03 செப்டம்பர் 2020

மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் - 3

தமிழ் மலர் - 03.09.2020

தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் பல்லவர்களும் சோழர்களும் பெரும் பெரும் ஆளுமைகளைச் செலுத்தி இருக்கிறார்கள். 1500 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் ஆளுமைகள்; அவர்களின் செல்வாக்குகள்; அவர்களின் சிறப்புகள்; அவர்களின் இந்து மதப் பாவனைகள்; அனைத்தும் செழுமையாக உச்சம் பார்த்து உன்னதம் பேசி இருக்கின்றன.

இருப்பினும் பல்லவர்களின் பெயரைச் சொல்லி பாலி தீவில் மட்டுமே, இப்போது இந்து மதம் பிழைத்து வாழ்கின்றது. பாலி தீவில் இப்போது பயன்பாட்டில் உள்ள இந்து மதம், அசல் இந்து மதத்தில் இருந்து பிரிந்து போன கிளை மதமாகும்.

பாலி தீவு இந்து மக்கள் பல நூறு ஆண்டுகளாகத் தனித்து விடப் பட்டவர்கள். அதனால் அவர்களாகவே அவர்கள் பாணியில் தனி ஓர் இந்து மதத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படையிலான பாவனைகள் இருக்கவே செய்கின்றன.

ஜாவா, சுமத்திரா, கெடா, மத்திய வியட்நாம், கம்போடியா போன்ற இடங்களில் இந்து மத ஆளுமைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வலிமை பெற்று வாசம் செய்து உள்ளன. ஆனால் மற்ற மற்ற மதங்களின் தாக்கங்களினால் இந்து மதம் வலிமை குன்றிப் போனது.

பல்லவ வம்சாவழி வர்த்தகர்கள்; சேர சோழ பாண்டிய நாட்டுப் பயணிகள்;  அங்கோர் சிலைகளைக் கட்டிய கைவினைஞர்கள்; கட்டிடக் கலைஞர்கள் போன்றவர்கள் தான் எழுத்து வடிவங்களைத் தென்கிழக்கு ஆசியாவில் முதன்முதலில் அறிமுகப் படுத்தியவர்கள்.

தொடக்கத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட நூல்கள் சமஸ்கிருதம் மற்றும் பாலி (Pali) மொழிகளில் இருந்தன. ஆனால் விரைவில் உள்ளூர் மொழி எழுத்துகளுடன் கலந்து விட்டன. ஒரு கலவையான மொழி உண்டாகி உள்ளது.

சமஸ்கிருதம்; தமிழ் எழுத்துகள் உள்ளூர் மொழி எழுத்துகளுடன் கலந்து தனி ஒரு மொழி போல பயணித்து இருக்கின்றன.

கப்பலேறி வந்த கைவினைஞர்களும் காலப் போக்கில் உள்ளூர்க் கலைக் கலாசாரத் தாக்கங்களினால் பாதிப்பு அடைந்து இருக்கலாம். அதனால் தான் அவர்களின் கைவினைகளிலும் உள்ளூர் கலைக் கலாசாரத் தாக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

கம்போடியா அங்கோர் வாட் ஆலயங்களில் உள்ள சிற்பங்களைப் பார்த்தால் தெரிந்து விடும். அந்தச் சிற்பங்களை உருவாக்கியவர்கள் பெரும்பாலும்  தமிழ்நாட்டில் இருந்து போன சிற்பிகள் தான்.

இருப்பினும் அந்தச் சிற்பங்களின் வடிவங்கள் தமிழ் நாட்டில் இருந்து போன தமிழ் முகங்கள் போல தெரியாது. மங்கோலிய முகங்கள் போல இருக்கும். வடக்கே சீனாவில் இருந்து வந்த சீனர்களைப் போல இருக்கும்.

அல்லது தெற்கே தாய்லாந்தில் இருந்து போன சயாம்காரர்களைப் போல இருக்கும். அல்லது பர்மியர்களைப் போல இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர் முகமும் மங்கோலிய முகமும் கலந்ததாக இருக்கும்.

உள்ளூர்க் கலைக் கலாசாரப் பாரம்பரியத் தாக்கங்களினால் ஏற்பட்ட விளைவுகள் என்றுதான் சொல்ல முடிகின்றது.

சூரியவர்மன், ஜெயவர்மன், யசோவர்மன்; இவர்கள் சீனர்த் தோற்றம் கொண்ட கம்போடியர்கள். ஆனால் இவர்கள் சைவப் பல்லவர்கள். அவர்களின் முகங்களில் தமிழகத்தின் மண் வாசனை; காற்று வாசனை தெரியவில்லை. முக வாசனை ரொம்பவுமே மாறிப் போய் இருக்கும்.

கம்போடியாவின் பழைய பெயர் கம்போசம். திருமந்திர அருள்முறைத் திரட்டு 39-ஆம் பாடலில் அருமணம், காம்போசம், ஈழம் , கூவிளம், பல்லவம், அங்கம் எனும் நாடுகளின் பெயர்கள் வருகின்றன.

கம்புக முனிவர் என்பவர் தான் முதன்முதலில் கம்போடியாவுக்குச் சென்றவர். அதனால் தான் அந்த நாட்டிற்குக் காம்போசம் என்று பெயர் வந்தது. கவுந்தினியர்கள் என்பது வேறு. கம்புக முனிவருக்குப் பின்னர் சென்றவர்கள். சரி.

உலகத்திலேயே மிகப் பெரிய இந்துக் கோயில் கம்போடியாவில் உள்ளது. தெரிந்த விசயம். அங்கோர் வாட் கோயில், பல்லவர் சோழர் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. அது ஒரு விஷ்ணு கோயில்.  

கி.மு. 2 முதல் - கி.பி. 1 வரை பல்லவர்கள் கம்போடியாவில் மிகையாகவே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். பல்லவர்கள் தங்கள் பெயருடன் வர்மன் எனும் பட்டப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அடுத்து அடுத்து வந்த காம்போடிய மன்னர்களும் தங்கள் பெயருடன் வர்மன் பட்டப் பெயரைச் சேர்த்துக் கொண்டார்கள்.

கிளந்தான் பான் பான் கடல்கரையில் இருந்து கப்பலேறிப் போய்; அங்கே கம்போடியாவில் இருந்த சோமா ராணியாரை மடக்கி; மனைவியாக்கி; கடைசியில் கம்போடியா நாட்டின் வரலாற்றையே மாற்றிப் போட்ட சூரியவர்மனைச் சும்மா சொல்லக் கூடாது. பாராட்டுவோம். சரி.

தமிழ் எழுத்து வடிவங்களும், சமஸ்கிருத எழுத்து வடிவங்களும் எந்த எந்த நாட்டு எழுத்துகளுடன் கலந்து போயின எனும் ஒரு பட்டியலைக் கொடுக்கிறேன். பாருங்கள்.

மோன் (Mon) (பர்மா)

காவி (Kawi) - ஜாவா மொழி; பாலினேசிய மொழி; சுந்தானேசிய மொழி; பூகிஸ் மொழி (இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், போர்னியோ)
    
லன்னா மொழி; தாம் மொழி (Lanna, Tham) (தாய்லாந்து)

கோம் மொழி (Khom) (தாய்லாந்து)
     
கெமர் மொழி (Khmer) - (கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ்)

டாய் லூ மொழி (Tai Lue); தாய் மொழி (பர்மா, தென் சீனா, தாய்லாந்து, வியட்நாம்)

சாம் மொழி (Cham) (வியட்நாம்)

மேற்சொன்ன மொழி வடிவங்களுடன் தமிழ் எழுத்து வடிவங்களும் சமஸ்கிருத எழுத்து வடிவங்களும் கால ஓட்டத்தில் கலந்து விட்டன.

அந்தப் பல்வேறு மொழிகளின் எழுத்து வடிவங்களில் தமிழ், தெலுங்கு, கர்நாடகா, மலையாள எழுத்து வடிவங்களின் ஒற்றுமையையும் காணலாம். வட்டமான வடிவத் தன்மையையும் காணலாம்.

இப்போது மலேசியா, கெடா, சுங்கை பத்துவில் உள்ள தொல்பொருள் தளங்கள் 2-ஆம்; 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அங்கு கண்டு எடுக்கப் பட்ட எழுத்து வடிவங்கள் தமிழைப் போன்று எழுத்து அமைப்பு கொண்டவை. நினைவு படுத்துகிறேன்.

இந்தோனேசியாவின் மிக மிகப் பழமையான தொல்பொருள் தளங்கள், போர்னியோ, கிழக்கு கலிமந்தான், கூத்தாய் (Kutai, East Kalimantan) எனும் இடத்தில் உள்ளன. இந்தத் தளங்களில் காணப்படும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்து வடிவங்களும் தமிழ் எழுத்து வடிவங்களைக் கொண்டவை. இதையும் நினைவு படுத்துகிறேன்.

கூத்தாய் பேரரசு (Kutai Kingdom) போர்னியோ தீவின் கலிமந்தான் காடுகளின் கிழக்குக் கரையில் கி.பி. 350-ஆம் ஆண்டுகளில் மையம் கொண்ட பேரரசு. 1670 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அரசு.

இந்தப் பேரரசை ஆட்சி செய்தவர்களின் வாரிசுகள் இன்றும் போர்னியோ தீவில் உள்ளார்கள். தலைமுறை தலைமுறைகளாகத் தங்களை மன்னர் முல்லைவர்மனின் வாரிசுகள் (Kerajaan Mulawarman) என்றும் அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்.

கலிமந்தான், கூத்தாய் எழுத்து வடிவங்கள் வேறு சில இடங்களிலும் கிடைத்து இருக்கின்றன. அதே மாதிரியான தமிழ் எழுத்து வடிவங்கள் கொண்ட கல்வெட்டு வியட்நாம், பூ யென் (Phu Yen district in Vietnam) எனும் இடத்தில் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.

பத்ரவர்மன் (King Bhadravarman) எனும் சம்பா பேரரசு மன்னரைப் பற்றிய சோ-தின் ராக் கல்வெட்டு (Cho-dinh Rock Inscription). இந்தக் கல்வெட்டிலும் தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன.

பத்ரவர்மன் மன்னரின் சோ-தின் ராக் கல்வெட்டு நான்காம் நூற்றாண்டின் இறுதியில் தேதியிட்டது. (வியட்நாமில் பூ யென் மாவட்டம்). பத்ரவர்மன் மன்னரின் ஆட்சிக்காலம் கி.பி. 380 - 413.

இதே போல மற்றோர் ஒற்றுமை. இலங்கை அனுராதபுரத்தில் கிடைத்த  ருவன்வலிசயா தூண் கல்வெட்டு (Ruvanvalisaya Pillar Inscription at Anuradhapura). கி.பி. 337 - 365-ஆம் ஆண்டுகளில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த புத்ததாசா (King Buddhadasa) எனும் மன்னரைப் பற்றிய கல்வெட்டு. அந்தக் கல்வெட்டிலும் தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன.

இன்னும் ஒரு கல்வெட்டு. மேற்கு ஜாவாவை ஆட்சி செய்த தருமா பூர்ணவர்மனின் (Tarumanagara Purnavarman) கல்வெட்டு. இது தமிழ்ப் பல்லவ எழுத்து வடிவங்களில் உள்ளன. இது கிழக்கு கலிமந்தான் கூத்தாய் கல்வெட்டுடன் ஒத்துப் போகிறது.

என்னுடைய கேள்வி இது தான். மலேசியா, கெடா சுங்கை பத்துவில் கிடைத்த கல்வெட்டுகள்; கிழக்கு கலிமந்தான், கூத்தாய் கல்வெட்டுகள்; அனுராதபுரம் ருவன்வலிசயா கல்வெட்டுகள்; மேற்கு ஜாவா தருமா பூர்ணவர்மனின் கல்வெட்டுகள்.

இந்தக் கல்வெட்டுகள் தமிழ்ப் பல்லவ எழுத்து வடிவங்களைக் கொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?

அந்த எழுத்துகளை அப்போதைய சாமானிய மக்களாலும் படிக்க முடிந்தது. அறிவுஜீவிகளாலும் படிக்க முடிந்தது. உள்ளூர் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

தனஞ்செயன், கீதாச்சாரியன், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண ஜெயந்தன், கிருஷ்ண பிரியோம், தாமோதரன், கோவர்தனன், சத்தியவசனன், விஸ்வகர்மன் போன்ற பெயர்கள் கம்போடியக் கல்வெட்டுக்களில் நிறையவே காணப் படுகின்றன. அவை அப்போதைய தமிழ் மொழி; வடமொழிகளில் இருந்து போன பெயர்கள் ஆகும்.

நிச்சயமாக அந்தக் காலக் கட்டத்தில், உள்ளூர் கம்போடிய மக்கள் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். இந்தச் சொற்களைக் கொண்டு போனவர்கள் பல்லவர்கள் தான். அல்லது தமிழகத்தின் கோயில் அர்ச்சகர்கள் தான். வேறு யாராக இருக்க முடியும்.

காம்போடியாவில் பல செப்பேடுகள் கிடைத்து உள்ளன. அந்தச் செப்பேடுகளின் மொழி எந்த மொழியாகவும் இருக்கலாம். தமிழ் - பல்லவம் - கெமர் கலவையாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றின் அமைப்பு முறை அப்படியே தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செப்பேடுகள் போலவே இருக்கின்றன. சரி.

கம்போடியக் கோயில்களின் அமைப்பில் மூன்று அமைப்புகள் உள்ளன. ஆதிக்காலக் கோயில்கள் தென்னிந்திய பாணியில் இருக்கின்றன. பிற்காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் ஒரிசா மாநில பாணியில் இருக்கின்றன.

அதே சமயம் கர்நாடகாவில் இருந்த ஹோய்சலா மன்னர்களின் கட்டடக் கலைகளையும் (Hoysala architecture) ஒத்துப் போகின்றன. அதிசயமாக இருக்கிறது.

(The Hoysala era was an important period in the development of art, architecture, and religion in South India. The empire is remembered today primarily for Hoysala architecture. Over a hundred surviving temples are scattered across Karnataka.)

கி.பி. 2-ஆம்; 3-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்த வியாபாரிகளும்; அரசு சார்ந்த போர் வீரர்களும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக அங்கு வாழ்ந்த பூர்வக் குடிமக்கள் இந்துக்களாக மதம் மாறி இருக்கிறார்கள். அதுதான் உண்மை.

அப்போதைய காலத்தில் அங்கு வாழ்ந்த பூர்வக் குடிமக்கள் ஒரு குறிப்பிட்ட மதம் இல்லாமல் வாழ்ந்து இருக்கலாம். ஆன்ம வாதம் (Animism) வாழ்ந்த கட்டம். அப்படிப் பட்டவர்கள் எப்படி இந்து மதத்திற்குள் ஐக்கியமானர்கள்?

அந்தக் காலக் கட்டத்தில் இந்து மதம் மட்டும் அல்ல. புத்த மதமும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வந்து உள்ளது. ஒவ்வோர் அரச குலமும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு மதத்தைத் தேர்ந்து எடுத்துக் கொண்டது. அதுதான் உண்மை.

தென்கிழக்காசிய கம்போடியா, மலாயா, வியட்நாம், இந்தோனேசியா நாடுகளில் கோவில்களைக் கட்டியவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள் தான். பொன் பொருள், அப்ரசா நாட்டிய மங்கைகள், அடிமைகள் என்று நிறையவே கொடுத்து அழகு பார்த்து இருக்கிறார்கள்.

சித்திரை மாதம் முதலாம் நாளைத் தமிழர்கள் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அதற்கு இன்னொரு பெயர் சங்கிராந்தி. இதைக் கம்போடியா தாய்லாந்து மக்கள் சோங்க் ரான் என்கிறார்கள்.

சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி; பல்லவர்கள் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி; எந்த ஓர் இடத்திலும் பொங்கல் எனும் சொல்லைப் பயன்படுத்தவே இல்லை.

ஆனால் அந்த நாளை அற்புத விழாவாகக் கொண்டாடி இருக்கிறார்கள். அதாவது உத்தராயன சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் விழா.

ஆடிப்பெருக்கு நாளில் கம்போடியாவில் இந்திர விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் காம்போடியாவில் தமிழ் வாடை அடிக்கவில்லை.

காலப் போக்கில் கம்போடியா ஒரு வைணவ நாடாக மாறியது. பின்னர் புத்த நாடாக மாறியது. இருந்தாலும் ஆலய அர்ச்சகர்களின் செல்வாக்கு இருந்து வந்து உள்ளது. அதுவே தமிழர்ச் செல்வாக்காகவும் இருந்தது என்றுகூட சொல்லலாம்.

பின்னர் காலத்தில் கம்போடிய மன்னர்கள் புத்த மதத்தவர்களாக மாறினார்கள். இருந்தாலும் கம்போடியா தாய்லாந்து நாடுகளில் இன்றைய வரைக்கும் தேவாரம் திருவாசகம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தாய்லாந்து மன்னரின் பிறந்த நாள் தினத்தில் தேவாரம் பாடப் படுகிறது. நினைவில் கொள்வோம்.

தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் இருந்து கம்போடியாவின் அங்கோர் வாட் சுவர்களுக்குத் தமிழ் வடிவ எழுத்துகள் எப்படி போயின? தமிழ் வடிவம் கொண்ட தமிழ் பல்லவ எழுத்துகள் மலேசியா, கெடா சுங்கை பத்துவிற்கு  எப்படி போயின? (How the script got from Mahabalipuram in Tamil Nadu to the walls of Angkor Wat in Cambodia?).

நிறைய ஆய்வு நூல்களைப் படித்து இருக்கிறேன். அனைத்து ஆய்வுப் பதிவுகளும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சுட்டிக் காட்டுகின்றன. மதங்களின் பரிணாமங்கள். ஆமாம். மதம் தான் மூல காரணமாக இருந்து இருக்கிறது.

இந்து மதத்திற்குப் போட்டியாகப் புத்த மதம் தோன்றிய கட்டத்தில் இந்து மதப் பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கலாம். இந்து மத பிரசாரவாதிகள் தமிழையும் சமஸ்கிருத மொழியையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குள் இறக்குமதி செய்து இருக்கலாம்.

அந்த வகையில் கடாரத்துக் கல்வெட்டுகளில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதப்பட்டு இருக்கலாம்.

இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு சர்ச்சைக்கு உரிய பதிவாகவே அமைந்தது. பலர் அழைத்தார்கள். பல இடக்கு முடக்கான கேள்விகள். துளைத்து எடுத்து விட்டார்கள். சவாலே சமாளி என்று சமாளித்தும் விட்டேன். இந்தத் தொடர் இத்துடன் ஒரு முடிவிற்கு வருகிறது. நன்றி.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.09.2020


சான்றுகள்:

1. Aiyangar, S. K.; Nilakanta Sastri, K. A. (1960), "The Pallavas", in R. C. Majumdar; K. K. Dasgupta, A Comprehensive History of India, Volume III, Part 1: A.D. 300–985.

2. Sathianathaier, R. (1970), "Dynasties of South India", in Majumdar, R. C.; Pusalkar, A. D. The Classical Age, History and Culture of Indian People, Bharatiya Vidya Bhavan, pp. 255–275.

3. Moraes, George M. (1995), The Kadamba Kula: A History of Ancient and Mediaeval Karnataka, Asian Educational Services, p. 6.

4. Group of Monuments at Mahabalipuram, Dist. Kanchipuram Archived 29 May 2018 at the Wayback Machine, Archaeological Survey of India (2014).

5. Marilyn Hirsh (1987) Mahendravarman I Pallava: Artist and Patron of Māmallapuram, Artibus Asiae, Vol. 48, Number 1/2 (1987), pp. 109-130.

6. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute.

7.  Aiyangar & Nilakanta Sastri 1960, pp. 314–316: There is much in favour of the thesis that the Pallavas rose into prominence in the service of the Satavahanas in the south-eastern division of their empire, and attained independence when that power declined.

8. Gopalachari, K. (1957), "The Satavahana Empire", in K. A. Nilakanta Sastri (ed.), A Comprehensive History of India, II: The Mauryas and Satavahanas 325 SC.-AD 300.

9. Rama Rao 1967, pp. 47-48: The Manchikallu Prakrt inscription mentions a Simhavamma or Simhavarman of the Pallava family and the Bharadvaja gotra and registers gifts made by him after performing Santi and Svastyayana for his victory and increase of strength.

10. Stein, Burton (2016). "Book Reviews : Kancipuram in Early South Indian History, by T. V. Mahalingam (Madras : Asia Publishing House, 1969), pp. vii-243". The Indian Economic & Social History Review. 7 (2): 317–321.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக