28 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: அமெரிக்காவை எச்சரிக்கும் மெக்சிகோ

வரலாறு தலைகீழாக மாறி வருகிறது. அமெரிக்கர்கள் இனிமேல் மெக்சிகோவிற்குள் நுழையக் கூடாதாம். மெக்சிகோ மக்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை செய்கின்றனர். 

கொரோனா கோவிட் வைரஸ் தாக்கத்தால் உலகிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்டு அமெரிக்கா தடுமாறி நிற்கிறது. 104,256 பேருக்கு பாதிப்பு. 1,704 பேர் பலி.



அமெரிக்காவில் முறையான சமூகத் தொலைவு முறை (Social distancing) இல்லை. துரிதமான, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவது இல்லை. வந்தால் வரட்டும் என்கிற மெத்தெனப் போக்கு. அதனால் தான் வைரஸ் இவ்வளவு வேகமாக அங்கே பரவியது.

அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தின் தென் பகுதியில் மெக்சிகோ. அங்கே உள்ள எல்லைப் பகுதியில் மெக்சிகோ நாட்டு மக்கள் கடந்த மூன்று னான்கு நாள்களாகப் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதனால் அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்குள் வந்தால் மெக்சிகோவிலும் வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என அஞ்சுகிறார்கள்.

’அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை மூடுங்கள்.’ ‘அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்’. ‘உங்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து வேண்டாம்’ எனும் பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.



அண்மையில் அதிபர் டிரம்ப் சொன்னார். மெக்சிகோ மக்கள் அமெரிக்காவுக்குள் வரக் கூடாது. பெரிய தடுப்புச் சுவர் கட்டப்படும். பல பில்லியன் டாலர்கள் செலவானாலும் பரவாயில்லை. அதிபர் டிரம்ப் சவால் விட்டு மெக்சிகோ மீது போர்க் கொடி தூக்கினர்.

இன்றைக்குப் பாருங்கள். நிலைமை தலைகீழாக மாறி விட்டது. யானைக்கு பூனை மணி கட்டுகிறது. பூனைக்கு எலி மணி கட்டுகிறது. என்ன செய்வது. சமயங்களில் சட்டாம்பிள்ளைக்கு எதிராகச் சாட்டைகள் அவசியம் என்பார்கள். உண்மைதான் போலும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக