01 செப்டம்பர் 2020

மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் - 1

 தமிழ் மலர் - 01.09.2020

தமிழ்நாட்டில் இருந்து பற்பல இனக் குழுக்கள் பற்பல காலக் கட்டங்களில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து உள்ளன. அப்படி புலம் பெயர்ந்த இனக் குழுக்களில் பல்லவர்கள் முக்கியமான ஒரு குழுவினர். அவர்களின் புலம் பெயர்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து உள்ளது.

பல்லவர்கள் ஜாவா; சுமத்திரா; மலாயா; போர்னியோ; பிலிப்பைன்ஸ்; தாய்லாந்து; மியன்மார், கம்போடியா; வியட்நாம்; கொரியா; லாவோஸ் போன்ற இடங்களில் பற்பல அரசாட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய 100-க்கும் குறைவு இல்லாத சிற்றரசுகள் பேரரசுகள்.

வணிக நோக்கத்தோடு போனவர்கள் தான். ’வணிகம் செய்வோம் வாரீர்’ என்று சொல்லக் கேள்வி. அந்த மாதிரி இவர்களும் ’வாரிசுகளை உண்டாக்குவோம் வாரீர்’ என்று சொல்லி போன இடங்களில் எல்லாம் வாரிசுகளை உருவாக்கி விட்டுச் சென்று விட்டார்கள். 

அந்த வாரிசுகளைப் பற்றியும் சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே ஒருவருக்கு ஒருவர் அடித்துப் பிடித்து ஆங்காங்கே சின்ன சின்ன அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். பெரிய பெரிய அட்டகாசம் அமர்க்களம் எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். கடைசியில் வரலாற்றைத் தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டுப் போயே சேர்ந்து விட்டார்கள்.

தொட்டுக்க துடைச்சிக்க ஏதாவது வச்சிட்டு போய் இருந்தால் பரவாயில்லை. இப்போது அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்ச வேண்டிய நிலைமை வந்து இருக்காது. நேற்று வந்த வந்தேறிகள் எல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்கிறார்கள்.

இதைத்தான் காலத்தின் கோலம் என்று சொல்வார்களோ. அல்லது காலத்தின் அலங்கோலம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வார்களோ ஊர் பொல்லாப்பு வேண்டாங்க. நம்ப விசயத்திற்கு வருவோம்.

குத்து மதிப்பாகச் சொன்னால் ஒட்டுமொத்த இந்தோனேசியா; இந்தோசீனா இரு துணைக் கண்டங்களும் இந்தியர்களின் அதாவது பல்லவர்களின் கைகளில் இருந்து உள்ளன. வரலாற்றுப் பாரம்பரிய வழக்கத்தில் சொன்னால் தமிழர்களின் கைகளில் இருந்து உள்ளன.

இருந்தாலும் என்ன. அவர்கள் பிடித்ததே முயல். அந்த முயலுக்கு மூனே முக்கால் கால்கள். அந்தப் பிடிவாதத்தில் முரட்டுவாதம் செய்தார்கள். இருந்தவை எல்லாம் அடிபட்டுப் போய் விட்டன.

கி.மு. 290-ஆம் ஆண்டு தொடங்கி 15-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இந்தியக் கலாசாரச் செல்வாக்குகள் மேலோங்கி இருந்தன. உள்ளூர் அரசியல் கலாசாரங்களில் அழகாய் இணைந்து உச்சம் பார்த்தன.

இந்திய துணைக் கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த சின்னச் சின்ன அரசுகள் தென்கிழக்கு ஆசிய அரசுகளுடன் வர்த்தகம், கலாசாரம், அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அதுவே இது தென்கிழக்கு ஆசியாவில் இந்திய மயமாக்கலுக்கு வழிவகுத்துக் கொடுத்தன (Indianisation within Indosphere) என்றும் சொல்லலாம்.

இந்திய துணைக் கண்டத்தில் இருந்த மற்ற மற்ற இந்து அரசுகளைப் போல் அல்லாமல்; இந்திய தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த பல்லவ ஆளுமைகள் கடலைக் கடப்பதற்குக் கலாச்சார கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை.

தவிர இராஜேந்திர சோழரின் தென்கிழக்கு ஆசியா படையெடுப்பு சோழ சாம்ராஜ்யத்தின் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்திச் சென்று உள்ளது. இதுவே தென்கிழக்கு ஆசியாவிற்கு கடல் வழிகள் வழியாக அதிகமான பரிமாற்றங்களையும் வழிவகுத்துக் கொடுத்தது.

தென்கிழக்கு ஆசியாவின் பூர்வீக மக்கள், கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தெற்கு சீனா பகுதியில் இருந்து குடிபெயர்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

1500 ஆண்டுகளுக்கு முன்னால் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் இந்து மதம் செழித்து வளர்ந்தது. பிரதான மதமாகவும் மாறியது. இருந்தாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. காலப் போக்கில் மறைந்து போனது. மற்ற மற்ற புதிய மதங்களின் வருகையால் இந்து மதம் பின்னடைவு அடைந்தது.

கி.பி. 1500-ஆம் ஆண்டு வரை தென்னிந்திய வர்த்தகர்கள், சமய ஆசிரியர்கள், பாதிரியார்கள், தென்கிழக்கு ஆசியப் பூர்வீக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்தக் கட்டத்தில் இந்து மதமும் பௌத்த மதமும் இந்தியாவில் இருந்து போட்டிப் போட்டுக் கொண்டு வந்து இங்கு நீயா நானா என்று கட்சி கட்டின.

இருப்பினும் பரஸ்பர சகிப்புத் தன்மையுடன் பல நூற்றாண்டுகளாகப் படர்ந்து மலர்ந்தன. இறுதியில் பௌத்த மதம் நிலைத்தது. மற்றும் ஒரு புதிய மதத்தின் வருகையால் அதுவும் காலப் போக்கில் கரைந்து போனது. சரி. பல்லவர்கள் விசயத்திற்கு வருவோம்.

இந்தோனேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே 16 பேரரசுகளைப் பல்லவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு பட்டியல் கொடுக்கிறேன். பாருங்கள். ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

1. சாலகநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500


அடுத்து இந்தோசீனாவை எடுத்துக் கொள்வோம். அங்கேயும் சில பல பேரரசுகளைப் பல்லவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலைப் பார்க்கும் போது மலைப்பு ஏற்படுகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எல்லாம் சாதனைகள் செய்து இருக்கிறார்களே என்று வியக்கவும் வைக்கிறது.

1. பூனான் பேரரசு (Funan Kingdom)

2. சென்லா பேரரசு (Chenla Kingdom)

3. சம்பா பேரரசு (Champa Kingdom)

4. கம்போஜம் பேரரசு (Chenla Kingdom)

5. துவாராவதி (Dvaravati Kingdom)

6. லாவோ (Lavo Kingdom)

7. லான் நா (Lan Na Kingdom)
 
8. சிங்கனாவதி (Singhanavati Kingdom)

9. சுகோத்தாய் (Sukhothai Kingdom)

10. தோன்புரி (Thonburi Kingdom)

11. நாக்கோன் சி தாமாராட் (Nakhon Si Thammarat Kingdom)

அடுத்ததாகப் பிலிப்பைன்ஸ் நாடு. அந்த நாட்டிலும் பல்லவர்கள் சும்மா இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு சின்ன பெரிய அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். சுமத்திரா எங்கே இருக்கிறது. பிலிப்பைன்ஸ் எங்கே இருக்கிறது.

ஈராயிரம் மைல்கள் தாண்டிப் போய் அங்கேயும் கொடி கட்டிப் பறக்கவிட்டு ஓர் ஆட்டம் போட்டு இருக்கிறார்கள். பட்டியலைப் பாருங்கள். பயமாக இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 அரசுகளை உருவாக்கி ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

1. பன்னை மத்தியாஸ் (Madya-as Kingdom)

2. நாமாயான் (Namayan Kingdom)

3. தோண்டோ (Tondo Kingdom)

4. மிண்டானோ (Mindanao Kingdom)

5. மாயிநிலா (Kingdom of Maynila)

6. காபோலான் (Caboloan Kingdom)

7. மாய் மிண்டோரோ (Ma-i Mindoro Kingdom)

8. செபு ராஜாநடம் (Rajahnate Cebu Kingdom)

9. புத்துவான் (Kingdom of Butuan)

10. லானாவோ (Lanao Kingdom)  

11. மாகுயிண்டானோ (Maguindanao Kingdom)

12. மாயிம்போங் (Maimbung Kingdom)


இன்னும் ஒரு விசயம். புருணை நாட்டிலும் ஒரு சிற்றரசு இருந்து உள்ளது. அதன் பெயர் விஜயபுரம் (Vijayapura). இந்த அரசு சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜயத்தின் கண்காணிப்பில் இருந்து உள்ளது. இந்தப் பல்லவர்கள் எந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை போல தெரிகிறது.

அடுத்ததாக மலாயா தீபகற்பம். பல்லவர்களின் ஆளுமை இங்கேதான் முதன்முதலாகத் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. கடாரம் உருவான காலத்தில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குக்கரை கிளந்தான் திரங்கானு பகுதியில் பான் பான் அரசு; சித்து அரசு போன்றவை உருவாகி விட்டன. ஸ்ரீ விஜயத்தின் கண்காணிப்பில் மேலும் சில பல்லவ அரசுகள் மலாயா தீபகற்பத்தில் இருந்து உள்ளன.

1. சித்து (Chitu Kingdom)

2. தாம்பரலிங்கம் (Thambaralinga Kingdom)

3. இலங்காசுகம் (Langkasuka Kingdom)

4. கடாரம் (Bujang Valley Kingdom)

5. கங்கா நகரம் (Gangga Negara Kingdom)

6. கோத்தா கெலாங்கி (Kota Gelanggi Kingdom)


ஏற்கனவே சொன்னது போல தென்கிழக்கு ஆசியாவில் பல்லவர்கள் ஏறக்குறைய 100 அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். சரி. பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் எனும் பொதுவான கருத்து நிலவி வருகிறது. தெரியும் தானே.

தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் எனும் மூவேந்தர்களோடு முற்றுப்புள்ளி வைக்கப் படுகிறது.  மன்னிக்கவும். முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யப் படுகின்றது. அப்படித்தான் சொல்லவும் முடிகின்றது. இது என் கருத்து அல்ல. வரலாற்று ஆய்வாளர்கள் பலரின் கருத்து.

பல்லவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். வடக்கே சிந்து சமவெளியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். தொண்டை மண்டலத்தில் இருந்து வந்த பழங்குடிகளாக இருக்கலாம்.

தெற்கே மணிபல்லவத் தீவில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் எங்கே இருந்து வந்து இருந்தாலும் சரி; தமிழ்நாட்டின் கலை கலாசார கட்டிடக்கலை வளர்ச்சியில் தீவிரமான ஈடுபாடுகள் காட்டி உள்ளார்கள். அதை மறுக்க முடியுமா. மறந்துவிட்டுப் போக முடியுமா?


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.08.2020

சான்றுகள்:

1. Kulke, Hermann (2004). A history of India. Rothermund, Dietmar, 1933– (4th ed.). New York: Routledge.

2. Chandler, David (July 2009). "Cambodian History: Searching for the Truth". Cambodia Tribunal Monitor.

3. Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. pp. 377.

4. Encyclopedia of Ancient Asian Civilizations by Charles F. W. Higham – Chenla – Chinese histories record that a state called Chenla..." (PDF). Library of Congress.

5. Braddell, Roland (December 1937). "An Introduction to the Study of Ancient Times in the Malay Peninsula and the Straits of Malacca". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 15 (3 (129)): 64–126.

(தொடரும்)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக