தமிழ் மலர் - 05.09.2020
பிஜி தமிழர்களின் கதைக்குள் மலேசியத் தமிழர்களின் ஒரு சின்னக் கதை வருகிறது. ஒரு சின்ன மீள்பார்வை. இப்போது மலேசியாவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தான். அதை என்றைக்கும் மறந்துவிட வேண்டாம்.
19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர்; ஆசை வார்த்தை அல்வாத் துண்டுகளுக்குப் பலியாகி மலாயாவுக்கு வந்தார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள். ஒரே வார்த்தையில் சொன்னால் சஞ்சிக் கூலிகளாய் இழுத்து வரப் பட்டார்கள்.
பினாங்கு புறமலை (Pulau Jerejak) தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் தனிமைப் படுத்தப் பட்டார்கள். அப்புறம் காட்டுப் பாதை கம்பிச் சடக்குகளில் அடிமைகளாய் நடக்க வைக்கப் பட்டார்கள்.
வரும் வழியில் நிறையவே குறுக்குப் பாதைகள். சிலர் காட்டு யானைகள் மிதித்து இறந்து இருக்கிறார்கள். சிலர் புலி அடித்து இறந்து இருக்கிறார்கள். ஒரு சிலரை மலைப்பாம்புகள் விழுங்கி விட்டதாகவும் கேள்வி. தாத்தா பாட்டிமார்கள் சொன்ன கதைகள்.
பலர் ஆடு மாடுகளைப் போல லாரிகளில் ஏற்றி வரப் பட்டார்கள். மழை அடித்தால் குளிர் காய்ச்சல். வெயில் அடித்தால் வியர்வை நாற்றம். சிலர் எருமை மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு நசுக்கிக் கொண்டு வரப் பட்டார்கள்.
ரப்பர் தோட்டத்துத் தகரக் கொட்டகைகளின் கண் கொள்ளா காட்சிகள். மைசூர் மகாராஜா கட்டிப் போட்ட லயங்கள். அப்படிச் சொல்லித் தானே அழைத்து வரப் பட்டார்கள்.
அப்புறம் ஆடு மாடுகளை விட ரொம்பவும் கேவலமாக வேலை வாங்கப் பட்டார்கள். சாக்குப் பைகளில் சுருக்கு போட்ட வாயில்லப் பூச்சிகள் போல வாய்ப் பொத்திகள் ஆனார்கள். அப்படியே சத்தம் இல்லாமல் சாகடிக்கப் பட்டார்கள். வேதனை!
மலாயாவில் நடந்த கொடுமை. அப்போதைக்கு ஒரு கதையாக இருந்தது. இப்போதைக்கு ஒரு வரலாறாக மாறிப் போய் வசனம் பேசிக் கொண்டு இருக்கிறது.
மலாயாவுக்கு வந்த தமிழர்கள் ரப்பர் காப்பித் தோட்டங்களில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், இரவு பகலாய் அடிமைகளைப் போல வேலை செய்தார்கள். பொதி சுமந்த கழுதைகளுக்கும் எருமைகளுக்கும் வெள்ளைத் தோல் ராசாக்கள் லீவு கொடுத்தார்கள்.
ஆனால் கூலித் தமிழர் ரோசாக்களுக்கு லீவு கொடுக்க மனசு வரவில்லை. ஓய்வு என்பது எங்கள் அகராதியில் இல்லை என்று வீரவசனம் பேசி இருக்கிறார்கள்.
அந்தச் சஞ்சிக்கூலிகளின் வாரிசுகள் இன்னமும் இங்கே உரிமைப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். கட்சிகள் மாறினாலும்; காலங்கள் மாறினாலும்; அரசுகள் மாறினாலும்; மலேசியத் தமிழர்களின் காட்சிகள் மாறவே இல்லை.
நீர்க் குமிழிகளின் உறைப் பனிகளாய் உறைந்து போய்க் கிடக்கிறன. கண்ணீர்ப் பூக்களாய் கதைகள் சொல்லி ஒப்பாரிகள் வைக்கின்றன.
இந்தத் திசையில் மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்களும் சுமத்திரா, ஜாவா, போர்னியோ, செலிபிஸ், பர்மா போன்ற இடங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான். அந்த உண்மை மறக்கப் படுகிறது. மறைக்கப் படுகிறது.
ஓர் உண்மையை மறைப்பதற்கு எப்படி வேண்டும் என்றாலும் பொய்கள் சொல்லலாம். ஒரே பொய்யை ஒன்பது தடவை சொன்னால் உண்மை பணிந்து போகுமாம். ஆனால் செத்துப் போகாது.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் எனும் கூற்றுக்கு நிதர்சனமாகவே வாழ்ந்து காட்டியவர் கோயபல்ஸ்.
உலக மகா ஹிட்லர் காலத்தில் ஜோசப் கோயாபல்ஸ் (Joseph Goebbels) ஓர் அமைச்சர். ஒரு பொய்யை உண்மையைப் போல் பேசுவதில் கெட்டிக்காரர். ஹிட்லர் நினைத்தால் வானம் இருண்டு விடும் என்று சொன்னவர். மக்களும் அப்படியே நம்பினார்கள். அந்த அளவுக்குப் பொய்கள் சொல்வதில் கோயாபல்ஸ் பலே கில்லாடிப் பாண்டி.
இருந்தாலும் புளுகுவதற்கும் ஓர் எல்லை உண்டு. அதை எல்லாம் தாண்டிப் போய் குமரிக் கண்டம் எங்கள் பாட்டன் சொத்து என்று புளுகித் தள்ளக் கூடாது. வெட்கமாக இருக்கிறது. அரிச்சந்திரன் அநியாயம் செய்தாலும் அது நியாயமாகாது. சத்தியம் தான் ஜெயிக்கும். சரி. ஊர் பொல்லாப்பு வேண்டாம். நம்ப பிஜி கதைக்கு வருவோம்.
தமிழர்களின் புலம்பெயர்வுகள் ஈராயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நிலவழி, நீர்வழிகளாக உலகின் பல பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வரலாறு படைத்து இருக்கிறார்கள். அந்தப் புலம்பெயர்வுகள் தொடக்கத்தில் தற்காலிகமாக இருந்தன.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. அந்தப் பாவனையில் பண்டமாற்று வணிகத்திற்கு முதலிடம் கொடுத்து வந்தார்கள்.
18-ஆம் நூற்றண்டிற்குப் பின்னர் பெரிய ஒரு மாற்றம். போன இடங்களில் இருந்து திரும்பி வர முடியாத நிலை. அங்கேயே நிரந்தரவாசிகளாக மாறிப் போனார்கள். அல்லல்கள் ஆயிரம். அலறல்கள் ஆயிரம். சொல்லில் சொல்ல முடியாத சோதனைகள். வார்த்தைகளில் வடிக்க முடியாத வேதனைகள். யார்? நம்ப தமிழர்கள் தான்.
அந்தக் காலத்திலேயே கடல் பயணக் கலையில் தமிழர்கள் நன்றாகத் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கி இருக்கிறார்கள். கடலுக்கு ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரிதி, வாரணம், பவ்வம், பரவை, புணரி, கடல் என்று எல்லாம் பெயர் வைத்து இருக்கிறார்கள்.
கடலில் செல்லும் ஊர்திகளுக்குக் கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, திமில், அம்பி, வங்கம், மிதவை என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். சரி.
அயல் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம்.
முதல் பிரிவினர்: 18 - 19-ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பாகப் புலம் பெயர்ந்தவர்கள்.
இரண்டாம் பிரிவினர்: 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புலம் பெயர்ந்தவர்கள்.
முதலாம் பிரிவினரின் இடப் பெயர்வுக்கு வியாபாரம் ஒரு காரணம். அடுத்த காரணம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சிற்றரசர்களின் படையெடுப்பு மற்றொரு காரணம்.
இரண்டாம் பிரிவில் பெரும்பான்மையினர் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள். தேயிலை, ரப்பர், கரும்பு, காப்பித் தோட்டங்களில் கூலிவேலை செய்வதற்காக இடைத் தரகர்களால் அழைத்துச் செல்லப் பட்டவர்கள். புலம்பெயர் தமிழர்களில் இவர்கள் தான் அதிகம்.
மலையக இலங்கை, மலாயா, பர்மா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, திரினிடாட் தொபாகோ, கயானா, பிரெஞ்சு மேற்கிந்திய தீவுகள், சீஷெல்ஸ், பிஜி தீவு, மொரீஷியஸ், ரீயூனியன் போன்ற நாடுகளில் நிறையவே தமிழர்கள்.
இவர்களில் பெரும்பகுதியினர் தோட்டத் தொழிலாளர்களின் வம்சாவழியினர். இதில் உங்களையும் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்.
1917-ஆம் ஆண்டு ஆங்கிலேயக் காலனித்துவ நாடுகளில் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் (Bondage Lease Act) ஒழிக்கப் பட்டது.
1920-ஆம் ஆண்டு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பிஜி தீவில் குடியேறுவதற்கு வாய்ப்பு வசதிகள் கிடைத்தன. அதன் பின்னர் தான் பிஜி தீவுத் தமிழர்களின் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியது.
பிஜி தீவில் இருந்த அத்தனைக் கரும்புத் தோட்டங்களையும் சி.எஸ்.ஆர். என்கிற ஓர் ஆஸ்திரேலியா நிறுவனம் (CSR - Colonial Sugar Refining Company) வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு தமிழருக்கும் பத்து ஏக்கர் நிலம். பத்து ஆண்டுகளுக்குக் குத்தகை.
அதில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். ஒன்பது ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்ய வேண்டும். மிச்சம் உள்ள ஓர் ஏக்கர் நிலத்தில் சொந்தமாகப் பயிர் செய்து கொள்ளலாம். கரும்பு முற்றியதும் வெட்டி எடுக்க வேண்டும்.
வெட்டிய கரும்புகளைக் கரும்புக் காட்டு வண்டிகளில் ஏற்றி ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். கம்பெனி என்ன விலை சொல்கிறதோ அந்த விலையில் தான் தமிழர்களுக்கும் ஊதியம். அப்போது சர்க்கரை விற்கும் விலையில் விவசாயிக்கு 30 விழுக்காடு. கம்பெனிக்கு 70 விழுக்காடு.
2007-ஆம் ஆண்டு பிஜி நாட்டின் மக்கள் தொகை 827,900. தமிழர்களின் எண்ணிக்கை 313,798. அவர்களில் ஏழாயிரம் பேர் மட்டுமே தங்களின் தாய்மொழி தமிழ் என்று தங்களின் அடையாள அட்டைகளில் பதிவு செய்து இருந்தார்கள்.
இன்னும் ஒரு செய்தி. பிஜி நாட்டின் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையத் தளத்தில் தமிழ் என்ற சொல்லே இடம் பெறவில்லை. வேதனையாக இருக்கிறது. போய்ப் பாருங்கள். (https://www.fiji.gov.fj/Home)
1874-ஆம் ஆண்டில் பிஜி தீவை ஆங்கிலேயர்கள் அடித்துப் பிடித்துக் கைப்பற்றிக் கொண்டார்கள். தெரிந்த விசயம். அப்புறம் 1879-ஆம் ஆண்டு அங்கு இருந்த கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப் பட்டார்கள்.
1879 – 1916-ஆம் ஆண்டுகளில் ஆள் பிடிக்கும் கங்காணிகள் மூலம் 87 கப்பல்களில் 65 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் பிஜித் தீவிற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள்.
5 ஆண்களுக்கு 1 பெண் எனும் விகிதத்தில் ஆண், பெண்களின் வேறுபாடு இருந்தது. கொண்டு வரப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேரில் 13 ஆயிரம் பேர் பெண்கள்.
1879 - 1916-ஆம் ஆண்டுகளில் பிஜி தீவில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு ஓர் அளவே இல்லை. மலாயாவில் நடந்த கொடுமைகளைவிட மேலும் மோசமான கொடுமைகள். இங்கே கொஞ்சம் பரவாயில்லை. அங்கே இன்னும் மோசம்.
1917-ஆம் ஆண்டில் தான் பிஜியில் கொத்தடிமை முறை அகற்றப் பட்டது. அதுவரையிலும் தமிழர்கள் அங்கே பயங்கரமாக அவதிப்பட்டு இருக்கிறார்கள். சரி. தமிழ் மொழி விசயத்திற்கு வருவோம்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையில் தமிழர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பிஜி தீவில் பள்ளிக்கூடங்கள் எதுவும் இல்லை. சுவாமி மனோகரானந்த சரஸ்வதி (Ram Manoharanand Sarasvati) என்பவர் பிஜிக்கு வந்தார். ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தார்.
சமயச் சேவையுடன் கல்விப் பணியும் தொடர்ந்தது. தொடக்கக் காலங்களில் இந்தி மொழியே பள்ளிகளில் கற்பிக்கப் பட்டது. தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழர்களே சொந்தமாகத் தமிழ் சொல்லித் தந்தார்கள்.
1920-ஆம் ஆண்டுகளில் பிஜி தீவில் உள்ள பள்ளிகளில் தென் இந்திய மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அப்போது பிஜி தீவில் இந்தியர்களுக்காக கிருஷ்ணசாமி, மச்சோநாயர், கிருஷ்ணா ரெட்டி, எம்.என். நாயுடு, அரங்கசாமி போன்ற தலைவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்கள் தான் தீவிரமாகச் செயல் பட்டார்கள். அதிலும் பற்பல தடங்கல்கள். பற்பல முட்டுக்கட்டைகள்.
பின்னர் 1929-ஆம் ஆண்டு அந்தப் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. தமிழ், தெலுங்கு, குஜராத்தி முதலிய மொழிகளைக் கற்கலாம். ஆனால் இந்தி, ஆங்கிலம் மொழிகளுடன் இணைத்துக் கற்பிக்க வேண்டும் என்று கட்டளை போட்டது.
1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிஜி இந்தியர்களால் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கம் தொடங்கப் பட்டது. கல்விப் பணியே முக்கிய நோக்கம். 1921-ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் முன்னெடுப்பு நாடு முழுமைக்கும் மெல்ல மெல்லப் பரவியது.
ஆனால் பிஜி உள்ளூர்ப் பூர்வீக மக்களுக்குத் தமிழ் மொழியின் வளர்ச்சி பிடிக்கவில்லை. தமிழ் மொழியைச் சாகடிக்க வேண்டும் என்று பிஜி இனத் தீவிரவாதிகளில் சிலர் ரகசியமாகத் திட்டம் போட்டார்கள். செயல் படுத்தவும் தொடங்கினார்கள்.
இங்கே மட்டும் என்னவாம். மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அமாட் பைஸால் சொல்லி இருக்கிறார். பெரும் பரபரப்பு செய்தி அல்ல. கரும் புகைச்சலை ஏற்படுத்திவிட்ட செய்தி.
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். மலேசிய அரசியலில் தூவானம் விட்டாலும் தீவானம் விடாது போலும். ஆச்சு பூச்சு என்றால் அத்தைக்கு மீசை வைத்து சித்தப்பாவாக மாற்றி விடுவது வழக்கமாகி வருகிறது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிப்பதும் பழக்கமாகி வருகிறது.
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. காலம் காலமாக நடந்து வரும் காம்போதி ராகத்தின் அரசியல் கச்சேரிகள். விடுங்கள். நம்ப பிஜி கதைக்கு வருவோம்.
1930-ஆம் ஆண்டு பிஜி தீவில் இரு தமிழாசிரியர்கள் கொல்லப் பட்டார்கள். தமிழர்கள் கொதித்துப் போனார்கள். பிஜி நாடே தடுமாறிப் போனது. பார்க்கிற உள்ளூர் பிஜி மக்களை எல்லாம் தமிழர்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அடுத்தக் கட்டம் கொலையில் போய் முடிந்தது. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் போது பதினைந்து தமிழர்கள் கொல்லப் பட்டார்கள். அதுவே சின்ன ஒரு கலவரமாக மாறியது. அடுத்து அடுத்து என்ன நடந்தன என்பதை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
சான்றுகள்:
1. https://www.csrsugar.com.au/csr-sugar/our-history/
2. Derrick, Ronald Albert (1951). The Fiji Islands: A Geographical Handbook. Govt. Print. Dept Fiji, 334 pages, Original from the University of Michigan
3. "NINE MONTHS IN FIJI AND OTHER ISLANDS". Empire (6014). New South Wales, Australia. 13 July 1871. p. 3.
4. "Fiji: the challenges and opportunities of diversity" (PDF). Minority Rights Group International 2013.
5. https://en.wikipedia.org/wiki/Swami_Rudrananda
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக