03 செப்டம்பர் 2020

பரமேஸ்வரா காசோலை

பரமேஸ்வரா மலாக்காவின் மன்னராக இருந்த போது தங்க நாணயங்களில் வணிகப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. ஆனாலும் அவர் உருவத்தில் காசோலைகளும் வெளியிடப்பட்டுப் பங்கு பரிவர்த்தனைகள் நடைபெற்று இருக்கலாம். அதற்குச் சான்றாக அண்மையில் அவருடைய உருவம் பதிக்கப்பட்ட ஒரு காசோலை விற்பனைக்கு வந்து உள்ளது. ஓர் அலங்காரக் காசோலை.

Cek Alam Gaib எனும் அமானுசய உலகக் காசோலை எனும் ஓர் அமைப்பை உருவாக்கி அதிசயமான பொருட்கள்; அபூர்வமான காசோலைகள்; ஆச்சரியமான நாணயங்கள் போன்றவற்றைச் சேகரித்துப் பரிமாற்றம் செய்கிறார்கள். அதாவது விற்பனை செய்கிறார்கள். இது 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியான செய்தி.

(Bertujuan Untuk Urusniaga Jual-Beli Duit Lama & Duit Baru Samada Duit Dalam Negara Malaysia Ataupun Diluar Negara.)

அந்தக் காசோலையின் மதிப்பு 25,000,000 ரிங்கிட் (25 மில்லியன் - இரண்டு கோடி ஐம்பது இலட்சம்). Sultan Parameswara Iskandar Zulkarnain Syah என்று எழுதப்பட்டு உள்ளது. காசோலையின் எண்: 167249. கி.பி. 1437-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1440-ஆம் ஆண்டுக்குள் செல்லுபடியாகும் காசோலை. இப்போது செல்லுபடி ஆகாது. இருந்தாலும் நினைவுப் பொருளாக நினைவில் கொள்ளலாம்.

அந்தக் காசோலையில் ராஜா இஸ்கந்தர் ஷா (Iskandar Zulkarnain Syah) என்று பரமேஸ்வரா கையொப்பம் போட்டு இருக்கிறார்.

இப்போது Cek Alam Gaib Sultan Parameswara எனும் அந்தக் பரமேஸ்வரா காசோலையை விற்பனைக்கு விட்டு இருக்கிறார்கள். குரு அமிரூடின் (Ust Amiruddin) என்பவர் அறிவித்து இருக்கிறார். அதன் விலை 10,000 (10 ஆயிரம்) ரிங்கிட்.

(Koleksi Cek Alam Gaib Sultan Parameswara Iskandar Zulkarnain Syah. Antara Cek Alam Gaib yg jarang2 ditemui.)

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுங்களா. நம் நாட்டில் புகழ்பெற்ற ஒரு வங்கியின் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த வங்கி மலாக்காவில் செயல்பட்டு இருக்கலாம். சொல்ல முடியாது. தவிர நாட்டின் தேசிய மலரான செம்பரத்தை மலரும் அந்தக் காசோலையில் பொறிக்கப்பட்டு உள்ளது.

பரமேஸ்வராக்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்தக் காசோலை வெளியிடப்பட்டு உள்ளது. முக்கியமான ஒரு மனிதருக்கு முக்கியத்துவம் கொடுத்த வரையில் பலருக்கும் மகிழ்ச்சி.

சான்றுகள்:

1.http://antiquemaniacworld.blogspot.com/2019/06/koleksi-cek-alam-gaib-sultan-parameswara.html

2. http://geligageliga.blogspot.com/2017/08/






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக