26 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 9

தமிழ்மலர் - 26.11.2018 - திங்கட்கிழமை

ஒரு பொய்யை ஒன்பது பேரிடம் ஒன்பது நாளைக்குத் தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். பத்தாவது நாள் அந்த பொய் பழைய ஜிகினா மாதிரி பல்லைக் காட்டிச் சிரிக்கும். அதற்குப் பெயர் தான் கோயபல்ஸ் பொய். 




அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அந்த மாதிரி ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டே இருந்தால் அந்தப் பொய்யும் ஒரு நாளைக்கு மெய் போல நகரும். ஆனால் அந்தப் பொய் மாயைக்கு ஆயுசு குறைவு. ஒரு கட்டத்தில் அதுவாகவே செத்துப் போகும்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் எனும் கூற்றுக்கு நிதர்சனமாகவே வாழ்ந்து காட்டியவர் உலக மகா ஹிட்லரின் ஆத்மார்த்த நண்பர் கோயபல்ஸ். ஹிட்லரின் பொய்களை உண்மையாக்கிக் காட்டியவர். பொய் மந்தைகளின் கூட்டத்தில் அட்டகாசப் புளுகனாக வாழ்ந்தவர்.

இவரைப் போல 1எம்.டி.பி. நிறுவனத்திலும் இருந்தார்கள். ஆனால் 1எம்.டி.பி. அருள் கந்தா அப்படி அல்ல. பொய் பேசத் தெரியாதவர் என்று சொல்ல மாட்டேன். 1எம்.டி.பி.யைக் காப்பாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லி வசமாக மாட்டிக் கொண்டவர். 




ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய். அந்தப் பொய்யை மறைக்க மற்றும் ஒரு பொய். இப்படி பொய்களின் மேல் பொய்களைச் சொல்லிச் சொல்லியே பெயரைக் கெடுத்துக் கொண்டார். பாவம் அவர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டு இருக்கும் போது அந்த டைட்டானிக் கப்பலைவிட வேறு ஒரு பெரிய கப்பல் வந்து இருந்தால் இரண்டாயிரம் மூவாயிரம் பேரைக் காப்பாற்றி இருக்கலாம். குட்டிக் குட்டி மீன்பிடிப் படகுகளை வைத்துக் கொண்டு காப்பாற்ற முடியாமல் போனது தான் வரலாறு. அந்த மாதிரி தான் 1எம்.டி.பி.யிலும் நடந்தது.

1எம்.டி.பி.யின் தலைமை அதிகாரியாகப் பதவியை ஏற்ற அருள் கந்தாவினால் 1எம்.டி.பி.யைக் காப்பாற்ற முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அருள் கந்தா பதவி ஏற்பதற்கு முன்னர் 1எம்.டி.பி.யில் சொல்லில் மாளா குழப்படிகள். எக்கச்சக்கமான குழறுபடிகள். மோசமாக இருந்த நிலைமையை இவர் போய் மேலும் மோசமாக்கி விட்டார். காப்பாற்ற முயற்சிகள் செய்தார். உண்மை. வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் எதையாவது செய்ய வேண்டும் இல்லையா.




ஆனால் இவரால் எதையும் சரியாக முறையாகச் செய்ய முடியவில்லை. தலைக்கு மேலே வெள்ளம் போய்க் கொண்டு இருக்கிறது. சுனாமி வந்து கதைவைத் தட்டுகிறது. இவரால் என்னங்க செய்ய முடியும்.

இவர் வாங்கிய ஐந்து மில்லியன் ஆண்டுச் சம்பளத்திற்கு வகை வகையாய்க் கதைகள் தான் பேச முடிந்தது. அந்தக் கதைகளில் ஆயிரத்தெட்டு பொய் மூட்டைகளை அவிழ்க்க வேண்டி வந்தது. அந்த பொய் மூட்டைகளில் சேக்ஸ்பியர் நாடகங்கள். அப்படியே நெஞ்சு வெடிக்கும் நகைச்சுவைகள். சாலமன் பாப்பையாவும் சரி; திண்டுக்கல் லியோனியும் சரி; அருள் கந்தாவிடம் ஒன்றும் வாசிக்க முடியாது.

இவை எல்லாம் பொதுத் தேர்தலுக்கு முன்னால் நடந்தவை.

1எம்.டி.பி. வாங்கிய கடன்கள் கோடிக் கோடிகள். அவற்றின் வட்டியைக் கட்டுவதற்கு அருள் கந்தா மேலும் மேலும் கடன்களை வாங்கினார். ஆட்டைப் பிடித்து மாட்டுக் கொட்டகையில் அடைப்பது. மாட்டைப் பிடித்து ஆட்டுப் பட்டியில் கட்டுவது. எத்தனை நாளைக்குத் தான் ஆடும் மாடும் புல் மேயாமல் பே பே என்று கத்திக் கொண்டு இருக்கும். சொல்லுங்கள். அவற்றுக்கும் வாய் வயிறு இருக்கிறது இல்லையா.




சொல்லப் போனால் அருள் கந்தா வாங்கிய கடன்களின் வட்டிகளே குட்டிப் போட்டு பேரன் பேத்திகள் எடுத்து விட்டன. அருள் கந்தாவைத் தவிர வேறு எவர் வந்து இருந்தாலும் சமாளிக்க முடியாத நிலைமை.

ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டிக் கட்ட ஒரு புதிய கடனை வாங்குவது. அந்தக் கடனுக்கு வட்டி கட்ட வேறு ஒரு கடனை வாங்குவது. அந்தக் கடனைத் தூக்கி இந்தக் கடனில் போடுவது. இந்தக் கடனைத் தூக்கி அந்தக் கடனில் போடுவது.

அதாவது ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். அந்தக் கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். இப்படி கடன் மேல் கடன்களை வாங்கி வாங்கி 1எம்.டி.பி.யைக் கடன்காரக் கடலில் மூழ்கடுத்தி விட்டார். கடன்களில் இருந்து கடன்களைக் கழிக்க, கடன்கள் வாங்கியது தான் 1எம்.டி.பி.யில் அவர் செய்த மகா பெரிய சேவை. வேறு ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.




நஜீப், இர்வான் ஸ்ரீகார் அப்துல்லா, ஜோலோ, பால் ஸ்டேட்லன், ஜாஸ்மின் லூ, எரிக் டான்; இந்த வரிசையில் அடுத்து வருபவர் அருள் கந்தா. சமயங்களில் இவரை அனக்கொண்டா கந்தா என்றும் சிலர் அழைக்கிறார்கள். நாம் அப்படி அழைக்க வேண்டாமே. மிகவும் மரியாதையாக அஸ்ருள் கந்தா கந்தசாமி என்று அழைப்போம். அதுதான் அவருடைய உண்மையான பெயர்.

அருள் கந்தா அருமையான பேச்சாளர். ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னர் வரையில் பழைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் பலர் அவர் பின்னால் அணிவகுத்துக் கொடி பிடித்து நின்றனர்.

1எம்.டி.பி.யின் புகழாரங்களைக் கேட்பதற்காக அல்ல. அந்தப் புகழாரங்களைக் கேட்டு மக்கள் எப்படி ஆனந்த மழையில் நனைகிறார்கள் என்பதை ரசிப்பதற்காகத் தான். ஓநாய்கள் மழையில் நனைந்தாலும் அழுவது இல்லை. தெரியும் தானே. அப்படி அழுதால் எதற்கோ ஆப்பு வைக்கின்றன என்று அர்த்தம்.




அருள் கந்தா 14-ஆவது போதுத் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சாலைக் காட்சிகளைப் போட்டு மக்களை நனையாமல் குளிப்பாட்டினார். பேரும் புகழும் எடுத்தார். சாலைக் காட்சி என்றால் ரோட் ஷோ.

அப்படி ஒன்றும் அவர் மாயஜால மந்திரச் சொற்களைப் பயன்படுத்தி மக்களைக் கவரவில்லை. எல்லாம் ஊடகங்களின் பக்கவாத்தியங்கள் தான். வானொலியும் தொலைக்காட்சிகளும் அருள் கந்தாவின் மேடைப் பேச்சுகளை உச்சத்தில் கொண்டு போய் உசுப்பேத்தி வைத்தன. அந்த உசுப்பலில் உறுமி மேளம் அடித்தவர்; அண்டப் புளுகர் ஆகாசப் புளுகர் கோயபல்ஸையும் மிஞ்சிப் போனார்.

மூத்த அரசியல்வாதியின் முகத் துதிக்காக பெரிய பெரிய ஆர்ப்பாட்டங்கள். வெள்ளை நீலக் கொடிகளால் வீதிகள் பூராவும் படு ஜோரான அமர்க்களங்கள். பொதுத் தேர்தலுக்கு முதல்நாள் வரையிலும் 1எம்.டி.பி. என்பது ஒரு ராக மாளிகையாகவே களைகட்டி நின்றது.

 
பொதுத் தேர்தலுக்குப் முன்னர் அருள் கந்தா மலேசியா முழுமையும் சுற்றிச் சுற்றி வந்தார். 1எம்.டி.பி. பற்றி விளக்கப் பிரசாரங்கள் செய்தார். நீங்கள் கேளுங்கள் நாங்கள் பதில் தருகிறோம் எனும் மேடை நிகழ்ச்சிகள்.

You Ask, We Answer

அருள் கந்தா வயது 41. இவர் 1977-ஆம் ஆண்டு பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். கோலாலம்பூர் அரச இராணுவக் கல்லூரியில் படித்தவர். 1998-ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றார். சட்டத் துறையில் பட்டம் பெற்றார். லண்டன் நகரிலும் பாஹ்ரேயின் நாட்டிலும் பணிபுரிந்தார்.

பின்னர் 2015 ஜனவரி மாதம் 5-ஆம் தேதி 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றார். 1எம்.டி.பி.யின் மீது புகழ்மாலைகள் சூட்டுவது தலையாய வேலை. நல்லாவே செய்தார். நஜீப் வட்டாரத்தில் நல்ல பெயரையும் எடுத்தார்.




பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அருள் கந்தாவின் உலகம் தலைகுப்புற சரிந்து விழுந்தது. அதே போல பல ஆயிரம் பேரின் எதிர்பார்ப்புகளும் சரிந்து விழுந்தன. பொதுத் தேர்தலில் நஜீப் நிச்சயம் வெற்றி பெறுவார். எப்படியாவது தங்களைக் காப்பாற்றி விடுவார் என்று அருள் கந்தாவும் எதிர்பார்த்தார். நஜீப்பின் நம்பிக்கை நடசத்திரங்களும் எதிர்பார்த்தன.

இவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது வேறு. ஆண்டவர் வேறு மாதிரி எழுதி வைத்து விட்டார். மக்கள் குரலே மகேசன் குரல் என்று தீர்ப்புச் சொல்லி விட்டார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாரிசான் தோற்கடிக்கப்பட்டு புதிய அரசாங்கம் வந்தது. 2018 மே மாதம் இவர் மீது புலன் விசாரணைகள் தொடங்கின. நம்பிக்கை மோசடிகள்; பொய்யான பரப்புரைகள் எனும் குற்றச்சாட்டுகள்.

அருள் கந்தாவை நிதியமைச்சர் தன் அலுவலகத்திற்கு அழைத்தார். 2018 மே மாதம் 30-ஆம் தேதி நடந்தது. 1எம்.டி.பி. கடன்காரர்களுக்கு 143 மில்லியன் ரிங்கிட் (143,750,000 ரிங்கிட்) வட்டி கட்ட வேண்டும். என்ன செய்வது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள். நீங்கள் தானே 1எம்.டி.பி.யின் தலைமைச் செயல் அதிகாரி என்று நிதியமைச்சர் அருள் கந்தாவைக் கேட்டார்.




ஆனால் அருள் கந்தா அழகாகச் சமாளித்து விட்டார். ’நான் விடுமுறையில் இருந்தேன். அதனால் 1எம்.டி.பி.யின் நிதியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று தடாலடியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

புதிய நிதியமைச்சர் லீ குவான் எங் அவர்கள், மயக்கம் போட்டு விழாத குறைதான். அருள் கந்தா நம்பிக்கைக்கு அப்பால் பட்டவர்; அவர் நம்ப முடியாத ஒரு மனிதர் என்று வருத்தப் பட்டார்.

2016 - 2017-ஆம் ஆண்டுகளில் 1எம்.டி.பி. பற்றிய தில்லுமுல்லுகளை அமெரிக்க நீதித் துறை விலாவாரியாகப் பிட்டுப்பிட்டு வைத்தது. அதற்கு அருள் கந்தா, ‘1எம்.டி.பி. பற்றி எனக்குச் சரியான விவரங்கள் இல்லை. அதனால் அதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை’ என்று சொன்னவர் தான் இதே இந்த அருள் கந்தா. இது எப்படி இருக்கு? 


ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி; அதுவும் கோடிக் கணக்கில் புரள்கின்ற ஒரு நிறுவனத்தின் உயிர்நாடி; அப்படிப்பட்ட ஒருவர் அந்த நிறுவனத்தைப் பற்றிய கணக்கு வழக்குகள் தமக்குத் தெரியாது என்று சொல்லிக் கைகழுவிக் கொண்டால் எப்படிங்க. வேடிக்கையாக இல்லை.

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

எனும் பாடல்கள் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

’நீ பார்த்தாய்; நான் பார்க்கவில்லை. நான் பார்த்தேன். நீ பார்க்கவில்லை. அதற்கு நான் என்ன செய்வது. ஐ ஆம் வெரி சாரி’ என்று சொல்வது போல இருந்தது. உலக ஊடகங்கள் கைதட்டின. அருள் கந்தாவிற்கு வாழ்த்துகள் சொல்லின. உண்மைதான். பொய் சொல்லவில்லை.

அப்புறம் என்னங்க. பெரிய ஒரு முழுப் பூசணிக்காயை ஒரு கவளச் சோற்றுக்குள் அடக்கி வைத்து பூசணிக்காய் எங்கே என்று கேட்டால் யாருக்குத் தான் சிரிப்பு வராது. அட போங்கடா நீங்களும் உங்க அகடவிகடமும் என்று பெருமூச்சு விட்டார்கள்.



அருள் கந்தா மீது இசைமாரியில் வசைமாரி பொழிந்தவர்களில் முதலிடம் வகிப்பவர் பெட்டாலிங் உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா. சும்மா சொல்லக் கூடாது.

அடுப்பாங் கரைக்குக் கறுப்புத் துணியைக் கட்டிவிட்டது மாதிரி கேள்விகள் கேட்டார். அமெரிக்க நீதித் துறையின் புள்ளிவிவரங்களை அடுக்கி அடுக்கி வைத்தார்.

சரவாக் ரிப்போர்ட்டின் கண்டுபிடிப்புகளைச் சரம் சரமாய்த் தூக்கிப் போட்டார். தி எட்ஜ் நாளிதழின் சான்றுகளை வரிவரியாய் வரிந்து காட்டினார். அவற்றை எல்லாம் கிண்டல் கேலி வீடியோக்களாகத் தயாரித்து வசைப் புகழ்ச்சி பாடினார். (satirical videos).

அருள் கந்தாவின் மீது எப்போது வேண்டும் என்றாலும் குற்றப் பத்திரிகைகள் வாசிக்கப் படலாம். 


நம்பினார் கெடுவது இல்லை; அது நான்மறைத் தீர்ப்பு என்று சொல்வார்கள். நஜீப் அருள் கந்தாவை நம்பினார். அருள் கந்தா நஜீப்பை நம்பினார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நம்பினார்கள். ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரியாகத் தீர்ப்பு எழுதிச் செல்கின்றது.

(தொடரும்)
மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8
மலேசியா 1MBD மோசடி - 9
மலேசியா 1MBD மோசடி - 10

சான்றுகள்

1. Brown, Clare Rescastle (2018). The Sarawak Report: The Inside Story of the 1MDB Exposé. Gerak Budaya. ISBN 9789670311166.

2. Wright, Tom; Hope, Bradley (2018). Billion Dollar Whale: The Man Who Fooled Wall Street, Hollywood, and the World. Hachette UK. ISBN 9780316436489.

3. Global Witness, "The Real Wolves of Wall Street - The banks, lawyers and auditors at the heart of Malaysia’s biggest corruption scandal - https://www.globalwitness.org/documents/19316/The_Real_Wolves_of_Wall_Street_Global_Witness_897.80KB.pdf

4. "Malaysian Prime Minister transferred US$650 million back to Singapore Bank". StatesTimesReview, Singapore. 15 August 2015  - http://statestimesreview.com/2015/08/15/malaysian-prime-minister-transferred-us650-million-back-to-singapore-bank/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக