02 மார்ச் 2021

பினாங்கு சிப்பாய் சாலை தமிழர்கள்- 1863

பிரான்சிஸ் லைட் (Francis Light), 1786-ஆம் ஆண்டு சென்னையில் இருந்து பினாங்கிற்கு வரும் போது 100-க்கும் மேற்பட்ட இந்தியச் சிப்பாய்களையும்; 40 தமிழர்களையும் தன்னுடன் அழைத்து வந்தார்.

Francis Light brought along more than 100 Indian sepoys from Chennai to Penang in 1786. He also brought 40 Tamils with him.

1786-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயக் காலனித்துக் காலத்தில் மலாயா தமிழர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். பினாங்கு கட்டுமான வேலைகளில் ஈடுபட்டார்கள். பினாங்கு காடுகளைத் துப்புரவு செய்தார்கள். சாலைகள் அமைத்தார்கள்.

The Indian Tamils ​​came to Malaya as early as 1786 during colonial period. They were engaged in infra structure works in Penang. They cleared the Penang Island forests. They made jungle tracks and paved roads in Penang.

1765-ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த ஜோர்டாயின் சுலிவான் டி சூசா (Jourdain, Sulivan & Desouza) எனும் வணிக நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது அவருக்குச் சென்னை நகரம் நன்றாகவே அறிமுகமானது. அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்பீட்வெல் (Speedwell) எனும் கப்பலையும் வாடகைக்கு எடுத்தார்.

In 1765 Francis Light secured command of a ship belonging to Madras trading firm Jourdain, Sulivan & Desouza the Speedwell. At that time he was well acquainted with the city of Chennai.

(Ooi, Keat Gin. "Disparate Identities: Penang from a Historical Perspective, 1780–1941" (PDF). Universiti Sains Malaysia.)

A statue of Sir Francis Light in Fort Cornwallis

அந்த வகையில் பிரான்சிஸ் லைட், பினாங்கிற்கு வரும் போது இந்தியச் சிப்பாய்களையும் அழைத்து வந்து இருக்கிறார். இந்தச் சிப்பாய்கள் தங்குவதற்கு பினாங்கில் ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்திற்குப் பெயர் தான் சிப்பாய் லைன்ஸ் சாலை (Sepoy Lines Road).

Francis Light brought Indian soldiers with him when he arrived in Penang. A site was chosen in Penang for the sepoy soldiers to stay. The place now called Sepoy Lines Road.

அங்கு அவர்களுக்கு படை வீடுகள் (barracks) அமைக்கப் பட்டன. இந்தியச் சிப்பாய்கள் வெகு காலமாகப் பினாங்கில் சேவை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பினாங்குத் தமிழர்கள் நீண்ட காலமாக உதவிகள் செய்து இருக்கிறார்கள்.

Barracks were set up for sepoy soldiers in Penang. Indian sepoy soldiers have been served in Penang for a long time. The Penang Indian Tamils had helped sepoy soldiers for a long time.

1800-ஆம் ஆண்டுகளில் சிப்பாய் லைன்ஸ் சாலை ஒரு கருமண் சாலை. மாட்டு வண்டிகள் பயணித்த சாலை. அந்தச் சாலையைத் தான் பினாங்குத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Sepoy Lines Road was a black soil road then in the 1800's. Cattle carts used the road to travel. Penang Tamils also used that road.

ஜார்ஜ் டவுன் துறைமுகத்தில் இருந்து இந்தியச் சிப்பாய்களின் படை வீடுகளுக்கு மாட்டு வண்டிகளில் பினாங்குத் தமிழர்கள் பொருட்களை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அப்போது எடுத்த படத்தைத் தான் இப்போது பார்க்கிறோம்.

Penang Tamils carried goods in cattle carts from the Port of Georgetown to the homes of Indian sepoy soldiers. We can see the picture taken then.

    

அவர்கள் நிற்கும் இடத்தில் இருந்து பின்புறத்தில் இந்தியச் சிப்பாய்களின் படைவீடுகள் இருப்பதையும் கவனியுங்கள். புகைப்படம் எடுப்பதற்காக வெள்ளை வேட்டி; முண்டாசுகளுடன் காட்சி தருகிறார்கள். சாமான்யக் கூலி வேலை செய்பவர்களின் உடைகள் அவ்வளவு தூய்மையாக இருக்காது.

Also notice the barracks of Indian soldiers in the back from where the Indian Tamils stand. They show up with white tothis and mundas for a shot. Usually the clothes of ordinary laborers are not as clean as that.

சேவையில் இருக்கும் இந்தியச் சிப்பாய்கள் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குக் கடினமானப் பயிற்சிகள் மிகவும் அவசியம். அது மட்டும் அல்ல. தொடர்ந்து உடல்ப் பயிற்சிகள்; தொடர்ந்து ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அங்கு இருந்த பிரிட்டிஷ் இராணுவத்தினருடன் கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Indian sepoy soldiers in service must keep their body fit. It requires a lot of hard physical training. And not only that. Regular physical exercises; Regular weapons training should be carried out. As well as conducting joint exercises with the British troops there.

அந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதற்குப் படைவீடுகளுக்கு அருகில் இருந்த திடலைப் பயன்படுத்தினார்கள். மழைக் காலங்களில் அந்தத் திடலில் தண்ணீர் தேங்குவது வழக்கம். ஏன் என்றால் படைவீடுகள் இருந்த பகுதி ஒரு சதுப்பு நிலமாகும்.

Indian sepoy soldiers used the field near the barracks to carry out their exercises. During the rainy season, the field usually flooded. Because the area where the barracks built were was a swampy area. It is common for stagnant rainwater during floods.

அந்தக் காலக் கட்டத்தில் பினாங்குத் தீவை, மலேரியா கொசுக்களின் தாயகம் என்றும் சொல்வார்கள். பினாங்கின் பெரும்பகுதி சதுப்பு நிலமாக இருந்ததால் நிறையவே குளம் குட்டைகள். நிறையவே அருவி ஏரிகள். நிறையவே பச்சைப் பாசா காடுகள்.

At that time, Penang Island was also known as the home of malarial mosquitoes. Most of Penang Island was swampy in those days and there were a lot of ponds and pools. Also a lot of waterfall lakes; a lot of green mangaroove forests.

பினாங்கில் மட்டும் 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் மலேரியாக் கொல்லி நோயினால் 15 ஆயிரம் பேர் இறந்தார்கள். பினாங்கில் மட்டும் அல்ல மலாயா முழுமைக்கும் இருந்த ரப்பர் காபித் தோட்டங்களில் பல்லாயிரம் தமிழர்கள் மலேரியாவினால் இறந்தார்கள்.

In Penang alone, 15,000 people died of malaria in the 18th; 19th centuries. Tens of thousands of Tamils died of malaria not only in Penang but in rubber coffee plantations throughout Malaya.

பினாங்கை உருவாக்கிய பிரான்சிஸ் லைட் அவர்களே மலேரியா நோயினால் தானே இறந்து போனார். அவர் இறக்கும் போது வயது 53. 1784 அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி காலமானார். சின்ன வயது தான். மலேரியா கொசு கடிக்கவில்லை என்றால் அவர் இன்னும் கொஞ்சம் கூடுதலான நாட்கள் வாழ்ந்து இருக்க முடியும்.

Francis Light, the founder of Penang, died of malaria. He was 53 years old when he died. He died on October 21, 1784. He could have lived a couple of more years more if not the malarial mosquitoes.

அந்தக் குண்டு குழிகளில் கருமண்ணைப் போட்டு நிரப்புவது தமிழர்களின் வேலை. திடலில் கருமண் குவியல்கள் இருப்பதைக் காணலாம். மாட்டு வண்டிகளின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட கருமண். அதிகச் சுமையான கருமண்ணை ஏற்றி வந்ததால் அழுத்தமான சாலைகளிலும் அழுத்தமான வண்டிச் சக்கரங்களின் வடுக்கள்.

It is the job of the Tamils to fill the pits on the roads with fresh earth. You can see the black piles of earth at the field. Black soils were brought by cattle carts. Wheel marks also can be seen on the roads due to heavy loadings of black soil.

1869-ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் அல்பிரட், பினாங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு ஒரு புகைப்படத் தொகுப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது. அந்தத் தொகுப்பில் பினாங்குத் தமிழர்களின் இந்தப் படமும் சேர்க்கப்பட்டு இருந்தது.

In 1869 Prince Alfred of England visited Penang. He was then presented with a photo album. This picture of Penang Tamils was also included in that album collection.

அவர்கள் இந்த நாட்டில் வந்தேறிகள் அல்ல. இவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் மலாயா தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது பெரிய கேலிகூத்து.

They are not pendatangs in this country. It is a great irony to use such a term.

புகைப்பட விவரங்கள்:
Photo details:

தலைப்பு:
Title: Sepoy Lines Road, Penang 1869

இப்போதைய இடம்:
Current location: Sepoy Lines Road in Penang

எடுக்கப்பட்ட காலம்:
Photo taken: 1869

படத்தின் அளவு:
Dimensions: 15.3 x 20.9 cm

படம் எடுத்தவர்:
Picture taken by: Kristen Feilberg (1839-1919)

காப்பகம்:
Archives: The Royal Collection Trust Picture Library, London

இந்தச் சிப்பாய் சாலையை பற்றி மேலும் அதிகமான தகவல்கள் உள்ளன. பிரிட்டிஷ் இராணுவம்; கேப்டன் ஸ்பீடி (Captain Speedy); போலோ திடல்; ஆப்பிரிக்காவின் பாவோபாப் மரம் (Baobab Tree) நடப்பட்ட தகவல்கள் உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.03..2021

சான்றுகள்:
References:

1. Khoo, Su Nin (2007). Streets of George Town, Penang. Penang: Areca Books. ISBN 978-983-9886-00-9.

2. Cheah J. S., 2013. Penang 500 Early Postcards. Editions Didier Millet.

3. https://penang.fandom.com/wiki/Sepoy_Lines_Road

4. Penal System in Andaman - Dialogue  January - March, 2009 , Volume 10  No. 3

5. Lewis, Su Lin (2016). Cities in Motion: Urban Life and Cosmopolitanism in Southeast Asia, 1920–1940. United Kingdom: Cambridge University. ISBN 9781107108332. - Penang was made a separate Presidency on par with Madras, Bombay and Bengal. By then, Penang also served as a penal station; in 1796, 700 Indian convicts were shipped in from the Andaman Islands.

6. Ooi, Keat Gin. "Disparate Identities: Penang from a Historical Perspective, 1780–1941" (PDF). Universiti Sains Malaysia. Archived from the original (PDF) - The practice of employing Indian convicts continued throughout the 19th century as a means to provide the necessary labour for public infrastructure works, such as the construction of roads, drains and public buildings.



 

24 பிப்ரவரி 2021

மலாக்காவிற்கு பரமேஸ்வரா வைத்த பெயர் அமலாக்கா

மலாக்கா வரலாற்றில் சருகு மானுக்கும் நாய்களுக்கும் நடந்த மோதல் கதை. மலேசியாவில் பலருக்கும் தெரிந்த கதை. அந்த மோதல் கதை நடக்கும் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். இதுவும் அனைவருக்கும் தெரிந்த கதை.

அவர் அந்த இடத்திற்குப் பெயர் வைக்கும் போது அமலாக்கா என்று பெயர் வைத்து இருக்கிறார். இது பலருக்கும் தெரியாத கதை.

நெல்லிக் காய்க்கு ஆங்கிலத்தில் Amalacca என்று பெயர். தமிழில் அமலாக்கா.

ஆங்கிலத்தில் வேறு பெயர்கள்:

1. Cicca emblica (L.) Kurz
2. Diasperus emblica (L.) Kuntze
3. Dichelactina nodicaulis Hance
4. Emblica arborea Raf.
5. Emblica officinalis Gaertn.
6. Phyllanthus glomeratus Roxb. ex Wall. nom. inval.
7. Phyllanthus mairei H.Lév.
8. Phyllanthus mimosifolius Salisb.
9. Phyllanthus taxifolius D.Don

Phyllanthus Pectinatus

அமலாக்கா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல் என்று சொல்கிறார்கள். தவறு. அது தமிழ்சொல். இதன் மூலச் சொல அமல் அக்கம்.

அமல் என்றால் அதிகாரம்; நிலம், தொழில், வியாபாரம்

அக்கம் என்றால் தானியம்; கயிறு; மரம்;  

Source: அக்கம் - https://ta.wiktionary.org/s/1tx4

ஆக அமலாக்கா என்பது ஒரு தமிழ்ச்சொல். அந்த மலாக்கா எனும் தமிழ்ச் சொல்லே மலாக்காவிற்கு வைக்கப் பட்டது. ஆக மலாக்காவிற்கு பரமேஸ்வரா வைத்த பெயர் அமலாக்கா.

கடையெழு வள்ளல்கள். பேகன்; பாரி; காரி; ஆய்; அதியமான்; நள்ளி; ஓரி.  அவர்களில் ஒருவர் அதியமான். குறுநில மன்னர். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

Phyllanthus Emblica

அவருக்கு சாகா வரம் தரும் நெல்லிக் கனியை ஔவையார் பரிசிலாகத் தந்தார். “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்த நெல்லிக் கனியை; தான் உண்பதை விட ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது.

பரமேஸ்வரா தன்னுடன் வந்தவர்களிடம் ‘இந்த மரத்தின் பெயர் என்ன’ என்று கேட்டு இருக்கிறார். அமலாக்கா என்று சொல்லி இருக்கிறார்கள். ஆக அவர் சாய்ந்து இருந்த மரத்தின் பெயரையே வைத்தார். மரத்தின் பெயர் அமலாக்கா மரம்.

எல்லாம் சரி. பரமேஸ்வரா பார்த்ததும் சரி. பேர் வைத்ததும் சரி. ஆனால் இப்போது மலாக்கா மரம் என்று சொல்கிறார்களே; அது உண்மையிலேயே மலாக்கா மரம் தானா. இல்லவே இல்லீங்க.

What tree did Parameswara really see in Malacca - Forest Research Institute Malaysia
Source: www.frim.gov.my › cms › fin › file

Malacca Tree

அசல் மலாக்கா மரத்தின் பெயர் Phyllanthus Pectinatus - அசல் நெல்லி மரம்

அதைப் பற்றித் தான் சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மலாக்கா மரத்தின் சமஸ்கிருதச் சொல் அமலக்கா. அல்லது அமலங்கா (Amalaki). உண்மையிலேயே அதுதான் அசல் நெல்லி மரம்.

Amalaki, also called “Indian Gooseberry,” is called “The Mother” in Ayurveda due to its support of the entire body/mind and immune system.

Source: https://organicindiausa.com/amalaki/



Phyllanthus Emblica

அதன் அறிவியல் பெயர் Phyllanthus Pectinatus. இந்த மரம் தான் மலாக்காவின் பூர்வீக மரம். மலாக்காவின் அடையாள மரம். உலகமே ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டது.

ஆனால் Phyllanthus Pectinatus எனும் பெயரைத் தவறாகப் புரிந்து கொண்டு; தவறாக எடுத்துக் கொண்டு Phyllanthus Emblica என்று இப்போது அழைக்கிறார்கள்.

Phyllanthus Emblica - கருநெல்லி

ஆங்கிலத்தில் Phyllanthus என்றால் நெல்லி. இந்த நெல்லிகளில் பல வகை உள்ளன.

1. அருநெல்லி - phyllanthus acidus

2. கீழாநெல்லி - phyllanthus niruri

3. கருநெல்லி - phyllanthus reticulatus

4. நெல்லி - phyllanthus emblica

5. கீழா நெல்லி - phyllanthus praternus (2)

6. கீழ்க்காய் நெல்லி - phyllanthus niruri

7. அருநெல்லி - phyllanthus distichus

8. அரநெல்லி - phyllanthus acidus

9. மேலாநெல்லி - phyllanthus maderaspatensis

இந்தப் பட்டியல் நீளும். இருப்பினும் மலாக்கா வரலாற்றில் சர்ச்சைக்கு உரிய நெல்லிகள் இரு வகை.

Phyllanthus Emblica 2

முதலாவது: Phyllanthus Pectinatus. இதற்கு அமலங்கா (Amla) என்று பெயர். சாதாரண நெல்லி. இதுதான் அசல் மலாக்கா மரம்.

இரண்டாவது: Phyllanthus Emblica. இதற்கு கருநெல்லி என்று பெயர். phyllanthus reticulatus என்று மற்றொரு பெயரும் உண்டு. இது அசல் மலாக்கா மரம் அல்ல.

Amalaki - Amla literally means "sour"; it is the Hindi word for a fruit tree (Emblica officinalis or Phyllanthus emblica) that grows throughout India, Malaysia, Indonesia and bears sour-tasting gooseberry-like fruits. Amla is also known by the Sanskrit name "Amalaki." (1)

சுவீடன் நாட்டு தாவரவியலாளர் கார்லஸ் லீனஸ் (Carolus Linnaeus). இவர் 1753-ஆம் ஆண்டு; Phyllanthus Pectinatus எனும் அமலக்காய்க்கு Emblica என்று பெயர் வைத்தார். அது கருநெல்லியின் பெயராகும்.

1890-ஆம் ஆண்டில் ஜோசப் டால்டன் ஹூக்கர் (Joseph Dalton Hooker) என்பவர் அமலங்காய்களை பேராக், மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பார்த்து இருக்கிறார். குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறார்.

Phyllanthus Pectinatus 1

கருநெல்லி மரங்கள் (Phyllanthus Emblica) தடிப்பான இலைகளைக் கொண்டவை. மரங்களின் அடிப்பகுதியில் காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். ஆனால் நெல்லி மரங்கள் (Phyllanthus Pectinatus) மெல்லிய கூர்மையான இலைகளைக் கொண்டவை. மேலே கிளைகளிலேயே காய்க்கும்.

கருநெல்லி பழத்தின் விதைகள் கூர்மையான முக்கோண அமைப்பு கொண்டவை.

ஆனால் நெல்லி பழத்தின் விதைகள் வட்ட வடிவமானவை. இவற்றின் மலர் அமைப்புகளிலும் மரப்பட்டை தோற்றங்களிலும் வேறுபாடுகள் உள்ளன.

கருநெல்லி மரங்கள் இந்தியா, பர்மா, தாய்லாந்து, இந்தோ-சீனா மற்றும் தென் சீனா முழுவதும் இயற்கையாகக் காணப்படும் தாவர இனம்.

கருநெல்லி மரங்கள் மலாய் தீபகற்பத்தில் நடப்பட்ட தோட்ட மரங்களாக வளர்கின்றன. காடுகளில் வளர்வது இல்லை.

Phyllanthus Emblica

தமிழ் மலர் - 25.06.2020

சுருக்கமாகச் சொல்லலாம். நெல்லி மரங்கள் மலாயா தீபகற்பத்தின் உண்மையான வன மரங்களாகும். குறிப்பாக மலாக்கா மாநிலத்தின் காடுகளில் அதிகமாகக் காணப் படுன்றன. மலாக்கா ஆயர் குரோ வனப்பூங்காவில் இந்த மரங்களை நிறையவே பார்க்கலாம்.

இருப்பினும் கால ஓட்டத்தில் Amalaka என்பது Emblica என மாற்றம் கண்டது. அந்த வகையில் கருநெல்லி மரத்தைத் தான் மலாக்கா மரம் என்று இப்போது சொல்கிறார்கள்.

அதே அந்தக் கருநெல்லி மரங்களை மலாக்கா முழுமைக்கும் இப்போது நட்டு வைத்து அழகு பாக்கிறார்கள். ஆக நெல்லி மரத்திற்குப் பதிலாகக் கருநெல்லி மரத்தை மலாக்கா மரமாக மாற்றிப் போட்டு வரலாற்றையும் மாற்றி விட்டார்கள். என்ன செய்வது?

மலாக்காவுக்கு இப்போது தேவையானது என்ன தெரியுங்களா. மலாக்கா பூந்தோட்டங்களை அழகு படுத்தும் தோட்டக்காரர்கள் அல்ல. அதன் தாவரவியல் பூங்காக்களை நல்ல முறையில் நிர்வகிக்க நல்ல அறிவார்ந்த தாவரவியலாளர்கள் தான்.

மலாக்காவின் அடையாளச் சின்னமாக இருவகையான மரங்கள் இருக்கின்றன. இதை மலாக்கா மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பரமேஸ்வரா பார்த்த மரம் தவறாக அடையாளம் காணப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.

Malacca Tree - Phyllanthus Pectinatus

உண்மையாகப் பார்த்தால் நெல்லி மரம் தான் மலாக்கா மரம். கருநெல்லி மரம் என்பது மலாக்கா மரம் அல்ல. ஆக பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரம் நெல்லி மரம். கருநெல்லி மரம் அல்ல.

When the Swedish founder of modern plant classification, Carolus Linnaeus, gave this tree its scientific name in 1753, he Latinised amalaka’ to emblica’ and placed it within the genus Phyllanthus. Hence the melaka tree became known in science as Phyllanthus emblica. Phyllanthus emblica is now planted all over Malacca as the state’s iconic foundation tree.

Malacca may have to accept that it has two iconic foundation trees: the tree that Parameswara saw and misidentified, and the tree it got mistaken for. (2)

இதுவும் ஒரு வரலாற்றுச் சிதைவு தான். மறுபடியும் சொல்கிறேன்.  பரமேஸ்வரா சாய்ந்து இருந்த மரத்தின் பெயர் Phyllanthus Pectinatus எனும் நெல்லி மரம்.

அந்த மரத்திற்குப் பதிலாக Phyllanthus Emblica எனும் கருநெல்லி மரத்தின் பெயரைச் சூட்டி வரலாற்றைத் திரித்து விட்டார்கள். வேதனையாக இருக்கிறது.

Malacca Tree Phyllanthus Pectinatus

இதைப் பற்றி மலாக்கா மாநிலச் சுற்றுப் பயணக் கழகத்திற்கும்; மலாக்கா சுற்றுச்சுழல் பராமரிப்புக் கழகத்திற்கும் மூன்று நான்கு முறை கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். ஆண்டுகள் கடந்து விட்டன.

மலாக்காவில் முதலமைச்சர்கள் வருகிறார்கள். போகிறார்கள். மலாக்கா புலாவ் பெசார் தீவில் புதைந்து கிடக்கும் புதையலைத் தேடுவதில் மட்டும் கோடிக் கோடியாய்ச் செலவழித்துச் சாதனையும் செய்கிறார்கள்.

ஆனாலும் மலாக்காவின் அசல் மலாக்கா மரத்தைக் கண்டுபிடிக்கத் தவறி விட்டார்களே. மலாக்கா மரத்தின் உண்மைத் தனம் இன்று வரையிலும் மாறவே இல்லை.

அந்த வகையில் மலாக்கா வரலாற்றுக்கும் ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே  கொரோனா வந்து விட்டது போலும். இப்போது மூச்சுவிட முடியாமல் திணறிப் போய் மூர்ச்சையாகும் நிலையில் முடங்கிப் போய்க் கிடக்கிறது போலும்.

பாவம் மலாக்கா மரம். அதற்குச் சோதனை மேல் சோதனைகள் இல்லை. வேதனை மேல் வேதனைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.02.2021

சான்றுகள்:

1. https://www.banyanbotanicals.com/…/livi…/herbs/amalaki-amla/

2. https://www.worldheritage.com.my/blog/2011/11/09/what-tree-did-parameswara-see-while-resting-besides-the-river/

3. https://www.thestar.com.my/business/business-news/2011/11/05/what-tree-did-parameswara-really-see-in-malacca

4. https://www.nparks.gov.sg/florafaunaweb/flora/3/0/3062


 

22 பிப்ரவரி 2021

கேமரன் மலை ஓராங் அஸ்லி தடயங்கள்

தமிழர்கள் எங்கே போனாலும் சரி; அவர்களின் தடயங்கள் எங்கேயாவது எப்படியாவது ஒட்டிக் கொண்டு இருக்கும். ஆர்டிக் துருவத்திற்குப் போய்ப் பாருங்கள். அங்கே யராவது ஒரு தமிழன் அங்கே உள்ள ஓர் ஐஸ்கட்டி பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு இக்ளு ஐஸ் வீட்டுக்குள் குடும்பம் நடத்திக் கொண்டு இருப்பான்.

மங்கோலியாவுக்குப் போய்ப் பாருங்கள். அங்கே ஒரு தமிழன் ஒரு மஞ்சள் தோலுக்குத் தாலி கட்டி மணிமேகலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருப்பான். சகாரா பாலைவனத்துக்குப் போய்ப் பாருங்கள். அங்கே ஒரு தமிழின் ஒரு மாசாய் பெண்ணை இழுத்துப் போட்டு பத்துப் பதினைந்து பிளைகளைப் பெற்றுப் போட்டு பத்துப் பதினைந்து ஓட்டகங்களை மேய்த்துக் கொண்டு இருப்பான்.

அடுத்து மலாக்காவில் மலாக்கா செட்டிகள். பரமேஸ்வரா வருவதற்கு முன்னதாகவே மலாக்காவிற்கு வந்தவர்கள். 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வியாபாரம் செய்ய வந்தவர்கள். அவர்களில் ஒரு குழுவினரின் கப்பல் தஞ்சோங் கிளீங் பகுதியில் பாறையில் மோதி சிதறியது.

அதில் இருந்த இருபது முப்பது தமிழர்கள் திரும்பிப் போக முடியாத நிலை. இங்கேயே தங்கி விட்டார்கள். அப்படியே உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக் கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள். அப்படித் தான் மலாக்கா செட்டிகள் வரலாறு உருவானது.

ரொம்ப வேண்டாம். பாபுவா நியூகினி. காட்டுமிராண்டிகள் வாழ்ந்த இடம். மனிதர்களைச் சாப்பிடும் மனிதர்கள் வாழ்ந்த இடம். அங்கேயும் தமிழர்கள் விட்டு வைக்கவில்லை. அங்கே போன சக்திவேல் என்கிற தமிழர் அந்த நாட்டிற்கே அமைச்சராகி வரலாறு படைக்கிறார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சும்மா சொல்லக் கூடாது. அந்தக் காலத்துத் தமிழர்கள் மன்மத ராசாக்களாகப் பயணித்து இருக்கிறார்கள். அப்படித்தான் தோன்றுகிறது. கெடா பேராக் மாநிலங்களில் வாழும் ஓராங் அஸ்லி மக்கள் பலரின் முகத் தோற்றங்களில் தமிழர்களின் சாயல் இருப்பதைக் கவனிக்கலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வணிகர்களாக வந்த தமிழர்களில் ஒரு சில இளைஞர்கள் ஓராங் அஸ்லி பெண்களைத் திருமணம் செய்து அவர்களோடு அப்படியே காட்டுக்குள் ஐக்கியமாகி விட்டார்கள். திரும்பி வர மனசு இல்லை. சரி.

கேமரன் மலையில் தமிழர் - ஓராங் அஸ்லி கலவைகள் உள்ளன. நெகிரி செம்பிலான் பெரெனாங், மந்தின் காடுகளிலும் தமிழர் - ஓராங் அஸ்லி கலவைகள் உள்ளன. கிமாஸ் தம்பின் காடுகளிலும் தமிழர் அஸ்லி கலவைகள் இன்றும் உள்ளன.

மேலும் ஒரு செய்தி. கேரித் தீவில் முன்பு காலத்தில் மா மெரி எனும் பூர்வீக மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களின் பெண்களில் சிலரை மலாயா தமிழர்கள் திருமணம் செய்து உள்ளார்கள் என்று கேரி தீவு பூபதி சொல்கிறார். சரி.

1920-ஆம் ஆண்டுகளில் கேமரன் மலைக் காடுகளில் சாலைகள் அமைக்கப் போன தமிழர்கள் சிலர் அங்குள்ள ஓராங் அஸ்லி பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கிக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சி, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கேமரன் மலையில் நடந்த ஓர் ஆச்சரியமான அதிசயமான கதை. இந்தக் கதையைப் பற்றி ஏற்கன்வே எழுதி இருக்கிறேன். பரவாயில்லை. மீண்டும் அசை போட்டுப் பார்ப்போம். எங்க தமிழர் இனமும் ஒசத்தி என்று வெளிச்சம் போட்டு காட்ட வேண்டாமா. நாங்க ஒன்னும் வந்தேறிகள் இல்லடா என்று சொல்லிக் காட்ட வேண்டாமா. சரி.

இந்தக் கேமரன் மலை கதை இருக்கிறதே இது கொஞ்சம் மாறுபட்ட கதை. மலாயா தமிழர்களின் வரலாற்றில் பழைமையும் புதுமையும் கலந்த ஒரு வரலாற்றுக் கதை.

கேமரன் மலை ஓராங் அஸ்லி தமிழர்க் கலவையின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். சமயங்களில் இஸ்கந்தர் நீர்வீழ்ச்சிப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பார்க்கலாம். சமயங்களில் மலைக்குப் போகும் சாலையின் ஓரங்களில் அத்தாப்புக் குடில்களை அமைத்து டுரியான் பழங்கள்; பெத்தாய் காய்கள்; விற்றுக் கொண்டு இருப்பார்கள்.

முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். இருந்தாலும் நன்றாக உற்றுக் கவனிக்க வேண்டும். இந்தியச் சாயல் ’பளிச்’சென்று நன்றாகவே தெரியும். அவர்களின் மூக்கு, கண்களில் ஒரு மாறுபட்ட தோற்றம் இருப்பதைக் கவனிக்க முடியும்.

அவர்களில் ஒரு சிலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கலாம். ஆனால் அவர்களில் பலருக்கும் தமிழ் மொழி தெரியாது என்பதே வேதனையான செய்தி.

1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத் தளமாக கேமரன் மலை விளங்கியது. வருடத்தைக் கவனியுங்கள். குதிரை வண்டிகளிலும்; எருமை மாட்டு வண்டிகளிலும் ஆங்கிலேயர்கள் ஏறிப் போய் இருக்கிறார்கள். முதன்முதலில் அங்கே போனவர்கள் யானைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இருந்தாலும் 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கேமரன் மலை புகழ் பெற்றது. அடர்ந்த காடுகளாக இருந்த பகுதிகளில் முதலில் ஒரு குறுகலான மண்பாதை அமைக்கப் பட்டது.

தாப்பாவில் இருந்து 19-ஆவது கல் வரையில் அந்தப் பாதை போடப் பட்டது. அதற்கு முன்னர் தஞ்சோங் ரம்புத்தான் வழியாகவும் கேமரன் மலைக்கு ஒற்றையடிப் பாதை இருந்தது. சிம்பாங் பூலாய் வழியாகவும் ஒரு குறுக்குப் பாதை இருந்தது.

அதன் பிறகு சற்றே பெரிய சாலைகளை ரிங்க்லெட் வரை அமைத்தார்கள். ஒரு குதிரை வண்டி போகும் அளவிற்குப் பாதை. தமிழர்கள் நிறையவே சாலை அமைப்புகளில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் கேமரன் மலை வரலாற்றில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. சரி.

மலேசிய நாட்டில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீதனமாகச் சீர் சிறப்புகளை வாரி வழங்கிவிட்டுப் போய் இருக்கிறார். அந்தப் பார்வையில் இயற்கைச் சீதனத்தின் சிகரமாய் விளங்குவது கேமரன் மலை.

தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் அமைந்து உள்ள மலைப் பிரதேசம் கேமரன் மலை. வருடம் முழுமைக்கும் குளிராகவே இருக்கும். இருந்தாலும் இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. வேலை தேடிப் போன வெளிநாட்டுப் புலம்பெயர்வுகளால் வெயில் அதிகமாகி விட்டது என்று உள்ளூர்வாசிகள் சிலர் புலம்புவதும் உண்டு.

கேமரன் மலையின் அசல் சொந்தக்காரர்கள் என்று சொன்னால் அவர்கள் தான் ஓராங் அஸ்லி மக்கள். பல ஆயிரம் ஆண்டுகளாகத் தீபகற்ப மலேசியாவிலும்; கேமரன் மலையிலும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பின்னர் கேமரன் மலையில் குடியேறியவர்கள் ஆங்கிலேயர்கள்; அதன் பின்னர் இந்தியர்கள்; சீனர்கள்.

1920-ஆம் ஆண்டுகளில் இந்தியர்கள் தான் அதிகமாக இருந்தார்கள். 6000 பேர் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. விரல்விட்டும் எண்ணும் அளவிற்கே சீனர்கள். இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

1926-ஆம் ஆண்டு ஜான் அர்ச்பால்ட் ரசல் (John Archibald Russell) என்பவர் கேமரன் மலையில் போ தேயிலைத் தோட்டத்தை (Boh Tea Estate) உருவாக்கினார். முதன்முதலில் அவருக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்கள் ஓராங் அஸ்லி மக்கள். இதை நாம் மறந்துவிடக் கூடாது.

காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள். இருந்தாலும் காடுகளில் ஒற்றையடிப் பாதைகளை அமைத்தவர்கள் ஓராங் அஸ்லி மக்கள் ஆகும்.

ஓராங் அஸ்லி மக்கள் உண்மையிலேயே வெள்ளந்திகள். காட்டு மரங்களை வெட்டி வந்து சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொள்வார்கள். காட்டில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு ஆடைகளைப் பின்னிக் கொள்வார்கள். அதே காட்டில் கிடைக்கும் காய் கனி விலங்குகளை உணவுப் பொருட்களாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

வெளி உலகத் தொடர்புகள் இல்லாமல் வாழ்ந்து வரும் அழகிய மனிதர்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. அவர்களிடம் பெரும் மாற்றங்கள். எல்லோரிடமும் கைப்பேசிகள் உள்ளன; மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. ’ரேய்பேண்ட்’ முகக் கண்ணாடி போட்டு அழகு காட்டுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சர் வில்லியம் கார்டன் கேமரன் (Sir William Gordon Cameron). இவர்தான் கேமரன் மலை எனும் அழகு ஓவியத்தை அன்புச் சீதனமாய் அன்பளிப்புச் செய்து விட்டுச் சென்ற அழகிய மைந்தர்.

மலாயாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் பல நல்ல காரியங்களைச் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அதில் உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி கேமரன் மலையின் கலா அழகிற்கு மெருகேற்றி விட்டுப் போய் இருக்கிறார்கள். நன்றி சொல்வோம்.

1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், கேமரன் மலை அவர்களின் ஓய்வுத் தளமாக விளங்கியது. வருடத்தைக் கவனியுங்கள். இருந்தாலும் 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகே புகழ் பெற்றது. அடர்ந்த காடுகளாக இருந்த பகுதிகளில் முதலில் ஒரு குறுகலான மண்பாதை போடப் பட்டது.

1926-ஆம் ஆண்டு தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்க மலாயா ஆங்கிலேய அரசு திட்டம் வகுத்தது. பத்து மில்லியன் மலாயா டாலர்கள் செலவாகும் என்றும் கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி பார்த்தால் முன்னூறு நானூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டிப் போகலாம்.

சாலை அமைப்பிற்கு போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) எனும் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைப்புப் பணிகள் தொடங்கின. 1930 நவம்பர் 14-ஆம் தேதி முடிவுற்றது.

அது ஒரு சவால் மிக்க நிர்மாணிப்புப் பணி. குதிரை அல்லது மாட்டு வண்டிகளில் தளவாடப் பொருட்கள் தாப்பா நகரில் இருந்து கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன.

பின்னர் நீராவி இயந்திரங்கள் மூலமாக இரும்புத் தளவாடப் பொருட்கள் மேலே கொண்டு செல்லப் பட்டன. கல் பாறைகளை உடைப்பதற்கு அதிக நீர் அழுத்தத்தில் பாறைகளை உடைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். கேமரன் மலை சாலையின் நீளம் 51 மைல்கள்.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தார்கள். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப் பட்டார்கள். சிலர் காடுகளிலேயே இறந்தும் போனார்கள். வேலை செய்த தமிழர்கள் சிலர் காட்டுக்குள் ஓடிப் போனார்கள். அப்படி ஓடிப் போனவர்கள், காட்டுக்குள் அப்படியே ஒளிந்து கொண்டார்கள். வெளியே வரவில்லை.

பல மாதங்கள் ஓராங் அஸ்லி மக்களுடன் வாழ்ந்தார்கள். அப்படியே  ஓராங் அஸ்லி பூர்வீகப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு மறைவு வாழ்க்கை. சாலை நிர்மாணிப்புப் பணிகள் முடிந்தததும் இவர்களும் வெளியே நடமாட ஆரம்பித்தார்கள்.

ஆனால் சொந்த ஊர்களுக்கு அவர்கள் திரும்பிச் செல்லவில்லை. ஏன் என்றால் அவர்களுக்குக் காட்டிலேயே குடும்பம் அமைந்து விட்டது. விட்டுப் போக மனம் இல்லாமல் அவர்களும் ஓராங் அஸ்லி மக்களைப் போல வாழ ஆரம்பித்தார்கள்.

அந்த மாதிரி காட்டுக்குள் போன மன்மத ராசாக்கள் அங்கேயே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த விசயம் எத்தனை பேருக்குத் தெரியும். அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். தமிழர்ச் சாயல் ’பளிச்’சென்று நன்றாகவே தெரியும்.

சும்மா சொல்லக் கூடாது. இந்தியச் சாமுத்திரிகா இலட்சணம் எங்கே எல்லாம் போய் விளையாடி இருக்கிறது பாருங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

1920 - 1950-ஆம் ஆண்டுகளில் வெள்ளைக்கார முதலாளிகளின் தரகர்களைத் தமிழ் நாடு, நாமக்கல் வட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்து நூற்றுக் கணக்கான தமிழர்கள் கேமரன் மலையில் உள்ள போ தோட்டத்திற்குக் கொண்டு வரப் பட்டார்கள். தவிர அருகாமையில் ஏழு தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்கும் கொண்டு வரப்பட்டார்கள்.

அன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் நூற்றுக் கணக்கான; ஆயிரக் கணக்கான தமிழர்க் குடும்பங்கள் வேலை செய்தார்கள். ஆனால் அதே இடத்தில் இன்று சில பத்து தமிழர்க் குடும்பங்கள் மட்டுமே.

இப்போது கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்; பூந்தோட்டங்கள்; விவசாய நிலங்கள் அனைத்திலும் வெளிநாட்டவரின் ஆதிக்கம். வங்களாதேசிகள், இந்தோனேசியர்கள், நேப்பாளிகள், மியன்மாரிகள் என ஆயிரக் கணக்கான அந்நிய நாட்டவர்கள். கேமரன் மலையில் தடுக்கி விழுகிற இடங்களில் எல்லாம் வெளிநாட்டவர்கள்.

கேமரன் மலை தமிழர்கள் இன்றும் உழைப்பதிலும் சேமிப்பதிலும் கெட்டிக்காரர்கள். சீனர்களுக்கு ஈடாக கேமரன் மலை தமிழர்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்று கேமரன் மலை தமிழ் ஆர்வலர் குமார வேல்முத்து சொல்கிறார்.

அன்றைய கேமரன் மலையின் புகழைச் சொல்லி மாளாது. இன்றைய கேமரன்மலை நிலையின் சோகத்தை சொன்னால் மனம் தாங்காது. இன்னும் ஒரு விசயம்.

உலகின் எட்டாவது அதிசயமாக இருந்த கேமரன் மலையை இப்போது எந்த இடத்தில் வைப்பது என்றுதான் தெரியவில்லை. விவசாயம் என்கிற பேரில் சுற்று வட்டாரக் காடுகளை எல்லாம் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள்.

அழகு அழகான பறவைகளை எல்லாம் அடித்து விரட்டி விட்டார்கள். ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிந்த புலிகளை எல்லாம் வறுத்து எடுத்து விட்டார்கள்.

அடுத்து மனிதர்கள்தான் பாக்கி. அடுத்து எங்க இனம் தான் ஒசத்தி என்று சொல்லி ஓர் இனம் இருக்கிற தமிழர்களையும் ஒரு வழிபண்ணி விடுவார்கள் போலும்.

காட்டுக்குள் மாயமாய் மறைந்து போன தமிழர்களின் வாரிசுகளைத் தேடிப் பிடிப்பது பெரிய வேலை. இரு தடவை அவர்களைத் தேடிப் போய் இருக்கிறேன். சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.

மலேசியத் தமிழர்கள் எனும் சொல்லில் உயிர் ஊஞ்சலாடுகிறது. மலாயா தமிழர்கள் எனும் சொல்லில் உயிர் கொப்பளிக்கிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.02.2021


20 பிப்ரவரி 2021

ஒராங் அஸ்லி வரலாற்றில் மலாயா தமிழர்கள்

தமிழ் மலர் 18.02.2021

மலாயாவில் நடந்த கதை. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை. அந்தக் காலக் கட்டத்திலும் சரி. அதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டு கால கட்டத்திலும் சரி; மலாயாவில் முதன்முதலில் தடம் பதித்தவர்கள் தமிழர்கள் தான்.

இவர்களுடன் மேற்கே இருந்து வந்தவர்கள் அராபியர்கள். வடக்கே இருந்து வந்தவர்கள் சீனர்கள். இந்த மூன்று வெளிநாட்டுக்காரர்கள் தான் இந்த நாட்டில் வாழும் ஒராங் அஸ்லி பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகிய முதல் வெளியுலக மனிதர்கள்.

வாழ்வியல் நாகரிகத்தை அறிமுகம் செய்து வைத்தவர்கள். இவர்களில் கொஞ்சம் ஆழமாய்ப் போய் பழகியவர்கள் தமிழர்கள்.

தோல் நிறத் தோற்றத்தில் ஒராங் அஸ்லி மக்களைப் போல இருந்ததால் தமிழர்களுடன் பழகுவதற்கு அவர்களுக்குப் பிடித்துப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் பாய்மரக் கப்பல்களில் வந்தவர்கள் போனவர்கள் பெரும்பாலும் எல்லோருமே ஆண்கள் தான். பெண்கள் மிக மிகக் குறைவு.

இந்தக் காலத்தைப் போல தோலில் ஒரு பையை மாட்டிக் கொண்டு உலகத்தைச் சுற்றி எல்லாம் வந்து விட முடியாது. அந்தக் காலத்தில் பெண்களைப் பெட்டிப் பாம்பாக அடக்கிப் போட்டு வாசித்தார்கள்.

பிள்ளைகளைப் பெற்றுப் போடும் தொழிற்சாலையாக நினைத்தார்கள். மன்னிக்கவும். இப்படிச் சொல்வதில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. உண்மை தானே. ஒரு செருகல்.

இப்போது பாருங்கள். ‘லெவலே’ வேறங்க. புருசனைப் பார்த்து வாடா போடா என்று கூப்பிடும் அளவிற்கு முற்றிப் போயிடுச்சு. தமிழக இறக்குமதிச் சீரியல்கள் அல்லது டிக் டாக் பாருங்கள். உண்மை தெரியும்.

நம்ப நாட்டு தொலைக்காட்சிப் படங்கள் மட்டும் என்னவாம். நாங்களும் உப்புமா சுப்புமா கிண்டுவோம் என்று ரொம்பவும் முன்னேறி விட்டார்கள். சரி.

இது என்ன 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களும் ஓராங் அஸ்லி மக்களும் சொந்த பந்தமா பழகினார்களா? என்ன புதுக் கதை என்று கேட்க வேண்டாம். உண்மைக் கதைங்க. படியுங்கள்.

எங்க இனம்தான் உலகத்திலேயே ரொம்ப ஒசத்தி என்று சிலர் மார்தட்டிக் கொள்வார்கள். அந்த மாதிரிச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதைக் காட்டிலும்; எங்க இனம் தான் நாகரிகத்தைச் சொல்லி கொடுத்தது என்று சொல்வதில் என்னங்க தப்பு. பெருமை பட வேண்டிய விசயம் தானே.

ஏறக்குறைய 2000 - 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்தார்கள். சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. அவர்கள் வரும் வரையிலும் அஸ்லி பழங்குடியினர் வெளித் தொடர்புகள் இல்லாமல் உட்புறக் காட்டுப் பகுதிகளிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

அந்த வகையில் ஓராங் அஸ்லி மக்களைச் சந்தித்த முதல் வெளிநாட்டு மக்கள் தமிழர்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர் அல்பெர்ட்டோ கோமஸ் கூறி இருக்கிறார்.

அவர் ’மலேசியாவின் ஒராங் அஸ்லி’ எனும் ஆய்வு நூலை 2004-ஆம் ஆண்டு எழுதினார். அந்த நூலில் அதைக் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழர்கள் இந்த நாட்டிற்கு வரும் வரையில் ஓராங் அஸ்லி மக்கள் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமலேயே காடுகளில் வாழ்ந்து வந்து உள்ளார்கள் என்றும் சொல்கிறார்.

ஒராங் அஸ்லி பழங்குடியினர் நறுமணக் கட்டைகள், தோகைகள், பிசின் (களிம்பு) போன்றவற்றைக் காடுகளில் இருந்து சேகரித்து வந்தார்கள். அவற்றைத் தென் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களிடம் கொடுத்தார்கள்.

காட்டுச் சேகரிப்புப் பொருள்களுக்குப் பதிலாக உப்பு, துணிமணி, இரும்புக் கருவிகளைத் தமிழர்களிடம் இருந்து பண்டமாற்று செய்து கொண்டார்கள் என்று அல்பெர்ட்டோ கோமஸ் எழுதி இருக்கிறார்.

ஓராங் அஸ்லி மக்களுடன் தமிழர்கள் நெருங்கிப் பழகினார்கள். பச்சைக் குத்துவதை அறிமுகம் செய்து வைத்தார்கள். வெற்றிலைப் பாக்கு போடுவதைக் கற்றுக் கொடுத்தார்கள். மூங்கில்களில் புல்லாங்குழல் செய்து வாசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த பாவனையில் பூர்வீகப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள். பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்கள். தமிழர்களில் சிலர் காடுகளில் குடியேறி ஓராங் அஸ்லி மக்களுடன் வாழ்ந்தார்கள்.

காட்டுக்குள் போய் திரும்பி வர முடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அப்படியே கரைந்து போனவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் திரும்பித் தங்கள் நாட்டிற்குச் செல்லும் போது ஓராங் அஸ்லி பெண்களைத் தங்களுடன் அழைத்தும் சென்றும் இருக்கிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓராங் அஸ்லி மக்களுடன் காடுகளில் அடைக்கலமாகி திரும்பி வராமல் போன தமிழர்கள் என்ன ஆனார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இனத்தோடு இனம் சேர்ந்து கரைந்து போய் இருப்பார்கள். ஆனால் டி.என்.ஏ. எனும் மரபணுக்கள் பொய் சொல்லா. சோதனை செய்தால் கண்டிப்பாகத் தெரிந்துவிடும். ஆனால் விடுவார்களா? இருப்பதையே அழித்து ஒழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் டி.என்.ஏ. ஆராய்ச்சியா?

அது மட்டும் அல்ல. அந்தத் தமிழர்களின் சுவடுகளைத் தேடி பேராக்; பகாங் காடுகளுக்குள் போக வேண்டும். சுவடுகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். சாதாரண விசயம் அல்ல.

அதே வேளையில் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓராங் அஸ்லி பெண்கள் பற்றிய விவரங்களும் நமக்குக் கிடைக்கவில்லை. எங்கே போய் தேடுவதும் என்று தெரியவில்லை.

கீழ்க்காணும் இணைய முகவரியில் அல்பெர்ட்டோ கோமஸ் எழுதிய அந்த நூலின் பி.டி.எப். கோப்புகள் உள்ளன. தரவிறக்கம் செய்து நீங்களும் படித்துப் பார்க்கலாம். ஒராங் அஸ்லி பழங்குடியினர் முதன்முதலில் சந்தித்தவர்கள் தமிழர்கள் எனும் உண்மை தெரிய வரும்.

இந்த உலகில் இரண்டாவது மூத்த இனம் என்று சொல்லும் இனத்தவர்கள், அந்தக் காலக் கட்டத்தில் இந்த ஒராங் அஸ்லி பழங்குடியினரைச் சந்தித்து இருப்பார்களா பழகி இருப்பார்களா என்றுகூடத் தெரியவில்லை. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உண்மை தெரிய வரும்.

மலேசியாவில் வாழும் பழங்குடி மக்களை 18 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவர்கள் அனைவரையும் ஒராங் அஸ்லி என்று பொதுவாக அழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் மொழி, கலாசாரப் பண்புகள் ஒவ்வொரு பிரிவிற்கும் மாறுபட்டவை. மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

இவர்களில் செமாங் (Semang) அல்லது நெகிரிட்டோ இனத்தவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். செனோய் (Senoi) இனத்தவர் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியில் வாழ்கின்றனர்.

புரோட்டோ மலாய் (Proto Malay) இனத்தவர் அல்லது மலாய்ப் பூர்வக் குடியினர் தீபகற்பத்தின் தென்பகுதியில் வாழ்கின்றனர். புரோட்டோ என்றால் முந்தைய என்று பொருள்.

செமாங் பூர்வீக மக்கள் தென் இந்தியாவில் உள்ள ஆதிக்குடிகளின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று மனிதவியலாளர்கள் (Ethnologists) சொல்கிறார்கள். ஏற்கனவே சில கட்டுரைகளில் ஆப்பிரிக்காவில் முதல் மனித இனத்தின் புலம் பெயர்வுகளைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.

குமரிக் கண்டம் எனும் குமரி நாடு பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்து இருந்த ஒரு கண்டம். இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம். தமிழ் மொழி; தமிழ்க் கலாசாரம்; தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என கருதப் படுகிறது.

60,000 ஆண்டுகளுக்கு முன்னால், அந்தக் கண்டத்தைக் கடல் கொள்ளாத போது ஆப்பிரிக்காவில் இருந்து ஆதி குடிமக்கள் அங்கு குடியேறி இருக்கிறாரகள்.

அந்தக் குமரிக் கண்டத்தில் இருந்து கடற்கரை வழியாக மக்கள் மலாயா தீவுக் கூட்டங்களுக்கும் வந்து இருக்கிறார்கள். அப்படி மலாயாவுக்கு வந்தவர்கள் தான் மலாயா பழங்குடி மக்களாகும்.

ஒராங் அஸ்லி பழங்குடியினர் இப்போது பேராக், பகாங், கிளந்தான் போன்ற மலேசியா மாநிலங்களிலும் மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், வட ஆஸ்திரேலியா, அந்தமான் தீவுகள் நாடுகளிலும் காணப் படுகிறார்கள்.

அந்த ஓராங் அஸ்லி மக்களில் ஒரு பிரிவினர் தான் செமாங், செனோய் மக்கள். 10,000 - 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் குடிப் பெயர்வு நடந்து இருக்கலாம்.

இவர்களுக்குப் புரோட்டோ மலாய் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். மலாயாவில் நடந்த குடியேற்றம் என்பதால் புரோட்டோ (மலாய்)  என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

2000-ஆவது ஆண்டு மலேசிய மக்கள் தொகை கணக்கின்படி அஸ்லி பழங்குடியினரின் மக்கள் தொகை 0.5 விழுக்காடு. இவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 148,000. இதில் பெரும்பான்மையினர் செனோய் பூர்வக்குடியினர் 54 விழுக்காடு. புரோட்டோ மலாய் பூர்வக்குடியினர் 43 விழுக்காடு. செமாங் பூர்வக்குடியினர் 0.3 விழுக்காடு.

அஸ்லி பழங்குடியினரின் ஏழ்மை நிலை 76.9 விழுக்காடு. அவர்களில் 35 விழுக்காட்டுப் பூர்வக்குடியினர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள்.

அஸ்லி பழங்குடியினர் பெரும்பகுதியினர் புறநகர் பகுதிகளில் குடியேறியுள்ளனர். சிறுபான்மையினர் நகர்புறங்களில் குடியேறியுள்ளனர். 1991-ஆம் ஆண்டில் தேசிய எழுத்தறிவு அளவு 86 விழுக்காடாக இருந்தது.

ஆனால் அஸ்லி பழங்குடியினரின் எழுத்தறிவு 43 விழுக்காடு தான். இவர்களின் சராசரி வாழ்நாள்: ஆண்களுக்கு 53 ஆண்டுகள். பெண்களுக்கு 52 ஆண்டுகள்.

நெகரிட்டோ பழங்குடியினரில் பலதரப்பட்ட துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கென்சியு, கின்டெக், லானோ, ஜாகை, மென்ரிக், பாடெக் போன்ற பிரிவுகள் உள்ளன.

இவர்களில் பேராக், கெடா, பகாங் மாநிலங்களில் உள்ளவர்களைச் சாக்கே என்று அழைப்பது உண்டு. "சக்காய்" என்பது அடிமை என்று பொருள்.

தவிர கிளந்தான், திரங்கானுவைச் சேர்ந்தவர்களைப் பங்கான் (Pangan) என்று அழைப்பார்கள். பங்கான் என்பது "காட்டு வாசிகள்" என்று பொருள். பல காலத்திற்கு பிறகு புதிய கற்காலத்தில் செனோய், புரொட்டொ - மலாய் பழங்குடியினர் இங்கு புலம் பெயர்ந்து உள்ளனர்.

நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர் அமரர் ஜீவி. காத்தையா. அவர் ‘மலேசியா இன்று’ இணைய இதழில் எழுதிய ’வந்தேறிகள் வரலாறு’ எனும் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

ஓராங் அஸ்லி பழங்குடியினர் மலைகளிலும் காடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களின் உறைவிடங்கள் இலைகளினால் மூடப்பட்ட சிறு சிறு பரண்கள். இந்தப் பரண்களின் தரையில் கம்புகள் அடுக்கி அவற்றின் மேல் உறங்குவார்கள்.

உறைவிடங்களில் காட்டுத்தீ மூட்டி வைத்து இருப்பார்கள். போக்குவரவு செய்யப் படகுகள் இல்லை. வாகனங்கள் இல்லை. வீடு வாசல்கள் இல்லை. காடுகளில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு, பறவை, விலங்கு இவைதான் அவர்களின் உணவு.

சிக்கிமுக்கி கற்கள்; கூர்மையான ஆயுதங்கள்; இவற்றைப் பயன் படுத்தி நெருப்பு உண்டாக்குகிறார்கள். அம்பும் வில்லுமே இவர்களின் முக்கியமான ஆயுதங்கள். இவர்கள் உணவுகளைச் சேமித்து வைப்பது இல்லை.

ஒரு கூட்டமாக ஒரு குழுவாக வாழ்வார்கள். இவர்களுக்கு குழுத் தலைவன் என்று எவரும் இல்லை. மனசில் சூது வாது கள்ளம் கபடம் இல்லாமல் பழகக் கூடியவர்கள்.

செமாங் பழங்குடி மக்கள் இடி; மின்னல் போன்ற இயற்கைத் தன்மைகளை முதன்மைப் படுத்தி வணங்கி வருகிறார்கள். தெய்வங்களாகவும் கருதுகிறார்கள்.
அவற்றைச் சமாதானப் படுத்தத் தங்கள் கெண்டைக் காலின் முன்புறத்தில் சின்னதாய் வெட்டிக் கொள்வார்கள். அங்கு இருந்து இரத்தம் எடுக்கிறார்கள். தெய்வ அன்பளிப்பு செய்கிறார்கள்.

செமாங் பழங்குடி மக்கள் மற்றொரு பழங்குடி மக்களான சக்கேய் இனத்தவருடன் கலப்பு மணம் செய்து கொள்கிறார்கள். பழங்குடி மக்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

சக்கேய் மக்கள் தென் சீனா, யூனான் (Yannan) மலைப் பகுதிகளில் இருந்து வந்து மலாயாவில் குடியேறியவர்கள். மங்கோலிய - இந்தோனேசிய வம்சாவளியினர். மங்கலான மஞ்சள் நிறம் கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி இந்தோசீனாவைச் சேர்ந்த ‘மொன் அன்னம்’ மொழியாகும்.

செமாங் மக்களைவிட அழகிலும் உயரத்திலும் நிறத்திலும் நன்றாக இருப்பார்கள். நீண்ட தலை அமைப்பு. சுருட்டை முடி. பச்சை குத்திக் கொள்வார்கள். நீண்ட ஊதுகுழல் இவர்களின் வேட்டை ஆயுதம். மரங்களின் மீது குடிசை காட்டி வாழ்கிறார்கள்.

தமிழர், சீனர், ஜாவானியர், பூகிஸ்காரர், அராபியர், ஐரோப்பியர் போன்றவர்களிடம் இருந்து பல நாகரிக முறைகளை மண்ணின் மைந்தர்கள் கற்றுக் கொண்டார்கள்.

அந்த வகையில் வரலாற்றை வரலாறாகப் பார்க்க வேண்டும். அவர்களிடம் இருந்தே விவசாயம், வியாபாரம், நாணயப் புழக்கம், இரும்பு, வெள்ளி, தங்கம் இவற்றின் உபயோகம், ஆடை நெய்தல், வீடுகள் அமைத்தல், படகுகள் கட்டுதல், அரசியல் முறைகள் முதலியவற்றைத் தெரிந்து கொண்டார்கள்.

இவர்கள் பேசும் வார்த்தைகளில் பல சொற்கள் அந்நியர்களிடம் இருந்து கடன் வாங்கப் பட்ட சொற்களே. அப்படி இருக்கும் போது சமஸ்கிருத மொழியின் கிளை மொழியே இவர்களின் மொழி என்று சொல்கிறார்கள். எங்கேயோ இடிக்கிறது.

இந்த நாட்டுப் பூர்வீக மக்களுக்கு நாகரிகம் பற்றி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தமிழர்கள். அப்படிப்பட்ட ஓர் இனத்தை வந்தேறிகள் என்று சொல்லலாமா. சொல்வதற்கு மனசு வரலாமா. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக வரலாற்றைத் திசை திருப்பலாமா?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.02.2021

சான்றுகள்:

1. Gomes, Alberto G. "The Orang Asli of Malaysia". International Institute for Asian Studies.

2. அல்பெர்ட்டோ கோமஸ் - https://scholar.google.com.my/citations?user=vGLzBO8AAAAJ&hl=en

3. World Directory of Minorities and Indigenous Peoples - https://minorityrights.org/minorities/orang-asli/

4. Malaysia's indigenous tribes fight for ancestral land and rights in a modern world - https://www.channelnewsasia.com/news/asia/malaysia-orang-asli-ancestral-land-rights-11848294

5. Cultural Assimilation among Malays and Indians in Malaysia - PDF - Punitha Sivanantham; Kumaran Suberamanian

 

17 பிப்ரவரி 2021

அப்போது வாருங்கள் இப்போது வந்தேறிகள்

தமிழ் மலர் - 17.02.2021

உலகின் அழகான அற்புதமான அதிசயமான நாடு மலேசியா. அழகு அழகான இயற்கை வளங்கள். அழகு அழகான கனிவளங்கள். அழகு அழகான மரங்கள் செடிகள் கொடிகள். அழகு அழகான மனிதர்கள். கலர் கலரான இனங்கள். அதில் கதைகள் சொல்லும் மதங்கள்.

இயற்கை அன்னையே ஆசைப்பட்டு ஓடி ஆடி கண்ணாம்பூச்சி விளையாடிய இனிதான காடுகள் மேடுகள். அதைப் பார்த்து உலகின் எல்லா ஜீவராசிகளுக்கும் ஆசைகள் வந்தன. இடம் தேடி இங்கே வந்தன. வசதியாய் வளமாய் வாழ்கின்றன. அதோடு ஆனந்தமாய் ஆனந்த பைரவிகளையும் அன்றாடம் பாடுகின்றன.

இன்னும் ஒரு செய்தி. இந்த நாடு இறைவன் தந்த ஓர் அட்சயப் பாத்திரம். அர்ப்பணிப்பு வளாகத்தில் மணிமுத்துகளின் சீதனத் தடாகம். இயற்கை அழகில் சொல்லாமல் கொள்ளாமல் அம்சவர்த்தனங்கள். இயற்கை அன்னை சிந்தாமல் சிதறாமல் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். அத்தனையும் பச்சைப் பசேல் சீதனக் கொலுசுகள்.

அதனால் தானோ என்னவோ தெரியவில்லை; மலாயாவைப் பார்த்து கிழக்கு உலகின் அழகிய முத்து என்று ஐரோப்பியர்கள் புகழாரம் செய்தார்கள். அப்படி ஆசை ஆசையாய்ப் பார்க்கப்பட்ட நாடு. அப்படி ஆசை ஆசையாய் வளர்க்கப்பட்ட நாடு.

ஆனால்... ஆனால்... அண்மைய காலங்களில் அந்த ஆசைகள் எல்லாம் கரைந்து முறுகி வருகின்றன. இனவாத மதவாதப் பெரிசுகளின் கண்மண் தெரியாத கதகளி ஆட்டங்கள். இதில் கடன் வாங்கி வாங்கியே ஒரு நாட்டை கடன்காரா நாடாக மாற்றி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் ஆசிய வளர்ச்சி நிறுவனத்தில் அதிகமாக பணத்தைச் சேர்த்து வைத்து இருந்த நாடு. மற்ற நாடுகளுக்கு அள்ளிக் கொடுத்த நாடு. இப்போது பாருங்கள். கடன்கார நாடுகளின் பட்டியிலில் சிக்கிக் கொண்டு அல்லல் படுகிறது.

சுயநலத்திற்காகவும் சொந்தக் குடும்பத்தின் பந்த பாச நலனுக்காகவும் நாட்டை அடமானம் வைத்து வருகிறார்கள் அரசியல்வாதிகள் சிலர். சீனாவிடம் பல நூறு பில்லியன்கள் கடன். அந்தக் கடன்களை மொத்தமாக அடைத்து முடிக்கப் பல பத்தாண்டுகள் பிடிக்கலாம். வேதனை ஒரு பக்கம். விசும்பல்கள் ஒரு பக்கம்.

பிரதமர் நஜிப் காலத்தில் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களுக்கு சீனா நிதி உதவி செய்தது. 2014 மே மாதம் 31-ஆம் தேதி, பிரதமர் நஜிப் சீனாவுக்கு ஓர் அரசுப் பயணம் மேற்கொண்டார். அப்போது சீனாவின் பிரதமர் லி கெக்கியாங் (Li Keqiang).

சீனாவும் மலேசியாவும் இருதரப்பு வர்த்தகத்தை 2017-ஆம் ஆண்டுக்குள் 160 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கு முடிவு செய்தன. குறிப்பாக ஹலால் உணவு, நீர் பதப் படுத்துதல், ரயில் கட்டுமானம் மற்றும் துறைமுகங்கள் போன்ற கட்டுமானங்கள்.

160 பில்லியன் டாலர் என்பது சாதாரண காசு இல்லை. மலேசியாவில் உள்ள அத்தனை பேருக்கும் ஆளுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் கொடுக்கலாம். அவ்வளவு பெரிய காசு. ஆனால் சீனா கொடுக்கும் அவ்வளவு பணத்திற்கும் வட்டியும் முதலுமாக நாம் கொடுக்க வேண்டும். முப்பது ஆண்டு ஒப்பந்தம் என்றால் சீனா கொடுக்க நினைத்த அந்தப் பணம் 200 பில்லியனாக எகிறிப் போய் இருக்கும். நல்ல வேளை. மகாதீர் வந்து தடுத்து நிறுத்தினார். சரி.

மலேசியா இன்று இணைய நாளிதழில் அமரர் ஜீவி. காத்தையா அவர்கள் வந்தேறிகள் வரலாறு என்ன சொல்கிறது எனும் தலைப்பில் 2014-ஆம் ஆண்டு ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். அதில் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

ஜீவி. காத்தையா அவர்கள் அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதி; ஒரு சமூகச் செயற்பாட்டாளர்; கட்டுரையாளர்; செய்தியாளர்; களப் போராளி; மலேசியத் தொழிலாளர்களின் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். சென்ற 2020-ஆம் ஆண்டில் தம்முடைய 82-ஆவது அகவையில் காலமானார்.

நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர். மலேசியப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை போட்டியிட்டவர். 1964-ஆம் ஆண்டில் அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தை (AMESU) உருவாகக் காரணமாக இருந்தவர்.

இவரைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இப்போது வந்தேறிகள் பற்றி என்ன சொல்கிறார். அதைப் பார்ப்போம்.

அமெரிக்கா பல இனங்களைக் கொண்ட  நாடு. அங்கு நிற அடிப்படையிலான குமுறல்கள் இன்று வரையில் நீடிக்கின்றன. இருந்தாலும் அந்நாட்டு மக்கள் ஒருவரைப் பார்த்து “வந்தேறி” என்று சொல்ல மாட்டார். “திரும்பிப் போங்க” என்று கொக்கரிக்க மாட்டார். “திரும்பிப் போங்க” என்று சொன்னால் எல்லோருமே திரும்பிப் போக வேண்டும்.

அங்கே யாருமே மண்ணின் மைந்தர்கள் அல்ல. எல்லோருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான். “திரும்பிப் போங்க” என்று சொன்னால் சிவப்பு இந்தியர்களைத் தவிர, மற்ற எல்லோருமே அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நடக்குமா. நடக்கிற காரியாமா? சிவப்பு இந்தியர்கள் தான் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள்.

இந்தப் பக்கம் ஓராங் அஸ்லி மக்களை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் தான் அசல் மண்ணின் மைந்தர்கள். இவர்கள் எங்கே? இவர்களின் பெயரைச் சொல்லிப் பேர் போட்டுக் கொண்டு இருக்கும் சிலரும் பலரும் எங்கே?

மலேசியாவும் பல்லின மக்களைக் கொண்ட ஒரு நாடு. பல்லின மக்களின் உழைப்பால் செழிப்பும் வளப்பமும் அடைந்த நாடு. இப்படி ஒரு புண்ணிய பூமியில் “வந்தேறிகள்” மற்றும் “திரும்பிப் போங்க” என்கிற கூப்பாடுகள். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. ரொம்ப காலமாகவே நீண்ட நெடிந்து வருகின்றன.

ஜீவி. காத்தையா சொல்கிறார்: வந்தேறிகள் எனும் சொல்லுக்கு தூபம் போட்ட பெருமை நாட்டின் பெரும் தலைவர்கள் என்று கூறப்படும் ஓன் பின் ஜாபார்; துங்கு அப்துல் ரஹ்மான்; மகாதிர் முகமட்; மேலும் சில பல தலைவர்கள்.

புழு பூச்சிகளுக்குக்கூட இவர்களின் பின்னணி நன்றாகத் தெரியும். ஆனால் இவர்கள் என்னவோ மலேசிய மண்ணுக்குள் இருந்து லபக் என்று முளைத்தவர்கள் போல் மற்றவர்களைப் பார்த்து திரும்பிப் போ என்று சொல்கிறார்கள்.

அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் அவர்களைப் பாராட்டலாம். பகிரங்கமாக சொல்லி இருக்கிறார். தம்முடைய இந்தோனேசியா சுலாவாசி பூர்வீகத்தை ஒப்புக் கொண்டு உள்ளார். பாராட்டுவோம்.

“திரும்பிப் போங்க” என்ற கூப்பாடு  இன்றும் தொடர்கிறது. அந்தக் கூப்பாடு மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அந்தக் கூப்பாட்டிற்கு எதிர்ப்பும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

ஒரு நாட்டின் குடிமகனை திரும்பிப் போ என்று சொன்னால் அது அவனுடைய உரிமைக்குச் சவால் விடுவது போலாகும். அந்தச் சவால் நாட்டில் நிலவி வரும் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் போன்றவற்றைச் சீரழிக்கும் தன்மை கொண்டவை. இதைத் தான் மலேசியத் தமிழர்களின் சார்பில் நானும் முன்வைக்கிறேன்.

மலேசியத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளில் கை வைப்பது தவறு. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

மகாதீரின் மகள் மரினா மகாதீர். அவர் ஒரு முறை சொன்னார். அவர் சொன்னதை இங்கு பதிவு செய்கிறேன். ’நாம் எங்கே பிறந்தோம் என்ற கேள்விக்கு இன்றைய உலகில் இடம் இல்லை. அதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அமைந்து இருக்கிறது.’ சரி.

2014-ஆம் ஆண்டு கெராக்கான் மாநாட்டில் அந்தக் கட்சியின் ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் என்பவர் கூறியதையும் பதிவு செய்கிறேன்.

இந்த நாட்டில் ஓராங் அஸ்லி, சபா மக்கள்; சரவாக் மக்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் வந்தேறிகள்தான். மற்ற அனைவரும் வந்தேறிகள் தான்”

“சீனர்களை வந்தேறிகள் என்று அடிக்கடி கூறுபவர்கள்கூட வந்தேறிகள் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை” என்று டான் கூறினார்.

பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் பேச மாட்டார்கள். எதைப் பேசக் கூடாதோ அதைத்தான் பேசுவார்கள். எப்படி பேசினால் எதைப் பேசினால் மற்றவர்கள் காயப் படுவார்கள் என்று நினைக்கிறார்களோ அதைத் தான் பேசுவார்கள். அத்தனையும் அர்த்தம் இல்லாத பேச்சுகள்.

இதில் ஊரை விட்டு ஊர் ஓடி வந்த ஒருவர்.. அந்த மனுசனாலும் சும்மா இருக்க முடியவில்லை. காலா காலமாக இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தியர்களையும் சீனர்களையும் சீண்டிப் பார்க்கிறார். அதில் அவருக்குப் பெரிய சந்தோஷம்.

தமிழகத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கஜா புயல் ருத்ர தாண்டவம் ஆடியது. அப்படியே சன்னமாய் அடங்கிப் போனது. ஆனால் இங்கே அதே மாதிரியான புயல்காற்று அடிக்கடி விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது. அப்படியே மலேசிய இந்தியர்களையும் வாட்டி வதைத்து விட்டுப் போகிறது.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பார்கள். அந்த மாதிரி தான் சில நாடுகளில் குறுக்குப் புத்திக் குதிரைகள் குறுக்கு வழியில் விளம்பரம் தேடிக் கொண்டு ஓடுகின்றன.

எல்லாவற்றிலும் அவர்களே ஒசத்தி; எல்லாமே அவர்களுக்குச் சொந்தம். இது நெருப்புக் கோழியின் மயக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்த மயக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். அந்த வகையில் வரலாறு என்கிற மாத்திரையை அடிக்கடி கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்ல. என்னுடைய கடப்பாடு.

ஆச்சு பூச்சு பேச்சுக்கு எல்லாம் வந்தேண்டா பால்காரன் என்று சொல்லி வந்தேறிகள் வந்தேறிகள் என்கிறார்கள். அந்தச் சொல்லை நாம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விடலாம். ஆனால் அந்தச் சொல் தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தப் படுவதால் அதற்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சில பல நூறாண்டுகளாக வாழ்ந்து கரைந்து போனவர்கள் மலாயா தமிழர்கள். அவர்களைப் பார்த்து ’நீங்கள் வந்தேறிகள்... திரும்பிப் போங்கள்’ என்றால் அதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் அப்படிச் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா?

யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது. மலேசிய தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லும் போது வேதனை வரவில்லை. சிரிப்பு தான் வருகிறது.

மலாயாவில் கூலிக்கு மாராடிக்க வாங்கோ என்றுதான் அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் மலாயா தமிழர்கள் அவர்களின் ஒப்பற்ற உழைப்பையும், அப்பழுக்கற்ற உதிரத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்பு செய்து இருக்கிறார்கள்.

அன்றைய மலாயா இன்று மலேசியாவாக இந்த அளவிற்கு மலர்ச்சியுடன் மிளிர்ந்து நிற்பதற்கு காரணம் யார். மலாயா தமிழர்கள்.

இன்று இந்த நாட்டில் திரும்புகிற இடங்களில் எல்லாம் நிரம்பி வழியும் வங்களாதேசிகள் அல்ல. இந்தோனேசியர்கள் அல்ல. மியான்மார் வாசிகள் அல்ல. நேபாளிகள் அல்ல.

சாட்சாத் இன்னமும் எல்லா நியாயமான உரிமைகளையும் விட்டுக் கொடுத்து... விட்டுக் கொடுத்து... ஏமாந்து போய் நிற்கும் மலாயா தமிழர்களே. அவர்களின் வரலாற்றில் கண்ணீரும், காயங்களும் தான் மிஞ்சிப் போய் நிற்கின்றன அவைதான் மலாயா தமிழர்களுக்குக் கிடைத்த தியாகத்தின் திருவோடுகள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(17.02.2021)

சான்றுகள்:

1. வந்தேறிகள்: வரலாறு என்ன சொல்கிறது? - https://malaysiaindru.my/115047

2. China and Malaysia pledged to increase bilateral trade to US$160 billion by 2017 - https://en.wikipedia.org/wiki/Debt-trap_diplomacy#Malaysia

3. Is Malaysia the cradle of civilisation? - https://www.freemalaysiatoday.com/category/opinion/2020/09/17/is-malaysia-the-cradle-of-civilisation/

4. The Malays were once probably a people of coastal Borneo who expanded into Sumatra and the Malay Peninsula as a result of their trading and seafaring way of life. This expansion occurred only in the last 1,500 years https://www.britannica.com/topic/Malay-people