1945 ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி. ஜப்பான் சரண் அடைந்தது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சில நாட்களில் தாய்லாந்து, பர்மா மரண இரயில் பாதை முகாம்களில் இருந்த அமெரிக்கா; ஆஸ்திரேலியா; நியூஸிலாந்து; பிரிட்டன்; டச்சு நாட்டுப் போர்க் கைதிகள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அவர்களின் நாடுகள் விரைவாகவும் சிறப்பாகவும் செயல் பட்டன.
Thanbyuzayat on the Burma-Thailand railway. Source: The Australian War Memorial
ஆனால் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அங்கேயே அப்படியே அனாதையாக கைவிடப் பட்டார்கள். பர்மா காடுகளில் நாதி இல்லாமல்; எங்கே போவது என்று தெரியாமல் சிக்கித் தவித்தார்கள். அவர்களை மலாயாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவதற்கு உடனடியாக முயற்சிகள் செய்யப் படவில்லை. மலாயா அரசாங்கமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இந்தியா அரசாங்கமும் அவர்களைப் பற்றி கவலைப் படவும் இல்லை.
இருந்தாலும் சில மாதங்கள் கழித்துக் கட்டம் கட்டமாக அவர்களை மீட்டுக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப் பட்டன. தாய்லாந்து அரசாங்கம் தான் தமிழர்களை அனுப்பி வைக்க முன்னெடுப்புச் செய்தது. அக்கறை எடுத்துத் தீவிரம் காட்டியது. அதன் பிறகுதான் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கொஞ்சம் சொரணை தட்டியது. தாய்லாந்து அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.
அந்த வகையில் 1945-ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் தமிழர்கள் பலர் மீண்டும் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு முக்கியமான விசயம்.
சில ஆயிரம் தமிழர்கள் திரும்பி வரவே இல்லை. தாய்லாந்து, பர்மாவிலேயே தங்கி விட்டார்கள். பெரும்பாலும் கால் கைகள் ஊனமாகிப் போன தமிழர்கள். தவிர மலாயாவில் இருந்த சொந்த பந்தங்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு திரும்பிவர மனம் இல்லாமல் போன தமிழர்கள்.
officer from the Military History Team moving through the village.
They are followed by a Japanese prisoner and villagers.
Source: The Australian War Memorial
மலாயாவில் ஒட்டு மொத்தமாகக் குடும்பங்களை இழந்த தமிழர்கள். குடும்பத்தோடு சயாம் காட்டுக்குப் போய் அங்கே மனைவி மக்கள் எல்லோரையும் கூண்டோடு இழந்த தமிழர்கள்.
இப்படி திரும்பி வராமல் அங்கேயே தங்கிய மலாயா தமிழர்கள் சிலர் அங்குள்ள தாய்லாந்து, பர்மா பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். சிலர் வியட்நாம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் வாரிசுகள் இன்றும் இந்தோசீனாவில் இருக்கிறார்கள். தேடிப் பிடிப்பதுதான் சிரமம். வியட்நாமில் இப்போது 9700 தமிழர்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுகிறார்கள்.
இந்தப் பதிவில் காட்சிப் படுத்தப்படும் படங்கள் 1945 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி, தாய்லாந்து கின்சாயோக் (Kinsaiyok, Thailand) எனும் இடத்தில் எடுக்கப் பட்டவை. ஜப்பானியர் சரண் அடைந்த பின்னர், இரயில் பாதை போன தமிழர்கள் சிலர் கின்சாயோக் நகரில் தஞ்சம் அடைந்தார்கள்.
படத்தில் உள்ள தமிழ்ப் பெண்களைப் படம் எடுத்த போது அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டார்கள். புகைப்படங்களை எடுத்தவர் புருஸ் அல்பர்ட் (Bruce Albert Reddaway). ஓர் ஆஸ்திரேலியர். அப்போது அந்த ஆஸ்திரேலியருக்கு அந்தத் தமிழ்ப் பிள்ளைகள் அவர்கள் வளர்த்த கோழிகளை அன்பளிப்பு செய்து இருக்கிறார்கள்.
இன்னொரு படம் மறுநாள் 20.10.1945-ஆம் தேதி எடுக்கப்பட்டது. ஓர் ஆஸ்திரேலியரும்; இராணுவ வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த ஒரு டச்சு அதிகாரி வார்மென்ஹோவன் (Warmenhoven) என்பவரும் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு ஜப்பானிய கைதி; கிராமவாசிகள் சென்றார்கள். கிராமவாசிகளில் நான்கைந்து தமிழர்களும் இருந்தார்கள்.
சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
மரண இரயில் பாதை போடுவதற்குப் போன 100 தமிழர்களில் 65 பேர் அங்கேயே இறந்து விட்டார்கள். ஓர் இலட்சம் அல்லது ஒன்றரை இலடசம் மலாயா தமிழர்கள் இறந்து இருக்கலாம். தப்பிப் பிழைத்தவர்கள் 1945-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஏறக்குறைய 20,000 பேர் இருக்கலாம்.
அவர்களில் பெரும்பாலோர் வயது காரணமாக இப்போது இல்லை. காலமாகி விட்டார்கள். நடுக்காட்டில் நாதி இல்லாமல் தவித்த அந்த அப்பாவி மக்களை நினைத்துப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதி மரியாதை ஆகும்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.09.2020
1. https://joshuaproject.net/people_groups/18211/VM
2. https://www.awm.gov.au/collection/C201189
3.https://astroulagam.com.my/lifestyle/article/115197/the-heartbreaking-truth-behind-malaysian-tamils-the-death-railway
4.https://anzacportal.dva.gov.au/wars-and-missions/burma-thailand-railway-and-hellfire-pass-1942-1943/locations/camps-near-hellfire-pass/kinsaiyok-camps
அருமையான வரலாற்றுப் பகுதி
பதிலளிநீக்கு