பரமேஸ்வராவைப் பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள். அந்த வரிசையில் இன்றைக்கும் ஒரு தகவல். பரமேஸ்வரா எப்.எம். (Prameswara FM).
இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, லாமோங்கான் (Lamongan) எனும் இடத்தில் இருந்து ஒலிபரப்பு செய்யப்படும் ஒரு வானொலிச் சேவை. இது ஓர் இந்தோனேசியா நாட்டு தனியார் ஒலிபரப்பு. கடந்த 25 ஆண்டு காலமாக இந்தோனேசிய மொழியில் ஒலிபரப்பு செய்து வருகிறார்கள்.
இந்தோனேசியா நாட்டின் அதிபரில் இருந்து ஜாவா தீவு ஆளுநர் வரையில் இந்த நிலையத்திற்கு வருகை புரிந்து இருக்கிறார்கள். அரசியல்வாதிகளும்; இராணுவத் தளபதிகளும்; கல்விமான்களும்; சமயப் போதகர்களும் பல தடவை பேட்டி அளித்து உள்ளார்கள். தவிர பள்ளிப் பிள்ளைகளும் அடிக்கடி வந்து போகிறார்கள்.
இதன் அசல் பெயர் ‘ரேடியோ 103.9 பரமேஸ்வரா எப்.எம். லாமோங்கான் (Radio 103.9 Prameswara FM Lamongan). ஜாவாவில் புகழ்பெற்ற வானொலி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையத்தார் குடும்ப ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளையும் அடிக்கடி நடத்தி வருகின்றார்கள்.
கிழக்கு ஜாவாவில் உள்ள லாமோங்கான் (Lamongan); கிரெசிக் (Gresik); டூபன் (Tuban); பாபாட் (Babat); போஜோநகரா (Bojonegoro); ஜொம்பாங் (Jombang); மோஜோகெர்டோ (Mojokerto); பசிரான் (Paciran); பிளிட்டர் (Blitar) ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பரமேஸ்வரா எப்.எம். வானொலிச் சேவை வழங்கப் படுகிறது.
இதன் வழி 12 இலட்சம் 61 ஆயிரம் மக்களுக்கு அந்தச் சேவை போய்ச் சேர்வதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
1995 ஆகஸ்டு 10-ஆம் தேதி உருவாக்கப்பட்ட வானொலி நிலையம். இருப்பினும் 2000-ஆம் ஆண்டில் தான் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தது. இந்தச் சேவையில் ஏழு அறிவிப்பாளர்கள். நால்வர் ஆண்கள். மூவர் பெண்கள்.
விளம்பரம் மூலமாக இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. தவிர லாமோங்கான் நகரக் கழகத்தின் நீர் கட்டணம்; மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கான சலுகைகளும் கிடைக்கின்றன.
அந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளின் பெயர்களும் பெரும்பாலும் பரமேஸ்வரா எனும் பெயரைக் கொண்டு உள்ளன. நிகழ்ச்சிகளின் (Program Siaran Radio Prameswara) பெயர்களைக் கவனியுங்கள்.
05.00 - 06.00 Mutiara Pagi Prameswara
06.00 - 07.00 Selamat Pagi Prameswara
07.00 - 09.00 Pernik Dunia Prameswara
09.00 - 11.00 Sekitar Prameswara
11.00 - 13.00 B'Tari Prameswara
13.00 - 15.00 Dendang Prameswara
15.00 - 17.00 Godama Prameswara
18.00 - 19.00 Indo Prameswara
19.00 - 21.00 Indo Hits Prameswara
கைத்தொலைபேசி மூலமாக இவர்களின் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். இணைய முகவரி: http://radiomaya.blogspot.com/2015/12/radio-1039-prameswara-fm-lamongan.html.
பரமேஸ்வராவின் பெயரில் இந்தோனேசியாவில் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த வானொலி நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு இருக்கிறேன். மேல் தகவல்கள் கிடைத்ததும் பதிவு செய்கிறேன்.
ஜாவாவில் உள்ள மக்களில் பெரும்பாலோர், பரமேஸ்வராவைத் தங்களின் வரலாற்று நாயகனாகப் போற்றுகின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நாட்டில் பரமேஸ்வரா எனும் பெயரை மறைத்துக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு நாட்டில் போற்றிப் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மகிழ்ச்சி.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.09.2020
சான்றுகள்:
1. https://www.prameswara.com/
2. https://onlineradiobox.com/id/prameswara/?lang=en
3. https://www.slideshare.net/yucikonur/company-profile-prameswara-2012-11946453
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக