்கு 3000 பைட்ஸ் தகவல்களை பரிமாறிக் கொள்கிறது என்று பொருள்.

ஒரு ’பைட்’ என்றால் என்ன என்று கேட்கலாம். ‘அ’ எனும் எழுத்துக்கு எட்டு பைட்ஸ்கள். ‘ஆ’ எனும் எழுத்துக்கும் எட்டு பைட்ஸ்கள்தான். உலகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் எட்டு பைட்ஸ்களைத் தான் கொடுத்து இருக்கிறார்கள்.

அந்தக் கணக்குப் படி, ஒரு விநாடி நேரத்தில் 400 எழுத்துகளை, அந்தத் தட்டகம் படிக்கின்றது. புரியுதுங்களா.

இப்போது 80X குறும் தட்டகங்களும் வெளிவந்து விட்டன. பழைய 2X குறும் தட்டின் விலை அப்போதைய விலையில் நான்கு ரிங்கிட். இப்போதைய குறும் தட்டின் விலை வெறும் நாற்பது காசுகள் தான். 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ’புளுரே’ எனும் தட்டகங்களும் வந்துவிட்டன. ஒரே ஒரு ’புளுரே’ தட்டை வைத்துக் கொண்டு உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய முகவரி விவரங்களை எழுதி வைத்துக் கொள்ள முடியும். அவர்களின் பூர்வீகத்தையும் எழுதி வைக்க முடியும். ஆக, கணினி உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.

..................................................................................................................................................

மா. நல்லபெருமாள், ஜே.பி.ஜே. கோலகங்சார்
கே: சில இளம்பெண்கள் மற்றவர்களிடம் கொஞ்சம் பழகியதும் தங்களின் கைப்பேசி எண்களைக் கொடுத்து விடுகின்றனர். கடைசியில் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு அவதிப் படுகின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?


ப: நான் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சிலர் சொன்னால் கேட்க மாட்டார்கள். பட்ட பிறகுதான் வேதனை தெரியும். நெருப்பு சுடும் என்று சொல்லிப் பாருங்கள்.

அது என்ன சுடும் என்று திருப்பிக் கேட்பார்கள். சுட்ட பிறகு ‘ஐயோ சுட்டு புடுச்சே...  ஐயோ சுட்டு புடுச்சே... ’ என்று ஒப்பாரி வைப்பார்கள்.

ஆக, சில ஜென்மங்களைத் திருத்தலாம். ஒரு சில ஜென்மங்களைச் சுட்டுப் போட்டாலும் திருத்தவே முடியாது. எல்லோரையும் சொல்லவில்லை. பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் திருவிளையாடல் படத்தில் தருமி நாகேஷ் நினைப்வுக்கு வருகிறது. என்னைக் கேட்டால்  கைப்பேசியும் அதில் தொங்கி வழிவதும் என்று சொல்வேன்.

அதற்காகச் சண்டைக்கு வரவேண்டாம். கைப்பேசியை ஒரு பொழுது போக்காகக் கருதும் பெண்கள், தயவு செய்து கொஞ்சம் யோசிக்க வேண்டும். சொல்ல வேண்டியது என் கடமை.

1. அவசியமின்றி யாருக்கும் கைப்பேசி எண்களைக் கொடுக்காதீர்கள். புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும் தெரிந்தால் போதும்.

2. பொது இடங்களில் நீட்டப்படும் வருகைப் பதிவேடுகளில் உங்கள் கணவர் அல்லது தந்தையின் கைப்பேசி எண்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் எண்களைப் பதிவு செய்ய வேண்டாம். பிற்கு ஆபத்தாக முடியும்.

3. அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்கவும். எடுத்து ‘Wrong Number' என்று சொல்லி வைத்து விடுங்கள்.

4. கடலைபோடும் ஆசாமிகள் இருக்கிறார்கள். வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள். அவர்களிடம் கறார் வேண்டும்.

5. நன்றாகப் பேசுபவர் எல்லாம் நல்லவர் என நம்பாதீர்கள். இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்ல.

6. ஆயிரம் சத்தியம் செய்வார்கள். கடைசியில் காரியத்தைச் சாதித்துக் கொண்டு கம்பி நீட்டி விடுவார்கள். கடைசியில் அவதிப்படுவது நீங்கள் தான்.

7. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் ஆக்கப் பூர்வமான காரியங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக மெகா சீரியல்களில் இறங்கி புருசன், டிவி பெட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிற மாதிரி வைத்துக் கொள்ள வேண்டாம்.

..................................................................................................................................................

ஜான் பீட்டர்ஸ், ஆயர் குரோ, மலாக்கா
கே: கணினி வைரஸ்கள் என்னென்ன தீமைகளைச் செய்கின்றன?


ப: பட்டியல் போட முடியாது. Trojan எனும் கணினி அழிவி உங்களுடைய கணினிக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் செய்யும் வேலைகளைக் கவனித்து வரும். நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டை இலக்கங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும். talking-trojan இணைய வங்கியில் பயன்படுத்தும் கடவுச் சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் தனது எஜமானனுக்கு (Owner of the Virus) இணையத்தின் வாயிலாக சகவாசமாக ரகசியங்களை அனுப்பி வைக்கும்.

சில நச்சுநிரல்கள் கணினியின் நிரலிகளில் கோப்புகளை அழித்தல், கோப்புகளின் குணாதிசயங்களை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தைப் பயன்படுத்துகின்றன.

நீங்கள் பயன்படுத்தும் Programs எனும் நிரலிகளில் குழப்பத்தை உண்டு பண்ணும். கணினியை நிலைகுலையச் செய்யும். சில அழிவிகள் கணினி தொடங்குவதையும் மெதுவாக்கும். வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும்.

அழிவி அல்லது நச்சுநிரல் எல்லாம் ஒன்றுதான். சில அழிவிகள் வெடிகுண்டு போல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து தம் அழிவு வேலைகளைச் செய்யும்.

ஆக உங்களுடைய கணினி 30 வினாடிகளில் இருந்து 40 வினாடிகளுக்குள் இயங்குதளத்தைத் தொடங்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்தால் முதலில் நச்சு நிரலைக் கவனிக்க வேண்டும். அதை (Update) எனும் இற்றை செய்தல் வேண்டும்.

இணையத்தைக் கண்டுபிடித்தது யார்

கணினியும் நீங்களும் - மலேசியா தினக்குரல் நாளிதழ்
19.01.2014 ஞாயிறு மலர்

..................................................................................................................................................................

எஸ்.பாலசேகரன் சுப்பையா, ஜெலாப்பாங், ஈப்போ
கே: இணையத்தைக் கண்டுபிடித்தது யார்?


ப: இணையம் (Internet) என்பதைத் தனிநபர் யாரும் கண்டுபிடிக்கவில்லை. கணினி மேதைகள் பலரின் சிந்தனையில் உருவானது. 1961-ஆம் ஆண்டில், லியானர்ட் கிளேன்ராக் என்பவர்தான் இணையத்தைப் பற்றி ஒரு வியூகம் செய்தார்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு Tim Berners Lee என்பவர் World Wide Web எனும் வையக விரிவு வலையை உருவாக்கினார். அதன் பிறகு இணையம் இமயமலை உயரத்திற்குப் போய்விட்டது. இப்போது இருக்கும் இணையத்திற்கு ஓர் உண்மையான வடிவத்தைக் கொடுத்தவர் திம் பெர்னர்ஸ் லீ தான்.

அவர் நினத்து இருந்தால், உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் போல வியாபாரம் பண்ணி இருக்கலாம். கோடிக் கோடியாகப் பார்த்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. தான் உருவாக்கிய இணையத்தை, உலக மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து விட்டார்.

பல உலகக் கணினி நிறுவனங்கள் அவருக்கு உதவிகள் செய்ய முன் வந்தன. பல நாடுகள் உயரிய விருதுகள் வழங்கி இருக்கின்றன. எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ரொம்ப தன்னடக்கமான மனிதர்.

கடைசியில் இங்கிலாந்து அரசாங்கம் வழங்கிய ‘சர்’ எனும் உயரிய விருதை ஏற்றுக் கொண்டார். உலகப் பல்கலைக்கழகங்கள் இதுவரையில் 26 டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், அனைத்துலக் கணினிச் சம்மேளனம் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது.

உலகக் கணினி அறிஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி இருந்தனர். அவர் அரங்கத்திகுள் நுழைந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று, Standing Ovation  என்று சொல்லப்படும் ராஜமரியாதை செய்தார்கள். ஒன்றரை கோடி ரிங்கிட் அன்பளிப்பும் செய்தார்கள். அந்தப் பணத்தையும்கூட அவர் ஓர் அறவாரியத்திற்கு அப்படியே எழுதிக் கொடுத்து விட்டார்.

என்னே மனிதத் தன்மை. இன்று கணினி உலகின் அன்பிற்குரிய மாமனிதராக வாழ்ந்து வருகிறார். அவருடைய நல்ல மனம் வாழ வேண்டும். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். வாழ்த்துவோம். இவரைப் பற்றிய மேல் விவரங்களை http://en.wikipedia.org/wiki/Tim_Berners-Lee  எனும் இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

..................................................................................................................................................................

திவ்யா கன்னியப்பன், <thivya_sega@gmail.com>
கே: HTML என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?


ப: Hyper Text Markup Language என்பதின் சுருக்கம். இணையப் பக்கங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் இணைய மொழி. 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவரும் திம் பெர்னர்ஸ் லீ தான். ஒரு சின்ன எடுத்துக்காட்டு:

<HTML>
<HEAD>
<!-- created 2014-01-19 -->
<TITLE>Thinakkural Sunday</TITLE>
</HEAD>
<BODY>
நான் நலம். நீங்கள் நலமா?
 <!-- Save the file as .html -->
</BODY>
</HTML>

உங்களுடைய கணினி ‘நோட் பேட்’டில் (Notepad), மேலே இருக்கிற மாதிரி தட்டச்சு செய்யுங்கள். சேமிக்கும் போது .html என்று சேமித்து வையுங்கள். பிறகு திறந்து பாருங்கள். நான் நலம். நீங்கள் நலமா?  என்று ஓர் இணையப் பக்கம் உருவாகி இருக்கும். அதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில்.

..................................................................................................................................................................

திருவே பாலசேனா, பத்து தீகா, ஷா ஆலாம்.
கே: என்னுடைய சில ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது படிக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். வழி இருக்கிறதா?


ப: Documents என்பதை ஆவணங்கள் என்று சொல்கிறோம். Folders என்பதைக் கோப்புகள் என்று சொல்கிறோம். இவற்றை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கச் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. அந்த கோப்பின் மீது வலது சொடுக்கு செய்து Properties என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் Hidden என்று இருக்கும். அதைச் 'சரி' என்று சொடுக்கி விடுங்கள். அதே கோப்பைத் திறக்கவும். அதாவது (Double Click).

கணினித் திரையின்ல் ஆக மேலே Tools எனும் பகுதி வரும். அங்கே Folder Options என்பதில் View என்பதைத் தட்டினால் ஒரு செய்திப் பெட்டகம் வரும். Do not Show hidden files and folders என்பதைத் தட்டி விடுங்கள். அவ்வளவுதான்.

உங்கள் ஆவணம் காணாமல் போய்விடும். யாரும் பார்க்க முடியாது. அப்படி ஓர் ஆவணம் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதைவிட இன்னும் பல இரகசியப் பாதுகாப்பு நிரலிகள் வந்துள்ளன. இலவசமாகவும் கிடைக்கும். வேண்டும் என்றால் கேளுங்கள். இணைய முகவரியைச் சொல்கிறேன்.

..................................................................................................................................................................

எஸ். தம்பிராஜா, லுக்குட், நெகிரி செம்பிலான்.
கே: Fonts அதிகம் இருந்தால் கணினி மெதுவாக வேலை செய்யுமா?


ப: Fonts என்பதை எழுத்துருகள் என்று தமிழில் அழைக்கிறோம். இந்த எழுத்துருகள் அதிகமாக இருந்தால் கணினி மெதுவாக ஆரம்பிக்கும். அதாவது Startup எனும் கணினித் தொடக்கம். கணினியைத் தொடக்கியதும், நத்தை மாதிரி போல நகரும். ஆனால் ஆரம்பித்த பிறகு, வேலை தாமதம் ஆகாது. இருந்தாலும் தேவை இல்லாத எழுத்துருகளை நீக்கி விடுவதுதான் நல்லது.

சிலர் உலகத்தில் உள்ள எல்லாமே தங்கள் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது தப்பு. கணினி வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றால் கண்ட கண்ட குப்பைகளைக் கணினிக்குள் சேர்த்து வைக்காதீர்கள்.

கணினியை இலகுவாகச் செயல்பட வழி செய்யுங்கள். Control Panel க்குப் போய் Font எனும் கோப்புக்குள் போய் தேவைப்படாத எழுத்துருகளை நீக்கிவிடலாம். பத்திரம்!

Arial, Century Gothic, Lucida Console, Sans Serif, Tahoma, Trebuchet, Verdana போன்ற எழுத்துருகள் கணினியின் உயிர் எழுத்துகள். (System Fonts) என்று சொல்வார்கள். அவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். அப்படியே அழிக்க முயற்சி செய்தாலும், கணினி அவற்றை அழிக்க விடாது. குறைவான எழுத்துருகள் இருந்தால், கணினி கொஞ்சம் வேகமாக வேலை செய்யும்.

..................................................................................................................................................................

சேகரன் சுபரத்தினம்  segaran_vasan@gmail.com
கே: ’பேஸ்புக்’ போல வேறு இணையத் தளங்கள் உள்ளனவா?


ப: ’பேஸ்புக்’ மாதிரி ஏறக்குறைய நூறு சமூகத் தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சமூக வளைத்தளம் பிரபலம். இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆர்குட். சீனாவை எடுத்துக் கொண்டால் வெய்போ. மலேசியாவை எடுத்துக் கொண்டால் பேஸ்புக். உலகில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 20 சமூகத் தளங்களின் பட்டியலைத் தருகிறேன். அடைப்புக் குறியில் அனைத்தும் மில்லியன்கள்.

1. Facebook (ஒரு பில்லியன்)
2.Twitter (500)
3. Google+ (500)
4. Qzone (480)
5. Weibo (300)
6. Formspring (290)
7. Habbo (268)
8.  Linkedin (200)
9. Renren (160)
10. Instagram (150)
11. Vkontakte (123)
12. Bebo (117)
13. Tagged (100)
14. Orkut (100)
15. Netlog (95)
16. Friendster (90)
17. hi5 (80)
18. Fixster (63)
19. MyLife  (51)
20. Plaxco (50)

..................................................................................................................................................................

கலை மாறன்  kalai07@live.co.uk
கே: குழந்தைகள், வயதிற்கு வந்த பிள்ளைகள் Facebook, Friendster, Twitter, போன்ற சமூகத் தளங்களில் அவர்கள் பயன்படுத்தும் ’பாஸ்வோர்ட்’ சொல்லை நாம் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எச்சரிக்கை ஏற்கனவே செய்து இருக்கிறீர்கள். குழந்தைகள் என்றால் எத்தனை வயது? வயதிற்கு வந்த பிள்ளைகள் என்றால் எத்தனை வயது?


ப: மின்னஞ்சல் வழியாக ஐந்து கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்கள். ஆர்வத்திற்குப் பாராட்டுகள். முக்கியமான ஒரு கேள்விக்கு வருகிறேன். இணையச் சதிவலைகளில் குழந்தைகளும் பெண்களும் எளிதாகச் சிக்கிக் கொள்கிறார்கள் என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகிறேன்.

நாம் நம்முடைய பிள்ளைகளை முழுக்க முழுக்க நம்பித் தான் அவர்களுக்கு இணையத்தைத் திறந்து விடுகிறோம். ஆனால், Facebook, Friendster, Twitter, Hi5 போன்ற தளங்களின் வசீகரமான அம்சங்கள்; அவற்றின்  கவர்ச்சித் தன்மைகள்; சின்னச் சின்ன பிஞ்சு மனங்களைச் சிதற வைத்து விடுகின்றன. அவர்களின் உணர்வுகளைப் பேதலிக்கச் செய்து விடுகின்றன. அவர்களுடைய பதின்ம வயது எண்ணங்களைத் தடுமாற வைத்து விடுகின்றன என்றுதான் சொல்ல வருகிறேன்.

பேஸ்புக்கில் ஒருவர் கணக்குத் திறக்க வேண்டும் என்றால் அவருக்கு குறைந்தது 13 வயது  முடிந்து இருக்க வேண்டும். சரியா. ஆனால், ஒரு 10 வயதுப் பெண் பிள்ளை, அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தனக்கு 14 வயது ஆகிவிட்டது என்று சொல்லி  கணக்குத் திறந்தால் யாருக்கு என்னத் தெரியும். சொல்லுங்கள்.

பேஸ்புக் நடத்துபவர்கள் என்ன... அமெரிக்காவில் இருந்து இங்கே மலேசியாவுக்குப் பறந்து வந்து... அந்தப் பிள்ளையின் ஐ.சி. அடையாள கார்டை வாங்கிப் பார்த்து... ஓ.கே. சொல்லப் போகிறார்களா என்ன.

பேஸ்புக்கில் யார் வேண்டும் என்றாலும் கணக்குத் திறந்து கொள்ளட்டும். அப்புறம் சோறு தண்ணி இல்லாமல் அதிலேயே உருண்டு புரண்டு கிடக்கட்டும்.  யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால், நான் கவலைப் படுவது எல்லாம் இந்த பி.எம்.ஆர், எஸ்.பி.எம் தேர்வுகள் எழுதும் வயதுகளில் இருக்கும் 15, 16, 17 வயது பிள்ளைகளைப் பற்றித் தான். எஸ்.பி.எம் தாண்டிவிட்டால் எதையாவது செய்து போகட்டும் என்று ஒரு கண்ணை ஒரு பக்கமாக மூடிக் கொள்ளலாம்.

அதுவரையில் பெற்றோர்கள் இந்த இணைய விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள்.

சரி. அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

1.    முதலில் பதின்ம வயது மாணவர்களின் Password எனும் கடவுச் சொல்லைக் கண்டிப்பாகப் பெற்றோர் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

2.    அந்தக் கடவுச் சொல் மாற்றம் செய்யப் படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3.    பிள்ளைகள் பேஸ்புக்கில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்து இருக்க வேண்டும்.

4.    அவர்களுடைய நண்பர்களில் யார் மீதாவது சந்தேகம் வந்தால், பேஸ்புக்கில் அனைவரும் பார்க்கும்படி ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

5.    அந்த நண்பரை உடனடியாகப் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

6.    பதின்ம வயது பிள்ளைகள், இனிப்பான வார்த்தைகளுக்கு சீக்கிரம் மயங்கிவிடுவார்கள். விஷமதாரிகளின் முதல் ஆயுதம் இனிப்பான சொற்கள் தான்.

7.    அவர்களுக்கு நண்பர்கள் இருந்தால் இணையத்திலேயே இருக்கட்டும். தயவு செய்து வீட்டுக்கு வரச் சொல்லி அழைக்க வேண்டாம்.

8.    அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

9.    உங்களின் உடல் தோற்றம் எப்படி. ஒல்லியா, நெட்டையா, என்று விசாரிப்பவர்களை உடனடியாக ஒதுக்கி விடுங்கள். அவர்கலை நம்ப வேண்டாம்.

10.    குடும்ப விஷயங்கள், வீட்டு முகவரிகளைத் தெரியப் படுத்தவே கூட்டாது. இன்றைக்கு என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் லடாய் என்று சொன்னால், நாளைக்கு  இணைய நண்பர் வீட்டுக் கதவைத் தட்டுவான்.

11.    அப்படியே நம்பகரமான பேஸ்புக் நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால், பெற்றோர் அல்லது மிகவும் நம்பிக்கையான உறவினர் யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள்.

12.    சில சமயங்களில் இணையத்தில் ஆபாசமான உரையாடல்கள் வரும். அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் கலந்து கொள்ள வேண்டாம். முற்றாகத் தவிர்த்து விடுங்கள்.

இணையம் என்பது ஒரு மாயை உலகம். அதில் நமக்கு புதுமையான வாய்ப்புகள், அனுபவங்கள் கிடைக்கின்றன. உண்மைதான். ஆனால், அதுவே நமக்கு ஒரு நரக உலகமாக மாறி விடக் கூடாது. குழந்தைகள் என்றால் 15 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்கள். 16 வயதிற்கு மேல் போனால் வயதிற்கு வந்தவர்கள்.

[Google தேடல் இயந்திரத்தில் ksmuthukrishnan என்று தட்டச்சு செய்யுங்கள். என்னுடைய வலைப்பதிவுகள் இருக்கும். ஏதாவது ஒரு பதிவைச் சொடுக்கினால், அங்கே என் மின்னஞ்சல் இருக்கும். உங்கள் கேள்வியை எழுதி அனுப்புங்கள்.]

12 ஜனவரி 2014

கணினி தொடங்கும் போது கறுப்பு வெள்ளை எழுத்துகள்

கணினியும் நீங்களும் 12.01.2014

அய்யாவு காசிப்பிள்ளை, ayyavoo_kasi@yahoo.com

கே: கணினி தொடங்கும் போது முதலில் கறுப்பு வெள்ளை எழுத்துகள் வேகமாக வருகின்றன. அதை ‘பூட்டிங்’ (Booting) என்று அழைக்கிறார்கள். அப்போது எந்த எந்தக் கோப்புகள் அல்லது எந்த எந்த நிரலிகள் இயக்கப் படுகின்றன?


ப: முதன் முதலாகக் கணினியைத் திறந்ததும், அதாவது On செய்ததும் BIOS தன் வேலையைத் தொடங்கும். BIOS என்றால் Basic Input Output System. தமிழில் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று சொல்லலாம்.

கணினியின் உள்ளே தாய்ப்பலகை எனும் Mother Board இருக்கிறது. அதில் பலவித துணைக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அந்தச் சாதனங்கள் அனைத்தையும் ஓர் இயக்க நிலைக்கு கொண்டு வரும் முறைக்குத் தான் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று பெயர்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். கணினி இன்னும் அதன் விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே நுழையவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். விண்டோஸ் சின்னம் வருவதற்கு முன்னால், கறுப்புத் திரையில் வெள்ளை எழுத்துகள் வேகம் வேகமாக வந்து மறையும். பார்த்து இருப்பீர்கள். அவை தான் (பையோஸ்) BIOS அறிவிப்புகள். இந்த ’பையோஸ்’ முதலில் தாய்ப் பலகையைச் சோதனை செய்யும்.

தாய்ப்பலகையில் பிரச்சினை இல்லை என்றால், அடுத்து RAM எனும் தற்காலிக நினைவகத்தைப் பரிசோதிக்கும். அடுத்து Hard Disk எனும் வன் தட்டைச் சோதிக்கும். அடுத்து Graphic Card எனும் வரைகலை அட்டையைச் சோதிக்கும். ஒரு கணினி இயங்குவதற்கு இந்த மூன்று சாதனங்கள்தான் மிக மிக முக்கியமானவை.

இவற்றில் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றால் Error Messege என்று ஓர் எச்சரிக்கை அறிவிப்பு திரையில் தெரியும். அப்புறம் அதோடு ’பையோஸ்’ அதன் வேலைகளை நிறுத்திக் கொள்ளும். ஓர் அடி மேலே போகாது. வெள்ளை எழுத்துகளைக் காட்டிக் கொண்டு அப்படியே நின்றுவிடும்.

இந்த மாதிரி அனைத்துச் சாதனங்களும், சோதனை செய்யப் படுவதை Power On Self Test என்று சொல்வார்கள். சுருக்கமாக POST என்று அழைப்பார்கள். அடுத்து, எல்லாம் சரி என்றால், ’பையோஸ்’ நெகிழ்தட்டின் (Floppy Disk) பக்கம் தன் பார்வையைத் திருப்பும்.

இப்போது வரும் கணினிகளில் இந்தத் நெகிழ்தட்டகம் இருக்காது. அதனால், பையோஸ் நெகிழ்தட்டிச் சோதனையைச் செய்யாது. நேராக Hard Disk எனும் வன்தட்டிற்குப் போய் MBR எனும் Master Boot Record இருக்கிறதா என்று பார்க்கும்.

Master Boot Record என்றால் தலைமை இயக்கப் பதிவு. அதாவது ஒரு கணினியை இப்படித் தான் இயக்க வேண்டும் என்கிற பதிவு. அடுத்து இந்த MBR உடனே DBR ஐத் தேடும். DBR என்றால் Dos Boot Record. டி.பி.ஆர். இல்லை என்றால் எல்லா வேலைகளும் அப்படியே நின்று போகும். கணினியின் இயக்கமும் நின்றுவிடும். DBR இருந்தால் அடுத்த வேலை ஆரம்பமாகும். IO.SYS எனும் தகவல் கோப்பு தற்காலிக நினைவகத்தில் ஏற்றம் செய்யப் படும்.

அடுத்ததாக இந்த IO.SYS கோப்பு, CONFIG .SYS எனும் மற்றொரு கோப்பைப் பரிசீலிக்கும். எல்லாம் சரி என்றால், அடுத்து MSDOS.SYS எனும் இன்னொரு கோப்பு ஏற்றம் செய்யப்படும். கடைசியாக மிக மிக முக்கியமான COMMAND. COM எனும் கோப்பு ஏற்றம் காண்கிறது.

அதைத் தொடர்ந்து இறுதியாக AUTOEXEC.BAT எனும் கோப்பு. இந்தக் கோப்பு கணினிக்குத் தேவையான இயக்கிகளை எல்லாம் பதிவு செய்து, விண்டோஸ் இயங்குதளத்திற்குள் ஏற்றம் செய்கிறது. இயக்கி என்றால் Driver. அப்புறம் தான் விண்டோஸ் இயங்குதளம் தன் வேலையை ஆரம்பிக்கும். விண்டோஸ் சின்னம் கணினித் திரையில் தெரியும்.

இத்தனை ‘பையோஸ்’ வேலைகளும் பத்தே பத்து விநாடிகளுக்குள் செய்து முடிக்கப் படுகின்றன. என்ன அதிசயம் பாருங்கள். கணினியைத் தட்டிவிட்டு ‘ஏன் இவ்வளவு ‘லேட்’ பண்ணுது’ என்று சிலர் கரித்துக் கொட்டுவார்கள். பாவம் கணினி. கொஞ்ச நேரத்தில் என்ன என்ன வேலைகளைச் செய்கிறது பார்த்தீர்களா.

இனிமேல் கணினியைத் தட்டி விட்டதும், உள்ளே ‘பையோஸ்’ என்ன என்ன வேலைகளைச் செய்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். சபிக்க வேண்டாம். அதிசயப் படுங்கள். அதன் மகிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

கணினி நம்முடைய தெய்வத்திற்குச் சமமானது. ஆண்டவன் நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார். அதை நாம் போற்ற வேண்டும். கையெடுத்துக் கும்பிட வேண்டும். இனிமேல் கணினியைத் தொடுவதற்கு முன்னால், அதை ஒரு முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு மற்ற வேலைகளைப் பாருங்கள். அதை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடமும் சொல்லிக் கொடுங்கள்.


பூர்ணம் விஸ்வநாதன், செபாராங் பெராய், பினாங்கு
கே: LAN என்றால் என்ன?

ப: Local Area Network என்பதே அதன் சுருக்கம். பல கணினிகளை ஒரே ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கும் முறையை, ‘லான்’ என்று அழைக்கிறார்கள். தமிழில் ‘உள்ளக வலைப் பின்னல்’ என்று அழைக்கலாம். விக்கிப்பீடியாவிற்கு உருவாக்கிக் கொடுத்தச் சொல் தொடர். உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள். பெருமையாக இருக்கிறது.


ஓர் அலுவலகத்தில் நூற்றுக் கணக்கான கணினிகள் இருக்கும். அந்தக் கணினிகளை ஒன்றுக்குள் ஒன்றாய் இணைத்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதையே ‘லான்’ என்று சொல்கிறோம். ஒரு கணினி பத்தாவது மாடியில் இருக்கும். இன்னொரு கணினி முப்பதாவது மாடியில் இருக்கும். இன்னும் ஒன்று இருபதாவது மாடியில் இருக்கும். இவற்றின் தொடர்புகளை ஒன்றாக இணைக்கும் முறைதான் ‘லான்’. புரியுதுங்களா.

@(வாசகர்களின் வேண்டுகோள். இந்தக் கேள்வி பதில் மறுபடியும் பிரசுரிக்கப் படுகிறது)

கே: உளவு பார்க்கும் Spy Camera மூலம் பெண்களைப் படம் பிடித்து இணையத்தில் வர வைக்கிறார்களே. எப்படி தவிர்க்கலாம். அப்படி செய்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: பெரிசா நினைக்க என்ன இருக்கிறது. அஞ்சு வயசு பிஞ்சுகள் எல்லாம் ஆள் ஆளுக்கு காமரா கைப்பேசிகளோடு அலைகிற காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதனால் நாம்தான் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஆக, அந்த மாதிரியான அவல நிலைமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் என்ன செய்ய வேண்டும். சில பாதுகாப்பு முறைகளைச் சொல்கிறேன்.

1. ’சைபர் கபே’ (Cyber Cafe) எனும் இணைய மையங்களுக்குப் போகும் பெண்கள் கவனிக்க வேண்டியது. ஒவ்வொரு கணினித் திரைக்கும் மேலே ஒரு புகைப்படக் கருவி பொருத்தப்பட்டு இருக்கும். அதை இணையக் காமிரா அல்லது ’வெப் காமிரா’ என்று அழைப்பார்கள்.

உங்களுக்குத் தெரியாமல் அந்தக் காமிரா உங்களைப் படம் பிடித்துக் கொண்டு இருக்கலாம். சொல்ல முடியாது. அது உங்களுக்கே தெரியாது. அதனால் போய் உட்கார்ந்ததும், அந்தக் காமிராவை வேறு பக்கமாகத் திருப்பி விடுங்கள். சந்தேகமாக இருந்தால் அந்த மாதிரியான இடங்களுக்குப் போவதைத் தவிர்த்து விடுங்கள்.

இன்னும் ஒரு விஷயம். காமிராவைத் திருப்பச் சொன்னேன் என்பதற்காக பக்கத்து மேசையில் இருப்பவரை படம் பிடிக்கிற மாதிரி திருப்பி வைக்க வேண்டாம். அப்புறம் அந்த ஆள் சண்டைக்கு வர, நீங்கள் முறைத்துப் பார்க்க, மூன்றாவது உலகப் போர் வந்தாலும் வரலாம். என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம். கவனம்.

2. வெளியூர்களுக்குப் போய் ஓட்டல்களில் தங்க வேண்டி வரலாம். அந்த மாதிரியான நேரங்களில் படுக்கைக்கு அருகில் சந்தேகம் வருகிற மாதிரி பொருட்கள் இருக்கின்றவா என்பதை நன்றாக உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இது முக்கியம். குளியல் அறைகள், துணி மாற்றும் அறைகளில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும்.

3. மிக நெருக்கமாக இருக்கும் போது, உங்கள் கணவரே விளையாட்டுத் தனமாய் உங்களைப் படம் பிடிப்பதாய்ச் சொன்னால் கூட அனுமதிக்க வேண்டாம். கைப்பேசியில் இருக்கும் காமிராவில் படம் பிடித்துப் பார்த்து விட்டு, பிறகு அழித்து விடலாம் என்பார்.

கணவருக்கு இல்லாத ஒன்றா என்று நீங்களும் பேசாமல் இருந்து விடுவீர்கள். என்னையும் பார் என் அழகையும் பார் என்று தாலி கட்டிய புருஷனுக்குப் ‘போஸ்’ கொடுத்து இருப்பீர்கள். சொன்ன மாதிரி அதை உங்கள் கணவர் முற்றாக அழித்தும் இருப்பார்.

ஆனால், ஒன்று தெரியுமா. கைப்பேசியில் இருந்து அழித்தப் படங்களை மறுபடியும் மீட்டு எடுக்க மென்பொருள்கள் உள்ளன. அதாவது கைப்பேசியின் ’மெமரி கார்ட்’டில் இருந்த படங்களைச் சுத்தமாக அழித்து இருக்கலாம். அங்கே ஒன்றுமே இருக்காது.

இருந்தாலும் எப்போதோ அழித்துவிட்ட அந்தப் படங்களை மீட்டு எடுக்க முடியும். ஒரு வருட படமாக இருந்தாலும் சரி. அடுத்து, அந்தக் கைப்பேசியில் ஏதோ கோளாறு. ஏதோ ஒரு கைப்பேசி கடைக்கு எடுத்துக் கொண்டு போய் பழுது பார்க்கக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

மேற்சொன்ன மென்பொருளைப் பயன் படுத்தி கைப்பேசியில் இருந்து அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை மீட்டு எடுக்க முடியும். அதை அப்படியே இணையத்திலும் பரப்பிவிட முடியும். அந்த மாதிரியான கில்லாடித் தனமான மென்பொருள்கள் என்னிடமும் உள்ளன.

என்ன மென்பொருள் என்று பெயரைக் கேட்க வேண்டாம். இதுவரை பயன் படுத்தியது இல்லை. அவசியமும் ஏற்படவில்லை. அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுப்பது பெரிய பாவம். அந்தப் பாவங்கள் நம்மைச் சும்மா விடாது. கடைசி காலத்தில் வட்டியும் முதலுமாய் வந்து சேரும்.

4. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் இனிக்கும் போது இமய மலையைக் கட்டி இழுத்து வந்து, உங்கள் காலடியில் போடுவார்கள். அதே காதல் கசக்கும் போது உலகத்திலேயே மகா மோசக்கார வில்லனாவும் மாறிப் போவார்கள். அதனால் காதலனிடம் கவனமாய் இருங்கள்.

படம் பிடிக்க அனுமதிக்கவே வேண்டாம். புருசனுக்கே வேண்டாம் என்று சொல்லும் போது, காதலனுக்கு என்ன கொம்பா சீவி விட்டு இருக்கிறது. இந்தக் காலத்து காதலர்களில் சிலர் பணத்துக்காக எதையும் செய்யும் பஞ்சமா பாதகர்களும் இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஆண் பெண் சளைத்தவர்கள் இல்லை. இரண்டு பேரும் சமம். எல்லோரையும் சொல்லவில்லை. இன்னும் ஒரு விஷயம். சேலை கட்டிப் பிடித்த படத்தை, நிர்வாணப் படமாக மாற்றிக் கொடுக்கும் வரைகலை நிரலிகளும் வந்துவிட்டன. அதை வைத்து அவர்கள் என்ன என்னவோ செய்ய முடியும்.

5. படிக்கிற பிள்ளைகள் அதிக நேரம் அரட்டையாடல் எனும் Chatting செய்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் அறிவுரை சொல்ல வேண்டும். தயவு செய்து அதிகாரத்தைப் பயன் படுத்த வேண்டாம். கைப்பேசியில் தொங்கிக் கொண்டு கம்ப ராமாயணம் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் நாசுக்காகச் சொல்லி திசையைத் திருப்ப வேண்டும். இறுக்கிப் பிடித்தால் வேறு வினையே வேண்டாம். பட்டம் அறுந்து தொலைந்து போய்விடும்.

6. கடைசியாக ஒன்று. இளம் பெண்களே! பொது இடங்களுக்கு போகும் போது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிந்து கொண்டு போங்கள். முதலில் சொன்ன மாதிரி ‘என்னையும் பார் என் அழகையும் பார், கிழிஞ்சு போன என் சிலுவாரையும் பார்’ என்று பாடிக் கொண்டு போக வேண்டாம். சும்மா இருக்கிற காமிரா கைப்பேசிகளுக்கு திண்டுக்கல் அல்வா கொடுக்கிற மாதிரி ஆகிவிடும்.

[உங்கள் கேள்விகளை அனுப்ப சுலபமான வழி. Google தேடல் இயந்திரத்தில் ksmuthukrishnan என்று தட்டச்சு செய்யுங்கள். அவ்வளவுதான். என்னுடைய வலைப்பதிவுகள் இருக்கும். அதில் ஒரு பதிவைச் சொடுக்கு செய்தால் போதும். அங்கே என் மின்னஞ்சல் இருக்கும். அதைச் சொடுக்கி உங்கள் பிரச்சினையை எழுதி அனுப்புங்கள். பதில் ஒரே வாரத்தில் கிடைக்கும்.]

07 டிசம்பர் 2013

கோபுரங்கள் சாய்வதில்லை


நெல்சன் மண்டேலா




எம்.ஜி.ஆர். அசைவற்றுக் கிடக்கின்றார். பேச்சு மூச்சு இல்லை. அங்கே பாலமுரளி கிருஷ்ணாவின் மதுர கானங்கள் சன்னமாய் ஒலிக்கின்றன. அதைக் கேட்டு ஒரு சில மணித் துளிகளுக்கு எம்.ஜி.ஆரின் உடல் லேசாய் அசைகின்றது. அவரின் கடைசியான சுவாசக் காற்றும், மௌனத்தின் ராகங்களாய் நெஞ்சுக்குள் சலனமாகின்றன. எம்.ஜி.ஆர். என்கிற சரித்திரம் சாய்ந்தும் போகிறது. 

அதே போல நெல்சன் மண்டேலாவும் படுத்தப் படுக்கையாய்க் கிடக்கின்றார். ஆப்பிரிக்க மண்ணின் வைதீக வாசகங்கள் இசைக்கப் படுகின்றன. மண்டேலாவின் மெய்யுடல் கொஞ்சமாய்ச் சிலிர்க்கின்றது. ஒரு சகாப்தம் சாயப் போகின்றது. எல்லாரும் பேசிக் கொள்கின்றார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும்.

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்; அவர் மாண்டுவிட்டால் அதை பாடி வைப்பேன் எனும் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன. கதிரவனுக்கு அஸ்தமனம் இல்லை. அதைப் போலத்தான் நெல்சன் மண்டேலா போன்ற மானுட இலக்கணங்களுக்கும் மறைவு என்பதும் இல்லை. 

சொர்க்கத்தில் நிற வெறி என்கிற சட்டாம்பிள்ளை தலை கால் தெரியாமல் ஆட்டம் போடுகிறதாம். அதனால் அதற்குத் தனியாக ஒரு பாடம் நடத்தச் சொல்லி மாண்டேலாவுக்கு தந்தி வந்து இருக்கிறது.  போவதற்கு அவரும் தயாராகிக் கொண்டு இருக்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பயணத்திற்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்று சொல்கிறார்கள். 

அத்தி பூத்தால் போல மலரும் மனித மலர்கள்          

வயதான மனிதர். மனித ஆசாபாசங்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் முகர்ந்து பார்த்தவர். மண் வாசனைகளுடன் மனித நாற்றத்தையும் சுமந்து போக வேண்டும். கொஞ்சம் மெதுவாகத்தான் போவார். மனம் சொல்கின்றது. அப்படியே மெதுவாகவே போகட்டுமே. 

அத்தி பூத்தால் போல மலரும் ஒரு சில மனித மலர்கள் உதிரும் போது நம் மனசும் கனமாய்ப் போகின்றது. அந்த மலர்களின் ஆன்மாக்களை வழியனுப்ப வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் போது ஆத்மபலமும் குறைந்து போகின்றது. ஒரு சரித்திரம் பேசும் சகாப்தத்தின் கண்ணீர்க் கதை வருகிறது. படியுங்கள். மரியாதை செய்யுங்கள்.   

உலக வரலாற்றில் சுதந்திரப் போராட்டம் என்பது இரண்டு வகை. மனித உரிமைகளுக்காகவும், மனித இனத்தின் சமத்துவத்திற்காகவும் போராடுவது ஒரு வகை. நாடு விட்டு நாடு வந்த அந்நியர்களின் இரும்புப் பிடியில் இருந்து விடுபடுவதற்காகப் போராடுவது இன்னொரு வகை. 

இந்த இரண்டு வகையான சுதந்திரத்திற்காகத் தங்கள் உடலையும் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராடியவர்கள் ஏராளம் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை மட்டும் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு காலாகாலத்திற்கும் நினைவில் வைத்து இருக்கும். எப்போதுமே பொன் எழுத்துகளால் பொறித்தும் வைத்து இருக்கும். 

ஒருவர் இந்திய மண் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழி வகுத்துத் தந்த காந்தி மகான். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உடலையே பணயம் வைத்து உயிரையே பரிசாகத் தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவருக்குமே வாழ்நாள் சாதனை என்று சொல்லித் துப்பாக்கிக் குண்டுகளை மட்டுமே பரிசுகளாகக் கொடுத்து இருக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில் விடிவெள்ளி

மூன்றாவதாக வருபவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். எந்த நேரத்திலும் விடைபெற்றுச் செல்லலாம். அவரை வாழும் காந்தி என்று அழைக்கிறோம். இந்த நவீன இருபதாம் நூற்றாண்டில் இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென் ஆப்பிரிக்காவில் விடிவெள்ளியாய்த் தோன்றியவர். அவர்தான் நெல்சன் மண்டேலா.

ஆப்பிரிக்காவின் மண்ணின் மைந்தர்கள் என்று அங்கே வாழும் கறுப்பு இனத்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஓர் ஒப்பற்றத் தலைவர். ஓர் ஆண்டு அல்ல இரண்டு ஆண்டுகள் அல்ல. 27 ஆண்டுகள் தன் கொள்கைகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்தவர். உலகம் போற்றும் ஓர் உன்னத மனிதர். ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதையும்!

1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் டிரான்கே என்ற பகுதியில் குலு எனும் கிராமத்தில் பிறந்தார். அங்கு சோசா பழங்குடி என்கிற ஓர் இனம் இருந்தது. அந்த இனத்தின் தலைவருக்கு நான்கு மனைவிமார்கள். அவருக்கு 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் தான் இந்த மண்டேலா. இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. 

குடும்பத்தில் முதன் முதலாகப் பள்ளிக்குச் சென்றவர். காலையில் பள்ளிக்கூடம். மாலையில் ஆடு மாடுகளை மேய்ப்பது. ஆற்றுக்குப் போய் தண்ணீர் எடுத்து வருவது. பயிர்ப் பச்சைகளுக்குத் தாகம் தீர்ப்பது. பறித்த காய்கறிகளை அக்கம் பக்கத்தில் விற்பது. விலை குறைவாகக் கேட்பவர்களிடம் சண்டைக்கு நிற்பது. வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் ரோத்தான் பூசை வாங்குவது. 

தம்பி தங்கைகளுக்காக ஏச்சு பேச்சுகளை வாங்கிக் கட்டிக் கொள்வது. ஆட்டுக்குட்டி காணாமல் போனால், அதைத் தேடிக் கொண்டு காடு மேடு எல்லாம் அலைவது. கிடைக்கும் வரை எத்தனை நாள் ஆனாலும் காட்டிலேயே படுத்துத் தூங்குவது. ஒரு சாதாரண கிராமத்துப் பையன் எப்படி சுற்றித் திரிவானோ அந்த மாதிரிதான் நெல்சன் மண்டேலாவின் ஆரம்ப வாழ்க்கையும் பயணித்துப் போய் இருக்கின்றது.

சிறுபான்மை வெள்ளை இனத்தவர்                   

பொதுவாக அவரை நெல்சன் மண்டேலா என்றே அழைப்பார்கள். இவரின் பெயருக்கு முன்னால் வரும் "நெல்சன்"  என்பது, இவர் படித்த முதல் பள்ளியின் ஆசிரியரால் வைக்கப்பட்டது. சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அவரை எல்லாரும் தெரிந்து வைத்து இருந்தனர். ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்த கள்ளிக்காடாக விளங்கியது. 

சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைகளாக வாழ்வதையும், அவர்கள் கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து நொந்து போனார். சிறுபான்மை வெள்ளை இனத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்கிற உணர்வு, அப்போது சின்ன வயதிலேயே ஆழமாய்ப் பதிந்தும் போனது. 

போர்ட் ஹேர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதற்காக அவர் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா மனம் தளரவில்லை. கல்வியைக் கைவிடவும் இல்லை. 

வேறு ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத் துறையில் பட்டம் பெற்றார். கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்டவர் மண்டேலா. லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜொகானஸ்பர்க் சென்று பகுதி நேரமாகச் சட்டக் கல்வி படித்தார். அங்கே ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

17-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என ஓர் ஐரோப்பிய பட்டாளமே தென் ஆப்பிரிக்காவிற்குப் படை எடுத்தது. தென் ஆப்பிரிக்க மண் அவர்களைச் சந்தோஷமாக வரவேற்றது. கறுப்பின மக்களுடன் அவர்கள் குசலம் விசாரித்தனர். நன்றாகக் கைகுலுக்கிக் கொண்டனர். வந்தவர்களின் எண்ணிக்கையும் பெருகியது. அதிகாரத்தைக் கைப்பற்றி கறுப்பு இனத்தவர்களைக் கொத்தடிமைகளாக நடத்த முயற்சிகளும் செய்தனர்.

விருந்தோம்பல் பேசி வந்தவர்கள்தான் வெள்ளையர்கள். அப்படி வந்தவர்கள் கடைசியில் விருந்து வைத்தவர்களின் நாட்டையும் நிலத்தையும் பிடித்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் எண்பது விழுக்காட்டினராக இருந்த கறுப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலம் எவ்வுளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநில அளவு.

கறுப்பர்களைப் பிரித்து வைத்து நாடகம் 

வெள்ளையர்களுக்கு என்று தனித் தனிப் பள்ளிக்கூடங்கள், தனித் தனி நூலகங்கள், தனித் தனி மருத்துவமனைகள், தனித் தனிப் பூங்காக்கள், தனித் தனிக் கட்டடங்கள். ஆக, அவர்களுக்கு என்று எல்லாவற்றையுமே தனித் தனியாக வைத்துக் கொண்டார்கள். 

வெள்ளையர்கள் இருக்கும் இடத்தில் கறுப்பர்களுக்கு இடம் கிடையாது. அங்கே தலை வைத்துப் பார்க்கவும் கூடாது. ஆனால், அடிமைகள் போல எடுபிடி வேலைகள் செய்யலாம். அதை எல்லாம் தாண்டிய ஒரு விசயம். 

வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கறுப்பு இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்படிப் பட்ட கொடுமைகளை எதிர்த்து எண்பது விழுக்காட்டுக் கறுப்பர்கள் போராடியிருக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். முடியும். ஆனால், வெள்ளையர்கள் புத்திசாலிகள். மொழிகளின் பெயரால் கறுப்பர்களைப் பிரித்து வைத்து நாடகம் ஆடினர். 

ஆட்சியும் அதிகாரமும் வெள்ளையர்களிடம் மொத்தமாக மாறிப் போயின. 1939-ஆம் ஆண்டில் தனது 21-ஆவது வயதில் மண்டேலா கறுப்பின இளைஞர்களை ஒன்றாகச் சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்கினார். 

”கறுப்பின மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். அவர்களின் வாக்களிக்கும் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவர்களுடைய நாட்டிலேயே அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது. கறுப்பின மக்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆவதும் தடை செய்யப் படுகிறது. 

சொந்த மண்ணிலேயே சொந்த பந்தங்கள் வேர் அறுக்கப்படுகின்றன. அவை கறுப்பின மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. அவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என கறுப்பின மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றியும் கண்டார்.

1948-ஆம் ஆண்டு கறுப்பின மக்களுக்கு எதிராக வஞ்சகமான நடவடிக்கைகள் தலைவிரித்தாடின. மண்டேலாவின் உற்றத் தோழன் ஒலிவர் ரம்போ. இருவரும் அப்போது இருந்தே பல்கலைக்கழக நண்பர்கள். இருவரும் இணைந்து ஒரு சட்ட நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் வழி கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவிகளையும் செய்தார்கள்.

இனவாதமும் ஒடுக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதைக் கண்ட மண்டேலா சீற்றம் அடைந்தார்.வேறு வழி இல்லாமல் அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. 

அதன் தலைமைப் பொறுப்பை மண்டேலா ஏற்றார். இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவர் தலைவராக இருந்தபோது, இனவாதக் கொள்கைகளுக்கு எதிரான அறப் போராட்டங்கள் துளிர்விட்டன. 

அறப்போர் மூலமாகப் போராட்டம்          

மண்டேலாவின் வன்முறையற்ற போராட்டங்கள் வளர்ச்சி அடைவதைக் கண்ட வெள்ளையர்கள் பயந்து போனார்கள். இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்றும் நினைத்தனர்.  1956-ஆம் ஆண்டு, அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று மண்டேலாவை அரசாங்கம் கைது செய்தது. இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் மண்டேலா மேலும் தீவிரமாகச் செயல்பட்டார். 

அதன் காரணமாக 1960-களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1960-இல் ஆப்பிரிக்கர்களுக்கு சிறப்புக் கடவுச் சீட்டுகள் வழங்கப் படுவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்வைல் எனும் நகரில் நடத்தினார். அந்தச் சம்பவத்தில் ஊர்வலத்தினர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அதில் 69 பேர் கொல்லப்பட்டனர். 

1956-ஆம் ஆண்டு டிசம்பர் 5-இல் தேசத் துரோகக் குற்றச் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப் பட்டனர். நீண்ட நெடிய சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அனைவரும் குற்றச் சாட்டில் இருந்து விடுவிக்கப் பட்டனர்.

இதனை அடுத்து அறப்போர் மூலமாகப் போராடி உரிமைகளைப் பெற முடியாது என்பதை மண்டேலா உணர்ந்து கொண்டார். அடுத்து ஆயுத வழிமுறையை நாடினார். அதுதான் உச்சக்கட்டம். அவரைக் கைது செய்ய வெள்ளையர்கள் முடிவு செய்தனர். சரியான நேரம் பார்த்து காத்து நின்றனர்.

1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா பொறுப்பேற்றார். அந்த ஆயுதப் படையை உருவாக்கியதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. வெளிநாடுகளிடம் இருந்து பண, இராணுவ உதவிகளைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தது. கொரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்.

1961 டிசம்பர் 16-ஆம் நாள் முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப் பட்டது. அரசாங்கம் உஷாரானது. வெள்ளையர்கள் குரல்வளையைப் பிடிக்கப் போகின்றனர் என்று தெரிந்ததும் மண்டேலா தலைமறைவானார். அவரைப் பிடிக்க கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவர் மனித உரிமைகளை மீறி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அதனையே காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தித் தள்ளியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தது. 
 
1962 ஆகஸ்ட் 5-ஆம் நாள் மாறு வேடம் அணிந்த காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட மண்டேலாவும் முக்கியத் தலைவர்களும் கைது செய்யபட்டனர். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார்கள்; அமைதியைக் கெடுத்தார்கள்; கலகத்தை உருவாக்கினார்கள் என்று அவர்கள் மீதான குற்றம் சாட்டப்பட்டது. 

அந்த வழக்கை ரிவோனியா செயல்பாடு (Process Rivonia) என்று அழைக்கிறார்கள். மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-ஆம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம்தான் 27 ஆண்டுகளாக நீடித்தன.

உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது என்று தாராளமாய்ச் சொல்லலாம். பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துப் போட்டு அரசாங்கம் கொடுமை செய்து உள்ளது. மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 

1988-ஆம் ஆண்டு அவருக்கு கடுமையான காச நோய் ஏற்பட்டது. மரணத்தின் வாசல்படிக்கே சென்றார். அதனால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சி மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தது. மண்டேலாவின் மனைவி வின்னி மடிகி லேனா தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென் ஆப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். தென் ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக வில்லியம் கிளார்க் பதவிக்கு வந்தார். 

அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலையை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து நின்றதது. 1990 பிப்ரவரி 11-இல் விடுதலை செய்யப்பட்டார். மண்டேலா விடுதலை பெற்ற போது அவருக்கு வயது 71. இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் நேரடியாகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

நேரு சமாதான விருது           
             
மண்டேலாவை வரவேற்க இந்தியாவின் சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் ஒரு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான் தொண்டர்களும் அவரை மகிழ்ச்சி ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலா பாதுகாப்பாகக் கேப்டவுன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் விடுதலை உலக தலைவர்களின் வரவேற்பைப் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் மண்டேலா கூறியதாவது:-

இனவெறி ஆட்சியை தனிமைப் படுத்த அனைத்துலகச் சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் அந்தப் பேச்சு வார்த்தைக்குத் சரியான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக மரபில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்’ என்றார்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, அவர் சிறையில் இருக்கும் போதே இந்திய அரசு அவருக்கு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவரின் சார்பில் வின்னி புதுடில்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 

1990-இல் இந்தியாவின் ஆக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1993-இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி அனைத்துலக விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18-ஆம் தேதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக ஐக்கிய நாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இவர் 1998-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனதும் அவர் செய்த முதல் காரியம்; தென் ஆப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுவதாகும். 

தன் ஆப்பிரிக்காவில் தமிழ் மொழி கற்றுத்தரப் படுகிறது என்றால் அதற்கு மூல காரணமாக இருப்பவர் சாட்சாத் மண்டேலாதான். 1999-இல் பதவியை விட்டு விலகினார். இவர் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ஆம் தேதி, பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது. அன்னாரின் வயதையும் கவனிக்க வேண்டும். 94 வயதாகிறது. வாழ்க்கையில் பெரும்பகுதியைச் சிறையில் கழித்துவிட்டார். 

ஒரு விடிவெள்ளியாய்த் தோன்றியவர். ஒரு காந்தியாய் வாழ்ந்தவர். மானுடத்தின் இலக்கணமாய் அந்திமப் புன்னகையைச் சிந்தியவர். ஆனால். அது ஓர் அஸ்தமனப் புன்னகையாக மாறிவிட்டார். எழுதிச் செல்லும் விதியின் கரங்கள் சரியாகவே எழுதிவிட்டன.