07 செப்டம்பர் 2020

மஜபாகித் பேரரசு - 2

 தமிழ் மலர் - 07.09.2020

லக்சா (Laksa). ஓர் உள்நாட்டு உணவு. தெரியும் தானே. மலேசியர்களில் பலருக்கும் பிடித்தமான உணவு. இந்த லக்சா இருக்கிறதே இது அந்தக் காலத்தில் மஜபாகித் மக்களுக்கு ரொம்பவும் விருப்பமான உணவு. அவர்கள் தான் இந்த லக்சா உணவை 13 – 14-ஆம்  நூற்றாண்டுகளில் மலாயாவுக்குக் கொண்டு வந்தார்கள்.

மலாக்காவை பரமேஸ்வரா ஆட்சி செய்த காலத்தில் தான், லக்சா மலாக்காவில் அறிமுகம் ஆனது என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் சீன கடல் தளபதி செங் ஹோ என்பவர் தான் அறிமுகம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இந்தியாவில் இருந்து வந்தது என்றும் சொல்கிறார்கள்.  

(After Majapahit had conquered Palembang, the favourite culinary dish then was laksa. It was the dish of choice throughout the empire of Majapahit.)

Source: https://www.globalsecurity.org/military/world/malaysia/history-majapahit.htm

உண்மையான உண்மைகளை ஒரு சிலர் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா. தெரியவில்லை. பாட்டி சுட்ட வடையை காக்கா கொத்திக் கொண்டு போனது பழைய கதை. பலருக்கும் தெரிஞ்ச கதை தான்.

இருந்தாலும் இப்போது இட்லி, இடியப்பம், தோசை, சட்ணி எல்லாவற்றையும் பட்ட பகலிலேயே கொத்திக் கொண்டு போகிறார்களே. என்னங்க சொல்வது. இதில் மஜபாகித் லக்சா எங்க மாமியார் காலத்து மசாலா சூப் கறி என்று சொன்னாலும் சொல்லலாம். அண்மைய கால வரலாற்றில் என்ன என்னவோ குழப்படிகள்; என்ன என்னவோ திருகுதாளங்கள். விடுங்கள்.  

இந்தோனேசியாவை இந்தியர்கள் சார்ந்த அரசுகள் 1370 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளன. மொத்தம் 16 பேரரசுகள். இவற்றுள் மிகவும் வலிமை வாய்ந்தது மஜபாகித் பேரரசு. அந்த மஜபாகித் பேரரசின் கீழ் 98 சின்னச் சின்ன சிற்றரசுகள். மலையூர் என்று அழைக்கப்படும் மலாயா தீபகற்பமும் மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நிலப் பகுதி தான்.

பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவிப்பதற்கு முன்பு இருந்தே மஜபாகித் பேரரசு மலாயாவின் பல இடங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. இதில் ஸ்ரீ விஜய பேரரசைச் சேர்க்கவில்லை. ஏன் என்றால் இந்த மஜபாகித் அரசு, கி.பி.1300-ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் ஸ்ரீ விஜய பேரரசைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

(http://www.globalsecurity.org/military/world/malaysia/history-majapahit.htm -  1350-1400Majapahit empire controlled most of Peninsular Malaysia and the Malay Archipelago.)

குப்ளாய் கான். தெரியும் தானே. சீன நாடு பார்த்த மாபெரும் அரசர். வரலாற்றுப் புகழ் ஜெங்கிஸ் கானின் பேரன். குப்ளாய் கான் தந்தை தொலூய் கான் (Tolui Khan). அவரின் நான்கு மகன்களில் இளையவர். மூத்த சகோதரர் (Mongke Khan) மாங்கி கானுக்குப் பிறகு பதவிக்கு வந்தவர். கி.பி.1280-ஆம் ஆண்டுகளில் அவர் சீனா நாட்டை ஆட்சி செய்து வந்தார். சரி.

சிங்காசாரி (Singhasari) என்கிற ஓர் அரசு அப்போது, அதாவது சீவை குப்ளாய் கான் காலத்தில், இந்தோனேசியத் தீவுக் கூட்டத்திலேயே ஆற்றல் வாய்ந்த ஒரு பெரிய அரசாக விளங்கியது.

அதன்  அதிகாரம்; ஆதிக்கம்; வணிகத் துறை வளர்ச்சிகளினால் சீனாவின் வாணிகம் பாதிக்கப் பட்டது. அத்துடன் சீனாவின் எதிரியாகக் கருதப்பட்ட வியட்நாம் நாட்டு சாம்பா (Champa) அரசுடன் சிங்காசாரி நெருக்கமான உறவுகளையும் வைத்துக் கொண்டு இருந்தது.

அதனால் சிங்காசாரி அரசிடம் திறை கேட்டு குப்ளாய் கான் தூது அனுப்பினார். அப்போது சிங்காசாரியின் அரசராக கர்த்தநாகரன் (Kertanegara) என்பவர் இருந்தார். கர்த்தநாகரனுக்குக் குப்ளாய் கானின் மீது சரியான கோபம். என்ன சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள். ஒரு கற்பனையில் கர்த்தநாகரனின் வீரவசனங்கள் வருகின்றன.

வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் என் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே. யாரைக் கேட்கிறாய் வரி. எவரைக் கேட்கிறாய் வட்டி. எதற்கு கேட்கிறாய் வரி.

வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. இரண்டாயிரம் கி.மீ. அப்பால் சீனாவில் இருக்கும் உனக்கு நான் ஏன் வரி கட்ட வேண்டும். கர்த்தநாகரன் விலாசித் தள்ளி விட்டார். இது நடந்தது கி.பி. 1280-ஆம் ஆண்டில்.

1281-ஆம் ஆண்டு குப்ளாய் கான் மறுபடியும் ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்தார். இறுதியாக 1289-ஆம் ஆண்டில் மற்றும் ஒரு தூதுக் குழு. இந்தத் தடவை குப்லாய் கானின் தூதுவனின் முகத்தில் பச்சை குத்தப் பட்டது. அவனுடைய காதுகள் அறுக்கப் பட்டன. மோசமாக இழிவுபடுத்தப் பட்டு சீனாவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டான்.

(Codes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press.)

சறுக்கினது சாக்கு என்று காத்து நின்ற குப்ளை கானுக்குச் சரியான சவால்.  கருத்தநாகரனைப் பழி வாங்குவதற்காக 1000 கப்பல்களை ஜாவாவிற்கு அனுப்பி வைத்தார். இது 1293-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. இதுவும் ஒரு நீண்ட கதை. பிறகு பார்ப்போம்.

(https://en.wikipedia.org/wiki/Majapahit#Formation)

1290-ஆம் ஆண்டுகளில் சிங்காசாரி பேரரசிற்குத் திறை செலுத்தும் ஓர் அரசாகக் கெடிரி எனும் ஒரு சிற்றரசு (Kediri Kingdom) இருந்தது. அதாவது அடிமை அரசு. அதன் அரசராக ஜெயகாதவாங்கன் (Jayakatwang) என்பவர் இருந்தார்.

அதே காலக் கட்டத்தில் இந்தோனேசியாவின் மதுரா தீவை வீரராஜன் (Arya Viraraja) என்பவர் ஆட்சி செய்து வந்தார். தமிழகத்தின் மதுரை மாநகரின் பெயரைக் கொண்டது இந்த மதுரா தீவு. இந்தோனேசியா ஜாவா தீவின் வட கிழக்குக் கரையோரத்தில் இருக்கிறது. பரப்பளவில் நம் நெகிரி செம்பிலான் மாநில அளவு. சரி.

கெடிரி சிற்றரசின் அரசராக இருந்த ஜெயகாதவாங்கன் மதுரா தீவின் வீரராஜனுடன் இணைந்து பேரம் பேசிக் கொண்டார். சிங்காசாரி அரசிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்து எப்படியாவது அதைக் கவிழ்த்துவிட வேண்டும். அதுதான் ஜெயகாதவாங்கனின் தலையாயப் பெரும் திட்டம்.

அந்த நகர்வில் சிங்காசாரி அரசின் மீது  தாக்குதல்கள் தொடுக்கப் பட்டன. கெடிரி அரசு வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் ஒரே சமயத்தில் சிங்காசாரியைத் தாக்கின. மதுரா அரசு கிழக்கில் இருந்து அதிரடித் தாக்குதல் நடத்தியது.

கருத்தநாகரன் ஒரு பேரரசர். இருந்தாலும் எதிரிகளின் ஆற்றல்களைத் தவறாக எடைபோட்டு விட்டார். வடக்கில் இருந்து மட்டும் தான் முற்றுகை வரும் என்பது அவரின் தவறான வியூகம்.

தன் மருமகன் ராடன் விஜயனை ஒரு போர்ப் படையுடன் அங்கு அனுப்பி வைத்தார். ராடன் விஜயனின் அசல் பெயர் சங்கர ராம விஜயன் (Nararya Sanggramawijaya).

வடக்கில் இருந்த வந்த தாக்குதல் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப் பட்டது. ஆனாலும் தெற்கில் இருந்து வந்த தாக்குதலை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்காசாரி நகர் வீழ்ந்தது. பேரரசர் கர்த்தநாகரன் பிடிபட்டார். நரபலி எனும் பெயரில் கொலை செய்யப் பட்டார்.

அத்துடன் சிங்காசாரி எனும் மபெரும் அரசு இந்தோனேசிய வரலாற்றில் இருந்து கசக்கி வீசப் பட்டது. இதை ஏன் சொல்ல வருகிறேன். அதற்கும் காரணம் இருக்கிறது. சிங்காசாரி அரசு வீழந்த பின்னர் தான் அதன் அடிச்சுவட்டில் மஜபாகித் எனும் ஒரு பேரரசே உருவானது. சரிங்களா.

(Bullough, Nigel (1995). Mujiyono PH, ed. Historic East Java: Remains in Stone. Jakarta: ADLine Communications. p. 19. - Kediri or Kadiri also known as Panjalu was a Hindu Javanese Kingdom based in East Java from 1042 to around 1222.)

கருத்தநாகரனின் மருமகன் ராடன் விஜயன் என்று சொல்லி இருக்கிறேன். இந்த ராடன் விஜயனின் தந்தையார் பெயர் ராக்கையன் ஜெயதர்மா (Rakeyan Jayadarma). இந்த ராக்கையன் ஜெயதர்மா என்பவர் மேற்கு ஜாவாவில் இருந்த (Sunda Kingdom) சுந்தா பேரரசைச் சேர்ந்தவர். சுந்தா பேரரசு கி.பி. 669-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1579 வரை மேற்கு ஜாவாவில் கோலோச்சிய மற்றொரு மாபெரும் இந்தியர் அரசு.

ராடன் விஜயனின் தாயார் தயா லெம்பு தாழ் (Dyah Lembu Tal). இவர் சிங்காசாரி அரசைச் சார்ந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் பத்திர நரசிங்கமூர்த்தி (Bhatara Narasinghamurti).

ஒரு கட்டத்தில் ராடன் விஜயனின் தந்தையார் ராக்கையன் ஜெயதர்மா, விசம் வைத்துக் கொல்லப் பட்டார். அதனால் ராடன் விஜயனின் தாயார் தன் மகன் விஜயனை அழைத்துக் கொண்டு அவரின் பிறப்பிடமான சிங்காசாரி அரசிற்கே திரும்பி வந்து விட்டார்.

அதன் பின்னர் கருத்தநாகரனின் மகளை ராடன் விஜயன் திருமணம் செய்து கொண்டார். கருத்தநாகரனின் மகளின் பெயர் காயத்திரி ராஜபத்தினி (Gayatri Rajapatni).

(Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.)

சிங்காசாரி அரசு வீழ்ந்ததும் கருத்தநாகரன் கொல்லப் பட்டார். சரி.

மாமனார் கருத்தநாகரனின் இறப்பிற்கு இழப்பீடாக அவருடைய மருமகன் ராடன் விஜயனுக்கு, ஜாவா காட்டுப் பகுதியில் சின்னதாக ஒரு நிலப் பகுதி வழங்கப் பட்டது. அந்த நிலம் கிழக்கு ஜாவாவில் துரோவுலான் (Trowulan) மாவட்டத்தில் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

இப்போது இந்த இடத்தில் தான் துரோவுலான் அரும்பொருள் காட்சியகத்தை அமைத்து இருக்கிறார்கள். அந்தக் காட்சியகத்தை இந்தோனேசிய அரசாங்கம் அமைத்துக் கொடுத்து இருக்கிறது. துரோவுலான் நிலப் பகுதியில் தான் மஜபாகித் பேரரசின் தொல் பொருட்கள் மீட்டு எடுக்கப் பட்டன.

இங்கே இருக்கும் கெலுட் எரிமலை (Mount Kelud) கி.பி.1334-ஆம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அதனால் மஜபாகித் பேரரசின் கோட்டைகளும், ஆலயங்களும், வழிபாட்டுத் தளங்களும், அரண்மனைகளும் பெரிதும் பாதிக்கப் பட்டன. மீட்டு எடுக்கப் பட்ட மஜபாகித் தொல் பொருட்களின் பட்டியலையும் பொருட்களின் விவரங்களையும் வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம். சரி.

அடுத்து மஜபாகித் பேரரசின் கோட்டைகள், குளங்கள், கோயில்களை எல்லாம் பல மீட்டர்கள் ஆழத்திற்கு எரிமலைச் சாம்பல்கள் மூடி இருக்கின்றன. அவற்றை எல்லாம் இந்தோனேசிய அரசாங்கம் மீட்டு எடுத்து புனரமைப்பு செய்து வருகிறது. 2008ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசாங்கம் தீவிரமான மீட்புப் பணிகளில் களம் இறங்கியது.

மஜபாகித் பூங்கா (The Majapahit Park) எனும் மற்றொரு காட்சியகத்தையும் இந்தோனேசிய அரசாங்கம் அமைத்து இருக்கிறது. தவிர 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துரோவுலான் அரும்பொருள் காட்சியகத்திற்கு மற்றும் ஓர் அங்கீகாரம் கிடைத்தது.

ஐக்கிய நாட்டுச் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (United Nations Educational, Scientific, and Cultural Organization) வழங்கிய அனைத்துலகப் பாரம்பரியத் தகுதி தான் அந்த அங்கீகாரம் ஆகும்.

இதைப் பற்றி சீதா தேவி என்பவர் ஜகார்த்தா போஸ்ட் எனும் நாளிதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தச் சீதா தேவி என்பவர் இந்தியர் அல்ல. ஓர் இந்தோனேசியப் பெண்மணி. இணைய முகவரி:

http://www.thejakartapost.com/news/2013/04/09/tracing-glory-majapahit.html.

சரி. ராடன் விஜயனுக்கு இழப்பீடாகக் கொடுக்கப்பட்ட காடுகள் விசயத்திற்கு வருவோம். ராடன் விஜயன் அந்தக் காடுகளை அழித்து ஒரு புதுக் குடியிருப்பாக மாற்றினார். காட்டு மரங்களை வெட்டி வீழ்த்த உள்ளூர் இந்தோனேசிய மக்களைக் பயன்படுத்திக் கொண்டார். மறுபடியும் சொல்கிறேன். இது 1293-இல் நடந்த நிகழ்ச்சி.

காடுகள் அப்படி அழிக்கப்பட்ட போது இந்தோனேசிய வேலைக்காரர்கள் ஒரு வில்வ மரத்தின் பழங்களைச் சாப்பிட வேண்டிய ஒரு கட்டம். விலவ பழங்கள் கசப்பானவை. தெரியும் தானே. பழங்களைச் சாப்பிட்ட வேலைக்காரர்கள் ஜாவா மொழியில் மஞ்சாக் பாகிட் (Manyak Pahit) என்று சொல்லி ஆதங்கப்பட்டு இருக்கிறார்களாம்.

அதுவே அந்த இடத்திற்கு மஞ்சாக் பாகிட் என்று நிலைத்தும் போனது. அது மட்டும் அல்ல. மஜபாகித்தை மோஜோபாயிட் (Mojopait) என்றும் கிராமவாசிகள் அழைத்து இருக்கிறார்கள்.

அப்புறம் காலப் போக்கில் மஞ்சாக் பாகிட் எனும் அந்த இரு சொற்கள் மஜபாகித் என்று திரிந்து போனது. இப்படியும் ஒரு வரலாற்று உள்ளது. இருந்தாலும் இந்தப் பெயர் திரிதலுக்கு மிகச் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை.

மஞ்சாக் பாகிட் எனும் சொற்களில் இருந்து மஜபாகித் எனும் சொல் வந்து இருக்க முடியாது என்பதே என் தாழ்மையான கருத்து. மஜா பாக்கியம் எனும் சொற்களில் இருந்து மஜா பாகியா எனும் சொற்கள் உருவாகி இருக்கலாம். அந்தச் சொற்களில் இருந்து மஜபாகித் சொல் தோன்றி இருக்கலாம் என்பது என் கருத்து.

இந்த ராடன் விஜயன் எப்படி குப்ளாய் கானின் கடல் படையைத் தோற்கடித்தார். அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2020



1 கருத்து: