23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 3

தமிழ்மலர் - 19.11.2018 - திங்கட்கிழமை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அந்தப் பழமொழியை நினைத்துக் கொண்டு ஜோலோவின் முகத்தைப் பாருங்கள். 




பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா - அவர்
பழக்கத்திலே குழந்தையைப் போலொரு அம்மாஞ்சி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா


வியட்நாம் வீடு திரைப்பாடல் நினைவிற்கு வந்து இருக்க வேண்டுமே.

பச்சைச் சிசுவின் பிஞ்சுத் தனம். பால் வடியும் வெகுளித் தனம். பிள்ளைப் பூச்சியின் அப்பாவித் தனம். மறுபடியும் நன்றாக உற்றுப் பாருங்கள். எதுவும் தெரிகிறதா. எனக்குத் தெரிகிறது.

ஏமாற்றுத் தனத்தின் ஏழாயிரம் சாரங்கள். ஏமாந்தவர்களை ஏப்பம் விட்ட நவரசங்கள். முக்காடு போட்ட முகாரிகளின் ராகங்கள். உப்பிப் போன கன்னங்களில் எல்லாமே கொத்து கொத்தாய்ப் பூத்துக் குலுங்குகின்றன. மன்னிக்கவும். மலேசிய மக்களைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்ட ஒரு மனிதத்திற்கு மதிப்புக் கொடுக்க மனசு வரவில்லை. 




மலேசிய மக்களின் பணத்தைக் கோடிக் கோடியாய்க் கொள்ளை அடித்ததாகக் குற்றச்சாட்டுகள். நிரபராதி என்று நிரூபித்துக் காட்டட்டும். பின்னர் பார்ப்போம். அதுவரையிலும் வசைப் பாடல்கள் வஞ்சகம் இல்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும். அப்புறம் என்னங்க.

மலேசிய மக்கள் நித்தம் நித்தம் வியர்வையில் நசிந்து நலிந்து; விலைவாசி ஏற்றத்தில் துண்டு துண்டாய்ச் சிதறிச் சிதைந்து; அன்றாட வேதனைகளில் அல்லல்பட்டு சம்பாதித்த பணச் சுவடிகள். சும்மா விட முடியுமா.

கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற நினைப்பு தான் ஒருவரின் மனத்தை மாசுபடுத்தி விடுகிறது. அந்த வகையில் ஒரு சொட்டு குற்ற உணர்வும் இல்லாமல் மலேசிய மக்களின் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது. 




மனசாட்சி இல்லாமல் எப்படித் தான் பயணித்தார்கள். ஒருநாள் பிடிபடுவோம் என்கிற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் எப்படித் தான் நகர்ந்தார்கள்; எப்படித் தான் வாழ்ந்தார்கள். அது தான் பெரிய அதிசயமாக இருக்கிறது.

இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்கிறோமே; வெளியே தெரிய வருமே என்கிற குற்ற உணர்வு ஒரு துளியும் இல்லாமல் எப்படித் தான் சந்தோஷமாக இருந்தார்கள். வேடிக்கை அல்ல. வேதனையாக இருக்கிறது.

அவர்களுக்குப் அச்சம் இல்லாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற அந்த நினைப்புத் தான். அந்த வகையில் 1 எம்.டி,பி. பணம் கோடிக் கோடியாய் வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது. 




அவர்களுக்குப் பயம் இல்லாமல் போனதற்கு இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. 2018 பொதுத் தேர்தலில் எப்படியும் நஜீப் வெற்றி பெற்று விடுவார்; தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுவார் எனும் நம்பிக்கை.

அதனால் தான் அந்த அளவிற்கு அவர்கள் துணிந்து மக்களின் பணத்தை விளையாடி இருக்கிறார்கள். இப்போதைய நிலையைப் பாருங்கள். முன்னாள் பிரதமர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்.

What is baffling is how individuals involved in the 1MDB saga spent money without a tinge of fear of being caught or the entire scandal blowing up in their faces. They just thought that the people of Malaysia would continue to vote in the Barisan Nasional government and it would be business as usual.

Source: https://www.thestar.com.my/business/business-news/2018/09/15/money-is-cheap-when-its-not-yours/
(ஸ்டார் 15.09.2018 நாளிதழில் வெளியான செய்தி)




சரி. நம்ப 1எம்.டி.பி. கதைக்கு வருவோம். பாரிஸ் ஹில்டன் என்பவரைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

பாரிஸ் ஹில்டன்Paris Whitney Hilton

அமெரிக்காவில் ஒரு  சமூகப் பிரபலம்; ஊடகப் பிரபலம்; மாடல்; பாடகி; கதாசிரியை; ஆடை அலங்கார வடிவமைப்பாளர்; நடிகை என்று பல கோணங்களில் பல பரிமாணங்களைப் பார்த்தவர். வயது 37.

இவரைத் தான் ஜோலோ முதன்முதலாகத் தூண்டில் போட்டுப் பார்த்தார். எதற்குத் தூண்டில் போட்டார் என்பதை ஜோலோவைத் தான் கேட்க வேண்டும். பாரிஸ் ஹில்டனும் சாதாரணப் பெண் இல்லீங்க. இப்போது உலகம் பூராவும் பிரபலமாக இருக்கிறதே ஹில்டன் ஓட்டல்கள். அந்த ஓட்டல்களை 1940-ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய காண்ட்ராட் ஹில்டனின் பெயர்த்தி தான் இந்தப் பாரிஸ் ஹில்டன். 




அப்படி என்றால் இவருக்கும் தாத்தாவின் நினைப்பும் வனப்பும் கொஞ்சமாவது இருக்குமா இருக்காதா. அந்த மாதிரி நினைப்பு தான் பலருடைய வாழ்க்கையையும் இப்போதும் எப்போதும் கெடுத்துக் கொண்டு போகிறது. விடுங்கள்.

பாரிஸ் ஹில்டன் என்கிற பகட்டு மீன், ஜோலோவின் வலையில் சிக்குகிற மாதிரி சிக்குவது. அப்புறம் சிக்காத மாதிரி சிணுங்கிக் கொண்டே போவது. அது ஒரு ஸ்டைல். அதைச் சரி கட்ட ஜோலோ பல கோடிகளைச் செலவு செய்து இருக்கிறார். லாஸ் வெகாஸ் சூதாட்ட மையங்களுக்கு பாரிஸ் ஹில்டனைப் பல முறை அழைத்துச் சென்று இருக்கிறார். ஒரு முறை பத்து இலட்சம் ரிங்கிட் கொடுத்து சூதாடச் சொல்லி இருக்கிறார் என்றால் பாருங்களேன்.

இருந்தாலும் ஜோலோவின் ஜொல்லுத் தன்மை பலிக்கவில்லை. பாரிஸ் ஹில்டனிடன் கொஞ்சம் கொஞ்சமாய் ஒதுங்கிப் போய் விட்டார். பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணைக் கவர்ந்து கட்டிப் பிடிக்க முடியுமா. கொஞ்சமாவது கலை இருக்க வேண்டாமா என்று பாரிஸ் ஹில்டனே ஒருமுறை சொல்லி இருக்கிறார். 




அந்தக் கலை ஜோலோவிடம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்குப் முக்கியம் இல்லை. அதை ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. நம்ப காசைத் திருடிக் கொண்டு போனது தான் நமக்கு இப்போதைக்கு ரொம்ப முக்கியம். அதுவே நமக்கு இப்போதைக்கு ஒரு பெரிய பிரச்சினை. சரிங்களா.

மிரண்டா கெர்
Miranda Kerr


இவரைப் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகை; விளம்பர அழகி; சூப்பர் மாடல். வயது 35.

இவரையும் ஜோலோ வளைத்துப் போட திட்டம் தீட்டினார். தன்னுடைய இரவு கேளிக்கை விருந்துகளுக்கு அவரை அடிக்கடி அழைத்தார். ஒரு கட்டத்தில் 35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வைர நகைகளை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். 




நடிகை மிரண்டா கெரும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு ஜோலோவை தன் இடுப்பில் செருகிக் கொண்டு பாவ்லா காட்டி வந்தார். ஜோலோ விடவில்லை. மிரண்டா கெரை எப்படியாவது தன் பக்கம் இழுத்துப் போட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த ஒரு பெராரி காரையும் வாங்கி அன்பளிப்புச் செய்தார். அந்தக் காரின் விலை 13 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்.

இந்த மிரண்டா கெரும் சாதாரண பெண் அல்ல. பல கோடீஸ்வரர்களைச் சுற்றலில் விட்டவள். முதலில் ஓர்லாண்டோ புலூம் என்கிற கோடீஸ்வரரைக் காதலித்தாள். கொஞ்ச நாளில் காதல் கசந்து போனது. அப்படியே கழற்றிவிட்டு பெய்பர் எனும் இன்னொரு கோடீஸ்வரருடன் ஊர் சுற்றிக் கொண்டு திரிந்தாள். ஒரு கட்டத்தில் இவளால் இந்த இரண்டு கோடீஸ்வரர்களுக்கும் வாக்குவாதம். குடி போதையில் அடித்துப் பிடித்துக் கொண்டார்கள்.

பார்த்தாள் மிரண்டா கெர். போங்கடா நீங்களாச்சு உங்க பணமாச்சு என்று சொல்லி வேறு ஒரு கோடீஸ்வரை மணந்து கொண்டாள். கொஞ்ச நாளில் அந்தக் கல்யாணமும் கசந்து போனது. விவாகரத்து செய்து கொண்டார்கள். அந்த விவாகரத்திற்கு மூல காரணமாக இருந்தது நம்ப கில்லாடி ஜோலோ தான். 




பின்னர் 1எம்.டி.பி. நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை, மிரண்டா கெர் மீது வழக்கு தொடுத்தது.

மிரண்டு போன மிரண்டா கெர் பழைய காதலன் ஜோலோ அன்பளிப்புச் செய்த எல்லா நகைகளையும் திரும்பவும் அமெரிக்க நீதித் துறையிடமே ஒப்படைத்து விட்டார். 2017-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. இந்தத் தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அடுத்து வருபவர்

கிம் கார்டாசியான்.
Kim Kardashian


அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம்; தொழில் முனைவர்; நயநாகரிகச் சமுதாயவாதி. வயது 38. இவரையும் ஜோலோ வளைத்துப் போட திட்டம் தீட்டி காய்களை நகர்த்தி இருக்கிறார். இவருக்கும் ஒரு பெராரி காரை வாங்கிக் கொடுத்து அழகு பார்த்து இருக்கிறார். அந்தக் காரின் விலையும் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட். 




அந்தக் காரினாலேயே கிம் கார்டாசியானுக்கும் அவருடைய கணவருக்கும் சண்டை. அந்தக் காரை அவருடைய கணவரும் பயன்படுத்தி இருக்கிறார். அந்தக் காரை ஜோலோ தனக்குத் தான் வாங்கிக் கொடுத்தார். நீங்க பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல இருவருக்கும் சண்டை.

அந்தச் சண்டை கடைசியில் விவாகரத்தில் போய் முடிந்து விட்டது. அதன் பின்னர் கிம் கார்டாசியானும் ஜோலோவும் ஊர்சுற்றித் திரிந்தார்கள். அப்புறம் அதுவும் கசந்து போய் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

அடுத்து வருபவர் 

எல்வா சியோ.
Elva Hsiao

இவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்று நினைக்கிறேன். எல்வா சியோ என்பவர் தைவான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி; திரைப்பட நடிகை. வயது 39.

உலக அளவில் இவர் ஒன்றும் மிகப் பிரபலம் இல்லை. இருந்தாலும் இவரையும் ஜோலோ விட்டு வைக்கவில்லை. இவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டு பயங்கரமாகச் செலவு செய்து இருக்கிறார். 




துபாயில் நிச்சயார்த்தம். அட்லாண்டிஸ் கடற்கரைச் சொகுசு மாளிகையில் மாபெரும் கேளிக்கை விருந்து. வான வேடிக்கைகள். ஒரே ஓர் இரவு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் ஜோலோ 55 இலட்சம் ரிங்கிட் செலவு செய்து இருக்கிறார்.

எல்வா சியோவிற்கு விருந்து பிடித்தது. கேளிக்கை பிடித்தது. வான வேடிக்கை பிடித்தது. ஆனால் ஜோலோவை மட்டும் பிடிக்கவில்லை. நீ எனக்கு தம்பி வயதில் இருக்கிறாய். திருமணம் வேண்டாம் என்று சொல்லி கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் கழன்று கொண்டார்.

அப்படிச் சொன்ன அதே அந்த எல்வா சியோ தன்னைவிட 12 வயது குறைவான தைவான் நாட்டு நடிகரை மணந்து கொண்டார். தேனிலவு கொண்டாட பாலித் தீவுக்கு போய் இருக்கிறார்கள். சாப்பாட்டு விசயத்தில் இருவருக்கும் வாய்ச் சண்டையாம். இப்போது இரண்டு பேரும் பேசிக் கொள்வது இல்லையாம். அதுவும் பெரிய கதை. சரி. ஜோலோ கதைக்கு வருவோம்.

இப்படி எல்லாம் ஜோலோ செலவு செய்து இருக்கிறாரே. இது எல்லாம் யாருடைய காசுங்க. நம்ப மலேசிய மக்களுடைய காசுங்க. ஜோலோ இந்த மாதிரி செலவு செய்வதற்கு யாருங்க காரணம். யாருங்க இடம் கொடுத்தது. அதை நினைத்துப் பாருங்கள். வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது.

இது ஜோலோவின் காதல் வாழ்க்கையில் மூன்று நான்கு பிரபலமான பெண்கள் வந்து போன கதை. வெளிச்சத்திற்கு வரமால் இன்னும் நிறைய இருக்கலாம். அவர்களுக்கு ஜோலோ என்கிற ஜொல்லு வாய் எவ்வளவு செலவு செய்தாரோ. யாம் அறியோம் பராபரமே.

1எம்.டி.பி. கணக்கில் ஜோலோ செலவு செய்தது எல்லாம் ஒரு சொட்டுச் செலவு கணக்கு தான். இனிமேல் தான் ஒரு பெரிய கணக்கே வரப் போகிறது. சொல்வதற்கு நான் தயார். கேட்பதற்கு நீங்கள் தயாரா? நாளைய கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7



சான்றுகள்

1. Jho Low allegedly bought white Ferrari for Kim Kardashian - https://www.thestar.com.my/news/nation/2018/09/13/jho-low-allegedly-bought-white-ferrari-for-kim-kardashian/

2. Police hunt missing billionaire playboy who gave Miranda Kerr $9m in diamonds - https://www.news.com.au/finance/business/police-hunt-missing-billionaire-playboy-who-gave-miranda-kerr-9m-in-diamonds/news-story/24430c09e1452f4de4adcae11749a11e

3. 10 things to know about Malaysian businessman Jho Low - https://www.straitstimes.com/asia/10-things-to-know-about-malaysian-businessman-jho-low

4. 1MDB Explained: A Round Up Of The Scandal That Toppled A Government - https://mustsharenews.com/1mdb-scandal-explained/

5. Malaysia Billionaire Jho Low’s RM5.5 Million Failed Marriage Proposal To Elva Hsiao - https://thecoverage.my/news/jho-lows-rm5-5-million-failed-marriage-proposal-to-elva-hsiao/

6. 1MDB: The inside story of the world’s biggest financial scandal - https://www.theguardian.com/world/2016/jul/28/1mdb-inside-story-worlds-biggest-financial-scandal-malaysia

மலேசியா 1MBD மோசடி - 4

தமிழ்மலர் - 20.11.2018 - செவ்வாய்க்கிழமை

அமேசான் அனக்கொண்டா. கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு இனத்திலேயே ஆகப் பெரிய பாம்பு. அமேசான் புலிகள் என்ன; ஆப்பிரிக்கா யானைகள் என்ன. கெட்டி உருண்டை மாதிரி கெட்டியாகப் பிடித்துச் சுருட்டி அவற்றின் மேலேயே பாய் விரித்துப் படுத்து விடும். அப்பேர்ப்பட்டது அனக்கொண்டா பாம்பு. அப்படிப்பட்ட ஓர் அமேசான் அனக்கொண்டா போல 1எம்.டி.பி. ஊழல் பட்டியலிலும் ஒரு சொகுசான அனக்கொண்டா உள்ளது.

இக்குவானிமிட்டி சூப்பர் சொகுசுக் கப்பல் எனும் அனக்கொண்டாவைத் தான் சொல்ல வருகிறேன். அதாவது மலேசிய மக்களின் 100 கோடி ரிங்கிட்டை விழுங்கி ஏப்பம் விட்ட அழகிய அமேசான் அனக்கொண்டா. ஜோலோ என்கிற அம்மாஞ்சி ராஜா ஆசை ஆசையாய் அழகு பார்த்துக் கட்டிய ஆடம்பரக் கப்பல்.

அந்தக் கப்பலை ஒரு கடல் கன்னி என்று சொல்வதைவிட ஒரு கடல் தேவதை என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை அழகு. அத்தனை மிடுக்கு. அத்தனை கம்பீரம். சும்மாவா. ஒரு பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப் பட்டது.

உலகத்திலேயே பெரிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ். தெரியும் தானே. அப்பேர்ப்பட்ட அவரிடமே அந்த மாதிரி சொகுசுக் கப்பல் இல்லையாம். ஒரு கட்டத்தில் அவருடைய மகள் ஜெனிபருக்கு ஒரு ஐபோன் வாங்கிக் கொடுக்கவே இரண்டு முறை யோசித்தாராம். ஆனால் அம்மாஞ்சி ராஜா ஜோலோவுக்கு மக்களின் வரிப் பணத்தில் நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

இக்குவானிமிட்டி சூப்பர் சொகுசுக் கப்பலின் பெயர் இப்போது உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசப் படுகின்ற புகழ்பெற்ற ஒரு பெயராக மாறி வருகின்றது. உலகில் இதுவரை கட்டப்பட்ட சொகுசுக் கப்பல்களில் இக்குவானிமிட்டி தான் ஆகப் பெரியது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓசியானோ நிறுவனம் கட்டிய கப்பல். இக்குவானிமிட்டி கடலில் போனால் மற்ற மற்ற கப்பல்கள் எல்லாம் வெட்கப்படும் அளவிற்கு சொகுசுத் தன்மை.

மலேசியப் பணத்திற்கு 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட கப்பல். ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த ஆடம்பர உல்லாச சொகுசு கப்பலில் இருந்தது. இன்னும் இருக்கிறது.

இப்போது அந்தக் கப்பல் லங்காவி தீவில் இருக்கிறது. இந்தக் கப்பலைப் பராமரிக்க ஒரு நாளைக்கு மட்டும் 100,000 ரிங்கிட் தேவைப் படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரிங்கிட். ஒரு மாதத்திற்கு மூன்று மில்லியன் ரிங்கிட். அந்த அளவிற்கு விலையுயர்ந்த சொகுசுக் கப்பல்.

விரைவில் ஏலத்தில் விடப்படும் இந்தக் கப்பலை வாங்குபவர் கப்பலின் சுகங்களை நன்றாகவே அனுபவிக்கலாம். நாம் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும். விலையைப் பாருங்கள். 100 கோடி ரிங்கிட். அந்தப் பணத்தைக் கொண்டு 2000 - 3000 பட்டதாரிகளை முழு நிதியுதவியுடன் படிக்க வைத்து விடலாம்.

அப்படிப்பட்ட ஓர் ஆடம்பரமான கப்பலைத் தான் 1எம்.டி.பி.யில் இருந்து சுரண்டப்பட்ட பணத்தைக் கொண்டு ஜோலோ வாங்கி இருக்கிறார்.

மலேசியாவின் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அந்தக் கப்பல் உலகம் பூராவும் சுற்றிச் சுற்றி வந்தது. ஆகக் கடைசியாக பாலி தீவில் நங்கூரம் இட்டது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் பெயர் எப்.பி.ஐ. அதன் உத்தரவின்படி இந்தோனேசிய அரசாங்க அதிகாரிகள் இக்குவானிமிட்டி கப்பலைக் கைப்பற்றினார்கள்.

நீண்ட காலமாகவே மலேசிய அரசியல் பிரசார மேடைகளில் ஒரு மையப் பொருளாக அந்த ஆடம்பரக் கப்பல் உருவெடுத்து இருந்தது. இந்தக் கப்பலைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நஜீப் மறுத்து வந்தார்.

அதே போல ஜோலோவையும் தெரியாது என்று சொல்லி வந்தார். ஆனால் ஜோலோவுடன் இக்குனாமிட்டி கப்பலில் எடுத்த படங்கள் இப்போது உலகம் பூராவும் வைரல் ஆகி வருகின்றன. நஜீப் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

ஜோலோ தான் அந்தக் கப்பலுக்கு இக்குனாமிட்டி எனப் பெயர் சூட்டி இருந்தார். ஆங்கிலத்தில் இக்குனாமிட்டி என்றால் “சலனமற்ற அமைதி” என்று பொருள். இந்தச் சொகுசுக் கப்பல் ஜோலோவின் பணக்கார வணிக நண்பர்களின் கேளிக்கை மையமாகத் திகழ்ந்து வந்தது.

14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்தக் கப்பலுக்குத் துறவி வாழ்க்கை. மலேசியாவில் ஆர்ப்பரித்த கொந்தளிப்பான சூழ்நிலையில் சிக்கியது. அங்கே இங்கே ஓடி ஒளிந்து கொண்டு ஒரு குற்றவாளியைப் போல தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது.

பிரான்ஸ் மொனோக்கோ கேளிக்கை நகரில் கொஞ்ச காலம். மத்தியத்தரைக் கடலில் கொஞ்ச காலம். வளைகுடா நாட்டுக் கடல்களில் கொஞ்ச காலம். இந்தியா கொச்சினில் கொஞ்ச காலம். தாய்லாந்து புக்கெட் பட்டினத்தில் கொஞ்ச காலம். சிங்கப்பூர்; அப்புறம் பாலி தீவு. இப்படியாக அதற்கு நாடோடி வாழ்க்கை.

1எம்.டி.பி. விவகாரத்தில் ஜோலோ சிக்கிக் கொண்டதும் மலேசியாவில் இருந்து அவர் தலைமறைவாகி விட்டார். மொத்தமாகக் காணாமல் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர் எங்கே இருக்கிறார் என்பது பரம இரகசியமாகவே இருந்தது. மலேசியப் போலீசாரில் இருந்து இண்டர்போல் உலகப் போலீசார் வரை அவரை வலைப் போட்டுத் தேடினார்கள். ஆள் அகப்படவில்லை.

இருந்தாலும் பாருங்கள். ஜோலோ இந்தக் கப்பலில் இருந்து கொண்டு தான் தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்து இருக்கிறார். இப்போது தெரிய வருகிறது.

அது மட்டும் அல்ல. இந்தக் கப்பலில் இருந்து கொண்டு தான் தன் வணிகப் பிரமுகர்களுடன் தொடர்பிலும் இருந்து இருக்கிறார். அந்தக் கப்பலிலேயே சந்திப்புகளையும் நடத்தி வந்து இருக்கிறார்.

இந்தக் கப்பலில் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் விமான மேடை இருக்கிறது. ஜோலோவின் வெளிநாட்டு வணிக நண்பர்கள் சிங்கப்பூருக்கு வந்து; அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலமாக இந்தக் கப்பலுக்கு வந்து இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக எல்லாக் கப்பல்களிலும் தானியங்கி அடையாள முறைமை (Automated Identification System) எனும் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும். ஒரு படகு அல்லது ஒரு கப்பல் கடலில் எந்தப் பகுதியில் இருக்கிறது. அது எங்கே போய்க் கொண்டு இருக்கிறது என்பதை அந்தச் சாதனம் காட்டிக் கொடுக்கும்.

ஆபத்து அவசர வேளைகளில் இந்தச் சாதனத்தின் உதவி கொண்டு தான் அந்தக் கப்பலின் மைய இலக்கை அடையாளம் காண்பார்கள்.

அதே மாதிரியான சாதனம் இக்குவானிமிட்டி கப்பலிலும் பொருத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் அந்தச் சாதனத்தின் இயக்கம் இக்குவானிமிட்டி கப்பலில்  நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.

அதன் காரணமாக அந்தக் கப்பல் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சொல்லப் போனால் ஒரு மர்மமான முறையில் இக்குவானிமிட்டி செயல்பட்டு இருக்கிறது.

இந்தோனேசியக் காவல் அதிகாரிகள் இக்குனாமிட்டி கப்பலைப் பாலி தீவில் கைப்பற்றிய போது அதில் 34 பணியாளர்கள் இருந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் ஜோலோ மட்டும் இல்லை. வேட்டை நாய்களுக்கு மோப்பம் அதிகம் என்பார்கள். ஆனால் ஜோலோவிற்கு அதைவிட அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். மன்னிக்கவும். ஒரு மனிதரை ஒரு நாலு கால் ஜீவனுடன் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. ரொம்பவும் தப்பு.

அடுத்து ரோசாப்பூ ரோசும்மா வருகிறார். ரோஸ்மா என்பதைவிட ரோசும்மா தான் நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ரோசம் வடிகிறது. சரி.

1எம்.டி.பி. பணத்தைக் கொண்டு 11 கோடி 30 இலட்சம் மதிப்புள்ள ஒரு நெக்லஸை ரோஸ்மாவிற்கு ஜோலோ வாங்கிக் கொடுத்து இருக்கிறார். ஒரே ஓர் இளஞ்சிவப்பு நிறத்திலான வைர நெக்லஸ். அதன் விலை மட்டும் 11 கோடி 30 இலட்சம். உலகத்திலேயே மிக விலை உயர்ந்த நெக்லஸ்களில் இதுவும் ஒன்று. அந்த நெக்லஸ் அமெரிக்கா நியூயார்க் நகரில் வாங்கப் பட்டது.

Court documents contradict claims by former prime minister Datuk Seri Najib Tun Razak over who paid for the US$27.3mil (RM113.7mil) pink diamond necklace meant for his wife.

The indictment papers by the US Department of Justice (DOJ) against fugitive businessman Low Taek Jho stated that the necklace was purchased by a shell company owned by Low and several co-conspirators.

On Sept 28, 2013, Low asked a high-end New York jeweller to meet him, a “Malaysian Official #1” and the official’s wife at a hotel in New York to show the necklace made especially for her.

(சான்று: 03.11.2018 ஸ்டார் நாளிதழ்)

இருந்தாலும் நஜீப் மறுக்கிறார். அந்த நெக்லஸை தான் தன் மனைவிக்கு அன்பளிப்பு செய்ததாகச் சொல்கிறார். அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசர் அந்த நெக்லஸைத் தனக்கு வழங்கியதாவும்; அதையே தன் மனைவிக்கு அன்பளிப்புச் செய்த்தாகவும் சொல்கிறார்.

ஆனால் அது அப்படி இல்லை. ஜோலோ தான் வாங்கிக் கொடுத்து இருக்கிறார் என்று அமெரிக்க நீதித் துறை தக்க சான்றுகளுடன் உறுதி படுத்துகிறது.

ரோஸ்மாவை மேடம் போஸ் என்றே ஜோலோ அன்புடன் அழைத்து இருக்கிறார். அவர் மீது அவ்வளவு மரியாதை மதிப்பு. அன்பளிப்பு செய்த அந்த வைர நெக்லஸை ஒரு கேக் என்று சொல்லி இருக்கிறார். கேக் என்றால் நாம் சாப்பிடுகிறோமே அணிச்சல் என்கிற இனியப்பம். அது தான்.

அந்த வைர நெக்லஸும் மலேசிய அதிகாரிகள் கைப்பற்றி விட்டார்கள். பொதுத் தேர்தல் முடிந்த கையோடு நஜீப் வீட்டில் இரண்டு மூன்று நாட்களுக்குப் பண வேட்டை நடந்தது. தெரியும் தானே. பல கோடி நகைகள் கைப்பற்றப் பட்டன. தெரியும் தானே. அந்த நகைகளில் அந்த இளம் சிவப்பு நெக்லஸும் சிக்கிக் கொண்டது.

புத்ராஜெயா மேல்மட்ட அரசாங்க அதிகாரிகளுடன் ஜோலோ நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்வதற்கு ரோஸ்மா தான் பாதை அமைத்துக் கொடுத்து இருக்கிறார். அதைப் பற்றிய மேலும் பல மர்மமான; ஆனால் அதிர்ச்சியான தகவல்களை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. Low likely bought Rosmah’s pink diamond necklace - https://www.thestar.com.my/news/nation/2018/11/03/low-likely-bought-rosmahs-pink-diamond-necklace/

2. Low and his associates convinced Deutsche Bank into extending a US$250 million loan to 1MDB unit 1Malaysia Energy Holdings Ltd for the purchase of Equanimity - http://www.theedgemarkets.com/article/special-report-how-jho-low-laundered-money-buy-equanimity

3. All You Need to Know About Jho Low and his Yacht Equanimity - https://www.superyachtfan.com/motor_yacht_equanimity.html

4. The US Department of Justice had earlier claimed that the Equanimity, valued at US$250 million (S$328 million), was among assets purchased by Mr Low using funds siphoned from 1MDB - https://www.straitstimes.com/asia/10-things-to-know-about-malaysian-businessman-jho-low

மலேசியா 1MBD மோசடி - 5

 தமிழ்மலர் - 21.11.2018 - புதன்கிழமை

ரஸ்புட்டின் எனும் பெயர் ரஷ்யா நாட்டுக் காலச் சுவடுகளில் மறைக்க முடியாத கறைகளை விட்டுச் சென்ற பெயர். அப்போதைக்கு அதை ஒரு மந்திரப் பெயர் என்றுகூட சொல்வார்கள். அந்தப் பெயர் இல்லாமல் போய் இருந்தால் ரஷ்யாவின் வரலாறும் வேறு கோணத்தில் பயணித்து இருக்கும். ரஷ்ய மன்னராட்சி மறைந்து போனதற்கு ரஸ்புட்டின் என்பவரும் ஒரு காரணம். 



ரஸ்புட்டின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிக்கூட வாசல் பக்கமே தலைவைத்துப் படுக்காதவர். ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு திரிந்தவர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஊர் சுற்றித் திரிந்த ஒரு சாமான்யச் சிறுவர். ஆனால் ரஷ்யாவின் ஆட்சிக் கிரீடத்தையே தன் பிடிக்குள் இறுக்கிப் பிடித்துப் பார்த்த ஓர் அதிசய மனிதர்.

காடுமேடுகளில் அலைந்து திரிந்த அந்த ரஸ்புட்டின் தான் ரஷ்ய நாட்டு மகாராணி அலெக்ஸாண்டிராவைத் தன் மாயவலைக்குள் சிக்க வைத்தார். மகாராணியின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு ரஷ்யாவின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தார். உண்மையிலேயே அவர் ஒரு பைத்தியக்காரச் சித்தர்.

அதே போலத் தான் மலேசியாவிலும் ஒரு ரஸ்புட்டின். எங்கு இருந்தோ வந்து மலேசிய வரலாற்றையே மாற்றிப் போட்ட மாபெரும் மனிதர். வண்ணத்துப்பூச்சி விளைவைப் போல ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிப் போட்ட மனிதர். ரோசாப்பூ ரோசம்மாவின் குடும்பத்தையே அலைகழிப்புச் செய்த மகா ஜோலோ.




ஜோலோவிற்கும் ரோஸ்மாவிற்கும் நட்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர் வேறு யாரும் அல்ல. ரோஸ்மாவின் மகன் ரிஷா அஜீஸ் தான். ரோஸ்மாவின் முதல் கணவருக்குப் பிறந்தவர் தான் இந்த ரிஷா அஜீஸ்.

ஜோலோவும் ரிஷா அஜீஸும் இங்கிலாந்தில் படிக்கும் போதே அவர்களுக்குள் நெருங்கிய நட்பு. அந்த வகையில் ஜோலோவிற்கு ரோஸ்மா அறிமுகம் ஆனார். ரோஸ்மா வழியாக நஜீப் அறிமுகம் ஆனார். அப்படியே புத்ராஜெயாவும் நெருக்கம் ஆனது. சரி.

அதற்கு முன்னர் 1எம்.டி.பி. முறைகேடுகளை வெளியுலகத்தில் கசிய வைத்த ஊடகங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

தி வால் ஸ்டீரிட் ஜர்னல் என்பது அனைத்துலக அளவில் புகழ்பெற்ற ஓர் ஆங்கில நாளிதழ். அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து வெளிவருகிறது. ஒரு நாளைக்கு 20 இலட்சம் பிரதிகள் விற்பனை. இந்த நாளிதழ் தான் 1எம்.டி.பி. முறைகேடுகளை முதன் முதலாக அனைத்துலக அளவில் வெளியுலகத்திற்குத் தெரியபடுத்தியது. 




அதே சமயத்தில் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தையும் அதன் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் என்பவரையும் மறந்துவிட வேண்டாம். அழகிய அறிவார்ந்த பெண். இவர் இல்லை என்றால் 1எம்.டி.பி.யின் திருகுதாளங்கள் இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்காது. அந்த விசயத்தில் இப்போதைக்கு சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் தான் முதலிடம் வகிக்கிறது.

மலேசியாவில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி  மாற்றத்திற்கு இந்தச் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளமும் முக்கியமான ஒரு காரணம். 2010-ஆம் ஆண்டிலேயே 1எம்.டி.பி. முறைகேடுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டது. இங்கிலாந்தில் எங்கோ ஒரு வீட்டுச் சமையல் கூடத்தில் இருந்து இயங்கிய இந்த இணையத் தளம் மலேசிய அரசியலையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.

சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தையும்; ரேடியோ பிரீ சரவாக் எனும் வானொலி நிலையத்தையும் தோற்றுவித்தவர் கிளேர் ரியூகாசல் பிரவுன். இவரின் மூத்தார்; அதாவது கணவரின் அண்ணன் தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன்.




கிளேர் ரியூகாசல் பிரவுன் 1959-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத்தில் பிறந்தவர். எட்டு வயதில் தன் தாயகம் இங்கிலாந்திற்குச் சென்றார். இருந்தாலும் சரவாக் மாநிலத்தின் மீது தனி ஒரு பாச உணர்வு. சரவாக் பழங்குடி மக்கள் மீதும் தனி ஒரு ஈர்ப்பு.

சரவாக் மாநில அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப் படுத்த வேண்டும் என்பதற்காகவே சரவாக் ரிப்போர்ட் எனும் இணையத் தளத்தை உருவாக்கினார். சரவாக் பழங்குடி மக்களின் உரிமைகளைத் தற்காக்க ரேடியோ பிரீ சரவாக் எனும் வானொலி நிலையத்தைத் தோற்றுவித்தார்.

2005-ஆம் ஆண்டு சரவாக் கூச்சிங் நகரில் ஒரு சுற்றுச் சூழல் மாநாடு. சரவாக் மாநிலத்தில் காடுகள் அழிக்கப் படுவதைக் கண்டித்து அந்த மாநாட்டில் பேசினார். அவருடைய பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டது. கொலை மிரட்டல்களும் வந்தன. இருந்தாலும் கிளேர் ரியூகாசல் பிரவுன் பயப்படவில்லை. தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். இன்னும் தொடர்கிறார்.

அதன் பின்னர் இவரின் பார்வை 1எம்.டி.பி. பக்கம் திசை திரும்பியது. 1எம்.டி.பி. முறைகேடுகளைப் பற்றி தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தில் பிரசுரித்து வந்தார்.




இன்றைய காலக்கட்டத்தில் 1எம்.டி.பி. முறைகேடுகள் பலரால் பகிரங்கமாகப் பேசப்படுகின்றன. எழுதப்படுகின்றன. ஆனால் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே 1எம்.டி.பி. முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் கிளேர் ரியூகாசல் பிரவுன். இதை யாரும் மறந்து விட வேண்டாம்.

இவர் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் 1எம்.டி.பி. விவகாரம் இவ்வளவு பெரிதாக தெரிய வந்து இருக்காது. சகாரா பாலைவனத்தில் தொலைந்து போன சல்லிக்காசு மாதிரி காணாமல் போய் இருக்கும். அப்படியே அமிழ்ந்து போய் இருக்கும்.

2015-ஆம் ஆண்டில் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் முடக்கப் பட்டது. கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது.

சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் நாட்டிற்கு எதிரானது என குற்றம் சாட்டப் பட்டது. மலேசியர்கள் எவரும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்துடன் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது. அப்படியே தொடர்பு வைத்து இருந்தால் அவர்கள் கைது செய்யப் படலாம். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்கிற ஒரு பயமுறுத்தல் நிலையும் ஏற்பட்டது. 




கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது சிவப்பு எச்சரிக்கையைப் பதிவு செய்யுமாறு இண்டர்போல் அனைத்துலகப் போலீசாருக்குக் கடிதம் அனுப்பப் பட்டது. ஆனால் இண்டர்போல் நிராகரித்து விட்டது.

Interpol has rejected Malaysian police’s request to issue a red notice against Sarawak Report editor-in-chief Clare Rewcastle Brown. In a letter to UK-based NGO Fair Trials International, Interpol secretary-general Jurgen Stock confirmed that the his organisation had rejected Malaysia’s request.

Rewcastle Brown, an investigative journalist based in the UK, had doggedly covered alleged misappropriation of Malaysian state-owned 1MDB and multi-billion ringgit deposits into Prime Minister Najib Abdul Razak’s accounts.

Source: https://web.archive.org/web/20150829001426/https://www.malaysiakini.com/news/310347 


கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது. இருந்தாலும் அவர் அசரவில்லை. இலண்டனில் அவர் வீட்டின் சமையல் கூடத்தில் இருந்து கொண்டே தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

2018 மே மாதம் 9-ஆம் தேதி பொதுத் தேர்தல். ஒரு புதிய மலேசியா உருவானது. அதே மே மாதம் 18-ஆம் தேதி கிளேர் ரியூகாசல் பிரவுன் கோலாலம்பூருக்கு வந்தார். மலேசியாவில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றத்தை நேரடியாகப் பார்க்க வந்ததாதாகச் சொன்னார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் மீதான தடை நீக்கப் பட்டது. மலேசியாவிற்குள் நுழைவதற்கு அவருக்கு விதிக்கப்பட்ட தடையும் உடனடியாக நீக்கப் பட்டது.

இதில் ஒரு பெரிய அதிசயம் என்ன தெரியுங்களா. மலேசியாவுக்கு வரக் கூடாது என்று கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு முன்பு யார் தடை விதித்தார்களோ அவர்கள் தான் இப்போது நாட்டை விட்டு வெளியே போக முடியாமல் தடை விதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லாமே தலைகீழாக மாறிப் போய் விட்டது. வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்று சொல்வார்கள். அது சரியாகவே இருக்கிறது. 




1எம்.டி.பி. மோசடிகளை அம்பலப் படுத்திய கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு அண்மையில் அமெரிக்காவின் பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டு சிறப்புச் செய்யப் பட்டார்.

Association of Certified Fraud Examiners Guardian Award


ஜோலோ எப்படி புத்ராஜெயா நிர்வாகத்தில் தலையீடு செய்தார் என்பதைப் பார்ப்போம். மலேசிய நிர்வாகத்தில் ஆக உயர்மட்டத்தில் இருந்தவர்களுடன் ஜோலோ தொடர்பு கொள்ள கதவைத் திறந்து விட்டவரே ரோஸ்மா தான்.

டோம் ரைட் எனும் பத்திரிகையாளர் எழுதி வெளியிட்ட பில்லியன் டாலர் திமிங்கிலம் எனும் நூலில் இதை எழுதி இருக்கிறார். ரோஸ்மாவின் மூலமாக ஜோலோவிற்கு பிரதமர் நஜீப்பின் நட்பு கிட்டியது. நஜீப்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

ஜோலோவினால் ரோஸ்மாவிற்கும் அதிக நன்மைகள் அதிக லாபங்கள். பணம், நகைகள், அன்பளிப்புகள் என நிறையவே வந்து குவிந்தன.  தி வால் ஸ்டிரீட் ஜர்னல் சஞ்சிகை வெளியிட்டு உள்ள செய்தியைத் தான் நான் உங்களுக்கு மொழியாக்கம் செய்து தருகிறேன். இவை என் சொந்த கருத்துகள் அல்ல.

The Wall Street Journal has published a shocking report on Monday (2018 Jun 25) where it touched on many allegations against former first lady Datin Sri Rosmah Mansor.

https://www.wsj.com/articles/malaysias-extravagant-ex-first-lady-lands-in-graft-investigators-sights-1529958911


ரோஸ்மா ஒரு சாதாரண நடுத்தர வகை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். இருப்பினும் தான் ஒரு கோடீஸ்வரரைப் போல வாழ வேண்டும் என்று கனவு கண்டவர். தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்ததும் நஜீப்பை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். நஜீப் பிரதமர் ஆனதும் ரோஸ்மாவின் வாழ்க்கையும் திசை மாறியது. 




தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ள ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்துக் கொண்டு லண்டன் பாரிஸ் நியூயார்க் என்று பறந்து செல்லும் அளவிற்கு தன் தகுதியை உயர்த்திக் கொண்டார். புருணை சுல்தான் போல வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் இந்த டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர். ஆடம்பர வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டுப் பார்க்க கனவு கண்ட அவருக்கு எல்லாமே நனவாகிப் போனது.

இவருடைய படாடோபமான ஆடம்பர வாழ்க்கை மலேசிய அரசியலில் ஒரு கறுப்புப் புள்ளியைத் தோற்றுவிக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியும் ரோஸ்மா கேட்பதாக இல்லை.

2015-ஆம் ஆண்டில் 1எம்.டி.பி. புலன் விசாரணைகள் உச்சத்தில் இருந்த போது ரோஸ்மாவின் நன்மதிப்பும் பாதிக்கப்பட்டு விட்டது. அந்தக் கட்டத்தில் 2015 மார்ச் மாதம் அவர்களின் மகள் நூர்யானா நாஜ்வாவிற்குத் திருமணம். அதிகமாகச் செலவு செய்ய வேண்டாம் என்று நஜீப் சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும் ரோஸ்மா கேட்கவில்லை. அந்தத் திருமணத்தில் பூக்களுக்கு மட்டும் 30 இலட்சம் ரிங்கிட் செலவு செய்து இருக்கிறார்.

அதைப் பற்றி துன் மகாதீர் கருத்து சொன்ன போது அரசர்கள்கூட இப்படி ஆடம்பரமாகச் செலவு செய்ய மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

(தொடரும்)


மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7



சான்றுகள்

1. Clare Rewcastle Brown: The Lone brave journalist exposes 1MDB corruption - https://dinmerican.wordpress.com/2018/05/17/clare-rewcastle-brown-the-lone-brave-journalist-exposes-1mdb-corruption/

2. A Round Up Of The Scandal That Toppled A Government - https://mustsharenews.com/1mdb-scandal-explained/

3. The inside story of how Jho Low and friends stole billions from Malaysia - http://www.theedgemarkets.com/article/book-review-inside-story-how-jho-low-and-friends-stole-billions-malaysia

4. WSJ: 1MDB Embezzlement All Points to Rosmah & Jho Low - https://juiceonline.com/wsj-1mdb-embezzlement-all-points-to-rosmah-jho-low/

மலேசியா 1MBD மோசடி - 7

 தமிழ் மலர் - 23.11.2018 - வெள்ளிக்கிழமை

1எம்.டி.பி. நிறுவனத்தின் பல நூறு கோடி ரிங்கிட் ரொக்கப் பணம் எங்கேயோ ஓர் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம். அல்லது பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம். 1எம்.டி.பி. நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படலாம். அப்போது அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

அந்த இரகசியம் தெரிந்தவர்களில் ஜோலோ ஒருவராக இருக்கலாம். அவர் மலேசியாவிற்கு வந்தால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
 

அதனால் அவர் ஓடி ஓடி ஒளிந்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு முயற்சி செய்யலாம். இப்படித் தான் சிலரும் பலரும் நினைக்கின்றார்கள். பட்டும் படாமலும் சொல்லிக் கொண்டும் வருகிறார்கள். 1800 கோடி ரிங்கிட்டைச் சுழித்து வழித்து எடுத்தவர்கள் சில கோடிகளை எங்கேயாவது மறைத்து வைத்து இருக்கலாம் அல்லவா. அப்படியும் ஒரு பார்வை பரவலாகவே தேங்கி நிற்கிறது.

2018 மே மாதம் 9-ஆம் தேதி தேர்தலுக்குப் பின்னர் ஒரு வாரம் கழித்து நஜீப் வீடுகளில் அதிரடிச் சோதனைகள் நடந்தன. அனைவருக்கும் தெரியும். பல நாடுகளின் நோட்டுக் கத்தைகள் இலட்சக் கணக்கில் கைப்பற்றப் பட்டன. அந்த நோட்டுக் கத்தைகளில் எந்த நாட்டுப் பணம் அதிகமாக உள்ளது எனும் கோணத்திலும் ஆராய்ந்து பார்க்கிறார்கள்.

1எம்.டி.பி. நிறுவனத்தின் சுரண்டலுக்கு மூலகாரணமாக இருந்தவர் ஜோலோ. அவர் மூலமாகத் தான் எல்லாச் சுரண்டல்களும் நடந்து இருக்கின்றன. ஏறக்குறைய ஒன்பது வருடங்களாக இந்தச் சுரண்டல் வேலைகள் நடந்து இருக்கின்றன. ஆனால் முன்னாள் பிரதமர் நஜீப், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி வருகிறார். 




மேலும் அவர் சொல்வதைக் கேளுங்கள். ’1எம்.டி.பி. பணத்தைப் பயன்படுத்தி விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப் பட்டது எனக்குத் தெரியவே தெரியாது. எனக்குத் தெரியாமல் எல்லாம் நடந்து இருக்கிறது.

இந்தப் பொருட்களை வாங்குவதற்கு நான் எவருக்கும் அதிகாரம் வழங்கவில்லை. அரசாங்கத்தில் நான் நீண்ட காலம் சேவை செய்தவன். அதனால் எது சரி எது தவறு என்று எனக்குத் தெரியும்.

என் மனைவிக்கு கிடைத்த இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் ஓர் அன்பளிப்பு. சவூதி அரபிய இளவரசர் அன்பளிப்பாக வழங்கியது. அதோடு 1எம்.டி.பி. நிறுவனத்தில் ஜோலோவை நான் சேர்க்கவில்லை. ஜோலோ செய்த காரியங்களுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர் என்னுடைய கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.

1எம்.டி.பி. தொடர்பாக ஜோலோவிற்கு நான் எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் அவரே தன்னார்வத்தில் சில காரியங்களைச் சொந்தமாகச் செய்து இருக்கிறார். அவர் என்ன செய்தாரோ அதற்கு 1எம்.டி.பி. நிறுவனத்தின் நிர்வாகம் தான் பொறுப்பு. நான் அல்ல. ஜோலோவுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. 




என்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 260 கோடி ரிங்கிட் சவூதி அரபிய மன்னர் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் சாவுட் அன்பளிப்பாக வழங்கியது. மன்னர் அப்துல்லாவின் முகத்துக்காக ஏற்றுக் கொண்டேன். அது 1எம்.டி.பி. நிறுவனத்தின் பணம் அல்ல’ என்கிறார் முன்னாள் பிரதமர் நஜீப்.

(அன்பளிப்பாகக் கிடைத்ததாகச் சொல்லப்படும் இளம்சிவப்பு வைர நெக்லஸ் விலை: 11 கோடி 37 இலட்சம் ரிங்கிட். அதாவது 113.7 மில்லியன் ரிங்கிட்)

ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அண்மையில் நஜீப்பைப் பேட்டி கண்டது. அதில் சில விவரங்கள்:

எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் நிறுவனம் என்பது 1எம்.டி.பி. நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தத் துணை நிறுவனத்திடம் இருந்து தான் நஜீப்பின் வங்கிக் கணக்கில் 42 மில்லியன் ரிங்கிட் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பணம் எப்படி வந்தது என்று கேட்கப் பட்டது.




எப்படி தன் கணக்கிற்கு வந்தது என்பது தனக்குத் தெரியவில்லை என்று நஜீப் சொல்லி இருக்கிறார். எஸ்.ஆர்.சி. நிறுவனம் தொடர்பான எல்லா கணக்கு வழக்குகளையும் நிக் பைசால் அரிப் கமில் என்பவர் பார்த்துக் கொள்கிறார். அவரிடம் தான் பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டன என்று நஜீப் சொல்கிறார்.

நஜீப்பின் கருத்துகளுக்கு மலேசிய லஞ்சத் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ முகமட் சுக்ரி அப்துல் மறுப்பு சொல்கிறார். 60 கோடி ரிங்கிட், சவூதி அரபிய மன்னரின் அன்பளிப்பு என்று சொல்வதற்கு சரியான சான்றுகள் இல்லை.

இதற்கு இடையில் நிக் பைசால் அரிப் கமிலை மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் தேடி வருகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் இந்தோனேசியாவில் தலைமறைவாக இருப்பதாக ஆருடங்கள். விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இவரையும் (நிக் பைசால்) ஜோலோவையும் கைது செய்தால் தான் 1எம்.டி.பி. நிறுவனத்தில் நடந்த ஊழல் வழக்குகளைச் சரியான வழியில் வழிநடத்த முடியும். சரி.

நஜீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. சுருங்கச் சொன்னால் அவரைச் சுற்றிலும் நிறையவே பட்டாசு வெடிகள். அதாவது குற்றச்சாட்டுகள்.




மங்கோலிய அழகி அல்தான்தூயா கொலை வழக்கு;

1எம்.டி.பி. நிறுவனத்தின் நிதி மோசடிகள்;

வெளிநாடுகளுடன் சந்தேகத்திற்கு உரிய மெகா திட்டங்கள் (சீனாவின் கிழக்குக் கரை இரயில் பாதை திட்டம்);

அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களின் திட்டங்கள் (ஜி.எல்.சி);

அரசாங்கத் திட்டங்களை ஏற்று நடத்தும் நிறுவனங்களிடம் நேரடியாகப் பேரம் பேசப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள்.

2015 ஜூலை 29-ஆம் தேதி 1எம்.டி.பி. புலன் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது கோலாலம்பூர் புக்கிட் அமான் தலைமையகக் கட்டடத்தில் 10-ஆவது மாடியில் தீப்பற்றிக் கொண்டது. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

அதே காலக் கட்டத்தில் கோலாலம்பூர் ஜாலான் இம்பி லோயாட் பிளாசாவில் தேவையற்ற இனக்கலவரப் புகைச்சல். இதற்கான காரணங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். 1எம்.டி.பி. புலன் விசாரணையைத் திசை திருப்புவதற்காக இப்படி ஒரு புகைச்சலைத் தூண்டிவிட்டு இருக்கலாம் எனும் கோணத்திலும் ஆராய்ந்து வருகிறார்கள். 




அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி நீக்கங்கள்; அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம்; மேலும் பல வகையான மாக்கியவலி அரசியல் நகர்வுகளும் நஜீப்பைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

1எம்.டி.பி.யின் கோடிக் கணக்கான பண மோசடிகள் அனைத்துமே ஒரே ஒரு மனிதரையே சுட்டிக் காட்டுகின்றன. 1எம்.டி.பி.யின் அனைத்துப் பணப் பரிவர்த்தனை ஆவணங்களிலும் நஜீப் தான் கையொப்பம் போட்டு இருக்கிறார். அந்த நிறுவனத்தை உருவாக்கியதே அவர் தான்.

1எம்.டி.பி.க்கு நஜீப் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லை என்று அவர் மறுக்க முடியாது. அவருடைய கையொப்பம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. 1எம்.டி.பி.யின் எல்லா வர்த்தக உடன்படிக்கையிலும் நஜீப்பின் கையொப்பங்கள் உள்ளன. ஆகவே 1எம்.டி.பி.க்கு நஜீப் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறுகிறார். 




ரோஸ்மாவிடமும் 1எம்.டி.பி. பணம் நிறையவே போய் இருக்கிறது. ஆனால் 1எம்.டி.பி. ஆவணங்களைக் கொண்டு அவர் மீது குற்றம் சாட்டுவது சற்று சிரமமே. ஏன் என்றால் ரோஸ்மா எந்தப் பத்திரத்திலும் கையொப்பம் வைக்கவில்லை. எல்லாப் பத்திரங்களிலும் நஜீப் தான் கையொப்பம் வைத்து இருக்கிறார். சரி.

நஜீப்பின் மனைவி ரோஸ்மா. இவரின் ஆடம்பர வாழ்க்கையில் அழகு ஆடம்பர மருத்துவச் சிகிச்சைகள் வருகின்றன. என்றைக்குமே அவர் அழகாக இருக்க வேண்டும்; இளமையாக இருக்க வேண்டும்; புருணை சுல்தானின் மனைவி போல வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டவர்.

மலேசிய மக்கள் ஜி.எஸ்.டி. வரிப் பணத்தில் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் போது ரோஸ்மாவின் சிகை அலங்காரத்திற்கு 1200 ரிங்கிட் செலவானது என்று அவரே வருத்தப்பட்டுக் கொண்டார். 2015 பிப்ரவரி 25-ஆம் தேதி ஸ்டார் பத்திரிகையில் வெளிவந்த செய்தி. 




அவர் சொல்கிறார்: நாம் எல்லாம் வருமானம் இல்லாத குடும்ப மாதுகள். என் தலைமுடிக்கு கறுப்பு மை அடிக்க ஒரு சிகை அலங்காரியைக் கூப்பிட்டேன். வழக்கத்திற்கு மாறாக 1200 ரிங்கிட் கேட்டாள். என்ன செய்வது. வேறு வழி இல்லாமல் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து அனுப்பினேன் என்றார். இது எப்படி இருக்கு.

எந்த இடத்தில் எதைப் பேசுவது என்று தெரியாமல் பேசி அவரே மாட்டிக் கொண்டார். சமூக ஊடகங்களில் கிண்டல் அடிக்கப்பட்ட செய்தி.  பலரும் அறிந்த செய்தி.  

பொதுத் தேர்தலுக்கு முன்னர் கிடப்பில் கிடந்த ரோஸ்மாவின் கோப்புகளை எல்லாம் இப்போது தூசு தட்டி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பைலைத் திறந்ததும் ஒரு பூதம் கிளம்புகிறது. 




’நான்தான் ஜீபூம்பா. பல வருசமா இந்த அறையிலே அடைஞ்சி கிடக்கேன். இதைத் திறந்து என்னை வெளிய விட்டதுக்கு நன்றி. என்ன வேணும்னு கேளுங்க. செஞ்சிட்டு போயிடறேன்’. அதைக் கேட்டு மற்ற மற்ற அறைகளில் உள்ள ஜீபூம்பா பூதங்களும் கர்ஜிக்கத் தொடங்கி விட்டன.

ரோசாப்பூ ரோஸ்மாவின் கதைக்கு வருவோம். வைர நகைளின் மீது ஈர்ப்பு ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பைகளின் மீது ஈர்ப்பு; லண்டன் ஹரோட்ஸ் அலங்கார மாளிகையில் ஈர்ப்பு; ஹவாய் சானல் ஆடைகளில் ஈர்ப்பு; ஹாங்காங் நகைக் கடைகளில் ஈர்ப்பு; நியூயார்க் கறுப்புக் கண்ணாடிகளில் மீது ஈர்ப்பு; பாரிஸ் காலணிகளில் ஈர்ப்பு; இப்படி எக்கச்சக்கமான ஈர்ப்புகள்.

2008-ஆம் ஆண்டில் இருந்து 2015-ஆம் ஆண்டு வரையில் ஆடை ஆபரணங்களுக்காக உலகம் பூராவும் சுற்றி சுற்றி வந்து இருக்கிறார். இவருடைய பயணங்களுக்குத் தனியாக விமானங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. அந்த விமானங்களை வாடகைக்குப் பேசி விட்டது நம்ப மன்மத ராசா ஜோலோ தான். 




ஜோலோ எங்கோ ஒரு கடலில் இக்குனிமிட்டி சொகுசுக் கப்பலில் சொப்பனம் கண்டு கொண்டு இருப்பார். அப்படியே கைப்பேசியில் பேசுவார். ரோஸ்மாவை ஏற்றிச் செல்ல ஒரு விமானம் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்குப் பறந்து வரும். அதில் ஏறும் ராசாத்தி பாரிஸ் நகரில் போய் இறங்குவார். அங்கே அவருக்காக நாலைந்து சொகுசுக் கார்கள் காத்து நிற்கும்.

இப்படித்தான் உலகம் பூராவும் சுற்றி வந்து இருக்கிறார். இப்போது வீட்டுக்கு உள்ளேயே பொம்மை விமானங்களைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார். பாவம் அவர். நாட்டை விட்டுத் தான் வெளியே போக முடியாதே. அப்புறம் என்னதான் செய்வது? 




மலேசிய மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர்கள் நிறைய பேர். அவர்களுக்கு பார்ப்பது எல்லாமே ஜுஜுபி. ’ஒன்றும் தெரியாத பாப்பா போட்டு கிட்டாளாம் தாப்பா’ என்று சொல்வார்கள். இப்போது பாருங்கள் ஒன்றுமே தெரியாதது மாதிரி நடிப்பிலே நவரசங்கள். ம்ம்ம்… அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். இது அப்போதைய பழமொழி. இனிவரும் காலங்களில் தெய்வம் நிறகாமலேயே கொல்லும். பாருங்களேன்.

வெறும் ஆடை அணிகலன்களுக்கு மட்டும் ரோஸ்மா 25 மில்லியன் ரிங்கிட் செலவு செய்து இருக்கிறார். அவர் செய்த செலவுகளுக்குச் சான்றாக ஆவணங்கள் கிடைத்து உள்ளன. வெறும் ஆடை அணிகலன்களுக்கு மட்டும் தான் 25 மில்லியன் ரிங்கிட். நகை நட்டுகளை இதில் சேர்க்கவில்லை.

இந்தச் செய்திகள் எல்லாம் உலகம் முழுமைக்கும் தெரிந்துவிட்ட செய்தி. உள்நாட்டு ஆங்கில மலாய் சீனப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள். எல்லாரும் படித்த செய்திகள். அதனால் அவற்றைப் பற்றி எழுதுவதற்கு நமக்கு அச்சம் இல்லை.


முதிர்ச்சி எதிர்ப்பு மாத்திரைகளைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. ஆங்கிலத்தில் எண்டி ஏஜிங் என்று சொல்வார்கள். அதாவது இந்த முதிர்ச்சி எதிர்ப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் உடல் முதிர்ச்சி குறையுமாம். பண வசதி உள்ளவர்கள் அந்த மாத்திரைகளுக்குப் பணத்தை பணம் என்று பார்க்காமல் இறைக்கிறார்களாம்.

ஆனால் உண்மையில் அப்படி எல்லாம் இல்லை. அது எல்லாம் வணிகத் தந்திரம் என்று மருத்துவர்களே சொல்கிறார்கள். அதோடு அந்த மாத்திரைகளை அமெரிக்காவில தடை செய்து விட்டார்கள். இருந்தாலும் நம்ப ரோஸ்மா அண்ட் கோ வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறார்கள். 1590 பாட்டில்கள் கணக்கில் வருகின்றன.

எப்போதுமே இரண்டு செட் மாத்திரைகள் வாங்கி இருக்கிறார்கள். ஒரு செட் ரோஸ்மாவிற்கு இன்னொரு செட் முன்னாள் பிக் பாஸ் தலைவருக்கு. புள்ளி விவரங்கள் கிடைத்து உள்ளன. அவற்றின் விலை 12 இலட்சம் ரிங்கிட். அமெரிக்காவில் இருந்து வாங்கப் பட்டவை. மருந்தின் பெயர்

External Plant Serum Food Application based softgel GH-9 Honey and Honey Food GH-9 Soft Gel


ரோசாப்பூ கதைகள் நாளையும் வரும்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. THE Malaysian First Lady’s $6 billion shopping spree is over, with police seizing 72 suitcases with jewellery, cash and handbags as a corruption probe begins - https://www.news.com.au/news/partys-over-for-malaysias-diamond-obsessed-first-lady/news-story/66165ae2488e0cc7678bea7f992090f0

2. Datin Seri Rosmah Mansor, wife of former prime minister Datuk Seri Najib Razak, allegedly bought over RM1 million worth of anti-ageing products with funds linked to 1MDB - https://www.nst.com.my/news/exclusive/2018/09/412383/exclusive-rosmah-be-charged-soon

3. 1MDB scandal: A timeline - https://www.channelnewsasia.com/news/asia/1mdb-scandal-a-timeline-10254406

4. US to seize £32 million Belgravia townhouse in Malaysian fraud probe - https://www.standard.co.uk/news/crime/us-to-seize-32-million-belgravia-townhouse-in-malaysian-fraud-probe-a3301256.html

5. Rosmah hired Emirate’s Executive Airbus A319 private jet RM86.4 million - http://www.financetwitter.com/2016/06/take-a-tour-inside-emirates-airbus-a319-that-rosmah-took-for-her-cheap-award.html

22 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 6

தமிழ் மலர் - 22.11.2018 - வியாழக்கிழமை

சுற்றும் காற்றாடி சுற்றிக் கொண்டுதான் இருக்கும். அடி ஆத்தாடி அடி அம்மாடி அடி என்னாடி என்றாலும் காற்றாடி நிற்காது. அது பாட்டிற்குச் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.
 

அந்தக் காற்றாடி மாதிரியே 2015-ஆம் ஆண்டில் 1எம்.டி.பி.க்கு முதன்முதலாக ஒரு சுற்றல். உங்க வீட்டு எங்க வீட்டுச் சுற்றல் அல்ல. மேலே போகும் மேகத்து வரைக்கும் அண்ணாந்து பார்க்கிற மாதிரி சுற்றலோ சுற்றல்.

’இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா’ என்று ஜோக்கர் ஜோலோ குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை தப்பாட்டம் போட்டார். அதனால் 1எம்.டி.பி.க்கு ஏடா கூடமாக வந்தது போராட்டம்.

அந்தச் சமயத்தில் நஜீப்பிடம் இருந்த சொத்து சுகங்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்குமாறு ரோஸ்மா ஆலோசனை கூறி இருக்கிறார். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டி இருந்தார். அந்த மாதிரி நஜீப் சாருக்கு ரோஸ்மா ஒரு சட்டாம்பிள்ளை.
 

பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துகள்; பாட்டன் முப்பாட்டன் வழியாக வந்த சொத்துகள்; அறிவிப்பதில் தவறு எதுவும் இல்லை; ஏன் பயப்பட வேண்டும் என்று ரோஸ்மா சொல்லி இருக்கிறார். அதற்கு நஜீப்பின் நான்கு சகோதர்களும் அந்த மாதிரி செய்வது சரியல்ல என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

தங்களின் தந்தையார் துன் ரசாக் பிரதமராக இருந்த வரையில் அவர் அதிகமாகச் சொத்துகள் எதையும் சேர்த்து வைக்கவில்லை. அவர் ரொம்பவும் கட்டு செட்டாகச் சிக்கனமாக வாழ்ந்தவர்.

அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது போல எதுவும் அமைந்துவிடக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். நஜீப் சகோதரர்களின் கருத்துகளைக் கேட்டு ரோஸ்மா பொங்கி எழுந்து எரிமலை மாதிரி வெடித்துச் சிதறி இருக்கிறார்.
 

நஜீப்பின் பிரதமர் பதவியைக் கவிழ்க்கத் திட்டம் போட வேண்டாம் என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த விவரத்தை நஜீப்பின் குடும்ப உறுப்பினர் ஒருவர் நியூயார்க் வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழிடம் கூறி இருக்கிறார்.

இங்கே சொல்லப்படும் கருத்துகள் அனைத்தும் ஏற்கனவே உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பதிவான செய்திகள். எங்களின் சொந்த கருத்துகளோ செய்திகளோ அல்ல. அந்தச் செய்திகளுக்கு தக்க சான்றுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

Wall Street Journal: Malaysia’s Extravagant Ex-First Lady Lands in Graft Investigators’ Sights.

https://www.wsj.com/articles/malaysias-extravagant-ex-first-lady-lands-in-graft-investigators-sights-1529958911

’வால் ஸ்டிரீட் ஜர்னல்’ நாளிதழ் மேலும் கூறுகிறது: நஜீப் பிரதமராகப் பதவி வகித்த போது அவருடைய பிரதமர் அலுவலகத்திலேயே ரோஸ்மாவுக்கு ஓர் அலுவலக அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. பிரதமர் அறைக்குப் பக்கத்திலேயே ரோஸ்மாவின் அறை. அவருக்கு உதவியாகச் சில அதிகாரிகளும் இருந்தார்கள்.
 

சில சிக்கலான அரசியல் முடிவுகளுக்குத் தீர்வு காண்பதற்கு ரோஸ்மா தான் உதவி செய்தாராம். அட என்ன கொடுமை சார் இது. முப்பது நாற்பது அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை மிஞ்சிய அறிவாற்றலா?

அட சாமியோவ்! தலை சுற்றுகிறது சார். தெனாலி ராமனின் அதிசய சாமர்த்தியங்களில் அகடவிகட கோமாளித் தனம் நினைவிற்கு வருகிறது. மன்னிக்கவும்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: 2009-ஆம் ஆண்டில் அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ மலேசியாவுக்கு வருகை தந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி.

நஜீப்புடன் பிரதமர் லீ குவான் இயூ பேச்சுவார்த்தை நடத்த தயார்நிலை. அந்தச் சமயத்தில் ரோஸ்மாவும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
 

ஏன் என்றால் நஜீப்பும் ரோஸ்மாவும் ஒரு குழுவாக இணைந்து நல்லபடியாக, சிறப்பாகச் சேவை செய்கிறார்களாம். சொன்னது முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ

ஆக அந்த அளவிற்கு ரோஸ்மா செல்வாக்குப் பெற்றவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ரோஸ்மா ஓர் அறிவார்ந்த அழகிய பெண்மணி. புத்திசாலி. திறமைசாலி. சாமர்த்தியசாலி. இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் 1எம்.டி.பி. விசயத்தில் தவறான அணுகுமுறையில் பயணித்து இருக்கிறாரே அது தான் வேதனையாக இருக்கிறது.

இனி ஒன்றும் செய்ய முடியாது. காலம் கடந்து விட்டது. சுனாமி வருவதற்கு முன்னதாகவே கடற்கரையை விட்டு சற்று உயரமான இடத்திற்கு ஓடிப் போய் இருக்க வேண்டும். சுனாமி சுருட்டுமா பினாமி புரட்டுமா என்று எதேச்சையாக இருந்து விடக் கூடாது.

ஒவ்வோர் ஆணின் வெற்றி தோல்விக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வார்கள். நிறைவேறா தாகங்களின் நிழலாகவும் இருக்கிறாள். நிறைவேறிய பாவங்களின் சுமையாகவும் இருக்கிறாள்.
 

இது முற்றிலும் உண்மை. 2015-ஆம் ஆண்டில் 1எம்.டி.பி. பிரச்சினை பற்றிக் கொண்ட போது நஜீப் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். அதைத் தடுத்து நிறுத்தியவர் ரோஸ்மா தான்.

இது இறைவனின் சோதனை. ராஜினாமா செய்ய வேண்டாம் என்று நஜீப்பை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இல்லை என்றால் நஜீப் தன் பதவியை ராஜினாமா செய்து இருப்பார். நிலைமை வேறு மாதிரி பயணித்து இருக்கலாம் என்பதே பலரின் கருத்து.


ஜோக்கர் ஜோலோ அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருந்த போது வளைகுடா நாட்டு அரசக் குடும்பங்களுடன் அவருக்கு நல்ல நட்பு முறை உறவுகள் இருந்தன. அந்த அரச நட்பு நன்மதிப்புகளை அடையாளம் காட்டி ரோஸ்மாவிடம் ஜோலோ நல்ல பெயர் எடுத்து விட்டார்.
 

சின்ன வயதில் பெரிய சாதனையாளர் என்று ஜோலோவை ரோஸ்மா புகழ்ந்து பேசி இருக்கிறார். இலண்டனில் நஜீப்பிற்கு ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டிற்குப் பக்கத்திலேயே ஜோலோவின் குடும்ப வீடும் இருந்து இருக்கிறது. அதனால் ரோஸ்மாவைச் சந்தித்துப் பேசவும் ஜோலோவிற்குச் சுலபமாகிப் போனது.

அபுடாபி நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு முதலீட்டு நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்திடம் பேசி மலேசியாவில் முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்தவர் ஜோலோ. அந்த வகையில் அந்த நிறுவனத்திடம் இருந்து நஜீப்பிற்கு கடனாகப் பணம் பெற உதவியும் செய்தவர் ஜோலோ.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ரோஸ்மாவிற்கு ஜோலோவின் மீது நம்பிக்கை மேலும் கூடியது. ஜோலோவை ஒரு வெற்றித் திருமகனாகப் பார்த்தார். அதற்கு அடுத்த கட்டமாகத் தான் 1எம்.டி.பி. முதலீட்டு நிறுவனம் வருகிறது. ஜோலோ தான், முன் நின்று 1எம்.டி.பி. நிறுவனத்தை அமைத்துக் கொடுத்தவர். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.

1எம்.டி.பி. நிறுவனத்தில் ஜோலோ தன்னிச்சையாகச் செயல் படுவதற்குச் சகல அதிகாரங்களையும் நஜீப் வழங்கி இருக்கிறார். நஜீப்பைக் கேட்காமலேயே 1எம்.டி.பி. நிறுவனத்தின் பல நிதிப் பிரச்சினைகளுக்கு ஜோலோ தன்னிச்சையாகவே முடிவு எடுத்து இருக்கிறார். எல்லாமே கோடிக் கோடியாகப் புரண்ட பணப் பரிவர்த்தனைகள்.
 

ஜோலோ ஒரு பிளேபாய். பலருக்கும் தெரிந்த விசயம். அந்த மன்மதப் பார்வையில் 1எம்.டி.பி. பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்த போது மேடம் போஸ் ரோஸ்மாவையும் மறக்கவில்லை.

நியூயார்க், துபாய், இலண்டன், பாரிஸ் போன்ற நகரங்களுக்குப் பறந்து சென்று விலை உயர்ந்த வைர நகைகள்; பிர்கின் பிஜான் கைப்பைகள்; ரேய் பென் போலரைட் கறுப்புக் கண்ணாடிகள்; ரோலெக்ஸ் ராடோ கைக்கடிகாரங்கள் போன்றவற்றைத் தேடிப் பிடித்து வாங்கி ரோஸ்மாவிற்கு அன்பளிப்பு செய்து இருக்கிறார்.

அந்த அட்டகாசமான ஆடம்பரமான அன்பளிப்புகளைக் கண்டு ரோஸ்மா வானத்தில் மிதந்து இருக்கலாம். உச்சி குளிர்ந்து நட்சத்திரக் கூட்டங்களின் மழையில் நனைந்து இருக்கலாம். தெரியவில்லை.

இருந்தாலும் நகைகளைக் கொண்டு பெண்கள் பலரைக் கவர்ந்துவிட முடியும் என்பதை ஜோலோ சின்ன வயதிலேயே நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.

ரோஸ்மா எப்போதும் ஒரு கோடீஸ்வர வாழ்க்கை வாழ வேண்டும். அதில் இருந்து அவர் கீழே இறங்கி வந்துவிடக் கூடாது. அந்த வட்டத்திற்கு உள்ளேயே அவர் வாழ வேண்டும் என்று கண்ணும் கருத்துமாய்த் திட்டம் போட்டுத் தான் ஜோலோ காய்களை நகர்த்தி இருக்கிறார். கடைசியில் மலேசிய மக்களுக்கும் நன்றாகவே ஆப்பு வைத்து விட்டார்.
 

பிரதமர் ஆனதும் அமெரிக்காவிற்கு முதன்முறையாக நஜீப் பயணம் மேற்கொண்டார். அப்போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் நஜீப் - ரோஸ்மா வருகையை இரு பக்கங்களுக்கு ஜோலோ விளம்பரம் செய்து அசத்தி இருக்கிறார்.

அது கவிதைகள் கலந்த ஒரு புகழ்மாலை விளம்பரம். விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு தெரியுங்களா. 450000 ரிங்கிட். அதாவது 4 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்.

என்னங்க இது. அநியாயமாக இல்லை. இத்தனைக்கும் நஜீப் அப்படி ஒரு விளம்பரத்தைக் கேட்கவும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. இத்தனைக்கும் அது அவருடைய ஓர் அதிகாரப்பூர்வ அமெரிக்கப் பயணம்.

இது இப்படி இருக்கும் போது அமெரிக்கப் பிரபலங்களைச் சந்திக்க ரோஸ்மா ஆசைப்பட்டு இருக்கிறார். மகுடி வாசிக்கத் தெரிந்த மன்மதக் குஞ்சு ஜோலோ. சும்மா இருப்பாரா. அமெரிக்கப் பிரபலங்கள்; ஹாலிவூட் நடிகர் நடிகைகள் கொண்ட ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சிக்குத் தடபுடலாக ஜோலோ ஏற்பாடு செய்து இருக்கிறார்.

பணம் தான் இங்கே கொட்டோ கொட்டுனு கொட்டுதே. அவர் வீட்டுப் பணம் இல்லையே. அப்புறம் என்னங்க. பெரிய ஆர்ப்பாட்டமான ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சி. நியூயார்க் செயிண்ட் ரெஜிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலில் அந்த நிகழ்ச்சி. அதில் ரோபர்ட் டி நீரோ, ஜேமி பாக்ஸ் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள்.

இந்தச் சமயத்தில் ரோஸ்மாவின் மூத்த கணவரின் மகன் ரிஷா அசீஸுக்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஜோலோ அமைத்துக் கொடுத்தார்.

அதன் பெயர் ரெட் கிரனைட் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்திற்கு 1எம்.டி.பி.யில் இருந்து 234 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. அமெரிக்க நீதித்துறை வழங்கிய புள்ளி விவரம் அது.

இந்த நிறுவனம் தான் ’தி ஊல்ப் ஆப் வால் ஸ்டிரீட்’ எனும் திரைப் படத்தைத் தயாரித்தது. அமெரிக்காவின் அகடமி விருதிற்கு முன்மொழியப்பட்ட படம்.

இந்தப் படத்தில் அமெரிக்கப் புகழ் லியார்னடோ டிகாப்ரியோ நடித்து இருந்தார். இவருக்கும் ஜோலோ விலை உயர்ந்த அன்பளிப்புகள் செய்து இருந்தார். அவை எல்லாம் அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

1எம்.டி.பி. நிறுவனத்தில் இருந்து இதுவரை 1890 கோடி ரிங்கிட் களவாடப்பட்டு உள்ளது. அமெரிக்க நீதித்துறை சொல்கிறது. எத்தனை கோடி என்பதைக் கவனியுங்கள்.

ஒரு கோடி அல்ல. இரண்டு கோடி அல்ல. 1890 கோடிகள். அத்தனைக் கோடிகளும் மலேசிய மக்களின் பணம். கடன் வாங்கியாச்சு. அப்புறம் என்ன. இனிமேல் தான் வியர்வை சிந்தி உழைத்துக் கட்ட வேண்டும். நீங்களும் நானும் தான். தாயின் வயிற்றில் கண் திறக்காத பிள்ளையும் கடன்பட்டு இருக்கிறது. அதை மறந்துவிட வேண்டாம்.

அந்தப் பணத்தின் ஒரு பகுதியில் இருந்து பிக்காசோ ஓவியம்; விலையுயர்ந்த மாளிகைகள்; ஹாலிவூட் திரைப்பட நிறுவனம்; 100 கோடி ரிங்கிட் சொகுசுக் கப்பல்; 80 கோடி ரிங்கிட் வைர நகைகள்; 35 மில்லியன் ஜெட் விமானம் போன்றவை வாங்கப்பட்டு உள்ளன.

இன்னும் நிறைய உள்ளன. சிலரின் சொந்தக் கணக்கில் பல கோடிகள் போய் பதுங்கிக் கொண்டன. பட்டியல் போட்டால் மயக்கம் வரும். மலேசிய மக்களின் சோகக் கதை நாளையும் வரும்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. When late Prime Minister of Singapore Lee Kuan Yew met with Najib in 2009, Lee invited Rosmah to join the discussion because he learned that Najib and Rosmah worked as a team. - https://www.feedme.com.my/11-things-exposed-about-rosmah-from-royal-childhood-marriage-stealing-billions-with-jho-low/

2. RM2.6 billion is a donation to me - https://www.feedme.com.my/najib-birkins-cash-and-jewellery-are-all-gifts-didnt-know-about-1mdb-scandal/2/

3. The Balloon Goes Up On 1MDB - Leo's Paintings, Rosie's Diamonds, Jho Low's Yacht and Miranda Kerr's Jewels Snatched By The Feds - http://www.sarawakreport.org/2017/06/the-balloon-goes-up-on-1mdb-leos-paintings-rosies-diamonds-jho-lows-yacht-and-miranda-kerrs-jewels-snatched-by-the-feds/

4. Rosmah’s pursuit of the trappings of wealth played a crucial part in pushing Najib’s administration deeper into graft, ultimately leading to the government’s downfall - http://www.thetruenet.com/debunked/wsj-rosmah-the-central-force-behind-najibs-actions-on-1mdb/