08 செப்டம்பர் 2020

மஜபாகித் பேரரசு - 3

தமிழ் மலர் - 08.09.2020

இந்தோனேசியர்கள் தங்களின் பூர்வீக ஜாவா தீவை உணர்வு பூர்வமாகப் பூமி ஜாவா (Bhumi Jawa) என்றும்; ஜாவா மண்டலம் (Mandala Jawa) என்றும் அழைக்கிறார்கள். தவிர மஜபாகித் பேரரசை வில்வதீக்தா (Wilwatikta) என்றும் அழைக்கிறார்கள். வில்வதீக்தா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.

ராடன் விஜயன் (Raden Wijaya) என்பவர் தான் மஜபாகித் பேரரரசை உருவாக்கியவர். இவருடைய அசல் பெயர் நாராரியா சங்கரமா விஜயா (Nararya Sangramawijaya). சிங்காசாரி அரசின் இளவரசர் மகிசா செண்பகா (Mahisa Campaka) என்பவரின் மகன்.

1289-ஆம் ஆண்டு சிங்காசாரி அரசின் ஒரு பகுதியாக கெடிரி சிற்றரசு (Kediri) இருந்தது. அதன் அரசர் ஜெயகாதவாங்கன் (Jayakatwang). இவர் சிங்காசாரி அரசிற்கு எதிராகக் கலகம் செய்தார். அதில் சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் கொல்லப் பட்டார்.

அதனால் 1292-ஆம் ஆண்டு ராடன் விஜயன், அருகாமையில் இருந்த மதுரா, சும்நாப் (Sumenep, Madura) எனும் இடத்திற்குத் தப்பிச் சென்றார். அப்போது மதுராவை ஆரிய வீரராஜா (Aria Wiraraja) என்பவர் ஆட்சி செய்து வந்தார். இந்த ஆரிய வீரராஜாவுடன் ராடன் விஜயன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அதாவது, கெடிரி சிற்றரசின் அரசர் ஜெயகாதவாங்கன் (Jayakatwang) என்பவரைப் பழி வாங்க ஆரிய வீரராஜா உதவிகள் செய்ய வேண்டும் எனும் ஒப்பந்தம். அதற்கு ஆரிய வீரராஜா சம்மதித்தார். இதில் இன்னும் ஒரு விசயம். என்ன தெரியுங்களா.

ராடன் விஜயனின் மாமனார் கருத்தநாகரன் கொலை செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்த ஜெயகாதவாங்கனுக்கு உதவியாக இருந்தவர் தான் இந்த ஆரிய வீரராஜா.

உண்மை விவரங்கள் தெரியாமலேயே ஆரிய வீரராஜாவிடம் உதவிகள் கேட்கப் பட்டது. இருந்தாலும் ஆரிய வீரராஜா உதவிகள் செய்தார். கெடிரி சிற்றரசிற்கு எதிராகப் போர் நடந்தது. அதில் ராடன் விஜயன் வெற்றி பெற்றார்.

மதுரா அரசர் ஆரிய வீரராஜாவிற்கு ஒரு மகன் இருந்தார். அவருடைய பெயர் ரங்கா லாவன் (Ranggalawe). இவர் தான் ராடன் விஜயனின் படைகளுக்குச் சேனாதிபதியாக இருந்தவர். இதன் பின்னர் கெடிரி சிற்றரசு தோற்கடிக்கப்பட்டது. அந்தச் சுவட்டில் 1293-ஆம் ஆண்டு, மஜபாகித் அரசு என்று ஒரு புதிய அரசு உருவானது.

அதன் பின்னர் கருத்தநாகரன் தலைநகரத்தின் பெயரும் மஜபாகித் என்று மாற்றம் செய்யப் பட்டது. அந்தக் காலத்தில் ஒரு நாட்டின் தலைநகரத்தின் பெயரிலேயே அந்த நாட்டின் பெயரும் அழைக்கப் பட்டது.

அது ஒரு மரபு. ஆக மஜபாகித் மன்னரால் ஆளப்பட்ட அந்த நாடு முழுமையும் மஜபாகித் என்று வாகை சூடியது. சரிங்களா. இதற்கும் சான்றுகள் உள்ளன.

முதல் சான்று:
(Mahandis Y. Thamrin, National Geographic Indonesia. September 2012).

இரண்டாம் சான்று:
(The Brunei Museum journal, Volume 4, Issue 1 – Page 192)

மஜபாகித் பேரரசராக ராடன் விஜயன் முடிசூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரை கிரிதராஜாசா ஜெயவர்த்தனா (Kritarajasa Jayavardhana) என்று மாற்றிக் கொண்டார்.

பின்னர் கர்த்தநாகரனின் மகள்கள் மற்ற மூவரையும் ராடன் விஜயன் மணந்து கொண்டார்.

1. மூத்த மகள் பரமேஸ்வரி  திரிபுவனேஸ்வரி (Paramesvari Tribhuwaneswari). இந்தத் திருமணத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய பெயர் கலா கீமது (Kala Gemet). இவர் கெடிரி சிற்றரசின் இளவரசராக நியமிக்கப் பட்டார்.

2. பிரஜன பரமிதா (Prajnaparamita);

3. நரேந்திர துகிதா (Narendraduhita)  

ராடன் விஜயன் ஏற்கனவே சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் மகள் காயத்திரி ராஜபத்தினி (Gayatri Rajapatni) என்பவரை திருமணம் செய்து இருந்தார். சிங்காசாரி வீழ்ச்சிக்கு முன்னரே அந்தத் திருமணம் நடைபெற்று விட்டது. இவர் தான் அந்த 4 சகோதரிகளில் ஆக இளையவர்.

அர்ச உரிமைகளில் பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான்கு சகோதரிகளையும் ராடன் விஜயன் திருமணம் செய்து கொண்டார்.

(According to George Coedes, prior to the fall of Singhasari, Raden Wijaya was married to Gayatri Rajapatni, the daughter of Kertanegara. However, during the formation of the new kingdom Majapahit, he married the four daughters of Kritanagara, and the eldest, Queen Paramesvari Tribhuvana, bore him a son. This son, Kala Gemet, was crowned Prince of Kediri in 1295.)

Source: Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. Page: 201.

அடுத்து சுமத்திரா மலாய் இளவரசி இந்திரேஸ்வரி (Indreswari) என்பவரையும் மணந்து கொண்டார். ஆக, ராடன் விஜயனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள்.

(Raden Wijaya also took Indreswari also known as Dara Petak, supposedly a princess of Malayu Dharmasraya Kingdom brought by Kebo Anabrang to Majapahit court from Sumatra through Kertanegara's Pamalayu expedition.)

மஜபாகித் தோற்றுவிக்கப் பட்ட காலத்தில் ராடன் விஜயன் பற்பல கலகங்களைச் சந்தித்தார். இருந்தாலும் மஜபாகித் அரசை மிக உறுதியாக நிறுவிக் கொண்டார். இப்படித் தான் மஜபாகித் அரசு உருவானது.
 
ஐந்தாவது மனைவி இந்திரேஸ்வரி மூலமாக ராடன் விஜயனுக்கு ஒரே ஒரு மகன். காயத்திரி ராஜபத்தினி மூலமாக இரண்டு மகள்கள். திரிபுவனா விஜயதுங்கா தேவி; ராஜா தேவி. அவரது முதல் மனைவி பரமேஸ்வரி  திரிபுவனேஸ்வரி உட்பட மற்ற மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லை.

ராடன் விஜயனின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய மகன் ஜெயநகரா (Jayanegara) மஜபாகித் அரசர் பதவியை ஏற்றுக் கொண்டார். மஜபாகித் பேரரசின் இரண்டாவது அரசர். சரி.

இந்தோனேசியாவில் கி.பி. 1811 முதல் கி.பி. 1816 வரை, ஜாவாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி. அதாவது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் (British East India Company) ஆட்சி.

அதன் ஆளுநராக ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் இருந்தார். அவருடைய ஆட்சியின் காலத்தில் தான் ஜாவா துரோவுலான் (Trowulan) பகுதியில் மஜாபாகித் சிதைவுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

லயங்களின் சிதைவுகள் பரவிக் கிடந்ததாக ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் கூறி இருக்கிறார் (ruins of temples.... scattered about the country for many miles).

துரோவுலான் நிலப் பகுதி ஜாவாவின் வரலாற்று அருமைகளுக்குப் பெருமை சேர்க்கிறது என்று புகழாரம் செய்தும் இருக்கிறார்.

மஜபாகித்தின் சிதைவு வடிவங்கள்; கலைநயப் படிமங்கள் மிகக் குறைந்த அளவில் தான் கிடைத்து இருக்கின்றன. எரிமலை வெடிப்பினாலும்; வெள்ளப் பெருக்கினாலும் மஜபாகித் பேரரசின் பொக்கிஷங்கள் சிதைந்து போய் விட்டன.

மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் அந்தச் சிதைவுகள் இன்னும் உள்ளன. இருப்பினும் இந்தோனேசிய மக்கள் மஜாபாகித்தை மறக்கவில்லை. சான்றுகளை இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மஜபாகித் சொல்வனம் என்பது பொன் முட்டைகள் கொடுக்கும் ஒரு தங்கப் பறவையாகப் பார்க்கிறார்கள். ஏன் தெரியுங்களா.

மஜபாகித் சின்னங்களையும் சிறப்புகளையும் பார்க்கப் பல்லாயிரம் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் வருகிறார்கள். இலட்சக் கணக்கில் செலவு செய்கிறார்கள். அதை நம்பி பல நூறு குடும்பங்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

கம்போடிய மக்களுக்கு ஓர் அங்கோர் வாட் என்றால் துரோவுலான் மக்களுக்கு ஒரு மஜபாகித்.

மஜபாகித் தேடல்களுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாபத் தானா ஜாவி (Babad Tanah Jawi) எனும் ஒரு வரலாற்று நூல் மேலும் சான்று பகிர்கின்றது.

(Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. பக்: 29.)

இந்த நூல் ஜாவா மொழியில் எழுதப் பட்டது. மஜபாகித்தை மொஜொபாயிட் (Mojopait) என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.

தவிர 1365-இல் ஜாவாவில் ஒரு நூல் எழுதப் பட்டது. அதன் பெயர் நகரகிரேதாகமம் (Nagarakretagama).

பாலித் தீவு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தோனேசியாவில் அதிகமான இந்துக்கள் வாழும் தீவு. அந்தத் தீவிற்கு அருகில் லொம்போக் தீவு இருக்கிறது. இந்தத் தீவை 1890-களில் சாகரநகர அரச வம்சாவழியினர் (Cakranegara) ஆட்சி செய்து இருக்கின்றனர். இவர்கள் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தீவின் மீது 1894-இல் டச்சுக்காரர்கள் படை எடுத்தார்கள். அப்போது தான் நகரகிரேதாகமம் எனும் கவிதை வடிவிலான நூல், டச்சுக்காரர்களின் கரங்களில் சிக்கியது. அந்த நூலில் இருந்து தான் மஜபாகித்தைப் பற்றிய பல அரிய பெரிய உண்மைகளும் தெரிய வந்தன.

(Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd Ed.). Stanford University Press / Macmillans.)  

அடுத்து இன்னும் ஒரு நூல். 1600-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது. எந்த ஆண்டு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அதன் பெயர் பரராத்தன் (Pararaton). 32 பக்கங்கள். 1126 வரிகள்.

(J.J. Ras, 1986, Hikayat Banjar and Pararaton. A structural comparison of two chronicles. In: C.M.S. Hellwig and S.O. Robson)

இந்த நூல் மஜபாகித் பேரரசைப் பற்றியும் சிங்கசாரி பேரரசைப் பற்றியும் விரிவாகச் சொல்கின்றது. மேல் அதிக ஆய்வுகளுக்கும் வழி வகுத்துக் கொடுக்கிறது.

ராஜசா (Rajasa) எனும் அரசர் சிங்கசாரி பேரரசை 1227-ஆம் ஆண்டு எப்படி தோற்றுவித்தார் என்றும் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. ராஜசாவின் இயற்பெயர் ஸ்ரீ ரங்கா ராஜசா பத்தர அபூர்வபூமி (Sri Ranggah Rajasa Bhatara Aburwabhumi).

இருந்தாலும் இந்தோனேசிய வரலாற்றில் இவருடைய பெயர் கென் அரோக் (Ken Arok) என்று குறிப்பிடப் படுகிறது.

மஜபாகித் பேரரசின் அரசர்கள் அனைவரும் ராஜசாவின் வழித்தோன்றல்கள் ஆகும். தவிர இந்தோனேசியாவை ஆட்சி செய்த மத்தாரம் பேரரசின் மன்னர்களும் அதே இந்த ஸ்ரீ ரங்கா ராஜசாவின் வழித்தோன்றல்கள்.

(Johns, A. H. (1964). "The Role of Structural Organisation and Myth in Javanese Historiography". The Journal of Asian Studies. 24: 91.)

மஜபாகித் பேரரசு இந்தோனேசியாவின் மகா பெரிய பேரரசு. ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்காசியத் துணைக் கண்டமே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது.

இந்தோனேசியா எனும் நாட்டிற்கு இன்று பெரிய ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. அதற்கு அன்றைய மஜாபாகித் பேரரசின் பரந்து விரிந்து நிறைந்த நிலப்பகுதிகள் தான் முக்கியக் காரணமாகும்.

அந்த அளவிற்கு மஜபாகித் பேரரசு பெரும் நிலப்பரப்பைக் கொண்டு ஆளுமை செய்து இருக்கிறது. நவீன போக்குவரத்து வசதிகளும்; தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இப்படி ஓர் ஆளுமையா? தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர்களின் ஆளுமைக்கு இதைவிட வேறு என்னங்க சான்று வேண்டும்.

இந்தோனேசியாவில் இந்தியர்கள் சார்ந்த நீண்ட கால வரலாற்றுச் சுவடுகள் நிறையவே உள்ளன. அந்த வரலாற்றுச் சுவடுகளை இந்தோனேசியர்கள் மறைக்கவில்லை. மறைக்க முயற்சிகள் செய்யவும் இல்லை. மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். முழுமனத்துடன் வாழ்த்துகின்றார்கள். வாயாரப் போற்றுகின்றார்கள். பரந்த மனம் கொண்டவர்கள்.

ஒரு காலத்தில் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே கட்டிப் போட்டுத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். இப்போது பாருங்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்சும் நிலை. வந்தேறிகள் என்று இகழ் பாடப் படும் இனமாய் அல்லாட வேண்டிய அவலநிலை.

சொல்லும் போது வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு ரொம்பவுமே வெம்பிப் போகிறது. போராடுவோம். போராடிக் காட்டுவோம். வேறு வழி இல்லை.

மஜபாகித் பேரரசு இன்றும் சரி; இனி என்றும் சரி; வரலாற்றுச் சங்கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே தான் இருக்கும். வாழ்க மஜபாகித். வளர்க இந்தோனேசியா வரலாறு.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.09.2020




 

1 கருத்து:

  1. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க இந்த பதிவை படிக்கவும் https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-write-seo-friendly-blog-post-in-tamil.html இந்த பதிவானது Google Rank ல் முதலிடத்தில் உள்ளது. சந்தேகமிருந்தால் " how to write seo post in tamil " என்று தேடவும். முதலிடத்தில் நமது போஸ்ட் தென்படும். Tech Helper Tamil ஐ பாருங்கள் Thanks.

    பதிலளிநீக்கு