13 அக்டோபர் 2020

மலாயா தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிப்பு - 1951 பென் பூ அறிக்கை

தமிழ் மலர் - 08.10.2020

1951-ஆம் ஆண்டில் மலாயா பிரிட்டிஷார் ஒரு கல்வி அறிக்கையை வெளியிட்டார்கள். அதன் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இதற்கு எதிராகச் சீனர்கள் பென் பூ அறிக்கையை (Fenn-Wu Report) தயாரித்தார்கள். இந்த அறிக்கை தயாரிக்கப்படும் போது மலாயாவில் வாழ்ந்த தமிழர்களுக்கு சீனர்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை. அவர்களின் இனம்; அவர்களின் மொழி. அவற்றிலேயே முழுக் கவனம்.

பென் பூ அறிக்கையைச் சற்று ஆழமாகப் படித்துப் பார்த்தால் தெரியும். அதில் சீன மொழி தான் பிரதானமாகச் சொல்லப்பட்டு இருக்கும். தமிழ் மொழியைப் பற்றி கடமைக்காக ஓரிரு வார்த்தைகள் வந்து போய் இருக்கும். உண்மை. படித்துப் பாருங்கள்.

இதைப் பார்த்த இந்தியத் தலைவர்கள் சும்மா இருப்பார்களா. ஒட்டு மொத்த இந்தியர்களுக்காகப் போராடுவோம் என களம் இறங்கினார்கள். அந்த வகையில் மலாயா இந்தியச் சமூகத்தின் சார்பில் 1951-ஆம் ஆண்டு ஒரு கல்விக்குழு உருவாக்கப் பட்டது. அதற்கு ’மலாயா இந்தியர்களின் கல்விப் பரிந்துரை 1951’ என்று பெயர்.

சீனர்கள் தயாரித்த பென் பூ அறிக்கையைப் பற்றி இந்தியத் தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை. சரியான அடி. மாறாக பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதில் தரும் வகையில் தான் இந்தியத் தலைவர்கள் அறிக்கை தயாரித்தார்கள். சரி.

அடுத்ததாக 1952-ஆம் ஆண்டில் ஒரு தேசியப் பாடத் திட்டம் (Education Ordinance of 1952). மலாயா ஆங்கிலேய ஆட்சி கொண்டு வந்தது. மலாயாவின் மனித வளத்தை நிறைவு செய்யக் கூடிய வகையில் ஒரு தேசியப் பாடத் திட்டம் அமைய வேண்டும் என்று மலாயா ஆங்கிலேய ஆட்சி விரும்பியது.

அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம், சமூக முன்னேற்றம் போன்றவற்றின் மேம்பாட்டிற்கு உந்து சக்தியாக அந்தத் தேசியப் பாடத் திட்டம் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அதற்கு முன்னர், தேசியப் பாடத் திட்டம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று 1950-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரை செய்யபட்டது. நேற்றைய கட்டுரையில் சொல்லி இருக்கிறேன்.

அந்த வகையில் மலாயாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தேசியப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்று முன்மொழியப் பட்டது. தேசியப் பள்ளிகள் மூலமாகத் தான் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்க முடியும் என்பது எழுதப்பட்ட சாசனமாக முன்நிலை படுத்தப்பட்டது.

அதாவது சீன, தமிழ்மொழிப் பள்ளிகளை அகற்றிவிட்டு ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைப் போதனா மொழியாகக் கொண்ட தேசியப் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனும் இறுதி நோக்கத்தை பார்ன்ஸ் அறிக்கை பரிந்துரைத்தது. பார்ன்ஸ் அறிக்கையின் பரிந்துரைகளில் முக்கியமாக எட்டு குறிப்புகள் உள்ளன.

1. தொடக்கநிலைப் பள்ளிகள் மக்களின் ஒற்றுமைக்கு அடித்தளமாக அமைய வேண்டும்.

2. தேசியப் பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் இயங்க வேண்டும்.

3. மலாய் மொழி - முதன்மையான பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

4. ஆங்கில மொழி - இரண்டாவது பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

5. பள்ளிக்குப் போகும் வயது 6 - 12 வயது வரையில் இருக்க வேண்டும்.

6. தொடக்க நிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கில உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்

7. இலவசமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும்

8. பள்ளிச் செலவுகளின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(Aminuddin Baki (1953). The National School of Malaya: Its Problems, Proposed Curriculum and Activities. Private paper printed by Arkib Negara Malaysia, Kuala Lumpur, 1981)

பார்ன்ஸ் அறிக்கையை மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். சீனர்களும் தமிழர்களும் ஆதரிக்கவில்லை. 1951-ஆம் ஆண்டில் பார்ன்ஸ் அறிக்கைக்கு எதிராகச் சீனர்கள் பென் பூ அறிக்கையை (Fenn-Wu Report) தயாரித்தார்கள். சீன மொழியில் சிறப்பு பெற்ற இருவர் பென் பூ அறிக்கையைத் தயாரிக்க நியமிக்கப் பட்டார்கள்.

(1) டாக்டர் பென் (Dr W.P. Fenn). சீனா நாட்டின் அரசாங்க அதிகாரி.

(2) டாக்டர் பூ தே யாவ் (Dr Wu Teh Yau). ஐ.நா. சபையின் கல்வி அதிகாரி. பென் பூ அறிக்கையைத் தயாரித்த இந்த இரு கல்விமான்களின் பரிந்துரைகள்:

1. நாட்டின் கல்விக் கொள்கையில் சீனம்; தமிழ் மொழி மூன்றாவது மொழியாக இயங்க வேண்டும்.

2. தேசிய மாதிரி சீனம்; தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும்.

3. சீனம்; தமிழ்ப் பள்ளிகளின் கல்வி முறை மலாயா நாட்டைச் சார்ந்ததாக அமைய வேண்டும்.

(Sekolah vernakular iaitu Sekolah Cina, Sekolah Tamil dan Sekolah Melayu dibenarkan beroperasi dan menggunakan tiga bahasa, iaitu bahasa Melayu, bahasa Cina dan bahasa Tamil dan bahasa kebangsaan juga diadakan.)


(https://ms.wikipedia.org/wiki/Laporan_Fenn-Wu_1952

அனைத்துப் பள்ளிகளையும் சம பங்காளிகளாகக் கொண்ட உண்மையான தேசியப் பள்ளியை அமைக்க பென் பூ அறிக்கை பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை அம்னோ ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வகையில் மலாயா ஆங்கிலேய அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்னும் ஒரு விசயம். மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது. இந்தப் பென் பூ அறிக்கை தயாரிக்கப்படும் போது சீனர்கள் தன்னிச்சையாகச் செயல் பட்டார்கள். அதனால் 1951-ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக ஒரு கல்விக்குழு உருவாக்கப் பட்டது. அதற்கு 1951-மலாயா இந்தியர்களின் கல்விப் பரிந்துரை என்று பெயர்.

அந்தக் குழுவில் அப்போதைய ம.இ.கா. தலைவர் தேவாசர் (1951-1955); சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார்; (டான் ஸ்ரீ) ஆதி நாகப்பன்; தவத்திரு சுவாமி சத்யானந்தா; (1950-ஆம் ஆண்டில் சுத்த சமாஜம் சேவை அமைப்பை தோற்றுவித்தவர்) ஆகியோர் இடம் பெற்று இருந்தார்கள்.

பார்ன்ஸ் கல்வி அறிக்கையில் இந்திய சமூகத்தினருக்குப் பாதகமாக இருந்த பரிந்துரைகளுக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்தார்கள். இந்தக் கட்டத்தில் எழுந்து நின்றார் ஒரு சீனக் கல்வியாளர் அவருடைய பெயர் லிம் லியான் கியோக் (Lim Lian Geok). மலேசியாவைச் சேர்ந்தவர். சமூக நீதிக்காவும் இனங்களின் ஒற்றுமைக்காகவும் போராடிய மனிதர்.

சீன மொழிக்குப் போராடினாலும்; அதே பார்வையில் தமிழ் மொழிக்காகவும் போராடி இருக்கிறார். இவர் ஒரு சீனர். இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து இருக்கிறார்.

சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர் இந்த லிம் லியான் கியோக். அவர் நடத்திய அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது முக்கியம் இல்லை. ஆனால் போராட்டம் எனும் ஒன்றை அவர் நடத்தி இருக்கிறாரே என்பதுதான் முக்கியம்.

சீன, தமிழ் மொழிகள் மலேசியாவில் அதிகாரப் பூர்வமான மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று லிம் லியான் கியோக் உண்ணாவிரதம் இருந்தார். அதனால் 1961-ஆம் ஆண்டு அவருடைய ஆசிரியர் தொழில் பறிக்கப் பட்டது. அடுத்து அவருடைய மலேசியக் குடியுரிமையும் பறிக்கப் பட்டது.

லிம் லியான் கியோக் எனும் மனிதர் அவர் வாழ்ந்த நாட்டிலேயே நாடற்றவராக இறந்தும் போனார் என்பதுதான் வேதனையான விசயம்.

லிம் லியான் கியோக் இறந்து 35 ஆண்டுகள் ஆகி விட்டன. சென்ற 2011-ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள சீனர்களும், தமிழர்களும் ஒன்று கூடினார்கள். அவருக்கு 'இறப்பிற்குப் பின் குடியுரிமை' வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்கள். அது தொடர்பாக மலேசியப் பேரரசரிடம் பணிவான மகஜர்களையும் வழங்கினார்கள்.

1955-ஆம் ஆண்டில் சீன, இந்திய இனங்களின் உரிமைகள் குறித்து பிரதமர் துங்குவுடன் ஒரு பேச்சு வார்த்தை நடந்தது. அந்தப் பேச்சு வார்த்தையின் பெயர் ‘மலாக்கா பேச்சு’. அந்த நிகழ்ச்சியில்  மலேசியச் சீனர் அமைப்புகளுக்கு லிம் லியான் கியோக்  தலைமை தாங்கினார்.

பிறகு 1956-ஆம் ஆண்டில் ரசாக் அறிக்கை வெளிவந்த போதும்; 1961-ஆம் ஆண்டில் ரஹ்மான் அறிக்கை அமல் படுத்தப்பட்ட போதும்; தாய் மொழிகளின் கல்விக்கு நேர்ந்த பின்னடைவுகளைச் சரி செய்யச் சொல்லி வலியுறுத்தி வந்தார்.

1950-ஆம் ஆண்டுகளில் சீனப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் (United Chinese Schools Teachers’ Association) தலைவராக இருந்தார். 1951-ஆம் அண்டு பார்ன்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சீன தமிழ்ப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதனை எதிர்த்து இவர் உண்ணாவிரதம் இருந்தார்.

1961-ஆம் ஆண்டில் அவருடைய ஆசிரியர்ப் பணி உரிமம் (Teaching Permit) பறிக்கப் பட்டது. அது வரையிலும் அவர் ஆசிரியர் தொழில் செய்து வந்தார். பின்னர் ஒரு வாரம் கழித்து குடியுரிமையும் பறிக்கப் பட்டது.

அவருக்கு உதவிகள் செய்ய பலர் முன்வந்தனர். ஆனாலும் அவர் கோலாலம்பூரில் இருந்த ஒரு சீனர் தனியார்ப் பள்ளியில் ஆசிரியர் வேலை செய்தார். மிக எளிமையாக வாழ்ந்தார்.

Kwong Tong Cemetery, Kuala Lumpur

1985-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி இதயம் பாதிக்கப் பட்டு இறந்து போனார். அவர் இறக்கும் வரை நாடற்றவராக வாழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 85. மலேசியாவில் இதுவரை நடந்த இறுதி ஊர்வலங்களில் லிம் லியான் கியோக்கிற்குத் தான் ஆகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது. மலேசியச் சீனர்களின் ஆத்மா (The Soul of Malaysian Chinese) என்று சீனப்பள்ளி ஆசிரியர்கள் புகழாரம் செய்கின்றார்கள்.

 


ஒரு சிலரின் போராட்டங்களினால் தாய் மொழிப் பள்ளிகள் இப்போது கொஞ்சம் நிம்மதியாக பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கின்றன. இப்போது ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு அந்த மொழி போராட்டவாதிகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அதுவே நம் எதிர்பார்ப்பு.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
08.10.2020

சான்றுகள்:

1. Aminuddin Baki (1953). The National School of Malaya: Its Problems, Proposed Curriculum and Activities. Private paper printed by Arkib Negara Malaysia, Kuala Lumpur, 1981.

2. Banks, J. A. (1999). An Introduction to Multicultural Education. Needhlam Heights: Allyn and Bacon.

3. Chai Hon-Chan (1977). Education and Nation-Building in Plural Societies: The West Malaysian Experience. The Australia National University.

4. Federation of Malaya (1950). Central Advisory Committee on Education: First Report. Kuala Lumpur: Government Press.
 




12 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: தண்ணீர்மலை கோயில் 1863

பினாங்கு தீவு குன்றுகளும் மலைகளும் நிறைந்த பச்சைத் தீவு. கிழக்கிந்தியாவின் முத்து என்று புகழப்படும் அழகிய தீவு. அருகில் கெடா மாநிலம். 1771-ஆம் ஆண்டு கெடா சுல்தான் முகமட் ஜீவா (Muhammad Jiwa Zainal Adilin) அவர்களும்; ஆங்கிலேயர்களும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஐந்தாண்டுகள் கழித்து 1786-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி, பினாங்கில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. (Frank Athelstane 1850)

Penang Island is a green island with hills and mountains. The beautiful island known as the Pearl of Orient. Nearby is Kedah State. In 1771, Muhammad Jiwa Zainal Adilin, Sultan of Kedah and the British made a treaty. Five years later, on July 17, 1786, the British settled in Penang.

அதற்கு முன்னர் 1786-ஆம் ஆண்டு மே மாதம்; பிரான்சிஸ் லைட் (Captain Francis Light) தலைமையில் ஒரு குழு பினாங்கில் காலடி வைத்து விட்டது. மூன்று கப்பல்களில் வந்து இறங்கினார்கள். அந்தக் குழுவில் 100 இந்தியச் சிப்பாய்கள்; 30 வேலையாட்கள் (lascars); 15 பீரங்கிப் படை வீரர்கள்; 5 பிரிட்டிஷ் அதிகாரிகள். (Sabrizain)  

Before that in May 1786; A team led by Captain Francis Light has set foot in Penang. In May 1786 Francis Light sailing with three ships carrying 100 sepoys, 30 lascars, 15 artillerymen and 5 British officers, he arrived off the coast of Kedah.

ஒரு குடியேற்றப் பகுதியை உருவாக்குவது அந்தக் குழுவின் திட்டம். அந்தக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து வந்த வேலைக்காரர்கள் பலர் இருந்தார்கள். குடியேற்றப் பகுதியைச் சுத்தம் செய்தார்கள். 1700-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் குடியேறிய அந்தத் தமிழர்கள் அந்த குன்றுகள்; மலைகளுக்கு அடிக்கடி போய் இருக்கிறார்கள்.

The team's plan is to create a settlement. The team included many servants from Tamil Nadu. Those Tamils who settled in Penang in the 1700s; they often go to the hills and mountains.

சுத்தமான குடிநீர் கிடைக்குமா என்று தேடிப் பார்த்து இருக்கிறார்கள். அத்துடன் ஒரு வழிப்பாட்டுத் தலம் அமைப்பதற்கு நல்ல ஓர் இடம் கிடைக்குமா என்றும் தேடிப் பார்த்து இருக்கிறார்கள்.

They looked for a source of fresh water. They also wanted a good place to set up a place of worship.

Kristen Feilberg

அந்த வகையில் பினாங்கு வாட்டர்பால் அருவியைக் கண்டு பிடித்தார்கள். அங்கேயே ஒரு வழிபாட்டுக் குடிசையைக் கட்டி இருக்கிறார்கள். அதுவே காலப் போக்கில் பினாங்கு தண்ணீர்மலை ஆலயமாக உருமாற்றம் பெற்றது.

That’s how they discovered the Penang Waterfalls. They built a worship hut there. Over time, it was transformed as Penang Thanneermalai Temple.

1863-ஆம் ஆண்டு கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) எனும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் எடுத்த படம். அப்போது கட்டப்பட்ட குடிசை ஆலயம். நீர்வீழ்ச்சியில் இருந்து சுத்தமான நீரைக் கொண்டு வருவதற்கு குழாய்கள் அமைத்த பின்னர் எடுத்த படம். இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து தான், குடிநீரை ஜியார்ஜ் டவுன் (George Town) நகருக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு சென்றார்கள்.

The picture was taken by Kristen Feilberg, in 1863. Picture taken after the water pipes were set up to bring clean water from the falls. It was from this falls that drinking water was transported to George Town in cattle carts.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.10.2020

References:

1. Swettenham; Frank Athelstane (1850–1946). "Map to illustrate the Siamese question". W. & A.K. Johnston Limited. University of Michigan Library.

2. Francis Light | British military officer. Encyclopaedia Britannica.

3. The Founding of Penang - http://www.sabrizain.org/malaya/straits1.htm

4. Ooi, Keat Gin (2010). The A to Z of Malaysia. Rowman & Littlefield.

5. Lord Murugan’s Transforming Waterfall Temple - https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=5486

6. PHOTOS COURTESY: Sri Balathandayuthapani Youth Organization (SBYO)

7. Kristen Feilberg (1839–1919).



 

11 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு வாட்டர்பால் - 1863

1863-ஆம் ஆண்டு கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) எனும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் எடுத்த படம். பினாங்கு வாட்டர்பால் சாலை மலைப் பகுதியில் Botanic Gardens Waterfall, Penang); தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக நில அளத்தல் செய்யப்படும் போது எடுத்த ஓர் அரிய படம்.

1790-ஆம் ஆண்டுகளில் பினாங்கு மாநிலத்தின் உள்கட்டமைப்புகளுக்கு முதுகெலும்பாக விளங்கியவர்கள் மலாயா தமிழர்கள். காடுகளாய் கிடந்த வனாந்திரங்களைக் கோடரிகள்; பாராங் கத்திகள்; சம்மட்டிகள்; கடப்பாறைகள் போன்ற அடிப்படை ஆயுதங்களைக் கொண்டே செதுக்கிச் செப்பனிட்டு சீர் செய்து இருக்கிறார்கள்.

அந்தக் காடுகளில் சாலைகளையும் மரப் பாலங்களையும் அமைத்து அழகு பார்த்து இருக்கிறார்கள். காடுகளைச் சுத்தம் செய்யும் போது பல நூறு அல்லது சில ஆயிரம் பேர் வனவிலங்குகளால் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.


Three Tamil workers and two europeans 1868

காட்டு யானைகள்; காட்டுப் புலிகள்; காட்டுச் சிறுத்தைகள்; காட்டுக் கரடிகள்; காட்டு மாடுகள்; காட்டுப் பன்றிகள்; காட்டு விரியன்கள்; கருநாகங்கள்; மலைப்பாம்புகள் அவர்களைப் பதம் பார்த்து இருக்கின்றன. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நிறைய பேர் வீட்டிற்கு திரும்பால் காடுகளிலேயே காணாமல் இருக்கிறார்கள்.

அதையும் தாண்டிய நிலையில் மலேரியா; காலரா; காச நோய்; மூளைக் காய்ச்சல் (Encephalitis); வயிற்றுப் போக்கு; தட்டம்மை (Measles); குடல்புண் காய்ச்சல் (Typhoid); சுருளுயிரி காய்ச்சல் (Leptospirosis); போன்ற நோய்களினால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்து இருக்கிறார்கள். கணக்கில் சேர்க்கப் படாத கணக்கு. ஆங்கிலேயர்கள் எழுதி வைக்கவில்லை. மறந்து விட்டார்கள்.

Tamil woman foremost corner

இருந்தாலும் கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg); கார்ல் ஜோசப் கிளீங்கிரோத் (Carl Josef Kleingrothe); ஜி.ஆர். லம்பேர்ட் (Gustave Richard Lambert) போன்ற அந்தக் காலத்துப் புகைப்படக்காரர்கள், மலாயா தமிழர்கள் தொடர்பான படங்களை எடுத்து இருக்கிறார்கள். நன்றி சொல்வோம்.

1863-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) என்பவர் ஒரு படம் எடுத்து இருக்கிறார். பினாங்கு வாட்டர்பால் சாலையின் குன்றுப் பகுதியில் ஓர் அருவி. அந்த அருவிக்கு அருகில் ஒரு தாவரவியல் பூங்கா அமைக்கத் திட்டம். அப்போது அந்தப் பகுதிகளை நில அளவு செய்தார்கள். அப்போது பினாங்கு மலைக் காடுகளில் பாதைகளைப் போட்டுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான்.

Penang Botanical Gardens Waterfall 2015

1884-ஆம் ஆண்டு பினாங்கு தாவரவியல் பூங்கா அமைக்கப் பட்டது. அந்தப் பூங்காவில் சாலைகள் அமைப்பது; அந்தச் சாலைகளைப் பராமரிப்பது; நீர்வீழ்ச்சியில் இருந்து சுத்தமான நீரைக் கொண்டு வருவதற்கு குழாய்கள் அமைத்துக் கொடுப்பது; தாவரங்களை நட்டு வைப்பது; பூச்சிப் புளுக்கள் வராமல் பாதுகாப்பது; நீருற்றுகளை அமைப்பது  போன்ற வேலைகள்.

இந்த வாட்டர்பால் (Waterfall) மலையைத் தமிழில் தண்ணீர் மலை என்று அழைக்கிறார்கள். 1870-ஆம் ஆண்டுகளில் இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து தான், குடிநீரை ஜியார்ஜ் டவுன் (George Town) என்னும் பினாங்கு நகருக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு சென்றார்கள்.

இந்தக் குடிநீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட தமிழர்கள் நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு வேல் வடிவத்தை நட்டு வைத்தார்கள். அந்த வேல் தான் பிற்காலத்தில் அங்கு ஒரு முருகன் கோவில் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. இந்தத் தகவலை வழங்கிய கோவிந்த பாலா அவர்களுக்கு நன்றி.

இப்படி பற்பல வேலைகளைச் செய்தவர்கள் மலாயா தமிழர்கள் தான். அவர்களை மறக்கலாமா? அவர்களை மறக்கத்தான் மனசு வருமா? அவர்களை வந்தேறிகள் என்று சொல்லலாமா? சொல்லத்தான் மனசு வருமா?

மலாயா கித்தா காடுகளிலும், பாசா காடுகளிலும், சயாம் மரண இரயில் பாதையிலும் 10 இலட்சம் தமிழர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். அப்படிச் செத்துப் போன உயிர்கள் எல்லாம் வந்தேறிகள் இனமா. அப்படிச் சொல்லலாமா? வெட்கமாக இல்லையா?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.10.2020

References:

1. Kristen Feilberg (1839–1919). Title: Malaisie : Cascade à Malacca, près de Penang, ca. 1870.

2. David Jones: "Penang Waterfall Botanic Gardens". (p.13).

3. Sandhu, K.S (2010), Indians in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957).

4. Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2), July-Dec 2013, pp.205-229

5. Geoghegan, J, (1873), “Note on emigration from India”. Kessinger Publishing: Calcutta, Pp.63-4.

6. https://en.wikipedia.org/wiki/Penang_Botanic_Gardens





10 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: பினாங்கு கொடிமலை 1863

1863-ஆம் ஆண்டு கிறிஸ்டன் பீல்பெர்க் (Kristen Feilberg) எனும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் எடுத்த படம். சாலை அமைப்பதற்காகத் தமிழர்கள் சுடும் வெயிலில் வேட்டி தலைப்பாகையுடன் வேலை செய்கிறார்கள். வெறும் சம்மட்டி; குத்துக்கோல்; கடபாறைகளை மட்டுமே பயன்படுத்தி பெரும் கற்பாறைகளைக் தோண்டி எடுத்து இருக்கிறார்கள். அப்படியே மண்ணை நிரப்பிச் சாலைகளையும் அமைத்து இருக்கிறார்கள்.

சாலை நிர்மாணிப்பில் குழுக்கள் குழுக்களாக வேலை. ஒவ்வொரு குழுவிலும் 60 பேர். இரண்டு மேற்பார்வையாளர்கள். இந்தப் பாதை பினாங்கு கொடிமலைக்குச் செல்லும் பாதை.

1790-ஆண்டுகளில் பினாங்கு தீவின் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம் அடைந்தன (basic physical and organizational structures and facilities; e.g. buildings, roads, power supplies). காடுகளை அழித்து மண் சாலைகள் அமைத்துப் பாலங்கள் கட்டும் உள்கட்டமைப்பு பணிகள். இந்தப் பணிகளில் முதன்மை வகித்தவர்கள் மலாயா தமிழர்கள்.


1786-ஆம் ஆண்டில் பினாங்கு தீவு ஆங்கிலேயர்கள் கைவசம் ஆனதும், நூற்றுக் கணக்கான தமிழர்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப் பட்டார்கள். ஆயிரக் கணக்கில் என்று சொன்னால் சரியாக அமையும்.  

ஆங்கிலேயர்கள் தங்குவதற்கு குடியிருப்புகளை உருவாக்குவதற்கும்; அடிப்படையான சாலைகளை அமைப்பதற்கும் இந்த முன்னோடித் தமிழர்கள் பயன்படுத்தப் பட்டார்கள். அதன் பின்னர் பினாங்குத் தீவை விரிவு படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சாலைகள் உருவாக்கும் பணிகளே தலையாயப் பணிகளாக இருந்தன. பினாங்கில் நிறையவே குன்றுகள். அவற்றை வெட்டிச் சமப் படுத்தும் வேலைகள் தமிழர்களின் வேலைகளாக அமைந்தன.

A lone Indian on Penang Hill looking far into the distance in the 1863

இப்படிச் சாலைகளை அமைத்துக் கொடுத்தவர்களுக்கு வந்தேறிகள் என்று பெயர் சூட்டி வருகிறார்கள். வந்தேறிகள் எனும் சொல்லை ஒரு மெகா மனிதரும் சமயங்களில் பயன்படுத்துவது உண்டு. அவரின் தந்தையார் 1903-ஆம் ஆண்டில் தான் பினாங்கிற்கு வந்து இருக்கிறார். சான்றுகள் உள்ளன.

இருப்பினும் 250 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழர்கள் பினாங்கிற்கு வந்து விட்டார்கள். அது மூன்றாவது குடியேற்ற அலை. ஆக யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று கேட்பது. ஒன்றும் புரியாத ஒன் மில்லியன் டாலர் கேள்வி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.10.2020

1. Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2), July-Dec 2013, pp.205-229

2. Sandhu, K.S (2010), Indians in Malaya: Some Aspects of Their Immigration and
Settlement (1786-1957).

3. Geoghegan, J, (1873), “Note on emigration from India”. Kessinger
Publishing: Calcutta, Pp.63-4.

4. Parmer, J. N. (1960), “Colonial labor policy and Administration”. New
York: J. J. Augustin. Pp.7-8.


09 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள் மலேசிய மண்வாசனைகள்

மலையூர் மண்ணை மாண்புறச் செய்த மலாயா தமிழர்களுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை. அதே வேளையில் இந்தக் கித்தா தோப்பு கிளிகளுக்கும் வணக்கம். வாழ்த்துகள்.

இந்த மாந்த ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவநாடிகள். வரலாறு இல்லாதவர்களின் பார்வையில் வந்தேறிகள். ஆனால் உண்மையிலேயே இவர்கள் தான் அசல் மைந்தர்கள். அசல் மண்வாசனைகள்.

இந்த வாயில்லா பூச்சிகளுக்கு மரியாதை செய்வோம். இவர்களினால் தான் நாம் இந்த மலைநாட்டு மண்வாசனையைச் சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். நம் இனத்தின் மூத்த மாந்தர்களுக்கு மூத்த மரியாதை.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.10.2020