27 செப்டம்பர் 2017

தொலை பேசியா - தொலைப்பேசியா

தொலைப்பேசி என்பதே சரியான சொல். தொலை + பேசி = தொலைப்பேசி. இங்கே வலி மிகும். 


தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று மட்டும் ஏன் பிழையாகச் சொல்கிறோம். புரியவில்லை. தொலை பேசி என்றால் பேசியைத் தொலைத்துவிடு என்று அல்லவா பொருள் படுகிறது.

தொலைவில் இருந்து காணக் கூடியது தொலைக்காட்சி. அப்படி என்றால் தொலைவில் இருந்து பேசக் கூடியது தொலைப்பேசி தானே? பின்னர் ஏன் பலர் தொலைபேசி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

25 செப்டம்பர் 2017

பூஜாங் நடராஜா



 மலேசியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்து நன்றி சொல்ல வேண்டிய ஒரு மனிதர் மலேசியாவில் இருக்கிறார் என்றால் அவர்தான் டத்தோ வீ. நடராஜன். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைப் பூஜாங் பள்ளத்தாக்கின் இந்திய வரலாற்றை மீட்டு எடுப்பதில் அர்ப்பணம் செய்தவர். செய்தும் வருபவர்.

அவரின் ஆய்வுப் பணிகளின் பெருமைகள் ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களுக்கும் போய்ச் சேர்கின்றது. அதையும் தாண்டிய நிலையில் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களையும் சார்கின்றது. தமிழர், தெலுங்கர், மலையாளிகள் அனைவருக்கும் அந்தப் பெருமை போய்ச் சேர்கின்றது. 



மலேசிய இந்தியர்களின் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் பாரம்பரியப் பாதுகாப்புக் கழகத்திற்கு கடிதம் மேல் கடிதம் எழுதியவர். 


ஐக்கிய நாட்டுச் சபையின் வரலாற்று ஆய்வாளர்களைக் கெடா மாநிலத்திற்குக் கொண்டு வந்தவரும் இவர் தான். கெடா மாநில அரசாங்கத்தைக் கையெழுத்துப் போட வைத்தவரும் இவர் தான். அவருடைய இந்த வரலாற்றுப் போராட்டத்தினால் அரசாங்கத்தின் கசப்பான பார்வைகளையும் எதிர்நோக்க வேண்டி வந்துள்ளது.

பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றை மீட்டு எடுப்பது என்பது அவரைப் பொருத்த வரையில் அது ஒரு தனிமனித வரலாற்றுப் போராட்டம் அல்ல. அது அவரின் வாழ்நாள் வேட்கையின் வேங்கைத்தனம். சீறும் சிங்கத்தனம்.


அந்த ஆய்வின் முடிவே *சோழன் வென்ற கடாரம்* எனும் வரலாற்று ஆய்வு நூல். 20 ஆண்டுகள் ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார். மலேசியத் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரலாற்றுச் சுவடி. கைகூப்புகிறேன் டத்தோ நடராஜன் அவர்களே.

(சான்று:http://www.thestar.com.my/news/nation/2013/12/10/candi-lembah-bujang-destroying-history/ - Datuk V. Nadarajan, chairman of the Bujang Valley Study Circle non-governmental organisation.)

அவருடைய அந்த ஆய்வு நூல் பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு, அகழ்வாய்வியல் பற்றிய ஓர் ஆழமான பார்வை. மலேசியாவின் தேசியப் பாரம்பரியச் சொத்தான புராதன கெடாவின் வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது. மலேசியாவில் வாழும் அனைத்துத் தமிழர்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் களஞ்சியம்.


டத்தோ வீ. நடராஜன் என்பவர் மலாயா வரலாற்றில் ஒரு வல்லுநர்.  மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்று தேர்ச்சி பெற்றவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர்.

கெடா சுங்கைப் பட்டாணி நகரில் பிறந்து வளர்ந்தவர். ஒரு சாமானிய மனிதராகவே காலத்தைக் கழிக்கின்றார். வஞ்சகம் இல்லாத மனசு.

மலேசியா இந்தியர்கள் கண்டு எடுத்த ஒரு மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. இவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும். 


இவரின் ஆய்வுப் பணிகளுக்கு மலேசிய இந்தியர்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மலேசிய இந்தியர்கள் அனைவரும் இவருக்குக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிப்பு செய்ய வேண்டும். நம் நாட்டு இந்தியத் தலைவர்கள் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் செய்வார்களா. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக அமைந்துவிடக் கூடாது.

மனதில் குழப்பமா

எதற்கு எடுத்தாலும் சிலர் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். கவலை வேண்டாம். மனதைத் திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்லது நடக்கும் என்று நினைத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும். 



 அடுத்து வருவது எல்லாம் நன்மைக்கே என்று கற்பனை செய்ய வேண்டும். அப்படியே அந்த நினைப்பில் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

வந்தது வரட்டும் என்று துணிந்து நிற்க வேண்டும். வந்தவை எல்லாம் வரவுகள். வராதவை எல்லாம் வைப்புத் தொகைகள். சவால்மிக்க மனித வாழ்க்கையில் எதிர்த்துப் போராடப் பழகிக் கொள்ளுங்கள். துவண்டு விடாதீர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

வாழ்க்கை கரிக்கோல் அல்ல

வாழ்க்கை நிலையன்று. உடைந்து போன கரிக்கோல் போல உடைந்து என்றுமே இரண்டாகித் தனிப்பது இல்லை. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எந்தப் பிரச்சினைகளும் வரலாம். 
 

ஆனால் அவையே உங்களின் உலகத்திற்கு ஓர் எல்லையாக அமைந்து விடக் கூடாது. பிரச்சினைகளை எப்படித் தீர்க்கலாம் என்று திட்டம் போடுவதே சாதனைவளச் சிந்தனையாகும்.

வாழ்க்கையைச் சீர் செய்வதற்கு அதுவே புதிய பரிமாணம். உடைந்த கரிக்கோலின் இரு பாகங்களை எப்படி தனித் தனியாகச் செயல்படுத்த முடியுமோ அது போலவே உடைந்த வாழ்க்கையையும் புதிய பரிமாணத்தில் சீர்செய்து கொள்ள முடியும். சீர் செய்து பார்க்கவும் முடியும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

20 செப்டம்பர் 2017

எம்.எஸ்.சுப்புலட்சுமி

இசையைச் சுவாசித்தவர். இசையில் தியானித்தவர். இசையொடு இரண்டறக் கலந்தவர். தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணங்கள் வழி ஆலயங்களைத் தரிசிக்க வைத்தவர். 


காஞ்சி காமாட்சியையும், மதுரை மீனாட்சியையும் கண்முன் கொண்டுவரும் திறன் எம்.எஸ். அவர்களிடம் இருந்தது. அத்தகைய பெருமைமிக்க இசை அரசிக்கு இன்றோடு (செப்.16) 100 வயது ஆகிறது. இந்த ஆண்டு எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு ஆகும்.

சங்கீத உலகின் அதிசயங்களில் ஒருவராக மதுரையில் பிறந்தார். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும், பண்டிதர் நாராயண ராவ் அவர்களிடம் இந்துஸ்தானியையும் கற்றுக் கொண்வர். தன் 17-வது வயதிலேயே இசைத் துறையில் இனிய குரலைப் பதிய வைத்தவர்.

‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். அந்த வகையில் பரணியில் பிறந்த இந்த இசையரசி தரணியை ஆளத்தான் செய்தார். சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாகத் திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் திரைப் படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமுதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று.


திரைப் படங்களில் ஆயிரம் பேர் ஆயிரம் பாடி இருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த தெய்வீகக் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல். சங்கீத சாம்ராஜ்யத்தில் திரையுலகம் பார்த்த ஒரு பொக்கிஷம்.

திரையுலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. இன்று வரை எம்.எஸ்.சின் சிகரம் யாராலும் தொட முடியாத சிகரமாகவே உள்ளது.

இசை பெருகுவதன் மூலம் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்பதை உளமார நம்பியவர். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ். அவர்கள் கூறிய கருத்துக்கள்.

இசையுடன் இறை பணியில் இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி மறைந்தார். உலகையே தன் இசையால் வென்றவர். இன்று தொடங்கும் அவரின் நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழர் உலகம் நினைத்துப் பார்க்கட்டும்.