தமிழ் மலர் - 20.11.2020
தாகித்தி. பலரும் அறியாத பெயர். பலரும் கேள்விப்படாத பெயர். பசிபிக் பெருங்கடலில் தன்னந்தனியாக தனித்து நிற்கும் ஓர் அற்புதமான தீவு. உலகின் அழகிய பத்து தீவுகளில் தாகித்தி தீவையையும் ஒன்றாகத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அழகிலும் அழகான அதிசயமான தீவு. பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவு.
மனித நடமாட்டம் என்பது மிக மிகக் குறைவு. மக்கள் போவதும் குறைவு. ஹவாய் தீவு. தெரியும் தானே. அந்தத் தீவில் இருந்து தெற்கே 4,400 கி.மீ (2,376 மைல்கள்); தென் அமெரிக்கா சிலி நாட்டில் இருந்து கிழக்கே 7,900 கி.மீ (4,266 மைல்கள்); ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வட மேற்கே 5,700 கி.மீ. (3,078 மைல்கள்).
அதாவது அமெரிக்கா கண்டத்திற்கும் ஆசியா கண்டத்திற்கும் நடுவில் மாபெரும் பசிபிக் கடலில் பச்சைப் பிள்ளை போல விரல் சூப்பிக் கொண்டு இருக்கிறது.
இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்கள் உள்ளனர். இப்படி ஒரு தமிழ்ச் சமுதாயம் வாழ்வது உலக அதிசயம் தான். பலருக்கும் தெரியாத அதிசயம் தான். இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்களைத் தவிர்த்து, உள்ளூர் பூர்வீக மக்களும்; பிற இனத்தவர்களும் 1,89,000 பேர் வாழ்கிறார்கள்.
இந்தத் தாகித்தி தீவின் பரப்பளவு 1044 ச.கி.மீ. முதன்முதலாக கி.பி. 300-ஆண்டுகளில் பாலினேசியர்கள் குடியேறி இருக்கிறார்கள். தீவின் மக்கள் தொகையில் 70 விழுக்காடு. முன்பு காலத்தில் போமாரே (Pomare dynasty) எனும் வம்சாவளியினர் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
அங்கே போன ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் தாகித்தியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பின்னர் டச்சுக்காரர்கள்; போர்த்துகீசியர்கள்; ஆங்கிலேயர்கள்; பிரெஞ்சுக்காரர்கள் என மாறி மாறி ஆட்சி செய்தார்கள். இப்போது பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆட்சியில் உள்ளது. அங்கு உள்ள மக்கள் அனைவரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். சரி.
தமிழர்கள் எப்படி அங்கே போனார்கள். அதுதான் பெரிய இரகசியமாக இருக்கிறது. அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். அதிகமான தகவல்கள் கிடைக்கவில்லை.
1967-ஆம் ஆண்டில் அந்தத் தமிழர்க் குடும்பங்களைக் கண்டுபிடித்தார்கள். தாகித்தி தீவைச் சுற்றிப் பார்க்கப் போன தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
பெயர்கள் என்னவோ ஆச்சியமா வள்ளியம்மா சாமிநாதன் சரஸ்வதி என்று இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போய் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள். இரகசியங்கள் கசியத் தொடங்கின.
ஏறக்குறைய 20 தமிழர்க் குடும்பங்கள். இவர்களின் குடும்பத் தலைவர்களுக்கும்; குழந்தைகளுக்கும் தங்கள் வம்சாவளியைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. காட்டில் கண்ணைக் கட்டி விட்ட கதை மாதிரி தான் இருக்கிறது.
அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை. அங்குள்ள உணவு விடுதிகளில்; கடைகளில் சாதாரண வேலைகள் செய்கிறார்கள்.
தாகித்தி தலைநகரம் பாபிட்டி (Papeete). இந்த நகரத்தின் ஓர் ஒதுக்குப் புறத்தில் தமிழர்களின் வீடுகள் உள்ளன. இவர்களுக்கு என்று தனியாக ஒரு பொது மண்டபம் உள்ளது. பிள்ளைகள் பிரெஞ்சு; கிரியோல் மொழி படிக்கிறார்கள். பெரிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இவர்கள் தமிழர்கள் தான்.
ஆனாலும் அவர்களின் தாத்தா பாட்டிகளின் பெயர்களை நினைவு வைத்து இருக்கிறார்கள். தங்களைத் தமிழர்கள் என்று சொல்கிறார்கள். பெரும்பாலோர் கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு சிலருக்கு சமயமே இல்லை. இவர்கள் 'லா லாங்கு' (la langue) எனும் மொழியைப் பேசுகிறார்கள். அடிக்கடி அந்த மொழியிலேயே பாடுகிறார்கள்.
சமயங்களில் தங்களின் பூர்வீகத்தை நினைத்துப் பாடி அழுகிறார்கள். அவர்களின் பூர்வீகம் என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்களின் இந்திய வம்சாவளியைப் பற்றிய ஒரே ஒரு பின்னணிப் பிடிமானம் அவர்களின் பெயர்கள் மட்டுமே. வேறு எந்தத் தகவலும் எந்தச் சுவடுகளும் கிடைக்கவில்லை.
பவளக் கொடி (Pavalacoddy); மரியசூசை (Mariasoosay); ராயப்பன் (Rayappan); சாமிநாதன்; திவி; வீராசாமி; பார்வதி; லெட்சுமி; மாரியம்மா, ராசம்மா எனும் பெயர்கள். இருப்பினும் பெண்கள் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
தாகித்தி தீவில் இருந்து வெகு தொலைவில் பிஜி தீவுகள் உள்ளன. இங்கே தான் 1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் குடியேற்றம் செய்யப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு செல்லப் பட்டார்கள்.
பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249). நம் மலேசியாவில் இருந்து 8,680 கி.மீ. கொஞ்ச நஞ்ச தூரம் அல்ல.
உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் பிஜி தீவிற்குப் போவதற்கும் உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சமமாகி விடுகிறது.
1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள். அந்தக் கரும்புத் தோட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.
1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு வரப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆகும்.
இந்தப் பிஜி தீவில் இருந்து தான் தாகித்தி தீவிற்கு அந்த 20 தமிழர்கள் குடும்பம் போய் இருக்கலாம் என்பதே பொதுவான கருத்து. ஆனால் எவ்வளவு தூரம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாகித்தி தீவிற்கும் பிஜி தீவிற்கும் இடைப்பட்ட தூரம் 3336 கி.மீ. சும்மா ஒரு கற்பனை பண்ணினாலே மயக்கமே வருகிறது. அதுவும் இந்தக் காலத்தில் விமானத்தில் பயணம் செய்தாலும் நான்கரை மணி நேரம் பிடிக்கும்.
இன்னும் ஒரு விசயம். 1870-ஆம் ஆண்டுகளில் தாகித்தி தீவிற்கும் பிஜி தீவிற்கும் கப்பல் பயணங்கள் எதுவும் இல்லை. சரக்குக் கப்பல்களின் நடமாட்டம் இருந்து இருக்கிறது. ஆனால் அந்தச் சரக்குக் கப்பல்களில் இந்தத் தாகித்தி தமிழர்கள் ‘தும்பாங்’ பண்ணிப் போய் இருக்க முடியாது. வெள்ளைக்காரர்கள் விட்டு இருக்க மாட்டார்கள்.
அப்படியே கப்பலில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகப் போய் இருந்தாலும் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் போய் இருக்கலாம். ஆனால் 20 குடும்பங்கள் போய் இருக்க முடியாது.
அப்படியே கப்பலில் போய் இருந்தாலும் இரண்டு வாரத்திற்குச் சோறு தண்ணி இல்லாமல் போய் இருக்க முடியாது. ஆக அவர்கள் கப்பலேறிப் போய் இருக்கவும் முடியாது
ஒரு தற்காலிகக் காரணத்தைச் சொல்லலாம். முன்பு காலத்தில் பாலினேசியர்கள் பசிபிக் பெருங்கடல் முழுமைக்கும் கட்டுமரம் கட்டிப் பயணம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் கால் பதிக்காத இடம் என்று எதுவுமே இல்லை.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஹவாய், குவாம், பிஜி, சாலமன் தீவுகள், போர்னியோ, மலாயா என்று எல்லா நாடுகளுக்கும் போய் இருக்கிறார்கள்.
மலாயாவை எடுத்துக் கொண்டால் 20 - 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே பாலினேசியர்கள் கால் பதித்து விட்டார்கள். அவர்கள் தான் மலாயாவின் பூர்வீகக் குடிமக்கள். ஆனால் இவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் தகுதி கிடைத்ததா என்று தெரியவில்லை. அதுவும் ஒன் பில்லியன் டாலர் கேள்வி.
இப்போது எல்லாம் மில்லியனுக்கு மவுசு இல்லைங்க. ரோசாப்பூ ரோசம்மா ஒரு மில்லியன் டாலருக்கு கைப்பை வாங்கியதில் இருந்து இப்போது கிண்டர்கார்டன் சிசுக்கள்கூட பில்லியன் என்று கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். விடுங்கள். ஊர் பொல்லாப்பு வேண்டாம். நம்ப கதைக்கு வருவோம்.
இந்தப் பாலினேசியர்கள் அண்மைய காலங்களில்கூட தீவுகளுத் தீவு கட்டுமரம் கட்டிப் போவது வழக்கம். அப்படிப் போகும் போது பிஜியில் இருந்த தமிழர்களும் அவர்களுடன் தாகித்தி தீவிற்குப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.
ஏன் என்றால் கடல் பயணங்கள் பற்றி அதிகம் தெரிந்து இருக்காத அந்தத் பிஜி தொழிலாளர்கள் 3336 கி.மீ. தூரம் கட்டுமரங்களில் போய் இருக்க முடியுமா. பெரிய கேள்விக் குறி.
அதே போல பசிபிக் பெருங்கடலில் இன்னும் ஒரு தீவு உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து 1200 கி.மீ. அதன் பெயர் நியூ கலிடோனியா. இந்தத் தீவிலும் 500 தமிழர்கள் வாழ்கிறார்கள்.
தாகித்தி தமிழர்களைப் பற்றி ஒரு முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும். நிதியுதவி செய்ய ஆர்வலர்கள் இருந்தால் ஆய்வுகள் செய்யலாம்.
தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடும் இல்லை. அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள்.
உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போது என்ன. தமிழ்நாட்டைத் தமிழர்களா ஆட்சி செய்கிறார்கள். சண்டைக்கு வர வேண்டாம்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழர் அடையாளமே தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். அவர்களில் தாகித்தி தமிழர்களின் கதை ஒரு சோகமான கதை. கண்கள் பனிக்கின்றன.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.11.2020
சான்றுகள்:
1. https://en.wikipedia.org/wiki/Indians_in_New_Caledonia
2. Xavier S.Thaninayagam, published by the International Association of Tamil Research, 1968 - https://tamilnation.org/diaspora/newcaledonia.htm
3. Lal, Brij Vilash; Fortune, Kate (2000). The Pacific Islands: An Encyclopedia. University of Hawaii Press. pp. 27
4. Robert C. Schmitt (1962). "Urbanization in French Polynesia". Land Economics. 38 (1): 71–75.