18 டிசம்பர் 2021

கட்டடம் - கட்டிடம் - எது சரி?

பலருக்கும் இந்தக் குழப்பம். கட்டிடம் என்று சிலர் எழுதுகிறார்கள். கட்டடம் என்று சிலர் எழுதுகிறார்கள். இரண்டில் எது சரி?


இந்தச் சொற்களின் கட்டுமானங்களைப் பார்க்க வேண்டும். முதலில் *கட்டிடம்* என்ற சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *இடம்* = *கட்டிடம்*

கட்டு இடம் என்பது ஒரு கட்டளைப் பொருள். வினைத் தொகை கொண்ட பொருளைத் தருகிறது. கட்டுவதற்கு உரிய இடத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

கட்டு இடம் என்பது கட்டிய இடம்; அல்லது கட்டுகின்ற இடம்; அல்லது கட்டும் இடம். இங்கே இறந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருகின்றன. ஆகவே *கட்டிடம்* என்பது ஒரு வினைத் தொகையாய் நிற்கிறது.

கட்டிய இடம் என்பதன் மூலம் 'கட்டுமானம் எழுப்பப் படுவதற்குக் காரணமாக உள்ள இடம்' என்று பொருள் படுகிறது.

ஒரு கட்டுமானம் தோன்றுவதற்கு உரிய ஓர் இடத்தை அல்லது ஒரு வீட்டை அல்லது ஒரு மனையை கட்டு இடம் = *கட்டிடம்* என்று அந்தச் சொல் குறிக்கின்றது.

ஆக, இது கட்டிய இடத்தில் எழுந்து நிற்கும் ஒரு கட்டுமான அமைப்பைக் குறிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.

அடுத்து *கட்டடம்* எனும் சொல்லைப் பார்ப்போம்.

*கட்டு* + *அடம்* = *கட்டடம்*

இந்த இடத்தில் *அடம்* என்பது தொழில் பெயர் விகுதிகளில் ஒன்றாகும். கட்டளைப் பொருள் தரும் வினை வேர்ச் சொல்லுடன் ஈற்றில் (இறுதியில்) ஒரு விகுதி சேர்ந்தால் தொழில் பெயர் உருவாகிறது.

இதைத்தான் விகுதி பெற்ற தொழில் பெயர் என்கிறோம். ஆக *அடம்* என்பது ஒரு தொழில் பெயரின் விகுதி.

*கட்டடம்* என்பது கட்டும் செயலால் விளையும் பொருளைக் குறிக்கிறது. ஆக, கட்டடம் என்பதே கட்டுமானத்திற்கு மிகப் பொருத்தமான சொல் என்பது தெளிவாகிறது.

எடுத்துக்காட்டாக *ஒற்றடம்*. இதைப் பிரித்துப் பாருங்கள். ஒற்று + அடம் = *ஒற்றடம்*.  

ஆகவே, *கட்டடம்* என்பது கட்டுமானத்தைக் குறிப்பது.

*கட்டிடம்* என்பது கட்டுமானத்திற்கான இடத்தைக் குறிப்பது.

இலக்கணப்படி *கட்டடம்* என்பதே சரி.

பள்ளிக்கூடக் கட்டடம்; மருத்துவமனைக் கட்டடம்; ஈப்போவில் உள்ள கட்டடம் என்று எழுதுவதே சரி. மாடி மாடியாக நிற்கிறதே அதுதான் கட்டடம். சும்மா வெறும் தரையாகக் கிடக்கும் இடம் கட்டிடம். அதாவது ஒரு கட்டடம் கட்டப் படுவதற்காக உள்ள இடம். அல்லது ஒரு கட்டடம் கட்டப்பட்டு இருக்கும் இடம்.

*கட்டடம்* என்பதே சரி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.12.2021





 

12 டிசம்பர் 2021

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி (2021)

சிலாங்கூரில் உள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி ரி.ம. 5 மில்லியன் வழங்கப்பட்டு உள்ளது. உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தம் ரி.ம. 505,000.00 வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள பெரும்பான்மையான தமிழ்ப்பள்ளிகளுக்கு கணிசமான நிதியுதவியை சிலாங்கூர் மாநில அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

2008-ஆம் ஆண்டுக்கு முன்னர் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி கேட்டு; சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, மத்திய அரசு என்று கெஞ்சி கையேந்தி பிச்சை எடுத்த காலமாக இருந்தது. வேதனையான காலம்.

ஆனால் 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்திக்கு பின்னர் தான் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு விடிவு காலம் ஏற்பட்டது.

ஆம். முதலில் சிலாங்கூரில் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கும் விடிவு காலம் பிறந்தது.

பல ஆண்டுகளாக நிதியிதவி இல்லாமல் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்திக்கு விடிவு காலம் பிறந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 285,000.00 கொடுத்தது.

2010-ஆம் ஆண்டில் எப்பிங்காம் தமிழ்ப் பள்ளியின் யு.பி.எஸ்.ஆர். தேர்ச்சி  விகிதம் 28%. ஆனால் 2012-ஆம் ஆண்டில் 55%-ஆக உயர்வு கண்டது.

மேலும் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு 2012ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 85,000.00 நிதியுதவி செய்தது. இந்த நிதியைக் கொண்டு தான் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளியின் கணினி வகுப்பறையில் 40 கணினிகள் பொருத்தப் பட்டன. மேலும் இந்த கணினி வகுப்பறை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் தொடர்ந்து முறையாக வழி நடத்தப் படுகிறது.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் பொது வசதி முன்னேற்றத்திலும் கல்வி முன்னேற்றத்திலும்  சிலாங்கூர் மாநில அரசின் தொண்டு அளப்பரியது.

இந்தச் சேவையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியும் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் அவர்களும் தொடர்ந்து செய்ய வேண்டும்.


04 டிசம்பர் 2021

சிலாங்கூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; சிலாங்கூர் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 97 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 26,506 மாணவர்கள் கல்வி பயின்றனர். 2,155 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

கிள்ளான் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) 14 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7,487 மாணவர்கள் பயில்கிறார்கள். 491 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.







10 அக்டோபர் 2021

பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்ட 73 இந்திய விடுதலை தியாகிகள்

பினாங்கு நாட்டிற்கு 73 இந்திய விடுதலை போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் நாடு கடத்தி உள்ளார்கள்.

புரட்சி அணித் தலைவர்கள் 73 பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை (தீவாந்தர சிட்சை) வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1802-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றப் பட்டு பினாங்கைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு அனுப்பப் பட்டனர்.


இருவர் இருவராகச் சேர்த்துக் கைவிலங்கிடப்பட்டு இருந்த இவர்கள் எழுபத்தாறு நாள்கள் நீடித்த இந்தக் கடல் பயணத்த்தின் போது அடைந்த துயர் அவலமானது.

இவர்களுள் ஒருவர் வழியிலேயே கடலில் விழுந்து இறந்தார். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பினாங்கைச் சென்று அடைந்த பின்னர் தண்டனைக் காலம் ஐந்து மாதங்கள் கழிவதற்குள் 24 பேர் இறந்து போயினர்.

போராட்ட தியாகிகளின் பெயர்கள்.

1) வேங்கன் பெரிய உடையத்தேவர் - (சிவகங்கை மாமன்னர்)

2) துரைசாமி (மன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன்)

3) சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் - வாராப்பூர்

4) ஜெகநாத ஐயன் - இராமநாதபுரம்

5) பாண்டியப்ப தேவன் - கருமாத்தூர்

6) சடையமான் - கருமாத்தூர்

7) கோசிசாமி தேவர் - கருமாத்தூர்

8 தளவாய் மாடசாமி நாயக்கர் - பாஞ்சாலங்குறிச்சி

9) குமாரத்தேவன் - முள்ளூர்

10) பாண்டியன் - பதியான்புத்தூர்

11) முத்துவீர மணியக்காரர் - ஆணைக்கொல்லம்

12) சாமி - மணக்காடு

13) ராமசாமி

14) எட்டப்ப தேவர் - நான்குநேரி

15) பாண்டிய நாயக்கர் - கோம்பை

16) மண்டைத் தேவர்

17) மலையேழ்மந்தன்

18) வீரபாண்டிய தேவர்

19) கருப்ப தேவர்

20) சுப்ரமணியம்

21) மாடசாமி

22) பெருமாள்

23) உடையத்தேவர் (த/பெ : சின்னப்பிச்சை தேவர்)

24) தேவி நாயக்கர்

25) முத்துக்கருப்ப தேவர்

26) மண்டந்தேவர் (த/பெ : சங்கரநாராயண தேவர்)

27) பேயன் (த/பெ : பால உடையாத் தேவர்)

28) அழகிய நம்பி

29) ஒய்யக்கொண்ட தேவர்

30) சிவனுத்தேவர்

31) காணி ஆழ்வார்

32) மூப்பு உடையான்

33) கொண்டவன்

34) வீரபத்திரன் - நான்குநேரி

35) சிலம்பன் - நான்குநேரி

36) பேயன் - நான்குநேரி

37) ராமசாமி - நான்குநேரி

38) இருளப்பன் - நான்குநேரி

39) மாடசாமி - நான்குநேரி

40) வீரபாண்டியன்

41) வெங்கட்டராயன் - நான்குநேரி

42) உடையார்

43) முத்துராக்கு - நான்குநேரி

44) முத்துராக்கு - ஆனைக்கொல்லம்

45) சொக்கதலைவர் - நான்குநேரி
 
46) இருளப்ப தேவர் - நான்குநேரி

47) மல்லையா நாயக்கர் - இளவம்பட்டி

48) சுப்பிரமணி நாயக்கர் - கண்டநாயக்கன் பட்டி

49) மல்லைய நாயக்கன் - இலாம்பட்டி

50) சல்வமோனிய நாயக் - கட்ட நாயக்கன்பட்டி

51) தோமச்சி நாயக்

52) சுளுவமோனியா நாயக் - ஆடினூர்

53) இராமசாமி - குளத்தூர் பாலிகர் பேரன்

54) பிச்சாண்டி நாயக் - எருவுபோபரம்

55) தளவாய் கல்லுமடம்

56) சின்ன மாடன் - பசுவந்தனை

57) வைடியம் மூர்த்தி - கந்தீஸ்வரம்

58) தளவாய் பிள்ளை (தேசகாவல் மணிகர்)

59) சுளுவமணியம்

60) பெடன்ன நாயக் (சுளுவமணியம் மகன்) - தூத்துக்குடி போராட்ட தளபதி

61) கிருஷ்ணமா நாயக்

62) வாயுளன் - குளத்தூர்

63) மிளனன் - அறச்சேரி

64) வைல முத்து - கங்கராயகுறிச்சி

65) ராமன் - சுவளி

66) பாலையா நாயக் - நாஞ்சி நாட்டு சூரன்குடி

67) குமரன்

68) வெள்ளிய கொண்டான் வெள்ளியன்

69) இராமன்

70) அல்லேக சொக்கு

71) சேக் உசேன்

72) அப்பாவு நாயக்

73) குப்பன்னா பிள்ளை

தனது தாய் மண்ணைவிட்டு அண்டை நாட்டிற்க்கு நாடு கடத்துவது என்பது மரணத்தைக் காட்டிலும் மிகவும் வேதனையானது.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்க்கை இழந்த சீர்மிகு சின்ன மறவர் நாட்டின் (மாமன்னன் வேங்கன் பெரிய உடையாத் தேவர்) மற்றும் மன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 தியாகிகளையும் இந்த நாடும் நாட்டு மக்களும் மறந்து விட்டனர்.

ஆனால் என்றாவது ஒரு நாள் அவர்களது தியாகத்தை நாடு அறியும்!(மலேசியம்)



 

07 அக்டோபர் 2021

பத்து ஆராங் தமிழர்கள் வரலாறு

தமிழ் மலர் - 01.10.2021

மலாயா தமிழர்கள் ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் கொரோனாவின் தாக்கம். இன்னொரு பக்கம் இனவாத்தின் தாக்கம். மற்றொரு பக்கம் மதவாதத்தின் தாக்கம். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் பேராண்மையின் பெரும் தாக்கம்.


போகிற போக்கைப் பார்த்தால் இங்கு வாழும் தமிழர்கள் வேண்டாம். ஆனால் அவர்கள் வியர்வை சிந்த வேண்டும். உழைக்கும் உழைப்பு மட்டும் வேண்டும். அவர்களின் உழைப்பில் இருந்து வருமான வரி வேண்டும். அவர்கள் வாங்கும் பொருட்களுக்குச் சேவை வரி வேண்டும்.

ஓர் இனம் மட்டும் கால் மீது கால் போட்டுக் கொண்டு சொகுசாய் வாழ வேண்டும். மற்ற இனங்கள் எல்லாம் மாடாய் உழைக்க வேண்டும். என்னங்க இது? ஒட்டி வாழலாம். தப்பு இல்லை. ஒண்டி வாழலாம். தப்பு இல்லை. ஆனால் ஒட்டுண்ணிகளாய் மட்டும் வாழவே கூடாது. மனிதத் தன்மைக்கு அர்த்தமே இல்லை.

சிறுபான்மை இனத்தவர் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொடுக்கும் பணம் மட்டும் வேண்டும். ஆனால் சம்பாதித்துக் கொடுக்கும் அவர்கள் மட்டும் வேண்டாம். ஒரு ஒட்டுக்கடை போட முடியவில்லை. ஒரு தள்ளுவண்டி வியாபாரம் செய்ய முடியவில்லை. ஒரு டாக்சி ஓட்ட முடியவில்லை. ஒரு கடன் வாங்கி ஒரு வியாபாரம் செய்ய முடியவில்லை. எல்லாமே மைந்தர்களுக்கு மட்டுமே. கப் சிப்.

இதில் கடாரத்துப் பக்கம் ஒரு சார்லி சாப்ளின். இருக்கிறதை எல்லாம் இடித்துத் தள்ளும் அதிசயப் பிறவி. ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. 2021-இல் கெடா பட்ஜெட் 90 கோடி. இதில் இந்தியர்களுக்கு இரண்டு இலட்சம். எதற்கு? நாக்கு வழிக்கவா? அந்த இரண்டு இலட்சத்தில் தமிழர்களுக்கு ஒரு அஞ்சு காசாவது வந்து சேருமா. இல்லை வரும் வழியிலேயே எல்லாம் கமிசன் போட்டு அபேஸ் பண்ணி விடுவார்களா?

ஒரு வார்த்தையில் முடிக்கிறேன். படுக்கையைத் தட்டிப் போட மட்டும் பொம்பள வேண்டும். மற்ற எதற்கும் அவள் வேண்டாம். மனசாட்சி மரணித்து விட்டது. நாடு இந்த நிலையில் போய்க் கொண்டு இருக்கிறது.

தமிழர்கள் என்பவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள் எனும் அடையாளம் இல்லாமல்கூட போகலாம். சொல்ல முடியாது. அதற்காக நல்லபடியாகவே காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

அதற்கு முன்னர் மலாயா தமிழர்களின் வரலாற்றை ஆவணப் படுத்த வேண்டும். பாட நூல்களில் ஒன்று நடக்காது. பரமேஸ்வரா காலத்தில் இருந்துதான் மலாயா வரலாறே தொடங்குகிறது.


கடாரத்து வரலாறு; செலின்சிங் வரலாறு; கங்கா நகரத்து வரலாறு; தாம்பிரலிங்கா வரலாறு; தக்கோள வரலாறு; புருவாஸ் வரலாறு; கோத்தா கெலாங்கி வரலாறு; பான் பான் வரலாறு; இலங்காசுகம் வரலாறு; இன்னும் பல வரலாறுகள் எல்லாம் பரமேஸ்வரா காலத்திற்கு முந்திய வரலாறுகள்.

அந்தப் பழைய வரலாறுகள் எல்லாம் பாடநூல்களில் இல்லை. கரைந்து காணாமல் போய்விட்டன. இருந்தாலும் இணையம் வழியாக வெளி உலகத்திற்குத் தெரிய வருகின்றன. உலக மக்கள் வரலாற்று உண்மைகளை உணர்ந்து வருகின்றனர்.

எது எப்படியோ ஒரு சாரார் காலம் காலமாகக் கொட்டாங் கச்சிக்குள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். ஒரு சாரார் கொட்டாங் கச்சிக்கு வெளியே அறிவார்ந்த நிலையில் வாழ்கிறார்கள். பூனைக் கணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகாது என்பது உலக நியதி.

அந்த வகையில் வரலாற்றில் சில காலச்சுவடுகளை மீண்டும் மீண்டும் அசை போட வேண்டிய நிலைமை. அதாவது காலத்தின் கோலம் அல்ல. காலத்தின் கட்டாயம்.

இன்றைக்கு பத்து ஆராங் தமிழர்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரை. இந்தக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் 21.03.2017-இல் முதன்முதலாக பிரசுரிக்கப்பட்டது. பின்னர் 05.01.2021 வெளியானது. மீண்டும் பதிவு செய்கிறேன்.


மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் பத்து ஆராங் நகரில் தொட்ட இடம் எல்லாம் வரலாற்று மர்மங்கள். தடுக்கி விழுந்தாலும் தாரை தாரையான மர்மங்கள். மலேசியாவில் பிறந்து வளர்ந்த பலருக்கும் தெரியாத பயங்கரமான மாயஜால மர்மங்கள். மயிர் சிலிர்க்க வைக்கும் மர்மங்கள். சங்கர்லால் கதை மாதிரி போகும். அச்சம் வேண்டாம்.

பூமிக்கு அடியில் இராட்சச பாம்புகளின் மர்மங்கள்; கொள்ளிவாய்ப் பிசாசுகளின் மர்மங்கள்; ஜப்பான்காரர்கள் தலைகளை வெட்டிய மர்மங்கள்; சிதைந்து போன நிலக்கரிச் சுரங்கங்களின் மர்மங்கள்; கம்யூனிஸ்டுக்காரர்களின் கத்திக்குத்து மர்மங்கள். கர்மவீரர் காமராசரையே சினமூட்டிய மர்மங்கள்; மலைக்க வைக்கும் மார்க்சிய மர்மங்கள். இப்படி எக்கச் சக்கமான மர்மங்கள்.

பத்து ஆராங் நகரத்தின் பெயரும் பத்து. பத்துமலையின் பெயரும் பத்து. இரண்டு பத்துக்களும் பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் சொத்து பத்து(க்)கள் தான். இரண்டுமே அடேக் ஆபாங் சொந்த பந்தங்கள் தான்.

பத்து ஆராங்கை இப்படியும் உவமானம் சொல்லலாம். பத்து ஆராங் ஓர் அமைதியின் ஊற்று. இளநீர் கலந்த இளந்தேங்காயின் வழுக்கல். ஆனால் புரட்சிகரமான உணர்வுகளின் கொப்பரை. அன்றைய மலாயாவில் மார்க்ஸ் – லெனின் சித்தாந்தங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்த முதல் மலாயா கிராமப்புற நகரம்.

அந்தச் சித்தாந்தங்களுக்கு முன்னோடிகளாக விளங்கியவர்கள் மலாயா தமிழர்கள். அதில் பத்து ஆராங்  தமிழர்கள் மறக்க முடியாத சித்தாந்தவாதிகள்.

இந்தப் பத்து ஆராங் நகரம் தான் மலேசியாவிலேயே முதன்முதலாக ஒரு சோவியத் கம்யூனிச நகரமாக அறிவிக்கப் பட்டது. ஓர் அதிசயமான செய்தி. இல்லீங்களா. இந்த விசயம் பலருக்குத் தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

(http://kiankheong.blogspot.my/2012/08/the-intriguing-history-of-batu-arang.html - Malaya's first Soviet government on March 27, 1937. This was a declaration of independence even before the formation of the Federation of Malaya in 1957.)

சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மலேசியா என்பது மலாயாவாக இருந்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி. தொடர்ந்து படியுங்கள்.

1930-களில் பத்து ஆராங் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏறக்குறைய 6000 - 7000 பேர் வேலை செய்து வந்தார்கள். மண்ணுக்கு அடியில் 330 மீட்டர்கள் ஆழத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தன. அந்த இருண்ட சுரங்கங்களில் உயிரைப் பிடித்துக் கொண்டு வேலை செய்தார்கள்.

பத்து ஆராங் நகரத்திற்கு அடியில் நூற்றுக் கணக்கான பாழடைந்த சுரங்கங்கள் இன்னும் இருக்கின்றன. அதாவது ஆயிரம் அடி ஆழத்தில். அதனால் தான் இந்த நகரில் மூன்று மாடிகளுக்கு மேல் எந்தக் கட்டடமும் இருக்காது. கட்டவும் முடியாது. கட்டுவதற்கு அனுமதி வழங்கப் படுவதும் இல்லை.

பத்து ஆராங்கில் பாதுகாப்பான சில இடங்களில் மட்டும் நான்கு மாடிக் கட்டடங்களைப் பார்க்கலாம். ஐந்து மாடிகளைப் பார்க்கவே முடியாது. அதாவது சுரங்கம் விளையாடிய இடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடு. மற்ற இடங்களில் பிரச்சினை இல்லை.

முதன்முறையாக 1973-ஆம் ஆண்டு பத்து ஆராங் போய் இருக்கிறேன். அங்கே ஆசிரியர் தோழர் இருந்தார். அவரை கராத்தே முனியாண்டி என்று அழைப்பார்கள். பத்து ஆராங்கைச் சுற்றிக் காட்டினார். ஏன் உயரமான கட்டடங்கள் இல்லை என்று கேட்டேன்.

அதற்கு அவர் ‘தமிழர்கள் சிந்திய இரத்த ஆறு இந்த நகரத்திற்கு அடியில் ஓடுகிறது. அதற்கு பயந்து கொண்டு பெரிய கட்டடங்களைக் கட்டுவது இல்லை’ என்று சொன்னார். அவர் வேறு அர்த்தத்தில் சொன்னது அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது. சரி.

உயரமான கட்டடங்களுக்கு அடித்தளம் போட்டால் அஸ்திவாரத் தூண்கள் சுரங்கத்திற்குள் அப்படியே இறங்கிவிடும். கட்டடங்கள் இடிந்து விழுந்து விடும். அதனால் ஐந்து மாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவது இல்லை.

இப்போது பத்து ஆராங்கில் உள்ள அந்தப் பழைய நிலக்கரிச் சுரங்கங்கள் எல்லாம் பாழடைந்து போய்க் கிடக்கின்றன. யாரும் துணிந்து இறங்கிப் போய்ப் பார்ப்பதும் இல்லை. ஜப்பானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பல நூறு பேர் இந்தச் சுரங்கங்களில் சிரச் சேதம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டு அவசரகாலத்தில் பல நூறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். யூடியூப்பில் இதைப் பற்றி ஒரு காணொளி உள்ளது. போய்ப் பாருங்கள். அதன் முகவரி:

https://www.youtube.com/watch?v=vrbyiZ1iwsQ

இந்தக் கரும் சுரங்கங்களில் பெரிய பெரிய மலைப்பாம்புகள் இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆவிகள் உலாவுவதாகவும் வேறு சொல்கிறார்கள். அங்கு உள்ளவர்கள் தான் சொல்கிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. யாருங்க இறங்குவது. ஆவி பிசாசு என்று ஆரம்பத்திலேயே மிரட்டி வைத்து விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் இரண்டு வெள்ளைக்காரர்கள் சுரங்கத்திற்குள் இறங்கிப் பார்க்கப் போய் இருக்கிறார்கள். போனவர்கள் போனவர்கள்தான். திரும்பி வரவே இல்லையாம். என்னாச்சு ஏதாச்சு ஒன்னுமே புரியவில்லை. பத்து ஆராங் மக்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். நானும் கேட்டு இருக்கிறேன்.

அப்போது அந்தக் காலத்தில் சுரங்கங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப் படவில்லை. கரணம் தப்பினால் மரணம். இறங்கினால் இறப்பு. ஏறினால் உயிர் என்று சொல்வார்களே அந்த மாதிரிதான்.

ஆழமான அந்தச் சுரங்கத்தில் இருந்து வெளியே உயிரோடு வந்தால் தான் ஒருவனுடைய அவனுக்கு உயிர். வெளியே வரவில்லையா தெரிந்து கொள்ளுங்கள். வருவது கறுத்து வறுத்துப் போன பிணமாகத்தான் இருக்கும். பத்து ஆராங் மக்கள் அந்த மாதிரி நிறையவே பார்த்து இருக்கிறார்கள்.

நமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி பத்து ஆராங் நிலக்கரி சுரங்கங்களில் தொழிலாளர்கள் பலர் இறந்து போய் இருக்கிறார்கள். பத்து ஆராங் நிலக்கரி சுரங்கங்களின் வரலாறு 47 ஆண்டுகள். 112 பேர் இறந்து போய் இருக்கிறார்கள்.

இதுவும் உறுதியான தகவல் இல்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் மறைத்து விட்டார்கள். கூடுதலாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமரர் ஜீவி. காத்தையா அவர்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். ஏறக்குறைய 1000 பேருக்கு மேல் இறந்து இருக்கலாம் என்று சொன்னார்.

(http://blog.malaysia-asia.my/2012/11/batu-arang-in-selangor.html)

ஓர் இடைச் செருகல். மலாக்காவை உருவாக்கியவர் பரமேஸ்வரன். அவர் சுமத்திராவில் பிறந்தவர். இந்த விசயம் உங்களுக்குத் தெரியும். எனக்கும் தெரியும். ஏன் இந்த உலகத்திற்கே தெரியும். ஆனால் அதற்கு ஒரு மாற்றுக் கருத்து இப்படி நிலவுகிறது.

ஐரோப்பாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மகா அலெக்ஸாண்டர் என்பவர் இருந்தார். அவருடைய கொள்ளுப் பேரன்தான் இந்தப் பரமேஸ்வரன் என்று சில வரலாற்று வித்துவான்கள் சொல்கிறார்கள். எங்கே இருந்து ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.

(https://www.geni.com/people/Maharaja-Parameswara-Raja-Iskandar-Shah-t21/6000000010134622102 - The historical Malay literary work, Sejarah Melayu states that Parameswara was a descendant of Alexander the Great.)

பரமேஸ்வரன் என்பவர் பாரசீகத்தில் கப்பலேறி வந்து லங்காவித் தீவில் குடியேறினாராம். கேட்க நல்லா தான் இருக்கிறது. பாடப் புத்தகங்களில் எழுதியும் இருக்கிறார்கள். எங்கே நடக்கிறது என்று மட்டும் தயவு செய்து கேட்க வேண்டாம். உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லைங்க.

பரமேஸ்வரா பாரசீகத்தில் இருந்து கப்பலேறி வந்தார் என்று சொல்லிச் சொல்லியே சிலர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். பெரிய அக்கப்போர். எப்படிங்க. என்னங்க செய்வது. அதைக் கேட்டு எனக்கும் ரொம்ப நாளாக நெஞ்சுவலி.

எது எப்படியோ இறந்து போன பரமேஸ்வரனைத் தட்டி எழுப்பி கட்டப் பஞ்சாயத்து வைக்காமல் இருந்தால் சரி. அப்படியே நாலு நம்பர் கேட்காமல் இருந்தால் சரி. விட்டால் நம்ப மக்களில் சிலர் அவரையும் விட்டு வைக்க மாட்டார்கள். விடுங்கள். நம்ப கதைக்கு வருவோம்.

பரமேஸ்வரன் கதை மாதிரிதான் பத்து ஆராங்கிலும் நடந்தது. வெளியூர்களில் இருந்து வந்த தமிழர்கள் பலர் நிலச் சுரங்கங்களில் இறந்து போய் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் கணக்கு காட்டவில்லை.

அதனால் கணக்கும் தெரியவில்லை. சுரங்கத்திற்குள் இறந்து போன பத்து ஆராங் தமிழர்களைப் பற்றிய தகவல்கள் காலத்தால் மறைக்கப்பட்டு விட்டன. பரவாயில்லை. வெள்ளைக்காரர்கள் விசயம் தெரியாதா என்ன? சூரியனே அவர்களைக் கேட்டுத்தான் உதிக்குமாம். அப்புறம் என்னங்க?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.10.2021