தமிழ் மலர் - 06.09.2020
இந்தோனேசியாவில் பல்லவ மன்னர்களின் நீண்ட கால ஆட்சிகள். அதனால் அங்கே இந்தியர்கள் சார்ந்த நீண்ட கால வரலாற்று மாட்சிகள். இந்தோனேசியர்களும் அந்த வரலாற்றுப் பின்னணியை மறைக்கவில்லை. மறைக்க விரும்பவும் இல்லை. அழிப்பதற்கு முயற்சிகள் எதையும் செய்யவில்லை. மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். முழுமனத்துடன் வாழ்த்துகின்றார்கள். போற்றுகின்றார்கள். பரந்த மனம் கொண்டவர்கள்.
இப்போதைய இந்தோனேசிய மக்கள் அந்தப் பழைய இந்திய மன்னர்களின் உன்னதங்களை உச்சி முகர்ந்து பார்க்கின்றார்கள். உலக மக்களே வியக்கும் வண்ணம் மேடை போட்டு முழக்கம் செய்கின்றார்கள்.
வாழ்க மஜபாகித் என்று வாயார வாழ்த்துகின்றார்கள். வாழ்க ஸ்ரீ விஜயம் என்று வானுயரப் போற்றிப் பாசுரம் பாடுகின்றார்கள். இந்தோனேசிய மக்களைத் தான் சொல்கிறேன். அக்கம் பக்கத்து அண்டை நாட்டு மக்கள் எவரையும் சொல்லவில்லை.
ஆனால் வேறு சில இடங்களில் அப்படி இல்லைங்க. மனம் கூசும் எதிர்நிலைச் சாட்சிகள். இந்தியச் சீதனங்கள் சிதைக்கப் படும் சோகநிலைக் காட்சிகள். அந்தக் காட்சிகளில் வேதனைகளின் விம்மல்கள். அந்த விம்மல்களில் பலரின் விசும்பல்கள்.
வரலாற்றைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள். இந்திய வம்சாவழியினர் எத்தனையோ இனத்தவர்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்து வாழ்வியலைக் காட்டி இருக்கிறார்கள். எத்தனையோ நாட்டவர்களுக்குச் சமூகச் சாணக்கியச் சாலைகளை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். அரசியலைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.
அதையும் தாண்டிய நிலையில் அரசியல் ஜாம்பவான்களாகக் கோலோச்சி அதிகாரம் செய்து வாழ்ந்தும் இருக்கிறார்கள். இப்போது பாருங்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்சும் நிலை. இரண்டாம் கிலாஸ் இனமாய் அல்லாட வேண்டிய அவலநிலை. சொல்லும் போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.
சத்தியமாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் நம் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே கட்டிப் போட்டுத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதை நினைக்கும் போது மனசு வெம்பிப் போகிறது. சரி.
நம்ப பழைய சுவடுகளைத் தெரிந்து கொள்வோம். இருக்கிற வரைக்கும் அவற்றை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வோம். அவ்வளவுதான். வேறு என்னங்க செய்ய முடியும்.
இந்தோனேசியவை ஆட்சி செய்த பேரரசுகளைப் பற்றி ஒரு பட்டியல் வருகிறது. எந்த ஆண்டில் எங்கே தோற்றுவித்தார்கள் என்பதையும் கவனியுங்கள். மொத்தம் 16 பேரரசுகள். வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதுகிறோம். சொல்லப் போகும் இந்தப் பெயர்களை எல்லாம் பலர் கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள்.
அந்தப் பேரரசுகளின் பட்டியல்:
1. சாலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362
2. கூத்தாய் பேரரசு - கலிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605
3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669
4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600
5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600
6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377
7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025
8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669 – 1482
9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669 – 1579
10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752 – 1006
11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914 – 1908
12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006 – 1045
13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045 – 1221
14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya Kingdom) கி.பி. 1183 – 1347
15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222 – 1292
16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293 – 1500
இவை தான் காலம் தோறும் கதைகள் சொல்லும் பேரரசுகள். இவற்றில் முதன்முதலாகத் தோன்றியது சாலநகரப் பேரரசு எனும் ஜலநகரப் பேரரசு. பெயரை நன்றாகக் கவனியுங்கள். சாலநகரப் பேரரரசு. ஆகக் கடைசியாக வருவது தான் மஜபாகித் பேரரசு. அந்தப் பேரரசுடன் இந்திய சாம்ராஜ்யம் இந்தோனேசியாவில் மறைந்து போனது.
மஜபாகித் பேரரசு இந்தோனேசியாவின் மகா பெரிய பேரரசு. அந்தப் பேரரசு இன்றும் சரி; இனி என்றும் சரி; வரலாற்றுச் சங்கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே இருக்கும்.
மஜபாகித் பேரரசு (Majapahit Empire; Karaton Mojopahit) கி.பி.1293 முதல் கி.பி.1500 வரை இந்தோனேசியாவை ஆட்சி செய்த மாபெரும் பேரரசு. அந்தப் பேரரசைச் சங்கராமா விஜயா (Nararya Sangramawijaya) எனும் ராடன் விஜயன் (Raden Vijaya) உருவாக்கினார். 1293 முதல் 1309 வரை இவரின் ஆட்சி.
1365-ஆம் ஆண்டு நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் ஒரு நூல் எழுதப் பட்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் தேசவர்ணம் (Desawarnana). அதன் ஆசிரியர் மப்பு பிரபஞ்சா (Mpu Prapanca). இவர் ஒரு பௌத்த பிக்கு. பழைய ஜாவானிய மொழியில் 1365-ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. அந்த நூலில் மஜபாகித் அரசைப் பற்றியும் இந்து ஜாவானிய அரசுகளைப் பற்றியும் வியக்கத் தக்க செய்திகள் உள்ளன.
(Cribb, Robert (2013). Historical Atlas of Indonesia. Routledge. Page: 87)
(Malkiel-Jirmounsky, Myron (1939). "The Study of The Artistic Antiquities of Dutch India". Harvard Journal of Asiatic Studies. Harvard-Yenching Institute. 4 (1): 59–68)
தென் கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலாயா, புருணை, கிழக்குத் தீமோர் போன்ற நாடுகள் எல்லாம் ஒரு காலக் கட்டத்தில், அதாவது கி.பி. 1350 லிருந்து 1389 வரையில், மஜபாகித் பேரரசிற்குத் தலை வணங்கி தஞ்சம் அடைந்த நாடுகள் ஆகும். சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ.
இருந்தாலும் நீங்கள் கண்டிப்பாக நம்பித் தான் ஆக வேண்டும். ஏன் என்றால் சரியான சான்றுகள் உள்ளன. இல்லை என்றால் வரிந்து கட்டிக் கொண்டு ஒன்றும் சும்மா எழுதிவிட முடியாது.
தவிர மஜபாகித் ஆட்சியின் போது மேலும் 96 சின்னச் சின்னச் சிற்றரசுகள். மஜபாகித் பேரரசிடம் கைகட்டிச் சேவகம் பார்த்து இருக்கின்றன.
இதை எல்லாம் பார்க்கும் போது மனதில் இனம் தெரியாத உருக்கம்; பிரமிப்பு; திகைப்பு; மலைப்பு; வியப்பு.
இந்தோனேசியா என்பது ஒரு தீவுக் கூட்டம். அந்தத் தீவுக் கூட்டத்தில் சுமாத்திரா, ஜாவா, பாலி, லோம்பாக், செலிபிஸ், நியூ கினி, சூலு தீவுக் கூட்டங்கள் போன்ற நிலப் பகுதிகள் இருக்கின்றன. இந்தக் கூட்டங்களையும் அந்தக் காலத்து மஜபாகித் ஆளுமையின் கீழ் சேர்த்துக் கொள்ளுங்கள். சரியாக வரும்.
ஆக ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது. அந்த வகையில் மஜபாகித் பேரரசின் ஆட்சிக் காலத்தின் போது பற்பல வரலாற்றுத் தாக்கங்கள். அந்தத் தாக்கங்கள் இன்றும்கூட வரலாற்று ஆசிரியர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.
(http://www.indonesianhistory.info/map/majapahit.html - Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History).
இந்தோனேசியா எனும் நாட்டிற்கு இன்று பெரிய ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. தெரியும் தானே. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அன்றைய மஜாபாகித் பேரரசின் பரந்து விரிந்து நிறைந்த எல்லைகள் தான் தலையாய காரணமாகும்.
அந்த அளவிற்கு மஜபாகித் பேரரசு பெரும் நிலப்பரப்பைக் கொண்டு ஆளுமை செய்து இருக்கிறது. நவீன போக்குவரத்து வசதிகளும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இப்படி ஓர் ஆளுமையா? தென்கிழக்கு ஆசியாவில் ஓர் இந்திய ஆளுமைக்கு இதைவிட வேறு என்னங்க ஒரு சான்று வேண்டும். சொல்லுங்கள்.
இந்தோனேசியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பல இந்தியப் பேரரசுகளும் பல சிற்றரசுகளும் ஆட்சிகள் செய்து உள்ளன. அந்த அரசுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு செருகல். மஜபாகித் எனும் பெயர் எப்படி வந்தது. அதை முதலில் தெரிந்து கொள்வோம்.
ஜாவா தீவிற்குத் தமிழ்ப் பெயர் சாவகத் தீவு. இதைக் கிழக்கு ஜாவா என்றும் மேற்கு ஜாவா என்றும் இரு பிரிவுகளாகப் பிரித்து இருக்கிறார்கள்.
கி.பி. 1200-ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஜாவாவைச் சிங்காசாரி (Singhasari) எனும் பேரரசு ஆட்சி செய்து வந்தது. சிங்காசாரி பலம் வாய்ந்த அரசு. அப்போது அதன் கடைசி அரசராக இருந்தவர் கருத்தநாகரன் (Kertanegara).
இந்தச் சிங்காசாரி அரசைச் சீனா நாட்டிற்கு அடி பணிய வைக்க சீனப் பேரரசர் குப்ளை கான் எண்ணினார். எப்படியாவது சிக்க வைக்க வேண்டும். சிங்காசாரி சின்ன அரசு. சீனா பெரிய அரசு. அதனால் சீனாவிற்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று ஓர் அசத்தலான கட்டளையைப் போட்டார்.
அப்போதே சீனா தன் உலகப் போலீஸ்காரர் வேலையைத் தொடங்கி விட்டது. மனசிற்குள் சிரித்துக் கொள்ளுங்கள்.
இப்ப மட்டும் என்னவாம். நான்தாண்டா சிங்கம் 3; இலங்கைக்கு நண்பேண்டா என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி படம் காட்டவில்லையா.
அந்த ஊர்க்கோலத்தில் ஒரு பதிவிரதை ஒரு மோகன்ஜியைக் கூட்டு சேர்த்துக் கொண்டதை மறக்க முடியுமா. என் புருசனைக் கொன்றவர்களைச் சும்மா விடுவேனா பாருங்கள் என்று சொல்லி இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிக்க வில்லையா.
அந்த ஆயிரக் கணக்கான உயிர்களின் சாபம் சும்மா விடுமா. அது ஒரு பெரிய பாவம். எப்படிங்க விடும். ஏழேழு ஜென்மத்திற்கும் பேரம் பேசலாம். இப்பவே தொடங்கி விட்டது. பார்க்கிறோம் இல்ல…
பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவிப்பதற்கு முன்பு இருந்தே மஜபாகித் பேரரசு மலாயாவின் பல இடங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. இதில் ஸ்ரீ விஜய பேரரசையும் மஜபாகித் பேரரசு கைப்பற்றிக் கொண்டது. அதனால் தான் ஸ்ரீ விஜய பேரரசைச் செர்ந்த பரமேவராவின் கொள்ளு தாத்தா சிங்கப்பூருக்குப் போனார்.
ரொம்ப வேண்டாங்க. லக்சா கேள்விப்பட்டு இருப்பீர்கள் இல்லையா. மலேசியர்கள் பலருக்கும் பிடித்தமான உணவு. இந்த லக்சா யாருடையது தெரியுங்களா. மஜபாகித் மக்களுடையது. அவர்கள் தான் 13 – 14 நூற்றாண்டில் இந்த லக்சா உணவை மலாயாவுக்குக் கொண்டு வந்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சொல்லுங்கள்.
(http://bernama.com/bernama/v3/bm/news_lite.php?id=457821 - After Majapahit had conquered Palembang, the favourite culinary dish then was laksa. It was the dish of choice throughout the empire of Majapahit.)
சரி. மஜபாகித் கதை நாளையும் தொடரும். ஒரு பெரிய வரலாறே வருகிறது. படிக்கத் தவறாதீர்கள். இன்னும் ஒரு விசயம். பீஜி தீவு தமிழர்களின் கட்டுரை பின்னர் வரும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக