21 September 2019

கோலார் தங்கவயல் தமிழர்கள் - 1

உலகிலேயே அதிக ஆழமான தங்கச் சுரங்கம். உலகிலேயே அதிகமான சுரங்கப் பாதைகள் சூழ்ந்த தங்கச் சுரங்கம். உலகிலேயே அதிகமான தமிழர்களைப் பலி வாங்கிய தங்கச் சுரங்கம். 


அது மட்டும் அல்ல. உலகிலேயே அதிகமான தமிழர்களை அனாதைகளாக்கி விட்ட சுரங்கம் என்று சொல்கிறார்கள். கோலார் தமிழர்கள் சோகத்தை மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டு வாழக் கற்றுக் கொடுத்த தங்கச் சுரங்கம் என்றும் சொல்கிறார்கள்.

இதையும் தாண்டிய நிலையில் மேலும் ஒரு கருத்து. கர்நாடகாவில் அதிகமான குண்டர் கும்பல்களை உருவாக்கி விட்ட சுரங்கம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தக் கோலார் தங்க வயலையும்; குண்டர் கும்பல்களையும் பின்னணியாகக் கொண்டு 2018-ஆம் ஆண்டு கே.ஜி.எப் (KGF – Kolar Gold Fields) எனும் கர்நாடகப் படம் வெளியிடப் பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. படு சூப்பரான பாக்ஸ் ஆபீஸ் வசூல். சரி.மலாயாவுக்குத் தமிழர்களை இறக்குமதி செய்த அதே அந்த ஆங்கிலேயர்கள் தான் கோலார் தங்க வயலுக்கும் தமிழர்களை இறக்குமதி செய்தார்கள். கடைசியில் கட்டிப் பிடித்து, ஏலோலங்கிடி தில்லாலங்கடி என்று ‘பை பை’ காட்டி விட்டுப் பறந்து விட்டார்கள். மன்னிக்கவும். எப்படியாவது வாழ்ந்து தொலையுங்கள் என்று கம்பி நீட்டி விட்டார்கள். கொஞ்சம் நல்ல வார்த்தையைப் பயன்படுத்துவோமே.

அதற்காக நாம் என்ன இங்கே உளுத்தம் கஞ்சியையும் உப்புமாவையுமா அரைத்துக் கொண்டு இருக்கிறோம். சொல்லுங்கள். வாங்கி வந்த வரம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறோமா. இல்லை கப்பல் கவிழ்ந்து விட்டது என்று கன்னத்தில் கை வைத்து ஒப்பாரி வைக்கிறோமா… இல்லீங்களா. போராடிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறோம். அம்புட்டுத் தான்.

சுரங்கத்தின் மீது பழி போடுவதில் நமக்கு சற்றும் உடன்பாடு இல்லை. எய்தவன் இருக்க அம்பு என்ன செய்யும்? கோலார் தங்கவயல் தமிழர்களின் வாழ்வியலில் சுதி சேர்த்த ஒரு தங்கச் சுரங்கம். அதைத் தவறாகப் பேசுவது தப்பு என்பதே நம் கருத்து. தங்கவயல் தமிழர்களைத் தடம் தொலைத்த தமிழர்கள் என்றுதான் என்னால் சொல்ல முடிகிறது. காலத்தின் கட்டாயம். அவர்களின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டு விட்டது.கோலார் தங்கவயல் அல்லது தங்கச் சுரங்கத்தைப் பற்றி பலர் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். தெரிந்து கொள்ளுங்கள்.

கோலார் தங்கவயல் பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால்... ஒரு காலத்தில் இலட்சக் கணக்கான தமிழர்களுக்கு ஓர் அட்சய பாத்திரம். ஆனால் அதுவே இந்தக் காலத்தில் ஓர் அனாதை ரட்சகம். மன்னிக்கவும்.

கோலார் தங்கச் சுரங்கத்தின் வரலாறு நீண்டு நெடிந்து போகிறது. உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் ஒடிந்தும் போகிறது.

மினுமினுக்கும் இந்தச் சுரங்கம் இந்தியாவின் வரலாற்றில் தனிப் பெரும் தத்துவம் பெற்ற தங்கச் சுலோகம் தான். உண்மை அதுதான்.மலேசியத் தமிழர்கள் இந்தப் பக்கம் எப்படி அவதிப் படுகிறார்களோ; அதே மாதிரி தான்... அங்கேயும் கோலார் தமிழர்களும் கோலாருக்குப் போய் அவதிப் படுகிறார்கள். மலேசிய இந்தியர்களை விட மேலும் மோசமாக அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கர்நாடக அரசின் கெடுபிடிகளில் சிக்கித் தவித்துக் கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன்.

கோலார் தங்க வயல்களைத் திறந்த போது கர்நாடகா மக்கள் வேலை செய்ய தயங்கினார்கள். கஷ்டமான வேலை; உயிருக்கு ஆபத்தான வேலை என்று மறுத்தார்கள். மழுப்பினார்கள்.

சுரங்கத்திற்குள் காற்றுச் சேட்டைகள் அதிகமாம். கன்னா பின்னா என்று உரசிக் கொண்டு போகுமாம். காட்டுச் சேட்டைகள் எகிறிப் பாய்ந்து கழுத்தைக் கிழித்து இரத்தம் குடிக்குமாம்; சுவடு இல்லாமல் சுரங்கச் சுவரில் அடித்தே சாகடித்து விடுமாம். இப்படிச் சொல்லிச் சொல்லியே பலரையும் போக விடாமல் செய்து விட்டார்கள்.

இதற்கு மாற்று வழியாகத் தான் தமிழகத்தில் இருந்து தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். அப்போதைய ஆங்கிலேயர்களின் சாணக்கியத்தின் பரிபாலனச் சேவையின் முதல் கட்டம். ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழகத்தின் தர்மபுரி; கிருஷ்ணகிரி; சேலம்; வட ஆற்காடு; தென் ஆற்காடு, சித்தூர், மதனப்பள்ளி, அனந்தப்பூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் குறைந்த அளவு தெலுங்கு வம்சாவளியினரும் இருந்தார்கள்.

இவர்கள் மூன்று தலைமுறைகளாக வேலை செய்தனர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சுரங்கம் மூடப் பட்டது. அதனால் அங்குள்ள தமிழர்கள் வேலை இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஏழ்மை நிலைமையின் வறுமையில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். சரி.

கோலார் தங்கச் சுரங்கத்தைப் பற்றி சுருக்கமாகக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

கோலார் தங்கச் சுரங்கம் (Kolar Gold Fields), கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில், பங்காருபேட்டை தாலுக்காவில் உள்ளது. டோடு பெட்டா மலையின் கிழக்குச் சரிவில் 3,196 அடி உயரத்தில் உள்ளது.

தமிழர்களின் நாகரிக வரலாற்றுக் காலத்தில் இருந்தே இந்தத் தங்க வயல் புகழ் பெற்று விளங்கி உள்ளது. 1920-ஆம் ஆண்டுகளில் சிந்து வெளி ஹரப்பா - மொகஞ்சதாரோ பகுதிகளில் பழங்காலத்து வரலாற்றுப் புதையல்கள் கிடைத்தன.

அந்த ஹரப்பா - மொகஞ்சதாரோ புதையலில் கிடைத்த தங்கக் கட்டிகளும்; இங்கே இந்தக் கோலார் தங்கச் சுரங்கங்களில் கிடைத்த தங்கக் கட்டிகளும் ஒரே மாதிரியான குணம் கொண்டு உள்ளன என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

அந்த வகையில் தமிழர் நாகரிகம் என்பது மிக மிகப் பழமையானது; அந்த நாகரிகம் தமிழகத்தில் இருந்து இந்தியக் கண்டத்தின் சிந்து வெளி ஹரப்பா மொகஞ்சதாரோ வரை பரவி இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்து இருக்கிறார்கள். ஆகவே உலகத் தமிழர்கள் கோலார் தங்க வயல்களுக்கு நன்றி கூற வேண்டும்.இந்தச் சுரங்கத்திற்கும், திப்பு சுல்தான்; மராட்டிய வீரர் சிவாஜி போன்றவர்களுக்கும் ஓரளவிற்குப் பங்கு உண்டு. ஆனால் ஆங்கிலேயர்களுக்குத் தான் அதிகமான பங்கு. அவர்கள் காலத்தில்தான் இந்தச் சுரங்கம் பெரிய அளவில் வளர்ந்தது.

1880-ஆம் ஆண்டில் டெய்லர் அண்ட் சன்ஸ் (John Taylor and Sons Company) எனும் நிறுவனம் தான் முதன்முதலில் பெரிய அளவில் தோண்டத் தொடங்கியது.

இதற்காகப் பெரும் அளவில் மக்கள், தமிழ்நாட்டில் இருந்தும்; சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களுக்குச் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்த வகையில் கோலார் தங்க வயல் நகர்ப்புறம் உருவானது.

1956-ஆம் ஆண்டில் மைசூர் அரசு இந்தத் தங்கச் சுரங்கத்தை இந்திய அரசுக்குச் சொந்தமாக மாற்றியது. சுரங்கத்தின் பெயர் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (Bharat Gold Mines Limited ) என்று மாறியது. கடந்த 150 ஆண்டுகளில் ஏறக்குறைய 800 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. சுரங்கத்தில் தங்கம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள 26 பகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே இதுவரை தங்கம் தோண்டப்பட்டு உள்ளது.

இப்போது இங்கே தங்கம் எடுக்கப் படுவது இல்லை. இங்கே வேலை செய்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். இன்றும் கோலார் பகுதியில் தமிழர்கள் தான் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

2000-ஆம் ஆண்டுகளில் கோலார் தங்க வயலின் மக்கள் தொகை 300,000 -க்கும் அதிகம் ஆகும். தங்கச் சுரங்கம் மூடப் பட்டதும் பல்லாயிரம் தமிழர்கள் பெங்களூருக்குப் புலம்பெயர்ந்னர். 2011-ஆம் ஆண்டுக் கணக்குப்படி மக்கள் தொகை 144,000 -ஆகக் குறைந்தது.

இப்போதும்கூட கோலார் தங்க வயல் நகராண்மைப் பகுதியில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் 90 விழுக்காடு. தெலுங்கர்கள் 6 விழுக்காடு. கன்னடர்கள் 4 விழுக்காடு.

கர்நாடகாவில் குண்டல் கும்பல்கள் பெருகியதற்கு கோலார் தங்க வயலில் வேலை செய்த தமிழர்கள் தான் காரணம் என்று சொல்லப் படுக்கிறது. கர்நாடகாவில் முதன்முதலாகக் குண்டல் கும்பல் உருவானது இந்த கோலார் பகுதியில் தான்.

கோலார் தங்க வயலையும்; குண்டர் கும்பல்களையும் பின்னணியாகக் கொண்டு சென்ற 2018-ஆம் ஆண்டு கே.ஜி.எப் (KGF – Kolar Gold Fields) எனும் கர்நாடகப் படம் வெளியானது. சொல்லி இருக்கிறேன்.

கோலார் தங்க வயல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும்; முதலில் அதை எப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை அந்தப் படம் நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல ஒரு கற்பனைப் புனைவு.சாதாரண ஒரு கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் வரலாற்றுப் படத்தைப் போன்ற ஒரு பிருமாண்டம். பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இது இரு கன்னடப் படம். இருப்பினும் அத்தகைய உணர்வு ஏற்படவில்லை. ஏதோ வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்த்துக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு. அருமையான ஒளிப்பதிவு. அண்மையில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஒரு வரலாற்று நாயகனின் கதையாக இந்தக் கதையைக் கையாண்டு இருக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. சரி. கோலார் தங்க வயல் வரலாற்றுக்கு வருவோம்.

கோலார் என்கிற சொல் ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போதைய காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்க பட்டது. அதே போல் இன்றைய மைசூர் முன்னைய காலத்தில் எருமையூர் என்று அழைக்கப் பட்டது. பெங்களூரின் பழைய பெயர் வெங்கலூர். நான் சொல்லவில்லை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல்கின்றார்.

ஆக எருமையூர் (மைசூர்), வெங்காலூரின் (பெங்களூர்), குவாலப்புரம் (கோலார்), வடவேங்கடம் (திருப்பதி) தென்குமரி ஆகியவை காலா காலமாகத் தமிழகத்தின் எல்லைக்குள் இருந்து வந்தன.

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக இந்தியாவின் மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அப்படிப் பிரிக்கப்படும் போது பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழ்நாடு தான். இதை யாராலும் மறுக்க முடியாது. மறுத்துப் பேசவும் முடியாது.

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பெங்களூர் பறிபோனது. திருப்பதியும் பறிபோனது. சித்தூர், குப்பம் கிராமங்களும் பறிபோயின.

அதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாளித்தனம்; அடுத்து வடுகத் திராவிடத் தலைவர்களின் மாற்று அரசியல் போக்கு; காமராஜரின் தேசியக் கொள்கை. இந்த மூன்றும் சேர்ந்து தான் தமிழர்களுக்குச் சேர வேண்டிய நிலங்களை எல்லாம் கபளீகரம் செய்து விட்டன.

மங்கலங்கிழார், மா.பொ.சி. போன்ற தமிழர்கள் மட்டும் இல்லை என்றால் சென்னை, திருத்தணி, ஒசூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களும் அடிபட்டுப் போய் இருக்கும்.தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள் இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்யவில்லை. இதில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் பட்டியலைச் சொல்ல வருகிறேன். அதுதான் உண்மையிலும் உண்மை.

வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே... தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் தமிழகத் தலைவர்கள் சிலர் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

மற்ற மற்ற மொழி இனத்தவர் விழிப்புடன் இருந்த போது தமிழகத் தலைவர்களில் சிலர் விழிப்புணர்வு இல்லாமல்; அறியாமையில் மூழ்கிப் போய்க் கிடந்தனர். நமக்கு என்ன வந்தது என்று எறும்பின் மீது மழைப் பொழிந்தது போல் வாளா இருந்தனர். வந்தாரை வாழவிட்டு தங்கள் தொடையிலேயே கயிறுத் திரித்துக் கொள்ள இடம் கொடுத்தனர்.

அதனால் இன்று தமிழர்களுக்கு எத்தனை எத்தனை சோதனைகள். எத்தனை எத்தனை வேதனைகள். அவற்றைக் கண்கூடாக இப்போது பார்க்கிறோம். அந்தக் காலத்து ஒரு சில தமிழகத் தலைவர்களின் அசட்டுத் தனங்களை நினைத்துப் பார்க்கும் போது வேதனைகள் அதி வேதனைகளாய்க் கொப்பளிக்கின்றன.

(தொடரும்)

No comments:

Post a Comment