09 செப்டம்பர் 2020

மஜபாகித் மகாராணியார் சுகிதா - 1

 தமிழ் மலர் - 09.09.2020

இந்தோனேசிய வரலாற்றில் இந்திய வம்சாவழிப் பெண்கள் மாபெரும் பெருமைகளைப் படைத்து இருக்கிறார்கள். மாபெரும் வரலாறுகளைப் படைத்து இருக்கிறார்கள். மாபெரும் மகாராணிகளாய் இமயம் பார்த்து இருக்கிறார்கள். பெண்மையின் உச்சங்கள். இதிகாசங்கள் போற்றும் சத்தியச் சீலங்கள்.  

இந்திய வம்சாவழியைப் பின்னணியாகக் கொண்ட இந்தோனேசியாவை ஆட்சி செய்த மகாராணியார்களின் பட்டியல் வருகிறது. அதில் மிக முக்கியமானவர்கள்:

1. சீமா சத்தியா மகாராணியார் (Queen Shima Satya); கலிங்கப் பேரரசு (கி.பி. 674)

2. பிரேமதா வர்த்தனி மகாராணியார் (Pramodhawardani); சைலேந்திரா பேரரசு கி.பி. 833 - கி.பி. 856)

2. இசையானா துங்கா விஜயா மகாராணியார் (Isyana Tunggawijaya); மேடாங் பேரரசு (கி.பி. 947)

3. ஆர்ஜெயா ஜெயகீர்த்தனா மகாராணியார் (Arjaya jayaketana); பாலி பேரரசு (கி.பி. 1200)

4. திரிபுவன விஜயதுங்கா தேவி மகாராணியார் (Tribhuwana Wijayatunggadewi); மஜபாகித் பேரரசு (கி.பி. 1328 - 1350)

5. சுகிதா மகாராணியார் (Suhita); மஜபாகித் பேரரசு (கி.பி. 1429 - 1447)

6. ரத்னா காஞ்சனா மகாராணியார் (Queen Kalinyamat); கல்யாணமதா சிற்றரசு (கி.பி. 1549)

இவர்களில் மகாராணியார் சீமா சத்தியா பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டோம். இன்றைக்கு மகாராணியார் சுகிதா (Suhita) பற்றி தெரிந்து கொள்வோம்.

மகாராணியார் சுகிதாவிற்கு சொகித்தா (Soheeta) என்று மற்றொரு பெயர் உண்டு. சீனர்கள் இவரை சு கிங் தா (Su King Ta) என்று அழைத்து இருக்கிறார்கள். இவரின் பூர்வீகம் இந்தோனேசியா, ஜாவா தீவு.

இவருடைய கணவரின் பெயர் பரமேஸ்வரா இரத்தின பங்கஜன் (Parameswara Ratnapangkaja). இந்த பரமேஸ்வரா இரத்தின பங்கஜன் என்பவர் வேறு. மலாக்காவை ஆட்சி செய்த பரமேஸ்வரா மகா ராஜா என்பவர் வேறு.

சுகிதா மகாராணியார்

இந்தோனேசிய வரலாற்றில் இந்திய வம்சாவழி அரசர்கள் பலருக்கு பரமேஸ்வரா எனும் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பெருமைக்கு உரிய அரச விருதுப் பெயராகக் கருதப் பட்டது. அன்றையக் காலக் கட்டத்தில் பரமேஸ்வரா என்று பெயரைக் கொண்டவர்கள் பெரும்பாலும் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.  

சுகிதா மகாராணியாரின் ஆட்சிக் காலம் கி.பி. 1427 - கி.பி. 1447. இருபது ஆண்டுகள். கி.பி. 1427-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1437-ஆம் ஆண்டு வரை தன் கணவர் இரத்தின பங்கஜனுடன் இணைந்து மஜபாகித் அரசை ஆட்சி செய்தார்.

கி.பி. 1437-ஆம் ஆண்டு அவருடைய கணவர் இரத்தின பங்கஜன் இறந்து விட்டார். அதன் பின்னர் யாருடைய துணையும் இல்லாமல் தன்னிச்சையாக நின்று மஜபாகித் பேரரசை சுகிதா ஆட்சி செய்து இருக்கிறார். இவர் காலத்தில் இரண்டு முன்று போர்கள் நடந்து உள்ளன. இவரே தன்னுடைய குதிரைப் படைகளுக்குத் தலைமை தாங்கி போர்க் களத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து இருக்கிறார்.

 விக்ரமவர்தனா

போர்க் களத்தில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அதனால் அவர் உடல்நிலையும் பாதிக்கப் பட்டது. கணவர் இறந்த பத்து ஆண்டுகளில் இவரும் இறந்து போனார். போர்க் களத்தில் ஏற்பட்ட காயங்களின் தாக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.

சுகிதாவின் வீர தீரச் செயல்களை மையமாகக் கொண்டு 2013-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவில் ஒரு திரைப்படம் தயாரிக்கப் பட்டது. அதன் தலைப்பு ’பேரரசின் சிம்மாசனம்’ (The Empire's Throne). அதில் சுகிதாவின் கதாபாத்திரத்தில், இந்தோனேசியத் திரையுலகப் புகழ் லிவி செங் (Livi Zheng) நடித்து இருந்தார். அந்த அளவிற்குப் புகழ் பெற்றவர் சுகிதா மகாராணியார்.

இவருடைய கணவரின் பெயர் பரமேஸ்வரா இரத்தின பங்கஜன். ஒரு சின்ன விளக்கம். இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா பரமேஸ்வரா இல்லை. அவர் இறந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அவருடைய பேரன் முகமட் ஷா எனும் மகா ராஜா என்பவர்தான் மலாக்காவை ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

கஜா மாடா

மஜபாகித் அரசர்களில் சுகிதா ஆறாவது ஆட்சியாளர். இவரின் தந்தையார் விக்ரமவர்தனா (Wikramawardhana). மஜபாகித் பேரரசின் ஐந்தாவது ஆட்சியாளர்.

மஜபாகித் பேரரசர்கள் பட்டியல்

1. ராடன் விஜயன் ஜெயவர்தனா (Raden Vijaya Jayawardhana 1293 – 1309)

2. ஜெயநகரன் (Jayanegara 1309 — 1328)

3. திரிபுவன விஜயதுங்கா தேவி ஸ்ரீ கீதாஜா (Tribhuwana Wijayatunggadewi Sri Gitarja 1328 — 1350)

4. ஹாயாம் ஊரூக் ஸ்ரீ ராஜாசா நகரன் (Hayam Wuruk Sri Rajasanagara 1350 — 1389)

5. விக்ரமவர்தனா (Wikramawardhana 1389 – 1429)

6. சுகிதா (Suhita Soheeta 1429 – 1447)

7. கீர்த்த விஜயா (Kretawijaya 1447 – 1451)

8. ராஜசவர்த்தனா (Rajasawardhana 1451 – 1453)

9. பூர்வ வைசேஷா கிருஷ்வ வைசேஷா (Purwawisesha Girishawardhana 1456 – 1466)

10. சிங்க விக்ரம வர்த்தனா (Singha Wikrama Wardhana Sura Prabhawa Brawijaya IV 1466 – 1468)

11. கீர்த்தபூமி (Kertabhumi – 1468 – 1478)

12. கிரிந்திர வர்த்தனா (Girindrawardhana 1478 – 1489)

13. பிரபு உத்திரன் (Prabu Udara 1489 – 1517)

சுகிதாவின் தந்தையார் விக்ரமவர்தனா ஆட்சிக் காலத்தில் தான் சிங்கப்பூர் மீதான் மஜபாகித் படையெடுப்பு நடந்தது.[#1] 1398-ஆம் ஆண்டு. அப்போது சிங்கப்பூரை பரமேஸ்வரா ஆட்சி செய்து கொண்டு இருந்தார். அதாவது மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா.

[#1]. The kings of Singapore. (1948, February 26). The Straits Times, p. 4.

[#1]. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19480226-1.2.30

சுகிதா தாயாரின் பெயர் பிரே மஜபாகித் (Bhre Majapahit). [#2] இவரைப் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. மஜபாகித் வரலாற்றில் பிரே மஜபாகித் என்பவர் மிக முக்கியம் இல்லாதவராக இருக்கலாம். அதனால் வரலாற்று ஆசிரியர்கள் அவருக்கு முக்கியத்துவம் வழங்காமல் போய் இருக்கலாம். என் தனிப்பட்ட கருத்து.

[#2]. Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. Page: 242.

1404-ஆம் ஆண்டில் இருந்து 1406-ஆம் ஆண்டு வரையில் மஜபாகித் பேரரசில் ஓர் உள்நாட்டுப் போர். அதற்கு பரேகிரே உள்நாட்டுப் போர் (Paregreg civil war) என்று பெயர். மஜபாகித் பேரரசில் அப்போது இரு கோஷ்டிகள் இருந்தன.

ஒன்று மேற்குப் பிரிவு வலது சாரி மஜபாகித். மற்றொன்று கிழக்குப் பகுதி இடது சாரி மஜபாகித். எப்படி இரு பிரிவுகள் என்பது ஒரு பெரிய கதை. ஒரு குழப்படியான கதை.

சுகிதாவின் தந்தையார் விக்ரமவர்தனா வலது சாரி தலைவர். அப்போது அந்தக் கட்டத்தில் அவர் மஜபாகித் அரசராக இருந்தார். நினைவில் கொள்வோம். இடது சாரி பிரிவிற்கு பிரபு வீரபூமி (Bhre Wirabhumi) என்பவர் தலைவர். இவர் மகாராணியார் சுகிதாவின் தாய்வழி தாத்தா.

Bhre என்றால் பிரபு என்று பொருள். ஆண் பெண் இரு பாலருக்கும் பயன்படுத்தப்பட்ட பெருமைப் பெயர். வீரபூமி இருக்கிறாரே இவர், கிழக்கு ஜாவாவில் மதுரா அரசைத் தோற்றுவித்த ஆரிய வீரராஜாவின் வழித்தொன்றல் ஆகும். சரி.

1290-ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஜாவாவில் சிங்காசாரி எனும் ஓர் அரசு இருந்தது. அது ஒரு பேரரசு. அதன் பேரரசர் கருத்தநாகரன் (Kertanegara). அந்தச் சிங்காசாரி அரசின் கீழ் கெடிரி எனும் ஒரு சிற்றரசு (Kediri Kingdom) இருந்தது. கெடிரியின் அரசராக ஜெயகாதவாங்கன் (Jayakatwang) என்பவர் இருந்தார்.

அதே காலக் கட்டத்தில் இந்தோனேசியாவின் மதுரா தீவை ஆரியா வீரராஜன் (Arya Viraraja) என்பவர் ஆட்சி செய்து வந்தார். மதுரா தீவு என்பது ஜாவா தீவின் வட கிழக்குக் கரை ஓரத்தில் இருந்தது. இன்னும் இருக்கிறது.

கெடிரி சிற்றரசின் அரசராக இருந்த ஜெயகாதவாங்கன், மதுரா தீவின் ஆரிய வீரராஜனுடன் இணைந்து இரகசியமாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது சிங்காசாரி அரசிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்ய வேண்டும். செய்து எப்படியாவது சிங்காசாரி அரசைக் கைப்பற்ற வேண்டும் எனும் ஒப்பந்தம்.

Monumental sculpture found in Tulungagung Regency,
East Java has been identified as of Suhita

அதன் பின்னர் சிங்காசாரி அரசின் மீது  தாக்குதல்கள். கெடிரி அரசு வடக்கில் இருந்தும்; தெற்கில் இருந்தும் ஒரே சமயத்தில் சிங்காசாரியைத் தாக்கியது. மதுரா அரசு கிழக்கில் இருந்து தாக்கியது. மூன்று பக்கங்களில் இருந்து தாக்குதல்கள்.

அப்போது சிங்காசாரி அரசின் பேரரசர் கருத்தநாகரன். சொல்லி இருக்கிறேன். இவருடைய மருமகன் ராடன் விஜயன் (Raden Vijaya). ஒரு பெரிய போர்ப் படையுடன் ராடன் விஜயன் போர் முனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். ராடன் விஜயனின் அசல் பெயர் சங்கர ராம விஜயன் (Nararya Sanggramawijaya).

வடக்கில் இருந்த வந்த கெடிரியின் தாக்குதலை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனாலும் தெற்கில் இருந்து வந்த தாக்குதலை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்காசாரி நகர் வீழ்ந்தது. பேரரசர் கர்த்தநாகரன் பிடிபட்டார். நரபலி எனும் பெயரில் கொலை செய்யப் பட்டார்.

அத்துடன் சிங்காசாரி எனும் மாபெரும் அரசு இந்தோனேசிய வரலாற்றில் இருந்து அழிந்து போனது. கருத்தநாகரனின் மருமகன் ராடன் விஜயன் என்று சொல்லி இருக்கிறேன். இந்த ராடன் விஜயனின் தந்தையார் பெயர் ராக்கையன் ஜெயதர்மா (Rakeyan Jayadarma).

இந்த ராக்கையன் ஜெயதர்மா என்பவர் மேற்கு ஜாவாவில் இருந்த (Sunda Kingdom) சுந்தா பேரரசைச் சேர்ந்தவர். சுந்தா பேரரசு கி.பி. 669-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1579 வரை மேற்கு ஜாவாவில் கோலோச்சிய மற்றொரு மாபெரும் இந்தியர் வம்சாவழி அரசு.

ராடன் விஜயனின் தாயார் தியா லெம்பு தாழ் (Dyah Lembu Tal). இவர் சிங்காசாரி அரசைச் சார்ந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் பத்திர நரசிங்கமூர்த்தி (Bhatara Narasinghamurti).

ஒரு கட்டத்தில் ராடன் விஜயனின் தந்தையார் ராக்கையன் ஜெயதர்மா, விசம் வைத்துக் கொல்லப் பட்டார். அதனால் ராடன் விஜயனின் தாயார் தன் மகன் விஜயனை அழைத்துக் கொண்டு அவரின் பிறப்பிடமான சிங்காசாரி அரசிற்கே திரும்பி வந்து விட்டார்.

அதன் பின்னர் கருத்தநாகரனின் மகளை ராடன் விஜயன் திருமணம் செய்து கொண்டார். கருத்தநாகரனின் மகளின் பெயர் காயத்திரி ராஜபத்தினி (Gayatri Rajapatni).

(Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.)

சிங்காசாரி அரசு வீழ்ந்ததும் சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் கொல்லப் பட்டார். சரி. மாமனார் கருத்தநாகரனின் இறப்பிற்கு இழப்பீடாக அவருடைய மருமகன் ராடன் விஜயனுக்கு, ஜாவா காட்டுப் பகுதியில் சின்னதாக ஒரு நிலப் பகுதி வழங்கப் பட்டது. அந்த நிலம் கிழக்கு ஜாவாவில் துரோவுலான் (Trowulan) மாவட்டத்தில் இருந்தது.

ராடன் விஜயன் அந்தக் காடுகளை அழித்து ஒரு புதுக் குடியிருப்பாக மாற்றினார். இந்தக் காட்டுப் பகுதி தான் மஜபாகித் எனும் பெயர் பெற்றது. 1293-ஆம் ஆண்டில் சிங்காசாரி அரசுடன் போர் செய்து அந்த அரசைக் கைப்பற்றினார். ராடன் விஜயன் கைப்பற்றிய சிங்காசாரி அரசு தான் பின்னர் மஜபாகித் என பெயர் பெற்றது. ராடன் விஜயன் 1309-ஆம் ஆண்டில் காலமானார்.

அதன் பின்னர்தான் மஜபாகித் ஆட்சியில் குழப்பங்கள். அரசுரிமைப் போராட்டங்கள். ஓர் உண்மையைச் சொல்லலாம். இந்தோனேசியாவில் இந்தியர்களின் ஆளுமை அழிந்து போனதற்கு என்ன காரணம் தெரியுங்களா?

அரசியல், அதிகாரம், அகம்பாவம், ஆணவம், ஆளுமை, இறுமாப்பு, தலைக் கனம், மமதை. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்துப் போனது தான் மிச்சம். (தொடரும்)   

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.09.2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக