தமிழ் மலர் - 14.02.2021
எருமை மாட்டின் மீது கொக்கு உட்கார்ந்தால் எருமைக்கு லாபம். கொக்கின் மீது எருமை மாடு உட்கார்ந்தாலும் எருமைக்குத் தான் லாபம். எப்படி என்று கேட்கிறீர்களா.
எருமை மாட்டின் மீது கொக்கு உட்கார்ந்தால் எருமை மாட்டின் தோலில் மேயும் உண்ணிகள் குறையும். அது எருமை மாட்டிற்கு லாபம். சரிங்களா.
இசகு பிசகாய் கொக்கின் மீது எருமை மாடு சாய்ந்தால் போதும். உட்கார வேண்டாம். எருமை மாட்டுக்கு கொஞ்ச நேரம் பஞ்சு மெத்தை கிடைத்த மாதிரி இருக்கும்.
The National Geographic Magazine, April 1907
கொக்கு என்னவாகும். தெரிந்த விசயம். இந்தத் தத்துவத்தைத் தான் ஆங்கிலேயர்கள் காலா காலமாகப் பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள்.
மலாயாவிலும் சரி; இலங்கையிலும் சரி; ஆங்கிலேயர்களின் காலனித்துவ நகர்வுகளுக்கு ஒப்பந்தக் கூலி முறை தான் தூபம் ஏற்றி வைத்தது. அந்த இரு நாடுகளிலும் ஆங்கிலேயர்கள் நம் தமிழர்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். தென் இந்தியாவில் பரவி இருந்த சாதி பாகுபாடுகளைச் சாணக்கியமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்
1847-ஆம் ஆண்டில் முதன்முறையாக மலாயாவில் ஒப்பந்த முறை அமலுக்கு வந்தது. வருடத்தைக் கவனியுங்கள். 1847-ஆம் ஆண்டு. அதற்கு முன்னர் பிரான்சிஸ் லைட் பினாங்கைத் திறந்த காலத்தில் இருந்து தமிழர்கள் மலாயாவுக்கு வருவதும் போவதுமாக இருந்து உள்ளார்கள்.
ஆனாலும் 1847-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 120,000 தமிழர்கள் மலாயாவில் குடியேறி இருக்கிறார்கள். பெரும்பாலோர் சில ஆண்டுகளில் திரும்பிப் போய் விட்டார்கள். நிரந்தரமாகத் தங்கவில்லை. அப்படி தங்கி இருந்தால் இந்தப் பக்கம் ஒரு மொரீஷியஸ் அல்லது ஒரு ரியூனியன் அல்லது ஒரு குவாடலூப் உருவாகி இருக்கலாம்.
1847-ஆம் ஆண்டில் தான் தென் இந்தியத் தொழிலாளர்கள் அதிகாரப் பூர்வமாக மலாயாவுக்குள் கொண்டு வரப் பட்டார்கள். அப்படி கொண்டு வரப் பட்டவர்கள் மிகவும் மோசமாக; கொஞ்சமும் மனிதாபிமானம் அற்ற நிலையில்; அடிமைத்தனமாக; மிருகத்தனமாக நடத்தப் பட்டார்கள். ஏற்கனவே பாடிய பழைய காம்போதி ராகப் பாடல் தான். ஒன் மினிட் பிளீஸ்.
வானொலியில் போட்டப் பாட்டையே திரும்பத் திரும்பப் போடுவார்கள். ஏன் போடுகிறீர்கள் என்று எவரும் கேட்க மாட்டார்கள். இங்கு நாம் எதையாவது மீண்டும் எழுதினால் அம்புட்டுத்தான். போன் மேல் போன் வரும். செய்தியை ரிப்பீட் பண்றீங்க என்று கோபித்துக் கொள்வார்கள்.
வானொலி நிலையத்துக்குப் போன் போட்டால் அவர்கள் டோஸ் விட்டு விடுவார்கள். அதற்குப் பயந்து கொண்டு ஒரு இளிச்சவாயனைப் பார்த்து முகாரி ராகம் பாடுவார்கள். சரி விடுங்கள். நம்ப இனம் தானே. பழக்க தோசம். பழகிப் போச்சு. சரி.
http://www.newmandala.org/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia/
மலாயாவில் அந்த மாதிரியான அடிமைத்தனமான ஒப்பந்த முறைக்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்புகள். மலாயாவிலும் கித்தா காட்டுப் புகைச்சல் தான். ஆனாலும் மேலே உயர்மட்டத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தான் சரியான ஆள் இல்லாமல் போய் விட்டது.
அதன் பின்னர் 1877-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளுக்கு (Straits Settlements) தமிழர்கள் நல்ல முறையில் அனுப்பப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள் என்றால் மலாயாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிப் பார்வையில் இருந்த பகுதிகள். மலாயாவில் பினாங்கு, டிண்டிங்ஸ், மலாக்கா, சிங்கப்பூர் பகுதிகள். 1867 ஏப்ரல் மாதம் முதல் தேதி உருவாக்கப்பட்டது.
அதில் செபராங் பிறை பகுதியும் அடங்கும். பின்னர் கிறிஸ்மஸ் தீவு (Christmas Island); கொக்குஸ் தீவு (Cocos Islands); போர்னியோ லாபுவான் தீவுப் பகுதிகளும் சேர்த்துக் கொள்ளப் பட்டன. மலாயா முழுமையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்கள்.
இப்போது புதுசாக ஒரு கதை. தெரியும் தானே. மலாயாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யவில்லை என்கிற கதை. விடுங்கள். அதற்குக் காரணம் சொல்லவே முடியாது. பேராண்மைக் கலக்கத்தில் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும்.
ஒப்பந்த முறைக்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்புகள் ஏற்பட்டதும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலன்களைக் கவனிக்க இந்தியாவில் ஓர் அதிகாரியும் மலாயாவில் ஓர் அதிகாரியும் நியமிக்கப் பட்டார்கள்.
சென்னை மாநில அரசாங்கம் குடியேற்றப் பாதுகாப்பாளர் (Protector of Emigrants) எனும் அதிகாரியை நியமித்தது. மலாயா அரசாங்கம் நாகப்பட்டினத்தில் குடியேற்ற முகவர் (Emigration Agent) எனும் அதிகாரி ஒருவரை நியமித்தது.
ஓர் ஒப்பந்தத் தொழிலாளர் இந்தியாவில் இருந்து மலாயாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் அவருக்குச் சரியான முறையில் வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நிபந்தனைகளுடன் கூடிய ஏற்பாடுகள்.
Regulations were framed to establish and administer the emigration depots, supervise the methods of recruitment by a system of licensing recruiters, and stipulate the areas where recruitment was to take place.
தவிர அந்தத் தொழிலாளர் தன் சொந்த விருப்பத்தின் பேரில் செல்வதாக மாஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் அளிக்க வேண்டும். இப்படி கடுமையான நிபந்தனைகள் இருந்தும் முறைகேடுகள் தொடர்ந்தன.
அப்போது தஞ்சாவூரில் ஓர் ஆங்கிலேய சப்-கலெக்டர் இருந்தார். நாகப்பட்டினத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு வகையில் நாடு கடத்தப் படுவதாக (organised system of kidnapping) ஓர் அறிக்கை தயாரித்து வெளியிட்டார்.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் உடல்நிலையைப் பற்றி தேர்வாளர்கள் அக்கறை கொள்வது இல்லை. ஆள் சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்கள். இளம் வயது பெண்களும் மோசமாக நடத்தப் படுகின்றார்கள்.
புதிய குடியேற்றப் பகுதிகளுக்குப் பெண்கள் பலர் விலைமாதர்களாகவும் தேர்வு செய்யப் படுகின்றார்கள். தவிர கப்பலில் பயணிக்கும் தொழிலாளர்கள் பலர் இறந்து போகின்றார்கள் எனும் விமர்சன அறிக்கை.
தஞ்சாவூர் சப்-கலெக்டர் தயாரித்த அந்த அறிக்கை இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
(Report of the Commissioners appointed to Enquire into the State of Labour in the Straits Settlements and Protected Native State 1890).
இந்தக் கட்டத்தில் பண்டிட் மதன் மோகன் மாலவியா (Pundit Madan Mohan Malaviya) எனும் இந்திய தேசியவாதி. ஒப்பந்த முறை அகற்றப்பட வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்தார். இந்திய தேசிய இயக்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பின்னர் இந்திய அரசாங்கம் ஒப்பந்த முறைக்கு முற்றாகத் தடை விதித்தது.
(Pillay 1971 : 1 7-3 7) ; (India of Today 1924: 26).
அதனால் 1910-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்த முறை தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் கங்காணி முறையில் தொழிலாளர்கள் மலாயாவுக்குள் கொண்டு வரப்பட்டனர். ஏற்கனவே கங்காணி முறையைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.
ஒரு தோட்டத்திற்குத் தொழிலாளர்கள் தேவைப் பட்டால் ஒரு தென்னிந்தியக் கங்காணி பினாங்கிற்குப் போவார். பினாங்கில் இருந்த குடிநுழைவு இலாகாவில் தொழிலாளர் மனுப்பாரங்களைப் பெற்றுக் கொள்வார்.
அப்படியே கப்பலேறி தென் இந்தியாவிற்குச் செல்வார். அவரின் பயணச் செலவுகளுக்குத் தோட்ட நிர்வாகமே நிதியுதவி செய்து வந்தது.
TABLE: 2.1. Indian Population in Malaya, 1921-57
மலாயாவில் இந்தியர்களின் மக்கள் தொகை 1921 – 1957
கங்காணி முறை
1921 - 1931
தமிழர்கள் 387,509 514,778
மலையாளிகள் 17,190 34,898
தெலுங்கர்கள் 39,986 32,536
வட இந்தியர் 25.495 39,635
சொந்த விருப்பத்தின் பேரில்
1947 - 1957
தமிழர்கள் 460,985 634,681
மலையாளிகள் 44,339 72,971
தெலுங்கர்கள் 24,093 27,670
வட இந்தியர் 54,231 84,934
Source: Fell, H. (1960), 1957 Population Census of the Federation of Malaya, Report No. 14: Kuala Lumpur; Chua, S.C. (1964), State of Singapore: Report on the CMSUJ of Population, Singapore.
மலாயாவில் கங்காணி முறை என்று அழைத்தார்கள். இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று அழைத்தார்கள். இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இரண்டுமே ஆள்கடத்தும் சதிராட்டங்கள் தான்.
ஒன்று மட்டும் உண்மை. மலாயாவில் கங்காணி முறையை முதலில் சோதித்துப் பார்த்தார்கள். பக்குவமாக இருக்கிறது என்று டிக்கெட் கொடுத்தார்கள். அதன் பின்னர்தான் இலங்கையிலும் அந்த முறையை அமலுக்கு கொண்டு வந்தார்கள்.
ஒப்பந்தக் கூலி முறை என்றால் ஒரு தொழிலாளியும் ஒரு முதலாளியும் நேரடியாகச் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தம். கங்காணி முறை அப்படி இல்லை. கங்காணி முறையில் கங்காணியே நேரடியாகக் களம் இறங்கிச் செயல் படுவார். ஆசை ஆசையாய் ஆயிரம் வார்த்தைகள் சொல்வார்.
கங்காணி போகும் கிராமத்தில் சில நாட்களுக்கு மது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதில் கிராமவாசிகள் மயங்கிப் போவார்கள். அப்படியே அவர்களை அள்ளிக் கொண்டு வந்து விடுவார். அப்படித் தான் கிராமத்து வெள்ளந்திகள் ஏமாந்து போனார்கள்.
Indrapala, K The Evolution of an ethnic identity: The Tamils of Sri Lanka, p.214-215
Spencer, J, Sri Lankan history and roots of conflict, p. 23
அலிபாபா குகைகளில் இருந்து தங்கப் பேழைகள் கிடைக்கும் என்று ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆங்கிலேயர்களுக்கு 100 விழுக்காட்டுப் புளங்காகிதங்கள். சுரண்டல் கலைக்கு ஒரு பெரிய கலைக் களஞ்சியத்தையே எழுதிய ஆங்கிலேயர்கள் சும்மா இருப்பார்களா.
ஆக சஞ்சிக்கூலிகளின் முன்னோடிகள் யார் என்றால் அவர்கள் தான் இலங்கையின் மலையகத் தமிழர்கள். மலாயாத் தமிழர்கள் அல்ல.
அப்படி போன இலங்கை மலையகத் தமிழர்கள் இரவோடு இரவாகத் தப்பித்துக் காட்டுப் பாதைகளில் நடந்தே போய் இருக்கிறார்கள். போகும் வழியில் யானைகளைப் பார்த்து இருப்பார்கள். புலிகளையும் பார்த்து இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக பயந்து இருக்க மாட்டார்கள்.
ஏன் தெரியுமா. இவற்றைவிட பெரிய பெரிய கொடிய மிருகங்களை எல்லாம் பார்த்தவர்கள் தானே. பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன அவர்களுக்கு நிஜப் புலிகள் எல்லாம் சூசூபி
புலிகள் பூனைகள் மாதிரி தெரிந்து இருக்கும். காட்டு மிருகங்களைப் பொருத்த வரையில் அவை எல்லாம் அவர்களுக்கு திருநெல்வேலி அல்வாக்கள்! புலியும் அடித்து இருக்காது. கிலியும் அடித்து இருக்காது. அனுபவம் பேசி இருக்கும்.
ஆனால் மலாயாத் தமிழர்களால் அப்படி எல்லாம் ஒன்றும் தப்பித்து ஓட முடியவில்லை. மீண்டும் கப்பலேறி ஊருக்குத் திரும்பிப் போவது என்பது எல்லாம் என்ன லேசுபட்ட காரியமா. நடக்கிற காரியமா.
அதனால் கஷ்டமோ நஷ்டமோ வாங்கி வந்த வரம் என்று எஞ்சிய நாட்களை எண்ணிப் பொறுதிக் கொண்டு இருக்க வேண்டும்.
2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வயற்காட்டு மண்ணையும் மணல்வீட்டுத் திண்ணை மேட்டையும் நினைத்து நினைத்துப் புலம்பிக் கொண்டு இருக்க வேண்டும். வேதனைப்பட்டது தான் மிச்சம்.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடி வந்த மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கதை வேறு. தோட்ட முதலாளி போலீஸில் புகார் செய்வார்.
கிராமத்தில் இருக்கும் காவல் துறையினர் தப்பி வந்த தொழிலாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்வார்கள். மீண்டும் அதே அந்தப் பழைய ராகம். பழைய பாசறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவார்கள்.
தப்பித்து வந்தாலும் வெள்ளைக்காரர்களின் குரங்குப் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த மாதிரி தப்பிப் போய்ப் பிடிபட்டவர்களுக்கு கசையடிகள் காத்து நிற்கும்.
காட்டு மரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குக் கட்டிப் போட்டு எறும்புகளைப் பிடித்து வந்து கடிக்க வைப்பார்கள். சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். கால்களில் சூடு போடுவதும் நடக்கும்.
அதுதான் ஏற்கனவே கையொப்பம் போட்டுக் கொடுத்து விட்டார்களே. அப்புறம் எப்படி முதலாளிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும். சொல்லுங்கள். தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கைநாட்டு போட்டுக் கொடுத்தாகி விட்டதே. வெள்ளைக்காரன் சும்மா இருப்பானா.
ரொட்டியில் ’பட்டர்’ தடவ கத்தியைத் தேடுகிறவன் பிடிபட்டவர்களை வறுத்து எடுக்காமல் சும்மா விடுவானா. அந்த வேலைகளை வெள்ளைக்காரர்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
செய்து கொடுக்கத் தான் கறுப்புக் கங்காணிகள் இருந்தார்களே. அது பற்றாதா? எள் என்றதும் எண்ணெயாய் வடிய ஆள் இருந்தது. வெள்ளைக்காரர்களின் வேலைகள் நன்றாகவே நடந்தன. எளிதாகவே முடிந்தன.
தமிழர்களின் சொந்தக் கதைகள் எல்லாமே சோகத்திலும் சோகமான கதைகள். காலா காலத்திற்கும் கண்கள் பனிக்கும் கண்ணீர்க் கதைகள்.
(Tamils from Tamil Nadu were brought to Ceylon as indentured labourers. These unfortunate Tamils were condemned to virtual slavery under the British, and, after independence, to the Sinhalese masters.)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.02.2021
சான்றுகள்:
1. George Thornton Pett (1899). The Ceylon Tea-Makers' Handbook. The Times of Ceylon Steam Press, Colombo.
2. Holsinger, Monte (2002). "Thesis on the History of Ceylon Tea". History of Ceylon Tea.
3. Kartikecu, Civattampi (1995). Sri Lankan Tamil society and politics. New Century Book House. p. 189. ISBN 81-234-0395-X.
4. Nadarajan, Vasantha (1999). History of Ceylon Tamils. Toronto: Vasantham. p. 146.
5. Muthiah, Subbiah. (2003). The Indo-Lankans: Their 200-Year Saga. Indian Heritage Foundation. p. 317. ISBN 955-8790-00-1.
பேஸ்புக் பதிவுகள்
Tangga Sornam: கண்ணீர் வராமல் படிக்க முடியவில்லை.தாங்கள் நம் நாட்டின் சொத்து.அனைத்தையும் ஆவணப்படுத்துக்கள் ஐயா.🙏
Raghawan Krishnan: Appreciated for yr valuable Talent Dear MK.
Ranjanaru Ranjanaru: படிக்க படிக்க கண்ணீர்தான் வருகிறது அண்ணா ... எப்படி எல்லாம் கொடுமைப் பட்டிருக்கிறார்கள்... நம் தமிழர்கள்
Sathya Raman: வணக்கம் சார். தங்களின் இந்தப் பதிவை நேற்றைய ஞாயிறு மலரில் பார்த்தேன், படித்தேன். தேயிலைத் தோட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த கட்டுரையின் வழி கண்ட போது என் கண்களும் கலங்கத்தான் செய்தன.
என் வாழ்க்கையில் தேயிலை தோட்டங்களே தென்றலாய் வலம் வந்திருக்கின்றன. சுகமும், சோகமும் சொந்தம் கொண்டாடிய கேமரன்மலை போ தேயிலை தோட்டத்தை உங்களின் இந்தப் பதிவு மீண்டும் நினைவுக்குள் கொண்டு வைத்திருக்கிறது.
ரப்பர், கரும்பு தோட்டங்களைப் போலவே தேயிலை தோட்டங்களிலும் தமிழர்கள் கொத்தடிமைகளாக சொற்ப கூலிக்கு நாராய் கிழித்தெடுக்க பட்டார்கள் என்பதே சத்தியமான உண்மை.
செங்கோடன்களும், துரைசாமிகளும், வெள்ளையன்களும் கங்காணிகளாகப் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டு தொழிலாளர்களை அதுவும் பெண் தொழிலாளர்களைக் கேவலப் படுத்தும், கொச்சை வார்த்தைகளால் வசை பாடவும், கட்டலை, முற்றிய இலைகளை [தேயிலை இலைகளை] பறித்து விட்டால் துண்டுச் சீட்டை கொடுத்து வீட்டுக்கு விரட்டி அடித்து அன்றைய தினக் கூலியில் மண்ணை அள்ளிப் போட்ட புண்ணியம் எல்லாம் இந்த கங்காணி மார்களையே சேரும்.
கங்காணி மார்களின் அடாவாடித்தனத்தையும் அரக்கத் தனத்தையும் கட்டுரையில் நீங்கள் பதித்தது எல்லாம் நிஜமே.
வெள்ளைக்காரத் துரைகள் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை இளகாரமாக பார்க்கா விட்டாலும் அந்தப் பங்கை கங்காணி மார்கள் ஆற்றி விடுவார்கள்.
எம் இனம் ஒவ்வொரு தோட்டங்களிலும் எப்படி எல்லாம் சீரழிந்தார்கள்; சிரமப் பட்டார்கள்; உழைத்தார்கள்; உருகுலைந்தார்கள், உதை பட்டார்கள்; அடி வாங்கினார்கள்; அவமானப் பட்டார்கள்; அலைகழிக்கப் பட்டார்கள்; இப்படி ஏகத்துக்கும் "பட்டார்கள்" பாடு பட்டார்கள்.
மலாயாவை வளப் படுத்தினார்கள். அதற்காக இன்று வரை "வந்தேறிகள்" என்று ஏளனப் பட்டங்களை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்று எத்தனையோ தோட்டங்களைத் துண்டாடல் செய்து நவீனமாக நந்தவனங்களை உருவாக்கி இருந்தாலும் இந்த உலகம் சுழலும் வரை எம்மவர்களின் உழைப்பும், உதிரமும் அந்தத் தோட்டங்களிலேயே ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.
மற்றும் ஒரு இதயத்தை வருடிய, மனதைக் கனக்கச் செய்த உங்களின் பதிவு சார்.
இந்த நாட்டில் வருங்காலத்தில் நமது வரலாறுகள் வாழ வாய்ப்பு இல்லை. உங்களைப் போன்ற ஆய்வாளர்களையே எம் தமிழ் இனம் நம்பி இருக்கிறது என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம் சார். நன்றி.
Muthukrishnan Ipoh: நன்றிங்க சகோதரி. நீண்ட பதிவு. தங்களின் மன ஆதங்கத்தைக் கொட்டிக் கொப்பளித்து இருக்கிறீர்கள். அப்படிச் சொல்வதை விட கேமரன் மலையில் உறங்கிக் கிடந்த ஓர் எரிமலை வெடித்துச் சிதறி இருக்கிறது என்று சொல்லலாம். தப்பில்லை.
ஓர் இனத்தை ஓர் இனம் அழித்தது என்றால் உலகில் பல நாடுகளில் அந்த மாதிரி நடந்து உள்ளது. அமெரிக்கவில் சிவப்பு இந்தியர்கள் இனம் அழிந்து போனதற்கு அவர்களிடம் ஒற்றுமை இல்லாமல் போனது ஒரு காரணம். ஒரு குழுவை இன்னொரு குழு அழித்து ஒழித்ததும் தலையாய காரணம்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஓர் அரசன் இன்னொரு நாடின் மீது படை எடுத்து வெற்றி பெற்றதும் அங்குள்ள ஆண்களை எல்லாம் கொன்று விடுவார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கடத்திக் கொண்டு போய் அடிமையாக்கி விடுவார்கள். அந்த இழிநிகச்சிகளுக்குக் காரணமாக இருந்தவர்கள் அந்த அரசர்களின் மதிவுரைஞர்கள்; படைத் தளபதிகள். மலாயா பார்வையில் கறுப்புக் கங்காணிகள்.
ஆனால் மலாயாவைப் பொறுத்த வரையில், (மன்னிக்கவும், மலேசியா எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை) நம் இனம் ஆங்கிலேயர்களிடம் அவதிப்படவில்லை. ஆங்கிலேயர்கள் ஓரளவிற்கு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார்கள். வரலாற்றுத் தரவுகள் பொய் சொல்வது இல்லை. கறுப்புக் கங்காணிகளிடம் தான் ரொம்பவுமே அவதிப்பட்டுப் போனது.
வெள்ளந்திகளாக வாழ்ந்து பழக்கப் பட்டுப் போன நம் தமிழர்கள்; வாயில்லா பூச்சிகளாகவே வாழ்ந்து கரைந்து மறைந்தும் விட்டார்கள். அவர்களின் எச்சங்கள் தான் நானும் நீங்களும் நம் சந்ததியினரும்; அடுத்து வரும் நம் தலைமுறைகளும்.
கறுப்புத் துரைகளினால் கசக்கிப் பிழியப்பட்ட தமிழர்களுக்குக் கடைசியில் கிடைத்த வெகுமதி வந்தேறிகள் எனும் பட்டயம். பிரச்சினை இல்லை சகோதரி.
கிணற்றுத் தவளை கத்தும். வாய் இருக்கிறது. கத்துகிறது. சும்மா இருக்க முடியவில்லை. அது கத்தியதால் தான் மழை பெய்தது என்றும் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளும். கத்திவிட்டுப் போகட்டும். தமிழர்களின் அசலான வரலாற்றைக் காயப் படுத்தட்டும். என்னவென்றாலும் செய்யட்டும். ஆனால் தமிழர் இனத்தை அழிக்கவே முடியாது. அந்த இனம் இந்த உலகம் உய்யும் வரையில் நீண்டு வளரும்.
இருப்பினும் அந்தக் கிணற்றுத் தவளைகளின் கத்தலுக்கு எதிரகாகக் குரல் கொடுக்க தமிழர்கள் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள். வரலாறுகளைத் தூக்கிப் போட்டு எதிர்காலச் சந்தியினருக்கு ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஆனாலும் அவர்களும் போய் விடுவார்கள். வயது என்பது எண்களாக இருந்தாலும் அதுவும் அதன் வேலையைச் செய்யும். அவர்களுக்குப் பின்னர் மலாயா தமிழர்களின் வரலாற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே.
நம் அடுத்த தலைமுறையினர் நம் வரலாற்றைக் கட்டிக் காப்பார்களா. இல்லை அவர்களும் பத்தோடு பதினொன்றாகி விடுவார்களா. பெரிய ஒரு கேள்விக் குறி.
இருப்பினும் நாம் இருக்கும் வரையில் நம் வரலாற்றை மீட்டு எடுப்போம். நம்முடைய கடமையைச் செவ்வென செய்து விட்டு மறைவோம். தங்களின் நீண்ட பதிவிற்கு நன்றிங்க.
Bobby Sinthuja: சிறப்பான தகவல் ஐயா. நமது வரலாறை முறையாக தெரிவது அசியம்...
Palaniappan Kuppusamy: எனது பெற்றோர்களும் தேயிலைத் தோட்டதில் வேலை செய்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக