தென்கிழக்கு ஆசியா நாடுகளில் துரிதமான வளர்ச்சிக்கு தமிழர்களின் அர்ப்பணிப்புகள் மிக முக்கியமானவை. அவர்களின் அயராத உழைப்பினாலும் தன்னலமற்ற பங்களிப்புகளினாலும் பல நாடுகள் வளப்பம் கண்டு உள்ளன.
19-ஆம் நூற்றாண்டில் கரை தாண்டிய தமிழர்களின் சேவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அந்த நாடுகளின் வரலாறுகளில் அவர்களின் காலச் சுவடுகள் என்றைக்கும் மறக்க முடியாதவை. காலம் தோறும் கதைகள் சொல்லும் காலச் சுவடிகள்.
1890-ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியாவின் வட பகுதியில் புகையிலை பயிரிடப் படுவதற்காகக் காடுகள் அழிக்கப் பட்டன. அந்தக் காடுகளை அழிப்பதற்கும்; அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் தமிழர்கள் பயன்படுத்தப் பட்டார்கள்.
மாட்டு வண்டிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 1890-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்களில் தமிழர்கள் தலையில் ஒரு முண்டாசு; இடுப்பில் ஒரு வேட்டி. அவ்வளவுதான்.
சுட்டு எரிக்கும் வெயிலில் சட்டை போடாமல் வேலை செய்து இருக்கிறார்கள். காலம் காலமாக வெயிலில் வாடி வதங்கிய காரணத்தினால் தமிழர்களின் உடலும் கறுத்துப் போயின.
அழிக்கப்பட்ட காடுகள் பெரும்பாலும் சதுப்புநில பாசா காடுகள். அந்த இடங்களில் வேலை செய்வதற்கு உள்ளூர்வாசிகளான சுமத்திரா மலாய் மக்களும்; காரோஸ் (Karos) மக்களும் முழு அளவில் முன்வரவில்லை. பாத்தாக் (Batak) உள்ளூர்வாசிகள் அழைத்து வரப்பட்டார்கள். அப்போதும் ஆள் பற்றாக்குறை.
அதனால் ஜாவாவில் இருந்து ஜாவானியர்கள் கொண்டு வரப்பட்டார்கள். சீனாவில் இருந்தும் சீனத் தொழிலாளர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இருப்பினும் ஆள் பற்றாக்குறை.
1900-ஆம் ஆண்டு இந்தோனேசியா புகையிலை தோட்டங்களில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை 87,938. சீனர்கள் 80%. தமிழர்கள் 1,758 பேர்.
தமிழர்கள் நாகப்பட்டினம்; மெட்ராஸ்; காரைக்கால் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். பின்னர் பினாங்கு, சிங்கப்பூரில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அழைத்து வரப்பட்டார்கள்.
படத்தின் தலைப்பு: Chopped forest and drainage canal under construction at a tobacco plantation
ஆண்டு: 1890 - 1905
உரிமை: நெதலார்ந்து Stafhell & Kleingrothe நிறுவனம். புகைப்படத்தை எடுத்தவர் பெயர் தெரியவில்லை. இப்போது இந்தப் படம் Nationaal Museum van Wereldculturen, Amsterdam அரும்காட்சியகத்தில் உள்ளது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.09.2020
சான்றுகள்:
1. Tamils in Sumatra 1890
2. http://www.tropenmuseum.nl/
3. https://theconversation.com/the-dark-history-of-slavery-and-racism-in-indonesia-during-the-dutch-colonial-period-141457
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக