06 நவம்பர் 2019

புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 7

 தமிழ் மலர் - 06.11.2019

உலகில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் ஆக்கும் ஆற்றலும் இருக்கிறது. அழிக்கும் ஆற்றலும் இருக்கிறது. அதே போல புலாவ் பெசார் ஆண்டவருக்கும் அந்த ஆற்றல்கள் இருக்கின்றன. 


புலாவ் பெசார் தீவில் கால் பதித்ததும் ஒருவிதமான அதிர்வுகளை (Vibration) உணர முடியும். எல்லோருக்கும் அந்த உணர்வுகள் ஏற்படுமா என்று தெரியவில்லை. இறந்தும் இறவாமல் அங்கே உறைவிடம் கொண்டுள்ள துறவி மகான்களை மனதார நினைத்தாலே போதும். அந்த அதிர்வுகள் தானாக வந்து சேரும்.

பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்கள் சொன்ன வார்த்தைகள் சாதி சமயம் சம்பிரதாயங்களைத் தாண்டிய வாக்குமூலங்கள்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமே ஒரு பொதுவான வாழ்க்கை முறை. அந்த மாதிரியான பொது வாழ்க்கை நெறி முறைகளுக்கு அப்பால் பட்டவர்கள் இந்தத் துறவி மகான்கள். இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கியவர்கள்.

இவர்கள் நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து வாழ்ந்தவர்கள். இயற்கையோடு இயற்கையாக அசலான இயற்கை வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள். சரிங்களா.

அடுத்து ஒரு முக்கியமான விசயம். உங்களிடம் உடல் சுத்தம், மனச் சுத்தம், சொல் சுத்தம், நடைச் சுத்தம். இந்த நான்கு சுத்தங்கள் இருந்தாலே போதுங்க. அலை அலையான பிரபஞ்ச அதிர்வுகளை உங்களால் உணர முடியும். அப்படித்தான் பலரும் சொன்னார்கள். சொல்லியும் வருகிறார்கள்.

புலாவ் பெசார் தீவிற்குப் போக வேண்டும். அங்கு போய் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்பது பலரின் கனவுகள். ஆக உலக ஆசைகளைக் கடந்து போன தெய்வங்கள் தான் அங்கே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதை நாம் மறக்கக் கூடாது. அதற்கு ஏற்றவாறு நம்முடைய பிரார்த்தனைகள் அமைய வேண்டும்.

அந்தத் தீவில் கால் பதித்து அந்தத் தெய்வங்களை மனதார நினைத்தாலே போதும். கண்களை மூடி கொஞ்ச நேரம் மௌனமாக நின்றாலே போதும். ஒருவிதமான ஆழ் உணர்வுத் துடிப்புகள் ஏற்படும். 


அதைத் தான் புலாவ் பெசார் அதிர்வு அலைகள் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி ஆய்வு செய்து யூடியூப்பில் ஒரு காணொளியைப் பதிவு செய்து இருக்கிறார்கள். போய்ப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

(https://www.youtube.com/watch?v=PHq28bTugo4 - Misteri Pulau Besar Melaka)

இன்னும் ஒரு செய்தி. அங்குள்ள புனிதத் தளங்களிலும் சரி சமாதிகளிலும் சரி மறைந்தும் மறையாமல் பல பெருமகன்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விசயம் பலருக்குப் புரிவது இல்லை.

ஆகவே அங்கு போகிறவர்ளில் சிலர் அந்த மகான்களைப் பற்றிக் கேலி செய்துவது உண்டு. கிண்டல் செய்வதும் உண்டு. ரொம்ப தப்புங்க. உங்களுக்குப் பிடிக்கவில்லையா. விட்டுவிடுங்கள். கமெண்ட் அடிக்க வேண்டாம்.

தெய்வ நம்பிக்கையுடன் பயணியுங்கள். எல்லாமே நல்லபடியாக நடக்கும். நம்பினார் கெடுவது இல்லை. நம்புங்கள். நம்பிக்கையே நம்பிக்கை. சரி.


புலாவ் பெசார் தீவில் பல மகான்கள்; பல துறவிகள் வாழ்ந்து மறைந்து இருக்கின்றார்கள்.

அந்தத்  துறவிகளில் முதலிடம் வகிப்பவர் சுல்தான் ஷெயிக் அரிபின் (Sultan Sheikh Aarifeen). இவரை அரிபின் பாபா என்றும் அன்புடன் அழைக்கிறார்கள்.

ஒருவரை பாபா அந்தஸ்திற்கு உயர்த்தி இருக்கிறார்கள் என்றால் அவருடைய சீர் சிறப்புகளை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அரிபின் பாபாவின் புனிதக் கல்லறை, புலாவ் பெசார் தீவில் தான் இருக்கிறது. இப்போது அது ஒரு வழிப்பாட்டுத் தளம். மிக மிக முக்கியமான வாழ்வியல் கூற்றுத் தளம்.

இந்தத் தீவிற்கு வருபவர்களில் பெரும்பாலோர் சுல்தான் ஷெயிக் அரிபின் பாபா அவர்களின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தனை செய்யாமல் திரும்பிப் போவது இல்லை.

புலாவ் பெசார் தீவில் உள்ள சமாதிகளில் ஷெயிக் அரிபின் பாபாவின் புனிதச் சமாதியே ஆகப் பெரியதாகும். பெரும்பாலும் எல்லா சமயத்தவர்களும் இவருடைய கல்லறைக்கு வந்து போகிறார்கள். ஒரு தனிப்பட்ட செருகல்.

2015-ஆம் ஆண்டில் ஒரு நாள் இரவு முழுவதும் இவருடைய சமாதியின் அடிவாசலில் பிரார்த்தனை செய்து இருக்கிறேன். இவருடைய புனிதச் சமாதியைச் சுற்றிலும், அன்றைக்கு ஒரு நூறு பேராவது தங்கி பிரார்த்தனை செய்து இருப்பார்கள்.

சுல்தான் ஷெயிக் அரிபின், சவூதி அரேபியா பாக்தாத் நகரில் 1463-ஆம் ஆண்டு பிறந்தவர். அவருடைய 32-ஆவது வயதில், அதாவது 1495-இல், புலாவ் பெசார் தீவிற்கு வந்தார்.

வரும் போது அவருடைய ஆசான் ஷெயிக் யூசுப் சித்திக்கையும் (Maulana Mohamad Yusof Sidiq) அவருடைய சகோதரர் ஷெயிக் இப்ராகிமையும் தன்னுடன் அழைத்து வந்தார். அத்துடன் தன்னுடைய 13 மாணவர்களையும் மறக்கவில்லை. அவர்களையும் அழைத்து வந்தார். 


சூபிச சன்மார்க்கத்தைப் பரப்புவதே அவருடைய தலையாய நோக்கமாகும். இவர்தான் புலாவ் பெசார் தீவின் மூத்த முதல் முன்னோடி.

புலாவ் பெசார் தீவை ஒரு சமய, சமூக, கலாசார வளர்ச்சித் தீவாக மாற்றி அமைத்ததும் இந்தப் பெரியவர்தான். இவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். ஜாவா, சுமத்திரா போன்ற இடங்களில் இருந்து வந்தார்கள். இவர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் புலாவ் பெசார் தீவிலேயே ஐக்கியமாகிப் போனார்கள்.

ஷெயிக் அப்துல் காடி ஜிலானி (YA SHAYKH ABDUL QADIR JILANI). இவர் சூபிசத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவருடைய வழிமுறைகளைப் பின்பற்றி வந்தவர்தான் சுல்தான் ஷெயிக் அரிபின்.

சுல்தான் ஷெயிக் அரிபின், புலாவ் பெசார் தீவில் சன்மார்க்கப் பிரசாரங்களில் ஈடுபட்ட போது மலாக்காவின் சுல்தானாக இருந்தவர் முகமட் ஷா. இவர் தான் மலாக்காவின் கடைசி சுல்தான்.

சுல்தான் ஷெயிக் அரிபின் பாபா, 1520-இல் புலாவ் பெசார் தீவிலேயே அமரர் ஆனார். வருடத்தைக் கவனியுங்கள். அப்போது அவருக்கு வயது 58. 


அவர் மறைந்து அறுநூறு ஆண்டுகள் ஆகின்றன. இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற நன்னெறிகள், மத நல்லிணக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. 

அவருடைய சமாதிக்குச் சென்று வேண்டுதல் செய்தவர்களுக்கு வேண்டியது கிடைத்து இருக்கிறது. இப்படி நான் சொல்லவில்லை. சென்று வந்தவர்கள் மனதாரச் சொல்கின்றனர்.

அதைத் தவிர புலாவ் பெசார் தீவிற்குப் போனால், கவலைகள் தீரும் என்பது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இதைப் பலர் நம்புகிறார்கள். இருப்பினும் ஒரு விசயம். நம்புவதும் நம்ப மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. எவரும் தலையிட முடியாது. சரி.

புலாவ் பெசார் தீவில் பல வரலாற்றுக் கல்லறைகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கது  சாரிபா ரோட்சியா (Syarifah Rodziah) என்பவரின் கல்லறை.

இந்தக் கல்லறையிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழியும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.  பலரின் பிரார்த்தனைகள் பலித்து இருக்கின்றன.

கணவன் – மனைவி பிரச்சினை உள்ளவர்கள் இங்கு வந்தால் அவர்களின் குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப் படுவதாகவும் பலர் சொல்கிறார்கள்.

சாரிபா ரோட்சியா கல்லறையின் கதவுகள் எப்போதும் மூடியே இருக்கின்றன. அதே போல சுல்தான் ஷெயிக் அரிபின் கல்லறையின் கதவுகளும் எப்போதும் மூடி இருக்கின்றன. 


மலாக்கா இஸ்லாமிய சங்கத்தின் (JAIM) கட்டளை என்று கேள்விப் படுகிறோம். அதற்கும் காரணம் இருக்கிறது. அவர்கள் சொல்வதில் நியாயமும் இருக்கிறது.

இங்கு வருபவர்கள் பிரார்த்தனை செய்யும் போது கல்லறைகளின் வளாகம் முழுவதும் பூக்கள், பழங்கள், துணிமணிகள், பழங்கள், பலகாரப் பொருட்களைப் போட்டுக் குவித்து, தூய்மைக் கேட்டை உருவாக்கி விடுகிறார்கள்.

அதனால் இரவு நேரங்களில் ஊர்வனவும் நடப்பனவும் வந்து கல்லறைகளில் தஞ்சம் அடைகின்றன. பொதுமக்களுக்குத் தான் ஆபத்து.

இங்கு வரும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைப் பொருட்களைக் குறிப்பிட்ட ஓர் இடத்தில் வைத்து வழிபாடு செய்தால் அந்த இடம் சுத்தமாகவும் இருக்கும். சுகாதாரமாகவும் இருக்கும். அழகாகவும் இருக்கும். தூய்மையாகவும் இருக்கும்.

ஒன்றை மறக்க வேண்டாமே. பக்திப் பரவசம் என்பது மனதிற்குள் இருக்க வேண்டும். புனிதமான இடங்களில் வேண்டுதல் பொருட்களைப் போட்டு அசுத்தப் படுத்துவதில் அல்ல. 

முடிந்த வரை கல்லறை வளாகங்களில் பூக்களை அள்ளிக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆக பக்தி என்பது மனசிற்குள் இருக்க வேண்டும். வெளிப்படையாக விளம்பரம் காட்டுவதில் அல்ல. அப்படியே வெளியே காட்டினாலும் சுற்றுச் சூழலை அசுத்தப் படுத்துவதாக இருக்கக் கூடாது.

தெய்வத்தை மகிழ்ச்சிப் படுத்துகிறோம் என்று சொல்லி அந்தத் தெய்வமே முகம் சுளிக்கிற மாதிரி நடந்து கொள்ளக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து. 

சாரிபா ரோட்சியா 1447-ஆம் ஆண்டில் சுமத்திராவில் பாசாய் எனும் இடத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் மௌலானா சாயிட் இஷாக்.

சாரிபா ரோட்சியா ஓர் ஆன்மீக வழிகாட்டி. தன்னுடைய கடைசி காலத்தில் ஒரு பெண் துறவியாக வாழ்ந்தார். ஒரு பெண் துறவியாகவே மறைந்தும் போனார். புலாவ் பெசார் தீவிற்கு வந்து, இறை நம்பிக்கையில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் பெண்ணரசி.

இவருடைய கல்லறையைச் சுல்தான் ஷெயிக் அரிபின் கல்லறைக்கு முன் பக்கத்தில் அழகாக அமைத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் சாரிபா ரோட்சியாவின் சன்மார்க்கத் தொண்டுகளைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அந்தச் சிறப்பு செய்யப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி அடைவோம்.

புலாவ் பெசார் மகான்கள் வரிசையில் இன்னும் சிலர் இருக்கின்றார்கள். அவர்களில் தோக் ஜங்குட்; தோக் பூத்தே; என்பவர்கள் முக்கியமானவர்கள்.

இவர்கள் இருவரும் இந்தோனேசியா ஆச்சே பகுதியில் இருந்து வந்தவர்கள். சுல்தான் ஷெயிக் அரிபினின் தலைமைப் பாதுகாவலர்களாகச் சேவை செய்தவர்கள். 

மற்றும் இருவர். தோக் பாங்லீமா லீடா ஈத்தாம்; தோக் ஹரிமாவ். இவர்கள் இருவரும் இறைத் தேவர்கள். சுல்தான் ஷெயிக் அரிபினின் வலது கரங்கள். இவர்களின் சமாதிகளைப் பத்து பெலா எனும் இடத்தில் பார்க்கலாம். சரி.

இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடரை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகிறேன். நன்றி. 

(முற்றும்)

05 நவம்பர் 2019

புலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 6

தமிழ் மலர் - 05.11.2019

புலாவ் பெசார் தீவில் கோடிக் கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், தங்கச் சின்னங்கள், தங்க நாணயங்கள், வைரங்கள், வைடூரியங்கள், நவரத்தினக் கற்கள், என ஒரு பொற் குவியல் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.


இருந்தாலும் அவை மாயஜாலம் காட்டி வந்தன. இங்கே அங்கே எங்கே என்று சொல்லி மக்களைத் தீவு முழுவதும் தேடி அலைய வைத்தன.

ஒரு கட்டத்தில் புலாவ் பெசார் தீவில் இருந்த பாறைகளை, டைனமைட் வெடி மருந்துகளை வைத்துத் தகர்த்தும் இருக்கிறார்கள். பெரும் பெரும் பாறைகளுக்கு அடியில் தோண்டியும் பார்த்து விட்டார்கள்.

கடலுக்குள் இருந்த பாறைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் நகர்த்திப் பார்த்து இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்வது.

அந்த ஜீபூம்பா புதையல் புலாவ் பெசாரிலும் இல்லை. புலாவ் நங்காவிலும் இல்லை. இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், தேடும் முயற்சிகள் கைவிடப் படவில்லை. இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புலாவ் நங்காவின் ஆழ்நிலக் குகைகளில் அந்தப் புதையல் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது.

1800 - 1900களில், மலாக்கா நீரிணையில் கடல் கொள்ளைக்காரர்கள் கொடி கட்டிப் பறந்த காலம். இருந்தாலும் இதற்கு முன்னரே கடற் கொள்ளையர்கள் மலாக்கா நீரிணையில் பேர் போட்டு விட்டனர்.

மலாக்காவை பரமேஸ்வரா உருவாக்கிய காலக் கட்டத்தில், அவருக்கு உதவியாக இருந்தவர்கள் ஓராங் லாவுட் என்பவர்களும் ஓரளவிற்குக் கடற் கொள்ளையர்களும் தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது. 


சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு வீழ்ச்சி அடைந்ததும் அதன் தலைநகரமாக இருந்த பாலேம்பாங், கடற் கொள்ளையர்களின் சொர்க்கபுரியாக மாறியது. மலாக்கா நீரிணையில் பயணம் செய்த கப்பல்களைக் கொள்ளை அடித்து வந்தனர்.

இவர்களுக்கு மலாக்கா ஆளுநர்கள் ஓரளவிற்கு ஆதரவு அளித்து வந்தனர். இதுவும் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.

இந்தக் கொள்ளையர்களும் புலாவ் பெசார் புதையலைப் பற்றி தெரிந்து வைத்து இருந்தார்கள். இவர்களும் போதுமான தகவல்கள், வரைபடங்களை வைத்துக் கொண்டு அலசிப் பார்த்து விட்டார்கள். அவர்கள் கண்களிலும் தென்படவில்லை. மலாக்கா அரசாங்கமும் அண்மைய காலங்களில் முழுமூச்சாய்க் களம் இறங்கி இருக்கிறது.

புலாவ் நங்காவில் ஏதோ ஓர் அனாமதேய சக்தி இருக்கிறது. அதுதான் புதையலை மறைத்து வைத்துக் கொண்டு இருக்கிறது என்று மலாக்கா முதல்வரே சொல்லி இருக்கிறார். பத்திரிகைகளுக்குப் பேட்டியும் கொடுத்து இருக்கிறார்.

சரி. வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம். 1511-இல் போர்த்துக்கீசியர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தார்கள். இது தெரிந்த விஷயம். ஒரே மாதத்தில் மூன்று தாக்குதல்கள் நட்த்தினார்கள். இது தெரியாத விஷயம்.

•    முதல் தாக்குதல் - 1511 ஜுலை 25-ஆம் தேதி.
•    இரண்டாவது தாக்குதல் - 1511 ஆகஸ்டு 10-ஆம் தேதி.
•    மூன்றாவது தாக்குதல் - 1511 ஆகஸ்டு 24-ஆம் தேதி.


கடைசி தாக்குதலில், அதாவது மூன்றாவது தாக்குதலில் மலாக்கா வீழ்ச்சி அடைந்தது. போர்த்துக்கீசியப் படைகளுக்கு அபான்சோ டி அல்புகர்க் (Afonso de Albuquerque) என்பவர் தலைமை வகித்தார். 


இங்கே ஓர் இடைச் செருகல். இவருடைய பெயரை அல்பான்சோ டி அல்புகர்க் என்றே உச்சரிக்கின்றனர். பள்ளிக்கூடத்திலும் அப்படித் தான் சொல்லியும் தருகின்றனர். அது தவறு. அபான்சோ டி அல்புகர்க் என்று தான் உச்சரிக்க வேண்டும். அபான்சோ டி அல்புகர்க்.

அப்போது மலாக்காவின் சுல்தானாக முகமட் ஷா இருந்தார். அவர் அந்தச் சமயத்தில், தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் பெரிய பணக்கார அரசராகவும் இருந்தார்.

அவருடைய செல்வங்கள் அனைத்தும், மலாக்கா, செயிண்ட் பால் குன்றில் இருந்த சுரங்கத்தில் பத்திரமாகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தன. போர்த்துக்கீசியர்கள் இரண்டாவது தாக்குதல் நடத்திய போதே முகமட் ஷா உஷாராகி விட்டார். கண்டிப்பாக ஏதாவது நடக்கலாம் என்று அனுமானித்து விட்டார்.

இந்தக் கட்டத்தில் தான் மலாக்காவின் செல்வங்கள் எல்லாம் இடம் மாறிச் சென்றன. அவை எங்கே கொண்டு போய் வைக்கப் பட்டன என்பது தான், இன்று வரை பரம ரகசியமாக இருந்து வருகிறது. 


முகமட் ஷா தன்னுடைய செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய், புலாவ் நங்காவில் வைத்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிப்பு செய்கின்றனர்.

போர்த்துக்கீசியர்கள் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தும் போது, இரு பிரிவுகளாகப் பிரிந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

ஒரு பகுதியினர் திரேங்கேரா பக்கம் இருந்து வந்தனர்.

இன்னொரு பிரிவினர் பண்டார் ஹிலீர் பக்கமாய் இருந்து வந்தனர். அவர்களுடைய தலையாய் நோக்கம் மலாக்கா ஆற்றுப் பாலத்தைப் பிடிப்பது.

ஏற்கனவே, 1509-ஆம் ஆண்டில், போர்த்துக்கீசியத் தளபதி லோபேஸ் டி செக்குயிரா மலாக்காவிற்கு வந்து இருந்தார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய முகமட் ஷா கடைசியில் அவர்களை எதிர்த்தார். அதனால் பெரிய ஒரு கலவரம். அதில் 19 போர்த்துக்கீசியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை மீட்கத் தான் அபான்சோ டி அல்புகர்க் களம் இறங்கினார்.


முதல் தாக்குதலுக்கு 18 கப்பல்களில், 1200 போர்த்துக்கீசிய வீரர்கள் பயன்படுத்தப் பட்டனர். அந்தத் தாக்குதலில் 70 பேருக்கு காயம். அவர்களைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு, புலாவ் பெசார் தீவிற்குக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

அங்கேதான் போர்த்துக்கீசிய வீர்ர்களுக்குச் சிகிச்சைகள் செய்யப் பட்டன. இங்கேயும் பாருங்கள். புலாவ் பெசார் தீவு வந்து நிற்கிறது. எப்பேர்ப்பட்ட வரலாற்றை இந்தத் தீவு பார்த்து இருக்க வேண்டும்.

இரண்டு வாரங்கள் கழித்து இரண்டாவது தாக்குதல். அதில் மலாக்கா பாலத்தைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றினர். அவர்களிடம் துப்பாக்கிகள், பீரங்கிகள் நிறையவே இருந்தன. வெடிகுண்டுகளும் இருந்தன. இருப்பினும், மலாக்காவை முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.

தாக்குப் பிடிக்க முடியாமல் போர்த்துக்கீசியர்கள் பின் வாங்கினர். முகமட் ஷாவின் வீரர்களும் உயிரைக் கொடுத்துப் போராடி இருக்கின்றனர். இரு தரப்பிலும் பெருத்த சேதங்கள்.

போர்த்துக்கீசியர்கள் தங்களின் முதல் தாக்குதலில், மலாக்காவின் வடக்குப் பகுதியை நெருப்பு வைத்துக் கொளுத்தினர். இதுவும் வரலாறு.

[சான்று: http://www.malaccaguide.com/the_portuguese_conquest_of_malacca.html] 

இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான், முகமட் ஷா தன்னுடைய செல்வங்களை எல்லாம் இடம் மாற்றி இருக்கிறார். இந்த மலாக்கா போரில் முகமட் ஷாவின் மகன் அலாவுதீன் என்பவரும் மிகச் சிறப்பான பங்கு வகித்து இருக்கிறார்.


போர்த்துகீசியர்களின் மூன்றாவது தாக்குதலில் தோல்வி கண்ட முகமட் ஷா, தன் பரிவாரங்களுடன், ஜொகூரில் இருக்கும் பாகோ எனும் இடத்திற்குத் தப்பித்துச் சென்றார். ஆனால் அங்கே இருந்த ஜாவா மக்களுக்கு இவர்களைப் பிடிக்கவில்லை. வர வேண்டாம் என்று துரத்தி அடித்தார்கள்.

அதன் பின்னர் முகமட் ஷா, அப்போதைய பகாங் சுல்தானிடம் புகலிடம் கேட்டார். அவர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார்.

கொஞ்ச காலம் முகமட் ஷா அங்கு தங்கி இருந்தார். பின்னர், ஜொகூருக்கு வந்து ஜொகூர் ஆற்றோரத்தில் ஒரு புதிய அரசை உருவாக்கினார். அங்கே ஓர் அரசு உருவாக்கப் பட்டது என்பது வேறு கதை.

புலாவ் பெசார், மலாக்கா வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு காலச் சுவடி. அங்கே பல மர்மமான நிகழ்ச்சிகள், பல அதிசயமான நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன. ஆச்சரியம், அதிசயம், ஆனால் உண்மை. அத்தனையும் நம்ப முடியாத நிகழ்வுகள். மானுடத்தில் சில பல துணுக்குகள்.

புலாவ் பெசார் தீவில் கால் பதித்ததும், ஒருவிதமான அதிர்வுகளை (Vibration) உணர முடியும். சொல்லி இருக்கிறேன்.

எல்லோருக்கும் அந்த உணர்வுகள் ஏற்படுமா என்று தெரியவில்லை. இறந்தும் இறவாமல் அங்கே உறைவிடம் கொண்டுள்ள துறவி மகான்களை மனதார நினைத்தாலே போதும், அந்த அதிர்வுகள் தானாக வந்து சேரும். 


பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்கள் சொன்ன வார்த்தைகள், சாதி சமயம் சம்பிரதாயங்களைத் தாண்டிய வாக்குமூலங்கள்.

துறவி மகான்கள் என்பவர்கள் சித்தர்களைப் போன்றவர்கள். உடலை விட்டு வாழும் வல்லமை பெற்றவர்கள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு வகையான பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள்.

துறவி மகான்கள், பொது வாழ்க்கை நெறிகளுக்கு உடன் படாதவர்கள். வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கியவர்கள். நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

உடல் சுத்தம், மனச் சுத்தம், சொல் சுத்தம், நடைச் சுத்தம். இந்த நான்கு சுத்தங்கள் இருந்தால் போதும். அலை அலையான  அதிர்வுகளை உணர முடியும் என்றும் சொல்கிறார்கள். 


அங்கு போய் பிரார்த்தனை செய்ய வேண்டும், பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்பது எல்லாம் அவசியம் இல்லை. கொண்டு போகும் காணிக்கைகளுக்காக, அந்தத் தெய்வங்கள் இறங்கி வந்து வாழ்த்தப் போவதும் இல்லை.

ஆக, தெய்வங்களை மனதார நினைத்தாலே போதும். கண்களை மூடி மௌனமாக நின்றாலே போதும். ஒருவிதமான ஆழ் உணர்வுத் துடிப்புகள் ஏற்படும். அதைத் தான் புலாவ் பெசார் அதிர்வு அலைகள் என்று சொல்கிறார்கள்.

இன்னும் ஒரு செய்தி. அங்குள்ள புனிதத் தளங்களிலும் சரி; சமாதிகளிலும் சரி; மறைந்தும் மறையாமல் பல பெருமகன்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களைக் கிண்டல் செய்வது வேதனைக்குரிய விஷயமாகும். அப்படிக் கேலி செய்தவர்களும் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. சாட்சிகளாக ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன்.

அப்படி நையாண்டி செய்தவர்களில் சிலர், இப்போது பித்து பிடித்து வானத்தைப் பார்த்தவாறு திரிகிறார்கள். சிலர் வீடு வாசல்களை இழந்து தெருவோரங்களில் உறைந்து போய்க் கிடக்கிறார்கள். இன்னும் சிலர் மனைவி மக்களைப் பிரிந்து, அனாதைப் பிசிறுகளாய் அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களில் சிலர் `புலாவ் பெசார் ஆண்டவரைக் குறை சொன்னேன். தண்டனையை அனுபவிக்கிறேன்` என்றும் வாயாரச் சொல்கிறார்கள். தெய்வம் எங்கே இருந்தாலும் அது தெய்வம் தான். தெய்வத்தை இழுக்குப் படுத்துவது என்பது மகா பெரிய ஒரு குற்றம். மன்னிக்க முடியாத பாவம்.

(தொடரும்)




 

29 அக்டோபர் 2019

சோஸ்மா கலக்குகிறது மலேசியம் கலங்குகிறது

மலேசியாவில் வாழும் அனைவருமே நல்ல அருமையான மனிதர்கள். சகோதரத்துவம் பார்க்கும் நல்ல அற்புதமான மனிதநேயங்கள்; நல்ல அழகிய மனிதப் பண்புகள்; நல்ல அன்பான மனித இயல்புகள்.



இனம், சமயம், மொழி, கலை கலாசாரம் எல்லாவற்றையும் கடந்து போய் மனித நல்லிணக்கத்துடன் வாழ்ந்த அருமை அருமையான மனிதர்கள். ஊழியூழி காலத்திற்கும் வரலாற்றில் இடம் பெற வேண்டிய இனிமையான மனிதர்கள்.

ஆனால் அந்த நற்பண்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கரைந்து வருகின்றன. சகித்துப் போகும் சகிப்புத் தன்மைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தகர்ந்து தரைமட்டமாகி வருகின்றன.

முரட்டுத் தனமும் மூர்க்கத் தனமும் குட்டிப் போட்டு, பேரன் பேத்திகள் எடுத்து, ஊழல் வியாதிகளில் சிக்கி விக்கித் தவித்துத் தகித்துக் கொண்டு இருக்கின்றன.

தொட்டதற்கு எல்லாம் இனம். தொட்டதற்கு எல்லாம் மதம். தொட்டதற்கு எல்லாம் ’பெண்டத்தாங்’... தொட்டதற்கு எல்லாம் ’பெர்கி பாலேக்...’ எங்கேங்க மலேசியம் போய்க் கொண்டு இருக்கிறது.

காடு மேடுகளில் கட்டிப் புரண்டு இந்த நாட்டைச் செல்வம் கொழிக்கும் ஒரு நாடாக மாற்றிய ஓர் இனத்திற்குச் செய்யும் கைமாறு இதுதானா?

வேதனையாக இருக்கிறது.




சிறுபான்மை இனத்தவருக்கு எந்த வகையிலாவது அழுத்தம் கொடுத்து, அப்படியே அவர்களை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் எனும் இலக்கு நியாயம் இல்லாத வழக்கு.

அந்த இலக்கை நோக்கிப் பயணிப்பதால் எந்த வகையிலும் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஆரோக்கியமான வளப்பம் கிடைக்காது. வளர்ச்சியும் கிடைக்காது.

விவேகமான வியூகமான அரசியல்வாதிகள் தான் காலா காலத்திகு புகழப் படுவார்கள். கர்ம வீரர்களாக பூஜிக்கப் படுவார்கள். எல்லோரும் அவர்களைக் கை எடுத்துக் கும்பிடுவார்கள்.




இப்போது நம் நாட்டில் சோஸ்மா விவகாரம்... தலையாய விவகாரமாகத் தலைவிரித்து ஆடுகிறது.

ஆட்சிக்கு வந்தால் சோஸ்மாவை இல்லை இல்லாமல் ஆக்கி விடுவோம் என்று வீரவசனம் பேசினார்களே... அந்த அலங்கார ஆலாபனைகள் எல்லாம் என்ன ஆயின. அதுவும் ஆற்றில் ஓடும் நீர்தானா?

பதினெட்டுப் பட்டியில் ஆயிரத்தெட்டு உத்தரவாதங்கள். அவற்றில் அடுக்கடுக்காய் வயற்காட்டு வரப்பு மேனிகள். அதில் அந்த வீரவசனமும் ஒன்றுதானா? அப்படியே ஏற்று நீரில் அடித்துப் போகப் பட்டது தானா?

ஏற்கனவே பல பத்து ஆண்டுகளாக நாட்டில் ஊழல் வக்கிரம். இலட்சக் கணக்கில் இருந்த ஊழல் பெருச்சாளிகள் மில்லியன் கணக்கில் பெருகி பில்லியன் கணக்கில் பேரன் பேத்திகள் எடுத்து வந்தன. இதில் ரோசாப்பூ ரோசம்மாவின் பில்லியன் கணக்கு பேராண்மைகள் வேறு; வஞ்சகம் இல்லாமல் வசனங்கள் பேசின.




என்னைக் கேட்டால் நஜீப் சார் உண்மையிலேயே நல்ல மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு வேறு எவரும் செய்யாத உதவிகளைச் செய்து இருக்கிறார்.  நிறையவே செய்து இருக்கிறார். அள்ளிக் கொடுத்து இருக்கிறார்.

அவர் கொடுத்த பணத்தில்... கமிசன் கணக்கில், தாய்க் கட்சி குழந்தைக் கட்சி அரசியல்வாதிகளின் கணக்கில் போய்ச் சேர்ந்தது கணிசமான தொகை.
இது ஒன்றும் வஞ்சிக் கோட்டை வாலிப இரகசியம் இல்லை. மறுக்கவோ மறைக்கவோ முடியாத மலேசியக் காட்டு உண்மை. அப்படியே ஒரு மகிழ்ச்சியான செய்தி. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. சந்தோஷப் படுவோம்.

இருந்தாலும் ‘சரவாக் ரிப்போர்ட்’டில் இடம் பெற்று உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டது.

ஆக, மலேசிய மண்ணில் தலை விரித்தாடிய கொடுமையான ஊழல், கழுத்தை நெரித்த கடுமையான விலைவாசி உயர்வு, மேலோங்கி வந்த மிதமான மதவெறி, பாதாளத்திற்குள் துளைத்துக் கொண்டு போன பயங்கரமான பணவீழ்ச்சி.

ஆக எத்தனை நாளைக்குத் தான் மாட்டைக் காட்டி நாட்டை ஆள்வதாம்? சொல்லுங்கள்.

அதற்கு ஒரு ‘செக்’ வைக்கவே மக்கள் விரும்பினார்கள். ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்கள்.

நாலும் தெரிந்த ஒரு நல்ல மனிதரைத் தேர்வு செய்தார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள். ரொம்பவும் நம்பிக்கை வைத்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லியே மாற்ற இயலாத மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்கள்.

ஆனால் பத்தாவது மாசத்தில் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. புலி என்றைக்கும் புல்லைத் தின்னாது என்பதும் உண்மையாகிப் போனது.

நாட்கள் செல்லச் செல்ல ஒரு புலி பதுங்கி இருந்த கதையும் சன்னம் சன்னமாய்த் தெரிய வந்தது. தெரிந்து என்ன பயன். எங்கு இருந்தோ வந்த ஒருவருக்காக ஒட்டு மொத்த இந்திய இனத்தையே தூக்கிப் பதம் பார்க்கும் நிலையும் ஏற்பட்டு விட்டதே.

நடந்தது எல்லாம் நம்பிக்கை துரோகம் அல்ல. பச்சை துரோகம். மன்னிக்கவும். ஒரு வாரிசை வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக இரு சிறுபான்மை இனத்திற்குத் துரோகம் செய்யலாமா. நியாயமா.

ஆக இதற்காகவா ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தோம். இதற்காகவா தங்கத் தாம்பளத்தில் அந்தப் பெரியவரை உட்கார வைத்து ஆலாபனை செய்தோம். இதற்காகவா அந்தப் பெரியவருக்கு கோயில் குளங்களில் எல்லாம் பிரார்த்தனைகள் செய்தோம். இதற்காகவா கோயில் குளங்களில் மொட்டைப் போட்டு ஆராதனைகள் செய்தோம்.

எல்லாம் விழலுக்கு நீராகிப் போனதே. நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறதே.

மலேசிய இந்தியர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். சொல்லப் போனால் வாயில்லா பூச்சிகள். அடித்தாலும் தடவிக் கொண்டு போகிறவர்கள். அரசாங்கத்தையோ அரசாங்க இயந்திரங்களையோ எதிர்த்துப் போகாதவர்கள். அப்படிப் பட்டவர்கள்.

அரசியல்வாதிகளைச் சமயங்களில் தட்டிக் கேட்டவர்கள். அவ்வளவுதான். மற்றபடி கொடுத்ததை வாங்கிக் கொண்டு அமைதியாகப் போகின்றவர்கள்.

மலேசிய இந்தியர்களில் ஒரு சில கழிசல்கள் இருக்கவே செய்கின்றன. விரல்விட்டு எண்ணி விடலாம்.  உறுமி மேளம் பட்டாசு அர்ச்சனைகள் செய்யும் சில அடாவடித் தனங்கள். அதற்காக அனைவரின் மீதும் பழி போடுவது தவறு.

என்றோ நடந்த ஒரு போரில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் இறந்து போனார்கள். அவர்கள் பிள்ளைக்குட்டிகள் இன்றும் தவிக்கின்றன. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலனுதாப்ம் காட்டியது தவறா. அதற்காக சோஸ்மாவிற்கு அபிஷேகம் செய்யலாமா.

பன்னிரண்டு பேர் கைது செய்யப் பட்டார்கள். அவர்களில் மூன்று பெண்கள் நடுத் தெருவில்... மழையிலும் பனியிலும் நனைந்து... அழுது புலம்பி அமைதி மறியல் செய்தார்கள். அவர்களும் தற்காலிகமாக தங்களின் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.10.2019), கைது செய்யப் பட்டவர்களின் குடும்பத்தார், அவர்களை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சந்தித்து இருக்கிறார்கள்.

அது ஓர் உருக்கமான நிகழ்ச்சி. சோகம் கப்பிய வேதனையான நிகழ்ச்சி. அழுகை, விசும்பல், வெதும்பல் எனும் பற்பல சோக ராகங்கள்.

அனைத்துக் கைதிகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் சற்றே  கலக்கமான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது.

மலாக்கா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன். இவரின் மனைவி வி.உமா தேவி. இவர் தன் கணவரைச் சந்தித்துப் பேச முடிந்ததாகக் கூறினார். தன் கைக்குழந்தையையும் கொண்டு சென்றார்.

தன் கணவர் சாமிநாதனுக்குப் பிடித்தமான தோசை மற்றும் முறுக்குப் பலகாரங்களைக் கொண்டு சென்றார். தன் கணவரின் உடல் எடை சிறிது குறைந்து விட்டதாக உமாதேவி கூறினார்.

12 கைதிகளின் குடும்ப உறுப்பினர்களின் பார்க்கும் நேரம்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை... ஒவ்வொருவருக்கும் ஒன்றரை மணி நேர பார்வை நேரம். கட்டம் கட்டமாக வழங்கப் பட்டது.

கைது செய்யப் பட்டவர்களில் ஒருவரின் குடும்பத்தாரில் இருவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

அந்தக் குடும்பத்தாரில் ஒருவர் பேசும் போது ‘என் தம்பி எங்களைப் பார்த்து அழுதான். தன்னை விரைவில் விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறான்’ என்று சொன்னார்.

இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் மலாக்கா மாநிலத்தின், காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி.சாமிநாதனின் மனைவி வி.உமா தேவி ஓர் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

எதிர்வரும் வியாழக் கிழமைக்கு முன்னர் தன் கணவர் நிலைமை குறித்து தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்பட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சோஸ்மா சட்டம் 2012 என்று அழைக்கப்படும் குற்றச் செயல் பாதுகாப்புச் சட்டம்; (Security Offences Special Measures Act 2012: Sosma) எனும் சட்டத்தின் கீழ், மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கைது நடவடிக்கை.

’எதிர்வரும் வியாழக்கிழமை ஆள் கொணர்வு (ஹேபியாஸ் கார்பஸ்) குறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. அது குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு வேண்டாம். இது தான் எங்களின் உறுதிப்பாடு’ என்று வி.உமா தேவி கூறினார்.

’பன்னிருவர் மீதான விசாரணை முடிந்தது என்றால் அதன் பின்னர் எந்தப் பிரச்சனையும் இல்லை. தயவுசெய்து அவர்களை வெளியே விடுங்கள்.’

கோலாலம்பூர் புக்கிட் அமான் தலைமையகத்தில் அந்த வேண்டுகோளை விடுத்தார். 

’வியாழக் கிழமைக்கு முன்னர், அதிகாரிகளிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் வி.உமா தேவி தன் கணவருடன் இருந்தார். சாமிநாதனின் உடன் பிறந்தோரும் உடன் இருந்தனர். கடந்த 17 நாட்களில் கைதிகள் சிலர் இளைத்து விட்டதாகவும் கூறினார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன்; மேலும் ஜ.செ.க., பி.கே.ஆர்., கட்சியின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் விடுதலை செய்யப் படுவார்கள் என்று இன்றைய நன்னாளில் பிரார்த்திப்போம்.






27 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்களின் அனுதாபம் - 20.10.2019

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009-ஆம் ஆண்டில் முடிவு பெற்றது. 27 ஆண்டுகள் நீடித்தது. அந்தப் போரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.



முதலாம் போர்: 1983 ஜுலை 23-இல் தொடங்கி 1987 ஜுலை 29 வரை;

இரண்டாம் போர்: 1990 தொடங்கி 1995 வரை;

மூன்றாம் போர்: 1995 தொடங்கி 2002 வரை;

நான்காம் போர்: 2006 ஜுலை 26இல் தொடங்கி 2009 மே 18 வரை;




200,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். முதியவர்களும், பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர்களும், பால் மனம் மாறா பச்சை சிசுக்களும், தொட்டில் விட்டில் பூச்சிகளும், ஆயிரக் கணக்கில் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்கள்.

பல இலட்சம் இலங்கைத் தமிழர்கள் காணாமல் போனார்கள். ஒரே வார்த்தையில் சொன்னால்... மனிதக் கட்டமைப்பு கொல்லப் பட்டது. மனித வரலாற்றில் ஓர் இருண்ட வரலாறு.

அந்த இழப்புகளினால் உலகத்தின் இதயம் வலிக்கிறது. மனிதங்களின் மனம் வலிக்கிறது. சாமானிய மனிதம் வெடித்துச் சிதறுகின்றது. வலிகளின் உக்கிரம் உச்சத்திற்கும் போகின்றது.




நடந்து முடிந்த அநியாயங்களை மீள்பார்வை செய்து பார்க்கும் போது வேதனை... வேதனை. இருக்கிற கொஞ்ச நஞ்சக் கண்ணீரும் காய்ந்தும் போகிறது. அதுதாங்க இலங்கை உள்நாட்டுப் போர்.

மறுபடியும் சொல்கிறேன். அது அங்கே நடந்த ஓர் உள்நாட்டுப் போர். அது அடுத்த நாட்டு உள் விவகாரம். அதில் நாம் தலையிட வேண்டாம். அவசியமும் இல்லை.

ஆனாலும் கரைந்து போன அந்த அப்பாவி மக்களுக்காக அனுதாபப் படலாம். தப்பு இல்லையே. அதே சமயத்தில் அந்த அனுதாபத்திற்குத் தடை விதித்தால் நியாயம் இருப்பதாகவும் தெரியவில்லை.




மற்றபடி அவர்களின் உள்நாட்டுப் போரையும் நான் ஆதரிக்கவில்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அனுதாபப் படுகிறேன்.

இருந்தாலும் இன்னொரு பக்கம் பார்த்தால்... அந்த உள்நாட்டுப் போர் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று சொல்லி விலகவும் முடியவில்லை. ஏன் என்றால் சாகடிக்கப் பட்டது மனித உயிர்கள். ஓர் உயிர் அல்ல. இரண்டு உயிர் அல்ல. பல பல ஆயிரம் உயிர்கள்.

அந்த உயிர்களுக்காக அனுதாபப் படுகிறோம். நாமும் மனிதர்கள். அவர்களும் மனிதர்கள். மனிதர்களுக்காக மனிதர்கள் அனுதாபப் படுவதில் தப்பு இல்லைங்க.

மறைந்து போனவர்களின் வலிகள் ஒவ்வொரு நாளும் அழ வைக்கின்றன. ஆழ்மனத்தில் அதீத வேதனைகளை ஆர்ப்பரிக்கவும் வைக்கின்றன.




போர் நடந்து முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 2012-ஆம் ஆண்டில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஒரு மில்லியன் (US$1mil - RM3.13mil) அமெரிக்க டாலர் பணத்தை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

2012-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 31 இலட்சத்து 13 ஆயிரம்.

2019-ஆம் ஆண்டு கணக்குப்படி 41 இலட்சத்து 19 ஆயிரம்.

ஏழு வருசத்தில் நம்ப மலேசிய காசு 10 இலட்சத்திற்கும் குறைந்து இருக்கிறது. அதையும் கவனியுங்கள். தொட்டாலும் லஞ்சம்... விட்டாலும் லஞ்சம்... என்று சொல்லி ஒரு வழி பண்ணி விட்டார்கள். இதில் சோஸ்மாவுக்கு ரோசாப்பூ அபிஷேகங்கள். வேதனை.




அந்த உதவி நிதிக்கு ஏற்பாடு செய்தது Tamil Forum Malaysia (TFM) என்று அழைக்கப்படும் மலேசியத் தமிழ் வாரியம். 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வாரியம்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக மலேசியாவில் உருவாக்கப்பட்ட வாரியம். அதன் தலைவராக டாக்டர் ஐங்கரன் இருந்தார். சரி.

அந்த நிதி முழுமையாகப் போய்ச் சேர்ந்ததா... தெரியவில்லை. அதே சமயத்தில் ’களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா’ என்கிற பழமொழிக்கு விளக்கம் சொல்லவும் எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும்.




ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக அண்மையில் 12 பேர் கைது செய்யப் பட்டார்கள்.

சோஸ்மா குற்றச் செயல் பாதுகாப்புச் சட்டம் (Security Offences Special Measures Act 2012: Sosma) எனும் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை. சரி.

மலேசியக் காவல் துறையினர் அவர்களின் கடமையைச் செய்து உள்ளார்கள். அவர்களின் கடமை உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். மரியாதை செய்கிறோம்.

கைது செய்யப் பட்டவர்களில் ஒரு சிலர், இலங்கையின் தமிழீழ இயக்கத்தினருடன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனும் குற்றச்சாட்டு. சரி.

எவ்வளவு பணம் என்கிற விசயத்தைச் சொல்ல வேண்டியது காவல் துறையின் கடப்பாடு. அதற்கான சான்றுகளை அவர்கள் முன் வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நம்முடைய நிலைப்பாடு.




இவர்களைப் போல முன்னாள் பிரதமர் நஜீப் அவர்களும் பண உதவி செய்து இருக்கிறார். இல்லீங்களா.

ஒரு மில்லியன் என்பது பெரிய காசு. இல்லீங்களா. ஒரு காசு என்றாலும் குற்றம் தான். இல்லீங்களா.

அந்த வகையில் முன்னாள் பிரதமரும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரும் தமிழ்ப் புலிகளுக்கு உதவி செய்து இருக்கிறார் என்று முடிவு எடுக்கலாமா? எடுக்க முடியுமா?

வேண்டாங்க.

மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்ட உதவிகள் மனிதத் தன்மையில் செய்யப் பட்டவையாக இருக்கட்டும். என்றைக்கும் அவை அனுதாபத்தின் அலைகளாக இருக்கட்டும்.




அலைகள் ஓய்வதில்லை. அனுதாப அலைகளும் ஓய்வது இல்லை.

பிரதமர் நஜீப் அவர்களைப் போல அந்த 12 பேரும் அனுதாபம் காட்டி இருக்கலாம் அல்லவா. அதற்காக அவர்களைச் சோஸ்மாவின் கீழ் கைது செய்யலாமா? குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்து இருக்கலாமே?

காவல் துறையினர் நல்ல ஒரு முடிவை எடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். பினல் கோட் குற்றவியல் சட்டங்கள் வழியாகக் குற்றப் பதிவுகள் செய்ய வேண்டும். நிரூபிக்கப்பட வேண்டும். அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே என் தாழ்மையான வேண்டுகோள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.10.2019



பேஸ்புக் பதிவுகள்


Malini Rangasamy: ஆளும் அரசாங்கத்தின் கூட்டணியில் உயர்ந்த பதவியை வகிக்கும் இவர்களுக்கு நேர்ந்த அநீதி விடை தெரியாத விடயமாக உள்ளது. காலமும் நேரமும் பதில் சொல்லும் என நமக்கு நாமே சமாதனம் சொல்லிக் கொண்டாலும் மகனைப் பிரிந்த பெற்றோர், ஒவ்வொரு நொடியும் கணவனின் பிரிவால் ரணப்படும் மனைவி, தந்தை இன்று வருவார், நாளை வருவார் என ஏமாற்றத்துடன் காத்திருக்கும் பிள்ளைகள், ஏக்கத்துடன் பரிதவிக்கும் குடும்பத்தாரின் கண்ணீருக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் விளையாட்டினால் அப்பாவிகள் வஞ்சிகப் படுவது சத்திய சோதனை.


Augustine Chinnappan Muthriar >>> Malini Rangasamy: mega arumaiyana sonnegeh


Muthukrishnan Ipoh:
உங்கள் வேதனையைப் போல மற்றவர்களும் வேதனை அனுபவிக்கிறார்கள்... காலம் பதில் சொல்லும்...


Kalai Selvam:
நன்றி ஐயா. நன்மையையும், நல்லதையும் மட்டுமே எதிர்பார்க்கின்றோம்.


Muthukrishnan Ipoh:
அதுவே நம் எதிர்பார்ப்பு ஐயா...


Selvi Sugumaran: All this Malaysia political to save ZAKIR naai...


Augustine Chinnappan Muthriar >>> Selvi Sugumaran: well saying try to diversify new tactic...


Muthukrishnan Ipoh: பின்னணியில் பெரிய நாடகம்...


Devarajan Dev:  Ini semua sendiwara politik... LTTE bukan penggans. PDRM tak tahu keh...


Muthukrishnan Ipoh: காவல் துறையினர் அவர்களின் கடமையை அவர்கள் செய்கிறார்கள்... அதில் நாம் தலையிட முடியாது... நம்முடைய கருத்துகளைச் சொல்லலாம்... அவ்வளவுதான்...


Sivalingam Dharmayah: இது ஓர் அரசியல் நிகழ்வு போல் உள்ளது. யாரையோ திருப்தி படுத்த இது நடைபெறுகிறது.


Muthukrishnan Ipoh: இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்...


Selvaraja Seladoray: இது தான் உண்மை.


Amz Harun: உயிரென்றால் அது உயிர் தான். பேதமில்லை. பயிரென்றாலும் வாடினார் வள்ளலார். அந்த காருண்யத்திற்கு எல்லையில்லை.


Muthukrishnan Ipoh: அருமை ஐயா... அருமை...


Narinasamy Karpaya: அப்பாவிகளைச் சிக்கி விடுதல் தான் சுலபம்! அரசியலுக்கு வருபவர்கள் இவற்றை எதிர்கொண்டே ஆக வேண்டும். குறிப்பாக சிறுபான்மை இனங்களில் இருந்து உயர எண்ணுபவர்கள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது சகஜம். ஆட்சி செய்யும் கட்சியில் இருந்தும், புதிதாக அரசியல் பயணம் மேற்கொண்டு உள்ளவர்களுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டு இருப்பது நம் நாட்டின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது! வருத்தம் தந்தாலும், பிரச்னை தீரும் வரை உயிரூட்டிக் கொண்டு இருப்பது நம் கடமை!!

Muthukrishnan Ipoh: இங்கே மட்டும அல்ல சார்... பெரும்பாலான நாடுகளிலும் சிறுபான்மை இனத்தவர் அரசியல் பலிக்கடா ஆவதைப் பார்க்கலாம்... கடிவாளத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிடிமானத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சவாரி செய்வது ஓர் அரசியல் கலை...


Augustine Chinnappan Muthriar Mega: veethanaiyana neelamai nam Malaysia tamilagralaku sri Lanka aniyathuku periyanikku kural kuuduthuku eepadi oru soothanai roomba kaadamah erruku aathuam Deepavali mega arigel eerukku

(வேதனையான நிலைமை நம் மலேசியத் தமிழர்களுக்கு... ஸ்ரீலங்கா அநியாயத்திற்கு குரல் கொடுத்ததற்கு இப்படி ஒரு சோதனை...அதுவும் தீபாவளி மிக அருகில் இருக்கு...)


ஓம் நம சிவாய >>> Augustine Chinnappan Muthriar இவனுங்க எங்கே தமிழர்களை நிம்மதியாக வாழ விட்டார்கள்...


Augustine Chinnappan Muthriar >>> ஓம் நம சிவாய mega unmai ana een nam perinta Malaysia Mannel tamilaguku evaalu sootanai... india velum sri Linga velum burma velum nam tamilagargal roomba avamanah paadu keevalamah vaanthu vaarigreroom eena tamilan eelicha vaayan ,, ama sami poidureheven...
(மிக உண்மை அண்ணா... ஏன் நாம் பிறந்த மலேசிய மண்ணில் தமிழருக்கு இவ்வளவு சோதனை... இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் பர்மாவிலும் நம் தமிழர்கள் ரொம்ப அவமானப்பட்டு கேவலமா வாழ்ந்து வருகிறோம்... ஈன தமிழன் இளைச்சவாயன்... ஆமாம் சாமி போடுறவன்...)


Muthukrishnan Ipoh: நன்றிங்க... தமிழில் தட்டச்சு செய்யுங்கள் ஐயா...
https://ksmuthukrishnan.blogspot.com/.../blog-post_20.html


ஓம் நம சிவாய >>> Augustine Chinnappan Muthriar: ஏன் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா?... உலகத்திலயே மிக அறிவு உள்ளவன் தமிழன் ... உலகத்தின் மூத்த குடிமகன் தமிழன்... உலகத்தையே ஆண்டவன் தமிழன் ... நாகரீகத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழன் ... குமரி கன்டத்தின் உரிமையாளன் தமிழன் ... அன்பானவன் தமிழன் ... தன்னினத்தை அவமதித்தால் வீரனாய் சூரனாய் எழுந்து போர் செய்தவனும் தமிழன் ... இவ்வளவு திறமை கொண்ட தமிழன் மீண்டும் உலகை ஆளவான் என்ற பயம்தான்...


Augustine Chinnappan Muthriar >>> Muthukrishnan Ipoh: ok Tamil ulga thalaiveereh (ஓகே... தமிழ் உலகத் தலைவரே)


Augustine Chinnappan Muthriar >>> ஓம் நம சிவாய: uraikaramaatri sonnugkeh nethi adi valga tamil (உரைக்கிற மாதிரி சொன்னீங்க... நெற்றியடி... வாழ்க தமிழ்)


Varusai Omar >>> Augustine Chinnappan Muthriar: தோழர் முத்து ஏன் தமிழில் தட்டச்சில் பதிவிடச் சொன்னார் என்பது புரியும். புண்படுத்தும் நோக்கமல்ல! Take it with a pinch of salt! நகைச்சுவை உணர்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள்...


Varusai Omar: இலக்கியத்தில் "காடக முத்தறையனுக்கு சிறந்த இடமுண்டு. சின்னப்பன் - எனது தமிழாசான் பெயர்: அமரர் திரு. பீட்டர் சின்னப்பனார்.


Anbarasan Shanmugam: சாதாரண மக்களான நமக்கு தெரிந்தது அரசுக்கு இது தெரியாமலா போகும்.. நாம் முடிவு எடுக்கும் இடத்தில் இல்லையே...


Letchumanan Nadason:
மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பும் செயல்.


Neela Vanam: கடந்த கால முடிஞ்சு போன கதைக்கு இப்ப முடிச்சுப் போடுவது ஏனோ...


Manikam Manikam Manikam: இந்த நாட்டில் இன்னும் என்ன நடக்கப் போகிறது என்று பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.


Maha Lingam: உலகத்து மாந்தர்களுக்கு தமிழர்களின் உயிர் என்றால்...
ம...ருக்கு சமமே??? என்று எண்ணுகிறார்கள் போலும்....


M R Tanasegaran Rengasamy: அனுதாபத்துக்கும் ஆதரவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். விடுதலைப் புலிகளை வேரோடு பிடுங்கி எரிந்தாகி விட்டது என அன்றைய இலங்கை அரசு எக்காளமிட்டது. இவ்வாறு இருக்கையில் இல்லாத ஓர் இயக்கத்துக்கு பணப் பரிமாற்றம் என்பது அரசியல் சதி என்பது தெளிவாகிறது. முன்னாள் பிரதமர் நஜிப் பண உதவி செய்து இருப்பதைச் சரியான நேரத்தில் பதிவு செய்து இருக்கிறீர்கள் சார். நிச்சயம் நீதி வெல்லும்.


Moon Noom: இது பழிவாங்கும் செயல்... எல்லாம் தெரிந்தும் ஏன் இந்த நாடகம்... மக்களை மோதவிட்டு நினைத்ததைச் சாதிக்கவா...


Augustine Chinnappan Muthriar: Mega unmaiyana paagariu nalah nayam keegah aanuthu Malaysia tamilagal paadu paaduvooam... (மெகா உண்மையான பகிர்வு... நல்ல நியாயம் கிடைக்க மலேசியத் தமிழர்கள் பாடுபடுவோம்)


Nathan Perumal


Jsr Chandra


Ramaiah Paidiah: எனக்கு என்றுமே UMNO ஸ்டைல் தான் ரொம்ப பிடிக்கும். உனக்கு என்ன ஆனது. அது எனக்கு தெரியாது. அல்லது எனக்கு என்ன பிடிக்கும். அது உனக்கு தேவை இல்லை.

செஞ்சி கிட்டு போய் கிட்டே இருப்பேன். குத்தாலங் கடி கிரி கிரி. ஐசாலங்கடி கிரி கிரி - ராம் ராமையா செலாயாங்.


Varusai Omar:
இங்குள்ள தண்டக் கருமாந்திரங்களுக்கு... அதரவு, ஆதரவு இரண்டுக்கும் வேறுபாடு தெரியாதே! இன்று கல்வியமைச்சன். அடுத்த ஆண்டிலிருந்து Streaming கிடையாதாம் நண்பா!
எப்படியும் வருங்கால மாணவர்களை அறவே சிந்திக்கத் திறனற்றச் சமூகமாக மாற்றிவிட செத்துப் போன் அவன் பாட்டியிடம் சங்கல்பம் செய்து இருக்கிறானாம்... மீசை கூட அரும்பாத பொடியன்!


Ramarao Ramanaidu: அரசியல் பித்தலாட்டம் ...


Varusai Omar: ஹய்யோ ஹய்யோ! நாம விரும்புவதும் அதுவே நண்பர்களே!
ஆனால்? இங்கே நடப்பது என்ன என்னவோ எழவு... நடப்பதைப் பார்க்கும் போது, 4 குருடர்கள் யானையைத் தடவித் தடவி அடையாளம் சொன்ன கதைதான்!

அது என்னவோ தமிழனின் தலையெழுத்து. கெஞ்சிக் கதறி எதையுமே பெற வேண்டிய நிலை!

அப்படியே சாமி வரம் கொடுத்தாலும், இடையிலேயே சில ஆசாமிகள் (கல்லு) தட்டிப் பறித்துக் கொண்ட கதை மறந்து போச்சா?

"அந்தச் சீட்"டை விட்டு இறக்குவதற்குள் மேல் மட்டத் தலைவருக்கு "என்னப்புடி ஒன்னப்புடீ"ன்னு... ஒரு உயர் மட்டப் பதவியுடன் அதற்கு உண்டான அத்துணை சலுகைகளும் வேண்டிப் பெற்றதும் மறந்தாச்சா?

வந்தான் புண்ணியவான் PH காரன். ஒரே இரவில் எல்லாமே மேமேமே மாதிரி ஆயிடுச்சில்ல?

Sorry Muthu... பொடி வச்சிப் பேசறேன்னு நெனைக்கிறீங்களா? நெஞ்சு எரிகிறது நண்பா! சமுதாயத்தின் பெயரைச் சொல்லியே வயிறு வளர்த்த பாவிகளின் நிலை? உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்!


ஓம் நம சிவாய: The world know the true.... U go and ask to Norway people .. They know who is prabakaran.. And they really love prabakaran...


Davakeesaminathan Saminathan: இது நம்மவர்களைத் திசைத் திருப்ப வைக்கும் செயல்... அநியாயம்...


Sekar Raghavendra: சூரிய வெளிச்சம் சேரியில் விழாமல் மாளிகை நிழல்கள் மறைத்து விட்டனவா?


ஓம் நம சிவாய: Ltte not a terrorist..


Muniandy Ponusamy: இது மலாய் மக்களைத் திருப்தி படுத்தவும் ஜ.செ.கா.வுக்கு செக் வைக்கவும் ketuanan Melayu என்பதை நிலை நிறுத்தும் நோக்கம் என சொல்லப் படுவது உண்மையா?


Varusai Omar >>> Muniandy Ponusamy: ketuanan Melayu என்னா? பிச்சை எடுப்பதா? அதுதானே நடந்து கொண்டு இருக்கிறது... இதிலென்ன மயி... வேண்டிக் கெடக்கு?


Chidambaram Muniandy: இது சிறுபான்மை மக்களுக்கு அரசு போட்ட கண்ணி வெடிகள்


Solomon Raja: வணக்கம்.... சார்


Mohamed Hidayat: அரசியல் சதுரங்க ஆட்டம்.. தமிழர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சீண்டிப் பார்த்து விளையாடும் அரசியல் சாணக்கியனின் திருட்டு விளையாட்டு....


Puvan Muniandy: MM and his spin doctors esp PDRM is doing it again!




மலேசிய இந்தியர்களுக்குச் சோதனைகள் - 13.10.2019

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக மலேசியாவில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்தப் பட்டியலில் மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன்; சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் அடங்குவர்.


விடுதலைப் புலிகள் தொடர்பான நிதிகளை ஊக்குவித்தல்; ஆதரித்தல்; வைத்திருத்தல்; விநியோகித்தல் போன்றவற்றின் சந்தேகத்தின் பேரில்... சோஸ்மா சட்டம் 2012-இன் கீழ் அவர்கள் மீது கைது நடவடிக்கை.

நிச்சயமாக மிகவும் வேதனைக்குரிய விசயம். இருந்தாலும் இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அத்துடன் இலங்கை விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக ஜ.செ.க. தலைவர்கள் மீது குற்றம் சாட்டப் படுவது இதுவும் முதல் முறை அல்ல.

ஏற்கனவே பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி அவர்களும்; மனிதவளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் அவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளுடன் சித்தரிக்கும் பழைய படங்கள், சமூக ஊடகங்களில் சிறிது காலமாகப் பரவி வந்தன. ஆனால் அந்தப் படங்கள் அண்மையில் ஒரு புதிய வடிவத்தில், ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளன.



இந்தக் கட்டத்தில் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். டாக்டர் பி. ராமசாமி; எம். குலசேகரன் இருவருமே சர்ச்சைக்குரிய மத போதகர் டாக்டர் ஸக்கீர் நாயக்கிற்கு எதிராகப் பேசி வந்தவர்கள். தெரிந்த விசயம்.

ஸக்கீர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும்; அவரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்து உள்ளனர்.

இவர்கள் இருவரின் அந்த தொடர் வலியுறுத்தல்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த வலியுறுத்தல்கள் சில தனி நபர்களை வேதனைப் படுத்தி இருக்கலாம். அல்லது சமயம் சார்ந்த சில குழுக்களைக் கோபப்படுத்தி இருக்கலாம்.

அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் எதிராகப் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு இருக்கலாம். அவை ஊழியூழி காலத்து அரசியல் அணிகலன்களின் ஒரு பகுதி என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அடுத்து... சாமிநாதன்; குணசேகரன் இருவருமே சிறிது காலமாகப் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்து உள்ளனர்.

கடந்த 2018 நவம்பர் 28-ஆம் தேதி மலாக்காவில் நடந்த தமிழீழ மாவீரர் தின நிகழ்ச்சியின் போது இருவரும் உரை ஆற்றியதாகச் சொல்லப் படுகிறது.

தவிர தமிழீழ விடுதலை இயக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும்; மாவீரர் தின நிகழ்ச்சியின் போது பிரசுரங்களை விநியோகித்ததாலும்; அவர்கள் கைது செய்யப் பட்டதாக புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவர் மைடின் பிச்சை தெரிவித்து உள்ளார்.



2016 செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இலங்கை தூதரைத் தாக்கியதாக மேலும் இருவர் மீது குற்றம் சாட்டப் பட்டதாகக் கூறி இருக்கிறார்.

மற்றும் ஒருவர் 28 வயதான காப்பீட்டு முகவர். இவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் கோலாலம்பூர் இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு.

கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆதாரங்கள் பாரபட்சம் இல்லாமல் முன்வைக்கப்பட வேண்டும்.

அது மட்டும் அல்ல. அவர்கள் அனைவரும் சிறப்புக் குற்றங்கள் சட்டம் என் அழைக்கப்படும் (சோஸ்மா) கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். 28 நாட்கள் வரை அவர்களைத் தடுத்து வைக்க முடியும். ஏன் அவர்கள் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது.

சோஸ்மா என்பது கொடூரமானது. அதற்குச் சில பல திருத்தங்கள் தேவைப் படுகின்றது. ஆரம்பத்தில் இருந்தே அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

சோஸ்மாவின் கீழ் கைது செய்யப் பட்டவர்களின் மீது ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டும்.

கைது நடவடிக்கையில் இனம் மற்றும் மதம் போன்றவை காரணங்களாக அமைந்து விடக் கூடாது. நியாயமான நிலைப்பாடுகள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை. நிச்சயமாக அந்த எழுவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள பற்பல முயற்சிகள் மேற்கொள்வார்கள்.

நடந்து முடிந்த நிகழ்ச்சியில் அதிருப்தியான உணர்வுகள் இழைந்து ஓடுவதும் சன்னமாய்த் தெரிய வருகிறது. வலிமை வாய்ந்த இன சமயச் சக்திகளைச் சமாதானம் செய்யும் வகையில் ஓர் அரசியல் விளையாட்டாகவும் இருக்கலாம். அப்படியும் எண்ணத் தோன்றுகிறது.

மியன்மாரின் இராணுவ கெடுபிடிகளில் அவதிப்படும் ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

இஸ்ரேலியர்களின் இன்னல்களுக்கு இலக்காகும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கெடுபிடிகளுக்கு ஆளாகி இருக்கும் மிண்டானாவோ மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.

இந்தோனேசியாவில் இருக்கும் ஆச்சே மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இதைத் தவிர, உலகம் எங்கும் அவதிப்படும் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம்.

அதே போல இலங்கையில் அவதிப்படும் தமிழீழ மக்களுக்கு அனுதாபம் காட்டுவதில் தவறு இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து.

ஆயிரம் ஆயிரமாய்க் கொல்லப்பட்ட தமிழீழ மக்களுக்கு மரியாதை செலுத்துவதால்; விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளிப்பதாகப் பொருள் படாது.

பேராசிரியர் இராமசாமி சொல்வதை நினைவு கூர்வோம். ”மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் உறவினர்களை ஆதரிக்கும் தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக அல்ல.”

“கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கும் வலதுசாரி குழுக்களுடன் நேரத்தை வீணடிக்கக் கூடாது. நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மத போதகர் ஸக்கீர் நாயக் போன்றவர்களுக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.”

எது எப்படி இருந்தாலும் கைது செய்யப் பட்டவர்களின் நடவடிக்கைகள் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பது கண்டிப்பாக நிரூபிக்கப்பட வேண்டும். அது வரையில் அதிருப்திகள் தொடரலாம்.

நீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையே பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)